Navigation


RSS : Articles / Comments


தேவதை..தேவன்....பிசாசு

1:52 PM, Posted by sathiri, No Comment

தேவதை..தேவன்....பிசாசு

நிழலாடும் நினைவுகள்.
சாத்திரி ஒரு பேப்பர்

நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா??
நான் பார்த்திருக்கிறேன்.பழகியிருகிறேன். ஆகா சாத்திரி தன்ரை காதல்கதை ஏதோ சொல்லவாறார் எண்டு யோசிக்கிறீங்கள் விளங்குது. இது என்னுடைய காதல்கதை இல்லை.ஆனால் உண்மையிலேயே எனக்கொரு தேவதையைத்தெரியும்.மனிசனுக்க மண்டையிலை ஏதும் அடிபட்டிட்டுதோ என்கிற உங்களது சந்தேகமும் விளங்குது .அதனாலை என்னுடைய தேவதையைப் பற்றி சொல்லுறன்.
இந்த தேவதைகள் எல்லா மதக்கதைகளிலும். புராதன புராணக்கதைகளிலும் ஒரு முக்கிய இடத்தினை பிடித்தவர்கள்.இவயள் சரியான வடிவான நல்லவையள். பூமியில் யாராவது எங்கையாவது கஸ்ரப்பட்டாலும் வானத்திலையிருந்து இறங்கி ஓடிப்போய் உதவுவினம் .வரம்கொடுப்பினம் .இவையிட்டை மந்திர சக்தி இருக்கும். எங்களது கற்பனையின்படி இவையள் வெள்ளை உடுப்புத்தான் போடுவினம். தலையிலை கிரீடம் கையிலை மந்திரக்கோல் வைச்சிருப்பினம்..பாரதிராஜாவி ன்ரை படங்களிலை வாற கனவுப்பாடல்களில கதாநாயகிக்குப் பின்னால் ஆடிவரும் தேவதையளும் வெள்ளை உடையிலை சிலோ மோசனில் ஓடிவந்து இதனை உறுதி செய்திருக்கினம்.. இவை அனைத்தும்தான் ஒரு தேவதையின் அம்சங்கள் என்றால். எனக்கும் ஒரு தேவதையைத் தெரியும்.அவர்பெயர் செரீன். இவர் அழகான கிறீஸ்த்தவத்தேவதை.தூய வெள்ளை சீருடை தலையில் வெள்ளை கிரீடம் (தொப்பி) கையிலைமுதலுதவி மருந்துப்பெட்டி. தேவதையின்ரை கையிலை மருந்துப்பெட்டியா என்று ?? என்றுயோசிக்காதையுங்கோ. என்னுடைய தேவதை செரீன் ஒரு மருத்துவத்தாதி.எங்கடை மற்றது பக்கத்து ஊரிலை எங்கையாவது யாருக்காவது அவசர மருத்துவ உதவி தேவையென்றால் உடனடியாக எல்லோருமே உச்சரிக்கும் மந்திரச் சொல் செரீன்தான். இரவுபகலென்று பாராமல் கூப்பிட்டஉடனேயே தன்னுடைய ம(ந்திர)ருந்துப் பெட்டியுடன் புறப்பட்டு விடுவார்.
................................................................................
.
நீங்கள் வானத்து தேவர்களைப்பற்றி கதைகளில் படித்திருப்பீங்கள். ஆனால் ஊரிலை நீங்களும் இந்தத் தேவனை பார்த்திருப்பீங்கள் கதைத்திருப்பீங்கள். குறைந்தபட்சம் இவனைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீங்கள்.நாம் பாத்துப் பழகியிருக்கிறேன். மெலிந்த நெடிய உருவம் . 80 களின் ஆரம்பத்தில் பழைய றலி சைக்கிள்தான் அவனது வாகனம்.யாழ்குடாநாட்டின் அத்தனை குட்டிக்கிராமங்களிலும் அவன் சுற்றித்திரிவான்.அத்தனை ஊர்மக்களிற்கும் அவனைத்தெரியும் .அத்தனை ஊர்மக்களையும் அவனிற்கும் தெரியும்.உலகப்புகழ்பெற்ற மேனாலிசாவின் சிரிப்பிற்கு இன்றுவரை எத்தனைபேர் எத்தனை அர்த்தங்கள் கற்பிக்கிறார்களோ. அதேபோலவே அவனுடைய தலையை மெதுவாய் சரித்து சிரிக்கும் சிரிப்பிற்கும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லாம். துயர்.மகிழ்ச்சி.வேதனை .கோபம்.என்று எல்லாத்துக்கும் அந்தச்சிரிப்பால்தான் வெளிப்படுத்துவான்.அவன் பெயர் திலீபன்.
