Navigation


RSS : Articles / Comments


பூமாதேவி சிரிக்கிறாள்

4:36 AM, Posted by sathiri, No Comment

பூமாதேவி சிரிக்கிறாள்
ஒரு பேப்பரில்

பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுக்காரனும் பெறவேண்டும் எண்டிறதுதான் என்ரை விருப்பம்


..அதாலை இனி விசயத்துக்கு வாறன். இந்த சுனாமி வந்தால்பிறகு உலகத்தின்ரை வழைமையான காலநிலையிலை பெரிய மாற்றங்கள். இவனுக்கென்ன விசரோ மாறி மாறி வாறதுக்கு பேர்தானே காலநிலையெண்டு வியாக்கியானம் கதைக்கக்கூடாது. காலநிலை மாறி மாறித்தான் வாறது ஆனால் ஒரே சீராய்மாறும். இப்ப எப்பிடியெண்டால் போன வருசம் கோடை தொடங்க முதலே ஜரோப்பா எல்லாம் கெழுத்திற வெய்யில். பூமாதேவி சூடாயிட்டாள் அதாலை அவளை குளிர வைக்கவேணுமெண்டு குட்டி குட்டி தாடி வைச்ச பெரிய பெரிய விஞ்ஞானிமாரெல்லாம் ஒரு இடத்திலை சேர்ந்து காலாட்டினபடி கதைச்சுப்பேசி ஒரு அறிக்கையும் விட்டவை. ஆனால் இந்தவருசம் பாத்தால்நான் ஜரோப்பாவிலை பூமாதேவி மட்டுமில்லை எங்களுக்கும் உச்சிகுளிர்ந்து தடிமன்வாற அளவுக்கு மாசி மாசக் கடைசி மட்டும் பனி கொட்டித் தள்ளிச்சிது.ஆனால் இப்ப ஆனி மாதம்.பிரான்சிலை நான் இருக்கிற நீஸ் எண்டிற கடற்கரை நகரத்திலை சாதாரணமாய் கோர வெய்யில் மண்டையை பிளக்கத்தொடங்கியிருக்கும். சனமெல்லாம் வெக்கை தாங்கமுடியாமல் கடலுக்குள்ளையும் கடற்கரையிலையும் படுத்திருக்க வேண்டிய காலம். ஆனால் இந்தவருசம் நிலைமை தலைகீழ்....;

இரண்டு கிழைமையாய் ஒரே மழையும் குளிருமாய் இருக்கு.என்ரை முதலாளியும் ஒவ்வொரு வருசமும் கோடை தொடங்க. கடற்கரையிலை உள்ள தன்ரை உணவுவிடுதியை திறந்து அதைக்கவனிக்க என்னை அனுப்பிறது வழக்கம். அப்பிடித்தான் இந்தவருசமும் வந்து கடையைத்திறந்து போட்டு காவலிருக்க வெறும் கடற்கரைகாத்துத்தான் கடையுக்கை வருகிது. ஒரு சனத்தையும் காணேல்லை. இண்டைக்கு காத்தாலை கொஞ்சம் வெய்யில் வாறமாதிரி இருந்திச்சிது சனமும் கொஞ்சம் கரையிலை ஊலாவத்தொங்கிச்சிது. இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு பழக்கம் கொஞ்சம் வெய்யிலைக்கண்டால் காணும் உடைனை கடற்கரையிலை ஓடியந்து உடம்பிலை கிறீமை பூசிப்போட்டு படுத்திடுவாங்கள். என்ணெண்டால் சண்பாத்தெடுத்து எங்கடை பிறவுண் கலருக்கு வாறதுக்காம்.வெள்ளையள் என்ரை நிறத்தை பாத்து நீ குடுத்து வைச்சனியெண்டு பெருமூச்சு விடுவாங்கள். அதுவும் வெள்ளைக்காரியள்....சீ....வேண்டாம
் அங்காலை எழுதமாட்டன் பிறகு பேப்பரிலை என்ரை கதை வந்தஉடைனையே வீட்டிலை என்ரைகதை கந்தலாயிடும்.அதாலை விசயத்துக்கு வாறன் இண்டைக்கும் இப்பிடித்தான் கொஞ்சமாவது வியாபாரம் நடக்குமெண்டு கடற்கரையிலை கதிரை மேசையெல்லாத்தையும் அடுக்கச் சொல்லிப்போட்டு அண்டைக்கு என்ன சாப்பாடு செய்யிறது எண்டு குசினிக்காரரோடை கதைச்சுக்கொண்டு நிக்க திடீரெண்டு பெரிய அலையள் அடிக்கதொடங்கிச்சிது.

