Navigation


RSS : Articles / Comments


எனக்கு ASIA வேணும்

1:41 PM, Posted by Siva Sri, 3 Comments

எனக்கு ASIA வேணும்

தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு.

80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்கும் வகையில் ரயர் அகலம் குறைந்ததாக செய்ப்பட்டு இலங்கையில் அறிமுகமாகியது.இந்த சில மாற்றங்களால் இந்த சைக்கிள் மற்றைய சைக்கிள்களை விட கொஞ்சம் வேகமாக ஒடும்.இது இளையவர் மத்தியில் வெகு வேகமாக ஒரு இடத்தை பிடித்துகொண்டிருந்தது. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....எண்டு பிறேக் அடிக்கவும் பெட்டையளும் திடுக்கிட்டு ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.

ஆனால் என்ரை சிங்கர்சைக்கிள் அதுக்கு தடையாய் இருந்தது காரணம் சைக்கிளின் பாரத்தை குறைத்தால் வேகமாக ஓடும் எண்டு என்னுயிர் நண்பன் இருள்அழகன்(பட்டப்பெயர்தான்) சொன்னதை நம்பி நானும் மக்காட் செயின்கவர்.பெல்.டைனமோ.கெட்லைற் எல்லாத்தையும் கழட்டி அரை விலைக்கு வித்து கோயில் திருவிழாவிலை ஜஸ்பழம் வாங்கி குடிச்சிட்டன்.அதனாலை எப்பிடியும் ஒரு புது ஏசியா வாங்க அம்மாவை அனுசரணையாளராக்கி அப்பாவிடம் தூது அனுப்பிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நண்பன் இருள்அழகனே புது ஏசியாவில் வந்து எனக்கு முன்னால் சர்ர்ர்....எண்டு பிறேக் அடித்தான்.அதுக்கு மேலையும் என்னாலை பொறுக்க ஏலாமல் நானே நேராக களத்தில் இறங்கிஅப்பாவிடம் கேட்டு விடமுடிவுசெய்துஅப்பாவிடம் போய் " அப்பா எனக்கு எசியா சைக்கிள்வாங்கி தாங்கோ" என்றேன்.

என்னை மேலும் கீழுமாக பாத்து விட்டு "ஏன் இப்ப இருக்கிற சைக்கிளுக்கு என்ன அதுக்கும் இரண்டு சில்லு பெடல் ஒரு காண்டில் இருக்கு உழக்கினால் ஓடும்தானே" என்றார் இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று மனதில் நினைத்தபடி" அதில்லையப்பா என்ரை சினேதமெல்லாம் ஏன் இவன் இருள்அழகன் கூட ஏசியா வாங்கிட்டான் எனக்கு இந்த சைக்கிள்ளை பள்ளிகூடம் போக வெக்கமா கிடக்கு" என்றவும் மற்றவனை பாத்து எல்லாம் செய்ய வெளிக்கிடாதை எத்தினை பேர் பள்ளிகூடத்துக்கு நடந்து வாறாங்கள் அப்ப நீயும் அவங்களை மாதிரி நாளையிலை இருந்து நடந்து போ "என்று விட்டு போய்விட்டார்.தோல்வி என்கிற வார்த்தை எனது அகராதியிலேயே இல்லையென்று சொன்ன நெப்போலியன் ரஸ்யாவில் தோத்து போய் பிரான்ஸ் திரும்பியபோது என்ன மன நிலையில் இருந்திருப்பானோஅதே மன நிலையில் நானும் தலையை தொங்க போட்டபடி அடுத்ததாய் ஒரு முடிவுக்கு வந்தேன்(நெப்போலியன் வந்து தன்ரை மன நிலையை உன்னட்டை சொன்னவனா எண்டு கேக்க கூடாது)

