நிழலாடும் நினைவுகள்
4:07 AM, Posted by sathiri, No Comment
சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது
இதுவும் ஒரு இந்திய படை காலத்து நினைவுகளே
1988ம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு மாலைப்பொழுது என்னை வீதியில் கண்ட நண்பனொருவன் என்னிடம் சொன்னான் டேய் உன்னை வாகீசன் தேடி வந்தவன் இவ்வளவு நேரமும் மெமோறியல் மைதானத்திலை ( மானிப்பாய் கிறின் மெமோறியல் பாடசாலை)பாத்து கொண்டுநிண்டிட்டு போட்டான் நளைக்கு பின்னேரம் மெமோறியல் மைதானத்தடிக்கு வருவானாம் கட்டாயம் தன்னை சந்திக்க சொன்னான் முக்கிய விடயமாம் என்று சொல்லிவிட்டு போ னான். அட அவனை சந்திக்க முடியவில்லையென்கிற கவலையுடன் மறுநாள் எப்படியாவது அவனை சந்தித்து விடுவது என்று நினைத்தபடி வீட்டை நோக்கி போனேன். வேலுப்பிள்ளை வாகீசன் இதுதான் அவனது சொந்தபெயர்.சண்டிலிப்பாய் கல்வளை என்னுமிடத்தை சேர்ந்தவன்.
எனது இளமைகாலத்து நண்பர்களில் இவனும் முக்கியமானவன் பழைய ஞாபகங்கள் வந்து போகும் போதெல்லாம் இவனது ஞாபகங்களும் கட்டாயம் வரும் . இவனுடன் எனது நட்பு தொடங்கியது ஒரு சுவாரசியமானது பாடசாலை காலங்களில் இளவயதில் நான் அடிதடி நாயகன்புரூஸ்லியின் தீவிர ரசிகன் புரூஸ்லியின் படங்களை பார்த்து விட்டு வீட்டில் வந்து கண்ணாடியின் முன் நின்று சேட்டை கழட்டிவிட்டு புரூஸ்லியை போலவே உடலை வழைத்து நெளித்து அபிநயம் பிடித்து பார்ப்பேன் அல்லது தலைகணியை கட்டிதூக்கி விட்டு கையாலும் காலும் அடிப்பது.
இப்பிடி என்னையும் ஒரு புரூஸ்லியாக கற்பனை பண்ணிதிரிந்த காலங்கள். ஒருநாள் புரூஸ்லியன் படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்த நான் (enter the tragan)என்று நினைக்கிறேன்.அந்த படத்தில் புரூஸ்லி செய்வதை போலவே வீட்டு முற்றத்தில் கை காலை ஆட்டிபடி நின்று கொண்டிருந்த நான் திடீரென புரூஸ்லி அந்த படத்தில் அந்தரத்தில் எழும்பி எதிரியை அடிக்கிற கட்டத்தை நினைத்தபடி நானும் புரூஸ்லியாக மாறி பாய்ந்து முற்றத்தில் நின்ற கதலி வாழை குட்டிக்கு சுழன்று காலால் ஒரு அடிவிட்டேன். வாழைக்குட்டி இரண்டாய் மடிந்து விழ நான் எனது வெற்றிகளிப்பில் துள்ளி மகிழ "அட அறிவு கெட்டவனே" என்றபடி முதுகில் ஓங்கி ஒரு அடிவிழுந்தது அய்யோ அம்மா என அலறியபடி திரும்பி பார்த்தேன்
