பூமாதேவி சிரிக்கிறாள்
4:36 AM, Posted by sathiri, No Comment
ஒரு பேப்பரில்
பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுக்காரனும் பெறவேண்டும் எண்டிறதுதான் என்ரை விருப்பம்
..அதாலை இனி விசயத்துக்கு வாறன். இந்த சுனாமி வந்தால்பிறகு உலகத்தின்ரை வழைமையான காலநிலையிலை பெரிய மாற்றங்கள். இவனுக்கென்ன விசரோ மாறி மாறி வாறதுக்கு பேர்தானே காலநிலையெண்டு வியாக்கியானம் கதைக்கக்கூடாது. காலநிலை மாறி மாறித்தான் வாறது ஆனால் ஒரே சீராய்மாறும். இப்ப எப்பிடியெண்டால் போன வருசம் கோடை தொடங்க முதலே ஜரோப்பா எல்லாம் கெழுத்திற வெய்யில். பூமாதேவி சூடாயிட்டாள் அதாலை அவளை குளிர வைக்கவேணுமெண்டு குட்டி குட்டி தாடி வைச்ச பெரிய பெரிய விஞ்ஞானிமாரெல்லாம் ஒரு இடத்திலை சேர்ந்து காலாட்டினபடி கதைச்சுப்பேசி ஒரு அறிக்கையும் விட்டவை. ஆனால் இந்தவருசம் பாத்தால்நான் ஜரோப்பாவிலை பூமாதேவி மட்டுமில்லை எங்களுக்கும் உச்சிகுளிர்ந்து தடிமன்வாற அளவுக்கு மாசி மாசக் கடைசி மட்டும் பனி கொட்டித் தள்ளிச்சிது.ஆனால் இப்ப ஆனி மாதம்.பிரான்சிலை நான் இருக்கிற நீஸ் எண்டிற கடற்கரை நகரத்திலை சாதாரணமாய் கோர வெய்யில் மண்டையை பிளக்கத்தொடங்கியிருக்கும். சனமெல்லாம் வெக்கை தாங்கமுடியாமல் கடலுக்குள்ளையும் கடற்கரையிலையும் படுத்திருக்க வேண்டிய காலம். ஆனால் இந்தவருசம் நிலைமை தலைகீழ்....;
இரண்டு கிழைமையாய் ஒரே மழையும் குளிருமாய் இருக்கு.என்ரை முதலாளியும் ஒவ்வொரு வருசமும் கோடை தொடங்க. கடற்கரையிலை உள்ள தன்ரை உணவுவிடுதியை திறந்து அதைக்கவனிக்க என்னை அனுப்பிறது வழக்கம். அப்பிடித்தான் இந்தவருசமும் வந்து கடையைத்திறந்து போட்டு காவலிருக்க வெறும் கடற்கரைகாத்துத்தான் கடையுக்கை வருகிது. ஒரு சனத்தையும் காணேல்லை. இண்டைக்கு காத்தாலை கொஞ்சம் வெய்யில் வாறமாதிரி இருந்திச்சிது சனமும் கொஞ்சம் கரையிலை ஊலாவத்தொங்கிச்சிது. இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு பழக்கம் கொஞ்சம் வெய்யிலைக்கண்டால் காணும் உடைனை கடற்கரையிலை ஓடியந்து உடம்பிலை கிறீமை பூசிப்போட்டு படுத்திடுவாங்கள். என்ணெண்டால் சண்பாத்தெடுத்து எங்கடை பிறவுண் கலருக்கு வாறதுக்காம்.வெள்ளையள் என்ரை நிறத்தை பாத்து நீ குடுத்து வைச்சனியெண்டு பெருமூச்சு விடுவாங்கள். அதுவும் வெள்ளைக்காரியள்....சீ....வேண்டாம
் அங்காலை எழுதமாட்டன் பிறகு பேப்பரிலை என்ரை கதை வந்தஉடைனையே வீட்டிலை என்ரைகதை கந்தலாயிடும்.அதாலை விசயத்துக்கு வாறன் இண்டைக்கும் இப்பிடித்தான் கொஞ்சமாவது வியாபாரம் நடக்குமெண்டு கடற்கரையிலை கதிரை மேசையெல்லாத்தையும் அடுக்கச் சொல்லிப்போட்டு அண்டைக்கு என்ன சாப்பாடு செய்யிறது எண்டு குசினிக்காரரோடை கதைச்சுக்கொண்டு நிக்க திடீரெண்டு பெரிய அலையள் அடிக்கதொடங்கிச்சிது.
அங்கை காவலுக்கு நிண்ட முதலுதவிப்படை சிவப்பு கொடியை ஏத்திப்போட்டு எல்லாரையும் கடற்கரையை விட்டு வெளியாலை வரச்சொல்லி விசிலடிச்சுக்கொண்டிருக்க. சனங்களும் அவசரமாய் துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லையெண்டு கடற்கரையை விட்டு ஓடத்தொடங்கிட்டினம். இந்தப் பழமொழி சிலநேரம் இந்த இடத்துக்கு பொருந்தாது ஏணெண்டால் எங்கடை கடற்கரையிலை ஒருதரும் ஒரு துண்டு துணியொண்டும் இல்லாமல்தான் படுத்துக்கிடக்கிறவை. ஆண்களோ பெண்களோ கீழை உள்ளாடை கட்டாயம் போட்டிருக்கவேணுமெண்டு சட்டம் போட்டிருக்கிறபடியாலை இடுப்பிலை றிபன் சைசிலை ஒரு துணிஏதாவது ஒட்டியிருப்பினம்.மேலை ஒண்டும் கிடையாது. என்னைப்பாத்து குடுத்து வைச்ச ஆளய்யா எண்டு உங்கடை மனசுக்குள்ளை மணியடிக்கிற சத்தம் கேக்கிது. ஆனால் எனக்கென்னவோ உதுகளை பாத்துப் பாத்து அலுத்தே போச்சுது. சரி அங்காலை அலையடிக்கிது இதுக்குள்ளை இது வேறையா???? நானும் அடுக்கின கதிரையளை தூக்கிறதுக்கிடையிலை ஒரு நாலைஞ்சு கதிரை அலை கடலிலை ஆடியசைஞ்சு போய்க்கொண்டிந்திச்சிது.
பிறகென்ன எல்லாத்தையும் அடிச்சு மூடிப்போட்டு மற்ற வேலைகாரரையும் வந்தவழியைப்பாத்து போகச்சொல்லிப்போட்டு. அடுத்ததாய் முதலாளிக்கு போனடிச்சு நிலைமையை சொல்லவேணுமெல்லோ ?? அதாலை என்ரை குரலையும் சோகச்செய்தி சொல்லுற நிலைமைக்கு கஸ்ரப்பட்டு மாத்தி ஒருமாதிரி அண்டையான் நிலைமையை ஒரு நேரடி வர்ணனையைபோல சொல்லி கடல் இழுத்துக்கொண்டு போன கதிரையளுக்கும் கண்ணீரஞ்சலி செலுத்திப்போட்டு. முதலாளியிட்டை வாங்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேணுமெல்லோ அதுதான் இதை எழுதிறன். இதை எழுதேக்குள்ளைதான் யோசிச்சன் என்னதான் விஞ்ஞாமெண்டிறாங்கள் கண்டு பிடிப்பு எண்டிறாங்கள் இயற்கையின் மாற்றத்தை கட்டுப்படுத்த இன்னமும் மனிசராலை முடியேல்லை. பயந்து ஓடத்தான் முடியிது. இப்பிடித்தான் நான் படிச்சுக்கொண்டிருந்த காலத்திலை ஒரு சம்பவம். 1979 ம் ஆண்டு ஸ்கைலாப் எண்டொரு செயலிழந்த விண்வெளிக்கலமெண்டு பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அதுவும் இலங்கை இல்லாட்டி இந்தியாவிலைதான் விழப்போகுதெண்டும் விழுகிற இடத்திலை பெரிய பாதிப்பு வருமெண்டும் செய்தியளும் வெளியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த நேரம் இந்த விண்கலங்கள் இல்லாட்டி இதுபற்றின விஞ்ஞான அறிவுகள் எஙகடை சனத்திட்டை பெரியளவிலை இருக்காத காலகட்டம்;. அப்ப எங்கடை ஊரிலை உள்ளவையெல்லாம் ஸ்கைலாப் விழுந்தால் உலகம் அழிஞ்சிடுமாம் எண்டும் சிலபேர்.. இல்லை உலகத்திலை பாதி அழிஞ்சிடுமாம் எண்டும். சிலபேர் சிறீலங்காவும் இந்தியாவும்தான் அழியுமாம் எண்டும் ஆளாளுக்கு பயப்பிடுறமாதிரி கதை சொல்லிக் கொண்டு திரிஞ்சாங்கள். ஆனால் அதுபற்றின செய்தியளும் தொடர்ச்சியாய் ஊடகங்களிலை வந்துகொண்டிருந்தாலும் வதந்திகளைத்தான் சனம் அதிகமாய் நம்பிச்சினம். சரி உண்மை என்னவெண்டு படிப்பிக்கிற விஞ்ஞான வாத்தியாரிட்டை விளக்கம் கேட்டம். அது ஒரு 79 தொன் நிறையுள்ள விண்கலம். விழுற இடத்திலை தண்ணிவாற அளவு பெரிய பள்ளம் வரலாம் அது விழுற இடத்தைபொறுத்து சேதம் இருக்கும். அதேநேரம் அதிலை இருந்து ஏதாவது இரசாயனக் கதிர்வீச்சுகள் வெளியாலை வந்தால் அது பாதிக்கும் எண்டு விளக்கமும் தந்தார். எங்களுக்கு அந்த நேரம் நெல்லுக்கதிர் மட்டும்தான் தெரியும் இரசாயனக் கதிருகளைப்பற்றி ஒண்டும் தெரியாது.
ஆனால் விளக்கம் சொன்ன வாத்தியார் விஞ்ஞானத்தோடை சமயமும் படிப்பிக்கிறவர் அதலை ஸ்கைலாப் எங்கடை ஊருக்குள்ளை விழக்கூடாதெண்டு பிள்ளையாருக்கு ஒரு நேத்தியும் வையுங்கோடா பெடியள் எண்டிட்டு போட்டார்.இந்தப் பரபரப்பிலை ஒருநாள் " இன்றிரவு ஸ்கைலாப் பூமியை வந்தடையும் ஆனால் அதனை இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் விழ வைக்க முடியுமென்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் " என்று இலங்கை வானொலி அறிவிச்சிது. இந்த நாசமாய் போன விஞ்ஞானியளாலைதானே இவ்வளவு பிரச்சனையெண்டு நினைச்சபடி பிள்ளையாருக்கு நேத்தியும் வைச்சிட்டு தொடர்ச்சியாய் இலங்கை வானெலியிலை ஸ்கைலாப் பற்றி அடிக்கடி போய்க்கொண்டிருந்த விசேட செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தன்.அண்டை༢r />??்கு ஊர்சனங்களும் ஏதோ முனியடிச்ச மாதிரி முழுசிக் கொண்டுதான் திரிஞ்சவை.(முனியடிச்சு நீ பாத்திருக்கிறியா எண்டு கேக்கக்கூடாது) அண்டிரவு ஊர்ச்சனங்கள் எல்லாருமே றேடியோக்கு பக்கத்திலை இருந்து ஸ்கைலாப் விழுகிற செய்தியளை கேட்டுக் கெண்டிருக்க ஒரு எட்டுமணியளவிலை ஊருக்குள்ளை திடீரெண்டு பெரிசாய் நெருப்பு பத்தி எரியத் தொங்கிட்டுது.
அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஜயோ ஸ்கைலாப் விழுந்திட்டுது அதுவும் எங்கடை ஊருக்குள்ளை விழுந்திட்டு ஊர் அழியப்போகுது பிள்ளையாரே காப்பாத்து எண்டு அலறினபடி வீடுகளை விட்டு ஓடத்தொடங்க. நானும் பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நாலைஞ்சு தேவாரத்தை கலந்து றீ மிக்ஸ் பண்ணி சொன்னபடி நிக்க றோட்டிலை சிலபேர் நெருப்பு எங்கடை ஊரிலை இருந்த பிரபல அரசியல் வாதியின்ரை வீட்டு காணிக்கள்ளை இருந்துதான் வருகிது ஸ்கைலாப் அவரின்ரை காணிக்குள்ளைதான் விழுந்திட்டுது எண்டு சொல்லிச்சினம்.இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்க வெளியாலை இருந்து வீட்டை ஓடியந்த அண்ணன் சொன்னான் ஒருத்தரும்பயப்பிடாதையுங்கோ அது ஸ்லாப் இல்லை வேறை ஏதோ எரியிது போய் றேடியோவை கேழுங்கோ ஸ்கைலாப் இன்னும் விழேல்லை எண்டு சொல்லத்தான் எங்கடை வீட்டுக்காரர் எல்லாரும் திரும்ப வீட்டுக்குள்ளை ஓடிவந்து றேடியோவை கேட்டால் ஸ்கைலாப் இன்னமும் இந்து சமூத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.கொஞ்ச நேரத்தாலைதான் விசயம் தெரிஞ்சது.
79 களிலை ஆயுதப் போராட்டம் தொடங்கியிருந்த காலம் ஊரிலை பொலிஸ்காரர் இல்லாட்டி இலங்கையரசாங்கத்துக்கு வால்பிடிக்கிறவைக்கு இளைஞர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியிருந்த நேரம். அதுமாதிரித்தான் எங்கடை ஊரிலை அந்த அரசியல்வாதியும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின்ரை முக்கியமான ஒருத்தர். அவருக்கு ஏதாவது செய்யவேணும் எண்டு நினைச்ச என்ரை அண்ணணும் அவரின்ரை சினேதங்களும் சேந்து ஸ்கைலாப் விழுறதை சாட்டாய் வைச்சு அவரின்ரை பெரிய வளவுக்கு வேலியடைக்க பறிச்சு வைச்சிருந்த பனையோலையளை கொழுத்தியிருக்கினம். அது எங்கடை ஊர்காரரையும் பயப்பிடுத்தி என்னையும் தேவாரத்தை றீ மிக்ஸ் பண்ண வைச்சிட்டுது. கடற்கரையிலை தொடங்கி ஸ்கைலாப்பிலை வந்து காவேலையை கொழுத்தி கதையை முடிச்சிட்டான் . பாவி முதல்லை உன்ரை கதையை முடிக்கவேணும் எண்டு திட்டினபடியே இருங்கள் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன் நன்றி.
அன்புள்ள கறுப்பி நாயே
8:18 AM, Posted by sathiri, 2 Comments

தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி.. நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது.
ஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத்து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.
அவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா "எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை.
ஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து " நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரியிறீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி "இல்லை" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ ?? எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.
அவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டாரெண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.
கறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.
அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து புலிகளுக்கு ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தான் . அவன் ஒருநாள்.. அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பார்த்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க. இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.
சிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு பக்கத்திலை வைச்சு சுட்டு. அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .
9:30 AM, Posted by sathiri, One Comment

பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??
இந்தவார ஒரு பேப்பரிற்காக
தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர்.இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற்கு மேலாக சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறையில் வாடுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு போராளிக்கலைஞன்.
இவரது கவிதைத் தொகுப்பே இந்த புத்தகமாகும்.ஆயுள்தண்டனை பெற்று தனது காலத்தினை சிறையிலேயே கழித்தபடி வாழ் நாளில் விடுதலையாவேனா அல்லது தன்வாழ்வு சிறையிலேயே முடிந்து போகுமா என்கிற கேள்விகளிற்கு விடை தெரியாத பொழுதுகளிலும் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்து அதனை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து அதில் வருகின்ற பணத்தினை ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர்களின் எதிர் காலத்திற்கு உதவியாக்குவதே அவரது நோக்கமாகும். இதனைப் படிப்பவர்கள் அனைவரிற்கும் அந்தக் கல்லடி றொபேட் என்பரை பற்றியும் அவரது உயரிய நோக்கமும் புரிந்திருக்கும்.
இந்தப் புத்தகத்தினை வெளியீடு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தில் முயற்சிகளை சிலர் எடுத்திருந்த போதும் இதே சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பினைச் சேர்ந்த சிலர் முட்டுக் கட்டைகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தனால் இந்தப் புத்தகம் கால தாமதமாகி கடைசியாய் சுவிஸ் நாட்டில் வேறொரு அமைப்பினரால் வெளியீடு செய்யப்பட்டது.அதே புத்தகத்திற்குத்தான் புத்தகத்தினை வெளியிட முட்டுக்கட்டை போட்ட அமைப்பினரே ஜெர்மனியில் அறிமுக நிகழ்வினை செய்திருந்திருந்தனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையில் வேறு நாட்டிற்கு போகவேண்டி இருந்ததால் உபதலைவரான திருமதி விக்னா பாக்கியநாதன்.
இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி ). இவர் கலைவிளக்கு என்கிற பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமல்ல ஜெர்மனியில் தமிழாலயம் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகளிற்காக இலக்கணப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தக வெளியீட்டு நாளன்று வேறு இரண்டு புத்தகங்களின்செருகல்களுடன் மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவாக நடந்தது.சரி இனித்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு சம்பந்தமான விடயம்.இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் உரைக்களம் அதாவது பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தப் பட்டி மன்றத்தின் தலைப்பு பெண்களின் சாதனைகள் மதிக்கப்படுகின்றதா அல்லது மழுங்கடிக்கப்படகின்றதா என்பதே.இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியும் அதனை ஒழுங்கு படுத்தியும் இருந்தவர் அந்த அமைப்பின் உறுப்பினரும் அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளருமான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் என்பவர். இவரது பட்டங்கள்( ஊடகவியலாளர் மற்றும் கவிதாஞானவரிதிஎன்பன.) ஊடகவியலாளர் என்பதெல்லாம் பட்டமா?? இவர்களின் பட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தக் கட்டுரைக்கு எதற்காக என்று நீங்கள் யோசிக்கலாம் கட்டுரையின் இறுதியில் அது உங்களிற்கு புரியும்.
இந்தப்பட்டிமன்றத்தின் இறுதியில் கருத்துக்கூறிய பட்டிமன்றத்தின் நடுவரான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே மாமனிதர் என்கிற கெளரவத்தினை வழங்கும் பொழுது மனிதர் என்று ஆண்களை கெளரவிக்குமுகமாகவே வழங்குகிறாராரே தவிர மாமனிசி என்று பெண்கள்சார்பாக கெளரவிக்கப்படவிலை என்று கருத்தினைக்கூறினார் அப்படியானால் பெண்கள் சாதனைகளை எமது தேசியத் தலைவர் மழுங்கடிக்கின்றார் என்று கோசல்யா சொர்ணலிங்கம் சொல்கின்றாரா??என்று பார்வையாளர் வரிசையிலிருந்த பலர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சிலர் தலையிலடித்துக் கொண்டனர்.
அந்த ஏற்பாட்டினைச் செய்த அமைப்பினர் பலரும் மெளனமாகவே இருந்தது மட்டுமல்ல அந்த நிகழ்விற்கு தமைதாங்கிய திருமதி விக்னா பாக்கிய நாதனும் எதுவும் பேசாமல் மெளனமாகிய வேளையில் பிரான்சில் இருந்து அந்த நிகழ்விற்கு சென்றிருந்த கி.பி .அரவிந்தன் ஒலிவாங்கியை வாங்கி மாமனிதன் ஆண்பால் மாமனிசி பெண்பால் மாமனிதர் பலர்பால் என்று குழந்தைகளிற்கு பால் விளக்கம் குடுப்பதைப் போல 5 ம் வகுப்பு இலக்கணத்தை விளங்கப்படுத்திய பின்னனரும்.குழந்தையைப்போலவே தான் சொன்து சரியென்று கெளசல்யா சொர்ணலிங்கம் அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.
அது மட்டுமல்ல நடந்த தவறிற்காக சம்பந்தப் பட்டவரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்போ வருத்தமோ கவலையையோ தெரிவிக்கவில்லை. அப்பொழுதான் புரிந்தது அவர்களிற்கு இலக்கணப்பிழை இல்லை தனைக்கனப்பிழையென்று. முக்கியமானதொரு நிகழ்வில் தங்களை தமிழ் சமுதாயத்தின் முக்கிய நபர்களாகவும் தமிழ் சமூகத்தின் வழி காட்டிகளாகவும் புத்திமான்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்டிருந்த இவர்களது கேலிக்கூத்துக்களை பட்டிமன்றம் என்கிற பெயரில் குப்பைத்தொட்டி மன்றமாக்கி மேடையேற்றி முடிந்தபின்னர். அந்த நிகழ்வுபற்றிய இந்தக் கட்டுரையை எழுத நினைத்து அந்த அமைப்பின்தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையை கழித்து வீடு திரும்பும் வரை காத்திருந்தேன் ஏனெனில் முன்னரும் நான் இந்த சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து ஒரு கட்டுரையை ஒரு பேப்பரில்எழுதியிருந்தேன்.அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தங்கள் அமைப்பினைபற்றி எழுதமுன்னர் தங்கள் பக்கத்து கருத்தக்களையும் கேட்டிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினரால் என்மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.