அங்கை காவலுக்கு நிண்ட முதலுதவிப்படை சிவப்பு கொடியை ஏத்திப்போட்டு எல்லாரையும் கடற்கரையை விட்டு வெளியாலை வரச்சொல்லி விசிலடிச்சுக்கொண்டிருக்க. சனங்களும் அவசரமாய் துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லையெண்டு கடற்கரையை விட்டு ஓடத்தொடங்கிட்டினம். இந்தப் பழமொழி சிலநேரம் இந்த இடத்துக்கு பொருந்தாது ஏணெண்டால் எங்கடை கடற்கரையிலை ஒருதரும் ஒரு துண்டு துணியொண்டும் இல்லாமல்தான் படுத்துக்கிடக்கிறவை. ஆண்களோ பெண்களோ கீழை உள்ளாடை கட்டாயம் போட்டிருக்கவேணுமெண்டு சட்டம் போட்டிருக்கிறபடியாலை இடுப்பிலை றிபன் சைசிலை ஒரு துணிஏதாவது ஒட்டியிருப்பினம்.மேலை ஒண்டும் கிடையாது. என்னைப்பாத்து குடுத்து வைச்ச ஆளய்யா எண்டு உங்கடை மனசுக்குள்ளை மணியடிக்கிற சத்தம் கேக்கிது. ஆனால் எனக்கென்னவோ உதுகளை பாத்துப் பாத்து அலுத்தே போச்சுது. சரி அங்காலை அலையடிக்கிது இதுக்குள்ளை இது வேறையா???? நானும் அடுக்கின கதிரையளை தூக்கிறதுக்கிடையிலை ஒரு நாலைஞ்சு கதிரை அலை கடலிலை ஆடியசைஞ்சு போய்க்கொண்டிந்திச்சிது.

பிறகென்ன எல்லாத்தையும் அடிச்சு மூடிப்போட்டு மற்ற வேலைகாரரையும் வந்தவழியைப்பாத்து போகச்சொல்லிப்போட்டு. அடுத்ததாய் முதலாளிக்கு போனடிச்சு நிலைமையை சொல்லவேணுமெல்லோ ?? அதாலை என்ரை குரலையும் சோகச்செய்தி சொல்லுற நிலைமைக்கு கஸ்ரப்பட்டு மாத்தி ஒருமாதிரி அண்டையான் நிலைமையை ஒரு நேரடி வர்ணனையைபோல சொல்லி கடல் இழுத்துக்கொண்டு போன கதிரையளுக்கும் கண்ணீரஞ்சலி செலுத்திப்போட்டு. முதலாளியிட்டை வாங்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேணுமெல்லோ அதுதான் இதை எழுதிறன். இதை எழுதேக்குள்ளைதான் யோசிச்சன் என்னதான் விஞ்ஞாமெண்டிறாங்கள் கண்டு பிடிப்பு எண்டிறாங்கள் இயற்கையின் மாற்றத்தை கட்டுப்படுத்த இன்னமும் மனிசராலை முடியேல்லை. பயந்து ஓடத்தான் முடியிது. இப்பிடித்தான் நான் படிச்சுக்கொண்டிருந்த காலத்திலை ஒரு சம்பவம். 1979 ம் ஆண்டு ஸ்கைலாப் எண்டொரு செயலிழந்த விண்வெளிக்கலமெண்டு பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அதுவும் இலங்கை இல்லாட்டி இந்தியாவிலைதான் விழப்போகுதெண்டும் விழுகிற இடத்திலை பெரிய பாதிப்பு வருமெண்டும் செய்தியளும் வெளியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த நேரம் இந்த விண்கலங்கள் இல்லாட்டி இதுபற்றின விஞ்ஞான அறிவுகள் எஙகடை சனத்திட்டை பெரியளவிலை இருக்காத காலகட்டம்;. அப்ப எங்கடை ஊரிலை உள்ளவையெல்லாம் ஸ்கைலாப் விழுந்தால் உலகம் அழிஞ்சிடுமாம் எண்டும் சிலபேர்.. இல்லை உலகத்திலை பாதி அழிஞ்சிடுமாம் எண்டும். சிலபேர் சிறீலங்காவும் இந்தியாவும்தான் அழியுமாம் எண்டும் ஆளாளுக்கு பயப்பிடுறமாதிரி கதை சொல்லிக் கொண்டு திரிஞ்சாங்கள். ஆனால் அதுபற்றின செய்தியளும் தொடர்ச்சியாய் ஊடகங்களிலை வந்துகொண்டிருந்தாலும் வதந்திகளைத்தான் சனம் அதிகமாய் நம்பிச்சினம். சரி உண்மை என்னவெண்டு படிப்பிக்கிற விஞ்ஞான வாத்தியாரிட்டை விளக்கம் கேட்டம். அது ஒரு 79 தொன் நிறையுள்ள விண்கலம். விழுற இடத்திலை தண்ணிவாற அளவு பெரிய பள்ளம் வரலாம் அது விழுற இடத்தைபொறுத்து சேதம் இருக்கும். அதேநேரம் அதிலை இருந்து ஏதாவது இரசாயனக் கதிர்வீச்சுகள் வெளியாலை வந்தால் அது பாதிக்கும் எண்டு விளக்கமும் தந்தார். எங்களுக்கு அந்த நேரம் நெல்லுக்கதிர் மட்டும்தான் தெரியும் இரசாயனக் கதிருகளைப்பற்றி ஒண்டும் தெரியாது.