எனது அக்கா என்னைப்பார்த்து அறிவிருக்காடா அந்த வாழைக்குட்டியை பக்கத்து வீட்டு பவளமக்காவிற்கு விக்க அஞ்சு ரூபாய்க்கு விலைபேசி இரண்டு ரூபாய் அற்வான்சும்(முற்பணம்) வாங்கிட்டன் அதை போய் இப்பிடி அனியாயமாய் அடிச்சு முறிச்சு போட்டியே என்று ஏதோ பங்குச்சந்தையில் பல இலட்சங்கள் நட்டமைந்தவர் போல என்னை மீண்டும் தாக்க துரத்திகொண்டு வர நானும் புரூஸ்லி கடவுளை மனதில் நினைத்தபடி ஓடிப்போய் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் பாய்ந்து ஏறி தப்பிக்கொண்டேன்.கீழே நின்றபடி அக்கா கற்களை பொறுக்கி என்னை நோக்கி எறிந்து கொண்டிருந்தார் இதையெல்லாம் கவனித்த அம்மா வந்து அக்காவை சமாதானம் செய்துவிட்டு என்னை கீழே இறக்கி என்னிடம் சொன்னார் உனக்கு கராட்டி பழக ஆசையெண்டா போய் முறைப்படி அதை பழகு சும்மா வீட்டிலை நிக்கிற வழை மரத்தை முறிக்காதை இப்பிடியெ போனால் இன்று வாழை நாளை முருங்கை மா வேம்பு இலுப்பை மரம் எண்டு எல்லாத்தையும் நீ காலாலை அடிச்சு முறிச்சு போடுவாய்
( அம்மா அப்பிடி நினைச்சதற்கு சத்தியமாய் நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டன்) அதனாலை போய் முறைப்படி கராட்டியை பழகு என்று பணம் தந்து அனுப்பி விட்டார் . 80 களில் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் சனி ஞாயிறு நாள்களில் கராட்டி பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம்.சனி ஞாயிறுகளில் அங்கு பயிற்சி பெறும் பல நூறு மாணவர்கள் ஒரேயடியாக எழுப்பும் ஒலியால் அந்த பகுதியே அதிரும்.நானும் அங்கு போய் என்னை பயிற்சியில் இணைக்க பதிவு செய்து கராட்டி பயிற்சியை பழக தொடங்கிய காலங்களில்தான் அங்கு என்னை போலவே ஆரம்ப பயிற்சியில் இருந்த வாகீசனுடன் எனது நட்பும் ஆரம்பமானது. ஆரம்ப நட்பு கால போக்கில் எம்மிருவருக்குமிடையில் நல்லதொரு புரிந்தணர்வு நட்பாக மாறி இருவரும் ஒன்றாய் திரிந்தும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சாதாரணமாய் போய் வருகின்றஅளவிற்கு பிணைந்து போனது.
நான் அவனை தேடி சண்டிலிப்பாய் போனால் அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்வளை பிள்ளையார் கோயில் தேரடியில் இருந்து அவனுடனும் வேறு நண்பர்களுடனும் மணிக்கணக்காய் பேசுவோம். அவன் என்னிடம் வந்தால் என்வீட்டில் அருகிலிருக்கும் மருதடி பிள்ளையார் தேரடி எங்கள் அரட்டை இடமாக மாறும். பொழுது போக்காய் அரட்டை திரைப்படம் நடிக நடிகையர் எங்கள் பாடசாலை நிகழ்வுகள் என்று இருக்கும் 83 கலவரத்தின் பின்னர் எங்கள் பேச்சுக்களும் நாட்டு பிரச்சனை அரசியல் என்று மாறி போனது. அது மட்டுமல்ல அந்த கால கட்டத்தில் ஆயுத போராட்ட இயக்கங்களும் ஊருக்கொன்றாய் உருவாகிய கால கட்டம் . அனேகமான இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்கத்துடன் தொடர்புகளொ அல்லது உதவிகளோ செய்தவர்களாகவே இருந்தனர் .
