Navigation


RSS : Articles / Comments


முருகதாசனின் மரணத்தின் மர்மமும் ஒரு ஒப்புதல் வாக்கு மூலம்.

4:49 PM, Posted by sathiri, No Comment

  அண்மையில் நான்  எது வரை  என்கிற இணைய  சஞ்சிகைக்கா  எழுதிய  தியாகிகளும் துரோகிகளும்  என்கிற  கட்டுரையில். ஜெனிவாவில்  தீக்குளித்து  இறந்து போன  முருகதாசன் மரணத்தில்  சில சந்தேகங்களை  எழுப்பியிருந்தோன். அதற்கு புலிகள் அமைப்பில்  சமாதான காலத்தில் தொடங்கப் பட்ட வன்னி ரெக் என்கிற அமைப்பில் இணைந்து பின்னர் இறுதி யுத்தத்தின் போது  வெளிநாட்டு  தொலைத் தொடர்பாளராக  பணிபுரிந்து  முள்ளி வாய்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் ஸ்கன்டிநேவியன்  நாடு ஒன்றில்  தஞசமடைந்திருந்து  அபிராம் என்கிற புனை பெயரில் எழுதுபவரால் முருகதாசன்  தற்கொலைக்கு தூண்டப் பட்டு     இறந்து  பேனான்  என்று எழுதப் பட்ட எதிவினை  இங்கு  கீழே.
2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி தொலைத்தொடர்பு மையத்துக்கு, லண்டனில் இருந்த புலனாய்வு முகவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குரியவர் ஞானவேல் அண்ணைக்குரிய முகவராவர். அவர் ஞானவேல் அண்ணைக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லுவதற்காக அந்த அழைப்பை எடுத்திருந்தார். 
அந்த செய்தியை என்னிடம் சொல்லும்படி, நான் ஞானவேல் அண்ணையிடம் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, அவர் லண்டனில் ஒரு பெடியன், புலம்பெயர் தேசங்களில் ஒரு எழுச்சி வேண்டும், தனியே எங்களுக்காக தமிழக தமிழர்கள் தான் தீக்குளிப்பார்களா, நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதாக ஒரு பெடியனை அறிமுகபடுத்தினார். அவன் தான் முருகதாஸ்.
நான் அவனுடன் பேசிய போது, ஏதாவது ஒரு எழுச்சி வேணும் அண்ணே. நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். புலம்பெயர் தேசங்களில் ஒரு மக்கள் எழுச்சி வந்தால் மட்டுமே உங்க நடக்கிற சண்டையை நிப்பாட்ட முடியும் என்று தெளிவாக உறுதியாக பேசினான். ஒரு ஈழத்தமிழன் புலம்பெயர் தேசத்தில் தன்னை ஆகுதியாக்கும் தெளிவுடன் பேசியது என்னை கொஞ்சம் அதிர வைத்தது. அலைபேசியில் ஞானவேல் அண்ணையை தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவுபடுத்தினேன். 
சில மணி நேரங்களில், தமிழ்குமரனுடன் ஞானவேல் அண்ணை, எங்களின் முகாமுக்கு வந்திருந்தார். முருகதாசுடன் தெளிவாக பேசினார். எழுச்சிக்காக மக்கள் விடிவுக்காக இவ்வாறான தியாகங்கள், புலம்பெயர்நாடுகளில் பெரிதாக எடுபடாது என்று சொன்னார். முருகதாஸ் அவனது முடிவில் உறுதியாக இருந்தான். அவன் ஞானவேல் அண்ணாவிடம் இரண்டு கோரிக்கைகள் வைப்பதற்காகவே தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறினான்.
முதலாவது கோரிக்கை தனது சாவின் மூலம் ஏற்படும் அந்த எழுச்சியை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்க கூடிய கட்டமைப்பு, ஒழுங்கமைப்புகளை செய்யும்படி கோரி இருந்தான்.
இரண்டாவது தனது சாவுக்கு முன்னர் ஒரு தடவையாவது தலைவர் அல்லது பொட்டு அம்மானுடனாவது பேசவேண்டும் என்று கோரி இருந்தான். 
இந்த கோரிக்கைகள் குறித்து அம்மானிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு கால அவகாசத்தை கோரி இருந்தார் ஞானவேல். பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு பிறகு அம்மான் ஒழுங்குகளுக்கான ஒப்புதல் அளித்திருந்தார். இருந்தாலும் நிச்சயமாக வெளிநாட்டு ஊடகங்களும் அரசாங்கங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யும் என்று குறிப்பிட்டார்.
