Navigation


RSS : Articles / Comments


படம் காட்டுறம் வாங்கோ

8:37 AM, Posted by sathiri, One Comment

படம் காட்டுறம் வாங்கோ

கடந்த ஒரு பேப்பரில் எனக்கு ASIA வேணும் என்கிற எனது அனுபவ கதை பலரும்விரும்பி படித்ததால் இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய இன்னொரு அனுபவக்கதை

இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருதர் விடிய விடிய காவல் நிப்பார். பிறகு காலப்போக்கிலை வெளிநாடு மற்றும் கப்பல்களில் வேலைக்கு போறவை எல்லாருமே லீவிலை வரும்போது கட்டாயம் கையோடை கொண்டு வாற சாமான் இந்த ரிவி தான் அதுவும் 99 வீதம் பேரும் கொண்டுவாறது(SONY) ரிவிதான்.அதாலை சைக்கிள் கரியரிலை கட்டி கொண்டு போற அளவுக்கு இந்த ரிவியின்ரை பெருமை குறைஞ்சு போச்சுது.


இப்பிடித்தான்பாடசாலை தவணை விடுமுறை விட்டஒருநாள் என்னுயிர்த்தோழன் இருள் அழகன் எங்கடை கோயில் மடத்திலை இருந்து அதுகின்ரை முகட்டை பாத்தபடி என்னிடம் " டேய் இந்த உலகத்திலை பிறந்து இதவரை என்னத்தை சாதிச்சிருக்கிறம்" எண்டான். இதென்னடா இவனுக்கு திடீரெண்டு மடத்து முகட்டிலை இருந்து ஏதும் ஞானம் கிடைச்சிட்டுதா எண்டு நினைச்சபடி . அவனையும் முகட்டையும் மாறி மாறி பாக்க . இல்லையடா இந்த ஊருக்காவது ஏதாவது செய்யவேணும் போலை இருக்கு அததான் இந்த லீவிலையாவது எதாவது பிரயோசனமா இந்த ஊர் மக்களுக்கு செய்வம் எண்டு யோசிச்சு இருக்கிறன்எண்டான்.

நல்ல சிந்தனைதான் ஆனால் அது உனக்கு வந்திருக்கு அதுதான் யோசிக்கிறன் சரி என்ன செய்யபோறாய் என்றவும். ஒரு ரிவி டெக் வடைகைக்கு எடுத்து எங்கடை ஊர் மக்களுக்கு படம் காட்ட போறன் என்றான்.அப்பதான் எனக்கு நிம்மதி ஒரு நிமிசம் இவனுக்கு ஏதும் ஞானம் பிறந்திட்டுதாக்கும் என்று பயந்து போயிட்டன். அப்பிடியே பிள்ளையாரை எட்டிப்பார்த்து மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு சரி ஏதோ பொழுது போகதானே வேணும் அது படம் பாத்ததா போகட்டும் என்று நினைத்து அதற்கான பட்ஜெட்டை போட்டு பார்தோம்.

ரிவி.டெக்மற்றும் 5 படக்கொப்பி ல்லாவற்றிக்குமாக வாடைகை 1500 ரூபாவை தாண்டியது. வீட்டிலை கைசெலவுக்கு தருகின்ற 5 ரூபாவுக்கே எத்தினை குட்டிகரணம் அடிக்க வேண்டியிருக்கு இதுக்கை 1500 ரூபாக்கு எங்கை போறது என்று நினைத்து செலவை குறைக்க ஒரு யோசனை தோன்றியது. படம் ஓட ஒரு இடம் வேணும் அதுவும் ஆமி ரோந்து பிரச்சனை இருக்கிறபடியா பிரதான வீதியை அண்டாமல்
ஒதுக்கு புறமா மின்சார வசதியோடை ஒரு வீடு வேணும் யோசிச்சு பாத்ததிலை அதே வசதிகளோடை இருக்கிற எனது சித்தப்பா ஒருதர் ஞாபகத்திற்கு வந்தார் அதைவிட அவரிட்டை ரிவியும் இருந்தது அதோடை அவரும் சித்தியும் சரியான பட பைத்தியம் அவரோதைச்சு அவர் இடமும் ரிவியும் தந்தாரெண்டால் பாதி பிரச்சனை முடிஞ்ச மாதிரி என்று நினைத்து அவரிடம் போய் கதைச்சன் அவரும் முதலாவது படம் தன்னுடைய அபிமான நடிகர் எம்.ஜி. ஆர் நடிச்ச படம் போடவேணும் சரியெண்டா தான் இடமும் ரி வியும் தாறதா சொன்னார்.