வாகீசனும் அப்படித்தான் ஆனால் சரியான போராட்ட இயக்கத்தை இனம்கண்டு புலிகள் இயக்கத்திற்கு அவனது கிராமத்தில் அந்த இயக்கத்தின் தேவைகளிற்கு பல உதவிகளையும் செய்தான் அது மட்டுமல்ல அன்றைய கால கட்டத்தில் லெப்.கேணல் திலீபனுடன் இணைந்து பல அரசியல் வேலை திட்டங்களையும் செய்தான்.அதனால் அவன் புலிகள் இயக்க சார்பானவன் என்று ஊரில் அடையாள படுத்தபட்டிருந்தாலும் ஊரில் அவன் மற்றைய இயக்க காரர்களுடனும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனாலும் ஒவ்வொருநாளும் மாலை மானிப்பாய்வீதிகளில் எங்கள் இருவரையும் கட்டாயம் காணலாம். 84 களின் பின்னர் பல வேறு காரணங்களால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ள முடியாத சூழ்நிலை ஆனாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருந்தது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து கொள்வோம்
முக்கியமாக எங்கள் கோவில் திருவிழா காலங்களில் நாங்கள் எங்கு எந்த பகுதியில் ஏன் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டாயம் திருவிழா காலத்தில் கட்டாயம் சந்தித்து கொள்வோம்.அந்த வருடமும் அதே சித்திரை மாதம் எங்கள் ஊர் கோயில் திருவிழா நடக்க வெண்டிய மாதம் அனால் இந்தியபடை ஆக்கிரமிப்பால் அது நடக்கவில்லை அனாலும் வாகிசன் என்னை சந்திக்க வந்திருந்தான் அன்று சந்திக்கமுடியவில்லை எனவே எப்படியும் மறுநாள் அவனை எப்படியாவது சந்திப்பது என்று முடிவுடன் மறுநாள் மாலை மானிப்பாய் மெமோறியல் பாடசாலை இருக்கும் இடத்திற்கு சென்றென் அங்கு பாடசாலை மைதானத்தின் ஒரு மூலையில் இரந்த பெரியபுளியமரத்தடியில் சைக்கிளில் எனக்காக காவல் நின்றான்.
அவனை கண்டதும் போய் அவனிடம் எப்பிடியடா இருக்கிறாய் கண்டு கன காலம் ஆகிது இப்ப எங்கை பாத்தாலும் இந்தியனாமி திரியிறாங்கள் இந்த வருசம் திருவிழாவும் நடக்கேல்லை அதாலை மற்ற சினேகிதங்களையும் இந்த வருசம் சந்திக்க முடியெல்லை இப்ப இவ்வளவு பிரச்சனைக்கை என்னை எதுக்கு தேடிவந்தனீ என்று விசாரித்தேன். வா இதிலை கன நேரம் இருக்காமல் எங்கையாவது ஒரு ஒதுக்கு புறமா போய் நிண்டு கதைப்பம் என்றபடி வாகீசன் தொடர்ந்தான். உன்னட்டை ஒரு முக்கிய விசயம் சொல்ல வேணும் அதுதான் வந்தனான் உனக்கு தெரியும் தானே என்ரை அக்கா அண்ணா மார் எல்லாரும் வெளிநாட்டிலை தானே. இப்ப நானும் அம்மா அப்பாவும் தான் அண்ணணன் மார் அம்மா அப்பாக்கு முதலும் ஸ்பொன்சர் அனுப்பியிருந்தவை அம்மா அப்பா என்னை தனிய இஞ்சை விட்டிட்டு போக ஏலாது எண்டு போகேல்லை ஆனால் இப்ப பிரச்சனையும் கூடிட்டுது அம்மா அப்பாக்கு ஒண்டு நடந்தா அது என்னாலை தான் எண்டு மற்ற சகோதரங்கள் எல்லாம் என்னிலை தான் குற்றம் சொல்லவினம்