இனிமேல் வெளியிலை எங்கைபோனாலும் சைக்கிளை பூட்டாமல் விட்டால் எப்பிடியும் யாராவது களவெடுத்துகொண்டு போவாங்கள்.பிறகு அதேசாட்டாக வைத்து புது ஏசியா வாங்கி விடலாமெண்டு நினைச்சு சைக்கிளை பூட்டாமலே விட்டு பாத்தன். ஆனால் யாருமே தொட்டு கூட பாக்கேல்லை.ஒருநாள் நண்பன் என்னட்டை டேய் இண்டைக்கு சங்கானை ஞானவைரவர் கோயில் பொங்கல் ரிவியிலை படம் போடுறாங்களாம் வாறியா போய் பாத்திட்டு வருவம் எண்டான்.அந்தகாலகட்டம் தான் ஊரிலை உந்த ரி.வி வந்த புதுசு எனக்கு ஆசையாய்தான் இருந்தது ஆனால் இரவிலை திரியவும் பயம் காரணம் பொலிஸ் ஆமிதிடீரெண்டு ரோந்து வருவாங்கள் அம்பிட்டா பிடிச்சு கொண்டு போடுவாங்கள் சில நேரம் வெடியும் விழும்.ஆனாலும் ஆமி பொலிசின்ரை ரோந்து எப்பிடியும் இரவு 11 மணிக்கு பிறகுதான் வருவாங்கள் நாங்கள் முதல் படத்தை பாத்திட்டு 10 மணிக்கெல்லாம் வந்திடலாமெண்டு இருள் அழகன் தந்த தைரியத்திலை இரண்டு பேருமா போய் வைரவர் கோயில்லை புக்கையையும் வாங்கி சாப்பிட்டபடி முதல் படத்தை பாத்தாச்சு ஆனால் இரண்டாவதாய் கமல் நடிச்ச புது படம் ஒண்டு போட்டாங்கள் இரண்டு பேருக்கும் வெளிக்கிட மனமில்லை ஒருத்தரையெருத்தர் பாத்தபடி சரி இதையும் பாத்திட்டு போவம் நாளைக்கு பள்ளி கூடத்திலை வகுப்பிலை நித்திரையை கொள்ளலாம் எண்டு நினைச்சு அதையும் பாத்திட்டு வெளிக்கிட ஒரு மணியாச்சுது.றோட்டிலை ஒருதரும் இல்லை பயமாகவும் இருந்தது.

வாகனங்கள் ஏதாவது வருதா எண்டு பாத்தபடியே சைக்கிளை மிதித்தபடி கட்டுடை வயல்வெளிக்கு வந்து விட்டோம் இந்த வயல் வெளியை கடக்கிறதக்கிடையிலை ஆமி வந்திட்டாங்கள் எண்டால் கதை கந்தல். வெளிக்குள்ளாலை எங்கையும் ஓட ஏலாது பிடிச்சு கொண்டு போடுவாங்கள் அதாலை வயல்வெளியை வேகமா கடக்க வேணும் எண்டு நினைச்சு சைக்கிளை வேகமாக மிதித்தோம். என்னை விட இருள்அழகன் சில மீற்றர் தூரம் முன்னுக்கு பேய் கொண்டிருந்தான் பாதி வெளியை கடந்தபோதுதான் பின்பக்கமா பெரிய வெளிச்சம் தெரிஞ்சுது திரும்பி பாத்தோம். ஆமிதான்.கன வாகனம் வந்து கொண்டிருந்தது.டேய் கெதியா மிதியடா ஆமி வாறான் எண்டு கத்தினபடி நண்பன் வேகத்தை கூட்டினான்.

அந்த வயல்வெளி முடிவில் இரண்டு வீடு தள்ளி ஒரு ஒழுங்கை வரும் அதுக்கை இறங்கினால் தப்பிடலாம் என நினைத்து நண்பனிடம் டேய் வாற ஒழுங்கையிலை திருப்பு என்று கத்தியபடி நானும் முடிந்தளவு வேகமாய் மிதித்தேன்.எனக்கு முன்னால் போய்கொண்டிருந்த நண்பன் என்னை பரிதாபமாய் பாத்தபடி ஒழுங்கையில் இறங்கி மறைந்து விட்டான்.இன்னும் சில மீற்றர் தூரத்தில் தான் ஒழுங்கை ஆமியும் நெருங்கிகொண்டிருந்தான்.என்னுடைய பலமெல்லாத்தையும் திரட்டி எழும்பி பெடலை மிதித்தேன் கால் வியர்வையில் செருப்பு வழுக்கி நடு பாரில் பலமான ஒரு அடி. சைக்கிளை எழும்பி மிதிக்கும் போது கால் வழுக்கினால் எங்கை அடி விழும் எண்டு அடி வாங்கின அனுபவ பட்ட அத்தனை ஆண்களுக்கும் தெரியும். அடிவயித்தை ஒரு கையால் பொத்திபிடிக்க சைக்கிள் தட்டுதடுமாறி ஒழுங்கை வழைவில் விழுந்து போனேன்.

