Navigation


RSS : Articles / Comments


தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.

1:20 PM, Posted by sathiri, No Comment

தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.
சாத்திரி  ஒரு பேப்பர்.

 இந்த வருசம்  நத்தாரோடை பத்து நாளைக்கு  கடையை பூட்டுவம் எண்டு முதலாளி சொல்லிட்டான்.நீண்ட நாளின் பின்னர்  பத்துநாள் லீவு மகிழ்ச்சிதான் நத்தார் முடிந்ததுதம் லண்டனுக்கும் ஒருக்கா போய்   சில உறவுக்காரர் பழைய சினேதங்கள். எல்லாத்தையும் பாத்திட்டு வரலாமெண்டு நெற்றிலை மலிவாய் றிக்கற்றை பாக்கத் தொடங்கினன். வழக்கம் போலை தோடம் பழக் கொம்பனி அதுதானுங்கோ Easy jet   அதிலை றிக்கற்றும் பதிஞ்சிட்டன். ஆனால் போகிற நேரக் குளப்பத்தாலை பதிவு போடுறதும் நிறுத்திறதும் திருப்ப பதியிறதுமாய் ஒரு நலைஞ்சு தரம் செய்து  ஒரு மாதிரி பதிஞ்சு முடிச்சிட்டன்.


நத்தாருக்கு மனிசி எனக்கு ஒரு ஜுன்ஸ் பரிசா வாங்கி வைச்சிருந்தாள். வாங்கியந்தவுடைனையே போட்டு அளவு பாக்கச் சொல்லி அளவு சரிவராட்டி மாத்தலாமெண்டாள். போட்டுப் பாத்தன் வருசக் கடைசி கொஞ்சநாளாய் தொடந்து ஒரே தும்படி எண்டிதாலை கொஞ்சம் மெலிஞ்சு போயிருந்தன். ஜுன்ஸ்  ஒரு ஒண்டரை அங்குலம் அளவு  பெரியதாயிருந்தது. மாத்திக் கொண்டு வரவா  என மனிசிகேட்டாள். வேண்டாம் கோடை(சமர் )தொடங்கி  இரண்டு பியரடிக்க வண்டி கொஞ்சம் வைக்கும்  அப்ப அளவாயிருக்கும்  இப்போதைக்கு ஒரு பெல்ட்டை  கட்டினால் சரியாயிடும். திரும்ப கடைக்கு அலைய வேண்டாம் எண்டு சொல்லிட்டன்.


லண்டனுக்கு போகேக்குள்ளை தான் ஆசையாய் வாங்கின ஜுன்சை போட்டுக் கொண்டு போகச்சொல்லி மனிசி சொன்னதாலை அதையே போட்டுக்கொண்டு  ஏயா பேட்டுக்கு வந்து தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை  போடிங் எடுக்கிறதுக்காக  வரிசையிலை நிண்டன். இரண்டு கவுண்டரிலை ஒண்டிலை ஒரு ஆணும்  மற்றதிலை பெண்ணும்  போடிங்குடுத்துக் கொண்டு இருந்தார்கள்.பெண்ணை பார்த்தன்  கறுப்பிற்கும் வெள்ளைக்கும் பிறந்த பழுப்பு  அழகாக இருந்தாள்.வரிசை நகர்ந்து கொண்டிருந்தது  கடவுளே என்ரை முறை  அவளிட்டை  வரவேணும்  எண்டு மனதிற்குள் வேண்டுதல். ஆனால்  என் முறை  ஆணிடம் வந்து விட்டது. பின்னலை திரும்பிப் பார்த்தன் ஒரு பெண்  கைக் குழந்தையோடை நின்றிருந்தாள். உடனை அவரிட்டை  எனக்கொண்டும் அவசரமில்லை நீங்கள்  போகலாம் எண்டு விட்டு ஒதுங்கி கொள்ள  அவளும் நன்றி என்றிட்டு என்னை  அழைத்த ஆணிடம் போடிங்  எடுக்க போயிட்டாள்.   அப்பாடா.. இப்ப எனது முறை  என்னைப் பார்த்து  அவள்  வரச்சொல்லி கையசைத்து  புன்னகைத்தாள். அவளிடம் போய் பாஸ் போட்டை நீட்டினன். தனக்கு பின்னால் இருந்த ஒரு படத்தை காட்டி இதில் உள்ள பொருட்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா என்றாள்.
அவள் காட்டின படத்தை நிமிர்ந்து பாத்தன். அதிலை  கத்தி சுத்தியல்.ஸ்கூருட்றைவர்.துவக்கு.கைக்குண்டு.காஸ் போத்தல் ஆகியவற்றின் படங்கள் இருந்தது.

