Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து - என் பார்வையில்.... Keshayine Edmund

2:54 PM, Posted by sathiri, One Comment

Thursday, March 19, 2015

ஆயுத எழுத்து - என் பார்வையில்....

விமர்சனங்கள் என்பது இப்போதெல்லாம் கட்டணங்கள் இல்லா விளம்பரங்கள்! ‘ஆயுத எழுத்து” குறித்த பல விமர்சனங்கள் தான் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தினை உருவாக்கியிருந்தது.

பாடசாலைப் பருவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பதினேழு வருடங்கள் கள போராளியாக பணியாற்றிய முன்னாள் போராளியான சாத்திரி என்கின்ற புனைப்பெயர் கொண்ட கௌரிபால் சிறி எழுதி திலீபன் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த புத்தகம் கையில் கிடைத்தது முதல் இரவு பகலாக 391 + 1 பக்கத்தினை இரு நாட்களிலேயே வாசித்து முடித்து விட்டிருந்தாலும் ஏறத்தாழ இரு வாரங்களின் பின்னர் தான் இந்த விமர்சன பதிவினை எழுத ஆரம்பித்தேன். என்னுள் நிழலாக படிந்திருந்த ஏனையவர்களின்   விமர்சனங்களின் சாயல் மறைந்த பின்னர் தான் எழுத வேண்டும் என்கின்றதே இதற்கான முக்கிய காரணம். என் விமர்சனங்களை வரைய தொடங்குகின்றேன்… 
இந்த நூலின் ஆசிரியர் “என்னுரை”யில் குறிப்பிட்டுள்ளதன் படி 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியினை தொடக்கமாக வைத்து தான் கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலோ என்னவோ “அவன்” என்கின்ற பெயரற்ற உயர்தரம் படிக்கின்ற இளைஞனின் பாத்திரமாக ஆரம்பித்து அவனை போராளியாக்கி வெளிநாட்டு கட்டமைப்பில் பணியாற்றுபவனாக்கி இறுதிவரை “அவன்” ஆகவே நகர்த்தி முடித்திருக்கின்றார். ஓரெழுத்து பெயர் தானும் வைத்திருந்தால் “அவன்” யாராவது ஒருவரது சாயலாகவோ அல்லது அடையாளமாகவோ ஆகியிருப்பான் என்று சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கின்ற சாத்திரிக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.  ஆனால் தொடர்ந்து “அவன்” ஐ தொடர்ந்தால்  “அவன்” இந்து சமயத்தவன், யாழ்ப்பாணத்தவன், உயர்சாதிக்காரன், படித்த குடும்பத்திலிருந்து வந்தவன் என்கின்ற அடையாளங்களை நாம் குறித்துக்கொள்ளலாம்.

சராசரி குடும்பத்தின் அதிகாலை நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கின்ற முதல் அத்தியாயம் 83 இன் தமிழ் சமூகத்தின் அன்றாடம் போலவே அடுத்த அத்தியாயத்திலேயே “கண்ணிவெடி”க்கு இலக்கான அவலமொன்றுக்கு போய் நின்றுவிடுகின்றது. கூடவே இத்தகைய வன்முறைகள் இளைஞர்களிடம் தோற்றுவித்திருந்த சிந்தனை விதைப்பினை பின்வரும் வரிகளில் கொடுத்து விடுகின்றார் சாத்திரி. அந்த விதை “அவன்” உள்ளும் விழுந்து விடுகின்றது.
..அது மாகியம்பதியுடன் மட்டுமே முடிந்துவிட்ட துயரக்குரல் அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்குமிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. அது முடிவு இல்லாத மரணக்குரலாக நீண்டு கொண்டிருந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலிருந்தும் மரணக்குரல்கள் எழுந்தன. கொழும்பிலிருந்து மரணச்செய்திகள் வந்தன. மலையகம், அநுராதபுரம் என எல்லா இடங்களிலிருந்தும் படுகொலைச்செய்திகள் வந்தன. மரணம் மட்டுமே செய்தியானது…….. இவையெல்லாம் என்ன தடுக்க முடியாதா? அடிக்கிறவனைத் திருப்பி அடிக்க முடியாதா? …. முடியும் என்றனர் ஊரிலுள்ள சில இளைஞர்கள். “நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்” என்றனர். அவனும் முடிவெடுத்தான் இயக்கத்தில் சேரலாம் என.
அடுத்த அத்தியாயங்களில் “அவன்” இன் அண்ணன் வீட்டுக்கு வரவில்லை என்டு வீடு கலங்கிவிடுகின்றது. இறுதியில் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டிருக்கும் தகவலும் கிடைக்கின்றது. அந்த அத்தியாயத்தில்
“எல்லாம் உன்ர பிள்ளை வளர்க்கின்ற விறுத்தம்” என அப்பா அந்த ரணகளத்திலும் புறுபுறுத்துக்கொண்டிருந்தார். எனும் வரிகள் அன்றைய.. இன்றைய என்றைய நிலையிலும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் “பிள்ளை வளர்ப்பு” என்கின்றது எப்படி ஒரு தாயை மட்டும் சார்ந்து விடுகின்றது என்பதையும் சுட்டி நிற்கின்றது.

