Navigation


RSS : Articles / Comments


அன்பு அம்மா.

11:10 AM, Posted by sathiri, 2 Comments


அன்பு அம்மா.

வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல்  கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும்  நீங்கள் யார்  என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை  பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா  இவங்கள் எதுக்கு  இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை  ஆரோ தேடி வந்திருக்கினம்  வந்து பாருங்கோ  என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள்  புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார்  என்றதும். அம்மா  என்னை ஞாபகம் இருக்கோ நான் தான் கீதன்  மல்லாவியிலையும்  பிறகு முள்ளியவளையிலையும் உங்கடை வீட்டை அன்புவோடை வந்திருக்கிறன். அன்புவின்ரை  சினேகிதன்  தெரியிதோ?  உற்று பார்த்த படியே  யோசித்த அம்மா  தெரியேல்லை பிள்ளை   அவனோடை எத்தினை  பேர் வந்தவங்கள் எனக்கு  எல்லாரையும் நினைவிலை இல்லை  என்ரை  மகனின்ரை சினேதம் எண்டுறீங்கள்  இருங்கோ என்ன குடிக்கிறீங்கள் என்றாள் கனிவுடன்.

நீங்கள் இஞ்சை  இருக்கிறீங்கள் எண்டு இப்பதான் கேள்விப் பட்டனான் அதுதான் உங்களை பாத்திட்டு  அதே நேரம்  மாவீரர் நாள் வருது தெரியும் தானே  இஞ்சை பக்கத்திலையும்  ஒரு மண்டபத்திலை செய்யிறம்  அதுக்கு கட்டாயம் நீ்ங்கள் வரவேணும்.  அதோடை நீங்கள்தான் குத்து விளக்கு ஏத்த வேணும் அம்மா என்றான். தம்பியவை  குறை நினைக்ககூடாத நான் அண்டைக்கு  விரதம் அதோடை மெளனவிரதமும் இருக்கிறனான்  ஒருத்தரோடையும்  அண்டைக்கு  கதைக்கவும் மாட்டன்  என் பாட்டிலை அறையை பூட்டிப் போட்டு எங்கடை செல்லங்களை  நினைச்சு தேவாரங்களை  மனதுக்கை  படிச்சபடியிருப்பன் உங்கடை நிகழ்ச்சிக்கு வந்து இந்த விளக்குஏத்திறதெல்லாம் சரிவராது தம்பி பெருமூச்சோடு சொல்லி முடித்தார்

