Navigation


RSS : Articles / Comments


பேச்சியம்மன்-சிறுகதை

5:41 AM, Posted by sathiri, No Comment

பேச்சியம்மன்-சிறுகதை-சாத்திரி   நடு இணைய சஞ்சிகைக்காக ..

 
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%எங்கள் ஊரின் பண்டதரிப்பு போகும் வழியில் ஒரு சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்து மீண்டும் ஒரு கையொழுங்கையால் நடந்தால் ஒதுக்குப்புறமாக  ஒருபக்கம் தோட்ட காணிகளையும் மறுபக்கம் பனங்கூடலையும் கொண்ட அக்கம் பக்கம் வீடுகளற்ற  பகுதியில் பனங்கூடலுக்கு  நடுவில் ஒரு வேப்பமரத்தை பின்னிப்பிணைந்த பிரமாண்டமான ஆலமரம். அவற்றின் கிளைகள் பிரியுமிடத்தில் நடுவே ஒரு பனை மரம் வேறு வளர்ந்திருந்தது. அந்த மும்மரத்தின் அடியில்தான் பேச்சியம்மன் கோவில். அதை யார் எப்போ கட்டினார்கள் என்கிற விபரம் எதுவும் ஊரில் யாருக்கும் தெரியாது. ஒருவர் மட்டும் குனிந்துதான் உள்ளே போகலாம். அவ்வளவு சிறிய கோவில். ராசையா பூசாரி மட்டுமே ஒவ்வொருநாளும் மாலையில் உள்ளே போய் விளக்கேற்றி விட்டு சங்கெடுத்து ஊதுவார். அந்த வெளிச்சத்தில் மங்கலாக ஒரு கருஞ்சிலை தெரியும். அந்த சங்குச் சத்தம் மனதில் ஒரு திகிலை தரும். பேச்சியம்மனுக்கு பூசை,பொங்கல்,திருவிழா என்று எதுவும் கிடையாது. அங்கு போகவே பொதுவாக எல்லோருக்கும் பயம். வீடுகளில் யாருடையதாவது பசு கன்று போட்டால் அதனோடு சேர்ந்துவரும் இளங்கொடியை ஒரு சாக்கில் கட்டி கொண்டுபோய் அந்த ஆலமரத்தில் கட்டி விடுவார்கள். பசு அதிக பால் தருமென்பது அவர்களது நம்பிக்கை. அதை விட ஒன்னுமொரு நம்பிக்கையும் இருந்தது.திருமணமாகி நீண்டநாட்கள் பிள்ளை பிறக்காத பெண்களின் தூமைச்சீலையை அதில் கட்டி விட்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. மரத்தடியை சுற்றி, அதை தின்ன வரும் காகங்களும் இலையான் குழவி என ஒரே சத்தமாகவும் நாத்தமாகவும் இருக்கும். ஊரில் வீடுகளிலோ தோட்டங்களிலோ களவு போனால் சனமும் போலிசை நம்பியதை விட பேச்சியம்மனையே நம்பினார்கள். ஒரு முழம் பருத்தி நூலை மூன்றாக மடித்து மஞ்சள் குங்குமத்தில் நனைத்து நேர்த்திவைத்து ராசையா பூசாரியிடம் இழை கட்டி விட சொல்லி கொடுத்து விடுவார்கள். பேச்சியம்மனின் கையிலோ காலிலோ அந்த நூலை கட்டி விட்டால் களவெடுத்தவனின் கையோ காலோ வழங்காமல் போய் விடும். கழுத்தில்  கட்டினால் அவ்வளவுதான் ஆளே இல்லாமல் போய்விடும். ஆனால் ஊர் மக்கள்  கழுத்தில் கட்டுமளவுக்கு அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. பெரும்பாலும் கையிலேயே கட்டும்படி சொல்வார்கள். மென்போக்குள்ள சிலர் விரலில் கட்ட சொல்வதுமுண்டு. 

மக்கள் அந்தப்பக்கம் போகாததுக்கு இன்னுமொரு காரணமும் உண்டு. கையொழுங்கை பிரியுமிடத்தில் நின்ற நூற்றாண்டுகளை கடந்து நிக்கும் பெரிய புளியமரம். ஆறு ஏழு பேர் சேர்ந்தால் தான் அதன் அடிப்பக்கத்தை கட்டிப்பிடிக்கலாம். மரத்தின் கிளைகளில் காய்த்து தொங்குவதைப்போல நூற்றுக்கணக்கான தேன்குழவிக் கூடுகள். இதனாலேயே அதுக்கு ‘தேனிப்புளியடி’ என்கிற காரணப்பெயர். கீழே ஆளுயரத்துக்குப் பல கறையான் புற்றுகள். அதற்குள் குடியிருக்கும் பலரகப் பாம்புகள். மரத்தின் பொந்துகள் எங்கும் கூடு கட்டியிருக்கும் மூத்திரக்குழவி. அது போதாதென்று அருகிலிருக்கும் பனைமரங்களில் பந்து போலத் தொங்கும் கருங்குழவி கூடுகள். இவைகள் சிறகடிப்பு வீணையின் ஒற்றை நரம்பிலிருந்து எழும் சத்தம் போல இரைந்தபடியே எப்போதுமே அச்சத்தை தருவதாக இருக்கும். இரவு நேரத்தில் பேச்சியம்மன் அந்த புளியமரத்தில் வந்து  குந்தியிருந்துவிட்டு போவதாக ஒரு கதை ஊரில் உலாவிக்கொண்டிருந்தது ,அதனைச் சிலர் பார்த்துமிருகிறார்கள். அப்படிப் பார்த்து காச்சல் வந்து பேச்சு மூச்சில்லாமல் படுக்கையில் விழுந்து வைத்தியம் எதுவும் சரிவராமல் பேச்சியம்மனுக்கு நேர்த்தி வைத்து விளக்கேத்த தேங்காய் எண்ணெயும் திரியும் பூசாரியிடம் கொடுத்த பின்னர்தான் காச்சல் மாறியிருக்கிறது. அதே புளியமரத்தடியில் பேச்சியம்மன் சிலரை அடித்து கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. 