பின்வந்த பக்கங்களில் குடும்பத்திலிருந்து சமூகத்திற்கு பாய்ந்து விடுகின்றது வரிகள்… அல்லது “அவன்” ஐ நகர்த்த வேண்டிய தேவை கருதி பயணிக்கின்றது.

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்புக்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணச் சமூகம். அது எப்போதும் சாதி, கல்வி இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடை போடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர்சாதிக்காரனாகவும், கல்வி கற்றவராகவும் இருந்தார். (பக்கம் - 25)

வரிகளிலேயே “யாழ்ப்பாணச் சமூகம்” குறித்து ஆழமாகவும் அர்த்தமாகவும் சொல்லிவிடுகின்றார் நூலாசிரியர். “ஈழபோராட்டம்” என்பது பெரும்பான்மை – சிறுபான்மை இரண்டுக்குமிடையிலானது மட்டுமல்ல சாதிகளுக்கும் இடையிலானதும் கூட என்றும் ஆக யாழ்ப்பாணத்தவருக்கு விடுதலை உணர்வு என்பதும் கூட சாதியடிப்படையிலானதொன்றானதாக தான் இருந்திருக்கின்றது என்பதை நிறுவிவிட்டிருக்கின்றார் சாத்திரி.

“பெண்ணுரிமை” குறித்து பேசும் போது “புலிப்பெண்கள்” குறித்து பேசாதவர்கள் இல்லை எனலாம். ஆனால் ரெலோவில் இணைய வந்த பெண்களை தமிழ்நாட்டில் இடைநடுவே விட்டுவிட்டு ரெலோ ஓடிவிட விடுதலைப்புலிகள் அடேல் தலைமையில் பராமரித்து பயிற்சியளித்திருக்கின்றார்கள் என்கின்ற விடயம் எனக்கு புதியதொன்று. கூடவே புலிகளின் உறுப்பினர் காட்டிய பாலின வேறுபாட்டினையும் மேற்கோள் காட்டியிருக்கின்றார் ஆசிரியர் வரும் வரிகளில்……

…இவன் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரில் இறங்கிய போது, இந்தியாவிலிருந்து பெண்கள் அணியினர் பயிற்சி முடித்து கடல் வழியாக மன்னாரில் இறங்கியிருந்தார்கள்…… இயக்கத்தின் முதலாவது ஆயுதப்பயிற்சி பெற்ற பெண்கள் அணி அது………. மன்னாரில் பெண்கள் பயிற்சி முடித்துக் களத்திற்கு வந்த போதும், யாழ்ப்பாணத்தில் அவனது பொறுப்பாளர் பெண்களை இயக்கத்தில் எடுக்க அவ்வளவாக அக்கறை காட்டாதது அவனுக்கு ஏன் என்று விளங்கவில்லை. அவர் பொறுப்பாக இருந்த காலத்தில் பெண்கள் மருத்துவம் போன்ற பணிகளுக்குத்தான் எடுக்கப்பட்டனர். பின்னர் தீப்பொறி குழவினரின் கைக்குண்டு தாக்குதலில் பொறுப்பாளர் காயமடைந்து இந்தியா சென்ற பின்னர் தான் பெண்கள் யாழ்ப்பாணத்தில் சேர்க்கப்பட்டனர்.

அடுத்தடுத்து திலீபனின் அஹிம்சை போராட்டம்….. வாசிக்கின்ற ஒவ்வொருவர் முன்னும் அந்த வீரனையும் இறுதிக்கணங்களையும் நிறுத்தித்தான் கடந்து போகின்றது…..

“இந்தியாவிற்கு அஹிம்சையைப் பற்றி யாரும் படிப்பிக்கத் தேவையில்லை” என, பரணி ஒருநாள் உறுதியாக சொன்னான். அவன் சொன்னதை கேட்க, நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் நடந்தது வேறு திலீபனின் உயிர் பிரிந்தது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதைவிட ஆற்றாமை பெருகியிருந்தது. …. திலீபனை அநேகமாக எல்லோருக்கும் பிடிக்கும். மெல்லிய…. கலைந்த தலையுடனான அந்த உருவம் நீண்ட நாட்களுக்கு இவனது கண்களின் முன் நடமாடி திரிந்தது.