அந்த பொருள் ஒண்டுமே என்னட்டை இருக்கேல்லை  இதெல்லாம் இருந்தால் தான் பிளேனிலை ஏத்துவாங்களோ எண்டொரு  பயம் எனக்கு வந்திட்டுது. தயங்கியபடி இதிலை ஒண்டும் என்னட்டை இல்லை .அதே நேரம் நான் பிளேன் கடத்திறதுக்காக வரேல்லை  லண்டனுக்கு  சொந்த அலுவலாய் போறன் எண்டதும் . சிரித்தபடியே அடுத்த கேள்வியை கேட்டாள். உங்களிற்கு தெரியாதவர்கள் யாராவது ஏதாவது பொருட்கள் தந்தார்களா??  இதென்ன கோதாரி எண்டபடி எனக்கு தெரிஞ்சவங்களோ எனக்கு ஒண்டும் தாறேல்லை.இதுக்கை  தெரியாதவங்கள் எப்பிடி ஏதாவது தருவாங்கள் விரும்பினால் நீ ஏதாவது எனக்கு தரலாம் மகிழ்ச்சியோடை ஏற்றுக் கொள்ளுவன் எண்டன். தலையாட்டினபடி போடிங்கை மட்டையிலை  இருக்கை   இலக்கத்தை  சுற்றி ஒரு வட்டத்தை போட்டு தந்து விட்டாள். அதை வாங்கிக் கொண்டு  உள்ளை போனன். இனி பரிசோதனை  பகுதி அங்கை என்ரை கைப்பை  பொக்கற்றுக்கை இருந்த போன் திறப்பு எல்லாத்தையும் எடுத்து   ஒரு  பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டு ஸ்கான் பண்ணிற பெல்ட்டிலை  வைச்சிட்டு  உள்ளை போக வெளிக்கிட அங்கை நிண்ட காவலாளி என்ரை இடுப்பு பெல்ட்டையும்  கழட்டி என்ரை பொருள்களோடை பிளாஸ்ரிக் பெட்டிக்குள்ளை போடச் சொன்னான்.


ஜயையோ என்ரை ஜுன்சே அந்த பெல்ட்டை நம்பித்தானே நிக்கிது  ஆனால் வேறை வழியில்லை  பெல்ட்டை கழட்டி பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டிட்டு  இடக் கையாலை ஜுன்சை  பிடிச்சபடி  உள்ளை போனன். உடல் பரிசோதனைக்காக கையிலை ஒரு மெட்டல் டிடெக்ரர் ஒண்டை  கையிலை பிடிச்சபடி தயாராய் நின்றிருந்த ஒருத்தி நல்வரவாகுக கைகளை உயர்த்துங்கள் என்றாள்.இடக்கை   ஜுன்சை பிடித்தபடி  இருந்ததால் வலக்கையை  மட்டும் உயர்த்தினன். இரண்டு கைகளையும் உயர்த்தவேண்டும் என்றாள். அம்மணி இரண்டு கையையும் ஒரே நேரத்திலை உயர்த்தினால்  என்ரை மானம் பிளேன் ஏறிடும். அதாலை என்ரை ஜுன்சை நீ கொஞ்ச நேரம் விழவிடாமல்  பிடிச்சிரு நான் கைளை உயர்த்திறன் என்று மெல்லிதாய் சிரித்தபடி சொல்ல அவளும்  ஓ தாராளமாய் என்றபடி  அங்கை நிண்ட காவலாளியளிலை  கறுவல் தடியன்  ஒருவனை கூப்பிட்டு  இவனின்ரை ஜுன்சை ஒருக்கா பிடித்து உதவி செய் என்றாள். என்ரை பிளான் பிழைச்சு போச்சுதெண்டு விழங்கிட்டுது. உடைனே நான்  என்னை  நோக்கி வந்த தடியனிட்டை  வேண்டாம் எண்டு சொல்லிட்டு தம் பிடிச்சு வயித்தை தள்ளி ஜுன்சை விழவிடாமல் பாதுகாத்தபடி கைகளை உயத்தினன்.  மெட்டல் டிடெக்கராலை  பின்னுக்கு முன்னுக்கு எல்லாம் தடவிப் பாத்திட்டு உன்னட்டை  ஒரு ஆயுதமும் இல்லை நீ போகலாம் எள்றாள்.  அவள் என்னட்டை ஆயுதம் இல்லையெண்டதும் எனக்கு அழுவை அழுவையா வந்திச்சிது ஆனாலும் அடக்கினபடி போய் பெல்ட்டை எடுத்து கட்டிக்கொண்டு என்ரை பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிளேனை பிடிச்சு லண்டன் வந்து இறங்கியாச்சு.