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் இந்தப்பக்கம் யாராவது போவார்களா ?.
அந்த மரத்தோடு சேர்ந்திருந்த பெரிய காணியின் நடுவில் செட்டிநாடு மற்றும் கேரள பாணி கலந்து சுண்ணாம்பால் கட்டப்பட்ட பெரிய நாற்சார வீடு. அந்த வீட்டு உரிமையாளர் பல வருடங்களுக்கு முன்னரே சிங்கப்பூரில் சென்று குடியேறிவிட்டதால் அங்கு யாருமில்லை. அதை தாண்டி கொஞ்ச தூரம் போனால் இரண்டு குடிசைகள் முதலாவது , மகனோடு தனியாக வசிக்கும்  கசிப்பு ராசாத்தியின் வீடு.  ராசாத்தியிடம் உள்ளூர் சாராயம் மட்டுமில்லை வெளிநாட்டு சாராயம் கூட கிடைக்கும். கள்ளிறக்கும் தொழில் செய்த அவரின்  கணவன் சாதி சண்டையில் இறந்துபோய்விட வருமானத்துக்காக அவர் தொடங்கியதுதான் சாராய வியாபாரம். சிங்கப்பூர் காரரின் வீட்டில் யாரும் இல்லாததால் சாராய போத்தல்களை மறைத்துவைக்கும் இடமாக பாவித்து மட்டுமல்ல அதனை பாதுகாக்க இரண்டு நாட்டு  நாயை வேறு வளர்த்து விட்டிருந்தார். அந்த வீட்டை தாண்டி சில நூறு மீற்றற்றில் அடுத்த குடிசை பால்ரொட்டி நாகம்மாவினுடையது. நாகம்மா பிறந்து சில காலத்திலேயே  தாயார் இறந்துபோக மகளை கவனிக்கவாவது வேறொரு திருமணம் செய்துகொள்ள பலர் வலியுறுத்தினாலும் மகளை நானே கவனிக்கிறேன் என்று  திருமணமும் செய்துகொள்ளாத   ஊரில் பெயர்போன சமையல்காரன் சித்திரவேலு. ஊரில் நடக்கும் சடங்குகளுக்கு கோவில் திருவிழாக்களுக்கு சமையல் வேலைசெய்வதை தவிர விவசாயமும்செய்தார். நாகம்மாவும் படிப்பை இடையில் விட்டுவிட்டு தகப்பனோடு சேர்ந்து சமையல் வேலைக்கு போகத்தொடங்கி அதை கற்றுக்கொண்டதோடு சொந்தமாகவே பல காரங்களும் செய்யத்தொ டங்கியிருந்தார். பலகாரம் தான் அவரது ஸ்பெசல். அதுவும் முக்கியமாக பால்ரொட்டி செய்வது. இளமையில் அழகாகவும் துடுக்காகவுமிருப்பார். தோட்டத்திலிருக்கும் வாழைக்குலை  காய்கறிகள் எல்லாம் எடுத்து சைக்கிள் கரியரில் கட்டி சந்தைக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார். அது மட்டுமல்ல அந்த புளிய மரத்துக்கு கீழால் சென்றுவரும் துணிச்சலான ஒரு சிலரில் நாகம்மாவும் ஒருவர். அப்படியிருந்த நாகம்மாவை திடீரென சில நாட்கள் ஊரில் காணவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் சித்தவைத்தியம் செய்யப் புத்தளத்தில் ஒரு  மௌலவியிடம் கொண்டுபோய் விட்டுள்ளதாகச் சித்திரவேலர் ஊரில் சொல்லியிருந்தார். சில மாதங்களின் பின்னர் நாகம்மா ஊருக்கு திரும்பி வந்திருந்தாலும் பழைய துடுக்குத்தனம் எதுவுமில்லாமல் அதிகம் வீட்டை விட்டு வெளியே வராமலும் இருந்துள்ளார். 

