Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள்

9:10 AM, Posted by Siva Sri, No Comment

நிழலாடும் நினைவுகள்

ஒரு மே மாத நினைவு


எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக்கு உதவாக்கரை என்கிற மாபெரும் பட்டத்தை அடிக்கடி வழங்கி கெளரவிப்பார்கள் இதுக்கை இப்படியான தொடர்புகளும் என்றால் வீட்டிலை சேறும் கிடைக்காது பிறகு கோயில் வாசலிலை நிண்டு அய்யர் பலிபீடத்துக்கு நெய்வேத்தியம் வைச்சிட்டு காகத்துக்கு எறியிற வெள்ளை புக்கையைதான் பொறுக்கி தின்னவேணும்.

அது மட்டுமல்ல பொலிசில் எனது உறவினர்களும் சிலர் இருந்தனர் அவங்கள் வேறை என்னை கொண்டு போய் அடிச்சு முறிச்சு போடுவார்கள் என்கிற பயம் இப்படி பல விடயங்களால் எனக்கு இந்த போராட்ட இளைஞர்கள் விடயத்தில் கொஞ்சம் தூரவே நின்று கொண்டேன் என்று சொல்லலாம். படிப்புவிசயத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தியபடி எனக்கென்றொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் இருந்தது அது காலையில் பாடசாலைக்கு போய் வருவது என்கிற பெரிய வேலையுடன் மாலை பாடசாலை விட்டு வீடு திரும்பியதும் சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு கதைப்புத்தகத்தை எடுத்து கொண்டு எங்கள் தோட்டத்திற்கு சென்று அங்கு இருக்கும் காவல் கொட்டிலினுள் போய் சாக்கு கட்டிலில் படுத்தபடி கொஞ்சம் கதையை படித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம்.

மாலை 6 மணி கோயில் மணி அடிக்கிற சத்தத்திலை எழும்பி முகத்தை கழவிவிட்டு கோயிலடியிலை போய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு அன்று நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு மூண்று தோப்புகரணமும் போட்டுவிட்டு ஒரு விபூதிகுறி ஒன்று இழுத்து அங்கிருக்கிற சந்தண கட்டையை கல்லில் தேய்த்து ஒரு பொட்டும் வைத்து கொண்டு அங்கு தேர் முட்டியில்(தேர் நிறுத்தும் இடம்)அரட்டைக்காக வந்து கூடும் எனது நண்பர்களுடன் சிறிது அரட்டை 7 மணியளவில் வீடு பின்னர் படிப்பு . இதுதான் வழைமையான நிகழ்ச்சி நிரல்.இப்பிடியே போய் கொண்டிருந்த காலத்தில். எனது நண்பர்கள் சிலரும் இந்த போராட்டங்களின் பக்கம் இழுக்கபட்டவர்களாய் இருந்தனர். அதில் சிலர் கம்யூனிச தத்துவங்களால் கவரப்பட்டு அதுபற்றியே அதிகம் பேசினார்கள் எனக்கோ இந்த கம்யூனிம் மாக்சிசம் எல்லாம் புதிதாகஇருந்தது. அதில் ஒரு பல்கலை களகத்தில் படிக்கிற ஒரு நண்பன் அதிகமாக இந்த சித்தந்தகள் பற்றி கதைப்பான் இப்பிடி இவங்கள் தொடர்ந்து கதைக்க கதைக்க எனக்கும் கம்யூனிசம் எண்டா என்னவென்று அறியும் ஒரு ஆவல் வந்து அந்த நண்பனை கம்யூனிம் பற்றி விளக்கமா ஒருக்கா சொல்லு எண்டன்.

அவனும் கார்ல்மாக்கசிலை தொடங்கி இந்த கம்யூனிசத்திலை வர்க்கம் இல்லை தொழிலாளி முதலாளி இல்லை சாதி இல்லை சாமி இல்லை சமயம் இல்லையெண்டு எங்கடை ஊரிலை இருக்கிறதையெல்லாம் இல்லை இல்லையெண்டாண்டான் . நான்அவனிட்டை சொன்னன் நிப்பாட்டு எனக்கு ஒண்டும் விழங்கேல்லையெண்டன். அவன் என்னை விடுறமாதிரியில்லை சரி சுருக்கமா உனக்கு விளங்கிறமாதிரி சொல்லுறன் எண்டிட்டு இப்ப நீ சாமிக்கு கற்பூரம் கொழுத்துறாய் அதாலை என்ன பிரயோசனம் எண்டான் நான் தட்டு தடுமாறி அது பாவமெல்லாம் அந்த கற்பூரம் மாதிரி கரையும் எண்டன். அவன் சிரித்தபடி நீ பாவத்தை செய்து கொண்டு கற்பூரத்தை கொழுத்தி என்ன பலன் அதாலை பேசாமல் அந்த காசிற்கு கடலை வாங்கி தின்னலாமல்லோ உன்ரை ஆசையாவது நிறைவேறும் என்றான். ஆகா என்ன தத்துவம் இதை முதலே யாராவது சொல்லியிருந்தால் எவ்வளவு காசுக்கு நான் கடலை வாங்கி திண்டிருப்பன் என்று நினைத்து. அன்றிலிருந்து நானும் கடலை தின்பதற்காக கம்யூனிசவாதியாகிய நிலையில்.