உங்கடை விரதத்தை தராளமா பிடியுங்கோ அம்மா விளக்கு ஏத்திறதுக்கு கதைக்கவேணும் எண்டு அவசியம் இல்லைத்தானே  ஆனால் கட்டாயம் வரவேணும் என்று அடம் பிடித்தான்  கீதன்.  இறுதியில் நிகழ்ச்சிக்கு வருவதாக அம்மா உறுதியளித்திருந்தாள்.  அவர்கள் புறப் படும் போது வரவேற்பறை சுவரில்  காய்ந்துபோனதொரு மலையோடு சிரித்துக்கொண்டிருந்த அன்பரசனின் படத்தை பார்த்த கீதன் அம்மா  அன்புவின்ரை படம்  எங்களிட்டை இல்லையம்மா அதாலை இந்த படத்தை தந்தால்  மாவீரர் நாளன்று மண்டபத்திலை  வைச்சிட்டு  திருப்பிகொண்டு வந்து தாறன் என்றதும்.தம்பி அவனின்ரை  படங்களும் என்னட்டை கனக்க இல்லை பத்திரமா திருப்பி தருவியள் எண்டால் தரலாமென்றாள்.நானே பத்திரமாய் கொண்டு வந்து தருவன் பயப்படாமல் தாங்கோ என்றதும் படத்தை கழற்றி சேலைத் தலைப்பல் துடைத்து விட்டு கீதனிடம் நீட்டினார்.
   00000000000000000000000000
அன்பு அம்மவிற்கு சொந்தப் பெயர்  மனோகரி  ஆசிரியையாக கடைமையாற்றியவள். முதல் நிவேதாவும் இரண்டாவது நிவேதன்  இரண்டு பிள்ளைகள்தான்.  நிவேதா திருமணமாகி யேர்மனிக்கு வந்துவிட அன்றைய  யாழ்ப்பாண இடப் பெயர்வின்போது  செல்லடியில் கணவனை  பறி கொடுத்த  மனோகரி மகனுடன்  வன்னிக்குள் போய் சேர்ந்திருந்தார். வன்னிக்கு போனதும்   உயர்தரம்  படித்துக்கொண்டிருந்த நிவேதன் இயக்கத்திற்கு போய்விட்டு அன்பரசனாகி  மீண்டும் வந்திருந்தான். அதன் பின்னர் அவனோடு  இயக்ககாரர் பலரும் வந்து போகத் தொடங்கினார்கள்.  அதற்கு பிறகு மனோகரி அனைவரிற்கு  அன்பரசன்  அம்மாவானவள்  காலப் போக்கில் எல்லாரும் அவளை அன்பு அம்மா என்று கூப்பிடத் தொடங்க அவளிற்கே தனது பெயர் மறந்து  அன்பு அம்மா என்றால் தான் எல்லாரிற்கும் தெரியும் என்கிற நிலையாகிவிட்டிருந்தது.  அவரும் தனது தனிமையை போக்க பிள்ளைகளை  சேர்த்து பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தார். ஆரம்பத்தில் சைக்கிளில் நண்பர்களோடு வந்து போய்கொண்டிருந்த  அன்பரசன்  பின்னர்  உருந்துளி(மோட்டார் சைக்கிள்.) என்று இப்பொழுது பொறுப்பாளராகி  பஜுரோவில் பாதுகாவலர்களுடன்  வரத் தொடங்கியிருந்தான்.
அத்தனையும்  சமர்க்களங்களில்  அவனது திறைமையால் வேகமாக வளர்ச்சிகண்டிருந்தான். பேச்சு வார்தைகள் தொடங்கிய காலம் வன்னிக்கு போயிருந்த நிவேதா தாயையும்  தம்பியையும் எப்படியாவது ஜெர்மனிக்கு கூட்டிவந்துவிடலாமென நினைத்து  எடுத்த முயற்சிகளில் அன்பரசன்  இயக்கத்தை விட்டு வர மறுத்து விடவே மகனை  பிரிந்து  வர மனமில்லாத மனோகரிக்கு .. இப்ப சமாதான காலம் தானே  அனேகமா இனி சண்டை தொடங்காது  பேச்சு வார்த்தையிலை தீர்க்கபோறதா இயக்கமே அறிவிச்சிருக்கு பயப்பிடாமல் வாங்கோ என்றுதன்னுடன் கொஞ்சக்காலமாவது வந்து இருக்கும்படி  அழைத்து வந்து விட்டிருந்தாள். ஆனால் மீண்டும் தொடங்கிய சண்டையில் கடைசியாய் ஆனந்த புரத்தில்  அன்பரசனும் இறந்து போனதாய் செய்திகள் மட்டும் கிடைத்தது. இலங்கை அரசு சார்ந்த  சில இணையத்தளங்களில் வெளியான படங்களையெல்லாம் நிவேதா தேடியபொழுது   அன்பரசனினன்  படமும் இருந்தது. அவர்களிற்கு ஆளாழிற்கொரு மூலையில் இருந்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாவீரர் நாளன்று அன்பு அம்மா அன்று முழுதும் ஒரு துளி தண்ணீர்கூட வாயில் படாது விரதம் இருப்பதோடு அறையை பூட்டிக்கொண்டு மெளனவிரதமும் இருந்து விடுவார்.அன்பரசன் இறந்து போனதன் பின்னரான மூன்றாவது மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கீதன் அவர்களது வீட்டுக் கதைவை தட்டியிருந்தான்.