“ஈழப்போராட்டம்” எப்பவும் “இந்தியர்களை” மறக்காது. ஆசிரியரும் சர்மாவை மறக்கவில்லை.

……சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளைக் கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பொருள்களான நாய்,பூனை, ஆடு, மாடு, மனிதர்களை எல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள அசையாது நின்ற கட்டடங்கள், மரம் செடி எல்லாவற்றையும் டாங்கிகள் தகர்த்தப்படி முன்னேறின.
இந்திய இராணுவத்தின் வருகை குறித்து விபரித்திருக்கின்ற சாத்திரி பெரிதாக வரிகளில் அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை என்பது என் கருத்து. துரோகம் என்றால் “கருணா” என்று சொல்லித்திரிகின்றவர்களுக்கும் அதன் வெறுப்புணர்வை “கிழக்கிற்கு” கொடுத்திருப்பவர்களுக்கும் பின்வரும் வரிகளை சமர்ப்பித்து “துரோகம்” என்பதன் வரைவிலக்கணம் ஏன் கிழக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்டது? என்கின்ற வினாவினையும் சாத்திரியின் வரிகளூடாக முன்வைக்கின்றேன். ஒருவன் துரோகம் தான் கிழக்கிற்கான முத்திரையாக வைத்த… வைக்கின்ற தகுதி வடக்கிற்கு உண்டா?

புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளுக்கு போக முடியாமல் இந்தியாவிலும் கொழும்பிலும் தங்கியிருந்த மாற்று இயக்ககாரர்களை உள்ளடக்கிய “3 ஸ்டார்” அமைப்பை இந்திய உளவுப்பிரிவினர் உருவாக்கினார்கள்…..ஈ.என்.டி.எல்.எஃப் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியவற்றினை ஒன்றிணைத்து….. யாழிலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் கொண்டு வந்து இறக்கினார்கள்.

மண் என்பதற்கானது தான் இப்போராட்டம் என்றால் “வடக்கு” மண்ணில் முஸ்லீம்களுக்கும் பங்கில்லையா? என்பது என்னுள்ளான கேள்விகளுள் ஒன்று. சாத்திரியின் “அவன்” உம் என் கேள்விக்குள் விழுந்து பயணிக்கின்றான். ஆசிரியர் ஒருவேளை “முஸ்லீம்களின் வெளியேற்றம்” குறித்தும் பேசவேண்டும் அல்லது 83 இல் ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்று விடுமோ என்று நினைத்திருப்பார் போலும். அடுத்தடுத்த இரு பந்திகளில் கேள்வியும் விடையும் ஆக மேற்கோள் காட்டியிருக்கின்றேன். ஆனால் ஆசிரியர் என்னளவில் சரியாக பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. (இவ்விரு பந்திகளும் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

…..சொல்லி முடித்த நலீமா கண்ணீர் வழிந்த விழிகளைத் துடைத்த படியே, “இப்ப சொல்லு எதுக்காக எங்களை வெளியேத்தவேனும்? எங்களுக்கும் கிழக்கு முஸ்லீம்களுக்கும் கூட வியாபார தொடர்போ, உறவோ எதுவும் பெயரளவில் இல்லை. முஸ்லீம்கள் என்ற ஓர் அடையாளத்திற்காகவே வெளியேற்றப்பட்டோமோ? ஏதாவது சொல்லன்” என்றாள். அவனிடம் பதில் எதுவும் இல்லை தொண்டை அடைப்பது போல் இருந்தது.

எங்கடை ஊர் மல்வத்தைச் சோனகரும் சிங்களரும் எங்கடை ஊருக்கே புகுந்து அட்டகாசம் பண்ணி வெட்டி கொத்தி எல்டீலாரையும் திரத்திட்டாங்கள்………அதிலை என்டை அம்மாவும் செத்துப்போனா. அதுதான் அவங்களுக்கு ஏதாவது செய்யவேணும் என்டு இயக்கத்திலை சேர்ந்தன். அதுவும் சும்மா சண்டையிலை செத்துப்போக விருப்பம் இல்லை. சாகிறதென்டால் ஏதாவது பெரிசா செய்திட்டு சாகவேணும். அத தான் கரும்புலிக்கு போக விரும்பினன்.” என்று விட்டு அவனையே அசையாது பார்த்தபடி நின்றாள்.