அதோடை இப்ப என்னையும் கனடாக்கு கூப்பிட ஒழங்கு பண்ணியிருக்கினம் அதாலை இப்ப நானும் அம்மா அப்பாவோடை கொழும்புக்கு போறதா முடிவெடுத்திருக்கிறன் இப்ப கொஞ்ச நாளா போக்கு வரத்தும் தொடங்கி கொழும்புக்கு பஸ்சும் ஓடுது.அது எப்ப நிக்குமோ தெரியாது அதுதான் உன்னட்டை சொல்லிட்டு போறதுக்கு தான் தேடி திரிஞ்சனான் எண்டான். நல்லது சந்தோசமா போட்டு வா போனதும் எங்களை மறந்திடாதை கடிதம்போடு ஆனால் கவனம் இப்ப எல்லா இந்தியனாமி சென்றியிலையும் (சோதனை நிலையம்) பழைய புளொட்காரர் நிண்டு தெரிஞ்ச ஆக்களை பிடிக்கிறாங்களாம் எதுக்கும் கவனம் என்றேன். சிரித்தபடியே சொன்னான் என்னை ஏன் பிடிக்கிறாங்கள் நான் ஆரோடை பிரச்சனை பட்டனான் என்னை பிடிக்க. ஒண்டும் நடக்காது சரி வா ஏதாவது குடிக்கலாம் என்று என்னை அழைத்தான் . இப்ப எங்கை போய் என்னத்தை குடிக்கிறது எல்லா சந்தியிலையும் வந்து குந்திட்டாங்கள் போசாமல் இதிலை நிண்டு கதைச்சிட்டு போவம் எண்டவும் அவன் விடுவதாய் இல்லை வற்புத்தவே சரி வா சங்கு வேலி பக்கமா போவம் அங்கை ஒழுங்கைக்குள் ஒரு கடை இருக்கு அங்கை ஏதாவது குடிப்பம் என்று இருவரும் சைக்கிளை மிதித்தபடி அநத கடைக்கு போய் கதைத்து கொண்டே சில முறுக்குகளை வாங்கி சாப்பிட்டு சோடாவும் குடித்தோம்
அதற்கு அவனே காசை குடுத்து விட்டு அவன் புறப்பட தயாரானான் சரியடா நான் போட்டு வாறன் என்றவன் ஏதோ யோசித்தவனாய் என்னிடம் டேய் உன்ரை சேட்டை கழட்டு என்றான் எனக்கு புரியாமல் எதுக்கடா சேட்டை கழட்ட சொல்லுறாய் என்றவும் அவன் தன்னுடைய சேட்டை கழற்றி என்னிடம் தந்து விட்டு டேய் உன்ரை சேட்டை தா உன்னுடைய ஞாபகமாய் என்னட்டை அது இருக்கட்டும் எப்பவாவது ஒரு நாள் நாங்கள் சந்திக்கேக்கை நீ என்ரை சேட்டை என்ரை ஞாபகமாய் பத்திரமாய் வைச்சிருக்கிறியா பாப்பம் ஆனால் உன்ரை சேட் என்னட்டை பத்திரமாய் இருக்கும் என்றவன் என்னுடைய சேட்டை வாங்கி போட்டு கொண்டு சரியடா எங்கையாவது எப்பவாவது சந்திப்பம் என்று கையை காட்டியபடி சென்று விட்டான்.இரண்டு நாட்களின் பின்னர் எனக்கு வாகீசனை முருகண்டியில் வைத்து பிடித்துவிட்டாகளாம் என்கிற செய்தி கிடைத்தது உடனே அவனது வீட்டிற்கு சென்றேன் அவனை கைது செய்ததும் தாயும் தந்தையும் இந்திய இராணுவத்திடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி போராடிபார்த்து விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டனர்.அவனது தந்தையிடம் விபரம் கேட்டேன்.
தம்பி நாங்கள் முருகண்டிலை இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க போட்டம் இவன் பக்கத்திலை இருக்கிற தேதண்ணி கடைக்கை பேனவன் யாரோ இவனை தெரிஞ்ச பழைய புளொட்காரனாம் ஆமியோடை நிண்டவன் அவன் தான் இவனை கண்டிட்டு பிடிச்சு கொண்டு போனவங்கள் நானும் அவனிட்டை கெஞ்சி பாத்தன் வேணுமெண்டா கேக்கிற காசுகூட தரலாம் எண்டும் கேட்டு பாத்தன் கடைசியா ஒரு தொகை காசும் எங்கடை ஊர் ஆமி பொறுப்பானவனின்ரை கடிதமும் வாங்கிவர சொன்னாங்கள் விடறம் எண்டிருக்கிறாங்கள் அதுதான் காசு புரட்டியாச்சு தொட்டிலடி ஆமிகாம்பிலை போய் கடிதமும் கேட்டனான் தந்திட்டான் அவனும் மகனை விட சொல்லி வயலஸ்சிலை செய்தி அனுப்பிறனெண்டான் நாளைக்கு அதுகளை கொண்டு ஊராக்களும் எல்லாரும் போறதா இருக்கிறம் எண்றார் கவலையாக.
