Navigation


RSS : Articles / Comments


உணர்வுகள் உறவுகள்

2:15 PM, Posted by sathiri, 4 Comments

உணர்வுகள் உறவுகள்
அம்மம்மா

இந்தவார ஒரு பேப்பரிற்காக  சாத்திரி

.காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி.

இவங்களிற்குள்ளை ஏதும் சண்டையாயிருக்குமோ??என்றும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் சண்டை பிடித்ததையும் அவன் காணவில்லை. மத்தியானமானதும் தாத்தா கள்ளடிக்கப் போய விட்டு வருவார். அவர் தூரத்தில் வரும்பொழுதே முற்றத்தில் படுத்திருக்கும் வாதாபி வாலையாட்டியபடி மெதுவாய் முனகியபடி சந்தோசத்திலை நிலத்திலை விழுந்து புரளும்.. குசினிக்குள் நின்றபடியே டேய் செம்பிலை தண்ணி எடுத்து வை தாத்தா வாறார் என்று குரல் கொடுப்பார்.தூரத்தில் தாத்தா வந்து கொண்டிருப்பார். அவர் வாறது எப்பிடி வாதாபிக்கும் உள்ளை நிக்கிற அம்மம்மாவிற்கும் தெரியும் ?? வாதாபி மணத்திலை கண்டு பிடிச்சிருக்கும். அம்மமாவுக்கும் மணக்கிற சக்தி இருக்கோ எண்டு மண்டையை போட்டு குழப்பி ஒருநாள் அவாவிடமே கேட்டும் பார்த்தான்.சின்னப்பெடியன் உனக்கு விளங்காது எண்டு சொல்லி சிரிச்சார்.

தாத்தா நேரடியாக கிணத்தடிக்குப்போய் கைகால் கழுவி விட்டு வந்து செம்புத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு அதை கொண்டுவந்து சாப்பிட சப்பாணி கட்டியமர்ந்ததும் அவன் கொண்டுபோய் வாழையிலையை குடுப்பான். பெரும்பாலும் வழையிலைதான் சாப்பிடுவார். வாழையிலை இல்லாத காலத்திலை அம்மம்மா ஒரு ஓலைப்பெட்டியை கவித்துப்போட்டு அதில் பெரிய பூவரசம் இலைகளை மெதுவாய் நெருப்பில் வாட்டி கோப்பை போல வட்ட வடிவமாய் அடுக்கி தருவார் அதிலை என்னதான் சொதி குளம்பு ஊத்தி சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடியும்வரை கொஞ்சம்கூட கீழே ஒழுகாது .

அது மட்டுமில்லை தாத்தா செருமினால் பிடரியை சொறிந்தால்.உச்சந்தலையை சொறிந்தால்.நெஞ்சை தடவினால் அதற்கெல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அது அம்மம்மாவிற்கு மட்டுமே புரியும். அதே நேரம் அம்மம்மாவின் ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தங்கள் தாத்தாவிற்கு மட்டுமே புரிந்தவை.பால் குடித்து முடித்துவிட்டதொரு குழந்தைக்கு முதுகில் தட்டி அது ஏவறை (ஏப்பம்) விட்டதும் ஆனந்தப்படும் ஒரு தாயைப்போல் தாத்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் தானது வயிற்றை தடவி ஒரு ஏவறை விட்டால்தான் அவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணலாம்.இரவில் சாப்பிட்டு முடிந்ததும் காலை நீட்டி சுவரில் சாய்ந்படி வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றியலை. பாக்கு. சுண்ணாம்பு புகையிலை. எல்லாம் அளவாய் சேர்த்து பாக்குஉரலில் போட்டு இடித்து அதை ஒரு முழு வெற்றிலையில் கொட்டி சுருட்டி அதனை இரண்டாகப்பிரித்து பாதியை தாத்தாவிடம் கொடுக்கச்சொல்லி அவனிடம் நீட்டிவிட்டு பாதியை அவர் வாயில் போட்டு மென்றுவிட்டு வாய்கொப்பளித்துவிட்டு படுக்கப் போவார்.