“ஆயுத எழுத்து” இல் என்னுள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததொரு பாத்திரம் “ரெஜினா” சிங்கள தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்தவள். தன் சொந்த அவலத்தின் பழியுணர்வினால் கரும்புலியில் இணைந்தவள். “அவன்” ஆல் தெரிவுசெய்யப்பட்டு இலங்கையின் தெற்கிற்கு பயணிக்கின்றாள். முக்கிய அதிகாரிகளுடன் பழகவிடப்படுகின்றாள். கடைசியில் தற்கொலை குண்டுதாரியாகி “பச்சைக்கட்சி வேட்பாளரோடு அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்” என்கின்ற தலைப்புச் செய்தியின் நாயகியாகிப்போய்விடுகின்றாள். இங்கே “பெண்ணுடல்” என்பது போரில் மட்டும் மரணிக்கவில்லை. சிலரது “படுக்கையிலும் மரணித்திருக்கின்றது” என்பதை மறுப்பதற்கில்லை. “கற்பு, ஒழுக்கம்” பேசிய அதேயவர்கள் தான் “பெண்” ஐ பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதை “போர் வியூகம்” என்று நியாயப்படுத்தி விடுகின்றார்கள் என்று நினைக்கும் போதும் “போரில் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண் இரண்டாம் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்” என்கின்ற வாசகம் தான் என் சிந்தையில் தோன்றுகின்றது.  “ரெஜினா” ஏதோவொரு புள்ளியில் இன்றும் என்னுள் வலித்துக்கொண்டிருக்கின்றாள்.

அடுத்த கட்டமாக “அவன்” நாடு கடக்கின்றான். கடல்களை தாண்டுகின்றான். “அவன்” க்கு முகம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் அவன் சந்திக்கின்றவர்களது முகங்களை தெளிவாகவே காட்டுகின்றமை ஆசிரியருக்கு ஏதும் தனிப்பட்ட பகையிருக்குமோ என்கின்ற ஐயத்தினை ஏற்படுத்துகின்றது. சுயம் பற்றி நான் அலச விரும்பாததாலும் எப்பவும் “ஒரு நாள் கள்ளன் தான் மாட்டுவான் பல நாள் கள்ளன் எப்படியும் தப்பித்துக்கொள்வான்” என்கின்ற என் தனிப்பட்ட மனவாசகத்தினாலும் நபர்கள் குறித்த ஆசிரியரின் அலசலை என் எழுத்தில் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் நான் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான பிரபாகரன் அவர்கள் “புலம்பெயர் சமூகத்திடம்” ஒப்படைத்துள்ள போராட்டம் பற்றிய விமர்சனங்களை விவாதிக்க வேண்டிய தேவை இன்று உள்ளதாலும் சாத்திரியின் பின்வரும் வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

80 களில் ஊரில் இயக்கங்களின் தோற்றத்தின் போது வெளிநாடுகளிலும் அவர்களுக்கு உதவுவதற்காகச் சிலர் ஒவ்வோர் இயக்கத்தின் சார்பிலும் நிதி சேகரிப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் அதில் பாதி அங்கும் மீதி இவர்கள் பைக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. பின்னர் மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டு புலிகள் மட்டும் நிலைத்த போது ஃபிரான்ஸில் புலிகளுக்காக நிதிசேகரிப்பு செய்தவர்களில்….. அதேநேரம் புலிகள் அமைப்புக்காகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த… ஒருவர்…….. இவர்கள் நிதியைச் சேகரித்துப் புலிகளுக்கு அனுப்புவார்கள். எவ்வளவு சேகரித்தார்கள். எவ்வளவு அனுப்பினார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது…… அன்றைய காலங்களில் வெளிநாடுகளில் புலிகள் சார்பாக வேலை செய்த அனைவருமே செய்த செயல் தான். பலர் சேகரிக்கப்பட்ட நிதியோடு வேறு நாட்டுக்கு தப்பியோடி வாழ்கின்றார்கள்…… இப்படியான நிதி மோசடிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக கிட்டு ஐரோப்பாவிற்கு வந்திருந்த காலங்களில் கவனஞ்செலுத்தியதோடு, ….. 70 சதவீதத்தை இயக்கத்திற்கு அனுப்பச் சொல்லி கட்டளையிட்டிருந்தார்…… ஆனால் கிட்டு ஐரோப்பாவை விட்டுப் போனதும் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
…. போடுவதன் மூலம் மூன்று விஷயங்களை நிறைவேற்றலாம் எனப் புலிகளின் புலனாய்வுப்பிரிவு கணக்குப்போட்டது.
1.    இந்த விஷயத்தை இயக்கத்தின் வெளிநாட்டு அனைத்துலகப் பிரிவு பொறுப்பாளர்களிடம் கசியவிட்டு இயக்கத்தின் நிதியை கையாடல் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பது.
2.    சாதாரண புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை இலங்கை புலனாய்வாளர்களால் செய்யப்பட்டது என ஓர் அனுதாப அலையை உருவாக்குதல்
3.    ….ஏற்படுத்தப்பட்ட அனுதாப அலையை வைத்து உணர்ச்சி தளத்திலுள்ள மக்களிடம் மேலதிகமாக நிதி சேகரிப்பை செய்வது.