................................................................................
....
நீங்கள் யாராவது பிசாசை பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன் பேச விருப்பமில்லாவிட்டாலும் சிலநேரங்களில் பேசியிருக்கிறேன்.அது ஒரு கம்யூனிசம் பேசுகின்ற கெட்ட பிசாசு . அது சந்தியில்வந்து அடிக்கடி சொல்லும் "இவங்கள் சரியான விசரர் ரஸ்யாவையோ சீனாவையோ ஆதரிச்சு போனால்தான் அவையிட்டை உதவிகேட்டு எங்கடை பிரச்சனையை தீர்க்கலாம்.ஆனால் சீனாக்காரனின்ரை தத்துவமும் சரியில்லை ரஸ்யாகாரனின்ரை தத்துவம்தான்சரியானது.நான் ரசியாக் காரனோடை கதைச்சு எப்பிடியும் எங்கடை பிரச்னையை முடிக்கிறன்.மாக்சிட்டை இருந்து எப்பிடி லெனின் ரஸ்யாவுக்கு கொண்டு போனாரோ அதை அப்பிடியே நான் இஞ்சை கொண்டுவந்து காட்டுறன்.உவன் திலீபன் சொல்லறான் தாங்கள் மக்களோடை சேந்து போராடி தமிழீழம் எடுக்கப்போகினமாம்.உது நடக்கிற காரியமோ??"" சுற்றி நின்றவர்கள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தபடி போய்கொண்டிருப்பர்
...........................................................
ஒருநாள் மானிப்பாய் வீதியில் உருந்துளியில் வேகமாய் போய்க்கொண்டிருந்த எனக்கு யாரோ நல்லாய் தெரிஞ்ச ஒருவரை கடந்ததுபோல ஒரு உணர்வு திடீரென நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். தேவதைதான் " என்ன செரீன் அக்கா எப்பிடிச்சுகம் ?? அம்மா எப்பிடியிருக்கிறா?? """என்றேன். " எட நீயே கண்டு கனகாலம். நாங்கள் நல்லாயிருக்கிறம். ஆனால் நாட்டு நிமையை நினைச்சால்தான் கவலையாய் கிக்டக்கிது. திலீபன் வேறை உண்ணவிதரம் இருக்கிது.ஒவ்வொருநாளும் வேலை முடிய போய் பாத்திட்டுத்தான் வாறனான்.இண்டையோடை நாலாவது நாளாகப்போகுது கவலையாக்கிடக்கு. இப்பவும் நல்லூரடிக்குத்தான் போறன். இந்தியா திலீபனின்ரை போராட்டத்தை கணக்கிலை எடுக்கும் எண்டு நீ நினைக்கிறியோடா???என்று கண்கள் கலங்க என்னிடம் கேட்டவருக்கு " மிகப்பெரிய சனநாயகநாடு .அகிம்சையை முதலாவதா மதிக்கிற நாடு எண்டெல்லாம் சொல்லினம்.பொறுத்திருந்து பாப்பம். திலீபனுக்கு ஒண்டும் நடக்காது கவலைப்படாமல் போட்டுவாங்கோ. என்றவும். "" அந்தோனியார்மேலை சத்தியமாய் சொல்லுறன் திலீபனுக்கு ஏதாவது நடந்தால் உவங்கள் நல்லாயிருக்கமாட்டாங்கள்"" என்றுவிட்டு சைக்கிளை மிதித்தபடி போய்விட்ர்.
..........................................
கம்யூனிசப்பிசாசு அன்றுமாலையும் சந்தியில் வந்துநின்று சொன்னது"" இவன் திலீபனுக்கு தேவையில்லாத வேலை இன்னும் இரண்டு நாளைக்கு இருந்து பாத்திட்டு எழும்பிடுவான். ஏனெண்டால் இந்தியா பெரிய வல்லரசுநாடு. அதுக்குப்பின்னாலை என்ரை ரஸ்யா உதவியாய் இருக்கிது. இப்பிடி சாப்பிடாமல் இருக்கிறது. ஆமியை றோட்டாலை திரியவிடாமல் சனங்கள் பாதையை மறிக்கிறதெல்லாம் அவங்களுக்கு கோவம்வரப்பண்ணும். பேசாமல் இந்தியா சொல்லுறபடி கேட்டால் எங்களுக்கு ஏதோ பாத்து செய்வாங்கள்.அதைவிட்டிட்டு அவங்களுக்கு கோவத்தை வரப்பண்ணினால் அவங்கள் கண்ணை மூடிமுளிக்கிறதுக்குள்ளை இவையளை இல்லாமல்பண்ணிப்போடுவாங்கள