    000000000000000000000000000000000
நிவேதாவிடம்  சொல்லி பூக்கள் வாங்கி நார் கிடைக்காததால் நூலில் அவைகளை  மாலையாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்ரிக் பையில் வைத்துவிட்டு மண்டபதற்திற்கு போவதற்கு தயாராகியிருந்தார்அன்பு அம்மா. நிவேதாவிற்கோ அவளது கணவரிற்கோ  இப்பொழுதெல்லாம்  மண்டபத்திற்கு போய்  மாவீரர் நாளை கொண்டாடுவதில் ஆர்வமில்லை  அதனால்  அம்மாவை மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதாகவும்    மண்டபம்  அருகிலேயே இருப்பதாலும்  நிவேதாவிற்கு  வேலை  இருப்பதாலும் நிகழ்ச்சிகள் முடிந்ததும்  அம்மாவை பஸ்சில் வீடு வருமாறு ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள். அதன்படி  அம்மாவை மண்டபத்திற்கு முன்னால் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நிகழ்ச்சிக்கு  சனங்கள் வரஆரம்பித்திருந்தார்கள். அம்மாவும்  மண்டபத்தினுள் நுளைந்தபோது  வாசலில் ஒரு கூடையில் கார்த்திகை பூக்களோடு நின்றிருந்தவன் அம்மா பூ வாங்குங்கோ  ஒண்டு மூண்டு யுரோதான் என நீட்டினான். அம்மா கையிலிருந்த பூமாலையை அவனிற்கு காட்டிவிட்டு பேசாமல் உள்ளே போகவும்.   அவன் பக்கத்தில் நின்றவனிடம் " சரியான திமிர் பிடிச்ச கிழவியா இருக்கு என்றதும் மற்றவன்.   டேய் அது தானாம்  ஆனந்த புரத்திலை தீபன்   துர்க்கா  ஆக்களோடை செத்துப்போன அன்பரசனின்ரை அம்மா  அவாதானாம்  விளக்கு கொழுத்தப் போறா பேசாமல் இரடா என்றான்.

வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த கதிரைகளில் கடைசி வரிசையில் போய் அமர்ந்தவர்  மண்டப மேடையை பார்த்தார்  பல மா வீரர்களின்  படங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.  அப்பொழுதுதான் அவரிற்கு தான் செய்த தவறு உறைத்தது. இவ்வளவு  படங்கள் இருக்கு நான் மகனின் படத்துக்கு போட மட்டும்  ஒரு மாலையை  கொண்டந்திட்டனே  மற்றவங்களும் என்ரை பிள்ளை மாதிரித்தானே  மண்ணுக்காக மாய்ந்தவங்கள்  எல்லாமே என்ரை பிள்ளையள் தானே  என்று நினைத்தபடி  தனது பிளாஸ்ரிக் பையை திறந்து  மாலையில்  இருந்த பூக்களை  ஒவ்வொன்றாக பிரித்தெடுக்கத் தொடங்கினாள். அவரிற்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண் அம்மாவை பார்த்து சிரிக்க அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு எந்த சலனமும்  இல்லாமால்  பூக்களையே பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெண்மணியோ  இது கொஞ்சம்  லூசாயிருக்குமோ?? என நினைத்தபடி  இரண்டு கதிரை தள்ளி போயிருந்துவிட்டார்.  வணக்க நிகழ்வுகள் ஆரம்பம் என ஒருவர் கையில் ஒரு பேப்பரை வைத்து பார்த்தபடி  அறிவிக்க எல்லாரும் எழுந்து நிற்க ஒருவர் கொடியெற்றினார்.

மொழியாகி எங்கள்  மூச்சாகி நாளை  முடிசூடும் தமிழ் மீது உறுதி .வழிகாட்டி  எம்மை உருவாக்கும் தலைவன்  வரலாற்றின் மீதும் உறுதி  விழி மூடி இங்கே துயில்கின்ற  வீரர்கள் மீதிலும் உறுதி  சிடியில் சுழலத் தொடங்கியிருந்தது... அடுத்தாக  லெப்.கேணல் அன்பரசனின் தாயார் விளக்கேற்றுவார். என அறிவித்தார்.  " தாயகக் கனவுடன்  சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை   உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள் உறவினர் வந்துள்ளோம்". பாடல் போய்க்கொண்டிருந்தது ..எழுந்து  போன அம்மா விளக்கை ஏற்றிவிட்டு  மடியில்  பிரித்துப் போட்டிருந்த மாலையின் பூக்களை  எடுத்து ஒவ்வொரு மாவீரர்   படங்களிற்கு முன்னாலும் வைத்து படங்களை  தடவி தனது உதட்டில் ஒற்றியபடியே  போய்க்கொண்டிருந்தார். இறுதியாய் மிஞ்சியிருந்த ஒற்றை பூவை அன்பரசனின் படத்திற்கு முன்னால் வைத்தார்.. "எங்கே  எங்கே     ஒரு கணம் உங்கள்  விழிகளை இங்கே திறவுங்கள். ஒருகணம் உங்கள் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்"". படத்தை தடவியபொழுது அவர் கண்களில் படம் மங்கலாக தெரியத் தொடங்கியிருந்தது. கண்களை துடைத்துவிட்டு மேடையை விட்டு இறங்குகிறார்.ஆரம்பத்தில்  அவரிற்கு பூ விற்றவன்  அவசரமாக ஓடி வந்து படங்களிலிருந்த  பூக்களை  தனது கூடையில்  அள்ளிப் போட்டபடி வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

