Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து நாவல் .ஒரு பார்வை ...ஆஸ்திரேலியாவில் இருந்து முருக பூபதி அவர்கள் ...

11:26 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் ஆயுத எழுத்து

படித்தோம் சொல்கிறோம்
po முருகபூபதி
தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார்.
கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது:
” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப்பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சுப் பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையால கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே. அண்ணே நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூட கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தே போயிற்றுது. அதாலைதான் இது அல்லாஹ் தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே நீங்கள் போய் கரிகாலன் அண்ணையை கூட்டிவாங்க.”(பக்கம் 321)
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலின் பெயரைப்பார்த்ததும் எனக்கு மாதவன், – இயக்குநர் பாரதிராஜா நடித்து மணிரத்தினம் இயக்கிய ஆயுதஎழுத்து திரைப்படமும் அதன் பெயரளவில் நினைவுக்கு வந்தது.
வடக்கில் இந்தியத் திரைப்படங்களை புலிகள் தடைசெய்திருந்த காலப்பகுதியில் – தமிழர் கலாச்சாரத்திற்கு அந்தப்படங்கள் ஊறுவிளைவிக்கின்றன என்றே அவர்களின் தலைவர் நியாயம் சொன்னார்.ஆனால், அவர் பாதுகாப்பாக பங்கருக்குள் இருந்து ஆயுத எழுத்து திரைப்படம் பார்த்துவிட்டு, தன்னைப்பார்க்க வந்திருந்த முள்ளுமலரும் மகேந்திரனிடம், ” பாரதிராஜா அந்தப்படத்தில் நடித்திருப்பது அநாவசியமானது ” என்றும் விமர்சனம் சொல்லிவிட்டு மகேந்திரனுக்கு பல திரைப்படங்களின் சி.டி.க்களையும் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்.
தற்பொழுது பிரான்ஸில் புகலிடம்பெற்று வதியும் முன்னாள் விடுதலைப்புலிப்போராளி
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர் டொக்டர் நடேசனிடம் பெற்று படித்தேன்.
யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி என்ற சாத்திரி, 1984 இல் தமது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் என்பது தெரிகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகளிலும் பணியாற்றியிருப்பவர். அவர் பெற்ற அனுபவம், அவரது ஆயுத எழுத்தாக எமது முன்னால், 386 பக்கங்களில் விரிந்திருக்கிறது.
” படியுங்கோடா…படியுங்கோடா ” என்ற பல்லவிதான் அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் பேசுபொருளாகவும் நீடித்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இளம் யுவதிகளும் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டு சயனைட்டும் அணிந்து ஆயுதமும் ஏந்தத்தொடங்கியதும் அந்த அப்பாவி பெற்றோர்களின் கனவுகள் யாவும் குலைந்துபோனது. புலிகளின் தாகம்; தமிழீழ தாயகம் என்று இளம்தலைமுறை பாடத்தொடங்கியதும் அந்தப்பெற்றோர் கையாலாகாதவர்களானார்கள்.
இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் அறிமுகமானபொழுது கல்வியையே மூலதனமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயமான போராட்டத்திலிருந்து தப்பவைப்பதற்கே பெரிதும் முயன்றனர்.
இந்த நாவலில் வரும் அவன் என்ற பாத்திரத்துக்கு பெயர் இல்லை. கிட்டு, மாத்தையா, பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம், லோரன்ஸ் திலகர், யோகி, இப்படி எல்லோரும் தமிழ் உலகம் அறிந்த பெயருடன் வருகிறார்கள். ஆனால் இந்நாவலின் நாயகன் பெயர் அவன். இந்த அவனில் பலர் இருக்கலாம். ஏன் நீங்களாகவும் இருக்கலாம் … என்று ஒவ்வொரு ஈழத்தமிழ் இளைஞனின் தலையிலும் அனைத்தையும் வைக்கிறார் சாத்திரி.
விடுதலைக்காக என்னவோ எல்லாம் செய்துவிட்டு, எத்தனையோ சகோதரப்படுகொலைகளையும் அழிவுகளையும் சந்தித்துவிட்டு தமிழ் ஈழத்தின் பெயரால் எத்தனையோ பாதகங்களையும் குற்றங்களையும் புரிந்துவிட்டு விபசாரிகளின் அரவணைப்பில் எல்லாம் சுகித்துவிட்டு, இறுதியில் தலைவர் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிட்டார், சிறிதுகாலத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்துமாறு சொல்லிவிட்டார், முதலான பணிப்புரைகள் வந்த பின்னர்தான் இந்நாவலின் நாயகன் அவனுக்கு, தனது வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றிய சிந்தனை வருகிறது.
உணவு விடுதியில் எச்சில்கோப்பை கழுவும் பொழுதான் சுடலைஞானம் பிறக்கிறது.
” ஊர் சுத்தாமல் படியடா படியடா ” என்று அவனது அப்பா திட்டிய திட்டுக்கள் திரும்பத்திரும்ப அவன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
மது, புகைத்தல், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் போதைவஸ்து முதலானவற்றை அடியோடு வெறுத்தவர்தான் அவனுக்கும் அவனைப்போன்ற பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கும் ஆதர்சமாக விளங்கிய தலைவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயம் கருதியோ தந்திரோபாயமாகவோ போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதும் அவர் தவிர்க்கச்சொன்னவற்றை நாடி ஓடி இறுதியில் மதுவெறியிலேயே அவன் காரை செலுத்திச்சென்று பள்ளத்தில் வீழந்து மடிவதுடன் நாவல் முடிகிறது.
தலைவரின் கொள்கைகள் கோட்பாடுகள் ஈழத்தமிழனுக்கு மட்டுதான் விதிக்கப்பட்டிருந்ததா…? ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் நிதி சேகரிக்கவும் புகலிட நாடுகளில் தஞ்சமடைந்த இளைஞர்களுக்கு விதிக்கப்படவில்லையா?
ஒரு தடவை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபொழுது விமானப்பணிப்பெண் அருந்தத்தந்த பியரின் பெயர் டைகர். புலியின் பெயரிலும் பியர் இருப்பது எனக்கு அன்றுதான் தெரியும். சாத்திரி எழுதியிருக்கும் ஆயுதஎழுத்து நாவலின் இறுதியிலும் மலிவுவிலையில் விற்கப்படும் சோழன் பியர்வருகிறது. என்ன ஒற்றுமை. சோழமன்னனின் புலிக்கொடியுடன் இரண்டு பியர்களையும் ஒப்பிட்டுப்பார்க்க மனம் கூசியது.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரை எப்படியாவது அதிகூடிய விருப்பு வாக்குகளினால் வெல்லவைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டு, ” சோழன் பரம்பரையே எழுந்து வாடா” என்ற பாடலையும் அவருக்கு சார்பான இணையத்தளம் ஒன்று அடிக்கடி ஒலிபரப்பியது.
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய தமிழன் பரம்பரையில் சோழமன்னனும் இடையில் புகுந்துகொண்டான். இந்தப்பரம்பரையின் சரித்திரம் தெரியாத யாரோ ஒரு மதுப்பிரியன் டைகர் பியரும் – சோழன் பியரும் கண்டுபிடித்துவிட்டான்.
இன்று யாழ்ப்பாணம்தான் சாராய விற்பனையில் இலங்கை அரசுக்கு வரிவழங்குவதில் முன்னிலை வகிப்பதாக நல்லாட்சிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் ஆதரவு வழங்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவரும் இந்நாவலின் நாயகனின் தலைவர்தான். ஈழம் கேட்ட தலைவரின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பாராளுமன்றில் நியமன அங்கத்தவர் பதவிகேட்டதிலும் வடமாகண முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதிலும் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்நாவலின் ஆசிரியர் அவன் என்ற பாத்திரம் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் போராளித்தலைவர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் பிற ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசுகளையும், உளவுத்துறைகளையும் விமர்சித்துக்கொண்டு ஒரு கதைசொல்லியாக இந்நாவலை நகர்த்திச்செல்கிறார்.
அவரது உதாரணங்கள் சில: நட்சத்திர நாடு – அமெரிக்கா, நட்சத்திர நாய்கள் அமெரிக்கா சி.ஐ.ஏ உளவமைப்பு, மற்றும் அவர்களுக்காகப் பணத்துக்கு வேலை செய்பவர்கள். உடைந்த நாடு: ரஷ்யா.
இளைஞர்களை உணர்ச்சியினால் உசுப்பேற்றிய தமிழ்த்தலைவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களில் சிலர் தம்மால் உசுப்பேற்றியவர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆயுதமுனையில் எச்சரிக்கப்பட்டார்கள். ஒரே கொள்கையுடன் உருவான இயக்கங்கள் அனைத்தும் ஆயுதம்தான் ஏந்தின. முடிந்தவரையில் சகோதரப்படுகொலைகளை நடத்திவிட்டு, இறுதியில் தம்மால் ஆயுதம் களையப்பட்ட புளட், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கங்களை தேர்தலுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைத்த தலைவர், தாமும் தமது இயக்கமும் மட்டுமே ஆயுதங்களையும் சயனைட்டுகளையும் நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
இவர்கள் அனைவரும் இந்நாவலில் இடம்பெறும் சம்பவங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நாவலின் தொனிப்பொருள் சுயவிமர்சனம்தான். அதிலிருந்துதான் உண்மைகளை வாசகர்கள் தேட வேண்டும். தேடுதலுடன் நின்றுவிடாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் தேட வேண்டும். அவ்வாறு பாவசங்கீர்த்தனம் செய்தால் அதுவே இந்நாவலின் வெற்றி.
இல்லையேல் பத்தோடு பதினொன்றாக ஈழப்போராட்ட நாவல்களில் சாத்திரியின் ஆயுதஎழுத்தும் ஒன்று என்ற வரிசைக்குள் வந்துவிடும்.
அல்சர் நோய் உடலில் எந்தப்பாகத்தில் வரும் என்பதும் தெரியாத அப்பாவியாகவும் இளம்குறுத்துக்கள் இந்த இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்குடாநாட்டில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்களின் வாழ்வின் மறக்கமுடியாத நாள். அவர்களின் வெளியேற்றம் குறித்தே நாவலின் 36, 37, 38, 39 ஆவது அத்தியாயங்கள் பேசுகின்றன.
சிங்கள அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்த ரெஜினா என்ற இளம் யுவதி எப்படி கரும்புலியாகி ஒரு முக்கிய சிங்கள அரசியல் தலைவருடன் சிதறிப்போனாள், அரசின் புலனாய்வுப்பிரிவு சித்திரவதைக்கூடத்தில் முன்னாள் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தில் இணைந்திருந்த ராணி என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் அவனை பாலியல்ரீதியில் துன்புறுத்தி உண்மையை வரவழைக்கப்பார்க்கிறாள்.
அவள் எவ்வாறு ஒரு விடுதலை இயக்கத்திலிருந்து போராடப்புறப்பட்டு புலிகளில் இருந்த ஒரு சொந்தக்காரப்பெடியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவளது காதல் கணவன் (அவனும் அந்த இயக்கத்தில் இருந்தவன்) சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இவளும் அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைந்து தன் கணவனைக்காட்டிக்கொடுத்தவனை பழி தீர்த்துவிட்டு ஒரு பெண் கரும்புலிக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்ட அவனை சித்திரவதை முகாமில் விதையை நசுக்கி வதைக்கிறாள்.
ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பணத்துக்காக காதலர்களை பிரிக்கும் பரிசுகெட்ட வேலைகளிலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்விலும் மூக்கை நுழைத்து அவர்களின் வாழ்வை சீரழித்த கதைகளையும் இந்நாவல் சித்திரிக்கிறது.
இந்நாவல் இவ்வாறு தனிநபர், சமூகம், விடுதலை இயக்கம் பற்றியெல்லாம் விமர்சிக்கிறது. அதனால்தானோ இதன் வெளியீட்டு அரங்கு சென்னையில் நடந்தபொழுது அதனை கண்டுகொள்ளாமல் பலர் கள்ளமௌனம் அனுட்டித்தனர்.
ஒரு காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் தன்னைப்பினைத்துக்கொண்ட சாத்திரி காலம் கடந்து ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறுதான் ஆயுதஎழுத்து. அதனை அவர் நாவல் வடிவில் இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.
அதன்மூலம் அவர் பாவசங்கீர்த்தனமும் செய்துகொண்டார். மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்….? என்ற வினாவையும் இந்நாவல் செய்தியாக்கியுள்ளது.
—0—

ஈழப் போர் இறுதி தினங்கள்

1:56 PM, Posted by sathiri, 2 Comments

ஈழப் போர் இறுதி தினங்கள்

புலிகளின் சரணடையும் முயற்சி

தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது; பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன; நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில பல விவாதங் கள், விசாரணைகள்மீண்டும் இருள். தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி, இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணையில் அவர் தெரிவித்த செய்திகளும், 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும், ஈழப் போர் இறுதி தினங்கள் குறித்த சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன?