மிகவும் இரகசியமான இந்த ஒப்புதல் ஞானவேல் அண்ணை தலைமையிலான ஒரு குழுவுக்கு வழங்கபட்டிருந்தது. அதில் ஞானவேல் அண்ணா, தமிழ்குமரன், சிறி அண்ணா, நான் இடம்பெற்று இருந்தோம். 
திரும்பவும் மாசி மாதாம் இரண்டாம் திகதி முருகதாசுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட நாம், தீக்குளிப்பு பின்னரான எழுச்சிக்கான பொறுப்பை கையாளுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக முருகதாசிடம் குறிப்பிட்டோம். இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களை விளக்கி இருந்தோம். எங்களுக்கு தீக்குளிப்புகான திகதியை கோரி இருந்தோம். 
தனக்கு லண்டனில் சில கடமைகள் செய்துமுடிக்க வேண்டிய தேவை இருப்பதால் மாசி 12 ஆம் திகதியை தெரிந்தெடுத்திருப்பதாக குறிப்பிட்டான். ஒரு கரும்புலிக்கு நிகரான சாதனையை செய்ய போகும் அவன் மனசில் இருந்த வீரமும் தெளிவும் இன்னமும் எங்களை போராட்டத்தை விட்டு விலகி செல்லவிடுகுது இல்லை. 
வான்புலிகள் கொழும்பிலே ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்பதை தெரிந்து கொண்ட நாங்கள், அதற்கு முதல் இந்த நிகவு இடம்பெற வேண்டும் என்று மட்டும் தான் மனசிலே நினைத்து இருந்தோம். அது போலவே முருகதாசும் மாசி 12 இனை தெரிந்தெடுத்திருந்தான்.
மாசி 10, காலை எங்களுக்கு அனுப்பிய ஈமெயில் இல், அவன் தீக்குளிப்புக்கு பின்னர் வெளியிட வேண்டிய கடிதத்தின் நகலை தட்டச்சு செய்து அனுப்பி இருந்தான். எங்களுக்கு அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதா என்று கேட்டு அனுப்பி இருந்தான். மக்களை எழுச்சி கொள்ள செய்ய அதில் ஏதும் வசனங்களை சேர்க்க வேண்டுமாயின் சேர்க்க சொல்லி குறிப்பிட்டு இருந்தான். நாங்கள் சில வசனங்களை அவனின் தியாகம் மூலமாவது மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்று சேர்த்திருந்தோம். அவற்றை அச்சுபிரதி எடுத்து அவற்றை தன்னுடனேயே வைத்திருந்தான்.
தனது கடமைகளை முடித்து கொண்ட முருகதாஸ் சுவிசுக்கு பயணமாகி தனது நண்பர்களுடன் தங்கி இருந்தான். அவர்களுக்கு கூட தான் சுவிஸ் வந்ததன் நோக்கம், தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
இவ்வளவும் ஏன் தன்னை பெற்ற தாய் தந்தையருக்கு கூட அவன் தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
மாசி 12 
எங்களது செய்மதி பரிவர்த்தனையும் சரியாக வேலை செய்யவில்லை, அண்மையில் நடந்த கிபிர் தாக்குதல், மறைப்புகள், receiver இருந்த பிரச்சனைகள் காலையில் இருந்தே எங்களுக்கு கரைச்சல் கொடுத்துகொண்டிருந்தது. எங்களுக்கோ பதபதைப்பு இன்றைக்கு நினைச்சபடி முருகதாஸ் சாதிப்பான என்ற பததைப்பு மட்டுமல்ல. ஒரு கரும்புலிக்கு நிகரான வீரனின் தியாகம் வீண்போக கூடாது என்று பதபதைப்பு. 
மாலை ஆறுமணிக்கு பின்னர் தான் எங்களின் தொழிநுட்பவல்லுநர்களின் கடுமையான முயற்சிக்கு பின்னர் தொலைத்தொடர்பு கருவிகள் இயங்க ஆரம்பித்தன. பிபிசி முக்கிய அறிவிப்பாளருடன் தொடர்பு கொண்ட சிறி அண்ணா உங்களுக்காக ஒரு முக்கிய செய்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைக்கும் தயவு செய்து இருட்டடிப்பு செய்யாமல் ஒலிபரப்பு செய்யுங்கள் என்று கேட்டுகொண்டார். எங்களுடன் தொடர்பை ஏற்படுத்த நிறையதடவை முயன்றும் தொடர்பு கிடைக்காமல் கூட தனது கடமையில் தவறாத அந்த வீரன் மாலை 8 மணிக்கு  எங்களை தொடர்பு கொண்ட போது கொஞ்சம் படபடப்புடன் பேசினான்.
