Navigation


RSS : Articles / Comments


சம்பந்தர் துரோகியா?

2:55 PM, Posted by Siva Sri, One Comment

சம்பந்தர் துரோகியா?

நிராஜ் டேவிட்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது.

இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா?

இதுபற்றித்தான் இன்று நாம் விரிவாக ஆராய இருக்கின்றோம்.

ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி த.தே.கூட்டமைப்பிற்குக் கிடையாது என்று புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அடித்துக் கூறுகின்றார்கள். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்திய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரிவினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காண்பிக்கும் சிலர், த.தே.கூட்டமைப்பு ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து வெளிவரும் இணையத் தளங்கள், பத்திரிகைகள் சம்பந்தன் அவர்களைத் துரோகி என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பு என்றும் குற்றம் சுமத்தி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

த.தே.கூ. தாம் தனி நாடு கோரவில்லை என்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது சரியா?

இது தனிநாடு கோரி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட போராளிகள், பொதுமக்களுக்கு த.தே.கூ. இளைக்கின்ற துரோகம் இல்லையா? த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி என்று நாம் கூறுவதில் என்ன தவறு?

இன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

ஒருவன் துரோகியா இல்லையா என்கின்ற முடிவினை எடுப்பதற்கு முன்னர், அவன் வாழுகின்ற சுழ்நிலையையும், அவனைப் பற்றிய உண்மையையும் நாம் புரிந்துகொண்டு அதன் பின்னரே நாம் அந்த முடிவினை எடுக்கவேண்டும். உணர்சிவசப்பட்டு, ஒரு முடிவினை எடுத்துவிட்டு ஒவ்வொருவரையும் துரோகியாக நாம் தீர்த்து, தீர்த்துத்தான், எமது விடுதலைப்பாதையில் துரோகிகளின் முகாம்களுக்கு பலரை நாம் அனுப்புகின்ற கைகங்காரியங்களை வெற்றிகரமாகச் செய்துவிட்டிருக்கின்றோம்.

முதலாவது, இலங்கை மண்ணின், சிறிலங்கா பேரினவாதத்தின் கொடுரமாக இரும்புக்கரங்களுக்கு நடுவில் நின்று, இன்றைக்கு யாருமே தமிழீழம் தனி நாடு என்று இலகுவாகக் குறிவிட முடியாது.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கின்ற- உலகிலேயே மிகவும் கொடுரமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற சிறிலங்காவில், வெள்ளைவான் கடத்தல்கள், படுகொலைகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற அந்த மண்ணில், நீதிக்குப் புறம்மான ஆட்கடத்தல்கள், சட்டமே மேற்கொள்ளுகின்ற பயங்கரவாதங்கள் பரவலாகவே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அந்த சேத்தில்- நின்றுகொண்டு, தமிழீழம்தான் எங்கள் ஒரே முடிவு என்று ஒரு தலைவன் கூறினால், அவரனது உயிருக்கு அடுத்த கனம் என்ன நடக்கும் என்று யாருமே உத்தரவாதம் கொடுக்க முடியாது.

நாம் இங்கு புலம்பெயர்ந்த மண்ணில் நின்றுகொண்டு எதுவும் பேசலாம். வீரம் கதைக்கலாம் ஆனால் சிறிலங்கா போன்ற ஒரு இரக்கமற்ற தேசத்தில் இது முடியாது.

இல்லை, அது முடியும் என்று கூறுபவர்கள் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் அல்லது தமிழீழம் என்று எழுதப்பட்டு டீசேர்டுடன் ஒருதடவை சிறிலங்காவிற்கு சென்று பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்குக் கூட, ’வெள்ளைப் புலி’ முத்திரைகளைக் குத்துவதற்குத் தயங்காத ஒரு சர்வாதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தேசம்தான் சிறிலங்கா.

