Navigation


RSS : Articles / Comments


தர்மஅடி

9:39 AM, Posted by Siva Sri, No Comment

தர்மஅடி

இந்த வார ஒரு பேப்பரிற்காக

தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம வெளியில் சொல்ல மனம் வராது எப்பவாவது மனசுக்குள்ளை நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுவிங்கள். அதே போல நானும் ஒரு மறை தர்ம அடி வாங்கியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்வது மட்டுமல்ல அதை நான் மட்டும் மனதுக்:குள்ளேயே நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை எனவே உங்களிற்கும் தாராள மனதுடன் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறேன்.இந்த தர்மஅடி விழுகிறது என்றாலே உடனேயே சொல்லி விடலாம் யாராவது பெட்டையுடன் சேட்டை விட்டிருப்பினம் அல்லது ஏதாவது காதல் பிரச்சனையாய் இருக்கும்.

இவை இரண்டையும் தவிர்த்தால் வேறு காரணங்கள் குறைவாகத்தான் இருக்கும்.சரி விசயத்துக்கு வாறன் இதுவும் 80 களில் நடந்த கதைதான்.எங்கள் ஊரில் எங்கள் கோயில் மடத்து நண்பன் ஒருவனிற்கு அளவெட்டி கிராமத்தில் உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவனும் அந்த உறவுக்காரர்கள் வீட்டிற்கு போய்வந்து கொண்டிருந்த பொழுது அவர்களது அயல் வீட்டு பெண்ணொருவருடன் கடலையை போட்டு காதல் ஏற்பட்டு விட்டது. அந்தக்காதல் கதை கொஞ்சம் ஊருக்குள் கசியத்தொடங்கவே எனது நண்பனை அவனது உறவுக்காரர்கள் தங்கள்: வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடவே அவனும் எப்படியோ கஸ்ரப்பட்டு வேறு வழிகளில் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து கதைத்த கொண்டுதான் இருந்தான். இது இப்பிடி இருக்க அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கியது. பிறகென்ன ஊரிலை கோயில் கொடி ஏறினாலே இளசுகளிற்கு கொண்டாட்டம் தானே.

இவனும் ஏறிய பிள்ளையார் கோயில் கொடியை தன்னுடைய காதல் கொடி ஏறியதாகவே நினைத்து நம்ம நண்பனுக்கு தலைகால் தெரியாத சந்தோசம் ஏணெண்டால் இனி 25 நாழும் அவனுடைய ஆள் கோயிலுக்கு தவறாமல் வரும் இவனும் கோயிலுக்கு போகிற சாட்டிலையே கச்சானோ சோழப்பொரியோ வாங்கி தின்றபடி தன்னுடைய ஆளுடன்: கடலை போடலாம் அதுதான் அவனது சந்தோசத்துக்கு காரணம். ஆரம்பத்தில் தனியாகவே ஏதோ பக்தி முத்தினவனைப்போல காலையும் மாலையும் போய் அந்த பெண்ணின் தரிசனம் வாங்கி வந்து கொண்டிருக்கவே இவன் போய் வந்தது பெண்ணின் வீட்டு காரருக்கு தெரிந்து பெண்ணை மாலை திருவிழாவிற்கு போக விடாமல் தடுத்து விட்டனர். பகல் திருவிழாவிற்கு அதுவும் யாராவது துணையுடன்தான் அனுப்புவினம். இது நம்ம சினேகிதனுக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே. அவனும் எங்களிற்கு சோடா கச்சான் வாங்கி தருவதாக கொல்லி எங்களையும் கெஞ்சி கூத்தாடி துணைக்கு கூட்டிக்கொண்டு போவான்.

பிறகென்ன எங்களிற்கும் வீரம் பிறந்துவிடும் டேய் நாங்கள் இருக்கிறம் கவலைப்படாதை நீ பயப்பிடாமல் போய் உன்ரை ஆளோடை கதை நாங்கள் பாத்து கொள்ளுறம் என்றபடி உள்ளுக்கை உதறல் எடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் வாங்கி தந்த சோடாவை உறுஞ்சியபடி கோயில் வீதியை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அவனும் எப்படியாவது அந்தப்பெண்ணை சந்தித்து ஒரு வசனமாவது பேசி விட்டு வந்து விடுவான். ஆனால் கோயில் திருவிழாவும் முடிந்து தேர்த்திருவிழாவை நெருங்க நெருங்க அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு கூடிக்கொண்டே போனது.அதனால் ஆரம்பத்தில் நண்பனிற்கு உதவியாய் இரண்டு மூன்று பேர் மட்டுமே போய் கொண்டிருந்த நாங்களும் பாதுகாப்பிற்காக ஆக்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டி வந்தது.அதாவது தேர்த்திருவிழா அன்று வழைமை போல நாங்கள் ஒரு எட்டுப்பேரளவில் போயிருந்தோம். கும்பிளாவளை பிள்ளையார் கோயில் பிரபலமான ஒரு கோயில் என்பதால் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்காளால் நிரம்பியிருந்தது.

எனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு " கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேரடியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை.