ஆனால் விளக்கம் சொன்ன வாத்தியார் விஞ்ஞானத்தோடை சமயமும் படிப்பிக்கிறவர் அதலை ஸ்கைலாப் எங்கடை ஊருக்குள்ளை விழக்கூடாதெண்டு பிள்ளையாருக்கு ஒரு நேத்தியும் வையுங்கோடா பெடியள் எண்டிட்டு போட்டார்.இந்தப் பரபரப்பிலை ஒருநாள் " இன்றிரவு ஸ்கைலாப் பூமியை வந்தடையும் ஆனால் அதனை இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் விழ வைக்க முடியுமென்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் " என்று இலங்கை வானொலி அறிவிச்சிது. இந்த நாசமாய் போன விஞ்ஞானியளாலைதானே இவ்வளவு பிரச்சனையெண்டு நினைச்சபடி பிள்ளையாருக்கு நேத்தியும் வைச்சிட்டு தொடர்ச்சியாய் இலங்கை வானெலியிலை ஸ்கைலாப் பற்றி அடிக்கடி போய்க்கொண்டிருந்த விசேட செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தன்.அண்டை༢r />??்கு ஊர்சனங்களும் ஏதோ முனியடிச்ச மாதிரி முழுசிக் கொண்டுதான் திரிஞ்சவை.(முனியடிச்சு நீ பாத்திருக்கிறியா எண்டு கேக்கக்கூடாது) அண்டிரவு ஊர்ச்சனங்கள் எல்லாருமே றேடியோக்கு பக்கத்திலை இருந்து ஸ்கைலாப் விழுகிற செய்தியளை கேட்டுக் கெண்டிருக்க ஒரு எட்டுமணியளவிலை ஊருக்குள்ளை திடீரெண்டு பெரிசாய் நெருப்பு பத்தி எரியத் தொங்கிட்டுது.

அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஜயோ ஸ்கைலாப் விழுந்திட்டுது அதுவும் எங்கடை ஊருக்குள்ளை விழுந்திட்டு ஊர் அழியப்போகுது பிள்ளையாரே காப்பாத்து எண்டு அலறினபடி வீடுகளை விட்டு ஓடத்தொடங்க. நானும் பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நாலைஞ்சு தேவாரத்தை கலந்து றீ மிக்ஸ் பண்ணி சொன்னபடி நிக்க றோட்டிலை சிலபேர் நெருப்பு எங்கடை ஊரிலை இருந்த பிரபல அரசியல் வாதியின்ரை வீட்டு காணிக்கள்ளை இருந்துதான் வருகிது ஸ்கைலாப் அவரின்ரை காணிக்குள்ளைதான் விழுந்திட்டுது எண்டு சொல்லிச்சினம்.இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்க வெளியாலை இருந்து வீட்டை ஓடியந்த அண்ணன் சொன்னான் ஒருத்தரும்பயப்பிடாதையுங்கோ அது ஸ்லாப் இல்லை வேறை ஏதோ எரியிது போய் றேடியோவை கேழுங்கோ ஸ்கைலாப் இன்னும் விழேல்லை எண்டு சொல்லத்தான் எங்கடை வீட்டுக்காரர் எல்லாரும் திரும்ப வீட்டுக்குள்ளை ஓடிவந்து றேடியோவை கேட்டால் ஸ்கைலாப் இன்னமும் இந்து சமூத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.கொஞ்ச நேரத்தாலைதான் விசயம் தெரிஞ்சது.

79 களிலை ஆயுதப் போராட்டம் தொடங்கியிருந்த காலம் ஊரிலை பொலிஸ்காரர் இல்லாட்டி இலங்கையரசாங்கத்துக்கு வால்பிடிக்கிறவைக்கு இளைஞர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியிருந்த நேரம். அதுமாதிரித்தான் எங்கடை ஊரிலை அந்த அரசியல்வாதியும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின்ரை முக்கியமான ஒருத்தர். அவருக்கு ஏதாவது செய்யவேணும் எண்டு நினைச்ச என்ரை அண்ணணும் அவரின்ரை சினேதங்களும் சேந்து ஸ்கைலாப் விழுறதை சாட்டாய் வைச்சு அவரின்ரை பெரிய வளவுக்கு வேலியடைக்க பறிச்சு வைச்சிருந்த பனையோலையளை கொழுத்தியிருக்கினம். அது எங்கடை ஊர்காரரையும் பயப்பிடுத்தி என்னையும் தேவாரத்தை றீ மிக்ஸ் பண்ண வைச்சிட்டுது. கடற்கரையிலை தொடங்கி ஸ்கைலாப்பிலை வந்து காவேலையை கொழுத்தி கதையை முடிச்சிட்டான் . பாவி முதல்லை உன்ரை கதையை முடிக்கவேணும் எண்டு திட்டினபடியே இருங்கள் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன் நன்றி.