“சில காலத்திலேயே வெளியூர் போய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தார்களாம். அது நாகம்மாவின் குழந்தைதான், யாரோ அவளை ஏமாற்றி விட்டார்கள். வெளியூரில் போய் பிள்ளை பெற்றுக்கொண்டு வந்துள்ளாள்“ என்று ஊரில் ஒரு கதையும் உலாவியது.
அப்போதுதான் காற்றும் மழையும் பலமாக அடித்த ஒரு இரவில் ஊரை கலக்கிய அந்தக்கொலை நடந்திருந்தது . ஊரிலேயே மிகப்பெரிய சண்டியன் மணியத்தை அந்த புளியமரத்தின் அடியில் பேச்சியம்மன் அடித்து கொலை செய்திருந்தது. மணியன் பெரிய சண்டியன். உயரமான, பருமனான, முறுக்கிய மீசையோடு பார்க்க பயப்படும் ஒரு உருவம்.  ஏகப்பட்ட வழக்குகள் அவன்மீது பதிவிலிருந்தாலும் அரசியல் ,போலிஸ் செல்வாக்கோடு வெளியே வந்து விடுவான். வெளியே வந்ததும் அவன் மீது வழக்குப் போட்டவர் உரை விட்டு எங்காவது ஓடிவிடுவார். இல்லாவிட்டால் மணியம் அடித்தே கொன்று விடுவான். அதனால் பலர் வழக்கு போடவே பயந்தார்கள். போலீசாரிடமே கப்பம் வாங்கும் ஒருவன் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மணியத்தைத்தான் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது. செய்தி பரவி ஊரே கூடிமெல்லிய மழைத் தூறலில் நனைத்தபடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தகவலறிந்து சங்கானை போலிஸ் அதிகாரி ஆறுமுகம் தலைமையில்ஒரு குழு வந்திருந்தாலும், அவர்களும் புளிய மரத்துக்கு கீழே போகப்பயத்தில் ஆளையாள் பார்த்துக்கொண்டிருந்தபோது, சித்திரவேலர் குழவி குத்திவிடாமலிருக்க ஒரு சாக்கை முதுகுப்புறம் போர்த்திக்கொண்டு பெரிய வடக்கயிறு ஒன்றின் நுனியை இடுப்பில் கட்டியபடி தவழ்ந்து போய் அதை  சடலத்தின் காலில் கட்டிவிட்டு மீண்டும் தவழ்ந்து வந்துவிடக் கையிற்றைப் பலரும் சேர்ந்துசடலத்தை இழுத்தெடுத்தார்கள். தலை பிளந்திருந்தது. சடலத்தினருகே முறிந்த புளியங்கிளை ஒன்றும்கிடந்ததால் பேச்சியம்மன் புளியம் கிளையையை முறித்து அதனால் மணியத்தின் தலையிலடித்து கொலை செய்து விட்டது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

 அவன் குடும்பத்தினரைத் தவிர மணியம் செத்தது ஊரில் எல்லோருக்கும் ஒரு ஆறுதல் தான். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் ஒரு நின்மதிப் பெருச்மூசோடு சடலத்தை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தவர், சில நாட்களிலேயே “பேச்சியம்மன் கனவில் வந்து தானே அந்த கொலையை செய்ததால் வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டாமென சொன்னதாக” சொல்லி பைலை மூடி விட்டாராம். அதே வருடத்திலிருந்து கோவில் திருவிழா நாளில் நாகம்மாள் மீது பேச்சியம்மன் இறங்கி உருவாடத் தொடங்கியதாம். இந்த சம்பவங்கள் நடக்கும்போது நான் அப்போ சிறுவன். எனவே பின்னர் எனக்குத் தெரிந்த நாகம்மா பற்றி சொல்கிறேன்.
எப்போதும் சாணி போட்டு மெழுகியிருக்கும் ஒரேயொரு அறை மட்டும் கொண்ட பனையோலையால் வேயப்பட்ட சுத்தமான குடிசை. அருகிலுள்ள சிறிய தாழ்வாரம் தான் அடுப்படி. திண்ணையில் ஒரு கயித்து கட்டில். அதனருகே பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டியும் இடுப்பளவு உயரமான சல்லடைபோட்ட இரும்புக்கரண்டியும் சாத்தி வைக்கப்பட்டிருக்கும். முன்னால் விசாலமான முற்றத்தை தாண்டி பலவகை பூங்கன்றுகள் சுற்றிவர நிற்கும் பனைமர துலாவுடன் கூடிய கிணற்றடி. அதற்குமப்பால் சிறிய வீட்டுத் தோட்டம். எனக்குத் தெரிந்து ஊரில் முதலாவது பகுத்தறிவாளர் நாகம்மாதான். கோவிலுக்கெல்லாம் போக மாட்டார். காலையில் எழுந்ததும் கிணற்றடியில் உள்ள கமுகமரத்தில் கட்டித் தொங்கும் உமிக்குடுவையிலிருந்து சுட்ட உமியில் பல் தீட்டி குளித்து ஈரத் துணியோடு சுத்தமாக விளக்கிய பித்தளை செம்பில் நீர் நிரப்பி அதுக்குள் பலவகை பூக்களையும் பிடுங்கிப்போட்டு நடு முற்றத்துக்கு வந்து செம்பிலுள்ள பூக்களை முற்றத்தில் போட்டு தண்ணீர் தெளித்த பின்னர் சூரியனை அண்ணாந்துபார்த்து தலைக்கு மேல் கைகளை கூப்பி வணங்கிவிட்டு அன்றைய வேலைகளை தொடங்குவார். நாகம்மா மேல்சட்டை போடமாட்டார். சேலையால் மார்புக்கு மேல் குறுக்கு கட்டியிருப்பார். பெரும்பாலும் பச்சை சேலைதான். 