விமான நிலையத்திலையிருந்து என்ரை சொந்தக்காரனுக்கு போனடிச்சு நான் வந்திட்டன்  எங்கை வாறது என்டு கேட்டன்  அதுக்கு அவன் பட்டினி எண்டான். எனக்கு எரிச்சலாயிட்டுது  டேய் நீ சாப்பிட்டியா  இல்லை சிவ பட்டினியா  எண்டது  எனக்கு பிரச்சனையில்லை உன்ரை இடத்தை சொல்லு  எண்டதும்  அதுக்கு அவன்  நான் இருக்கிற இடத்தின்ரை பேர்தான் பட்டினி எண்டான். ஒரு பணக்கரான்  இருக்கிற இடத்தின்ரை பேர் பட்டினி எண்டு நினைச்சபடி  றெயின் ஏறிபோய் சேந்திட்டன். முதல்நாள்  எங்கடை குடும்ப அலுவல் கதைச்சு முடிஞ்சதும். என்ரை ஒரு பேப்பர் சினேதங்களை  சந்திக்கலாமெண்டு  அவங்களையும் சந்திச்சு கதைசன். அதை விட முக்கியம்.தலைவரின்ரை நேரடி வழிகாட்லிலை இந்த வருசம் மூண்டாவது மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த எங்கடை பாலாண்ணையும் சந்திச்சு கடைசியாய் தலைவர் என்ன செய்தி சொன்னவர் எண்டிறதையும் கேக்கிற ஆவல் . ஆனால் அவர் அதை கடைசிவரை சொல்லவேயில்லை ஏமாற்றம்.  போற வழியிலை எங்கடை பேப்பர் ஆசிரியர் கோபிட்டை பட்டினி பாலத்திலை இறக்கிவிட சொன்னன் அவரும் இறக்கி விட்டிட்டு போயிட்டார்.  அடுத்தநாள் சந்திப்பு புலம் பெயர் தேசங்களிலை  தமிழரின்  அடுத்த கட்ட அரசியலை நகர்த்துபவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடமானது.  நான் அவங்களை சந்திச்சு எப்பிடி கதைக்கிறது என்ன கதைக்கிறது எண்டு றூம் போட்டு யோசிக்கவேணும் எண்டு நினைச்சபடி  நான் நிண்ட சொந்தக் காரனிட்டை இண்டைக்கு அரசியல் சந்திப்பு எண்டதும். அவன் நீ யாரையும் சத்திச்சு கதை ஆனா தயவு செய்து வீட்டை ஒருத்தரையும் கூட்டிவராதை எண்டு கையெடுத்து கும்பிட்டான்.

வேறை வழி  நான் நினைச்ச மாதிரி றூம் போட வேண்டியதுதான் எண்டு நினைச்சு அங்கையே ஒரு விடுதியிலை றூமை போட்டு அடுத்த அரசியல் சந்திப்பு நல்ல மாதிரி முடிஞ்சுது. ஆனால் வழக்கம் போலை வாறதாய் சொன்ன ஒரு குழு கடைசி நேரம் காலை வாரிட்டுது.
அவங்களோடை கதைச்சு முடிஞ்சு படுக்க போக ஒரு மணியாயிட்டுது திரும்ப  மூண்டு மணிக்கு எழும்ப வேணும். ஏனெண்டால் எனக்கு ஆறு மணிக்கு பிளைற். இரண்டு மணித்தியாலம் நித்திரை கொள்ளலாம் எண்டு நினைச்சு போனிலை அலாம் வைச்சிட்டு படுத்திட்டன். அலாரம் அடிச்சதும்  அடிச்சுப் பிடிச்சு வெளிக்கிட்டு கொண்டு ஓடிப்போய் ரக்சியிலை ஏறி Luton air port க்கு போகவேணும் எண்டன். ரக்சி ஓடியவர் தமிழர் அவர் அண்ணை வணக்கம் எண்டார். நானும் வணக்கம் சொல்லிட்டு  பாதி நித்திரையிலை  கண்ணை  மூடினன். ஆனால் ரக்சி காரர் விடுறமாதிரியில்லை.
நீங்கள் ஊரிலை எந்த இடம்.தொடங்கினார்.

நான் மானிப்பாய் நீங்கள்.??

நான் சண்டிலிப்பாய். அப்ப பக்கத்திலைதான். நீங்கள் நாட்டு பிரச்சனையை பற்றி என்ன நினைக்கிறீங்கள்.??

நித்திரை தூக்கத்திலை ஏற்கனவே எரிச்சலாயிருந்த எனக்கு மேலும் எரிச்சலோடு என்னத்தை நினைக்கிறது ஏதோ போகுது எண்டன்.

அண்ணை  முதல்லை கொழும்பை தரை மட்டமாக்கவேணும்.

ம்..நல்லது.

பிறகு மகிந்தா குடும்பத்தை அவங்கடை சகோதரங்களையும் கூண்டோடை அழிக்க வேணும்.