எனக்குள் ஒரு நம்பிக்கை எப்படியும் விட்டு விடுவார்கள் அவனை ஊரிலேயெ அனைவருக்கும் பிடிக்கும் எவருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவன் அதனால் ஊர்மக்களே திரண்டு போய் அவனை விட சொல்லி கேட்கும் போது கட்டாயம் விட்டுவிடவார்கள் என்கிற நம்பிக்கையில் மறுநாள் அவர்கள் போய் வாகீசனுடன் மீண்டும் வரும்வரை நான் அந்த ஊரிலேயே தெரிந்த ஒரவர் வீட்டில் தங்கியிருந்தேன். மறுநாள் காலை இரண்டு பேரூந்து வண்டிகளில் ஊர் மக்கள் எல்லோரும் புறப்பட்டு போயிருந்தனர்.மாலையாகியிருந்தது அவர்களின் வரவை எதிர் பார்த்தபடி அவனும் நானும் இருந்து கதைக்கும் அந்த கோயில் தேரடியில் காத்திருந்தேன். இருள தொடங்கியிருந்தது போன பேரூந்து வண்டிகள் வந்து கொண்டிருந்தன பின்னால் இன்னொரு காரும் வந்து அவர்கள் வீட்டின் முன்னால் நின்றது நான் எழுந்து அவர்களை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே அவர்களின் அழுகுரல்கள் எனக்கு கேட்க தொடங்கியது.
வேகமாய் ஓடிப்போய் பார்த்தேன் கடைசியாய் வந்த காரில் இருந்து வாகீசனை பிணமாய் இறக்கினார்கள் அவனது தலையை சுற்றி ஒரு துணியால் கட்டியிருந்தனர். நான் அவர்களிடம் ஏன் என்ன நடந்தது என்று கேட்டபடி துணியை விலக்கி பார்க்க முயன்றபோது ஒருவர் சொன்னார் தம்பி துணியை எடுக்காதையும் என்று சொல்லி நடந்ததை விபரித்தார்.நாங்கள் போய் காசும் கடிதமும் கொண்டந்திருக்கிறம் ஆளை விடுங்கொ எண்டு கேக்கவும் ஆள் நேற்றிரவு தப்பியோடிட்டார் எண்டாங்கள் நாங்கள் நம்பிக்கையில்லாமல் ஆமிகாரரிட்டை கெஞ்சி கொண்டிருக்கேக்கை தான் அங்கை கடை வைச்சிருக்கிற ஒரு பெடியன் சொன்னான் அண்ணை நேற்றிரவு ஒராளை கண் கட்டினபடி பின் பக்கமா காட்டு பகம் கொண்டு போனவங்கள் காட்டுக்கை போய் தேடி பாருங்கோ எண்டான் நாங்களும் காட்டுக்கை தேடேக்கை ஒரு இடத்திலை கிடங்கு கிண்டின அடையாளம் கிடந்திது தோண்டி பாத்தம் அந்த பாவியள் அவனை சித்திரவதை செய்து அவனின்ரை இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்திட்டு உயிர் இருக்க கூடியதாவே தாட்டிருக்கிறாங்கள் .
நாங்கள் எடுக்கேக்கை உடம்பு சூடாதான் இருந்தது அனால் உயிர் இருக்கேல்லை வாற வழியிலை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் ஏதாவது செய்து கொண்டு வரலாம் எண்டு நினைச்சனாங்கள் ஆனால் நேரம் போட்டுது ஊரடங்கு சட்டம் தொடங்கிட்டுது அதாலை நேரை வீட்டை கொண்டத்திட்டம். வைச்சிருக்காமல் நாளைக்கே காரியங்களை பாக்க வேணும் என்று கலங்கியபடி சொன்னார்.வாகீசனது உறவினர்களின் ஓலத்துடன் அவனும் அன்றைய இரவுடன் நிதந்தரமாய் உறங்கிபோனான். கால போக்கில் அவன் எனக்கு தந்த சேட்டும் எங்கோ தொலைந்து போக இன்னமும் தொலைந்து போகாத அவனது நினைவுகளுடன் அவனிற்கு அஞ்சலி செலுத்தி என் நினைவுகளை தொடருவேன் நன்றி சாத்திரி