1981ம் ஆண்டு முதல் தவணை பரீட்சை முடிந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாகியது அலுப்புடன் பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருந்த சித்திரை மாத இறுதி ஒருநாள் மாலை பாடசாலை விட்டு வெளியெ வந்ததும் மானிப்பாய் சந்தியில் பலர் கூடி நின்றபடி கதைத்து கொண்டிருந்:தார்கள் கூடிகதைப்பது அதுவும் சந்திகளில் ஒன்றும் புதிதான விடயம் இல்லை ஆனால் அவர்கள் கதைதத்தது புதிதான விடயம் . என்னவென்றால் சற்று மன்பு மானிப்பாய் நவாலி வீதியில் வயல்வெளி பக்கமாக முருகமூர்த்தி கோயிலடியிலை ரோந்து போய்கொண்டிருந்த விசேட பொலிசார் சைக்கிளிலை வந்த இரண்டு பெடியங்களை மறிச்சவையாம் பெடியள் நிக்காமல் ஒடவெளிக்கிட பொலிஸ் சுட்டதாம் . ஒரு சிலர் . பொலிசுக்கும் பெடியளுக்கும் துவக்கு சண்டை நடந்ததாம்...இப்படி சிலர் பொலிஸ் சுட்டு ஒரு பெடியன் சரியாம். இல்லை பெடியள் சுட்டு ஒரு பொலிஸ் சரியாம். இப்படி செய்திகள்.

இந்த காலகட்டம் தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் என்பதால் இப்படியான சில நிகழ்வுகளும் ஆனால் பல வதந்திகளும் உலாவிய கால கட்டம்.ஒரு சம்பவம் பத்து செக்கனிலேயே பலவடிவத்தில் பரவி விடும். ஆனால் உண்மையை சம்பவ இடத்தில் போய் யாரிடமாவது கேட்டறிந்தால் அல்லது மறுநாள் உள்ளுர் பத்திரிகையில் தான் உண்மையை அறியலாம். பாடசாலையில் வகுப்பறையில் இருந்த எனக்கும் ஏன் மற்றைய மாணவர்களிற்கும் கூட எவ்வித சத்தமும் கேட்கவில்லை ஆனாலும் அப்படியே அந்த வதத்திகளையும் காதில் வாங்கி போட்டு கொண்டு முடிந்தால் பின்னேரமளவிலை நவாலி பக்கம் போய் பாப்பம் இல்லாட்டி அந்த பக்கம் இருக்கிற நண்பர்கள் யாராவது பின்னேரம் கோயிலடிக்கு அரட்டையடிக்க வரேக்கை சொல்லுவாங்கள் தானே என்று நினைத்தபடி வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தேன்.வீட்டிற்கு போய்எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை செய்ய தொடங்கினேன். அதன்படி சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கதைப்புத்தகத்தடன் அருகில் இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு போய் காவல் கொட்டிலினுள் நுளைந்ததும் உள்ளே இருந்த சாக்கு கட்டிலில் ஒரு 25 வயது மதிக்க தக்கஒரு இளைஞன் படுத்திருந்தான்.யாரவன் எங்கடை கொட்டிலுக்கை என்று நினைத்தபடி கிட்ட போய் பார்த்தேன்.