எனவேதான் அன் தலைவர் வீடு திரும்பியதும் அவரிடம் இந்த நிகழ்வில் நடந்த குளறுபடிகளிற்கு என்ன விளக்கம் அல்லது நடந்த சம்பவத்திற்கு நீங்கள் உங்கள் அமைப்பு சார்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். தங்கள் அமைப்பு ஊறுப்பினர்களை அழைத்து கலந்தாலோசித்து சொல்வதாக சொன்னவர். நான் மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட பொழுது தான் அனைவரையும் அழைத்ததாகவும் ஆனால்அந்த நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள்யாரும் வரவில்லையென தனது இயலாமையினை தெரிவித்தார்.அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நீங்கள் எவ்வித நடவடிக்கையோ அல்லது உங்கள் அமைப்பு சார்பில் ஏதாவது அறிக்கையே விடாது மெளனமாக இருப்பதால் பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரார் என்கிற கூற்றினை உங்கள் அமைப்பு எற்றுக்கொள்கிறதா என்று கேட்டேன்.அதற்கு அவரின் தடுமாறியபடி மழுப்பலாக சம்பந்தமில்லாதவிடயங்களையே பேசினார்.
சரி அடுத்த ஒரு பேப்பரிற்கு இது பற்றிய கட்டுரையை எழுதுகின்றேன் அதற்கு முன்னர் ஏதாவது நடவடிக்கையெடுத்தால் அல்லது ஏதாவது சொல்ல விரும்பினால் எனக்கு அனுப்பிவையுங்கள் என்றதும். தங்கள் அமைப்பு சார்பாக ஒரு அறிக்கையை வேறொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்பி வைப்பார் என்றார். நானும் மீண்டும் முருங்கை ஏறிய வேதாளம் போல அவர் சொன்னவரிற்கு தொலைபேசியடித்து விபரம் கேட்கவும் அவர் இன்னொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்புவார் என்றார்.இப்படியே ஒருவர் மற்றவரின் பெயரை சொல்ல நானும் அவர்களிற்கெல்லாம் மாறி மாறி தொலைபேசியடித்து விபரம் கேட்டுஅதற்கு மேலும் என்னால் முருங்கை ஏறமுடியவில்லை..அதற்கு மேல் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து அந்த ஒன்றியம் சார்பில் ஒருவர் எனக்கு தொலைபேசியடித்து அன்று நிகழ்வில் நடந்த பட்டிமன்றத்திற்கு கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்தான் முழுப்பொறுப்பும் தங்கள் அமைப்பிற்கும் அதற்கும்எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே அந்த சம்பவத்திற்கு பொறுப்பை எற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவரை அந்த அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் கடிதம் அனுப்புகின்றோம் என்றார்.ஒருவர் தேவைப்படும்பொழுது மட்டும் பன்னீர் தெளித்து பட்டாடை போர்த்தி படத்திற்கு முகம்காட்டி மகிழும் இவர்கள்.ஏதாவது பிரச்சனையென்று வரும் பொழுது மட்டும் அவரிற்கே மஞ்சள் தண்ணி தெளித்து ஒரு மாலையைப்போட்டு பலியாடாக்கி விட்டு மற்றவர்கள் தப்பித்து விடுவது ஒரு சுயநலமற்ற பொதுநோக்குடைய ஒரு அமைப்பிற்கு சிறப்பாகாது.இனிவரும் காலங்களில் இவர்கள் வேண்டுமானால் ஏதாவது கவிதை கதைப்புத்கங்கள் வெளியிடுவது பட்டங்கள் சூட்டி மகிழ்வது பொன்னாடை போர்த்திப்படம் எடுத்துக் கொள்வது என்று அவர்கள் பாட்டிற்கு எதையாவது செய்யட்டும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் எங்கள்அமைப்பு ஈழத்தமிழர் போராட்ட அமைப்பின் உபஅமைப்பு என்று புலுடா விட்டபடி ஈழப்போராத்தையும் தமிழர் தேசியத்தையும் நீங்கள்உங்கள் வசதிக்கேற்ப மற்றவர் காதில் வைத்து அழகு பார்த்து மகிழ அது பூ அல்ல. பல்லாயிரம் மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தில் வளர்த்த நெருப்பு அதில் உங்கள் மேதாவித்தனங்களை காட்டி தயவு செய்து குளிர் காய நினைக்காதீர்கள்கள்.
செருப்புப் பூசை
12:55 PM, Posted by sathiri, 2 Comments

செருப்புப் பூசை
அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்தில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.
வயலும் வைரவரும்
2:23 PM, Posted by sathiri, No Comment
இந்தவார ஒரு பேப்பரில்
வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான்.
மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன். எங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை.பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம்.பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார்.அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும்.பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை அதக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இருள்அழகனும்தான்.ஆனால் ஊரிலை அந்தகாலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர் அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.
பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர்.நாய் தானே அவரின்ரை வாகனம்.எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும் தான் வைரவருக்கு துணை.யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுத்திருக்குங்கள்.நாங்களும?? வயலிலை விதை பொறுக்க வாற பறைவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிட்டிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம். அதுமட்டுமில்லை அதுதான் வைரவர் கோயில் மணியும் 2 இன்1 எண்டு பயன்படும். மாலைநேரத்திலை அந்தக்கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான்.ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது.
வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது.இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமுகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர் அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போக மாட்டார்.அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்கு மட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார்.ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை. ஒரு அறுவடைக்காலம் சிலர் வைரவருக்கு பொங்கிபடைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து(சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யப்போறன் பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அனியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது கள்ளபீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது.
ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப் போட்டு மயங்கிவிழுந்திட்டார். சுத்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக்கேக்கிற அதே வசனமான ஆ...நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது. எண்டு கேட்டார்.அதுவரை காலமும் அவரை டேய் எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் அய்யா உங்களிலை வைரவர் வந்தவர் எண்டு சொல்லவும். அவர் அப்பிடியா எண்டு கேட்டிட்டு வைரவரைப்பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார்.அதுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து. மழைவந்தால் மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத்தொடங்கிட்டார்.
அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே. உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார்.அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப்பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம் அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.
ஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு. வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம்.அவருக்கு நாங்கள் தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது.தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன் என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார். அடுத்த வெள்ளிக்கிழைமையும் வழைமை போல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர்அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர். சனங்களின் தொல்லை குறையவே.வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்தக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.
சுது மாத்தையாவும் சுடுபாணும்
12:57 PM, Posted by sathiri, No Comment
பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்கிற விலையை விட இரண்டு மடங்கு கூடுறது வழைமையான விசயம். சிறீமாவின்ரை ஆட்சிக்காலத்திலை அவாவின்ரை பொருளாதாரக் கொள்கையாலை ஏற்பட்ட பட்டினி யாலை சனங்கள் பாணுக்கு நீண்ட வரிசையிலை காவல் நிண்டதை பலர் கதை கதையாய் சொல்லுவினம்.அது மட்டுமல்ல இந்த பாணிற்கு 83 கலவரத்தின்பின்னாலும் சாதக பாதகதான பல விசயங்கள் இருக்கவே செய்தது. எண்பதுகளிற்கு முன்னர் யாழ் குடாவில் பெரும்பாலும் ஏன் அனைத்து பேக்றிகளும் சிங்களவர்களவரே நடத்தினவை.
யாராவது ஒண்டிரண்டு பேக்கறி தமிழருக்கு சொந்தமாய் இருந்தாலும் அதில் பாண் போடுகிறவர் சிங்களவராகவே இருப்பார்.பாண் போடுகிறவரை பழைய படங்களில் வில்லனை பாஸ் எண்டு கூப்பிடுறதை போல இவரையும் (பாண்) பாஸ் எண்டுதான் சொல்லுறனாங்கள். இப்பிடி பாண் போடுகிற விசயம் சிங்களவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அல்லது பாண் எண்டால் சிங்களவனுக்கு மட்டும்தான் போடத்தெரியும் எண்டிற ஒரு நினைப்பு எங்களிட்டை இருந்தது. ஆனால் 83 ம் ஆண்டு கலவரத்தோடை இந்த நிலைமையும் தலைகீழாய் மாறிப்போச்சுது. தமிழர் கொழும்பிலை இருந்து அடிவாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்க் யாழ்ப்பாணத்திலை இருந்த சிங்களவர் பேக்கறி நடத்தினவை கனபேர் தாங்களாகவே தங்கடை ஊருகளுக்கு போகத்தொங்கிச்சினம்.
அது மட்டுமில்லை ஊர் பெடியளும் பெரும்பாலும் புளொட் இயக்கம் எல்லா பேக்கறியளையும் கொளுத்த தொடங்கிட்டினம்.பேக்கறி எரிஞ்சதுக்கு அது மட்டும் காணரமில்லை சில தமிழ் பேக்கறிக்காரரும் தங்கடை வியாபாரம் நல்லா நடக்கவேணுமெண்டு பெடியளை உருப்பேத்திவிட்டும் சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.,இதிலை ஒரு விசயத்தை கட்டாயம் சொல்லவேணும். புளொட் எண்ட மாபெரும் இயக்கம் தொடங்கினதுக்கு எனக்கு தெரிஞ்சு மூண்டு நல்ல காரியம் செய்தவை ஒண்டு கோட்டை ஆமி இருக்கேக்கை அவங்கள் அடிக்கிற செல்லிலை இருந்து சனம் பாதுகாப்பாய் பதுங்க யாழ்ப்பாணம் வைத்திய சலைக்கு முன்னாலை மண்மூட்டை அடுக்கினது.
இரண்டாவது முனிசிபாலிட்டிக்கை (நகரசபை)இருந்த தாரை எடுத்து உருக்கி ஊரிலை கிடங்கு பள்ளமாயிருந்த றோட்டை திருத்தினது.மூண்டாவது சிங்களவன் எல்லாரையும் கலைச்சுப்போட்டு பேக்கறி நடத்தினது.இதுகளோடை அவையின்ரை போராட்டத்துக்கான தேவை முடிஞ்சுபோதச்சுது.சரி இனி திரும்ப கதைக்கு வாறன். அந்த நேரம் 83 பிரச்னைக்குப்பிறகும் தொடந்து சில சிங்களவர் யாழிலை இருந்தவை . இவையள் தமிழரோடை நல்லவிதமாய் பழகியதாலையும் எண்பது வீதம் தமிழராகவே மாறிவிட்டிருந்தனர் எண்டும் சொல்லலாம்.அப்பிடி இருந்தவையிலை எனக்குதெரிந்த சிலபேர் ஒருத்தர் எங்டை ஊரிலை பேக்கறி வைச்சிருந்த சுது மாத்தையாவும் ஜஸ்பழம் வித்த லொக்கு பண்டாவும் .இவையளின்ரை உண்மையான பெயர் எனக்கு மட்டுமில்லை ஊரிலை ஒருதருக்குமே தெரியாது எல்லாருமே அப்பிடி கூப்பிடுறதாலை அதுதான் அவையின்ரை பெயர். அடுத்ததாய் ஏழாலையிலை பேக்கறி வைச்சிருந்த கொத்தளாவளை .இவரை ஏழாலை குப்பிளான் புன்னாலைக் கட்டுவன் வசாவிளான் ஆக்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .மானிப்பாய் சாத்திரிக்கும் ஏழாலை கொத்தளாவளைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதையுங்கோ அது அய்யருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.. சுது மாத்தையா நல்ல உழைப்பாளி அவரேதான் பாண் போடுவார் அவரேதான் காலையிலை சைக்கிளின் பின்னால் பாண் அடுக்கிய ஒரு பெரிய தேயிலைப் பெட்டியை கட்டி கடையள் வீடுகளுக்கும் பாண் கொண்டு போய் குடுப்பார். அவர்தான் எங்கடை வீட்டுக்கும் பாண் போடுறவர்.