ஊரில் என்ன மங்கள நிகழ்வு நடந்தாலும் நிகழ்வு தொடங்குவதுக்கு மூன்று நாளுக்கு முன்னரே பால்ரொட்டி சுட்டு முதலாவதாக நன்றாக மொரமொறவென பொன் நிறத்தில் பொங்கி வரும் பால் ரொட்டியை அடுப்புக்கல்லில் நெருப்புக்கு படைத்தது விட்டே  பின்னர் நிகழ்வுக்கு வேண்டிய பலகாரங்களை சுடுவது வழமை. அப்படி முதலாவதாக சுடும் பால் ரொட்டி எண்ணெயில் போடும்போது பொங்காமல் சரியான பதத்துக்கு வேகாமல் வந்தால் அப சகுனம். அந்த நிகழ்வு சரியாக நடக்காது ஏதும் குழப்பங்கள் வருமென்பது ஒரு நம்பிக்கை. அதனாலேயே பலகாரம் செய்வதில் கைதேர்ந்த நாகம்மாவை எல்லோரும் அழைப்பது வழமை. முதல்நாள் பால் ரொட்டி சுடும் நிகழ்வுக்கு அவர் பணம் வாங்கமாட்டார். அவரின் வீட்டுக்குப்போய் வெற்றிலையில் ஒரு ரூபாய் வைத்து அழைக்கவேண்டும். அதை இரண்டு கைகளாலும் வாங்கி கைகளை உயர்த்தி ஆகாயத்தை நோக்கி கும்பிட்டு விட்டு அதை கொண்டுபோய் பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டிக்கு பக்கத்தில் வைத்து மீண்டும் வணங்கிவிட்டுச் சரி சொல்லிவிட்டால் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்துவிடுமென்கிற மகிழ்ச்சியோடு அழைக்கப்போனவர் திரும்புவார். முடியாதென்று சொல்லிவிட்டால் …….மீண்டும் நாகம்மா சம்தம் சொல்லும்வரை அல்லது வேறொருவரை வெளியூரிலிருந்து அழைத்து வரும்வரை சில நிகழ்வுகள் தள்ளிப்போனதுமுண்டு. நாகம்மாளின் மகள் கல்யாணி ஊர் பாடசாலையில் என்னோடு ஒரே வகுப்பில்தான் படித்தாள். அவளும் நாகம்மாள் போலவே துணிச்சல்காரி. தனியாக அந்த புளியமரத்தை கடந்து பாடசாலைக்கு வந்து போவாள். நாகம்மாவும் என் அம்மாவும் நல்ல நண்பிகள் என்பதால் கல்யாணியும் எனக்கு நல்ல நண்பியாகிவிட்டிருந்தாள். காலப்போக்கில் சித்திர வேலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்துபோய்விடக் கல்யாணி நாகம்மாவுக்கு உதவியாக சமையல் வேலைகளுக்குப் போக தொடங்கியிருந்தாள். 

 ஊர் பாடசாலையில் என் உறவினர்களும் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்களோடு ஏற்பட்ட தகராறில் நான் எட்டாவது படிக்கும்போதே அப்பா என்னை மானிப்பாய் இந்துவில் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அதற்குப் பிறகு கல்யாணியையும் நான் அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. ஒருநாள் மாலை ஊரிலிருந்த மிகப்பெரிய அரிசி மில்லிலிருந்து சைக்கிளின் பின்னல் ஒரு மூட்டையை கட்டியபடி கல்யாணி வந்து கொண்டிருந்தாள். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்து பேசிய நினைவு. மில்லில் கீழே சிதறிக்கிடக்கும் தவிடு மற்றும் மாவை கூட்டி அள்ளிக்கொண்டு போய் மாட்டுக்கு உணவாக கரைத்து வைத்தால் நன்றாகப் பால் தரும் அதுதான் ஒவ்வொரு நாளும் மில்லுக்கு வந்துபோவதாக சொல்லிவிட்டுபோனாள். மில் முதலாளியின் மகன் சுரேசும் என் பாடசாலையில்தான் படித்தான். அவன் என்னை  விட ஒருவகுப்பு அதிகம். ஆசிரியர்களே சைக்கிளில் வந்து கொண்டிருந்த காலத்தில்  பாடசாலைக்கு பைக்கில்வந்த ஒரேயொருமாணவன் அவன்தான். செல்வ செழிப்பும் திமிரும் அவனிடமிருந்தது. அவனை சுற்றி ஒரு ஓசிக் கூட்டம் எப்போதுமிருக்கும். மாணவிகளும் அவனை ஒரு கதா நாயகன் போலப் பார்த்தால் எனக்கு இயல்பாகவே அவன்மீதொரு எரிச்சல் பெறாமை வளர்ந்து விட்டிருந்தது. எப்படியாவது அந்த வருட கோவில் திருவிழாவில் நண்பர்களோடு சேர்ந்து அவனுக்கு இருட்டடி போடுவதென்று முடிவெடுத்திருந்தேன். அந்த வருட திருவிழாவும் தொடக்கி விட்டிருந்தது. நானும் அவனுக்கு இருட்டடி போடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் காலை சுரேசை புளியடியில் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது என்கிற செய்தி கிடைத்தது. எனக்கு லேசாக உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தாலும் சைக்கிளை எடுத்து புளியடிப்பக்கமாக மிதித்தேன். பிணத்தின் காலில் கயிறை கட்டி தூரத்தில் நின்று இழுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். 