ஒரு தேர்தலில் போட்டியிட்டு 41 இட்டத்திற்கம் அதிகமான வாக்குகளைப் பெற்ற எதிர்கட்சி வேட்பாளரையே பிறடியில் அடித்து, முகத்தில் குத்தி தெருவில் இழுதஇதுச் செல்லுகின்ற அராஜகம் இடம்பெறுகின்ற ஒரு தேசம்தான் சிறிலங்கா.

அந்தத் தேசத்தின் தலைநகரில் நின்றுகொண்டு எங்களுக்குத் தனிநாடுதான் தேவை, நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று த.தே.கூட்டமைப்பால் இலகுவாகக் கூறிவிடமுடியாது.

„இல்லை அது முடியும்“ என்று கூறுபவர்கள், தயவுசெய்து அங்கு சென்று அதனைச் செய்யுங்கள். உங்களை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் பின் அணிதிரள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த இடத்தில் சில புலம்பெயர் ஊடகங்கள் முன்வைக்கின்ற மற்றொரு குற்றச்சாட்டுப்பற்றிப் பார்பது அவசியம்.

„தமிழீழம் கேட்கத் துனிவில்லாவிட்டால், பின்னர் எதற்காக த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்? – என்று சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.


இந்தக் கேள்விக்கான பதிலை நாம் பார்பதானால், முதலில் இலங்கையின் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் பற்றி ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

இலங்கையில் தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கை மிகவும் உற்றாகமாக முன்வைக்கப்ட 80களின் ஆரம்பத்தில், தமிழீழத்தை சட்டரீதியாகத் தடைசெய்யு நோக்கத்தில் ஜே.ஆர் அரசு, ஒரு முக்கிய திருத்தச் சட்டத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைத்துக்கொண்டது.

இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டம் 1983ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைமுறைக்கு வந்தது.

இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையின் ஒருமைப்பாட்டடை வலியுறுத்தும் ஒரு முக்கியமான சட்டம்.

இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்ன கூறுகின்றதென்றால், இலங்கையில் யாருமே பிரிவினை கோரமுடியாது. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக யாருமே கோரிக்கை முன்வைக்க முடியாது. அப்படிக் கோரிக்கை முன்வைத்தால், அது சட்ட விரோதமானது என்று இந்த இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது.

இதை இன்னும் தெளிவாகக் கூவதானால் இலங்கையில் யாருமே தனிநாடு கோரமுடியாது. அப்படிக் கோரினால் சட்ட ரீதியாக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களைத் தண்டிக்க முடியும்.

இந்த ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு இன்னும் ஒரு விசேஷமும் இருக்கின்றது. இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறமாட்டோம்- அதாவது தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் வழங்கித்தான் எவரும் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்லமுடியும்.

நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும்.

இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை.

’இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று கூறித்தான் 1983ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்தநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும், அவருடன் சேர்த்து - தற்பொழுது த.தே.கூட்டமைப்பு தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட 16 தமிழர் விடுதலைக் கூட்டனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைத் துறந்து, வெளியேறியிருந்தார்கள்.

அதாவது தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டனியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள்.

ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள்.

இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை உத்தியோகபு1ர்வமாக, பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள்:

மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கமாக இருந்தாலும் சரி, மாமனிதர் ரவிராஜாக இருந்தாலும் சரி மாமனிதர் சந்திரநேருவாக இருந்தாலும்சரி, வல்வைச் சிங்கம் சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் த.தே.கூட்டமைப்பை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜெயாணந்தமூர்த்தியாக இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்து 40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சூழுரைத்த கஜேந்திரனாக இருந்தாலும்சரி - இவர்கள் அனைவருமே தமிழீழத் தனியரசுக்; கோரிக்கையை கைவிட்டுத்தான் இலங்கையில் அரசியல் செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் நாடாளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களுமே, தாம் தனிநாடு கோரமாட்டோம் என்று கையொப்பம் இட்டுவிட்டுத்தான் அரசியல் செய்திருந்தார்கள்.

இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.

