Navigation


RSS : Articles / Comments


சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நோயல் நடேசன்

1:12 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நடேசன். (ஆஸ்திரேலியா)

ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன.
இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள்.
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட முடிவில் கிடைத்த ஒரு நன்மை என்பது இயக்கப்போராளிகளாக இருந்தவர்கள் இலக்கியவாதிகளாக மாறியதாகும்.


இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இயக்கத்தை எதிர்த்து பேனை எடுத்த என் போன்றவர்களும் தமிழ்வெளிக்கு ரோமர் காலத்தில் கிடைத்த சவர்க்காரம் போன்றவர்களே.
அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பிரான்சில் வதியும் சாத்திரி. அவரது தொடர்பு கவிஞர் கருணாகரனால் எனக்குக் கிடைத்தது. அவரது முகநூலில் நானும் இணைந்திருப்பதால், தொடர்ந்தும் அவரை அவதானிக்கிறேன்.
2009 இல் எனக்குத் தெரிய அவர் மட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியவர். மற்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்களின் கதைகேட்டு, முருகனுக்கு அந்த மறைந்துபோன தலைவனை ஒப்பிட்டு, அவர் இன்னமும் இருப்பதாகக் கொண்டாடியவர்கள். மே 2009 பின்பு கோழி திருடியவர்களாக மவுனமாகினார்கள். நல்லவரோ கெட்டவரோ ஒருவர் இறந்தபின்பு அதற்காக அஞ்சலி செலுத்துவது மரபாகிவிட்டது. இந்த மரபை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதசமூகம் பின்பற்றி வருகிறது.

சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை பணம் கொடுத்து வாங்கி அவற்றை மெல்பனில் அறிமுகப்படுத்தினேன். அது உண்மை, புனைவு, மற்றும் சாகசங்களின் கலவையான நாவல் என்றாலும், தமிழ் சமூகத்திற்குத் தெரியவேண்டிய பல விடயங்கள் அதில் உள்ளன. எதிர்மாறான கொள்கையிருந்தாலும் நேர்மையுள்ளவர்களை நாம் நேசிக்கவேண்டும். அது அவருக்காகவல்ல, சமூகத்தில் நேர்மை, உண்மை, சத்தியம் இருந்தாலே ஆரோக்கியமானது.

சாத்திரியின் “அவலங்கள்” தொகுப்பின் உள்ளடக்கம் வேறுவிதமானது. இதிலிருப்பவற்றை என்னால் சிறுகதைகளாகப்பார்க்க முடியவில்லை.
சாத்திரியின் எண்ண அலைகள், மன நெருடல்கள், வயிற்றில் தொடர்ந்து சுரந்த அமிலங்களாக திரண்டு வெளியாகியுள்ளது. சாத்திரி நேர்மையாக தமது எண்ணங்களை எங்களுக்குத் தெரிவிக்கிறார்.
அரிஸ்டோட்டல் சொல்லியதுபோல் கதை சொல்பவர் தனது சத்தியத்தை நிலைநிறுத்தும்போது அவர் சொல்வதை நாம் கேட்கிறோம். இந்தத்தொகுப்பில் பெரும்பாலானவை எமது மனதில் நேர்மையான அனுதாபத்தை, முக்கியமாகப் பெண்கள் பாத்திரங்களின் மூலம் உருவாக்குகிறது.

பெரும்பாலானவை காத்தாசிஸ் (Catharsis) ஆக மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லி அமைதியாக்குவது. கூர்வாளின் நிழலில் தமிழினி செய்ததும் இதுவே.
இந்தத்தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் எமது சமூகத்தில் நாம் அடைகாத்துக்கொண்டு உறங்கிய அழுகிய முட்டைகள். ஈழத்தமிழ்ச்சமூகத்தில் சாதி, பெண்போராளிகள் மற்றும் போலித்தனமான சுயநலமிக்க அரசியல் என்பன இந்தக் கதைகளின் மையங்கள். வாசித்தால், உணர்வு உள்ளவர்களுக்குப் படுக்கையில் முள்ளாக குத்தக்கூடியவை. கவிஞர் கருணாகரன் முன்னுரையில் எழுதியதுபோல் பெரும்பாலான கதைகள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் மிதப்பன
இந்திய அமைதிப்படையால் சிதைக்கப்பட்ட ராணியக்காவின் கதை நமக்கெல்லாம் தெரிந்தது. மூன்று வருடங்களில் இந்திய இராணுவத்தின் நடத்தையை ஒப்பிட்டு, இலங்கை இராணுவத்தைச் சிறந்தவர்கள் என தமிழ் மக்களை ஏற்கவைத்ததுடன், விடுதலைப்புலிகளின் இந்திய எதிர்ப்பு பிரசாரத்திற்கும் அந்த ஒப்பீடு துணைபோனது.

மல்லிகாவின் கதை, யாழ்ப்பாண வெள்ளாள மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எப்படி சாதியமைப்பை பாதுகாத்தார்கள் என்பதையும், சிங்கள இராணுவம் மற்றும் அரசாங்க ஒடுக்குமுறைக்கு மத்தியில் போராடிய காலத்தில்கூட தங்களருகே இருந்த மற்றைய தமிழர்களை எப்படி அன்னியமாக நடத்தினார்கள் என்பதைக் கண்ணாடியாக காட்டுகிறது.
கோயிலுக்குள் போவதற்கு ஆயுதம் மூலம் வழி ஏற்படுத்தியது உண்மையென்றாலும், சாதியமைப்பு, ஆயுதத்திலும் வலிமையானது என்பதை போரற்ற தற்காலத்தில் உணரமுடிகிறது.