பூசை முடிஞ்சு தேரும் இழுத்து முடிஞ்சு அன்னதானமும் தொடங்கி விட்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த சோழப்பொரியும் கசிந்த வியர்வையில் நசிந்து போயிருந்தது.நான் நண்பனிடம் சொன்னன் டேய் அவள் வரேல்லை போலை அன்னதானமும் தொடங்கிட்டு பசிக்கிது அதாலை வா பேசாமல் சாப்பிட்டு போவம் எண்டவும்.நண்பனோ விடுவதா இல்லை "இல்லையடா கட்டாயம் எப்பிடியும் வருவன் எண்டவள் சனம் கூடவா இருக்கு அதாலைதான் கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு கொஞ்சம் பொறுப்பம் சனம் குறைய எப்பிடியும் சந்திக்கலாம்" எண்டான். அவனைப்பாக்கவும் பாவமாய் இருந்தது. அப்பதான் குழந்தையை தவற விட்ட யாரோ ஒருவர் தன்னுடைய பிள்ளையின் வயது போட்டிருந்த சட்டையின் நிறம் எல்லாம் சொல்லி ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருந்தார்஼br />?ள். அப்பதான் எனக்கு திடீரெண்டு ஒரு யொசினை வந்தது.

உடனை நண்பனிட்டை சொன்னன் சரி உன்ரை ஆள் கோயிலுக்கு வந்திருந்தால் கட்டாயம் சந்திக்கலாம் அதுக்கு என்னட்டை ஒரு ஜடியா இருக்கு வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு மைக் செற் இருந்த இடத்துக்கு போய் மைக் காரரிடம் நண்பனைக்காட்டி "அண்ணை நாங்கள் கோயிலுக்கு வந்த இடத்திலை இவரின்ரை தங்கச்சியை மாற விட்டிட்டம் இப்ப அவசரமா வீட்டை போகவேணும் அதாலை ஒருக்கா மைக்கிலை அறிவிக்க வேணும்" எண்டவும். மைக்காரர் பெயர் வயசு போட்டிருந்த சட்டை நிறம் எண்டு விசாரணையை தொடங்க நான் சொன்னன் "அண்ணை அவாவுக்கு வயசு 15 நீங்கள் அவாவின்ரை பெயரை மட்டும் சொல்லி இவனின்ரை பெயரையும் சொல்லி இவர் தேடுறார் அதாலை உடைனை தேரடிக்கு வரச்சொல்லி விடுங்கோ எண்டவும்.

மைக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திரக்க வேணும் எங்களை ஒரு மாதிரியாய் பாத்தபடியே அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவரது அண்ணன் தேடுகிறார் உடனடியாக தேரடிக்கு வரவும் எண்டு என் நண்பனின் பெயரையும் அறிவித்து விட்டார். நாங்கள் உடனடியாக தேரடிக்கு போய் நின்று கொண்டோம்.சரி இனித்தான் கிளைமாக்ஸ். சனக்கூட்டமும் குறைந்திருந்தது கொஞ்ச நேரத்தில் திடீரெண்டு எங்களுக்கு முன்னாலை அந்த மைக்செற் காரர் எங்களை பாத்து இவங்கள் தான் ஆக்கள் என்டு கையை காட்டினார்.அவருக்கு பின்னாலை பி.வாசுவின்ரை படங்களிலை வாற வில்லனின்ரை கையாட்கள் மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடை ஒரு பத்து பதினைஞ்சு பேர் எங்களை நோக்கி பாஞ்சினம்.என்ன நடக்கபோகுது எண்டு நினைக்கிற அந்த செக்கனிலேயே அடிவிழத்தொடங்கியது.அளவெட்ட༢r />?? பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்யிற ஆக்கள் மண்வெட்டி பிடி்ச்ச கையாலை அடிவாங்கினால் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கால் கற்பனை பண்ணிப்பாருங்கோ.

யாருக்கு எப்பிடியெல்லாம்அடி விழுந்தது எண்டு தெரியாது . காதைப்பொத்தி எனக்கும் ஒரு அடி விழுந்தது. ஏதோ யாழ்தேவி றெயின் இடம்மாறி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் வீதியாலை ஓடினது மாதிரி எனக்கு ஒரு உணர்வு. அதே நேரம் பின்னாலை இருந்து யாரோ சேட்டிலை பிடிச்சு இழுக்க நல்லவேளை நான் போட்டிருந்தது கொஞ்சம் பெரிய சேட்டு அது மட்டுமில்லை கழுத்திலை போட்டிருந்த சங்கிலி வெளியாலை தெரியட்டும் எண்டு இரண்டு தெறியையும் களட்டிவிட்டிருந்த படியால் சுலபமாய் சேட்டை உருவி கழட்டிவிட்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு அளவெட்டி தோட்டவெளி வரம்பாலை ஓடி ஒரு மாதிரி வீட்டை வந்து சேந்திட்டன். எங்களோடை வந்த ஒருநண்பன் சைக்கிளைக்கூட எடுக்கவில்லை ஓடியந்திட்டான்.மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.

பசிக்கிறவைக்கு சோறு போட்டால் தர்மம் எண்டிறவை .அதுமாதிரி சோத்து கையாலை அடிக்கிறதைத்தான் தர்மஅடி எண்டு எனக்கு அப்பதான் விழங்கினது. அடுத்தநாள் வழைமைபோல நாங்கள் எங்கடை கோயில் மடத்திலை சந்திச்சு எவருமே அடிவாங்காத மாதிரி கதைத்து கொண்டோம். எனது நண்பனோ பிறகு தன்னுடைய காதலியை காணமுடியாமல் சோகத்தில் சில நாட்கள் திரிந்தான் ஒரு நாள் மாலை வழைமையாய் கோயில் மடத்திற்கு வந்தவன் கலகலப்பாய் கதைத்துவிட்டு எங்கள் எல்லோருக்கும் பணிஸ்சும் சோடாவும் வாங்கித்தந்தவன் அன்றிரவு தங்கள் தோட்டத்திற்கு போய் பொலிடோலை(பூச்சிமருந்து) குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டான்.

No Comment