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட கடைசித் தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சரணடையும் முயற்சி மீது நம்பிக்கை வைத்து, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது கணவர் உட்படச் சிலரை காணவில்லை என்று, அனந்தி சசிதரனும் மற்றும் நான்கு போராளிகள் உறவினர்களும் இலங்கை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணையின் போது சாட்சியமளித்த அனந்தி, ‘இறுதி தினங்களில் விடுதலைப் புலிகள் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது. அப்போது எனது கணவர் எழிலனும் சரணடைந்தார். அதன்முன்பு, சரணடைவது தொடர்பாகத் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், தொலைபேசியில் எழிலன் உரையாடினார். அதனை நான் கணவர் அருகில் இருந்து கேட்டேன். மேலும் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களுடனும் கனிமொழி பேசினார். முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2009 மே 16ஆம் திகதி காலை 8 மணியளவில் எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார்எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் பல ஊடகப் பேட்டிகளிலும் இதனை உறுதிப்படுத்தினார்.

கனிமொழி
அனந்தியின் இந்தப் பேச்சை கனிமொழி மறுத்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலோ சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. மேலும், எனக்குச் சசிதரன் யார் என்றே தெரியாது. இந்நிலையில், நான் தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்று முழுதிலும் தவறானது. யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், ‘கனிமொழி இதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர் தான் கூறவில்லையெனக் கூறலாம். ஆனால், அவரது மனசாட்சிக்குத் தெரியும். மேலும், இறுதிகட்டப் போரின்போது நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்குத் தெரியும். பல நாடுகள் இணைந்து இறுதி மோதல்களை முடித்து வைத்தன. ஆனால், இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றதுஎன்கிறார் அனந்தி.
விடுதலைப் புலிகள் சரணடைவு புதிய செய்தியல்ல. வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சரணடைய முன்வந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் போன்றவர்கள் சரவதேச யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சரணடைவு பேச்சுவார்த்தைகளில் யார் யார் ஈடுபட்டனர், இலங்கை அரசு ஏன் தன் உறுதிமொழியை மீறியது என்பது குறித்து ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. சரணடைவு பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பிலிருந்து ஈடுபட்டவர்களில் ஒருவரும், அப்போது புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்தவருமான கேபி எனப்படும் குமரன் பத்மநாபனும் இது குறித்துப் பேசியுள்ளார். தற்போது இலங்கையில் வசிக்கும் குமரன் பத்மநாபனைத் தொடர்புகொண்டோம்.

தற்போதைய சூழலில் தான் பேசுவது பொருத்தமானதல்ல. தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு முடியும் வரையில் எதையும் பேச வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாககுமரன் பத்மநாபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் வசிக்கும் முன்னாள் போராளிகள் இதுகுறித்துப் பேசுவது சாத்தியமற்ற நிலையில், தற்போது பிரான்ஸில் வசிக்கும் எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சாத்திரியை மின்னஞ்சலூடாகத் தொடர்புகொண்டோம். 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இது கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து நேரடியாகவும் சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு பா.நடேசனால் இரகசிய வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடேசனுக்கும் கனிமொழிக்கும் தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தது. இக்காலகட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான தொடர்பாளராகக் கனிமொழி இருந்தார்என்றார் சாத்திரி.

சாத்திரி
மேலும், ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம், ‘நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதைச் செய்ய முடியாதுவிட்டால் தயவுசெய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும் தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவுசெய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்என்றிருந்தது.

இலங்கை என்ற நாட்டைப் பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரா என்பதை நடேசனிடம் கேட்டுச் சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதுஎன்றார் ப.சிதம்பரம்.

இந்தத் தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து, விடுதலைப் புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் நுழைந்த ராணுவம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில முக்கியத் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. அப்போது தீபன், ‘ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும். அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்என்ற நிஜ கள நிலைமையைத் தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள் அதை மறுத்து, முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனையில், ‘எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையைக் கைவிடத் தயார்என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.

ப. சிதம்பரம்
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாதுஎன்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லைவிஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார்.

இந்த விஷயங்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் வைகோ, ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்என்றார். குழம்பிப் போனார் நடேசன்.

நடேசன் அடுத்துப் பழ.நெடுமாறனை தொடர்புகொண்டார். அவரும் வைகோ சொன்னதையே சொன்னார். இவர்கள் இருவரது கருத்தும் பிரபாகரனிடம் சேர்க்கப்பட்டது. அப்போது, இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரன் அதையே நம்பியதாகத் தெரிகிறது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டதுஎன எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.

ப. சிதம்பரம் தயாரித்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது. இதற்கிடையே அமெரிக்கத் திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையைக் கைவிட வேண்டும்என்ற அளவில் இருந்தது. அமெரிக்கத் திட்டமோ, ஒரு படி அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்என்ற வகையில் இருந்தது. அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும் தளபதிகளையும் வெளியேற்றும் அந்த அமெரிக்கத் திட்டத்தையும் பிரபாகரன் நிராகரித்திருந்தார்.

யுத்தம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார்.

வைகோ
26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர் நிறுத்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்என்றார். இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. அடுத்த 48 மணி நேரத்துக்குள் மே 18ஆம் தேதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது. இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.

இதன்முன்னர், இறுதி நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள், தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பில் உலகத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களோடு எல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சிலர் கனிமொழியோடும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

பழ. நெடுமாறன்
புலிகள் சரணடையும் தீர்மானம் எடுத்தபோது முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வே, ஐ.நா. சபையின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதிநிதி ஆகியோரைத்தான் தொடர்புகொண்டார்கள். புலிகள் தலைமை சரணடையும் முடிவு, 2009 மே 15ஆம் தேதி அன்றைய சர்வதேச தொடர்பாளர் கே.பி. மூலமாக நோர்வேக்குத் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள். ஐநா சபை அதிகாரிகளோடு அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியாது; எனவே இந்திய அரசோடு தொடர்புகொள்ளலாம் என நோர்வே அரசு வழங்கிய ஆலோசையின்படி அன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தோடு தொடர்புகொள்ள முயன்றார்கள். அப்போது புலிகளுக்கும் இந்திய மத்திய அமைச்சருக்கும் இடையில் தொடர்பாளராக கனிமொழி இருந்தார்.

இந்நிலையில் இப்போது சிலர் கனிமொழி சொன்னபடிதான் புலிகள் சரணடைந்தார்கள் என்பது போலச் செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர் புலிகளைச் சரணடையும் படி சொல்லவும் முடியாது. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. கனிமொழியை நம்பி சரணடையும் முடிவை எடுக்கும் அளவுக்குப் புலிகள் அமைப்பும் இல்லை. ஒரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை அடுத்த நாட்டின் முதலமைச்சரோ அவரின் வாரிசோ அடுத்த நாட்டின் மத்திய அமைச்சரோ தடுத்து நிறுத்திவிட முடியாது. இவையெல்லாம் தெரிந்தும் அனந்தி சசிதரன் அண்மைக்காலமாகப் பேசி வருபவை தேர்தல் அரசியலைக் குறி வைத்ததாகவே தெரிகிறது’’ என்கிறார் சாத்திரி.

யுத்தத்தின் இறுதி நாட்கள் பேச்சுவார்த்தையில் புலிகள், இந்திய அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்பில் இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அருட் தந்தை ஜகத் கஸ்பார் இருவரும்கூட அனந்தி சசீதரன் பேச்சு தேர்தல் அரசியலை மையமாக வைத்தே நகர்த்தப்படுகிறதுஎனப் புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர்.

சுப. வீரபாண்டியன்
சுப. வீரபாண்டியன், ‘போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில் என் பங்களிப்பு இருந்தது. கனிமொழி தூண்டுதலில் ப. சிதம்பரம் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதில் புலிகள் தரப்பில் கையெழுத்துப் போடுவார்களா என என்னிடம் கேட்டார்கள். அதனை நான் புலிகளுக்குத் தெரிவித்தேன். ஆனால், முயற்சி தொடரவில்லை. பின்னால், தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் அதனைத் தடுத்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். மே 17, 18இல் மீண்டும் 48 மணி நேரத்துக்காவது போர் நிறுத்தம் செய்ய முடியுமா என முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சியும் இப்போது குறிப்பிடப்படுவதுபோல் சரணடைவதற்கான முயற்சி அல்ல, போர் நிறுத்தத்துக்கான முயற்சிதான். மூன்று தலைமுறைகளாக நடைபெற்றுவரும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் கனிமொழி முடிவு எடுக்க முடியுமா? ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் திமுகவுக்கு எதிராக எதாவது ஒன்று உருவாக்கப்படும். இப்போது அனந்தி மூலம் அது தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்கு இன்னமும் ஈழ அரசியல் பயன்படுகிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறதுஎன்றார்.

ஜெகத் கஸ்பர், ‘ஜனவரி 28, 29, 30 தேதிகளையொட்டியும் மே 17,18 இறுதி நாட்களிலுமாக இரண்டு முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜனவரி கடைசித் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த முயற்சியில், இரண்டு பக்கமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் ஒரு சிறு பங்களிப்பை நான் செய்தேன். அப்போது, இந்தியத் தரப்பில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் முன்வைக்கப்பட்டு அதனை இரு தரப்புமே ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்த முயற்சி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. அப்போது, புலிகள் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக்கொண்டார்கள் என இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு அனந்தபுரம் சமர் மீது புலிகள் வைத்திருந்த ஒரு நம்பிக்கைக் காரணமாக இருக்கலாம் என நான் அனுமானித்தேன்.

ஜெகத் கஸ்பர்
அனந்தபுரம்தான் இறுதி யுத்தத்தில் கடைசித் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யுத்தத்தில் இலங்கை ராணுவம் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியதை புலிகள் எதிர்பார்க்கவில்லை. அந்த யுத்த்த்தில் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் இறந்துவிட்டார்கள். இதனால், அனந்தபுரத்துடன் கிட்டத்தட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது. அதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த முயற்சி என்பது அதன்பிறகு புலிகள் சரணடைவதற்கான முயற்சியாக மாறிவிட்டது. ஏனெனில், சண்டையை நிறுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருக்கவில்லை.