அவன் தன் சாரத்தை கழற்றிதனது வலது தோள்பட்டையை சுற்றிகட்டியபடி உள்ளாடையுடன் படுத்திருந்தான்.அவனது உடை உடல் எல்லாம் இரத்தம் ஊறியிருந்தது பாதிமயக்கத்தில் முனகியபடி இருந்தவனை பதட்டத்துடன் அருகில் போய் விசாரித்தேன். அன்று மாலை நவாலி வீதியில் பொலிசார் சுட்டதில் காயமடைந்தவன் என்று தெரிய வந்தது அவரிடம் அண்ணை உங்களுக்கு சொந்த காரர் யாரும் இஞ்சை இல்லையோ என்றவும் .இல்லை தம்பி நான் திருகோணமலை எனக்கு யாழ்ப்பாணம் வடிவா தெரியாது. என்னொடை வந்த மற்றவருக்கு ஓரளவு இங்கை இடங்கள் தெரியும் பொலிஸ் சுடேக்கை மற்றவர் எங்கையோ ஓடிட்டார் என்றும் தாங்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொழிலாளர் தினத்தில் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்த சொல்லி நோட்டீஸ் அடிச்சு அதை றோட்டு றோட்டா குடுத்து கொண்டு வரேக்கைதான் பொலிஸ் மறிச்சதெண்டும் .தாங்கள் ஓடவெளிக்கிட சுட்டிட்டாங்கள் என்று கொஞ்ச விபரம் .மட்டும் சொன்னான்.

முடிஞ்சா மருத்துகட்ட உதவிசெய்யும்படியும் வெளியே யாரிடமும் தெரியபடுத்த வேண்டாமென்றும் கெஞ்சலாய் கேட்டான்.எனக்கு பயமாவும் படபடப்பாகவும் இருந்தது. வீட்டிலை போய் சொல்லவும் ஏலாது . உடனே அருகில் இருந்த நண்பன் ஒருவனின் வீட்டிற்கு போய் விபரத்தை சொல்லி அவனையும் துணைக்கு கூட்டிகொண்டு அந்த இளைஞனிற்கு ஒரு சாரத்தையும் மாற்றி கொண்டு எங்கள் ஊரில் வீட்டில் வைத்து வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரிடம் கொண்டு போனோம்.அவரிற்கு விபரத்தை சொல்ல அவர் தம்பி இரத்தம் கனக்க போயிருக்கு என்றபடி ஒரு குளுக்கோசை எற்றிவிட்டு காயத்தைபார்த்தார் துப்பாக்கி குண்டு பின்புறமாக நுளைந்து தோள் விலா எலும்பைஉடைத்து கொண்டு வெளியேறியிருக்கு காயத்திக்கு வெளியாலை உடைஞ்ச எலும்பு துண்டு வந்திருக்கு இதுக்கு என்னாலை பெருசா ஒண்டும் செய்யஏலாது உடைனை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ நான் இப்ப இரத்தம் ஓடாமல் கட்டு போட்டுவிடறன் என்றார்.பெரியாஸ்பத்திரிக்கா என்று நானும் நண்பனும் வாயை பிழந்தோம்.ஏனென்றால் யாழ்பெரியாஸ்பத்திரிக்கு போனால் அங்கை பொலிஸ் விசாரனை எண்டு வரும் பிறகு நாங்கள் யார்?? அவர் யார்?? என்கிற பிரச்சனைகள் இதுக்கை வேறை வீட்டிலை தெரிஞ்சா துலைஞ்சம்.

என்ன செய்யலாமெண்டு யொசிச்ச நான் அந்த வைத்தியரையெ கேட்டன் அய்யா நீங்களே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய்....எண்டு இழுக்கவும் அவர் சொன்னார் தம்பி இது வில்லங்கமான கேஸ் நான் இவ்வளவு செய்ததே பெரிசு . அதெல்லாம் என்னாலை ஏலாது யாராவது ஊரிலை பெரியாக்களிட்டை சொல்லி அவையளோடை அனுப்புங்கோ நீங்கள் சின்ன பெடியள் உங்களுக்கு ஏன் வீண் பிரச்சனை என்று புத்திமதி சொல்லவும் தவறவில்லை. இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் வைத்தியரிட்டை . அய்யா ஏதாவது வலிகுறைக்கிற மாதிரி குழிசை இருந்தா தாங்கோ வலி குறைய நானே போறன் என்றான். வைத்தியர் அவனிடம் தம்பி இது விழையாட்டு இல்லை எலும்பு உடைஞ்சிருக்கு வலி குறையாது உடைனை வைத்தியம் செய்யவேணும் எண்டு சொல்லி சில வலிகுறைக்கிற குழிசைகளையும் தந்து கட்டு போட்டு அனுப்பிவிட்டார். திரும்ப காவல் கொட்டிலிலை கொண்டு போய் விட ஏலாது மறுநாள் பக்கத்து தோட்டகாரர் பாத்தாலும் பிரச்சனை என்ன செய்யலாமென யோசித்த எனக்கு திடீரென ஒரு யொசனை தோன்றியது சண்டிலிப்பாயில் எனக்கு தெரிந்த ஒரு நண்பனின்குடும்பம் இருந்தது அவர்கள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை கூட்டணிஆதரவாளர்கள் . அதுமட்டுமல்ல தீவிரபோக்கு கொண்ட இளைஞர்களும் அங்கு வந்து போவது எனக்கு தெரியும்.அவர்களிடம் கொண்டு போய் விட்டால் கட்டாயம் உதவுவார்கள் என்று நினைத்து அவர்கள் வீட்டிற்கு கூட்டிபோய் விபரத்தை சொன்னேன்.

