Navigation


RSS : Articles / Comments


சுது மாத்தையாவும் சுடுபாணும்

12:57 PM, Posted by Siva Sri, No Comment

சுது மாத்தையாவும் சுடுபாணும்.

பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்கிற விலையை விட இரண்டு மடங்கு கூடுறது வழைமையான விசயம். சிறீமாவின்ரை ஆட்சிக்காலத்திலை அவாவின்ரை பொருளாதாரக் கொள்கையாலை ஏற்பட்ட பட்டினி யாலை சனங்கள் பாணுக்கு நீண்ட வரிசையிலை காவல் நிண்டதை பலர் கதை கதையாய் சொல்லுவினம்.அது மட்டுமல்ல இந்த பாணிற்கு 83 கலவரத்தின்பின்னாலும் சாதக பாதகதான பல விசயங்கள் இருக்கவே செய்தது. எண்பதுகளிற்கு முன்னர் யாழ் குடாவில் பெரும்பாலும் ஏன் அனைத்து பேக்றிகளும் சிங்களவர்களவரே நடத்தினவை.

யாராவது ஒண்டிரண்டு பேக்கறி தமிழருக்கு சொந்தமாய் இருந்தாலும் அதில் பாண் போடுகிறவர் சிங்களவராகவே இருப்பார்.பாண் போடுகிறவரை பழைய படங்களில் வில்லனை பாஸ் எண்டு கூப்பிடுறதை போல இவரையும் (பாண்) பாஸ் எண்டுதான் சொல்லுறனாங்கள். இப்பிடி பாண் போடுகிற விசயம் சிங்களவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அல்லது பாண் எண்டால் சிங்களவனுக்கு மட்டும்தான் போடத்தெரியும் எண்டிற ஒரு நினைப்பு எங்களிட்டை இருந்தது. ஆனால் 83 ம் ஆண்டு கலவரத்தோடை இந்த நிலைமையும் தலைகீழாய் மாறிப்போச்சுது. தமிழர் கொழும்பிலை இருந்து அடிவாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்க் யாழ்ப்பாணத்திலை இருந்த சிங்களவர் பேக்கறி நடத்தினவை கனபேர் தாங்களாகவே தங்கடை ஊருகளுக்கு போகத்தொங்கிச்சினம்.

அது மட்டுமில்லை ஊர் பெடியளும் பெரும்பாலும் புளொட் இயக்கம் எல்லா பேக்கறியளையும் கொளுத்த தொடங்கிட்டினம்.பேக்கறி எரிஞ்சதுக்கு அது மட்டும் காணரமில்லை சில தமிழ் பேக்கறிக்காரரும் தங்கடை வியாபாரம் நல்லா நடக்கவேணுமெண்டு பெடியளை உருப்பேத்திவிட்டும் சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.,இதிலை ஒரு விசயத்தை கட்டாயம் சொல்லவேணும். புளொட் எண்ட மாபெரும் இயக்கம் தொடங்கினதுக்கு எனக்கு தெரிஞ்சு மூண்டு நல்ல காரியம் செய்தவை ஒண்டு கோட்டை ஆமி இருக்கேக்கை அவங்கள் அடிக்கிற செல்லிலை இருந்து சனம் பாதுகாப்பாய் பதுங்க யாழ்ப்பாணம் வைத்திய சலைக்கு முன்னாலை மண்மூட்டை அடுக்கினது.

இரண்டாவது முனிசிபாலிட்டிக்கை (நகரசபை)இருந்த தாரை எடுத்து உருக்கி ஊரிலை கிடங்கு பள்ளமாயிருந்த றோட்டை திருத்தினது.மூண்டாவது சிங்களவன் எல்லாரையும் கலைச்சுப்போட்டு பேக்கறி நடத்தினது.இதுகளோடை அவையின்ரை போராட்டத்துக்கான தேவை முடிஞ்சுபோதச்சுது.சரி இனி திரும்ப கதைக்கு வாறன். அந்த நேரம் 83 பிரச்னைக்குப்பிறகும் தொடந்து சில சிங்களவர் யாழிலை இருந்தவை . இவையள் தமிழரோடை நல்லவிதமாய் பழகியதாலையும் எண்பது வீதம் தமிழராகவே மாறிவிட்டிருந்தனர் எண்டும் சொல்லலாம்.அப்பிடி இருந்தவையிலை எனக்குதெரிந்த சிலபேர் ஒருத்தர் எங்டை ஊரிலை பேக்கறி வைச்சிருந்த சுது மாத்தையாவும் ஜஸ்பழம் வித்த லொக்கு பண்டாவும் .இவையளின்ரை உண்மையான பெயர் எனக்கு மட்டுமில்லை ஊரிலை ஒருதருக்குமே தெரியாது எல்லாருமே அப்பிடி கூப்பிடுறதாலை அதுதான் அவையின்ரை பெயர். அடுத்ததாய் ஏழாலையிலை பேக்கறி வைச்சிருந்த கொத்தளாவளை .இவரை ஏழாலை குப்பிளான் புன்னாலைக் கட்டுவன் வசாவிளான் ஆக்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .மானிப்பாய் சாத்திரிக்கும் ஏழாலை கொத்தளாவளைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதையுங்கோ அது அய்யருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.. சுது மாத்தையா நல்ல உழைப்பாளி அவரேதான் பாண் போடுவார் அவரேதான் காலையிலை சைக்கிளின் பின்னால் பாண் அடுக்கிய ஒரு பெரிய தேயிலைப் பெட்டியை கட்டி கடையள் வீடுகளுக்கும் பாண் கொண்டு போய் குடுப்பார். அவர்தான் எங்கடை வீட்டுக்கும் பாண் போடுறவர்.

மழைக்காலம் எண்டால் அனேகமான வீடுகளிலை ஈரவிறகை வைச்சு ஊதாமல் பாண்தான் காலைமைச் சாப்பாடு எங்கடை வீட்டிலையும் பாணை வாங்கி சின்னதுண்டாய் வெட்டி சிரமப்படாமல். அம்மா ஒரு பாணை பாதியாய் பிச்சு ஆளுக்கு அரைறாத்தல் பாணும் அரைச்ச சம்பலும் தருவார்.பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.சிலநேரம் அரை றாத்தல் பாண்சாப்பிட்டாலும் எங்களுக்கு பசி அடங்காமல் நாங்கள் அடிபடுறதை பாத்து அம்மா கையிலை காசை தந்து பள்ளிக்கூடம் போற வழியிலை எதையாவது வாங்கி சாப்பிடுங்கோ எண்டுசொல்லி கலைச்சு விடுவா.நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

.இறாத்தல் அழைவை போய் கிலோகிறாம் அளவை வந்தபின்னர் எல்லாப்பொருட்களையுமே நாங்கள் கிலோவிலை அழைக்கத்தொடங்கிய பின்னரும். பாணை மட்டும் இன்னமும் பேச்சுவழக்கில் இன்றுவரை இறாத்தல் எண்டுதான் சொல்லுறம். பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.

No Comment