கடைசித் தினங்களில் சரணடையும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பிரபல போர்ச் செய்தியாளர் மேரி கொல்வின், இலங்கை முன்னாள் எம்பி சந்திரா நேரு, விஜய் நம்பியார் உட்படப் பலர் அதில் ஈடுபட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில்தான், வெள்ளைக்கொடிகளைக் காண்பித்து நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய முன்வந்தார்கள். பொதுவாக இதுபோன்ற சரணடையும் சம்பவங்களில் ஐநா பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும். விஜய் நம்பியார் அப்போது கொழும்பில்தான் இருந்தார். ஆனாலும், ஐநா பிரதிநிதி ஒருவர்கூடக் களத்துக்கு வரவில்லை. ஐநா பிரதிநிதி இல்லாததைப் பார்க்கும்போது இதில் ஒரு சதி இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

இலங்கை அரசைப் பொருத்தவரைக்கும் தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும் புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்த கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் அவர்கள் கணக்குஎன்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்தியத் தரப்பில் முன்னெடுக்கபட்ட போர் நிறுத்த முயற்சிகளை வைகோ ஆலோசனைபடிதான் புலிகள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை ஏற்கெனவே வைகோ மறுத்துள்ளார். இது குறித்துக் குமரன் பத்மநாபன் கூறியிருந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்த வைகோ, ‘போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளைப் பிரபாகரன் மேற்கொள்வார்என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈழப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை), ‘இறுதி யுத்தத்தில் சரணடையும் முடிவை போராளிகளுக்குச் சொன்னது மேரி கொல்வின் தரப்பும் மேற்குலகமும்தான். அப்போது நடைபெற்ற புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல வழிகளில் நடந்தது. அதில், கனிமொழி தரப்பு மட்டுமல்லாமல் புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும் ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர். அவர்கள் இன்று மவுனமாக உள்ளனர். அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளிவரலாம்என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

தமிழகத் தலைவர்கள் மவுனம் கலைப்பார்களா

--------------------------------------------------------------------------------------------------------------------------


விடுதலைப்புலிகளும் சரணடைவும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பணியாற்றிய ஒருவர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் புலிகள் சரணடைவு குறித்து, தெரிவித்தவை இவை.
புலிகளின் சரணடைவு மூன்று நான்கு வகையில் நிகழ்ந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப் புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும் புலிகளுக்கே தப்பி, படையினரிடம் சரணடைந்தனர். குறிப்பாக, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில் இந்தச் சரணடைவு நடந்தது.
அடுத்தது, யுத்தத்தின் இறுதியின்போது நடந்த சரணடைவு. வெள்ளைக்கொடியுடன் நடந்த இதில் புலித்தேவன், நடேசன், ரமேஸ் என்ற இளங்கோ மற்றும் நடேசனின் குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் சரணடைந்தனர்.
மூன்றாவது, யுத்தம் முடிந்த பிறகு அல்லது யுத்த ஓய்வுடன் நடந்த சரணடைவு. இதன்போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒரு தொகுதியினர் (ஏறக்குறைய 100 பேருக்கு மேல்) சரணடைந்தனர். இதில்தான் எழிலன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், அரசிற்துறை முக்கியஸ்தர் இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நிதர்சனம் நிறுவனப் பொறுப்பாளர் மிரேஸ், தமிழீழத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் திலகன், தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பொறுப்பாளர் குட்டி, நகை வாணிபப் பொறுப்பாளர் பாபு, தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரும் பிரபாகரனின் நெருங்கிய சகாவுமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்), புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி எனப் பலர் சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய எந்த விவரமும் இன்றுவரை இல்லை. இவர்கள் முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகளின் தலைமைக்குரியவர்கள் - தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர். மிஞ்சிய முக்கியஸ்தர்கள்தான் மதகுருவுடன் சென்றனர்.
இதனை அடுத்தத் தொகுதியினர் பொதுவாகவே சரணடைந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல். இன்னொரு தொகுதியினர் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குச் சென்றனர். இவர்களைப் பிற போராளிகளும் மக்களும் காட்டிக் கொடுத்தனர். எப்படியோ இவர்களைப் படையினர் முகாம்களில் வைத்துக் கைது செய்துகொண்டு சென்றனர். மற்றொரு தொகுதியினர் படையினரின் பகுதிக்கு மக்களோடு வந்தனர். ஆனால், படையினரிடம் சரணடையாமல் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஏனையவர்கள் இடைநிலையாளர்கள். தப்பிச் சென்றவர்களும் இடைநிலையாளர்களே.

விதிவிலக்காக ஒரு சரணடைவு நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து பின்னர்ப் புலிகளுடன் இணைந்து கொண்ட வேலுப்பிள்ளை பாலகுமாரனின் சரணடைவு. இவர் தனியாக மக்களுடன் இணைந்து சரணடைந்தார். இவருடன் இவருடைய மகன் சூரியதீபனும் பாலகுமாரனின் உதவியாளரும் கூடவே சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களும் இன்றுவரை இல்லை.

(புதிய தலைமுறை, 25-06-2015 இதழில் வெளியானது.)

ஒரு போராளியின் அனுபவங்கள்...

10:37 AM, Posted by sathiri, No Comment

ஒரு போராளியின் அனுபவங்கள்...

 http://www.senguruthi.com/


ஆயுத எழுத்துசாத்திரி 
திலீபன் பதிப்பகம் | விலை:400/-
நிறுவனமயப்பட்ட அனைத்துமே  அதிகாரம் சார்ந்ததுதான் .அதிகாரம் ஏனையோரை ஒடுக்குகிற கருவியாக உருமாறக்கூடியது என்பது எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதே .அது ஒரு புரட்சிகர அமைப்பாக இருக்கலாம், கலகக்குழுவாக இருக்கலாம், வர்க்க சாதிய விடுதலையை கோருபவையாக இருக்கலாம் அல்லது ஈழ மக்களின் துயர் தோய்ந்த நீண்ட நெடுநாளைய போராட்டமாக இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட கூற்று எல்லாவற்றுக்குமே பொருந்தக்கூடியதே!
புறத்திலும் அகத்திலுமாய் விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு தகவல்களை நாம் வாசித்தும் கேட்டும் இருக்க கூடும் ஆனால் அந்த இயக்கத்தின் உள்நாட்டு வெளிநாட்டு பிரிவுகளின் நீண்ட வருடங்கள் பணியாற்றிய சாத்திரி கூறுகிற போது  சுவாரஸ்யம் மேலிடுகிற அதே சமயம் வெறுப்பும் உடனிணைந்து கொள்கிறது.
ஒருமொழி பேசும் இனமக்ககளை இன்னொரு மொழிபேசும் இனமக்கள் பூர்வகுடிகள் என்கிற ஒற்றை அதிகாரத்தை கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாவராலும் ஏற்க முடியாது.அதை ஒடுக்க அல்லது வேரறுக்க கிளர்ந்தெழும் விடுதலை வேட்கைகொண்ட இயக்கங்கள் அச்சமூகத்தை நன்கு ஆராயாமல் அதன் வரலாற்று தன்மைகளை நிகழ்காலத் தேவைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் பேசும் சகல பண்பாட்டு வேறுபாடுகள் உடையவர்களையும் புறக்கணித்து தமிழ் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று புறப்படுகிற போது என்ன வகையான விபரீதங்கள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் என்னென்ன வரலாற்று தவறுகளை உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனிதாபிமானமே இல்லாமல் செய்ய வேண்டி இருக்கும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் விடுதலை புலிகள் இயக்கம்.
ஒரு இயக்கத்துக்கான கோட்பாடு அத்தலைமையினாலே மீறப்படும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க்காமல் அப்படியே ஏற்று செயல்பட வேண்டிய மனோநிலையும் தலைமை செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் அல்லது அதை எதிர்த்து  நமக்கு நாமே சாவை தேடிக்கொள்ள வேண்டுமா  என்பதான கீழ்படிதல் ஒவ்வொரு இயக்கத்தின் சர்வாதிகார தனத்தை நிரூபிப்பதாக இருக்கிறது.இன விடுதலையின் பேரால் தமிழ் பேசும் பகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லீம்களின் உடமைகளையும் வலுகட்டாயமாக பறித்துக்கொண்டு வெறும் கையோடு வெளியேற்றிய கொடூரத்தை புனைவில்லாமல் சொல்லும் காட்சி நெஞ்சை கணக்க செய்கிறது.
ஒரு புரட்சிகர இயக்கம் தன் ஆயுத தேவைக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் என்னென்ன வேலைகளிலெல்லாம் ஈடுபட வேண்டி இருக்கும் என்பதை சாகசத்தோடு வெளிநாடுகளில்  நடைபெற்ற சம்பவங்களின் ஊடே சொல்லி இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.இதுநாள்வரை நமக்கு சொல்லப்பட்ட செய்திகளை கடந்து புலிககளின் சர்வதேச தொடர்புகளையும் அவர்களின் வலைப்பின்னலும் பிரம்மாண்டமானதும் சாகசத்தன்மை வாய்ந்தது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
இந்திய அரசியல் ,இந்திய அரசியலுக்கு ஈழப் பிரச்சனைகள் கொடுத்த நெருக்கடிகள் ,நெருக்கடிகளால் இந்திய இராணுவ வருகை,வருகைக்கு பின்பாக ஈழத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் அந்த அடாவடித்தனத்துக்கு புலிகளின் எதிர்வினை ,நள்ளிரவில் பிரபாகரனை சுட்டுக்கொல்ல டெக்ரா டூனில் இருந்து வான்வழியாக வந்திறங்கும் ஆயுதப்படை .இரவோடு இரவாக நடந்த சண்டையில் வந்த அநேகரும் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் மரித்துப்போக இது மேலும் சிக்கலை கொடுக்குமோ என்கிற பயத்தில் பின்வாங்கிய இந்திய ராணுவம் என ஒவ்வொரு காட்சியாக இந்திய -இலங்கை அரசுகளுக்குமான  தொடர்புகளின் வழியே அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆரின் உதவிகள் என ஈழ மக்களின் மீதான பரிவு விடுதலைப் புலிகளின் தமிழக ஆயுத பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும் முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.கன்னி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேக போராட்ட யுக்தியாக இருந்தது என்பதை இந்நூலின் மூலம் காண முடிகிறது.அதே வேலை எத்தகைய மனோநிலையில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள் மரணத்தை முன் வந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான புறச்சூழலையும் உணர்த்துகிறது.
பிரான்ஸ்,தாய்லாந்து,ஜெர்மனி,சுவிஸ்,இங்கிலாந்து,சிங்கப்பூர்,ருமேனியா,கம்போடியா,செக் குடியரசு,கிழக்கு ஆப்ரிக்கா,மியான்மார்,இத்தாலி,ரஷ்யா,பெல்ஜியம்,போலாந்து,இஸ்காண்டிநோவியா,இந்தோனேசியா,நைஜீரியா மற்றும் இந்நூலில் அரசியல் சூழல் கருதி குறிப்பிட முடியாமல் போன நாடுகளும் சேர்த்து உலகம் சுற்றும் வாலிபனாக வளம் வரும் வெளிநாட்டு பிரிவு ஊழியர்கள் மருந்து,ஆயுதம் மற்றும் இதர கொள்வினை செய்யும் போது எதிர்கொள்ளும் துனீ கர செயல் குறிப்பாக ஆப்ரிக்க கள்ளச்சந்தை தலைவனிடம் ஆயுத கொள்வினைக்காக சந்திக்கும் தருவாயும் இந்தியாவின் பெங்களூரில் துறைமுக அதிகாரியிடம் மருந்து கொள்வினைக்காக இசைந்து போகவேண்டிய சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஆண் தன்மையை உணர்த்துவதோடு..... இயக்க உறுதிமொழிகளும் கட்டுப்பாடுகளும் இங்கு எடுபடாது என்பதை நடைமுறை எதார்த்தத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.          
மொத்தம் 32 விடுதலைக் குழுக்கள் இயங்கியதாக சொல்லும் சாத்திரி ஒவ்வொரு குழுவும் யாருடைய நிதியின் மூலம் இயங்கின அவைகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் சக குழுக்களோடு கொண்ட முரண்பாடு முற்றி பகையுணர்வாக உருமாறி ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்ட சம்பவங்கள் பின் அதன் தொடர்ச்சியாய் புலிகளால் அனைத்து குழக்களும் ஒழித்துகட்டபட்ட கதைகள் என நீள்கிறது. சமகால படிப்பினையாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றமும் மறைவும் நம் கண்முன்னே மனிதத் தன்மையற்ற ஒரு காட்சியாய்  இன அழிப்பாய் நடந்துமுடிந்தபோதிலும் ஒரு புரட்சிகர இயக்கம் சரியான திசைவழியில் பயணிக்காமல் போனால் அது தானாகவே நீர்த்துப்போகும் என்பதன் சமகால எடுத்துக்காட்டு தான் ஈழப் பிரச்சனையில் விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவமாகும்.
புலிகள் அமைப்பின் தலைவர்கள் கிட்டு,பொட்டு அம்மன்,ஆண்டன் பாலசிங்கம்,அவரின் மனைவி அடேல்,மாத்தையா,கருணா,நடேசன்,குமரன் பத்மநாபன்,எல்லாவற்றுக்கும் முன்பாக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் என ஒரு இன விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அதன் அரசியல் தத்துவார்த்த நடைமுறை முரண்பாடுகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது ஆயுத எழுத்து.
நெருக்கடி ,உல்லாசம்,காமம்,வேட்கை,காதல்,சாகசம்,சுவாரஸ்யம் என மனித வாழ்நிலையின் பல்வேறு அம்சங்களை சுமந்து நிற்கும் ஒரு இயக்கப் போராளியின்  அனுபவங்கள் நிறைந்த இத்தொகுப்பு முழுமையானதல்ல மிக சொற்பமான பகிர்வுகளே என்கிற போதும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற முடிவுகள் ஒருபோதும் நன்மை பயக்காது மாறாக விபரீதத்தில் தான் கொண்டு நிறுத்தும் என்பதை தான் சிறுவயது அனுபவத்தோடு சுட்டிக்காட்டி இருப்பது தான் இத்தொகுப்பின் தனித்தன்மையாக அமைந்திருக்கிறது.அப்பவே   படி....   படினு.... சொன்னாங்க நான் தான் கேக்கல.... என மனசாட்சி மறுகும்  மனித தடுமாற்றம் இயல்பானதே!

