Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள்..!

1:20 PM, Posted by sathiri, One Comment

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கோ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார். அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது.

அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.

One Comment

Rasikai @ 1:27 PM

சாத்திரி உங்கள் நிழலாடும் நினைவுகள் கதை நன்றாக உள்ளது, இப்படியும் சில மனிதர்கள்