" என்று தன்னுடைய வியாக்கியானத்தை தொடங்க அங்கு நின்றவர்கள் கோபமாய் பிசாசை அடிக்கப்போக பிசாசு அங்கிருந்து ஓடிப்போய் பதுங்கிக்கொண்டது..
.......................................................
எங்கள் தேவன் தேவலோகத்திற்கு திரும்பிப்போய்விட்டான்."திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்னவயதில் அதுதேவையா???தமிழீழம் எங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப்பாடலுடன் திலீபனிற்கு அஞ்சலி நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. தமிழ்மக்கள் அனைவரினது கண்களிலும் கோபத்தையும் துக்கத்தையும் கலந்த கலைவையை மட்டுமே காண முடிந்தது.இந்திய இராணுவத்திற்கு கற்கள் செருப்பு என்று கையில் கிடைத்ததையெல்லாம்எடுத்து எறியத்தொடங்கிவிட்டார்கள்.எகள் மண்ணில் ஒருநாள் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திலீபன் கண்ட கனவை அவன் தன்னுடைய மரணத்தின் மூலம் தொடக்கிவைத்துவிட்டுப்போயருந்தான்.
..............................................
தமிழீழத்தின் காட்சிகள் வேகமாக மாறியது புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும் போர்வெடித்து யாழ்குடாவெங்கும் இந்தியஇராணுவம் ஆக்கிரமித்துவிட்டிருந்தது .அதுவரை பதுங்கியிருந்த பிசாசும் மெதுவாய் வெளியேவந்து அருகில் இருந்த கந்தரோடை இந்தியனாமி முகாமில் போய் கை குலுக்கியபடி " சேர் நீங்கள் ஊர்முளுக்கப்பிடிச்சது சந்தோசம் புலியளின்ரை கதை முடிஞ்சு போச்சுது. ஒரு புலியும் ஊருக்குள்ளை இல்லை அப்பிடி யாரவது வந்தாலும் நான் உங்களுக்கு வந்து உடைனை சொல்லுறன்.ஆனால் இஞ்சை ஒரு நேஸ்(தாதி) களவாய் போய் காயமடைஞ்ச புலியளுக்கு மருந்து கட்டுறாவாம். இப்போதைக்கு இவ்வளவுதான். ஆனால் இனி அடிக்கடிவருவன்
.................................................
தேவதை அன்னிய அரக்கர்களால் பிடிக்கப்பட்டாள். அவளது சிறகுகள் ஒடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு.அவளன் வெள்ளையுடை அந்தச் செஞ்சட்டைக்கார பிசாசின் காட்டிக்கொடுப்பால் இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாகிப்போன நிலையில். வீதியோரத்து வயலில் அந்திரான் சுடலைக்கருகில் அனாதைப்பிணமாய்கிடந்தாள்.அழுபடியே அந்தஊர்மக்கள் ஒன்றுகூடி அந்தச்சுடலையில் எரித்தார்கள். என்னுடைய கிறீஸ்த்தவ தேவதை இந்து முறைப்படி எரிக்கப்பட்டு அவளும் தேவலோகம் போய்விட்டாள்.
........................................
சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ""யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை."" அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது.எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன.இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????
...............................................................................

No Comment