புரட் …சீ ( சிறுகதை )

2:09 PM, Posted by sathiri, No Comment

புரட் …சீ ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் )
காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது.

 “என்ன இண்டைக்கு எல்லாமே அபசகுனமாவே இருக்கு” என்று நினைத்தபடி நிலத்தை துப்பரவு செய்தவள் சிறிது பதட்டத்தோடு மகன் டிராஸ்கிக்கு போனடித்தாள்.இன்று வார விடுமுறை நாள் டிராஸ்கி குடும்பத்தோடு அவளின் வீட்டுக்கு வரவேண்டிய நாள் போனை எடுத்த டிராஸ்கி “அம்மா …எதுவும் சமையல் செய்ய வேண்டாம் நானே சாப்பாடு கொண்டு வருகிறேன்” என்றதும் மகனுக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்கிற மன நின்மதியோடு அடுத்த தேநீரை தயார் செய்யத் தொடங்கியிருந்தாள்.ஆனாலும்யாருக்கோ எதோ நடந்து விட்டது என்று மனதில் லேசான ஒரு சஞ்சலம் இருந்தாலும் இப்போதெல்லாம் அவளது உலகத்தில் அவளும் அவளது மகன் மருமகள் பேரன். கார்க்கி. இவை மட்டுமே ..இவை தவிர்த்த வெளி உலகம் என்றால் தொலைக்கட்சி செய்திகள் சீரியல்கள் என்பதோடு சரி .. எனவே மனதை தேற்றிய படி அடுத்த தேநீரை தயாரித்து கவனமாக கையில் எடுத்தபடி வழமை போலஅவளது பன்னிரண்டாவது மாடியின் பால்கனி கதவை திறந்ததும் பாரிஸ் நகரத்தின் சித்திரை மாதத்து சில்லென்ற காற்று முகத்தில் அடிக்க லேசான பனி மேக கூட்டத்தில் கான்கிரீட் காடுகளை தாண்டி உயரமாக இரும்பு மரமாக உயர்ந்து நின்ற ஈபிள் கோபுரத்தை வழமை போலவே எரிச்சலோடு பார்த்தபடி தேநீரை உறுஞ்சவும் வீட்டு தொலை பேசி ஒலித்தது .வீடிற்குள் வந்து தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் ..”கலோ மல்லிகா தோழர் சுரேந்தர் இறந்துவிட்டார்”.. என்றது அவளது தோழியின் குரல் ..மல்லிகாவின் கைகள் நடுங்கத் தொடங்கிட்டது போல இருந்ததது தலை லேசாய் சுற்றவே காதில் போனை வைத்தபடி ம் ….ம் ….மட்டும் சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்ந்தாள் .
00000
காலம் 1972 ம் ஆண்டின் ஒரு அதிகாலைப் பொழுது முருங்கையில் படுத்திருந்த சேவல் கூவிக்கொண்டிருக்க வெளிச்சம் லேசாய் பரவத் தொடங்கியிருந்தது .ஊரின் ஒதுக்குப்புறமான பெரிய பனங்காணியின் ஓரத்தில் இருந்த சிறிய குடிசை வீடொன்றில் கண்விழித்த நல்லம்மா தன்மீது கலைப் போட்ட படி படுத்திருந்த மாயவனின் காலை விலக்கியதும் அவன் விரலை சூப்பிய படி சுருண்டு படுக்க போர்வையால் அவனை போர்த்தி விட்டு மறு பக்கம் பார்த்தவள் “குமாரகிட்டுது இன்னும் ஒழுங்கா படுக்கத் தெரியேல்லை” என்று புறுபுறுத்த படியே பக்கத்தில் படுத்திருந்த மல்லிகாவின் பாவடையை சரி செய்தவள் எரிந்து கொண்டிருந்த அரிக்கன் லாம்பை ஊதி அணைத்து விட்டு காலைக் கடனை முடிப்பதற்க்காக வாளித் தண்ணீரோடு பக்கத்திலிருந்த பனை வளவுக்குள் போகும்போது ஒரு உருவம் அசைவதை கவனித்தாள் .அந்தப் பகுதியில் பலரின் கழிப்பிடம் அந்த பனங்காணி தான் என்பதால் யாரோ ஒருவர் ஒதுங்குகிறார் என நினைத்தபடி கொஞ்சம் தூரமாக போய் குந்தியபோது அந்த உருவம் “ஐயோ அம்மா” என முனகுவது கேட்டது . முக்குகிற இடத்தில யாரோ ஒருத்தன் முனகுகிறானே என்று நினைத்தவள் வந்ததை அடக்கியபடி எழுந்து மெதுவாக போய் பார்த்தவள் அதிர்த்து போய் வீட்டுக்கு ஓடிப் போய் மகள் மல்லிகாவை தட்டி எழுப்பி டாச் லைட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் பனங்காணியை நோக்கி ஓடினாள் .

பனையோடு சாய்ந்திருந்த படி முனகிக் கொண்டிருந்தவன் மீது நல்லம்மா டாச் வெளிச்சத்தை அடித்ததும் .இருபதுகள் மதிக்கத் தக்க ஒருவன் தனது மேல் சட்டையை கழற்றி இடக்கால் தொடையை சுற்றி க் கட்டியிருந்தான்.அதிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது ..முகத்தில் விழுந்த டாச் வெளிச்சத்தை முகத்தில் படாதவாறு கையால் மறைத்தபடி முனகலோடு தண்ணி என்றான் .அதுவரை அம்மாவுக்கு பின்னல் அரைத் தூக்கத்திலிருந்த மல்லிகாவுக்கு அவனைப் பார்த்ததும் தூக்கம் பறந்து போய் பயம் பிடித்துக்கொள்ள அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் ..நல்லம்மா அவனிடம் “தம்பி.. நீங்கள் யார் ? எந்த ஊர் ? என்ன பெயர்?” என்கிற விசாரணைகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மீண்டும் “தண்ணீ ” என்று மட்டுமே முனகினான் .நல்லம்மாளும் மல்லிக்கவுமாக சேர்ந்து அவனை கைதாங்கலாக பிடித்து வீடிற்க்கு அழைத்து வந்தவர்கள் வெளியே சாத்தி வைக்கப் பட்டிருந்த கயிற்றுக்கட்டிலை எடுத்து உள்ளே போட்டு அதில் அவனை இருத்தி விட்டு பானையில் இருந்த தண்ணீரை ஒரு செம்பில் அள்ளி கொடுத்தும் குடித்து முடித்து விட்டு அவர்களையும் வீட்டு சூழலையும் கவனித்தவன் அந்த இடம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என உறுதி செய்துவிட்டு
“நான் மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்தவன் ரவிக்குமார்.இரவு நாங்கள் பிரச்சார நோட்டீஸ் ஒட்டிக்கொண்டிருக்க ரோந்து வந்த போலீஸ் எங்களை பிடிக்கப் பார்த்தாங்கள் நாங்கள் ஓடத் தொடங்க சுட்டிட்டங்கள் எனக்கு காலிலை சன்னம் பட்டிட்டுது ஓட முடியேல்லை என்னோட வந்த மற்றாக்கள் ஓட்டிடான்கள் “. என்று சொல்லி முடித்து விட்டு அவர்களைப் பார்த்தான்.

போலீஸ்காரன் சுட்டது என்பதை தவிர நல்லம்மாவுக்கு வேறு ஒன்றும் புரியவில்லை.மல்லிகாவுக்கு கொஞ்சம் புரிந்தது.அண்மைக்காலமாவே “அரச அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி ,அமைச்சரின் கார் மீது வெடிகுண்டு வீச்சு ,போலீஸ் ஜீப்பை கொளுத்தினார்கள்” என்று ஊரில் மட்டுமல்ல பத்திரிகைகளிலும் மக்கள் புரட்சி இயக்கத்தைப் பற்றி பேச்சு அடிபடத் தொடங்கியிருந்தது .இதை யெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியாது ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஊரில் முருகன் கோவில் திருவிழா தொடங்கிய போது அவளது தந்தை கணபதி “முருகனை கும்பிட இந்த கணபதிக்கு உரிமையில்லையா” என்று கேட்டு கோவிலில் உள் நுழையும் போராட்டம் நடத்தியதால் உயர் சாதிக் காரர்கள் வெளியூர் சண்டியன் ஒருவனை கொண்டுவந்து கணபதியை கோவில் வீதியில் வைத்தே வெட்டிக்கொலை செய்து விட்டார்கள்.இதுவரை யாரும் கைது செய்யப்படவுமில்லை நல்லம்மாவும் நியாயம் வேண்டி போலிஸ் நிலையத்துக்கும் அதிகாரிகளிடமும் அலைந்து களைத்துப்போய் இப்போ குடும்பத்தை கவனிக்க சந்தையில் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டாள்.எனவே தங்களுக்கு நியாயம் பெற்றுத் தராத போலீசையும் அதிகாரிகளையும் மக்கள் புரட்சி இயக்கம் தாக்குவது சரியே என்கிற எண்ணம் மல்லிகவுக்குள் நிரம்பியிருந்தது.

இன்று அந்த அமைப்பில் ஒருவனை சந்தித்ததும் அவளுக்கு மகிழ்ச்சி .
நல்லம்மா தேநீர் தயாரிக்கத் தொடங்கியிருந்தாள்.அசையாமல் அவனையே பார்துக்கொண்டிருந்த மல்லிகாவிடம் .எனக்கு ஒரு உதவி செய்ய வேணும் ..
என்ன உதவி ?
நான் காயப்பட்டதை எங்கடை தோழர்களுக்கு தெரிவிக்க வேணும்.அப்பதான் என்னை வந்து கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்வினம் .
அவையள எங்கை போய் சந்திக்கிறது ?
அவர்களை சந்திக்க முடியாது எல்லாருமே தலைமறைவா இருக்கிற ஆக்கள் .ஆனால் நாங்கள் பொதுவா தகவல் பரிமாறுகிற இடம் ஒண்டு இருக்கு. நான் ஒரு கடிதம் எழுதித் தாரன் அதை கொண்டு போய் குடுத்து உங்கடை வீட்டு விலாசத்தையும் அவரிட்டை சொல்லிவிட்டால் தோழர்கள் வந்து என்னை கூட்டிக்கொண்டு போவினம் .
மல்லிகா தனது பாடக்கொப்பி ஒன்றையும் பேனாவையும் அவனிடம் நீட்டியதும் அதில் ஒரு ஒற்றையை கிழித்து மளமளவென எதோ கிறுக்கி அவளிடம் நீட்டினான்.அதை வாங்கிப் பார்த்தாள் எதுவும் புரியவில்லை எதோ மந்திரம் போல இருந்தது. “இது என்ன எழுதியிருக்கு “?
அது உனக்கு புரியாது இதை குடுத்தால் தான் நீ சொல்லுற தகவலை நம்புவாங்கள் .