சிமிக்கி கதை, கணவன் மனைவியின் அந்தரங்கத்தை காட்டுவதுடன், சிறுகதைக்குரிய அம்சத்துடன் மனதை நெகிழவைக்கிறது. ஆனால், கடைசிவரிகள் இடறுகின்றன.
மலரக்கா கதை பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் நிகழ்வது. இப்படியான கதைகள் பல ஆங்கிலத்தில் உண்டு. சிறு வயதிலிருந்து வயது முதிர்வதை பாலியல் உணர்விலிருந்து மட்டுமல்லாது நேர்மையாக அநீதியை எதிர்த்து நிற்கும் உணர்வின் ஊடாகவும் காட்டுவது
அலைமகள் கதை இயக்கப் பெண்போராளியின் கதை. வங்காளப் பிரிவினையில் பாகிஸ்தானியப் படைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மணக்கும்படி அக்காலத்தலைவர் முஜுபிர் ரஹ்மான் இளைஞர்களை வேண்டுகிறார். இலங்கையில் போராளிப் பெண்களையோ அல்லது இளம் விதவைப்பெண்களையோ மறுமணம் செய்வதற்கு உற்சாகப்படுத்தவோ உதவி செய்தற்கோ எந்த அரசியல் தலைவர்களோ அல்லது நிறுவனங்களோ இல்லாத நிலையில் அலைமகளின் இறுதிமுடிவு மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கிறதுகடைசிஅடி என்னும் கதை,

: 2009 மே மாதத்தில் போர் முடிவடையும் காலத்தில் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் முகவர்கள் பணத்தை மக்களிடம் கறந்த கதை. அதிகமாக பலர் ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்திலும் வங்கியில் கடன் எடுத்து ஆயுதம் வாங்க விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததாக அறிந்தேன் .
கைரியின் கதை. மனநலம் குன்றிய பெண்ணைத் துரோகியாகக் கொன்ற கதை. துரோகியாக மட்டுமல்ல அத்தகையோரை, தற்கொலைப்போராளிகளாகவும் பயன்படுத்திய பெருமைக்குரியது நமது வரலாறு.

நான் படித்து வாய்விட்டுச் சிரித்த கதை அகதிக்கொடி. ஆரம்பத்தில் நகைச்சுவையாகத் தொடங்கி இறுதியில் சோகத்தில் முடிகிறது.
பீனாகொலடா (Pina colada) அண்ணாசிப்பழமும் ரம்மும் சேர்த்து தயாராகும் கரிபியன் கொக்ரெயில். இதன் பெயரில் எழுதப்படுவது தமிழ்நாட்டுக்கதை. ஆரம்பத்தில் நன்றாக வந்து, இறுதியில் தொய்ந்துவிட்டாலும் இந்தக்கதையில் மிகப்பெரிய நீதி உள்ளது. ஒருவரால் வஞ்சிக்கப்பட்டு பாழ்கிணற்றில் தள்ளப்பட்டதாக நினைத்து அழும் பெண் பிற்காலத்தில், அவளே பலரை பாழ்கிணற்றுக்குள் தள்ளுவதைத் தொழிலாக நடத்துகிறாள்.
அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் எவன் அதிகம் பகிடிவதைக்கு உள்ளாகின்றானோ, அவனே பின்னர் பகிடிவதையின் மன்னனாக மாறுவான். வதைக்கப்பட்ட மருமகள், கொடுமைக்கார மாமியாராவது போன்ற முரண்நகை

முகவரி தொலைத்தமுகங்கள்: ஆயுதம் கடத்தும் இயக்கக் கப்பலில் இறந்த இளைஞனை ஒரு தீவில் புதைப்பது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேவேளையில் விடுதலைப்புலிகளின் பல கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இலங்கைக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் மாலுமிகளாக இருந்து மூழ்கியவர்களது உறவினர், பெற்றோரை இந்தக்கதை எனக்கு நினைத்துப் பார்க்கத்தூண்டியது.
இப்படி பல நிகழ்வுகளை என் போன்றவர்களுக்கு நினைக்க வைத்ததே இந்தக்கதைகளில் சாத்திரியின் வெற்றி
புரட்சி: இயக்கங்களில் காட்டிக்கொடுப்புகள் பற்றி இயக்கங்களை நன்கு அறிந்தவர்களுக்குத்தெரியும்.
அஞ்சலி என்ற கதை, போதைவஸ்துக்குள் செல்லும் இளம் தமிழ் பெண்ணின் கதை.

இந்தக்கதைகளைச் சிறுகதையாக்காமல் கிறியேட்டிவ் நொன்ஃபிக்சன் Creative non fiction)என்ற நிலையில் எழுதப்பட்டிருந்தால் இவற்றுக்குரிய மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். தமிழில் சிறுகதை அல்லது நாவல் என்ற வட்டத்திற்கு வெளியே தமிழ்நாட்டவர்கள் வருவதில்லை. அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு இலங்கையர்களும் உண்மைக்கதைகளை சிறுகதை – நாவல் என எழுதவரும்போது, உண்மைச்சம்பவங்கள், கோயில் காளையை நலமடித்து வண்டியில் கட்டுவது போன்றதாகிவிடுகிறது.
சாத்திரியின் அவலங்கள் நாங்கள் விளையாடிய துன்பகரமான விளையாட்டின் சில கண்ணீர்த்துளிகள். இதேவழியில் போகாது இருப்பதற்காக நாம் இவற்றை வாசிக்கவேண்டும்.
—0–

No Comment