இடம் ரிவி பிரச்னை முடிஞ்சுது மிச்சமா டெக் மற்றும் பட கொப்ப்பி எடுக்க வடைகை ஒரு 700 ரூபாயளவில் தேவை இருள் அளகனின்ரை சேமிப்பு உண்டியலை உடைச்சதிலை ஒரு 150 ரூபாய் தேறியது . என்னிடம் உண்டியல் சேமிப்பு பழக்கம் இல்லை ஏணெண்டால் நான் எப்பவுமே நாளையை பற்றி கவலை படாத ஆள் .( இன்றுவரை அதே நிலைமைதான்) அதாலை நான் வழைமை போல எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் எனக்கு கை கொடுப்பது எங்கள் தென்னங்காணி இது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இருந்தது அதனால் அங்கு கைவைத்தால் வீட்டிற்கு தெரியவராது.

அதுமட்டுமில்லை ஆள்வைத்து தேங்காய் பிடுங்கினால் வீட்டில் பிடிபட்டு விடுவேன் என்றதால் நானே கஸ்ரபட்டு தென்னைமரமேற கற்று கொண்டேன். தென்னை மாமேறினால் நெஞ்சு பகுதியில் மரம் உரஞ்சி கீறல் காயங்கள் வரும் அது மாறும்வரை வீட்டு காரருக்கு முன்னால் சேட்டை கழற்றாமல் திரிய வேண்டும்.அடுத்தாய் அந்த காணிக்கை பாக்கு மரங்களும் நிண்டது கொட்டை பாக்கும் பொறுக்கி விக்கலாம். வீட்டுக்கு தெரியாமல் வழைமை போல நானும் நண்பனும் தென்னையில் கை வைக்க முடிவு செய்தோம். நான் தேங்காய்களை புடுங்கி போட இருள் அழகன் ஓடியொடி பொறுக்கி உரித்தான் அதோடு கொட்டை பாக்கும் கொஞ்சம் பொறுக்கி சாக்கில் போட்டு கட்டியாகிவிட்டது.

ஊர்சந்தையில் கொண்டு போய் விக்கமுடியாது வீட்.டுகாரர் யாராவது கண்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் மருதனார் மடம் சந்தையில் கொண்டு போய் வித்து ஒரு 200 ரூபாயளவில் தேறியது சந்தையை விட்டு வெளியே வந்ததும் முன்னாலிருந்த கூல்பார் கண்ணில்பட நண்பனிடம் டேய் இவ்வளவு கஸ்ரபட்டு மரமேறி தேங்காயெல்லாம் புடுங்கி வித்தாச்சு நெஞ்செல்லாம் மரம்உரஞ்சி எரியிது வா கூலா ஒரு பலூடா குடிப்பம் என்றேன். அதுக்கு அவனோ டேய் எங்கடை இலட்சியம் எல்லாம் படம் ஓடுவது அதுநிறைவேறும்வரை காசு செலவுபண்ணக்கூடாது இடையில் எந்த ஆசா பாசத்திற்கும் இடம்இல்லை பேசாமல் வா என்று கைநீட்டி சத்தியபிரமாணம் எடுக்காத குறையாக சொன்னான்.

அட விழங்காத பயலே படம் ஓடுறதெல்லாம் ஒரு இலட்சியம் அதுக்கு இடையிலை ஒரு பலூடா கூட குடிக்கமுடியாதா என்று புறுபுறுத்தாலும் அப்போ அவனுடன் கோபமாக கதைத்தால் அவனே அப்புறூவராக மாறி என்வீட்டில் தேங்காய் கதையை போட்டுடைத்து விடுவான் பிறகு வீட்டில் என் தலைதான் தேங்காயாக உருளும் எனவே பொத்திக்கொண்டு நடந்தேன்.எங்களிடம் இருந்த பணம் நண்பர்களிடம் கடனுதவி பெற்றது எண்டு எல்லாம் திரட்டியும் ஒரு 200 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது.அதனால்ஆளுக்கு 3 ரூபாய் கட்டணம் அறவிடுவது என்றுஎங்கள் பொதுநலத்தெண்டில் சிறிய மாற்றம் கொண்டு வந்தோம் . அதே நேரம் படம் ஓடுகின்ற செய்தியை ஊருக்கு ஒரு ஸ்பீக்கர் முலமாக அறிவிக்கலாமென நினைத்து எங்கள் ஊரில் ஸ்பீக்கர் வாடைகைக்கு விடுகிறவர் ஒருவரிடம் போய் கேட்கவும் அவர் தம்பி வீட்டிலை பெரியாக்கள் யாரும் இருந்தா கூட்டிகொண்டு வாங்கோ உங்களை நம்பி தர ஏலாது என்றார்.

எனக்கு வந்த கோபத்திற்கு சற்று தூரத்தில் போய் நின்று ஒய் உன்ரை மகளைகலியாணம் கட்டிதர சொல்லியா கேட்டனான் ஸ்பீக்கர்தானே கேட்டனான் என்று கத்தி விட்டு ஓடிவிட்டேன். அப்படியே பண்டத்தரிப்பு வரை ஓடிப்போய் அங்கு எனக்கு தெரிந்த செல்வா சவுண்ட் சேவீஸ் காரரிடம் தலையை சொறிந்தேன் அவரும் ஓசியிலை குடுக்கிறதுதானே என்று நினைத்து ஒரு பழைய மைக் 2 சிறிய ஸ்பீக்கர் அம்பிலி(ampli)தந்துதவினார். அதை கொண்டுவந்து சித்தப்பாவிடம் நின்ற ஒற்றைதிருக்கல்(ஒருமாடு மட்டும் இழுக்கும் வண்டில்)வண்டிலில் மாட்டையும் கட்டி இரண்டு ஸ்பீக்கரையும் கட்டி எல்லாம் பொருத்தி முடிய இருள் அழகன் நான் தான் அறிவிப்பாளர் என்று அடம் பிடித்தான் .