இதை எங்கை கொண்டு போய் குடுக்கிறது ?
உரும்பிராய் சந்தியில ஒரு பலசரக்கு கடை இருக்கு அங்க தாடி வளர்த்த ஒருவர் இருப்பார் .பெயர் பாலா அவரிட்டை குடுத்தால் சரி .
கடிதத்தை வாங்கியவள் தனது பாடப் புத்தகத்தினுள் அதை வைத்துவிட்டு வேகமாக முகம் கழுவி பாடசாலை சீருடையை அணிந்து தயாராக நல்லம்மாவும் மாயவனை எழுப்பி பாடசாலைக்கு தயார்பண்ணி அனைவருக்கும் தேநீரை கொடுத்து விட்டு சந்தைக்கு போய் விட்டாள் .மல்லிகா பெண்கள் கல்லூரி ஒன்றில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் மாயவனை அவனது பள்ளியில் கொண்டுபோய் விட்டு விட்டு தனது பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கண்ணில் படாமல் கடிதத்தை கொண்டுபோய் கொடுத்து விட்டு ரவிக்குமாருக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டவள். சாகசமான ஒரு வீரச்செயலை செய்யப் போவது போன்ற மன நிலையில் புத்தகப் பையை சைக்கிள் கரியரில் மாட்டிவிட்டு மாயவனையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தாள் .
……
மதியமளவில் இருவர் இரண்டு சைக்கிள்களில் மல்லிகாவின் வீடிற்கு வந்தார்கள்.வந்தவர்களில் ஒருவன் தன்னை சுரேந்தர் என்று மெதுவான குரலில் அறிமுகப்படுத்திக் கொண்டான் பார்ப்பதற்கு சாதுவானவன் போல இருந்தது . சற்று தூரத்திலேயே விறைப்பாக நின்றிருந்தவனை காட்டி அவன் பெயர் லெனின் என்று சொன்னவன் உங்கள் உதவிக்கு எங்கள் இயக்கம் சார்பாக நன்றி. தோழரை அழைத்துப் போகிறோம் என்றதும். “தேத்தண்ணி போடுறன் குடிச்சிட்டு போங்கோ” என்று அவசரமாக கேத்திலை தூக்கிய மல்லிகாவிடம் “வேண்டாம் இன்னொரு தடவை கட்டாயம் வருகிறோம் “என்றபடி ரவிக்குமாரை கைதாங்கலாக அழைத்துப்போய் சைக்கிளில் இருத்தியதும் ரவிக்குமாரும் நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.அதன் பிறகு சுரேந்தர் அடிக்கடி தனியாகவும் வேறு சிலரோடும் மல்லிகா வீட்டிற்கு வந்து போவான் ரவிக்குமார் எப்போதாவது வருவான் .மல்லிகாவின் வீடு ஒதுக்குப்புறமான இடத்தில் தனியாக இருந்ததால் மக்கள் புரட்சி இயக்கத்தினருக்கு பாதுகாப்பாக அவர்கள் சந்திக்கும் இடமாக மாறிப்போயிருந்தது.அங்கிருந்த மாமரத்தின் கீழேயிருந்து காரா சாரமாக விவாதிப்பார்கள் வருகிறவர்களுக்கு தேநீரோ சாப்பாடோ நல்லம்மா அவசரமாக தயாரித்துக் கொடுக்க அவர்கள் பேசுவதை கவனித்தபடியே மல்லிகா பரிமாறுவாள் .

சுரேந்தர் எப்போதுமே கையில் புதகங்களுடந்தான் வருவான் ஒருநாள் தனியாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவனின் முன்னால் போய் நின்ற மல்லிகா தயங்கிய படியே “எனக்கும் உங்கடை இயக்கத்தில சேர விருப்பம் சேர்த் துக்கொள்ளுவீங்களா ?” என்றாள்.தலையை நிமிர்த்தி அவளையே சிறிது நேரம் பார்த்தவன் “எங்கள் பாதை மிக மிக கடினமானது ஆனால் உன்னைப்போன்ற உழைக்கும் வர்க்கத்து துணிச்சலான பெண்ணை எங்கள் இயக்கத்தில் உள் வாங்காது பயணிப்பதும் தவறு .சரி எங்கள் அடுத்த கூட்டத்திற்கு உன்னை அழைத்துப்போய் எங்கள் மற்றைய தோழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்து விட்டு உன்னை இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறேன் ஆனால் ஒரு விடயம் இயக்கத்தில் இணையும்போது உனக்கு வேறு பெயர் வைக்கவேண்டும் எங்கள் இயக்கத்தில் எல்லோருக்கும் அப்படிதான்”.. என்றவனை இடை மறித்து “அப்போ உங்கடை பெயரும் பொய் பெயரா ?”
லேசாய் சிரித்தவன் “அப்படிச் சொல்லக் கூடாது இது புரட்சியாளர்களுக்கான புனை பெயர் .அவர்களின் பாதுகாப்புக்கானது “..
அப்போ எனக்கு என்ன பெயர் வைக்கப் போறிங்கள் ?…
கொஞ்சம் யோசித்தவன் ..”ம் ..நீலவ்னா ”
தலையை சொறிந்தபடி .என்ன “நீல வண்ணவா இது கண்ணன் பேரெல்லோ” ..
நீல வண்ணா இல்லை நீலவ்னா ..
அப்பிடியெண்டால் என்ன அர்த்தம் ?..
ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து நீட்டியவன் “இதைப் படி நீலவ்னா என்கிற பெயரின் அர்த்தம் புரியும்” என்றவனிடம் புத்தகத்தை வாங்கிப்பார்த்தாள் .அதன் மட்டையில் “தாய் மார்க்சிம் கார்கி “என்று எழுதியிருந்தது.சரி படிக்கிறன் என்று தலையாட்டிய படியே புத்தகத்தைவாங்கிப்போய்விட்டாள்.
……
லீவு நாளொன்றில் சுரேந்தர் மல்லிகாவை அவர்களது கூட்டத்திற்கு அழைத்துப் போனான் யாரோ ஒருவரின் வீடு. வயதானவர் ஒருவர் வரவேற்றார் உள்ளே போனதும் வீட்டின் அறையில் அப்போதுதான் தாடியும் மீசையும் முளைக்கத் தொடங்கிய இளையவர் சுமார் இருபது பேர் வரை அமர்த்திருந்தார்கள்.சுரேந்தரை கண்டதும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்தாலும் அனைவரது கண்களும் மல்லிகா மீதே இருந்தது .சிலர் தங்களுக்குள் குசுகுசுத்தார்கள் .சிறிது நேரத்தில் ரவிக்குமாரும் லெனினும் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி அமர்ந்ததும் ரவிக்குமார் வணக்கம் சொன்னபடியே கையை உயர்த்தி அனைவரையும் அமரச் சொன்ன பின்னர் மல்லிகாவை பார்த்து கையை நீட்டி “தோழர்களே இவர்தான் நீலவ்னா. நான் காயமடைந்த வேளை இவர்கள் வீட்டில் தான் தஞ்சமடைந்திருந்தேன் . நமது அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுரேந்தர் மூலமாக நீலவ்னா இப்போ எமது இயக்கத்தில் இனைய வந்துள்ளார். சமூகப் புரட்சியையோ வர்க்கப் புரட்சியையோ பெண்களின் பங்களிப்பின்றி வென்றடைய முடியாது.அவர்களையும் சமமாக எம்மோடு இணைத்துப் போராடவேண்டும் .எமது இயக்கத்தின் முதலாவது போராளி நீலவ்னாவை வரவேற்பதோடு மேலும் பெண்களை எமது இயக்கத்தில் உள்வாங்க வேண்டும்”.என்று சொல்லி முடித்ததும் சிலர் கை தட்ட முயற்சித்த போது ..”வேண்டாம் தோழர்களே யாரும் கை தட்ட வேண்டாம் நாம் அரசியல் வாதிகளின் பேச்சை கேட்டுக்கேட்டு கை தட்டியே களைத்துப் தட்டுக்கெட்ட இனமாகிப்போய் விட்டோம் இனியும் கையை தட்டாமல் கைகளை எமது இனத்தின் விடுதலைக்காக உயர்த்துவோம் தாக்குதல்களை தீவிரப் படுத்துவோம்.எமது இராணுவ பிரிவு பொறுப்பாளர் லெனினின் திட்டங்களை செயல்ப்படுதுவோம்” என்று ஆவேசமாக பேசி முடித்ததும் அந்த இடம் அமைதியானது .

ரவிக்குமார்தான் அந்த இயக்கத்தின் தலைவர் என்பது அப்போதுதான் மல்லிகாவிற்கு தெரியவந்தது .அப்போது கூட்டத்தில் ஒருவன் கையை உயர்த்தி “புதிதாக இணைத்த நீலவ்னாவை தோழர் என்று அழைப்பதா அல்லது தோழி என்று அழைப்பதா” என்றன் .
ரவிக்குமார் சுரேந்தரை திரும்பிப் பார்க்க அனைவருக்கும் முன்னால் வந்த சுரேந்தர் தோழர்களே பெண்களும் எமக்கு சமமானவர்கள் அவர்களை தோழி என்றழைப்பது அவர்களை சிறுமைப்படுத்தும் எனவே அவர்களையும் தோழர் என்றே அழைப்போம் .என்றபடி தனது பேச்சை தொடர்ந்தான் .அவனது பேச்சில் இலயித்து நின்ற மல்லின் முகத்தில் மாஸ்கோவின் சில்லென்ற காற்று முகத்தில் லேசாய் அறைந்து போனது.ஸ்டாலின் கிராட்டின் வீரம் நரம்புகளில் பாய்ந்தது .இரஷ்ய தெருக்கள் மனக்கண்ணில் விரிய செம்படை வீரர்கள் விறைப்பாய் நடந்து திரிந்தார்கள்.அவன் பேசி முடிக்கும்போது எப்படியும் எமக்கான ஒரு நாடு கிடைத்து எமது முதலாவது தூதரகத்தை மாஸ்கோவில் திறந்துவிடுவோம்… என்கிற நம்பிக்கை மல்லிகா வைப்போலவே அங்கிருந்த அனைவருக்கும் வந்திருக்க வேண்டும் தங்களை மறந்து கை தட்டினார்கள் .அதன் பின்னர் சுரேந்தரின் பேச்சை கேட்பதற்காகவே அவள் கூட்டங்களுக்கு போகத் தொடங்கியிருந்தாள் .
….
சில நாட்கள் கழிந்த காலைப்பொழுதொன்றில் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்த மல்லிகா சந்திக்கடையில் தொங்கவிடப்பட்டிருந்த பத்திரிகைகளில் ரவிக்குமாரின் படம் இருப்பதைப் பார்த்து அவசரமாக வாங்கிப் பிரித்தாள் ..”மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மானிப்பாய் மக்கள் வங்கி கிளையை கொள்ளையிட முயற்சித்த போது போலீசாருடன் நடந்த மோதலில் அதன் இயக்கத் தலைவர் ரவிக்குமார் கொல்லப்பட மற்றயவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் .அந்த அமைப்பை சேர்ந்தவர்களை இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் தலைமையிலான குழு தேடி வலை வீச்சு” ..