அவர்களின் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அனைத்தையும் சரிபாதியாய் பகிர்ந்து கொண்டதன் முழு அர்த்தமுமே அவர்கள் இரவில் பகிர்ந்து கொள்ளும் அந்த வெற்றிலையில் ததத்துவமாய் பொதிந்திருந்தது அப்பொழுது அவனிற்கு புரிந்திருக்கவில்லை.அப்படியானதொரு நாளில்தான் தாத்தா நோய்வாயப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது இறுதிக்கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு தாத்தா மயங்கிய நிலைக்கு போய்விட்டிருந்தார். அவன்தான் அவசரமாக ஓடிப்போய் நடராசா பரியாரியை அழைத்து வந்தான். வந்தவர் எல்லாம் பரிசோதித்துவிட்டு சொந்தபந்தங்களிற்கு சொல்லினுப்பிட்டு பால் ஊத்துறவை ஊத்துங்கோ எண்டு சொல்லிவிட்டு அவரின்ரை பங்கிற்கு அவரும் பால் ஊத்திவிட்டு போய்விட்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எண்டு எல்லாரும் வரிசையாய் நிண்டு பால் ஊத்தியாச்சு. ஆனால் இன்னமும் சேடம் இழுத்துக்கொண்டுதானிருந்தது. பலர் சொல்லியும் அவர் விரும்பினபடி விதம் விதமாய் சமைச்சு போட்ட கையாலை பால் ஊத்தமாட்டன் எண்டிட்டார் அம்மம்மா ..மண் பொன் எல்லாம் உரசி ஊத்தியாச்சு நேரம் போய்க்கொண்டேயிருந்தது சேடம் இழுத்துக்கொண்டேயிருந்தது. பிள்ளை உயிர் கிடந்து தவிக்கிது இப்பிடி தவிக்கவிடாதை அடம்பிடிக்காமல் பாலை ஊத்து எண்டு ஊர்பெருசுகள் எல்லாரும் வற்புறுத்தினால் பிறகுதான் விசும்பியபடி ஒரு கறண்டியில் பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினார் தாத்தாவின் மார்பு சில அங்குலம் கட்டிலில் இருந்து மேலே எழும்பி திரும்ப கீழே இறங்க மெல்லியதாய் ஒரு கொட்டாவியோடு அவரது உயிர் பிரிந்து போனது. வீடு முழுதும் ஒரே ஓலம்.
00000000000000000000

அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்.

அவனிற்காக கிளாசுகள் வாங்கித்தான் தேத்தண்ணி குடுக்கவேணும்.செத்த வீட்டிற்கு வந்ததும் வெறும் தேத்தண்ணியை குடிச்சபடி வெற்றிலையை போட்டு சப்பித் துப்பினபடியே இருப்பான் அவனின்ரை உதவியாளர் அல்லது அவனிட்டை தொழில் பழகிறவர்தான் இடைக்கிடை மேளத்தை அடிச்சபடி இருப்பினம்.கடைசி பொற்சுண்ணப்பாடல் முடிஞ்சு எல்லாரும் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் போதுதான். தேத்தண்ணி இருந்த இரத்தினன்ரை கிளாசிலை சாராயம் நிரம்பியிருக்கும். ஒரு சுருட்டை பற்றவைத்து விட்டு மேளத்தை தூக்குவான். அதுக்கு பிறகு சத்தத்தை வைச்சே இரத்தினன் அடிக்கத் தொங்கிட்டான் எண்டு எல்லாருக்கும் தெரியும்.
தாத்தா செத்த நேரம் அவரின்ரை ஆம்பிளை பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டிலை உடைனை வரமுடியாத நிலைமை அதலை அவன்தான் கொள்ளி வைக்கவேணும் தாத்தாவேறை தண்ணியடிச்சிட்டு டேய் நீ தானடா எனக்கு கொள்ளி வைக்கவேணும் எண்டு அடிக்கடி சொல்லுவார். கொள்ளி வைக்கிறதெண்டு முடிவாகிட்டுது அதுக்கு கட்டாயம் மொட்டையடிக்கவேணும். மொட்டையடிச்சால் பிறகு பள்ளிக்கூடத்திலை எல்லாரும் அவனை மொட்டைப் பாப்பா சட்டியுடைச்சான் மூண்டுபானை கூழ் குடிச்சான் எண்டு நக்கலடிப்பினம் அதாலை மொட்டையடிக்காமல் தலைமயிரை ஒட்ட வெட்டச்சொல்லி கேக்கலாமெண்டு தம்பிஜயாவை தேடிப்போனான். தம்பிஜயாவோ பின்வளவு பூவரசிலை தோல்வாரை கட்டிப்போட்டு சவரக்கத்தியை இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தான்.