மழைக்காலம் எண்டால் அனேகமான வீடுகளிலை ஈரவிறகை வைச்சு ஊதாமல் பாண்தான் காலைமைச் சாப்பாடு எங்கடை வீட்டிலையும் பாணை வாங்கி சின்னதுண்டாய் வெட்டி சிரமப்படாமல். அம்மா ஒரு பாணை பாதியாய் பிச்சு ஆளுக்கு அரைறாத்தல் பாணும் அரைச்ச சம்பலும் தருவார்.பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.சிலநேரம் அரை றாத்தல் பாண்சாப்பிட்டாலும் எங்களுக்கு பசி அடங்காமல் நாங்கள் அடிபடுறதை பாத்து அம்மா கையிலை காசை தந்து பள்ளிக்கூடம் போற வழியிலை எதையாவது வாங்கி சாப்பிடுங்கோ எண்டுசொல்லி கலைச்சு விடுவா.நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்
.இறாத்தல் அழைவை போய் கிலோகிறாம் அளவை வந்தபின்னர் எல்லாப்பொருட்களையுமே நாங்கள் கிலோவிலை அழைக்கத்தொடங்கிய பின்னரும். பாணை மட்டும் இன்னமும் பேச்சுவழக்கில் இன்றுவரை இறாத்தல் எண்டுதான் சொல்லுறம். பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.
பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத்தேர்தல்களில்
3:39 PM, Posted by sathiri, No Comment
Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம் (வலதுசாரிக்கட்சி)
Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடதுசாரி)
Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் (இடதுசாரி)
Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம் (இடதுசாரி)
Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா (இடதுசாரி)
Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு (இடதுசாரி) இவர் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் மேலதிக தகவல்கள் தொடரும்
பிரான்ஸ் நகரசபைத் தேர்தல்களில் நம்மவவர்கள்
8:11 AM, Posted by sathiri, No Comment
1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமான வீடுகளில்(அறைகளில்) வாழந்;ந்தார்கள் பின்னர் அவர்கள் அரசியல் அகதி அந்தஸ்தை பெற்று தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கே உள்ள முயற்சியும், சிக்கனமும் சேர தமக்கென வியாபார தொகுதியை லாசப்பலில் ஏற்படுத்திக்கொண்டனர் பாரிஸில் நெருக்கமான வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் வசதிகருதி புறநகர்பகுதிகளில் குடியேறிக்கொண்டனர். புறநகர்பகுதிகளில் குடியேறிக் கொண்ட தமிழர்கள் தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள பல சமூகஅமைப்புகளை உருவாக்கி சமூகமட்டத்திலும், கிராமமட்டத்திலும் பலமுன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு தம்மை ஒரு அசைந்துகொணடிருக்கும் இனமாகவும் மற்றைய இனத்தினரிடையே அடையாளப்படுத்திக் கொண்டனர் .
இன்று எமது இளம் தலைமுறையினர் பிரஞ்சுத்தமிழர்களாக வாழத் தொடங்கிவிட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வாழப்போகியார்கள். இவர்களின் கல்வியும் உழைப்பும் பொருளாதார பலத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கான பாதுகாப்பு அரசியல்பலத்தில்தான தங்கியுள்ளது அதற்கான அடிப்டைஅரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தும் முகமாக 2008 இல் நடைபெறும் மாநகரபபை தேர்தலில் எம் இனத்தவர்கள் வேட்பாளர்களாக 14 நகரசபைகளில் 16 பிரதிநிதிகள் இணைத்துக்கொண்டுள்ளார்கள். இவர்களை மாநகரசபைளில் பிரதிநிதிகளாக்கி எமக்கான அரசியல் களத்தை நாம்திறந்து விடல் வேண்டும். இதற்கான ஒழுங்குகளை 61 தமிழ்ச்சங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டமைப்பான பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற அமைப்பு செய்துவருகின்றது.
வேட்பாளர்கள் விபரம்
(Argenteuil)(95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்
(Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம்
Goussainville(95190) குசான்வீல். செல்வி ரம்ஜா ஜெயமோகன்
Villiers Le Bel(95400) வில்லியே லூபெல் திருமதி தங்கா பாஸ்கரன்
Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடது)
Garges les Gonesses(;95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்
La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன்
செல்வி சரணியா
செல்வி மதுரா
Aulnay Sous Bois(93600) ஒலுனே சூ புவா செல்வி தட்சாயினி தேவராஜ
Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்
Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம்
Paris 8°(75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்
Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா
Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு
(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி
கணக்குப் புத்தகமும் காதலும்
8:14 AM, Posted by sathiri, No Comment
கணக்குப் புத்தகமும் காதலும்
இந்தவார ஒரு பேப்பரில்
காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக்கிற காலத்திலை அனேகமாக எல்லாப்பாடத்திலையும் நல்ல புள்ளிகள் எடுக்கிறனான். அனால் இந்தக்க கணக்கு பாடம் மட்டும் ஏனோ தெரியாது எனக்கு மண்டையிலை ஏற சரியாய் கஸ்ரப்பட்டுது. கணக்கு கொப்பியை எடுத்தாலே உடைனை நித்திரை தூக்கியெறியும் . இல்லாட்டி ஏதாவது யோசினையள் வந்து குளப்பும்.முந்தி இலவசக்கல்வித்திட்டம் வாறதுக்கு முதல் படிக்கிற புத்தகங்கள் நாங்கள்தான் விலைக்கு வாங்கவேணும். ஆண்டுத் தொடக்கத்திலை அந்தக் காலத்திலை புத்தகக் கடையளுக்கும் நல்ல வியாபாரம்.
புது வகுப்புக்கான புத்தகங்களை புத்தகக் கடையிலை வாங்கிறதை விட எங்களுக்கு முதல் வகுப்பிலை படிச்சு பாசாகிபோறவையிட்டை வாங்கினால் பாதி விலைக்கு வாங்கலாம்.புத்தகத்தை அடுத்தவருசம் விக்கிறதுக்காகவே புத்தகங்களிற்கு பாதுகாப்பாய் வாடிவாய் உறைபோட்டு பிறகு அதுக்கும் மேலை மழைபெய்தாலோ கைவியர்வை பட்டு புத்தகம் பழுதாகாமல் இருக்க பொலித்தீன் பேப்பராலை இன்னொரு உறை போட்டு பாதுகாப்பாய்தான் பாவிப்பினம். முந்தியெல்லாம் இந்த புத்தக உறையை கண்டபடி எங்களுக்கு பிடிச்ச சினிமா நடிகை நடிகர் மாரின்ரை படங்கள் வாறமாதிரியோ அல்லது வேறை வித விதமான படங்கள் உள்ள பேப்பருகளாலைஉறை போட இயலாது. அதுக்கும் அடிவிழும்.
பிறவுண் பேப்பர் எண்டொரு பழுப்புநிற பேப்பர் கடையிலை வாங்கி அதிலை உறை போடலாம். அது வாங்க வசதி குறைந்தவை சீமெந்து பேப்பர்தான்.ஆனால் எங்கடை வீட்டிலை ஒரு வகுப்பிற்கு புத்தகம் வாங்கினால் ஆறுவருசத்துக்கு அந்தவகுப்பு புத்தகம் வாங்கத்தேவையில்லை. ஏணெண்டால். ஒவ்வொரு வருச வித்தியாசத்திலை நாங்கள் ஆறுசகோதரங்கள். மூத்த அண்ணனுக்கு மட்டும் புதிதாய் புத்தகங்கள் வாங்கினால் சரி. பிறகு வரிசையாய் ஒவ்வொருத்தருன்ரை கையிலை மாறி ஆறாவதாய் கடைசித்தம்பியும் படிச்சு முடிய அந்தப்புத்தகம். மேலை கீழையெண்டு மூலைப்பக்கத்தாலை சுருண்டும் மட்டை பலதரம் சோறு போட்டு ஒட்டியும் விளக்கு வெளிச்சத்துக்கு வந்து அந்தப் புத்தகங்களில் விழுந்து உயிர் விட்ட விட்டில்பூச்சிகளின் அடையாளங்கள் .
மயிலிறகை தலையிலை இருக்கிற எண்ணெயிலை தடவி புத்தகத்துக்குள்ளை வைச்சால் அது குட்டிபோடும் எண்டு யாரோ ஒரு லூசுப்பயல் சொன்னதை நம்பி அப்பிடியே செய்து எண்ணெய் ஊறின பக்கங்கள்..அடிவாங்கி அழுதழுது படித்தபோது எங்கள் கண்ணீர் மற்றது மூக்குநீர் எல்லாம் விழுந்து பலஎழுத்துக்கள் அழிந்துபோன பல பக்கங்கள் என்று அரைவிலைக்கில்லை இலவசமாவே ஒருத்தருக்கும் குடுக்க இயலாத நிலைமைக்கு வந்திடும்.சீனிச்சரை சுத்த கடைக்காரன்கூட வாங்கமாட்டான். ஆனால் என்னட்டை வாற கணக்குப் புத்தகம் மட்டும் அப்பிடியே எந்தவித பாதிப்பும் இல்லாமல். என்னட்டை எப்பிடி வந்ததோ அதே போலை அடுத்த வருசம் தங்கையிட்டை குடுத்திடுவன்.
அந்தளவுக்கு எனக்கு கணக்கிலை விருப்பம். என்னடா காதலைப்பற்றி ஏதாவது எழுதுவான் வாசிப்பம் எண்டு பாத்தால் கணக்கு புத்தகத்தை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறான் என்டு உங்கள் கண்கள் கோபத்திலை சிவக்கிறது எனக்கு தெரியிது. சரி இனி காதலுக்கு வாறன்.அததான் என்ரை முதல் காதல் . ஆனால் அது காதலா எண்ட கேள்விக்கு இப்பவும் எனக்கு விடை தெரியாது. நான் பத்தாம் வகுப்புப்பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த இறுதிக்காலம் காலம்.மானிப்பாய் இந்துவாலை வெளியேறி வட்டு யாழ்கல்லூரியாலை ஒடியந்து நான் மானிப்பாய் மெமோறியல் பாடசாலையிலை படிச்சுக்கொண்டிருந்தநேரம்.