படித்ததும் மல்லிகாவின் தலை லேசாய் கிர்ர்ர்….. …தேடப்படுவோர் பட்டியலில் முதலாவதாக சுரேந்தர் பெயர் இருந்தது.அவளது பெயர் அதில் இல்லை என்கிற ஆறுதலோடு அவசரமாய் பத்திரிகையை மடித்து புத்தகப் பையில் செருகிவிட்டு பாடசாலைக்கு போகாமல் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தாள் .வீடு வந்தவளுக்கு இன்னொரு அதிச்சி அங்கே சுரேந்தர் சோகமாய் அமர்ந்திருந்தான்.மல்லிகா அவனிடம் நீட்டிய பத்திரிகையை வாங்கிப் படிக்காமலேயே வானத்தை வெறித்தபடி “எங்கடை இயக்கத்தை வளர்கிறதுக்கான முதல் முயற்சி தோற்று விட்டது .தோழனையும் இழந்து விட்டோம்.ஆனாலும் தோற்றுப் போகமாடோம் தொடர்வோம்” ..என்றான் .
சந்தைக்குப் போன நல்லம்மாவும் சங்கதி கேள்விப்பட்டு மாயவனையும் அழைத்துக்கொண்டு திரும்பி வந்திருந்தாள்.அன்றைய பொழுது மௌனமாகவே மாலையகிக்கொண்டிருந்தது .அரிக்கன் லாம்பை துடைத்து எண்ணெய் விட்டுக்கொண்டிருந்த நல்லம்மாவின் காதுக்குள் வாகன சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தும் போதே போலிஸ் ஜீப் ஒன்று அந்த காணிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.ஓடத் தயாரான சுரேந்தரின் கைப்பிடித்து இழுத்து நிறுத்திய மல்லிகா வேகமாக அங்கு சாத்தி வைக்கப்பட்டிருந்த சாக்குக் கட்டிலை எடுத்து குடிசைக்குள் போட்டவள் சுரேந்தரை அதன்மீது தள்ளிவிட்டு “அம்மா எனக்கு காச்சல் “என்றபடி கழுத்துவரை போர்த்தபடி கட்டிலில் படுத்துவிட்டாள்.விளக்கை கொளுத்தி முடித்த நல்லம்மாவுக்கு முன்னால் வந்த அதிகாரி “அம்மா இங்கை மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பெடியள் வாறவங்களா “?..

“ஐயா இயக்கப் பெடியங்களை எனக்கு தெரியாது நாங்கள் தனியா இருக்கிற படியாலை பொதுவாவே எந்தப் பெடியளையும் வீட்டை கூப்புடுறேல்லை” ..
அவள் பதிலை அதிகமாய் ரசிக்காத அந்த அதிகாரி குடிசைக்குள் நுழையப் போகும் போது ..”ஐயா ..உள்ளை மகள் படுத்திருக்கிறாள் அம்மை போட்டிருக்கு” என்றதும் நல்லம்மா கையிலிருந்த லாந்தரை வாங்கி குடிசைக்குள் உயர்த்திப் பிடித்து கண்களால் துளாவ .. மல்லிகா லேசாய் தலையை திருப்பி யாரது ..என்று கேட்கவும் திரும்பி வந்து லாந்தரை கீழே வைத்து விட்டு “அம்மா உங்கடை நன்மைக்குத்தான் சொல்லுறன் இயக்கப் பெடியள் யார் வந்தாலும் பாதுகாக்க வேண்டாம் பிறகு குடும்பத்தோடை உள்ளை போக வேண்டி வரும் ” என்று கடுமையாக சொல்லிவிட்டு போவதற்கு புறப்பட்டவர் எல்லாவற்றையும் பார்த்து பயந்து போய் நின்றிருந்த மாயவனின் தலையை லேசாய் தடவியபடி இங்கை யாரவது அண்ணை மார் வந்தாங்களா?. “இல்லை” யென்று தலையசைத்தான் .என்னுடைய பெயர் என்ன தெரியுமா ?..மீண்டும் “இல்லை”யென்று தலையசைதவனிடம் ..இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் என்று விட்டு அங்கிருந்து போய் விட்டார் .
இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் என்கிற பெயரைக் கேட்டதுமே மல்லிகாவின் இதயத் துடிப்பு அதிகமாகி ..கொட்டிய வியர்வையில் மொத்தமாக நனைந்து போயிருந்தவள் காதோரம் உரசிச் சென்ற சுரேந்தரின் மூச்சுக்காற்றின் சத்தம் சுயத்துக்கு கொண்டு வரவே அவன் தனது இடை கையால் வளைத்து இறுக்கி தலையை தோளில் புதைத்திருந்ததை உணர்ந்தாள்.சட்டென்று அவனை விலக்கி எழுந்துவிட நினைத்தாலும் அதுவரை அவள் அறியா அந்த அணைப்பில் அமிழ்ந்து போய் கிடந்தாள் .அவனுக்கும் அப்படித்தான் . “மல்லிகா அவங்கள் போயிட்டங்கள்” ..என்கிற நல்லம்மாவின் சத்தத்தைக்கேட்டு சுரேந்தர் சட்டென்று அவளிடமிருந்து பிரித்துக்கொண்டு எழுந்து விட்டாலும் . “சே இன்னும் கொஞ்ச நேரம் இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் இங்கை நின்றிருக்கலாமே” என்று அவள் மனது அலையானது .அதன் பின்னர் பல பொழுதுகள் போலிஸ் வராமலேயே அவர்கள் சாக்குக் கட்டிலில் போர்த்திக்கொண்டு பதுங்குவது பழகிப்போனது ..
……
இயக்கத்தை வளர்க்க வேண்டும் அதில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் அதற்கு கிழக்கு மலையகம் எல்லாம் போய் பிரசாரம் செய்துவிட்டு வருகிறேன் அப்போ இங்கு போலிஸ் கெடுபிடிகளும் குறைந்து விடும். நான் திரும்ப வந்ததும் எமது இயக்கத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும் அதுவரை இங்கு லெனின் பொறுப்பாக இருப்பான் பத்திரமாக இரு என்று விட்டு சுரேந்தர் போய் விட்டான் .மல்லிகாவில் மாற்றங்கள் தெரிந்தது ..சுரேந்தரின் புரட்சி அவள் வயிற்றில் வளரத் தொடங்கியிருந்தது .நல்லம்மாவுக்கும் லெனினுக்கும் மட்டுமே இவர்களது காதல் கதை தெரிந்திருந்தது .சுரேந்தர் போன பிறகு லெனினும் வேறு சிலரும் அடிக்கடி அங்கு வந்து போவர்கள் அவர்களிடம் சுரேந்தர் பற்றி விசாரிப்பாள்.
மூன்று மாதங்கள் கழிந்த ஒரு நாளில் வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாய் தோளில் தொங்கும் சிகப்பு பையோடு மல்லிகாவைத் தேடி வந்திருந்த சுரேந்தரிடம் . .
இது என்ன கோலம் ..?
இதுதான் புரட்சியாளர்களின் கோலம் ..அக்கம் பக்கம் பார்த்து விட்டு மல்லிகாவை இழுத்து அணைத்து. “நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” ..
நானும்தான் ..
என்ன சொல்லு ?..
நீங்கள் முதலில் சொல்லுங்கள் ..
எமது இயக்கத்திற்கு நிறையப்பேரை சேர்த்து விட்டேன் அடுத்த வாரம் இயக்கத்தின் மத்தியகுழு கூடப் போகின்றது புதிய தலைவரை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் அடுத்த தலைவர் பதவி எனக்கும் லெனினுக்குமிடையில் தான் பலத்த போட்டியாக இருக்கப் போகின்றது .நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய் ?..
வேறை யாருக்கு ..உங்களுக்குத் தான் ..
அவளின் மீதான அணைப்பை மேலும் கொஞ்சம் இறுக்கியவன் .”எனக்குத் தெரியும் அடுத்த தலைவன் நான் தான் ..இது எனது இலட்சியம் ..எனது தலைமையில் தான் இந்த தேசத்துக்கு விடியல் கிடைக்கும் .எல்லாமே நான் நினைத்தபடி தான் நடக்கும் ..சரி உனது மகிழ்ச்சிக்கு காரணம் என்ன”?..
வெட்கத்தோடு தலையை குனிந்தபடி ..”நீங்கள் இயக்கத்துக்கு தலைவராக மட்டுமல்ல குழந்தைக்கு அப்பாவாகவும் போகிறீர்கள்” .
சட்டென்று அவளை விடுவித்தவன் ..”வேண்டாம் ..அழிச்சிடு” .
ஏன் ??
எமது புரட்சிப் பாதைக்கு இது தடைகள் ..தடைக்கல் .தேசத்தின் விடியலுக்காக போராடும் நாம் குடும்ப பாசத்தில் முழுகி விடக் கூடாது..
தடைக்கல் என்பதை நீங்கள் தழுவும் போதே நினைத்திருக்க வேண்டும் ..
அதுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல .நீயும்தான் ..என்னை மட்டும் குற்றவாளியாக்காதே .இந்த விசயம் வெளியே தெரிந்தாலே எனது தலைவராகும் கனவே பாழாகி விடும். வேண்டாம் ..
உங்கள் தலைவர் பதவியாசைக்காக என் குழந்தையை பலி குடுக்க முடியாது ..
கொஞ்சம் யோசித்தவன் ..”சரி மத்திய குழு கூட்டம் முடியட்டும் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு” ..என்று விட்டு போய் விட்டான் .

இரண்டு நாட்கள் கழித்த அதிகாலையில் போலிஸ் ஜீப் ஒன்று வேகமாக மல்லிகாவின் கணிக்குள் நுழைந்தது.ஜீப் சத்தத்தில் நித்திரையி லிருந்த மல்லிகா விழித்து கண்களை கசக்கி பாக்கும்போததே இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் அவள் முன்னால் நின்றிருந்தார்.அவரோடு வந்த பொலிசார் வீட்டை சோதனை போடத் தொடங்கியிருந்தனர் .
“எங்கயடி அவங்கள் ??எத்தனை நாளாய் இங்கை வந்து போறாங்கள் உனக்கு எவ்வளவு காலம் அவங்களோடை தொடர்பு” என்கிற அவரது கேள்விகளில் திகைத்து நின்ற மல்லிகாவை ஓங்கி அறைந்தவர் வா உன்னை கொண்டுபோய் விசாரிக்கிற முறையிலை விசாரிக்கிறன் என்றபடி கொத்தாய் அவளது தலை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போகவே மாயவன் வீரிட்டுக் கத்தி அழத்தொடங்க காலைக் கடனை கழிக்கப் போயிருந்த நல்லம்மா சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்தாள் .அதற்கிடையில் மல்லிகாவின் கைகளுக்கு விலங்கை மாட்டிய செபஸ்டியன் அம்மாவும் மகளும் சேர்ந்து புரட்சியாடி பண்ணுறிங்கள் என்று ஓடி வந்த நல்லம்மவை எட்டி உதைக்கவே கீழே விழுந்தவள் ஐயா எங்களுக்கு யாரோடையும் தொடர்பு இல்லை எந்தப் புரட்சியும் செய்யேல்லை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்க சோதனை போட்ட ஒரு போலிஸ் காரர் கையில் ஒரு சிகப்புப் பையை கொண்டு வந்து “சேர்” ..என்று செபஸ்டியனிடம் நீட்ட. .அதை வாங்கிப் பிரித்து அதிலிருந்த பிரசுரங்களை எடுத்தவர் சிரித்த படியே “இது போதும் எனக்கு”..என்றபடி மல்லிகா நோக்கி “பொய்யா சொல்லுறாய்” என்றபடி எட்டி உதைக்கப் போகவே கீழே விழுந்து கிடந்த நல்லம்மா “ஐயா என்னை என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ மகள் பாவம் பிள்ளைத் தாச்சி அவளை ஒண்டும் செய்ய வேண்டாம் என்று ஓடிப்போய் என்று செபஸ்ரியனின் கால்களை ஓடிப்போய் கட்டிப் பிடித்துக்கொள்ள” ..ஓ அது வேறை நடக்குதா ?? என்றபடி மீண்டும் நல்லம்மாவை உதைத்தவர் மல்லிகாவை ஜீப்பினுள் இழுத்துப் போட ஜீப் அங்கிருந்து கிளம்பிப்போய் விட்டது..நல்லம்மாவும் மாயவனும் ஜீப்பின் பின்னாலேயே ஓடிக் களைத்துப்போக ஊரே கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தது .
000
மக்கள் புரட்சி இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் புதியதொரு இடத்தில் கூடியிருந்தது .சுமார் முப்பது பேர்வரை கூ டியிருந்தார்கள் .அவர்களுக்கு முன்னால் சுரேந்தரும் அருகில் இடுப்பில் செருகிய ரிவால்வரோடு லெனினும் விறைப்பாக நின்றிருக்க .கூட்டத்திலிருந்த ஒருவனை அழைத்த சுரேந்தர் லெனினிடமிருந்த துப்பாக்கியை வாங்கிக் கொண்டு போய் வெளியே காவல் நிக்கும்படி சொல்லவே லெனினும் துப்பாக்கியை எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் கைகளை காட்டிய படி விறைப்பாக நின்றிருந்தான் .சுரேந்தர் பேசத் தொடங்கினான் ..”தோழர்களே இன்று முக்கியமா நாள் இது முக்கியமான கூட்டம் எங்களை யெல்லாம் வழி நடத்திய தோழன் ரவிக்குமாரின் வீர மரணத்தின் பின்னர் எமது இயக்கத்துக்கான அடுத்த தலைவரை இல்லையில்லை அப்படி சொல்லக் கூடாது வழிகாட்டியை தேர்ந்தெடுக்க நாங்கள் ஒன்றாக கூடியிருக்கிறோம். அதற்கு முன்னர் தோழன் ரவிக்குமாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்றவன் தனது வலக்கை விரல்களை மடித்து இறுகப் பொத்தி தோளுக்கு மேலாக உயர்த்தி தலையை குனித்து கொள்ள அனைவரும் அதைப்போலவே அஞ்சலி செலுத்தி முடிந்ததும் .கையை இறக்கி தலையை நிமிர்த்தியவன் ..”தோழர்களே புதிய வழிகாட்டியை தேர்தெடுக்க முன்னர் உங்களுக்கு முக்கியமான அதிச்சி தரும் சோகமான ஒரு செய்தியை சொல்லவேண்டும் எமது தோழர் நீலவ்னா காவல்துறையால் கைது செய்யப் பட்டு விட்டாள் இப்போ அவள் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருப்பாள் .