ஒப்பாரி அழுகை சத்தத்தோடிருந்த சனக்கூட்டத்தை விலக்கி மெதுவாக எட்டிப்பார்த்தேன்.மண்டைபிளந்திருந்தது.நேற்றிரவு நித்திரையிலிருந்தவனை  பேச்சியம்மன் தான் இழுத்துக்கொண்டு வந்து புளியடியில் அடித்துக் கொன்று விட்டது என்று பேசிக் கொண்டார்கள். பேச்சியம்மன் கொல்லும் அளவுக்கு அவன் மோசமானவன் இல்லையே என்கிற சந்தேகமும் மக்களிடமிருந்தது.
ஊரில்விவசாயிகளிடமெல்லாம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தால் தான் மில் முதலாளியை பழிவாங்க அவரின் ஒரே மகனை பேச்சியம்மன் கொன்று விட்டதாக சந்தேகத்துக்கான பதிலையும் அவர்களே கண்டு பிடிதுக்கொண்டார்கள். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் இப்போ ஒய்வு பெற்று விட்டதால் அவரிடத்திலிருந்த ரணசிங்க என்கிற சிங்கள அதிகாரி பிணத்தை வைத்திய சாலைக்கு அனுப்பும் வேலைகளை செய்து விசாரணைகளை தொடங்கியிருந்தார். பேச்சியம்மன் செய்த கொலையை விசாரணை செய்தால் அது சும்மா விடுமா என்ன .. ?
அப்போ விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கிய கால கட்டம் எதோ ஒரு இயக்கம் நடத்திய தாக்குதலில் ரணசிங்காவும் கொல்லப்பட சுரேசின் வழக்கும் காணாமல் போய் விட்டது. சில நாட்களில் கல்யாணிக்கு உடல் நிலை சரியில்லையென்று நாட்டு வைத்தியம் செய்ய அவளை  நாகம்மா புத்தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அறிந்தேன். சில மாதங்களின் பின்னர் கல்யாணி ஊர் திரும்பியிருந்தாள். இந்த கதையை படிக்கும் நீங்களே இப்போ ஓரளவு ஊகித்திருப்பீர்கள். ஆம் நீங்கள் நினைத்தது போலவே சில நாட்களில் கல்யாணியும் ஒரு ஆண் பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அதுக்குப் பின்னர் ஊர் நிலவரங்கள் மாற்றமடைய நானும் வெளி நாடு வந்து விட்டேன். பேச்சியம்மன் பற்றிய கதைகளும் காணாமல் போய் விட்டிருந்தது.
இப்போ சுமார் முப்பதாண்டுகள் கழித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஊர் திரும்பியிருக்கிறேன். அதுவும் ஒரு கொண்டாட்டதுக்காக, அது தங்கை கட்டிமுடித்த புது வீடு குடிபுகுதல்நிகழ்வு. நீண்ட காலத்தின் பின் உறவுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு வீடு குடி புகுதலுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போதான் எனக்கு அந்த சந்தேகம்,
“என்ன பலகாரம் எதுவும்சுடேல்லையா”? என்று கேட்டதுக்கு, யார் அதெல்லாம் இப்ப செய்து மினக்கெடுகினம்? பலகாரம் சாப்பாடு எல்லாம் ஓடர் குடுத்தாச்சு. அவர்களே அண்டைக்கு எல்லாம் கொண்டு வந்து பரிமாறிட்டு போவினம். எங்களுக்கு ஒரு வேலையுமில்ல.”  என்ற தங்கையின் பதில் ஏமாற்றமாக இருக்கவே,
“சரி சடங்குகளுக்கு நாள் பலகாரங்கள் பால் ரொட்டி இதெல்லாம் சுடுவினமே, அது கூட இல்லையா ?”என்றேன். 