 நிகழ்ச்சிகள் ஆரம்பமாக தொடங்கியிருந்தது  சிறுமியர்கள் சிலர் அபிநயம் பிடித்து ஆடத் தொடங்க  அம்மா கண்களை மூடி தேவாரங்களை மனதில் உச்சரிகக் தொடங்கினார். கொத்து றொட்டியின் மணம் மண்டபத்தை நிறைக்கத் தொடங்க  பலர்  ஆசிய கடை சாமான்களை  பார்வையிட எழுந்து போகத் தொடங்கிருந்தார்கள். எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை   கதிரைகள்  அடுக்கப்படும்  சத்தத்தில் அம்மா கண்ணைத் திறந்து பார்த்பொழுது எவரையும் காணவில்லை  மூவர் மட்டும் மண்டபத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.   எல்லாத்தையும் செய்திட்டு கடைசியிலை  மண்டபம்  கூட்டவும் கதிரையள்  அடுக்க மட்டும் எங்களை மாட்டி விட்டிட்டு   உண்டியலை மட்டும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்கள் என்று யாரையோ திட்டியபடி  வாசலில் நின்று பூ விற்றவன்  தான் விற்ற  கார்த்திகை பூக்களை  தும்புத்தடியால் வாரியள்ளி குப்பையில் போட்டுக்கொண்டிருக்க இன்னொருவன் அடுக்கி வைக்கப் பட்டிருந்த படங்களையெல்லாம் எடுத்து பெரிய கடதாசி பெட்டி ஒன்றிற்குள்  போட்டுக் கொண்டிருந்தான். டேய் படங்களை  கவனமாய் பாத்து போடு என்றபடி பிளாஸ்ரிக் கிண்ணத்தில் கோலாவை  கலந்து கொண்டிருந்தான் இன்னொருத்தன்.

இனி அடுத்த வருசத்துக்குத்தானே இதுகள்  உடைஞ்சாலும் திருத்தலாமென்றபடி  வரிசையாய் படங்களை எடுத்துப் போட்டபடி வந்தவன் அன்பரசனின் படத்தையும் தூக்கிய பொழுது பதறிப்போன அம்மா வேகமாய் அவனை நோக்கி  வேண்டாம் வேண்டாம்  என் சைகை  செய்து கையை ஆட்டியடி ஓடிப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அவன் படத்தை பெட்டிக்குள் போட்டுவிட சில்லென்ற சத்தம் எழுந்தது. போன வேகத்தில் அவனை  தள்ளி விட்டு படத்தை எடுத்தார் கண்ணாடி நீள் கீலங்களாய் உடைந்து போயிருந்தது. மெதுவாய் தனது சேலைத் தலைப்பால்  உடைந்த கண்ணாடிகளை தட்டித் துடைத்தவர் அவர்களை  முறைத்துப் பார்த்து விட்டு மண்டபத்திற்கு வெளியே வந்திருந்தார். வெளியே  மழை வருவதற்கான அறி குறியாக  வானம் இருண்டு ஒரு மின்னல் கீற்றொண்டு   கிழித்துப் போக போட்டிருந்த கடைகளை  கடைக்காரர்கள்  அவசரமாக அகற்றிக் கொண்டிருந்தார்கள்.  அன்பு அம்மா வானத்தை அண்ணாந்து பார்த்தார் விழத் தொடங்கிய  மழைத்துளியொன்று ஆவென்றிருந்த அவர் வாயில் வீழ்ந்து விட  காறித்துப்பியவர் அன்புவின் படத்தை சேலையில் சுற்றி மார்போடு அணைத்தபடி பஸ் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

2 Comments

சஞ்சயன் @ 3:10 PM

யதார்த்தம். உங்களை இப்ப துரோகி பட்டியலில சேர்த்திருப்பார்கள்....

Anonymous @ 9:12 AM

unmai sudum