அவள் மூலமாக எங்கள் இரகசிய சந்திப்பு இடங்கள் தெரிய வந்திருக்கலாம் என்பதால் தான் இன்று புதிய இடத்தில் கூடியிருக்கிறோம் . ஆனால் நீலவ்னா எமது அமைப்பில் ஒருவனாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளாள்” .என்று சொல்லி நிறுத்தினான் ..எங்களில் ஒருவனா ?? அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு யாரவன் ??யாரவன் ??என்கிற கேள்வி கூச் சலாக மாறியது .அனைவரின் இரத்தமும் சூடாகத் தொடங்கியிருந்தது.சொல்லுங்கள் தோழர் யாரவன் என்று சத்தமாகவே சிலர் கத்தினார்கள் .கையை உயர்த்திய சுரேந்தர் “அமைதி தோழர்களே” என்றவன் தலையை லேசாய் திருப்பி எனக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்களின் படி அந்தத் துரோகி இவன்தான் என்று அருகில் நின்றிருந்த லெனினை பார்த்து கையை காட்டவும் .உணர்ச்சிக் கொந்தளிப்பில் நின்றிருந்த அனை வரும் லெனின் மீது வேகமாகப் பாய்ந்து அடித்துத் துவைக்கத் தொடங்கினார்கள் .
“தோழர்களே நான் காட்டிக் கொடுக்கவில்லை நம்புங்கள் நான் நிரபராதி.துரோகியில்லை” என்று கத்திய குரலை யாரும் அங்கு கேட்பதற்கு தயாராக இல்லை. “ஊர் புத்தியை காட்டிட் டான் ” என்றபடியே ஓங்கி முகத்தில் குத்த மூக்கும் முன்னம் பற்களும் உடைத்து . லெனின் மயங்கிப் போயிருந்தான்.ஒருவன் அவனது ஆடைகளை கழற்றி கை கால் களை கட்டி விட ஜட்டியோடு இரத்தம் கசிய மயங்கிக் கிடந்தவனை ஓங்கி மிதித்து விட்டு சுரேந்தரிடம் ..”தோழர் இவன் துரோகி இவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றான் .”அமைதி தோழர்களே மரண தண்டனை எல்லாவற்றுக்கும் தீர்ப்பாகாது எமது இயக்கத்துக்கு அடுத்த வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய ஒருவனே இப்படி செய்தது கவலையான விடயம் .ஆனால் மரண தண்டனை வேண்டாம். இவனது துரோகத்தை ஊர் அறியச் செய்வோம் அதுவே இவனுக்கான தண்டனை .ஆனால் எமது இயக்கத்தின் அடுத்த வழிகாட்டி யார் “??சுரேந்தர் அனைவரையும் பார்த்தான் ..துரோகியையும் மன்னிக்கும் உங்களுக்கு பெரிய மனது தோழர் ..நீங்கள் தான் எமது இயக்கத்தின் அடுத்த வழிகாட்டி இதை நான் முன் மொழிகிறேன் என்று ஒருவன் சொன்னதும் .”வழி மொழிகிறோம் …வழி மொழிகிறோம் …வழி மொழிகிறோம் “..அனைத்துக் குரல்களும் ஒலித்தது .
…….
சைக்கிளில் வாழைக்குலையை கட்டியபடி அதிகாலை சந்தைக்கு போய்க்கொண்டிருந்த அருணாசலம் சந்தியை கடக்கும் போது தான் கவனித்தான் சந்தியின் தந்திக் கம்பத்தில் ஒருவன் ஜட்டியோடு தொங்கிக்கொண்டிருந்ததை ..சைக்கிளை அவன்பக்கமாக கொண்டுபோய் நிறுத்திப் பார்த்தான்.அவனை யாரென்று தெரியவில்லை .ஜட்டியோடு தொங்கிக் கொண்டிருந்தவனின் கழுத்தில் துரோகத்துக்கான தண்டனை .மக்கள் புரட்சி இயக்கம் ..என்று எழுதிய மட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.அருகில் சென்ற அருணாசலத்திடம் “அண்ணை என்னை அவிழ்த்து விடுங்கோ ..நான் துரோகியில்லை” என்று முனகினான் .இயக்கத்தின் பெயர் எழுதியிருப்பதால் எனக்கேன் தேவையில்லாத வம்பு.. போகிற வழியில் சுன்னாகம் போலிஸ் நிலையத்தில் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்து சைக்கிளை மிதித்தான் .”அண்ணை அவிழ்த்து விடுங்கோ ..தண்ணி” ..என்று அவனின் குரல் முனகிக்கொண்டேயிருந்தது .
நேரம் செல்லச் செல்ல வேலைக்கு பாட சாலைக்கு செல்பவர்கள் என கூட்டம் அதிகரித்து அனைவரும் கம்பத்தில் கட்டியிருந்தவனை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி அவன் யாராயிருக்கும் என ஆராச்சி செய்துகொண்டிருந்தனர் .கொஞ்ச நேரத்தில் உள்ளூர் சண்டியன் மணியம் “யாரடா அது “என்று சத்தமாக கேட்டபடி அங்கு வர பலர் அவனுக்கு மரியாதையாக வழி விட்டு ஒதுங்கினார்கள் .பந்தாவாக வந்த மணியம் மட்டையில் மக்கள் புரட்சி இயக்கம் என்கிற பெயரைப் பார்த்ததும் பம்மியபடி அங்கிருந்து மறைந்து போனான் .வேகமாக வந்த விதானை நடராசா கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு “நானொரு விதானை எனக்கே இவன் யாரெண்டு தெரியேல்லையே “என்று தடையை சொறிந்தபடி யாராவது போலிசுக்கு போய் தகவல் குடுங்கோ என்று சொல்லும்போதே தூரத்தில் போலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்கத் தொடங்க அங்கிருந்த அனைவரும் வேகமாக கலையத் தொடங்கினார்கள் .அங்கு வந்த போலிஸ் காரர்கள் கம்பத்தில் கட்டப் பட்டிருந்தவனை அவிழ்த்து ஜீப்பில் போட்டுக்கொண்டு போய் விட்டார்கள் .
…..
சுன்னாகம் காவல் நிலையம்.. இங்ஸ்பெக்டர் செபஸ்டியனுக்கு முன்னால் விலங்கோடு கொண்டு வந்தவனை இரண்டு போலிஸ் காரர்கள் இருத்தினார்கள்.அவன் தலையை நிமிர்த்தி செபஸ்டியனிடம் “தண்ணீ “என்றான் .செபஸ்டியன் அருகில் நின்றிருந்த போலிஸ் காரரை பார்க்க அவர் வேகமாக ஓடிப் போய் ஒரு செம்பில் தண்ணி கொண்டுவர அவனின் விலங்கை கழற்றி விடச் சொன்ன செபஸ்டியன்.. முன்னால் இருந்த பைலை பிரித்து மெதுவாக ஒவ்வொரு பக்கங்களாக புரடிக் கொண்டிருந்தார் .தண்ணியை வாங்கி கடவாய் வழியே வழிந்த்தோட மடக் மடக்கென குடித்தவன் செம்பை மேசையில் வைத்து விட்டு “நன்றி” என்றான் .மெதுவாக புன்னகைத்த செபஸ்டியன் . உன்னுடைய சொந்தப் பெயர் டேவிட் அன்டனி .இயக்கப் பெயர் லெலின் ..பிறந்த இடம் மட்டக்களப்பு நிந்தாவூர் .மக்கள் புரட்சி இயக்கத்தின் இராணுவ பிரிவு பொறுப்பாளர் .காவல்துறை அரச அதிகாரிகளை தாக்கிய.. கொலை செய்ய முயற்சித்ததாக.. இருபத்தி நான்கு வழக்கு இதுவரை பதியப்பட்டிருக்கு .இலங்கையில் தேடப் படும் முக்கியமான குற்றவாளிகளில் நீயும் ஒருவன். பல காலமாக காவல்துறைக்கு தண்ணி காட்டி யிருக்கிறாய்.. இன்றைக்கு நீ வளர்த்த இயக்கமே உன்னை துரோகி என்று தொங்க விட்டிருக்கிறார்கள் சொல்லி முடித்து லெனினை உற்றுப் பார்த்தார் .

சட்டென்று வேகமாக எழுந்த லெனின் அருகில் நின்றிருந்த போலிஸ் காரரின் 303 ரைபிளை பிடுங்கியவன் “நான் தியாகியாக சாகாது விட்டாலும் பரவாயில்லை ஆனால் துரோகியில்லை” என்று கத்தியவன் தன் வாயில் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்தினான் .அவனது உச்சந் தலையில் ஊடுருவி காவல் நிலையத்தின் கூரை ஓட்டையும் உடைத்து வெளியேறியது துப்பாக்கியின் குண்டு . துப்பாக்கியை பறிகொடுத்த போலிஸ் காரரோ பயத்தில் நடுங்கியபடி “சார் தெரியாமல் நடந்திட்டுது. ஒரு செக்கனிலை இப்பிடி பண்ணிட்டான் .சார் மன்னிச்சு கொள்ளுங்கோ” என்று செபஸ்டியனிடம் கெஞ்சிக்கூத்தாடிக் கொண்டிருக்க. சத்தம் கேட்டு எல்லா போலிஸ்காரர் களும் அங்கு ஓடி வந்து விட்டிருந்தார்கள் .சாவகாசமாய் கதிரையை விட்டு எழும்பிய செபஸ்டியன் பயத்தில் நடுங்கிய படி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த போலிஸ் காரரின் முதுகில் தட்டி . “இது நடக்குமெண்டு உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் எனக்குத் தெரியும்” ..” பிணத்தை வைத்திய சாலைக்கு அனுப்பிட்டு உள்ளூர் பத்திரிகைக்கு செய்தி குடுத்து விடுங்கள் .சொந்தமென்று யாரவது தேடி வந்தால் எந்தக் கெடுபிடியும் இல்லாமல் பிணத்தை ஒப்படைக்க வேணும்..நாங்கள் தான் இவனை சுட்டுக் கொன்றதாய் மக்கள் புரட்சி இயக்கம் பிரசாரம் செய்வார்கள் இனித்தான் நிறைய வேலையிருக்கு “.. என்று விட்டு பைலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து போகப் புறப்பட்டவர் இரத்தத்தில் சரிந்து கிடந்த லெனின் மீது உடைந்த ஓட்டின் ஊடாக சூரியஒளி விழுந்து கொண்டிருக்கவே கூரையை அண்ணாந்து பார்த்து விட்டு “யாரையாவது கூபிட்டு கூரையையும் திருத்துங்கள் மழை நாள் வருகிது “.என்று விட்டு போய் விட்டார் .
…..
நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு மட்டுமல்லாது அவர்களோடு தொடர்புகளை பேணியதாலும் மல்லிகாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை கிடைத்தது .சிறையில் பிறந்த அவளது குழந்தை காப்பகத்தில் வளர்த்து கொண்டிருந்தது .அவள் சிறையில் இருந்த போதே அடிக்கடி பார்க்கப் போகும் நல்லம்மா மூலமும் பத்திரிகைகளிலும் மக்கள் புரட்சி இயக்கத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்தாள்.லெனின் தன்னைக் காட்டிக் கொடுத்திருந்தான் என்கிற செய்தி அவளுக்கு அதிர்ச்சியாகவும் நம்பமுடியாமலும் இருந்தது .அவள் சிறைக்கு வந்த அடுத்த வருடமே சுரேந்தர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தேசிய வங்கிக் கிளை ஒன்றை கொள்ளையடித்திருந்தனர்.கொள்ளையடிக்கப் பட்ட பணம் நகைகளோடு சுரேந்தரும் வேறு சிலரும் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக செய்தித் தாள்கள் முன் பக்கத்தை நிரப்பியிருந்தன .மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப்பட வசதியான சிலர் வெளி நாடுகளுக்கு தப்பியோடி விட எந்த வசதிகளும் அற்றவர்கள் வேறு இயக்கங்களில் அடைக்கலமானார்கள்.