சரி இதென்ன இலங்கை வானொலியா அவனின் ஆசையை ஏன் கெடுப்பான் அறிவிக்கட்டும் நான் வண்டிலை ஓடுவம் என்று நினைத்து மாட்டின் கயிற்றை பிடிக்கு முன்னர் இருள் அளகன் அவசரப்பட்டு வண். ரூ. திறீ மைக்: ரெஸ்ரிங் எண்றவும் ஸ்பீக்கர் கீகீகீ............என்று கீச்சிட மாடு வெருண்டு ஒடதொங்கி விட்டது. கொஞ்சத்தூரம் ஓடிய பின்னர் மாடும் வண்டிலும் கஸ்ரப்பட்டு என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.ஆனாலும் இதையெல்லாம் பாத்துகொண்டு நின்ற சித்தப்பாவோ டேய் உங்கடை ஒரு நாள் கூத்துக்கு என்ரை மாட்டையும் வண்டிலையும் நாசமாக்க வேண்டாம் பேசாமல் ஸ்பீக்கரைமரத்திலை கட்டி அறிவியுங்ககோஎன்று மாட்டு வண்டிலை புடுங்கி கொண்டார்.

ஒரு மாதிரி மாலையானதும் எங்கடை அறிவிப்பிற்கு சனமும் வர தொடங்கியது ரிவியில் பாட்டுகள் ஒடிக்கொண்டிருந்தது. சித்தப்பா என்னிடம் தம்பி நான் டக்கெண்டு ஓடிப்போய் ஒரு போத்தல் அடிச்சிட்டு வாறன் அதவரைக்கும் பாட்டை ஒடவிடு என்று விட்டு கள்ளடிக்க போய்விட்டார்.நான் வாசலில் நின்று வசூலை கவனித்து கொண்டு இருள் அளகனிடம் டேய் யாராவது காசு தராமல் களவாய் வேலி பாஞ்சு வருவாங்கள் அதாலை நீ வீட்டை சுத்தி கவனி என்று அவனை அனுப்பி விட அவனும் எதோ நாட்டின் எல்லையை கவனிக்க அனுப்பின மாதிரி கையிலை ஒரு பொல்லை எடுத்த கொண்டு வீட்டின் பின்பக்கமாக போனான்.

சிறிது நேரத்தில் அய்யோ என்றொருசத்தம் கேட்டது இருள்அளகன் பொல்லு இல்லாமல் வேகமாய் ஓடிவந்து என்னிடம் நடுங்கியபடி டேய் ஒரு பிரச்சனை நடந்து போச்சு என்றவும் பின்னால் சித்தப்பா மண்டையை பொத்திப்பிடித்தபடி டேய் என்ரை வீட்டிலை என்ரை ரிவியிலை படமோடிகொண்டு என்னையே அடிக்கிறியளா??இண்டைக்கு எப்பிடி படம் ஓடறியள் எண்டு பாப்பம் என்றபடிஆவேசமாய் வந்து ரி வி வயர் எல்லாத்தையும் கழற்றி எறிய தொடங்கினார்.ஒரு மாதிரி நான் சித்தி எல்லாருமாக அவரை சமாதானப்படுத்தி விட்டு இருள் அளகனிடம் விபரத்தை கேட்டேன். கள்ளடிச்சிட்டு வந்த சித்தப்பா வீட்டின் பின்பக்கம் இருந்த பொட்டுக்குள்ளாலை உள்ளை வர தலையை விட்டிருக்கிறார் அதை யாரோ களவாய் படம்பாக்க வருகினம் என்று நினைத்து இருள்அளகன் இருட்டுக்குள்ளை ஆழை அடையாளம் தெரியாமல் கையிலை இருந்த கட்டையாலை மண்டையிலை போட்டிட்டான்.

பிறகு சித்தப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி அவருக்கு பிடித்த எம்.ஜி. ஆரின் நினைத்ததை முடிப்பவன் படத்துடன் எங்கள் படம் காட்டல் இனிதே ஆரம்பமானது

அடுத்த பேப்பரில் இன்னொரு கதையுடன் சந்திக்கிறேன்

One Comment

சின்னக்குட்டி @ 9:13 AM

//99 வீதம் பேரும் கொண்டுவாறது(SONY) ரிவிதான்.அதாலை சைக்கிள் கரியரிலை கட்டி கொண்டு போற அளவுக்கு இந்த ரிவியின்ரை பெருமை குறைஞ்சு போச்சுது.//

-;))

நல்லாயிருக்கு சாத்திரி...தொடருங்கோ...