ம். நல்லது.

அடுத்ததா இந்தியாவை துண்டு துண்டா உடைக்க வேணும்.

ம்..நல்லது

சோனியாவையும் மன் மோகனையும்  பான்கி மூனையும் போட வேணும்.

ம்.நல்லது.

என்னை திரும்பி பாத்தவர்.உங்களுக்கு அரசியல்லை இன்றஸ்ற் இல்லை போலை ??

நீங்கள் ரக்சி ஓடுறது முழுநேர வேலையோ இல்லாட்டி பகுதிநேரமோ??

இப்ப இருக்கிற எக்கொனமி பிரச்சனைக்குள்ளை  வீடு வேறை வாங்கிட்டன். பகல்லை வேலை செய்திட்டு  இரவிலை  பாட் ரைமா ரக்சி வேறை ஓடுறன்.

உங்கடை வாழ்க்கையே இப்பிடி பொருளாதார பிரச்சனைக்குள்ளாலை ஓடுது நீங்கள்  முதல் சொன்ன எல்லாத்தையும் செய்யப் போறது யார்?? என்று கேட்க மனம் உந்தினாலும். எதுக்கு முன் பின்ன தெரியாத ஒருத்தரோடை விவாதம் எண்டு நினைச்சிட்டு கண்ணை மூடிட்டன். விமான நிலையம் வந்து  இறங்கியாச்சு தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை பாஸ்போட்டை கொண்டு போய் நீட்டினன்.

அவன் வாங்கி கணணியை தட்டிட்டு என்னையும் கணணியையும் மாறி மாறி பாத்தான்.ஏதாவது பிரச்சனையா எண்டன். அதற்கு அவன் ஜயா நீங்கள் வந்திருப்பது  Luton air port

இது எங்களிற்கு தெரியாதா?

எதற்காக இங்கே வந்தீர்கள்.??

 இவன் என்ன கேனைத் தனமா  கேக்கிறான்  ..வீட்டை போறதுக்கத்தான் ..

அதற்கு நீங்கள் Getwick air port ற்கு போக வேண்டும் அங்கிருந்துதான் உங்கள் விமானம் கிழம்புகின்றது.
அப்பதான் எனக்கு மண்டையில் யாரோ குட்டின மாதிரி உறைத்தது. முதலில் ரிக்கற்றை மாத்தி மாத்தி போட்டதிலை   Luton air port  மனதினை நிண்டிட்டுது.மாறி வந்திட்டன் என்ன வெய்யலாமெண்டு கைத் தொலை பேசியை எடுத்து  நவிகேற்றரிலை அங்கையிருந்து Getwick air port க்கு போறதுக்கு எவ்வளவு நேரம் எண்டு பாத்தன் நேரம் காணாது. Luton air port லை இருந்து என்ரை ஊருக்கு போறதுக்கு மத்தியானமளவிலை ஒரு பிளேன் இருந்திச்சிது அதிலை றிக்கற்றை மாத்திட்டு போய் ஒரு கதிரையிலை சாய்ஞ்சு படுத்திருந்தன்.  யாருடைய போன் வரக்கூடாது எண்டு பயந்துகொண்டிருந்தனோ அந்த போன்  வந்தது எடுத்து காதிலை வைச்சன்.

என்னப்பா  வந்திட்டியளோ??எங்கை நிக்கிறியள்.??

இல்லை பிளேனை  தவற விட்டிட்டன்.

உனக்கு இதே வேலையா போச்சு உருப்டியா என்னதான் செய்யாத் தெரியும். என்று  தொடங்க நான் போனை காதை விட்டு எடுத்திட்டன்  ஒரு நாலு நிமிசத்தாலை..சரி வா நேரிலை மிச்சம் இருக்கு போன் கட்டாயிட்டுது.
பிளேனை தவற விட்டிட்டன் எண்துக்கே இப்பிடியெண்டால் ஏயா போட்டையே மாறி வந்திட்டன் எண்டால் என்ன நடந்திருக்கும். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .. :(

கடைசியாய்  ஒரு கேள்வி  விமான நிலையங்களிலை எதுக்கு ரெர்மினல் TERMINAL எண்டு பேர் வைச்சிருக்கிறாங்கள் பல பேரின்ரை வாழ்க்கை  அங்கையே முடியிறதாலையா?? இந்த பேரை பாத்தாலே பிளேனுக்குள்ளை ஏற மனம் வருதில்லை பயமாகிடக்கு
நன்றி வணக்கம்.
 பிற்குறிப்பு. பல யாழ்கள உறுவுகளையும் சந்திருந்தேன். அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க   யார் யாரை சந்தித்தேன் என்று  சொல்ல மாட்டன்.

No Comment