59 அத்தியாயங்கள் வரை போராளியாக பயணித்த “அவன்” தனக்கு வருகின்ற
…….. “டேய் எங்கடை கட்டமைப்பைக் கலைச்சிட்டு எல்லாரும் ஏதாவது நாடுகளிலை தங்கடை சொந்த வாழ்க்கைக்கு போகலாம்.. என்று தலைமை அறிவிச்சிருக்கு என்று வசனங்களை நிறுத்திப் பேசினார்…… என்கின்ற அழைப்பினூடாக நிறுத்தப்படுகின்றான். அடுத்ததும் இறுதியானதுமான 60 வது அத்தியாயத்தில்…..

நள்ளிரவைத் தாண்டி நண்பனிடம் விடைபெற்றான். இவனைக் கொண்டு வந்து வீட்டில் விடுவதாக நண்பன் சொன்னான். இவன் மறுத்த விட்டான். தள்ளாடிய படி வந்து காரில் ஏறினான். “ கல்லறைகள் விடை திறக்கும்…..ஒரு பாடலை எழுதிடும் இரவு” சாந்தன் பாடிக்கொண்டிருந்தார்…….. வளைந்த மலைச்சரிவுகளில் கார் வேகமெடுக்கத் தொடங்கியது……. தொலைபேசி அலறியது. பார்த்தான் அது யூலியா அதனை எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்ற போது, நழுவி விழுந்து விட அதைக்குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தான். எதிரே பெரிய வீதி வளைவு……. வீதிப் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் உருளத்தொடங்கியிருந்தது.

“அவன்” ஐ முற்றுப்புள்ளி அல்லது அரைக்காற்புள்ளி ஆக்கிவிட்டார் ஆசிரியர். 59 வரை சீராக வந்த வளைவு மாதிரியான “அவன்” கதை திடீரென 90 பாகையில் சரிந்து நின்றுவிட்டது போன்றதொரு உணர்வு எனக்குள். சாத்திரி தன் முன்னுரையில் “கிழக்கு சம்பவங்களை சரிபார்க்க” பத்திரிகையாளர்களான இரா.துரை, நிராஜ் டேவிட் உதவியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் எண்ணிப் பத்து தடவை கூட “கிழக்கு” குறித்து “ஆயுத எழுத்து” இல் பேசப்படவில்லை. ஏன் உலகம் சுற்றியளவிற்கு கூட சாத்திரியின் “அவன்” கிழக்கிற்கோ மலையகத்திற்கோ பயணிக்கவில்லை. வழமை  போன்று மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? அல்லது வடக்கிலிருந்து வேறு இடங்களுக்கு பயணிக்க விரும்பவில்லையா? என்கின்ற என் கேள்விக்கான பதிலை சாத்திரியிடம் எதிர்பார்க்கின்றேன். 
கூடவே நாணயத்தின் ஒரு பக்கத்தினை எழுதியுள்ள “ஆயுத எழுத்து” என்பது எனக்கடுத்த தலைமுறைக்கு ஒரு காவியமாக மாறிட கூடாது என்பதால் மறுபக்கத்தினை வரைய வேண்டிய தேவை, இந்திய துரோகங்களை பட்டியலிட வேண்டிய தேவை நிச்சயம் இன்னுமொரு எழுத்தாளனுக்கு உருவாக வேண்டும். எனினும் பலர் உடைக்க முடியாமல் திணருகின்ற கட்டுக்களை உடைத்து “ஆயத எழுத்து” எழுதியிருக்கின்ற சாத்திரியையும் அவரது தைரியத்தையும் வாழ்த்தாமலும் என்னால் இருக்க முடியவில்லை

தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட…

One Comment

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 5:14 PM

தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட… //
கட்டாயம் தேவையானது.