“பால் ரொட்டி எண்டிற பலகாரமே இப்ப கனபேருக்கு மறந்து போச்சு. அண்ணை இப்பவும் அந்தக்காலத்திலேயே நிக்கிறார்.” எண்டு நக்கலாக சிரிக்க.
“இப்ப யாரும் சுடுறேல்லையோ? இல்லை சுடத் தெரியாதோ…….. ?”  என்ற என் கேள்விக்கு. “உண்மையை சொன்னா இப்ப யாருக்கும் சுட தெரியாது” என்ற அம்மாவின் பதில் குறுக்கே வந்தபோதுதான் எனக்கு மீண்டும் நாகம்மாவின் நினைவு வந்தது. அவரைப்பற்றி நான் கேட்க முதலே,
“முந்தி எண்டால் நாகம்மா இருந்தது. அவளும் செத்து போனாள். இப்ப மகள் இருக்கிறாள். அவளும் பால் ரொட்டி சுடுறதில கெட்டிக்காரி தான், ஆனால் நாகரீகம் மெத்திப்போனதில  ஒருத்தரும் இப்ப கூப்பிடுரேல்ல”என்று பெரு மூசோடுஅம்மா சொல்லி முடிக்க, “கல்யாணிதானே….. இப்ப எங்க இருக்கிறாள்.. ? “அவள் அதே நாகம்மாவின்றை வளவில்தான்.” என்று பதில் வந்ததுமே, “நீ என்னவெண்டாலும் செய். ஆனால் ‘நாள் பலகாரம்’ கட்டாயம் சுடவேணும். நான் கல்யாணியை போய் பார்த்திட்டு வாறன்..” என்றபடி, அங்கு நின்ற யாரோ ஒருவரின் சைக்கிளை எடுத்து மிதிக்க, “உனக்கு இடம்வலம் நினைவிருக்கோ ..”? என்று பின்னல் ஒலித்த அம்மாவின் குரலுக்கு, “என்ரை ஊரிலை எனக்கு இடம் தெரியாதோ”? என்றபடி மிதித்தேன். பூவரசம் வேலிகளெல்லாம் மதில்களாகவும் வெற்று காணிகள் கட்டிடங்களாகவும் நிறையவே மாறிப்போயிருந்த ஊரில் வீதிகள் கறுப்பு வெள்ளை படம்போல மனதிலிருந்தது. புளியடி ஒழுங்கைமட்டும் மாறாமல்  பல வருடமாக யாரும் பாவிக்காததால் புதரும் பற்றை காடுமாக வளர்ந்திருந்தது. முன்பு போலவே வேறு பாதையால் சுற்றி போயிருந்தாலும் கல்யாணியின் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறியபடி விசாரித்து கண்டு பிடித்து போய்  சந்தேகத்தோடு வீட்டு இரும்பு படலையில் தட்டினேன். 

மெலிந்த தலை நரைத்து இப்போ பாடகி ஜானகியை பார்த்தது போல ஒரு உருவம் உள்ளிருந்து வந்து  யாரது என்றது .. “கல்யாணி … “என்று இழுத்ததும், “ஓம் நான் தான். நீங்கள்……… ? என்றாள். உள்ளே நாய் ஏதும் இருக்கிறதா என பார்த்துவிட்டு தைரியத்தோடு படலையை திறந்து உள்ளே போய் சைக்கிளை நிறுத்திவிட்டு சிரித்தபடி நிற்க. என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவள், 

“மன்னிக்கோணும் எனக்கு யாரெண்டு தெரியேல்லை” எண்டாள். “நான் தான் உன்னோட படிச்ச சிறி..  நாகேசின் மகன்.” என்றதும், சட்டென்று பல்லாயிரம் சூரியகாந்திப்பூ ஒரே நேரத்தில் மலர்ந்தது போல மாறிய புன்னகையோடு, “வாங்கோ .. வாங்கோ .. வந்திருக்கிறதா கேள்விப்பட்டனான். நானே வர இருந்தனான்.” என்று கதவை அகலத் திறந்து வரவேற்றாள். அப்படியே சுற்றிவர நோட்டம் விட்டேன். நாகம்மாள் வாழ்த்த குடிசை வேயப்பட்டு சாணியால் மெழுகி சுத்தமாக இருந்தது. அதே கயிற்றுக்கட்டில் அதேயிடத்தில் அருகில் அதே பெரிய இரும்புச் சட்டியும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த கரண்டியில் சந்தனப்பொட்டு, கீழே காய்ந்துபோயிருந்த சில மலர்கள். கிணற்றடியும் சுற்றிவர பூசெடிகளும் ,பனைமரத் துலாவை காணவில்லை. மோட்டர் போடப்பட்டிருந்தது. வீட்டுத்தோட்டமிருந்த நிலத்தில் சிறிய இரண்டு அறை கொண்ட அழகான கல்யாணியின் கல்வீடு கட்டப்பட்டிருந்தது. உள்ளே போய் வழக்கமான விசாரிப்புக்களிடையே, “தனியாவா இருக்கிறாய்”? என்று கேட்டதுக்கு, 