ஊரிலை எங்கடை வீட்டிலை சின்னம்மாவிட்டை பாடம் கேட்டுப்படிக்க பலபேர் வருவினம்.அப்பிடித்தான் அவளும் வந்து போவாள் என்னுடைய சம வயது ஒரே ஆண்டுதான் படிச்சனாங்கள். அனால் அவள் மகளிர்கல்லூரி.நானும் அவளும் பல வருசமாகவே வாடா போடி என்று கதைக்கின்ற நல்ல நண்பர்கள்.நானும் அவளும் ஒன்றாக படிப்போம் நான் அவளிற்கு தமிழ்பாடத்தில் கட்டுரைகள் எழுத விஞ்ஞான பாடத்தில் உதவிகள் செய்துகுடுப்பன். அவள் கணக்கு பாடத்திலை நல்ல கெட்டிக்காரி அதாலை எனக்கு ஏறாத கணக்குப்பாடத்தை எப்பிடியாவது புரிய வைக்க முயற்சி செய்வாள்.அவள் பின்னக் கணக்கை வேகமாக பிரித்து வெட்டி விடையை காட்டும்போது எனக்கு ஏதோ மந்திர வித்தை பாத்த மாதிரி மலைப்பாய் இருக்கும்.தலையை சொறிஞ்சபடி திருப்ப செய்து காட்டச்சொல்லி கேப்பன்.அவளும் திருப்பி எத்தனை தரம் செய்து காட்டினாலும்.
ஊகூம்.......எனக்கு ஏறாது.அதாலை கணக்கை விட்டிட்டு வேறை பாடத்துக்கு தாவிடுவன்.ஒருநாள் இரண்டு பேருக்கும் ஏதோ பாடம் செய்ய சொல்லிப்போட்டு சின்னம்மா போய்விட. அவள் என்னட்டை எனக்கு கவிதை ஒண்டு எழுத உதவிசெய்யிறியா எண்டாள். வருசக்கடைசி சோதினை முடிய பள்ளிக்கூடத்திலை பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏதோ கவிதை கேக்கிறாளாக்கும் எண்டு நினைச்சு நானும். கவிதைதானே பிரச்சனையில்லை தேவையெண்டால் சின்னம்மாவிட்டையும் உதவி கேக்கலாமெண்டன்.அவள் பதறியபடி சின்னம்மாக்கு தெரியவேண்டாம். இது காதல் கடிதம் கவிதையாய் வேணும் தான் ஒரதரை காதலிக்கிறதாவும் அவருக்கு கவிதையள் விருப்பம் தனக்கு கவிதை எழுதவராது அதாலை தான் எழுதிற மாதிரி எழுதித்தா நான் திருப்பி என்ரை கையெழுத்திலை எழுதிக்குடுக்கிறன் எண்டாள். அய்யோ கடவுளே இப்பதான் இருள்அழகனுக்கு ஒருகடிதம் எழுதப்போய் இரண்டு பள்ளிக்கூடம் மாறியாச்சு. பத்தாம் வகுப்பு கடைசிசோதினை வேறை நெருங்கிற நேரத்திலை என்ரை மருதடி பிள்ளையாரே எனக்கு ஏன் இந்தசோதினை எண்டு நினைச்சாலும்.
ஒரு நீண்டகால நண்பி அதுவும் காதலுக்கு எண்டு கேட்டிட்டாள் இல்லையெண்டு சொல்ல மனம்வரேல்லை. அன்று இரவிரவாய் யோசிச்சு ஒரு பெண் ஆணுக்கு எழுதிற மாதிரி எழுதி அடுத்தநாள் அவளிட்டை குடுத்திட்டு என்ன பிரச்சனை வந்தாலும் என்னை தயவுசெய்து காட்டிக்குடுத்திடாதை எண்டு கெஞ்சினபடி சரி நீ யாரை விரும்பிறாயெண்டு சொல்லு எண்டு கேட்டன். உனக்கு தெரிஞ்சவர்தான் உனக்கு கெதியாய் தெரியவரும் எண்டிட்டு போட்டாள்.பிறகு சிலநாளாய் சின்னம்மாவிடம் வந்து ஏதாவது கேட்டுபடித்துவிட்டு என்னோடை கனக்க கதைக்காமல் ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு போய்விடுவாள். எனக்கும் அவளோடை சேந்து படிச்சால் கணக்கு செய்யவேண்டிவரும் அதாலை அவள் அப்பிடி போறதே நல்லது எண்டு நினைச்சபடி இருக்க.
ஒருநாள் சின்னம்மா கையிலை கணக்குப்புத்கத்தை எடுத்தபடி டேய் நீ கனநாளாய் கணக்கு புத்தகமே கையிலை எடுக்கேல்லை வா இண்டைக்கு கணக்கு செய்யவேணும் எண்டபடி புத்தகத்தை விரித்தவர் அதற்குள் இருந்த ஒரு கடதாசியை எடுத்து படிச்சபடி கோபமாய் டேய் இது எத்தினை நாளாய் நடக்கிது எண்டார்.எனக்கு ஒண்டும் விளங்காமல் அந்த கடுதாசியை பாத்தன் நான் எழுதிய கவிதை அவளது கையெழுத்தில் என்னுடைய கணக்குப் புத்தகத்தில் இருந்திருக்கிறது. அதை நான் விரிச்சால்தானே கடிதத்தை பாக்கிறதுக்கு. ஆனால் சின்னம்மாவின்ரை தலையிலை அடிச்சு சத்தியம் பண்ணிய பிறகுதான் என்னை நம்பினார்.அந்தநேரம் அப்பா கண்டிக்கு போயிருந்ததாலை நான் தப்பினன். அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.
(ஒரு நண்பனின்உண்மை கதையிது
12:52 PM, Posted by sathiri, One Comment
இறக்கிவைத்து
சுமக்கும் சுமைகளையும்
சொல்லிட வார்த்தைதேடி
கலைந்துபோகும் என்
கனவுகளை
கலைத்து பிடித்து
கட்டிவைக்க விழையும்
வாலிபன்நான்
வசந்தத்தை அனுபவிக்கும்
வயதில்
வறுமையை தாங்கலாம்
வெறுமையை...........??
முடியவில்லை
வீதியில் வீசப்பட்டடோ
விக்கப்பட்டவனே இல்லை
சொந்தம் சுற்றம்
எல்லாம் உண்டு
உற்றாருக்கும் பெற்றாருக்கும்
உதவி உதவியே
உதிரிபாகங்கள்
தேய்ந்துபோய்
உடலும் மனமும்
சோர்ந்து.....என்
துக்கங்களை
தூக்கம்மட்டும்
அவ்வப்போது
தத்தெடுத்து கொள்ளும்
இதோ என்னை
தத்து கொடுத்துவிட்டேன்
நிதந்தரமாக
உயிர்காக்க உதவி தேவை IATAJ
2:12 AM, Posted by sathiri, No Comment

ஒரு பேப்பரிற்காக எழுதியது
உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு பிறந்தநாட்களை அதுவும் பிரான்சில் இரண்டு ஜெர்மனியில் இரண்டு என நான்கு பிறந்தநாட்களை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது.இந்தப்பிள்ளைய??வது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளா??http://www.iataj.org/
ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா
2:09 AM, Posted by sathiri, No Comment

பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார்.
தமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்தில??புதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக்கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது.
அய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் "தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் " என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோல??ான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
தாலியறுக்க சில ஆலோசனைகள்.
1:15 PM, Posted by sathiri, No Comment
இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.
எங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.
இந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம༢r />??ல் காலத்திலை இப்பிடி நாலுஎழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையளை எழுதலாம் எண்டு நினைக்கிறன்.
1) ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரணவீடுட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழ்வை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட்அடிச்சு ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.
2)பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வினை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழைமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு பேப்பரில் "தாலிறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.
3)இந்த நிகழ்வினை ஒப்பாரிப்பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாலை ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதுக்கு. எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாடகர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக்கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரண் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத்தொடங்கிவிடுவினம். அதாலை முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக்கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயார்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்திவிடுங்கோ.
4)இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம். அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண வீட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்சு விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. சிடிவெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.
5) இந்த தாலியறுப்பு நிகழ்வைப்போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்த சம்பிரதாயம் எண்டு புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள்தொடங்கவேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரசொல்லி வழக்கு போடலாம்.
சரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ நேரிலை வந்தும் சில ஆலோசனையள் சொல்லுறன் நன்றி சாத்திரி
எழும்படி பெண்பாவாய்
9:25 AM, Posted by sathiri, No Comment
ஒரு பேப்பரிற்காக
மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.
அப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை "டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.
ஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)༢r />??டுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிருக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக்காரர் பால்தேத்தண்ணியோ இல்லாட்டி பால்க்கோப்பியோ தாறது வழைமை.கொஞ்சம் வசதியான வீடு என்றால் `ஹார்லிக்ஸ்சும் பிஸ்கற்றும் கூட கிடைக்கும்.ஆனால்திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம்.
நாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒருதடைவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரிபார்ப்பம். " டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசுக்கோத்துமாம் எண்டுவான் ஒருத்தன்" அட போடா அந்த வாத்தி போனவருசம் பள்ளிக்கூடத்திலை தாற விசுக்கோத்தை தந்து ஏமாத்திப்போட்டுது.இந்தமுறை கிறீம் விசுக்கோத்து வாங்கிதராட்டி நான் அவற்றை வீட்டு வாசல்லை பாடமாட்டன்" என்பான் இன்னொருத்தன்.அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.
ஏணெண்டால் அதுவரை காலமும் சைக்கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலாலையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக்குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும். அதேநேரம் திருவெண்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டிவைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக்கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.இப்பிடி கல கலப்பா ..“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்…..எண்டு முதல் பாட்டோடை கோயிலடியிலை இருந்து தொடங்குவம் முன்னாலை ஒருத்தர் பெற்றோல்மைக்ஸ் விளக்கை தோழில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெண்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு பந்தியாய் சொல்லி நிறுத்த பின்னாலை போகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.
சில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போகவேண்டியிருக்கும்..ஏலோரம்
பாவாய் இப்பிடி வெண்பாவின்ரை .எட்டு பாடல் வரிகள் .முடிஞ்சதும் எல்லாரின்ரை கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப்பாட்டும் பாடுவம். எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டுவாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் .முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப்போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்சுசத்தம போட்டு படைலைக்குள்ளை சங்கை வைச்சு ஊதிப்போட்டு போவம்.ஏணெண்டால் ஊரையே எழுப்பிறதுக்குதானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.