அண்ணே நான் நினைத்த மாதிரி மாலை 4:30 இற்கு ஐ நா வாசலை அடைய முடியாது. புகையிரதம் தாமதமாக உள்ளது. இனி டாக்ஸி பிடித்து போனால் கூட அது வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும். கொஞ்சம் தாமதமானாலும் நான் அந்த இடத்துக்கு சென்று எப்படியும் தீக்குளிப்பேன் என்று குறிப்பிட்டான். அவனுக்குள் இருந்த அந்த உறுதி தளரா வீரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஐநா பணியாளர்கள் வேலை முடித்து திரும்பும் வேளையில் தீக்குளிப்பதன் மூலம் தான் ஒரு செய்தியை கூற முடியும் என்று நம்பிய நாங்கள். அவனை அந்த திட்டத்தை கைவிட்டு நாளைய தினத்துக்கு மாற்றும் கேட்டு கொண்டோம். 
அதற்கு அவன் இல்லை அண்ணே, நாளை மறுதினம் காதலர் தினம், நான் நாளைக்கு தீக்குளித்தால் காதல் தோல்வியால் தீக்குளித்த மாதிரி ஆகிவிடும் என்ன ஆனாலும் இன்றே செய்கிறேன் என்று உறுதியோடு கூறினான். அவன் ஐநா இடத்தை அடையும்போது ஐந்துமணியை தாண்டி இருந்தது. இறுதியாக சில வசனங்கள் பேசினான். நாங்கள் அவனுக்கு பொட்டம்மான் சொன்ன செய்தியை சொன்னோம். 
என்னுடைய இந்த சாவு இங்கே ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கும். அது தலைவரை, உங்களை, எங்கள் மக்களை காப்பாத்தும் என்ற நம்பிக்கையில் தான் நான் எரிகிறேன். இங்கே நிறைய கூட்டம் இல்லை. பஸ் ஸ்டாண்டில் ஒன்று இரண்டு பேர் நிக்கிறார்கள். நான் கடிதத்தை என்னுடன் வைத்திருந்தால் எரிந்துவிடும். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் பறக்காமல் கல்லு வைத்து வைத்துவிடுகிறேன். உங்கட ஆட்களை விட்டு எடுக்க சொல்லுங்க அண்ணே. எனக்கு தெரியும் இங்கே சில நேரம் உங்கட ஆட்கள் நிப்பினம். அவையிடம் சொல்லுங்கோ நான் என்ன கத்தினாலும் என்னை காப்பாத்த வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொன்னான்.
இவை தான் அவனின் கடைசி வரிகள்.
பார்த்த எங்களின்  முகவர்கள் சொன்னார்கள், அவன் குளிர் தாங்கும் ஜாக்கெட்டுடன் தான் எரிந்தான். அவை உருகி அவன் உடலில் படும்போதும் Stop the War in Sri Lanka என்று கத்தி கொண்டதுதான் இருந்தான். தன்னுடலில் எரிகிறதே என்று விழுந்து படுத்து உருள கூட இல்லை. கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தானோ ஐ நா வாசலை நோக்கி ஓடினான். வாசலை அடையும் முன்னே நிலத்தில் வீழ்ந்துவிட்டான். அவனின் கரிய புகை மட்டும் வானை நோக்கி எழும்பி கொண்டிருந்தது. அது மக்களுக்கு விடிவைதேடி தரும் என்ற நம்பிக்கையில் அந்த தியாக வீரன் உயிரை விட்டிருந்தான்.
சுவிஸ் காவல்துறை இதை ஒரு சாதாரண தற்கொலையாக பதிவிட்டு எங்கோ ஒரு மூலையில் செய்தி போட்டது. BBC அன்றைய நாளில் சொல்லாமல் அடுத்த நாளில் அவனது கோரிக்கைகள் கூட சொல்லாமல் ஒரு சாதாரண செய்தியாக வெளியிட்டது.
இன்று அந்த குழுவில் ஞானவேல் அண்ணே வீரச்சாவு , தமிழ்குமரன் இல்லை, சிறி அண்ணா இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வீரச்சாவு.
தன் சாவில் கூட உறுதியோடு இருந்த ஒரு தியாகியின் சாவை கொச்சைபடுத்தும் ஒரு கட்டுரையை பிரசுரித்த பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.முருகதாசின் பெற்றோருக்கு கூட தெரியாத இந்த இரகசியம் என்னுடன் அழிய கூடாது. அழிந்தால் இந்த சாத்திரி மாதிரி ஆயிரம் சாத்திரிகள் தங்களின் எண்ணத்துக்கு கட்டுரைகளை எழுதி சாவு வியாபாரம் நடத்தும். அதை பிரசுரிக்க என்று இணையத்தளங்கள் அலையும். புலிகள் தான் அழிந்தார்கள். அதற்காக உண்மையை சொல்ல ஒருவரும் இல்லை என்று நீங்களே கதைகள் எழுதாதீர்கள். இது அதைவிட ஈனத்தனமான செயல்.
இந்த இரகசியத்தை எழுதியமைக்காக புலனாய்வுத்துறை என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்க தயார். ஆனால் அந்த தியாகவீரனின் தியாகத்தை நீங்கள் எழுச்சியாக மாற்ற முடியாவிட்டாலும், தயவுசெய்து கொச்சைபடுத்தாது விடுங்கள்.
நன்றி வணக்கம்

No Comment