ஆனாலும் சைக்கிளை தூக்கி திருப்பவும் ஓட நேரம் காணாது வாகனங்கள் நெருங்கி கொண்டிருந்தன.அந்த ஒழுங்கையில் ஒரு பக்கம் பெரிய தண்ணிவாய்க்கால் ஒண்டு இருந்தது அந்த வாயக்காலின் இரண்டு பக்கமும் பெரிசா வளந்திருந்த கோரை புல்லுக்கை புகுந்து படுப்பம் எண்டு நினைத்த போதுதான் ஒரு வீட்டு வேலியில் வளைஞ்சு நிண்ட பூவரசு கண்ணில் பட ஓடிப்போய் பாஞ்சு பூவரசு மரத்திலை ஏறி வேலியை தாண்டி அந்த வளவுக்குள்ளை பாஞ்சு ஒரு அடி எடுத்து வைச்சிருப்பன் கால் தடக்கி நிலை தடுமாறி தொம்மெண்டு தண்ணிக்குள்ளை விழுந்து தத்தளிச்சு மேலை வந்து பாக்கதான் நான் அந்த வளவு கிணத்துக்குள்ளை விழுந்து போனன் எண்டு விழங்கிச்சுது.

நல்ல வேளை நீந்த தெரிஞ்சதாலை தப்பிட்டன்.கிணத்து சுவரிலை படிக்கல்லை பிடிச்சடி கொஞ்ச நேரம் நிண்டன் வாகனங்கள் போற சத்தம் கேட்டுது.கிணத்துக்காலை வெளியாலை வந்து மெல்ல வேலியாலை எட்டிப்பாத்தன் ஒரு அசைவும் இல்லை வேலியை திரும்ப பாஞ்சு றோட்டுக்கு வந்து பாத்தன் ஆமி போட்டான் ஆனால் என்ரை சைக்கிளை காணேல்லை அவங்கள் தூக்கி கொண்டு போட்டாங்கள்.அடுத்த நாள் அப்பாவிட்டை நடந்த விசயத்தை சொன்னன் ஆனால் கோயிலுக்கு பொங்கலுக்கு போனது மட்டும் தான் படம் பாத்ததை இல்லை.அடுத்தநாள் பின்னேரம் அப்பா "டேய் வெளிக்கிடு உனக்கு சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் ரவுணுக்கு போட்டு வருவம்" எண்டார் எனக்கு சந்தோசத்தில் என்னைச்சுற்றி ஆயிரம் இலையான்கள்.(சந்தோசத்திலை பட்டாம் பூச்சிதான் பறக்க வேணும் எண்டு சட்டமா??)சைக்கிள் கடைக்குள்ளை போனதும் அப்பா சைக்கிள் கடை காரரிடம் விலை குறைஞ்சதா நல்லதா ஒரு சைக்கிள் வேணும் என்றவும்.

கடை காரர் விலை குறைஞ்சதெண்டா அந்த பக்கம் சிங்கர். லுமாலா சைக்கிள் இருக்கு போய் பாருங்கோ எண்றார். எனக்கோ மீண்டும் நெப்போலியன்.... மீண்டும் ரஸ்யாவில்.... சே வேண்டாம் எதுக்கு உங்களை வெறுப்பேத்துவான் கதையை முடிக்கிறன். எனக்கு கோபமும் அழுகையுமா வரவே தலையை தொங்க போட்டபடி கடைக்கு வெளியே வந்து நிக்கவும் அப்பா என்னிடம் வந்து " ஏன் உனக்கு சைக்கிள் வேண்டாமோ??"என்றார். அப்பாவை அப்பாவியாக பாத்தபடி அப்பா எனக்கு ஏசியா தான்வேணும் என்றவும் சரி சரி வா வாங்கி தாறன் என்றபடி கடைக்கு உள்ளே போனார். என்னைச்சுற்றி மீண்டும் ஆயிரம் இலையான்கள் உண்மையாகவே. பக்கத்தில் கரும்பு சாறு விற்று கொண்டிருந்தவன் கையை அசைத்ததால் கரும்பு சக்கையில் இருந்த இலையான்களே அவை .

3 Comments

சின்னக்குட்டி @ 2:32 PM

வணக்கம் சாத்திரி நல்லாயிருக்கு பதிவு..... ஆனால் ஒன்று எனக்கு ரலிக் சைக்கிள் தான் வேணும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 4:32 PM

சாத்திரி!
அனுபவம் நல்லாயிருக்கிறது.எனக்கு ஓடினால் சரி.

சாத்திரி @ 2:49 PM

சின்னகுட்டி அதுதான் கதை தொடக்கத்திலேயே சொல்லிட்டனே சைக்கிள் எண்டதும் பழைய ஆக்களிற்கு றலி தான் ஞாபகத்திற்கு வரும் எண்டு பிறகென்ன.கிகிகி. யோகன் உங்கள் பதிவிற்கு நன்றி புரிகிறது உங்களிற்கு ஏதோ ஓடினால் சரி என்கிற நிலைமை போலை சைக்கிளை சொன்னேன்