இலங்கையை அரசியலைப் பொறுத்தவரையில் தமிழீழம் கோரி யாரும் நாடாளுமன்றம் செல்வது கிடையாது. அப்படி தமிழீழம் கோரிக்கொண்டு நாடாளுமன்றம் செல்லவும் யாராலும் முடியாது.

தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் ஈழத் தனியரசை நிறுவுவதற்காக அல்ல.

அவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காகத்தான்.

தமிழ் மக்களின் தேவைகளை உலக அரங்கிற்கு நசுக்காகக் கொண்டு செல்வதற்காக...

சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை தேடிக்கொள்வதற்காக...

சிறிலங்காவின் கோர முகத்தை, அதன் ஜனநாயக விரோத முகத்தை, அது மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக...

-இதுபோன்ற இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவதற்காகத்தான் தமிழ் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்:

தவிர தமிழீழம் கோருவதற்கு எந்தத் தமிழ் தலைவர்களும் பாராளுமன்றம் செல்வது கிடையாது.

இன்றைய காலகட்டத்தில், த.தே.கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்காகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வழிகளை தேடுவதற்காகவுமே, சிறிலங்கா தேசத்தில் அரசியல் செய்யத் தலைப்படுகின்றார்கள்.

எனவே சிங்கள மண்ணில் நின்றுகொண்டு கட்டப்பொம்மன் பாணியில் தமிழீழம் அது இது என்று அவர்கள் வீர வசணங்கள் பேசுவேண்டும் என்று புலம்பெயர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதிர்பார்பது நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வினைச் செய்யவேண்டிய நிலையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பு, தனது வியூகங்களுக்கு ஏற்றாற் போன்று வெளிப்படையான சில பேச்சுக்களைப் பேசித்தான் ஆகவேண்டும். உலகிற்காக என்று நிலைப்பாடுகளையும் எடுத்தத்தான் ஆகவேண்டும்.

தமிழீழத்தை தாம் கோரவில்லை என்று அவர்கள் உலகிற்குக் கோருவது, உலகை நம்ப வைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஆதாயப்படுத்துவதற்கும்தான்.

பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வீறுநடைபோடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதுதான் - தற்போது தமிழ் இனம் செய்யவேண்டிய முக்கிய நகர்வு.

இதைத்தான் இராஜதந்திரம் என்று அழைப்பார்கள்.

இந்த இராஜதந்திரத்தைத்தான் த.தே.கூட்டமைப்பு தற்பொழுது செய்துகொண்டிருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க, இந்தச் சந்தர்பத்தில் மற்றொரு உண்மையையும் நான் ஞபகப்படுத்த விம்புகின்றேன்.

தமீழக் கோரிக்கையைக் கைவிட்டு அல்லது தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக எதிரியையும் உலகையும் நம்பவைத்து, தமக்குத் தேவையான கால அவகாசத்தைத் தேடிக்கொள்ளும் இராஜதந்திரத்தை தமிழீழ விடுதலைப் புலிகளும் வரலாற்றில் செய்திருக்கின்றார்கள்.

„என்ன விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டிருந்தார்களா? யாருக்கு இந்தக் கதையை கூறுகின்றீகள்? நிராஜ் ஒரு துரோகி... இந்திpய றோவிடம் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திடம் நிராஜ் பணம்பெற்றுக்கொண்டு இவ்வாறு எழுதுகின்றார்’ என்று உடனடியாகவே என்னில் கோபம் கொண்டு பலர் என்னை திட்டித் தீர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அதுதான் உண்மை.

ஓரிரு சந்தர்ப்பங்களில் மாத்திரம் அல்ல. பல சந்தர்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தனிஅரசுக்கான தமது போராட்டத்தை தாம் நிறுத்தியுள்ளதாக, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாக - மற்றவர்களையும் உலகையும் நம்பவைத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் உண்மை. இதுதான் வரலாறு.

அந்த வரலாற்றுச் சந்தர்பங்கள் சிலவற்றை அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

One Comment

Bogy.in @ 11:17 PM

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in