அத்தோடு சுரேந்தர் பற்றிய செய்திகளும் மல்லிகாவுக்கு கிடைக்காமல் போய் விட்டிருந்தது .நான்கு வருடங்கள் கழித்து மல்லிகாவின் விடுதலை நாள் வெளியே போனதும் எப்படியும் சுரேந்தரை தேடிப் பிடிப்பதுதான் முதல் வேலை.மகன் டிராஸ்கியோடு திடீரென அவன் முன் போய் நின்றால் எப்படியிருக்கும்??.இன்னமும் என்னையே நினைத்துக்கொண்டிருப் பானா ?தாடி வழித்திருப்பானா ?? இப்படியாக ஆயிரம் கேள்விகளோடு சிறையை விட்டு வெளியே வந்தாள் .டிராஸ்கியோடு வந்திருந்த நல்லம்மாவை கட்டியணைத்து ஒருவர் மாறி ஒருவர் கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஜீப்பில் இருந்து செபஸ்டியன் இறங்கி வந்து கொண்டிருந்தார் .அவரைப் பார்த்ததும் மல்லிகாவுக்கு லேசாய் உதறல் எடுத்தபடி “நாலு வருசம் அனுபவிச்சது போதும் எதுக்கு இவன் திரும்பவும் இங்கை வாறான்” .என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்தவர் “மல்லிகா உன்னை எப்பிடி இருக்கிறாய் என்று சுகம் விசாரிக்க வரவில்லை .வெளியிலை போய் இனியும் புரட்சி செய்யுறேன் என்று கிளம்பி திரும்பவும் இங்கை வரவேண்டாம்.உனக்கு இப்போ ஒரு குழந்தை வேறை இருக்கு அதை வளர்க்கிற வழியைப்பார்” . குனிந்தபடி தலையை ஆட்டினாள் . “உன்னை எனக்கு காட்டிக் கொடுத்தது யார் தெரியுமா “?
லெ னி ன் ….இழுத்தாள் …
சிரித்தவர் ..இல்லை அப்பிடிதான் எல்லாரும் நினைத்தவை உன்னை காட்டித் தந்து வீட்டிலை பிரசுரங்கள் இருக்கெண்டு மேலதிக தகவலும் தந்தது சுரேந்தர் தான் .நீ நினைக்கிற மாதிரி அவன் போரளியில்லை துரோகி .
அதிர்ச்சியில் அவளுக்குள் மொஸ்கோ நகரம் வெடித்துச் சிதறியது .தாய் நாவல் பக்கம் பக்கமாக கிழிந்து காற்றில் பறந்து கொண்டிருந்தது .லியோ டால்ஸ்டாய்;பியோதர்; தஸ்தாயெவ்ஸ்கி; குப்ரின்; கார்க்கி; கோகல் ;துர்கனேவ்; என்று சுரேந்தர் அறிமுகம் செய்து வைத்த அனைத்து ரஷ்ய நாவலாசிரியர்களையும் சபித்தபடி தலையை நிமிர்த்தி செபஸ்டியனை பார்த்தாள் . “நான் சொன்னால் நம்ப மாட்டாய் அம்மாவிட்டையே கேட்டுப் பார்”. என்றதும் தன் பக்கம் திரும்பிய மல்லிகாவிடம் “எல்லாம் உண்மை தானம்மா நீ மோசம் போயிட்டாய்”. என்று நல்லம்மா விம்மியள.எதுவுமே புரியாமல் பேந்திய படி நின்றிருந்த டிராஸ்கியின் கையில் கொண்டுவந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு செபஸ்டியன் போய் விட்டார் .
0000
நண்பர்களின் உதவியோடு பிரான்சிற்கு மகனோடு வந்து சேர்ந்த மல்லிகாவுக்கு அவள் சிறையில் இருந்த ஆதாரங்கள் உதவியதால் இலகுவாக நிரந்தர வதிவிட உரிமையும் அரச உதவியும் கிடைக்கத் தொடங்கியிருந்தது .சுரேந்தர் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒரேயொரு தடவை நேரில் சந்தித்து ” எதுக்கடா இப்படி செய்தாய்” என்று மட்டும் கேட்டு விடவேண்டும் என்கிற கோபம் கொழுந்து விட்டுக் கொண்டிருந்தாலும் .நாளாந்த வாழ்க்கைப் போராட்டமும் மகனை நல்ல படியாய் வளர்த்து விடவேண்டும் என்கிற சிந்தனையும் மெதுவாக கோபத்தை குறைந்து விட்ட்டிருந்தது .ஆனால் வளர்ந்து கொண்டிருந்த டிராஸ்கி அப்பா எங்கே என்று கேட்கத் தொடங்கி அப்பா யாரம்மா? என்று கேட்ட கேள்விகளை அவர் ஊரில் இருக்கிறார் என்று எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள் .அவன் வளர வளர அப்பாவைப் பற்றிய ஒரே கேள்வி பல வடிவங்களில் வந்து கொண்டிருந்தது .ஒரு நாள் அவன் “அம்மா அப்பாவின் ஒரு படம் கூட இல்லியா ? இல்லை அப்பா யாரெண்டு உனக்கே தெரியாதா “? என்று அவன் முடிக்கு முதலே அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் உங்கப்பா செத்துட்டாரடா என்று விட்டு சத்தமாய் அழத் தொடங்கியவளை அறை வாங்கிய எந்த உணர்வுமின்றி கட்டியணைத்து அம்மா இனிமேல் அப்பாவை பற்றி கேட்டகவே மாட்டேன் இது சத்தியம் நீ அழாதை என்றவனை இழுத்து அணைத்து அன்று முழுதும் அழுது தீர்த்து விட்டிருந்தாள் .

அதன் பின்னர் டிராஸ்கியும் அப்பா என்கிற வார்த்தையே பாவிப்பதில்லை .சில வருடங்கள் கழிந்த நிலையில் பிரான்சில் ஒரு தமிழ் வானொலி தொடங்கியிருக்கிறார்கள் என்கிற செய்தியறிந்து சாட்டிலைட் அன்டெனா வாங்கிப் பொருத்தி அலை வரிசையை தேடித் பிடித்தபோது மீண்டும் இலங்கை வானொலி கேட்ட மகிழ்ச்சி மல்லிகாவுக்கு .அப்படியான ஒரு இரவுப் பொழுதின் கவிதை நேரத்தில் “வணக்கம் நேயர்களே இன்றைய கவிதை நேரத்தினை அலங்கரிக்க வருகிறார் யேர்மனியிலிருந்து தோழர் சுரேந்தர் .மக்கள் புரட்சி இயக்கத்தினை நிறுவியவரும் ஆயுதப் போராட்டம் மூலமே எமக்கு தனி நாடு கிடைக்கும் என முதன் முதலில் முழங்கியவவரும் இவரே ..இப்பொழுது எமக்கு ஏன் தனி நாடு தேவை என்பதை கவிதையாய் வடிப்பார் “.வாருங்கள் தோழர் சுரேந்தர் .. என்றதும் “வணக்கம் “என்று விட்டு .
எழுவோம் .
நிமிர்வோம் .
சிவப்பு என்பது
நிறமல்ல .
உதிரம் ..

வேகமாய் வானொலிப் பெட்டியின் வயரைப் பிடுங்கிய மல்லிகா வானொலி நிலையத்துக்கு போனடித்து சுரேந்தரின் இலக்கத்தை வாங்கியிருந்தாள் .போனடிக்கலாமா என பல தடவை யோசித்திருந்தாலும் மகனைப் பற்றி கேட்டு சொந்தம் கொண்டாடுவானோ என்கிற பயத்தில் போனடிகமலேயே விட்டு விட்டது மட்டுமல்ல வானொலி கேட்பதையும் விட்டு விட்டாள் .இப்போ சுரேந்தர் மாரடைப்பில் இறந்து விட்டான் என்கிற செய்தி யேர்மனியில் இருந்த தோழி சொன்னதன் பின்னர் பல வருடங்கள் கேட்காமலேயே விட்டிருந்த தமிழ் வானொலியை தேடிப் பிடித்தாள் .தமிழ் தேசியத்தின் ஒரேயொரு வானொலி என்கிற விளம்பரத்துடன் சுரேந்தருக்கான அஞ்சலிக் கவிதைகள் உலகெங்குமிருந்து குவிந்து கொண்டிருந்தது .இன்று மகனுக்கு அப்பா யார் அவன் எவ்வளவு துரோகி என்று சொல்லி விடலாம் என்று முடிவு செய்திருந்தாள் .கார்கி வாசலையும் பால்கனி யையும் மாறி மாறி பார்த்து குரைத்துக்கொண்டு ஓடிக்கொண்டேயிருந்தது.

வழக்கத்துக்கு மாறான கார்கியின் குரைப்பு எரிச்சலை கொடுக்க அதை அதட்டி படுக்க வைத்தவள் . மகன் வருகிற நேரமாகிவிட்டது இன்னமும் காணவில்லையே ஒரு போனடிதுப் பார்க்கலாம் என நினைத்து போனை எடுக்கப் போகும் போது அதுவே ஒலித்தது .எடுத்து காதில் வைத்தாள் .மறு முனையில் பிரெஞ்சு மொழியில் தன்னை ஒரு போக்கு வரத்து போலிஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்தவர் “BZ 176 CS இலக்க பச்சை நிற ரெனோல்ட் மெகான் வண்டி உங்களுடையதா” ? தட்டுத் தடுமாறியபடி “வண்டி என்னுடைய பெயரில் தான் உள்ளது மகன்தான் அதனைப் பாவிக்கிறார் ஏன் ஏதும் பிரச்சனையா “என்றதும் .”ஒ மன்னிக்கவும் அந்த வண்டி விபதுக்குளாகி விட்டது .அதில் இருந்த குழந்தை மட்டும் சிறு காயத்தோடு தப்பி விட்டது உடனடியாக மருத்துவ மனைக்கு வாருங்கள்” என்று விட்டு மருத்துவ மனை விலாசத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே மல்லிகாவுக்கு எல்லாமே மங்கலாக தெரியத் தொடங்கி தொலைபேசி நழுவி கீழே விழ கார்க்கி மீண்டும் குரைக்கத் தொடங்கியிருந்தது …
…………………………..