 “ஓம்…..  மகன் கனடாவிலை. கலியாணமும் கட்டி மூண்டு பிள்ளையள். ஒவ்வொரு வருசமும் வந்து போவான். என்னையும் அங்கை இருக்க சொல்லி கூட்டிக்கொண்டு போனவன். எனக்கு அங்கை பிடிக்கேல்லை. திரும்பி வந்திட்டன். உங்கட அம்மாவும் பிரான்சுக்கு வந்திட்டு பிடிக்காமல் திரும்பி வந்ததா சொன்னவா”.
“ஓம்…….. அம்மாக்கும் வெளிநாடு பிடிக்கேல்லை. எனக்கும்தான் பிடிக்கேல்லை. ஆனால் என்ன செய்ய”? என்கிற ஆதங்கத்தோடு, நான் வந்த விடயத்தை சொன்னேன்.
“என்னது……… பால் ரொட்டி சுடவா?” என ஆச்சரியமாக கேட்டாள். “ஏன் உனக்கு சுடத் தெரியாதோ … » ?
“இல்லையில்லை இப்பவெல்லாம் ஒருத்தரும் செய்யிறேல்லை. என்னையும் கூப்பிடுறேல்லை.  இரும்பு சட்டியும் கறள் பிடிச்சுப்போச்சு.. “
“நான் கேட்டால் வருவாய் தானே … “
“உங்களுக்கு இல்லாமலே……..”என்றவளிடம்,
“அதென்ன நீங்கள் நாங்கள் எண்டு திடீர் மரியாதை? நீ .. நான் எண்டே சொல்லு.” 

என்றபடி வரும்போதே கடையில் தயாராய் வாங்கி வந்த வெற்றிலை பாக்கை பையிலிருந்து எடுத்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாள்களையும் நடுவில் வைத்து நீட்டினேன். லேசாக சிரித்தவள், “சில்லறை இல்லையா?” “ஓம் இருக்கே……” என்றபடி கால்சட்டை பையில் கையை விட்டு துளாவியதில் ஒரு ரூபாய் நாணயம் அகப்பட எடுத்து  இந்தா என்றதும், “சரி வெளியே வா……..” என்றவள், முற்றத்தில் போய் நின்று, “ஒரு ரூபாயை மட்டும் வெத்திலையில் வைச்சு குடு………”.
அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல் பின்னாலேயே போய் ஒரு ரூபாயை மட்டும் வெற்றிலையில் வைத்து பக்குவமாக நீட்டினதும், அதை வாங்கியவள் வானத்தை அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்த செம்வரத்தை மரத்திலிருந்து ஒரு பூவையும் பிடுங்கி சேர்த்துக் கொண்டுபோய் இரும்பு சட்டியும் கரண்டியும் இருந்த இடத்தில் வைத்து வணங்கி விட்டு, “சரி எப்ப வரவேணும்…… ? அவள் சரி சொன்ன மகிழ்ச்சியில் “இண்டைக்கே……” என்றேன். 

“சரி போ………. நான் இதெல்லாம் எடுத்து கழுவிக்கொண்டு வாறன்.”
அன்று மாலை வீட்டுக்கு வெளியே அடுப்பு வைத்து கல்யாணி பால்ரொட்டி சுடுவதை உறவுகள் எல்லாருமே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள். எல்லாருக்கும் அதை உடனே சாப்பிட்டு விட வாயூறினாலும் குடி புகுதலன்று சாமிக்கு படைக்காமல் சாப்பிடக்கூடாது என்று அம்மா கறாராகச்  சொல்லி விட்டார். அனைத்தையும் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த  என் மகளிடம்  அதிலொன்றை களவாக கையில் கொடுத்த கல்யாணி, “எங்காவது ஓடிப்போய் ஒழிச்சு நின்று சாப்பிடு.” என்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் என்னை பார்த்தவளுக்கு லேசாய் தலையசைத்து சம்மதம் சொன்னதும் மாயமாய் மறைந்து விட்டாள். நிகழ்வுகள் எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்து நீண்ட காலத்துக்கு பின்னர் உறவுகள் அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சிவேறு. விடுமுறை முடிந்து பிரான்சுக்குத் திரும்ப நாலு நாட்களே இருந்தது. மாலை நேரம்  பழைய நண்பனொருவனைப் பார்த்துவிட்டு வரலாமென சைக்கிளில்  கிளம்பி பிரதான வீதியால் சந்தியை கடக்கும்போது, மூன்று பைக்குகளில் ஆறு இளைஞர்கள் கதைத்தபடி நின்றிருக்க, அவர்களை தாண்டும்போது ஒருவன் கையை காட்டி மறிக்க, திடீரென இன்னொருவன் பைக்கில் செருகியிருந்த வாளொன்றை உருவி சைக்கிள் கைப்பிடி பகுதியில் ஓங்கி வெட்டி விட்டு, “நீ யார் ? ஊருக்கு புதிசா இருக்கு.” என்றான். சட்டென்று நான் கையை எடுத்து விட்டதால் தப்பித்தேன். கொஞ்சம் பிசகியிருந்தாலும் என் கையில் வெட்டு விழுந்திருக்கும். அதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்காததால் சைக்கிளை கீழே போட்டுவிட்டு, “நான் இந்த ஊர் தான். வெளி நாட்டிலை இருந்து வந்தனான்.” எண்டு தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தபோது. வாளால் வெட்டினவன், “உன்ர பேரென்ன”? என்று விசாரணையை தொடங்கும்போதே எதிரே வந்துகொண்டிருந்த கல்யாணி, “டேய்……… அவரை விடுங்கோடா. பரதேசியள். உங்களுக்கு இதே வேலையா போச்சு……..”  என்று கத்தியபடியே வர  சனமும் கூடத்தொடங்க அவர்கள் பைக்குகளில் ஏறி சத்தம் போட்டபடியே போய் விட்டார்கள். 