தம்பி ஜயா மொட்டையடிக்காமல் கொஞ்சம் ஒட்டவெட்டினால் காணும்தானே??

தம்பி இது சடங்கு சம்பிரதாயம் இதுகளை மீறக்கூடாது எண்டபடி அவன் தலையில் தண்ணியை தெளித்து வழிக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனின்ரை சலுனிலை பலவருசமாய் வைத்து தம்பிஜயா தேய்த்தக்கொண்டிருந்த சீனாக்காரத்தை எடுத்து கீழைபோட்டு உடைத்துவிட்டான் அதற்கு எப்பிடியும் பழிவாங்கியே தீருவான் என்பது அவனிற்கு தெரியும்.மொட்டையடித் முடித்தவன் தம்பின்ரை மண்டை வடிவான உருண்டை மண்டையெண்டு பழிவாங்கிவிட்ட திருப்தியில் சொல்லிச் சிரித்தான்.

எல்லாரது அழுகுரல்களோடையும் வேலியை வெட்டி பிணம் வீதியில் இறங்கியது வேட்டி கட்டியபடி மொட்டைத்தலை தோளில் கொள்ளிக்குடத்துடன் அவனும் ஊர் ஆண்களும் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பட்டினத்தார் பாடலும் எவ்வொரு சந்தியிலும் இரத்தினனின் மேளச்சமாவுமாக சுடலைக்கு போய் சேர்ந்ததும் அடுக்கியிருந்த மரக்குற்றிகளில் பிணத்தை கிடத்தி பெட்டியை பிரித்தார்கள். அவனை பிணத்தை சுற்றி வலம்வரச்சொன்ன தம்பிஜயா கொடுவாக்கத்தியால் கொள்ளிக் குடத்தில் கொத்தி அதிலிருந்து வழிந்த நீரை பிணத்தை நோக்கி தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.கடைசியாய் தாத்தாவின் தலைமாட்டில் கொள்ளியை செருகியபோதுதான் அவனால் அடக்கமுடியாமல் அழுகை விம்மிவெடித்தது. அப்பிடியே திரும்பிப் பாக்காமல் வீட்டிற்கு போகச்சொன்னார்கள்.

எட்டுச்செலவு வரைக்கும் ஒவ்வொருநாளும் ஒப்பாரிபெண்டுகள் சொந்தக்காரரின் பட்டிணி பண்டம் எண்டு நாட்கள் போய் எட்டுச்செலவும் முடிந்து அடுத்நாள். டேய் செம்பிலை தண்ணியெடுத்து வாசல்லை வையடா எண்டு வழைமைபோல குசினிக்குள் இருந்து அம்மம்மா குரல் குடுத்தார். என்ன இது மனிசி பழக்கதோசத்திலை சொல்லுதோ எண்டு நினைக்க வாதாபியும் மெதுவாய் முனகியபடி வாலை ஆட்டியபடி நிலத்தில் கிடந்து புரண்டது.அவனிற்கு பயம் வரவே செம்பில் தண்ணியை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான். தாத்தாவின் படத்திற்கு முன்னாள் ஓலைப்பெட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு வாட்டிய பூவரசம் இலைகளை வட்டமாய் அடுக்கிக்கொண்டிருந்தார் அம்மம்மா....

4 Comments

மு.லிங்கம் @ 2:50 PM

பாராட்டுக்கள் சாத்திரியார், சோகம் கலந்த ரசனையுடன் உங்கள் கதையைப்படித்தேன்.
உண்மையான ஒரு குடும்ப நிசவாழ்க்கையின் விம்பத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்திவிட்டது உங்களது வசனநடை.
தொடரட்டும் உங்கள் பணி...

நன்றியுடன்
வல்வை மைந்தன்.

எஸ் சக்திவேல் @ 1:35 AM

அழுத்தமான எழுத்து. வாழ்த்துக்கள்.

sathiri @ 11:29 PM

கருத்திட்டவர்களிற்குநன்றிகள்

Unknown @ 3:47 AM

அடஇப்பிடியும் ஒரு பக்கம் உங்களுக்குள்ள இருக்கே.....அதுகள்தானே எங்கட சனத்துக்கு அதாவது கலாச்சாரம் மறந்த சனத்துக்கு மிகமிக தேவையான விசயங்கள்...