பிறகு கலையிலை எங்கையாவது போகேக்குள்ளை பெட்டையள் எங்களிட்டை "சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படைலைக்குள்ளை சங்குஊதினது எண்டு செல்லக்கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் "எங்களுக்கு வேறை வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்." இப்பிடியான சீண்டல்கள். திருவெண்பா கடைசி நாளன்று ஒரு ரக்றரிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற்எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டுவருவம்.. எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம்.அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.. அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்
குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே
8:50 AM, Posted by sathiri, No Comment
இந்தவார ஒரு பேப்பரிற்காக
83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.
எங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)
புதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் " சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிருந்தனர்.அதுமட்டுமல்ல "அறுபதுநாளில் ஆங்கிலம் கற்க" எண்டொரு ஸ்போக்கிண் இங்கிலிஸ் புத்தகத்துடன் ரியுசனுக்கு வேறை அலையத்தொடங்கிவிட்டார்கள்.இப்பிடியெல்லாம் இருக்க கொழும்பில் இருந்து வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ரேகாவின் குடும்பமும். .ரேகாவின் தந்தை எங்கள்ஊரை சேர்ந்தவர்தான்.
கொழும்பில் இருந்து வந்த அனேகமான குடும்பங்கள் தங்கள் உறவுக்காரர்களின் வீடுகளில் குடியேறிவிட ரேகாவின் குடும்பம் மட்டும் யாரும் தங்களுடன் ஏற்றுக்கொள்ளாததால் தனித்து விடப்படவே நாங்கள் எங்கள் ஊரில் யாருமற்றிருந்த பழையகாலத்து நாற்சார சுண்ணாம்பு வீடொன்றை துப்பரவாக்கி அதில் குடிஇருத்தினோம்.ரேகாவும் முதல் நான் சொன்ன கொழும்பு பெண்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய பெண்ணாக இருந்தாள். அந்தவருடம் பத்தாவது படித்துகொண்டிருந்தாள்.அவளிடம் ஒருபார்வைக்காகவே எனது நண்பர்கள் ஏன் நான் உட்பட அவர்கள் வீட்டுக்கு முன்னாலை அடிக்கடி போய்வருவம்.அவர்கள் இருந்த வீட்டை பொதுவாக எல்லாரும் பழைய வீடு என்றுதான் சொல்லுறது வழைமை.அதன்பின்னர்தான் மெல்லஅவர்களைப்பற்றிய கதை ஊரில் அடிபடத்தொடங்கியது ரேகாவின் தந்தை கொழும்பில் கணக்காளராய் வேலை பார்த்தவராம் அவர் மட்டக்கிளப்பு பெண் ஒருத்தியை காதலித்து தன் தாய் தந்தை உறவுகாரர்களின் சம்மதமின்றி கலியாணம் செய்ததால்தான் எங்கள் ஊரில் யாரும் அவருடன் கதைப்பதில்லையென்று தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல அவர்எங்களிற்கு நெருங்கிய உறவு என்றொரு மேலதிகதகவலும் கிடைக்கவே.அதை உறுதி செய்ய ஒருநாள் வெத்திலை பாக்கு இடித்துக்கொண்டிருந்த அம்மம்மாவை ஓரம்கட்டி "எணோய் உந்த பழைய வீட்டிலை குடியிருக்கிற கொழும்பாக்கள் எங்களுக்கு சொந்தமாம் உண்மையோ" எண்டு கதையை தொடக்கினதுதான் தாமதம் அம்மம்மா கோபமாய் "அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா?? ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி எப்பிடியாவது அம்மம்மாவிடம் முழுவிபரத்தை அவர் வழியிலேயே போய் கேட்டறிய எண்ணி நானும். உண்மையோணை நான் அந்தப்பக்கம் போறேல்லை பிறகேன் ஏதும் வாங்கி குடிக்கப்போறன் சொந்தம் எண்டு கேள்விப்பட்டன் அதுதான் என்னமுறை எண்டு கேட்டன். சரி அவை ஆர் எண்ட .அம்மம்மா தொடங்கினார் எடேய் அவன் எனக்கு பெறாமகன் முறை பெடி நல்லவன் ஆளும் நல்ல வடிவான ஆம்புளை நல்ல கெட்டிக்காரன் படிச்சு எக்கவுண்டன் வேலையும் கொழும்பிலை எடுத்து நல்ல சம்பளம் ஆனால் அவனை உந்த மட்டக்கிளப்பள் மருந்து குடுத்து மயக்கிபோட்டாள் "எண்டார்.
அதுக்கு நான் சொன்னன் ஏனணை அவாவும் நல்லாப்படிச்சு கொழும்பிலை எக்கவுண்டன் தானாமே பிறகேன் இவரை மயக்கவேணும்" எண்டதும்.அம்மம்மா கோவமாய் "எடேய் அவளெங்கை படிச்சவள் அவள் மந்திரம் மாயம் செய்து எக்கவுண்டன் ஆகிட்டாள் அதமாதிரி இவனையும் மயக்கிபோட்டாள் எண்டு"பாக்குஉரலை ஓங்கி குத்த நானும்எனக்கும் வந்தவிசயம் முடிஞ்சுது அதாவது ரேகான்ரை அப்பா அம்மம்மாக்கு பெறாமகன் எண்டால் எனக்கு சித்தப்பாவோ பெரியப்பா முறை அப்ப ரேகா தங்கை முறை.அட சே கிழவி இப்பிடியொரு குண்டைத்தூக்கி போட்டிட்டுதே எண்டு கவலையானாலும்.அம்மம்மா சொன்ன மந்திர விசயம் சிலநேரம் உண்மையா இருந்தால் நான் படிச்சு சோதினை எழுதி பாசாகிறதெல்லாம் நடக்காத அலுவல் அதாலை ரேகான்ரை அம்மாட்டை மந்திரத்தை கேட்டுப்படிச்சு பேசாமல் ஒரு டொக்ரர்ஆகவோ இஞ்சினியராவே வந்திடவேணும் என்று நினைச்சபடி.வழைமையான கோயில் மடத்தடிக்கு போகவும் அங்கு தயாராய் இருந்த என் நண்பன் இருள்அழகன் என்னிடம் டேய் வீட்டிலை கேட்டனியா ரோகா என்ன முறையாம் உனக்கு எண்டவும். நான் "அட போடா அவள் எனக்கு தங்கச்சிமுறையா போச்சுது எண்டு கவலையோடை சொன்னதுதான் தாமதம்.
எங்கள் ஊர் கோயில் குளத்தில் இருந்த அத்தனை தாமரைப்பூவும் இருள்அழகனின் முகத்தில் மலர்ந்தது போல ஒரு புன்னகையுடன் பிள்ளையாரான உண்மையாவோடா எண்டவன் சரி அப்ப போய் கொக்ககோ கோலா குடிச்சிட்டு வருவம் வா மச்சான் எண்டு கூப்பிட்டான்.அட ஒரு பிளேன்ரீ கூட வாங்கித்தாராதவன் ரேகா எனக்கு தங்கை முறை எண்டதும் கொக்கோ கோலா குடிக்ககூப்பிடுறான் பின்னாலை ஏதோ விலங்கம் இருக்கு எண்டு நினைச்சபடி போய்விட்டேன்.நான் நினைச்சபடியே ஒருநாள் இருள்அழகன் என்னிடம் டேய் ரேகாவை நான் லவ்பண்ணுறன் அவளுக்கும் விருப்பம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன் ஆனால் நேரை கேக்க பயமா கிடக்கு அவளின்ரை மனசை கவருற மாதிரி நீதான் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தர வேணுமாடா எண்டு கெஞ்சினான்.ஆனால் ரேகாவிற்கு அப்பிடி ஏதும் விருப்பம் இருந்ததாய் எனக்கு தெரியேல்லை ஆனால் நம்ம இருள்அழகன் கடிதம் குடுத்து பெட்டையளிட்டை பேச்சு வாங்கினது அது ஒண்டும் முதல்தரம் இல்லையே அதுமாதிரி ரோகாவிட்டையும் பேச்சு வாங்கிறதை கூத்துப்பாக்கலாம் எண்டு நினைச்சு "குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே" என்று என்னுடைய வழைமையான நக்கல் பாணியிலேயே கவிதை வடிவில் எழுதி நண்பனிடம் கொடுத்துவிட்டேன்.ஆனால் நான் ஒன்று நினைக்க ரேகா ஒன்று நினைத்துவிட்டாள்.
அந்தக்கடிதத்தை அவள் அழுதபடியே தன்வகுப்பாசிரியையிடம் காட்ட. அந்த ஆசிரியை அதிபரிடம் காட்ட. அதிபர் ரேகாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் பாடசாலை அதிபரிடம் வந்து முறையிட. ஒரு தலைமை மாணவன் வந்து எங்கள் வகுப்பில் இருள்அழகனை அதிபர் கூப்புடுறார் என்றுவிட்டு போனான்.இருள்அழகனும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் புதுமணப்பெண்ணைப்போலை எங்களை பார்த்தபடி போய்விட்டான்.கொஞ்ச நேரத்தாலை வேறையொரு தலைமை மாணவன் வந்து என்னைக் கூப்பிட்டான். நண்பன் என்னை போட்டுக்குடுத்திட்டான் எண்டு எனக்கு விளங்கிவிட்டது . நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களா??வேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.
தாலி பெண்ணுக்கு வேலியா ? சோலியா ?
7:05 AM, Posted by sathiri, 2 Comments
ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'
24.11.07 மதியப்பொμதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.
45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.
நோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.
ஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.
நித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்புவும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.
சின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.
தேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
கணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்டை விதித்து வைத்த ஆதிக்கமனப்பான்மை மிக்கவர்களால் பெண்ணாகப்பிறப்பதே பாவம் என்ற நிலையையே மீதம்வைத்தது.
நூற்றாண்டுகள் கடந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் அங்கங்கே மேற்படி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில் இப்படியுமா என வியக்க வைக்கிறது. இதுவெல்லாம் தமிழ்ப்பண்பாடு எனகொக்கரிப்போருக்கு இந்த நாடுகளின் சட்டத்தை நாடி தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் யேர்மனிய நகரொன்றில் நடந்த மரணம். இன்னும் 2மணித்தியாலங்களில் உனது கணவன் உயிர் பிரியப் போகிறது என மருத்துவமும் மருத்துவர்களும் சொன்னதன் பின் இருந்த நம்பிக்கைகள் இழந்துஅழுதபடி பக்கத்தில் நின்று தன் துணையின்சாவைச் சந்தித்தாள் ஒருத்தி.
சுவாசத்துடிப்பு ஒவ்வொன்றாய் குறையக் குறைய தந்தையின் இரு காதுகளுக்குக் கிட்ட நின்று குழந்தைகள் 'அப்பா...அப்பா....என அழ....என்ரை தெய்வமே என்னை விட்டிட்டுப் போகாதை...என அவள்கதற....அந்தச்சாவு நிகழ்ந்தேறியது. ஒருகனவு போல அந்தச்சாவு அந்தக் குடும்பத்தை ஆறாத்துயரில் விμத்திவிட்டிருந்தது.