அவர்களும் தாங்கள் பாத்து கொள்ளுறதாய் சொன்னதும் தான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. மறு நாள் மாலை அந்த வீட்டிற்கு போய் விபரம் கேட்டேன் சின்ன ஒப்பிறெசன் ஒண்டு செய்தவங்கள் எங்களுக்கு தெரிஞ்ச டொக்ரர் மார் அங்கை இருக்கிறதாலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது போய் பாக்கிறதெண்டா பாக்கலாம் என்றார்கள். விபரம் அறிந்து கொண்டு யாழ் வைத்தியசாலைக்கு பேனேன் அதுக்கை தெரிஞ்சவங்கள் யாரும் கண்டாலும் எண்டிற பயம் வேறை . அவன் சிரித்தபடி தம்பி உங்கடை உதவிக்கு நன்றி நான் இன்னும் இரண்டு மூண்டு நாளிலை வெளியிலை வந்திடுவன் பிரச்சனையில்லை எண்டான் . சரி அப்ப நிங்கள் திரும்ப திருகொணமலைக்கே போகபோறியள் எண்டன் .தம்பி நான் அங்கை போக ஏலாது பிறகு யோசிப்பம் எண்டான். நானும் மறுநாள் என்னிடம் இருந்த பணத்தில்அவனிற்கு ஒரு சாறம் சேட்டு உள்ளாடை என்று ஒரு சோடி வாங்கி கொண்டு போய் குடுத்தது மட்டுமல்ல ஒரு நான்கு நாட்கள் என நினைக்கிறேன் ஒவ்வொரு நாளும் பாடசாலை விட்டதும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை மாற்றி வைத்தியசாலைக்கு போய் அவனுடன் சில மணிநேரம் இருந்து கதைத்து விட்டு வருவேன். இப்படியே ஒரு நாள் அவனை தேடிபோனபோது அங்கு அவனை காணவில்லை.

கடைமையில் இருந்த ஒரு தாதி என்னிடம் ஒரு கடிதத்தை தந்தாள் அதில் தம்பி எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது நான் போகிறேன் இதுவரை நீங்கள் எனக்கு செய்த உதவியை மறக்க மாட்டேன் முடிந்தால் நான் உயிருடன் இருந்தால் மீண்டும் எங்காவது எப்போதாவது சந்தித்து கொள்வோம் அன்புடன் உங்கள் உறவு என்று அவ்வளவு தான் எழுதியிருந்தது. ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு இனிமையானது அவனே எனக்கு கம்யூசம் என்றால் கடலை தின்பது மட்டுமல்ல அதனால் மக்களிடம் அலை கடலைப்போன்ற மாற்றத்தைஏற்படுத்த முடியும் என்று கம்யூனிசம் மாக்சிசம் என்று பல இசங்களை இதமாய் புரிய வைத்ததோடு விடுதலை. போராட்டம். சுதந்திரம்.உலக விடுதலை இயகங்கள் என்றும் தெரியவைத்து எனக்குள் மாற்றத்தை ஒரு தேடலை உருவாக்கி போனான் .அன்று அவனிற்காக மாற்றிய எனது வழைமையான நிகழ்ச்சி நிரல் மீண்டும் வழைமைக்கு திரும்பவேயில்லை.ஆனால் அவன் யார்?? சொந்த பெயர் என்ன?? ஏதாவது விடுதலை இயக்கத்தை சார்ந்தவனா??அல்லது தனியாகவே சில நண்பர்களுடனோ சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக இயங்கியவனா??என்று எந்த விபரத்தையும் எனக்கு சொல்லவில்லை நானும் நச்சரித்து கேட்கவும் இல்லை அதன்பின்னர் அவனை சந்திக்கவும் இல்லை....................

No Comment