என்னை பழைய நிலைக்கு கொண்டுவந்து கீழே கிடந்த சைக்கிளை எடுத்தபோது அருகில் வந்துவிட்ட கல்யாணி,
“உனக்கு ஒன்டுமில்லைத்தானே”? கோபம் அவமானம் இரண்டையும் அடக்கியதால் வார்த்தைகள் வராமல் இல்லையெண்டு தலையை மட்டும் ஆட்டினேன்.
“வெளிநாட்டு காசு……. ஆளுக்கொரு பைக்கும் போனும். வேலை வெட்டியில்லை. மண்டையிலை கோலம் போட்டு கலரும் அடிச்சுக்கொண்டு ரவுடித்தனம் செய்யிறதுதான் வேலை. நாசமா போவார். என்ர மகன் வந்து நிகேக்கையும் அவனோட பிரச்சனைப்பட்டு காசு பறிச்சுப்போட்டங்கள். உவங்களுக்கு நல்ல சாவே வராது.” என்று திட்டித்தீர்த்தவள்,
“சரி நீ இந்த நேரம் எங்கை போறாய் … »? எனக்கு இன்னமும் பேச்சு வரமறுத்தது. தொண்டையை செருமி சரி செய்துகொண்டு, “ஒரு சிநேகிதனை பார்க்க போனன்”. சரி….. பார்த்துப்போ.” என்று விட்டு போய் விட்டாள். வேடிக்கை பார்த்தவர்களும் கலைந்துபோக அப்படியே வீடு திரும்பிவிட்டேன். இரண்டு நாளாக அந்த நிகழ்வே மனதில் கிடந்தது உழன்றுகொண்டிருந்தது. “என்ன ஒரு மாதிரியிருக்கிறாய்” ? என்று வீட்டில்கூட கேட்டு விட்டார்கள். இரண்டு நாள் கழித்து மனது கொஞ்சம் லேசாகிவிட்டிருந்தது. நாளை ஊரை விட்டுவெளிக்கிட வேண்டும். நேற்றிரவு அடித்த மழை இன்னமும் லேசாக தூறியபடிஇருந்தது. கல்யாணி பலகாரம் சுட்டதுக்கு பணம் வாங்க மறுத்து விட்டதால் அவளுக்காக ஒரு பச்சை நிற சேலை வாங்கி வைத்திருந்தேன். வாள்வெட்டு மன உளைச்சலில் அது  மறந்து விட்டது. கொண்டுபோய் கொடுத்து விடை பெற்று வரலாமென நினைத்து அவசரமாக வெளிக்கிட்டு பிரதான வீதியிலிருந்து புளியடி ஒழுங்கையை கடக்கும்போது ஒரே சனக்கூட்டமாக இருந்தது. போலிஸ் வாகனமும் நின்றிருக்க, யாரோ ஒருவனின்உடலை.காலில்கயிறுபோட்டு கட்டியிழுத்துக்கொண்டிருந்தார்கள். 

எட்டிப்பார்த்தேன். மூன்று நாளுக்கு முன்னர் என்னை மறித்து வாளால் வெட்டிய அதே இளைஞன். சட்டென்று எனக்கு தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல ஒரு உணர்வு. என்னையே எல்லோரும் பார்ப்பது போலவும் இருந்தது. “யாரோ இழைகட்டியிருகிறாங்கள். பேச்சியம்மன் கனகாலத்துக்குப் பிறகு ஒருத்தனை பலி வாங்கியிருக்கு”. என்று கூட்டத்தில் கதைப்பது காதில் விழுந்தது. சைக்கிளை எடுத்து அங்கிருந்து வேகமாக மிதித்தேன். வீட்டு முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்யாணி,
“நேற்றிரவு சரியான மழை. செடியெல்லாம் சரிஞ்சு போய் கிடக்கு.”என்றவள், “என்னை பார்த்து என்ன பேயடிச்ச மாதிரி வந்திருக்கிறாய்  …. “? இல்லை,
“பேச்சியம்மன் அடிசிட்டுதாம். வாற வழியிலை பார்த்தன்”.
“ஒ………… சனம் இப்பவும் இதையெல்லாம் நம்புதோ……… ?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் சனத்துக்கு எப்பவுமே ஒரு நம்பிக்கை தேவையாயிருக்கு”.  இந்தா………  என்று சேலையை அவளில் கைகளில் கொடுத்தேன்.  பிரித்து பார்த்தவள்,
“அம்மாவுக்கு பிடிச்ச நிறம்,  எனக்கும் பிடிக்கும். சரி எப்ப திரும்ப போறாய் … “? “நாளைக்கு.”
“சரி இனி இங்கை வராதை. நல்லபடியா போ………….. “என்றவள் வீட்டுக்குள் போய் விட, கொட்டிலில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் கரண்டியை பார்த்தேன். அது சுத்தமாக கழுவி பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

No Comment