ஆளுக்கு ஒரு சம்பிரதாயம் ஊருக்கு ஒருபண்பாடு உள்ள பெருமை மிக்க இனம் நாமென்ற மார்தட்டலுடன் இறந்த மனிதனை இந்துமத முறைப்படி எரிப்பது என முடிவாகியது. எரிந்து முடியும் சாம்பலை யேர்மனியில் பாதியும் பிறந்த மண்ணில் பாதியும் சடங்கு செய்து கரைப்பது என முந்திரிக்கொட்டை முதலாளிகள் சிலர் முடிவு செய்தனர்.
யேர்மனிய சட்டப்படி பொதுவான தண்ணீர் ஓடும் இடங்களில் சாம்பல் கரைத்தலுக்கு அனுமதியில்லையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். `உங்கினை ஓடுற ஆறுகளில நாங்கள்கரைச்சா உவங்களென்ன செய்வாங்கள்'சாம்பல் கரைப்புப்பற்றிய கதை முற்றுப்பெறாமல் முணுமுணுப்புகளுடன் நிறைகிறது. கடவுள் இல்லை மதம் இல்லை மனிதமே மேலென்று மார்தட்டுவோர் கூட இத்தகைய போலிச்சடங்குகளை அங்கீகரித்து ஒப்புதல் கொடுப்த்தது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடிகண்ணே என்ற பதத்தை நினைவூட்டுகிறது.
22.11.07 அன்று இறந்துபோன கணவனின்படத்தைப் பார்த்து அவனால் கட்டப்பட்ட தாலியைப் போடுமாறு சம்பிரதாயச் சாக்கடைக்குள் புதைந்து கிடக்கும் பெண்ணொருத்தியால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அந்த வேண்டுகையை ஏற்கமறுத்து அந்தப்பெண் கதறல்தான் வீட்டில் கேட்டது.
தமிழ்ப்பண்பாட்டின்படி கணவன் கட்டியதாலியை அவன் இறந்தவுடன் கழுத்தில் மாட்டி எரியும் நாளில் கழற்ற வேண்டும், அதுதான்ஒரு பெண் தனது கணவனுக்கு விசுவாசமானவள் என்பதற்கு அடையாளம், தமிழ்ப்பண்பாட்டின்படி தாலி கட்டியவள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் இந்து சமயம் இதைத்தான் சொல்கிறது, இதைச் செய்யத் தவறினால் இறந்த கணவனின் ஆத்மா சாந்தியடையாதுஎன பலவாறான புலம்பல்கள் புதுக்கதைகள்சொல்லப்பட்டன.
24.11.07 அன்று உறவினர் நண்பர்கள் முன்னிலையில் மரணக்கொண்டாட்டம் நடைபெற்றது. வரவிருந்த ஐயர் வராமல் முக்கியமானவர்கள் என சிலர் முன்னின்று மரணக்கொண்டாட்டம் நடந்தது.
கடுங்குளிரில் மனைவி சேலையுடுப்பிக்கப்பட்டு தாலி அணிவிக்கப்பட்டு இறந்தவரின் சவப் பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சடங்கு ஆரம்பமாகியது.
கதிரையில் வைக்கப்பட்ட நிழற்படத்துக்கு அரப் பெண்ணை, வாய்க்கரிசிபோட்டு இறுதி நிகழ்வாக தாலிகழற்றல்,மணநாளில் முதல் மனைவி கட்டிய கூறைச்சேலையை சவப்பெட்டியில் வைத்தல் ஆரம்பமாகியது.
மேடைக்கு முன்னின்று ஆண்கள் சிலர் சொல்லச் சொல்ல அப்பிடிச் செய் அப்பிடிச் செய்யென அருகில் துணை நின்ற பெண்ணொருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.
ஐயோ நானிந்தக் கூறையை ஆசைக்குக்கட்டேல்லயே...
கவனமாயெல்லோ காத்துவைச்சிருந்தனான்.....
ஐயோ நானென்னண்டு இதை உங்கடை பெட்டியிலை போட....
சிலநிமிடம் கதறலுடன் கூறைச் சேலை சவப்பெட்டிக்கு விரிக்கப்படுகிறது.
ஐயோ நான்பொட்டு வைக்காமல் வெளியில போகமாட்டேனே என்ரை சந்தோசமெல்லாத்தையும்கொண்டு போட்டியளேயப்பா....
ஓயாத அந்தப்பெண்ணின் அμகை....
மரண வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர்களையும் அந்தக் கதறல் கலவரப்படுத்தியது.
இறுதி நிகழ்வாக தாலி கழற்றல் ஆரம்பம்.
ஐயோ நான் கழட்ட மாட்டேன்....
என்னைவிடுங்கோ....
இல்லை நீங்கள் கழற்றி வைச்சால்தான்உங்கடை கணவன்ரை ஆன்மா சாந்திபெறும்கழட்டுங்கோ...
கழட்டுங்கோ....
முன்னின்றஆண்களின் கட்டளைகள் இவை.
ஐயோ பாரப்பா எழும்பி கழட்டிக்க வேண்டாமெண்டு சொல்லப்பா...
நானென்ன பாவம் செய்தனானான்....
உன்னொடை வாழத்தானேயப்பா வெளிநாடு வந்தனான்.....
எனக்கேனிந்த நிலை....
நான் கழட்டிப்போடுறதுக்காக அவரிதை எனக்குக் கட்டேல்ல நான் போடத்தான்இதைக் கட்டினவர்....
நான் கழட்டமாட்டேன்என்னை விடுங்கோ....
உங்களுக்கு உங்களுக்கெண்டு வந்தாத்தான் என்ரை நிலை விளங்கும் என்னை விடுங்கொ.....
ஐயோ கடவுளே ஏனிப்பிடியொரு சம்பிரதாயத்தைப் படைச்சியோ....
என்ரை சந்தோசமெல்லாம் போகுதே.....
இந்தக் கதறலைக் கேட்ட பின்னும் யாரால்தான் அமைதியாக நிற்க முடியும். சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டினேன்.
அவவை விடுங்கோ அவவிரும்பாததை செய்ய வேண்டாம்.
சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயப்படுத்தலை என்னைத் தவிர சபையில் இருந்த எந்தப் பெண்ணுக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.
கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டாமல் ஒவ்வொன்றாய் பறித்தெடுத்தல் எந்தச் சட்டத்தில் எழுதப்பட்ட விதி? கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு? இதை யார் இயற்றினார்?
முதலில் மனைவி இறந்தால் ஆணுக்கு இப்படியொரு சடங்கு இந்து மதத்தில் இதுவரை இயற்றப்படவில்லையா ?
சபையில் நின்ற ஒரு மனிதர் சபையில் இருந்த தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்து போயதைக் கழட்டிவிடுங்கோ அது கழட்டுதில்லை என அழைக்க, சினிமாக்களில் பார்த்தவில்லத்தனமான பாத்திரம் போல அந்தப்பெண் எழும்பி வந்து 'கழட்டுங்கோ எனஅருகில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தபெண்ணுமாகச் சேர்ந்து கழட்டு கழட்டென்றுகத்திக் குழறி அந்தப் பெண்ணின் தாலிகழற்றப்பட்டு சவப்பெட்டியின் மேல் போடப்படுகிறது.
இரத்த உரித்துடைய ஆண்களும் பெண்களும் தாலியறுப்புக்குக் காரணமானவர்களும் சேர்ந்து ஒப்பு வைத்துக் கதறி தாலியறுத்து முடிந்தது.
இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத எனது கோபத்தைப் பார்த்த ஒரு பெண் சொன்னார்.
` சாந்தி நாங்கள் முதலில செத்துப்போயிடவேணும் இல்லாட்டி எங்களுக்கும் உந்த நிலைதான் என்றார்'
இதென்ன விதியிது கணவனின் இறப்புடன் மனைவியின் வாழ்வை முடிப்பதா ?
`இப்பவே சாவுங்கோ இளமையிலை போனா இன்னும் நல்லமே.' சொல்லத்தான் வாய் எழுந்தது. ஆனால் அதைச் சொல்லவில்லை நான். நல்லவேளை நெருப்பிருந்தால் நெருப்புக்குள்ளும் அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டிருப்பார்கள். `கணவன் இறந்த துயர் தாளாமல்மனைவி தீயில் எரிந்தாள்' என தலைப்புச்செய்தி வந்திருக்கும்.
எல்லாம் முடிந்து சவப்பெட்டியை சவக்காலை எடுத்துச் செல்லுமுன் அந்த அதிகாரி கேட்டார். கூறைச் சேலையைக் காட்டி பிணத்தை எரிக்கும் போது இதையும் எரிக்கிறதா?
எரிக்கச் சொல்லுங்கோ என்று பலர் சொன்னார்கள். தாலியை அறுத்தவர்கள் தாலியைப் பையொன்றில் திரும்பப்போட்டு பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்தார்கள்.
`தாலி தங்கமென்றதாலை வீட்டுக்குக் கொண்டு போகலாம் கூறைச்சேலை தங்கத்தைவிடமலிவு ஆகையால் எரிக்கலாம்' அந்த இடத்தில் நின்றவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டு கனத்த மனதோடு வெளியேறுகிறேன்.
மேற்படி சடங்குபற்றி எல்லோருமே திருப்திப்பட நானும் என்னவனும் முரண்பட்டுக் கொண்டது புதுமையுமில்லை புரட்சியுமில்லை பெண்ணியமுமில்லை. ஒரு இறப்பிற்கு விலை இன்னொரு உயிரை வதைத்தல் இல்லையென்றமனிதாபிமான எண்ணமே தான்.
சடங்கென்று பெண்ணை் கொடுமைப்படுத்தி மரண வீட்டில் வதைப்பது இன்னொரு திருமணத்தைப்பெண் விரும்பாமலிருப்பதற்கான முன்னோரின் உத்தி. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்துமதச் சடங்கு தமிழ்ப்பண்பாடு என பம்மாத்துப் பண்ணுவது சம்பந்தப்பட்டவர்களின்அறியாமைதான்.
தாலிகழற்றலை முன்னின்று செய்வித்தவர்களும் சம்பிரதாயப் பம்மாத்துக்காரர்களும்`சாந்தியென்றவ யார் உதைப்பற்றிக் கதைக்க ?உவவென்ன புரட்சியோ செய்யப்போறா ? உவாக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?உவாடை ஊரிலை உப்பிடியில்லைப்போலை ?உவவுக்கேன் நோகுது ? நாடுநாடாக தொலைபேசியில் என்னைச் சபிப்பவர்கள் அனைவருமே சபியுங்கள். எனக்கு எந்தவித கவலையுமில்லை.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
தர்மஅடி
9:39 AM, Posted by sathiri, No Comment
இந்த வார ஒரு பேப்பரிற்காக
தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம வெளியில் சொல்ல மனம் வராது எப்பவாவது மனசுக்குள்ளை நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுவிங்கள். அதே போல நானும் ஒரு மறை தர்ம அடி வாங்கியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்வது மட்டுமல்ல அதை நான் மட்டும் மனதுக்:குள்ளேயே நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை எனவே உங்களிற்கும் தாராள மனதுடன் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறேன்.இந்த தர்மஅடி விழுகிறது என்றாலே உடனேயே சொல்லி விடலாம் யாராவது பெட்டையுடன் சேட்டை விட்டிருப்பினம் அல்லது ஏதாவது காதல் பிரச்சனையாய் இருக்கும்.
இவை இரண்டையும் தவிர்த்தால் வேறு காரணங்கள் குறைவாகத்தான் இருக்கும்.சரி விசயத்துக்கு வாறன் இதுவும் 80 களில் நடந்த கதைதான்.எங்கள் ஊரில் எங்கள் கோயில் மடத்து நண்பன் ஒருவனிற்கு அளவெட்டி கிராமத்தில் உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவனும் அந்த உறவுக்காரர்கள் வீட்டிற்கு போய்வந்து கொண்டிருந்த பொழுது அவர்களது அயல் வீட்டு பெண்ணொருவருடன் கடலையை போட்டு காதல் ஏற்பட்டு விட்டது. அந்தக்காதல் கதை கொஞ்சம் ஊருக்குள் கசியத்தொடங்கவே எனது நண்பனை அவனது உறவுக்காரர்கள் தங்கள்: வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடவே அவனும் எப்படியோ கஸ்ரப்பட்டு வேறு வழிகளில் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து கதைத்த கொண்டுதான் இருந்தான். இது இப்பிடி இருக்க அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கியது. பிறகென்ன ஊரிலை கோயில் கொடி ஏறினாலே இளசுகளிற்கு கொண்டாட்டம் தானே.
இவனும் ஏறிய பிள்ளையார் கோயில் கொடியை தன்னுடைய காதல் கொடி ஏறியதாகவே நினைத்து நம்ம நண்பனுக்கு தலைகால் தெரியாத சந்தோசம் ஏணெண்டால் இனி 25 நாழும் அவனுடைய ஆள் கோயிலுக்கு தவறாமல் வரும் இவனும் கோயிலுக்கு போகிற சாட்டிலையே கச்சானோ சோழப்பொரியோ வாங்கி தின்றபடி தன்னுடைய ஆளுடன்: கடலை போடலாம் அதுதான் அவனது சந்தோசத்துக்கு காரணம். ஆரம்பத்தில் தனியாகவே ஏதோ பக்தி முத்தினவனைப்போல காலையும் மாலையும் போய் அந்த பெண்ணின் தரிசனம் வாங்கி வந்து கொண்டிருக்கவே இவன் போய் வந்தது பெண்ணின் வீட்டு காரருக்கு தெரிந்து பெண்ணை மாலை திருவிழாவிற்கு போக விடாமல் தடுத்து விட்டனர். பகல் திருவிழாவிற்கு அதுவும் யாராவது துணையுடன்தான் அனுப்புவினம். இது நம்ம சினேகிதனுக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே. அவனும் எங்களிற்கு சோடா கச்சான் வாங்கி தருவதாக கொல்லி எங்களையும் கெஞ்சி கூத்தாடி துணைக்கு கூட்டிக்கொண்டு போவான்.
பிறகென்ன எங்களிற்கும் வீரம் பிறந்துவிடும் டேய் நாங்கள் இருக்கிறம் கவலைப்படாதை நீ பயப்பிடாமல் போய் உன்ரை ஆளோடை கதை நாங்கள் பாத்து கொள்ளுறம் என்றபடி உள்ளுக்கை உதறல் எடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் வாங்கி தந்த சோடாவை உறுஞ்சியபடி கோயில் வீதியை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அவனும் எப்படியாவது அந்தப்பெண்ணை சந்தித்து ஒரு வசனமாவது பேசி விட்டு வந்து விடுவான். ஆனால் கோயில் திருவிழாவும் முடிந்து தேர்த்திருவிழாவை நெருங்க நெருங்க அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு கூடிக்கொண்டே போனது.அதனால் ஆரம்பத்தில் நண்பனிற்கு உதவியாய் இரண்டு மூன்று பேர் மட்டுமே போய் கொண்டிருந்த நாங்களும் பாதுகாப்பிற்காக ஆக்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டி வந்தது.அதாவது தேர்த்திருவிழா அன்று வழைமை போல நாங்கள் ஒரு எட்டுப்பேரளவில் போயிருந்தோம். கும்பிளாவளை பிள்ளையார் கோயில் பிரபலமான ஒரு கோயில் என்பதால் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்காளால் நிரம்பியிருந்தது.
எனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு " கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேரடியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை.
பூசை முடிஞ்சு தேரும் இழுத்து முடிஞ்சு அன்னதானமும் தொடங்கி விட்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த சோழப்பொரியும் கசிந்த வியர்வையில் நசிந்து போயிருந்தது.நான் நண்பனிடம் சொன்னன் டேய் அவள் வரேல்லை போலை அன்னதானமும் தொடங்கிட்டு பசிக்கிது அதாலை வா பேசாமல் சாப்பிட்டு போவம் எண்டவும்.நண்பனோ விடுவதா இல்லை "இல்லையடா கட்டாயம் எப்பிடியும் வருவன் எண்டவள் சனம் கூடவா இருக்கு அதாலைதான் கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு கொஞ்சம் பொறுப்பம் சனம் குறைய எப்பிடியும் சந்திக்கலாம்" எண்டான். அவனைப்பாக்கவும் பாவமாய் இருந்தது. அப்பதான் குழந்தையை தவற விட்ட யாரோ ஒருவர் தன்னுடைய பிள்ளையின் வயது போட்டிருந்த சட்டையின் நிறம் எல்லாம் சொல்லி ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருந்தார்br />?ள். அப்பதான் எனக்கு திடீரெண்டு ஒரு யொசினை வந்தது.
உடனை நண்பனிட்டை சொன்னன் சரி உன்ரை ஆள் கோயிலுக்கு வந்திருந்தால் கட்டாயம் சந்திக்கலாம் அதுக்கு என்னட்டை ஒரு ஜடியா இருக்கு வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு மைக் செற் இருந்த இடத்துக்கு போய் மைக் காரரிடம் நண்பனைக்காட்டி "அண்ணை நாங்கள் கோயிலுக்கு வந்த இடத்திலை இவரின்ரை தங்கச்சியை மாற விட்டிட்டம் இப்ப அவசரமா வீட்டை போகவேணும் அதாலை ஒருக்கா மைக்கிலை அறிவிக்க வேணும்" எண்டவும். மைக்காரர் பெயர் வயசு போட்டிருந்த சட்டை நிறம் எண்டு விசாரணையை தொடங்க நான் சொன்னன் "அண்ணை அவாவுக்கு வயசு 15 நீங்கள் அவாவின்ரை பெயரை மட்டும் சொல்லி இவனின்ரை பெயரையும் சொல்லி இவர் தேடுறார் அதாலை உடைனை தேரடிக்கு வரச்சொல்லி விடுங்கோ எண்டவும்.
மைக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திரக்க வேணும் எங்களை ஒரு மாதிரியாய் பாத்தபடியே அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவரது அண்ணன் தேடுகிறார் உடனடியாக தேரடிக்கு வரவும் எண்டு என் நண்பனின் பெயரையும் அறிவித்து விட்டார். நாங்கள் உடனடியாக தேரடிக்கு போய் நின்று கொண்டோம்.சரி இனித்தான் கிளைமாக்ஸ். சனக்கூட்டமும் குறைந்திருந்தது கொஞ்ச நேரத்தில் திடீரெண்டு எங்களுக்கு முன்னாலை அந்த மைக்செற் காரர் எங்களை பாத்து இவங்கள் தான் ஆக்கள் என்டு கையை காட்டினார்.அவருக்கு பின்னாலை பி.வாசுவின்ரை படங்களிலை வாற வில்லனின்ரை கையாட்கள் மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடை ஒரு பத்து பதினைஞ்சு பேர் எங்களை நோக்கி பாஞ்சினம்.என்ன நடக்கபோகுது எண்டு நினைக்கிற அந்த செக்கனிலேயே அடிவிழத்தொடங்கியது.அளவெட்ட༢r />?? பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்யிற ஆக்கள் மண்வெட்டி பிடி்ச்ச கையாலை அடிவாங்கினால் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கால் கற்பனை பண்ணிப்பாருங்கோ.
யாருக்கு எப்பிடியெல்லாம்அடி விழுந்தது எண்டு தெரியாது . காதைப்பொத்தி எனக்கும் ஒரு அடி விழுந்தது. ஏதோ யாழ்தேவி றெயின் இடம்மாறி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் வீதியாலை ஓடினது மாதிரி எனக்கு ஒரு உணர்வு. அதே நேரம் பின்னாலை இருந்து யாரோ சேட்டிலை பிடிச்சு இழுக்க நல்லவேளை நான் போட்டிருந்தது கொஞ்சம் பெரிய சேட்டு அது மட்டுமில்லை கழுத்திலை போட்டிருந்த சங்கிலி வெளியாலை தெரியட்டும் எண்டு இரண்டு தெறியையும் களட்டிவிட்டிருந்த படியால் சுலபமாய் சேட்டை உருவி கழட்டிவிட்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு அளவெட்டி தோட்டவெளி வரம்பாலை ஓடி ஒரு மாதிரி வீட்டை வந்து சேந்திட்டன். எங்களோடை வந்த ஒருநண்பன் சைக்கிளைக்கூட எடுக்கவில்லை ஓடியந்திட்டான்.மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.
பசிக்கிறவைக்கு சோறு போட்டால் தர்மம் எண்டிறவை .அதுமாதிரி சோத்து கையாலை அடிக்கிறதைத்தான் தர்மஅடி எண்டு எனக்கு அப்பதான் விழங்கினது. அடுத்தநாள் வழைமைபோல நாங்கள் எங்கடை கோயில் மடத்திலை சந்திச்சு எவருமே அடிவாங்காத மாதிரி கதைத்து கொண்டோம். எனது நண்பனோ பிறகு தன்னுடைய காதலியை காணமுடியாமல் சோகத்தில் சில நாட்கள் திரிந்தான் ஒரு நாள் மாலை வழைமையாய் கோயில் மடத்திற்கு வந்தவன் கலகலப்பாய் கதைத்துவிட்டு எங்கள் எல்லோருக்கும் பணிஸ்சும் சோடாவும் வாங்கித்தந்தவன் அன்றிரவு தங்கள் தோட்டத்திற்கு போய் பொலிடோலை(பூச்சிமருந்து) குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டான்.
ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.
11:33 AM, Posted by sathiri, 7 Comments
அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.
பாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.
எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் "சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.
1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.
2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.
3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்னணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை
1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி
2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது
3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை
4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி "என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி
இப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி

