Navigation


RSS : Articles / Comments


நாறிப்போன நாட்டுப்பற்றாளர் பட்டம்..

3:40 PM, Posted by sathiri, 6 Comments
நேற்று தமிழ் இணைய ஊடகங்களான புதினம்..பதிவு..சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்துபோன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார்...என்கிற செய்தியுடன்.. இறந்து போனவரின் உடலிற்கு புலிக்கொடிபோர்த்தியபடங்களுடன்..இறந்து போனவரின் மனைவிகதறியழுது கொண்டிருக்கும் பொழுது அவரது கைகளில் புலிகளின் இலச்சினை பதித்த நாட்டுப்பற்றாளர் பட்டப் பத்திரத்தை நீட்டிய படமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது....இங்கு இறந்து போனவர் நாட்டுப்பற்றாளரா???அவர் நாட்டிற்காக உழைத்தாரா அல்லது அவரிற்கு அந்தப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்கிறதல்லஇங்கு பிரச்சனை..

இதுவரை காலமும் நாட்டுப்பற்றாளர்களை கெளரவித்து தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் பிரபாகரன் அவர்களின் கையெழுத்துடனான பத்திரமொன்று நாட்டுப்பற்றாளரின் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதே மரபாக இருந்து வந்தது...எனவே புலிகள் இயக்கம் ஈழத்தில் செயலிழந்துபோய் அதன் தலைவர் பிரபாகரனும் இல்லையென்கிற நிலைமையில் இந்த நாட்டுப்பற்றாளர் அறிவிப்பை யார் செய்தது..அதேநேரம் அந்தப் பத்திரம் யாருடைய கையொப்பமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது..இதனை வழங்கியது புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்துள்ள கே.பி..என்பவராலா???..அல்லது புலிகளின் யெர்மன் பொறுப்பாளர் வாகீசனாலா??? கே.பி அறிவித்ததாக எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை..

கே.பி யின் கையொப்பமும் அதிலில்லை..அதே நேரம் எந்தக் கையொப்பமும் அற்ற பத்திரம் செல்லுபடியாகுமா??அந்தப் பத்திரத்தில் அதை வழங்கியது புலிகளின் தலைமைச்செயலகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்.. புலிகளின் தலைமைச்செயலகம் எங்கு இயங்குகின்றது?? யெர்மனியிலா??யெர்மனியில் இயங்கினால் அதனை யெர்மன் பொறுப்பாளர் வாகீசனின் முடிவிற்கேற்ப வழங்கியிருந்தல்..இனி ஈழத்தமிழ் மக்களின் தேசியத் தலைவர் வாகீசனா??அல்லது இனிவரும் காலங்களில் எல்லா நாடுகளிலும் உள்ள புலிகள் அமைப்பு பொறுப்பாளர்களே இந்தப்பதவிகளை தங்களிற்கு விரும்பியபடி வழங்கலாமா?? புலிகள் அமைப்பில் இறுதிவரை போராடி வீரமரமடைந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளான தீபன்..துர்க்கா.விதுசா..நடேசன்.புலித்தேவன்.. இப்படிப் பல தளபதிகளிற்கே இன்னமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தாத நிலையில்.. இப்படியான கேலிக்கூத்துக்கள் தேவையா??

அப்படி நாட்டுப்பற்றாளர் பதவி பெற்றுக்கொள்ள ஏதாவது வசதிகள் இருந்தால் என்னுடைய சித்தாப்புவம் ஒருவர் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்து போனார்..அவர் யாழ்ப்பாணத்தில் வீடு காணி இருந்தும் தான் இராணுவத்தின்ரை கட்டுப்பாட்டிற்கை இருக்கமாட்மாட்டேன் என்று அடம்பிடித்து வன்னியில் புலிகளின்ரை கட்டுப்பாட்டிற்குள் போய் பிள்ளைகளையும் மாவீரர்களாக்கி வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளர் ஆனால் சோகம் என்னவென்றால் இறுதி யுத்தத்தில் புலிகளின் துப்பாக்கி குண்டுகளினால் இறந்து போனார்.. அவரிற்கு யாராவது ஒரு நாட்டுப்பற்ளாளர் பதவி வாங்கி குடுப்பீங்களா??வாங்கித் தாறவங்களை யுரோவிலை கவனிக்கலாம்..

எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

2:03 AM, Posted by sathiri, 2 Comments


எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

(இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது)
ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.

அல்லது தீவிர வாதிகளில் நாசவேலைகளா என்கிற இரண்டு கோணத்திலும் பிரெஞ்சு அரசு விசாரணைகளை நடாத்தியது...விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளின் பெயர்கள்: சர்வதேச காவல்துறையால் தேடப்படும் அல்கெய்தா தீவிரவாதிகளின் பெயரை ஒத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும்..பின்னர் அப்படி ஏதும் இல்லை பெயர் குழப்பஙகளே காரணம் என்று பிரான்சின் பாதுகாப்புத்துறை அறிவித்தது...விமான விபத்து நடந்ததற்கான காரணங்களை அறிவதற்காக வழைமைபோல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசாரணைக்கு ஏதுவாக விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் முயற்சியும் நடந்தது . விபத்து நடந்தது மிக ஆழமான சமூத்திரப்பகுதியென்பதால் கறுப்புப் பெட்டியை தேடியெடுப்பது சிரமமாக உள்ளதாக அதன் மீட்புகுழுவினர் அறிவித்திருந்தனர்..அதேநேரம் விமானத்தின் கறுப்புப்பெட்டியின் ஆயுட்காலம் ஒருமாதங்களே ..அதற்குள் அதனை தேடியெடுத்து அதில் பதிவாகியிருந்தவற்றை ஆய்விற்குட்படுத்தவேண்டும்..ஒருமாதமாக தேடியும் கறுப்புப் பெட்டி கிடைக்காததால் மீட்புக்குழுவினர்.

அதற்கும் சேர்த்து அஞ்சலிசெலுத்திவிட்டு..விசாரணைகளை விபத்து என்றே முடித்துக்கொண்டு விட்டனர்..தீவிரவாதிகளின் தாக்குதலை பிரான்ஸ் அரசு மூடி மறைக்கிறதா எனவும் சில பத்திரிகைகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன..ஆனால் நடந்தது உண்மையிலேயே விபத்தா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதலா??என்கிற உண்மையை இந்தச் சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருப்பவர் வயசாகி பென்சன் எடுத்துக்கொண்டு வயோதிபர் மடத்தில் கடைசிக்காலத்தை கழிக்கும்போது பொழுது போறதிற்காக ஏதாவது புத்தகம் எழுதுவார்.அப்படி எழுதும் போது இந்த விபத்தைப்பற்றியும் ஏதாவது எழுதினால்தான் உண்மைகள் வெளியாகும்..

எனவே அதுவரை காத்திருப்போம்..அடுத்ததாக முதல் விபத்து நடந்து மூன்று வாரங்களில் பிரான்சிலிருந்து கொமர் நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த யமானியா என்கிற தனியார் நிறுவனத்தின் ஏயார்பஸ் விமானம் இந்துசமூத்திரப்பகுதியில் குதித்ததில்அதில் பயணம் செய்த 153 பேர் இறந்து போனார்கள். இந்த விமானத்தில் எனது மகளின் பள்ளித்தோழியும் அவளது சகோதரன் தாய் தந்தையர் உட்படஇறந்போயுள்ளனர்..இந்த விமானம் இயந்திரகோளாறு காரமாக விசாரணைகளில் முடிவாகியுள்ளது.. அதாவது சில தனியார் நிறுவனங்கள் பயணிகளை கவர்வதற்காக குறைந்தவிலையில் பயணசீட்டுக்களை விற்றுவிட்டு தங்கள் செலவுகளை குறைப்பதற்காக விமானங்களை சரியாக பாராமரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது..நடந்து முடிந்த இரண்டு விமான விபத்துக்களிலும் இரண்டு அதிசயமான சம்பவங்கள் நடந்துள்ளது..

ஒன்று சோகமானது மற்றது சுகமானது.. சோகமானது என்னவென்றால் முதலாவதாக நடந்த விமானவிபத்தில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான தம்பதிகள் தங்கள் விமானத்தை தவறவிட்டுவிட்டதனால் உயிர் தப்பியிருந்தனர்..அவர்கள் றியோவிலிருந்தபடி தங்கள் உறவினரிடம் தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் கடவுளிற்கு நன்றியும் தெரிவித்திருந்தது ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.. அவர்கள் நான்கு நாட்கழித்து விமானத்தில் ஜெர்மனியில் வந்திறங்கி இத்தாலி செல்வதற்காக வாடைகை காரில் இத்தாலி நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தபொழுது வீதி விபத்தில் மனைவி இறந்துபோக கணவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்...அடுத்த சுகமான செய்தி என்னவென்றால் இரண்டாவதாக நடந்த விமான விபத்தில் அதிலிருந்த பயணிகள் அனைவருமே இந்துபோக 13 வயதான சிறுமி ஒருத்தி மட்டும் உயிர் தப்பியுள்ளார்..

அவர் பின்னர் விபத்துப்பற்றி தெரிவிக்கையில் '' ஒரு பெரிய வெளிச்சத்தை தொடர்ந்து ஒரே இருட்டாக இருந்தது நடந்ததை எனக்கு விபரிக்கத்தெரியவில்லை ஆனால் கையில் அகப்பட்ட ஏதோ ஒன்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் அதுமட்டும்தான் தெரியுமென்றார்.. இவர் உடைந்த விமானத்தின் பாகம் ஒன்றினை கட்டிப்பிடித்தபடி கடலில் மிதந்து கொண்டிருந்தபொழுது மீட்புபடையினரால் மீட்கப்பட்டிருந்தார்.. இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது தலைவிதி என்று ஏதோ சொல்லுறாங்களே அதை நம்பவேண்டித்தானுள்ளது.. ஆனால் உலகிலேயே மிகப்பெரியதும் நவீனமானதுமான விமானத்தயாரிப்பில் இறங்கிய ஏயார் பஸ் நிறுவனத்திற்கு 2000ம் ஆண்டிலிருந்தே சனிஉச்சத்தில் நிற்கிறது.ஏகப்பட்ட குளறுபடி நிருவாகத்தில் ஊழல் என பல குற்றச்சாட்டுகளுடன் காலத்தை கடத்திக்கொண்டிருப்பவர்களிற்கு இந்த விபத்துக்களும் நிச்சயம் புதிய தலையிடியாகத்தானிருக்கும்..

இனிவரும் காலங்களில் ஏயார் பஸ் விமாங்களின் முன்னால் சிறீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொஞ்ச செத்தல் மிளகாயை கட்டித்தொங்கவிட்டு விமானம் புறப்படும்பொழுது விமானச்சில்லுகளிற்கு அடியில் பச்சைத்தேசிக்காயை வைத்து நசித்து விமானம் புறப்படுமானால் விபத்துக்களை தவிர்க்கலாம்..இதனை ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள் கவனத்திலெடுக்கவும்...இப்படி ஒருமாதத்நடந்த இந்த இரண்டுவிமான விபத்துக்களிலும் அதிகமாக இறந்து போனவர்கள் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவர்கள் என்கிற படியால் பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளவேளை இந்தவருட கோடை விடுமுறைக்கு செல்வதற்கு ஏயார் பஸ் விமானங்களில் பதிவு செய்யவதனையும் தவிர்த்து வருகிறார்கள்.. அப்படி பயணம் செய்பவர்களும் தங்கள் குலதெய்வங்களிற்கு நிச்சயம் வேண்டுதல் வைத்துவிட்டுதான் விமானத்தில் வலதுகாலை எடுத்து வைப்பார்கள்..

நானும் ஒரு விடயமாக பாரிசிற்கு போவதற்கு மலிவாய் ஒரு றிகற்றை பதிந்துபணத்தை கட்டிவிட்டுதான் பார்த்தேன் அதுவும் ஏயார் பஸ்விமானம்.மலிவு விலை றிக்கற் என்பதால் கட்டின பணத்தையும் திருப்ப பெறமுடியாது..இனியென்ன செய்யிறது பத்திரமாய் பாரிசிற்கு போய்வரவேணும் என்றும் அப்பிடி போய் திரும்பி வந்தால் எனது குல தெய்வமான எங்கடை ஊர் புளிளியடிவைரவரிற்கு வடைமாலை சாத்தி பொங்கல் வைக்கிறது என்று நேத்திக்கடன் வைச்சிருக்கிறன். அப்படி திரும்பி வந்தால் அடுத்த பேப்பரிலை சந்திக்கிறேன்.. நன்றி சாத்திரி.

பாராளுமன்றில் பம்மியழுத பா.உ. பத்மினியக்காவுக்கு….ஓ..ஓ

9:37 AM, Posted by sathiri, 2 Commentsமேன்மை தங்கிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் அவர்களுக்கு,

கடந்த பாராளுமன்றக் கூடலில் வவுனியா முகாம்களில் வாடும் தமிழ்மக்களின் அவலநிலைபற்றி உரையாற்றிய போது துயரம் தாழாமல் கதறியழுதார் பத்மினி சிதம்பரநாதன் என்ற செய்தி சகல ஊடகங்களிலும் இடம்பிடித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். கண்ணீர் விட்டு நீங்களும் மீண்டும் ஒரு தரம் உங்கள் இருப்பை உறுதி செய்திருந்தீர்கள்.

அக்கா ,

போரில் கொல்லப்பட்ட உறவுகளின் உறவினர்களின் துயரம் முதல் தமிழ்ப்பெண்கள், குழந்தைகள் பற்றி மேலும் உங்கள் பேச்சில் சுட்டிக்காட்டி உரைத்தீர்களாம். அந்தச் செய்தியைப் பார்த்தபோது உங்களுக்காக செவாலியர் விருதையே சிபார்சு செய்யவேண்டுமென்றுதான் விரும்பினேன். ஆனால் கேமகுமாரநாணயக்கார(Minister) சிங்களத்தில் நடித்து வந்த நடிகையான ‘ருக்மணிதேவிக்கு‘ நிகராக்கி உரையாற்றியதால் செவாலியர் விருதைவிட வேறு ஏதாவது சிறந்த விருதைத் தேடுகிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் வருடக்கணக்காக இருந்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வந்து புலம்பெயர் மக்களுக்கு ஆலோசனைகளை அள்ளி வளங்க மட்டுமே பாராளுமன்றப்பதவியென நீங்கள் ஐரோப்பாவெங்கும் உங்கள் சேவகர்களின் வீடுகளில் விருந்துண்டு மேலான வாழ்வு வாழ்ந்த போது வராத கண்ணீர் , முள்ளிவாய்க்கால் வரை தமிழினம் துரத்தப்பட்டு ஆயிரமாயிரமாய் பலிகொள்ளப்பட்ட உயிர்களுக்காக வராத கண்ணீர் , மூன்றுலட்சத்துக்கும் மேலாக இடம்பெயாந்து ஒரு நேர உணவுக்காக எம்மினம் கையேந்தி அகதி முகாம்களில் அடைபடும் வரை லண்டனில் அடைகாத்த போது கூட வராத கண்ணீர் எப்படி இந்தப்பாராளுமன்றக் கூட்டத்தில் ஊற்றெடுத்தது அக்கா….?

ஆயிரமாயிரம் அம்மாக்கள் தங்கள் மகள்களை , மகன்களைக் கடைசிக் களமுனையில் பலிகொடுத்ததும் பாதி மிஞ்சிய பிள்ளைகளில் இருப்போர் யார் இல்லாதோர் யார் என்று அகதி முகாம்களுக்குள் கிடந்து விடுகின்ற கண்ணீருக்காக எதை ஐரோப்பாவில் நின்ற போது செய்தீர்கள் ? கிடைத்த உங்களுக்கான மேடைகளில் தமிழில் தமிழர்களுக்காக வீரம் பேசியதைத் தவிர வேறெந்தப் பரப்புரையைச் செய்தீர்கள்?

புலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் நாட்டு மக்களுக்கு தமிழர் பிரச்சனையைச் சொல்லுங்கள் என்ற ஆலோசனையும் , ஆக மிஞ்சினால் லண்டனில் உங்கள் அடியாட்களாய் செயற்படும் உங்கள் நண்பர்கள் மூலம் உங்கள் பற்றி எழும் கேள்விகளுக்கு பூட்டுப்போட்டது தவிர வேறெதைச் செய்தீர்கள்?

லண்டனில் பரமேஸ்வரன் என்ற இளைஞன் தன்னையுருக்கி உண்ணா நோன்பிருந்து உலகத்திடம் நீதிகேட்டபோது நீங்கள் அதே லண்டனில் இருந்து கொண்டு ஒன்றையும் செய்யவில்லை. அந்த உண்ணாவிரத மேடைக்கு அடுத்திருந்த உணவங்களில் உங்களுக்கான சிறந்த வரவேற்பும் எங்கள் தமிழ் ஊடகங்களினால் சில கேள்விகளும் தான் கேட்கப்பட்டது. நீங்களும் உங்கள் பங்குக்கு முகத்தைக்காட்டிவிட்டுப் போயிருந்தீர்கள்.

2008 ஒக்ரோபர் 27 யேர்மனியின் பெரும்பான்மைக் கட்சியான (SPD) கட்சியின் இளையோர் அணியில் இயங்கும் தமிழ் மாணவியொருத்தியின் ஏற்பாட்டில் யேர்மனியர்களுக்காக நடாத்தப்பட்ட ‚‘இலங்கையில் மனிதவுரிமை மீறல்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் உங்களையும் அழைத்திருந்தோம். ஞாபகமிருக்கிறதா அக்கா ? கடைசிவரை வருவதாய் சொன்ன நீங்கள் கடைசி நேரம் அந்த நிகழ்வுக்கு வரவுமில்லை , உங்களைத் தான் சிறப்பாக அழைத்துள்ளதாகவும் அவர் சொன்னால் நீங்கள் எமது நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என உங்களுக்கும் தனக்குமான நட்பின் இறுக்கத்தை எமக்குப் புழுகிய நண்பரின் வாக்கும் பொய்த்து நீங்கள் வரவேயில்லை. அன்று நீங்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தால் நிகழ்வு நடைபெற்ற மானிலத்தின் முக்கிய பத்திரிகைகளில் உங்கள் மூஞ்சியும் வந்திருக்கும் எங்கள் பிரச்சனையும் பல்லாயிரம் யேர்மனியர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். அடுத்தடுத்து சில சமகால கருத்தரங்குகளுக்கு உங்களை அழைத்தோம். ஆனால் நீங்கள் நொண்டிச்சாட்டுகள் சொல்லி எல்லாவற்றையும் தட்டிக்களித்தீர்கள்.

இறுதியாக இவ்வருட ஏப்ரல் மாத இறுதியில் யேர்மனிய அபிவிருத்தியமைச்சருடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்புக்கு உங்களை அழைக்க நாம் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி. கடைசியாக உங்கள் நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கயேந்திரன் அவர்களை அழைப்பதற்கான முயற்சியும் தோற்றுப்போனது. அவர் எங்கள் அழைப்பை ஏற்று வருவதாக இருந்தால் கயேந்திரன் அவர்களை யேர்மனியில் மேய்க்கும் மேய்ப்பர்களிடம் அனுமதி பெற்றுச் சொல்லுங்கள் என்றார் கயேந்திரன். அவர் சொன்ன மேய்ப்பர்களோ நமது ஏற்பாட்டுக் குழுவினரால் தமிழீழம் தந்தாலும் வேண்டாம் என்ற தொனியில் அந்த அருமையான வாய்ப்பைத் தட்டிவிட்டார்கள்.

மேடைவைத்துப் பத்தாயிரம் பேர் கூடிநின்று கூவிக்கூப்பாடு போடுவதை விட இத்தகைய அரசியலாளர்களைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பது பத்தாயிரம் பேரால் சாதிக்க முடியாததை உங்கள் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்கப்பட்டிருக்கும்.

யேர்மனிய நமது மேய்ப்பர்களால் இதுவரையில் யேர்மனிய அரசின் முக்கிய தரப்புகளுடனான சந்திப்புகளோ அதற்கான அனுமதியோ கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவற்றுக்கெல்லாம் முயற்சிக்கவுமில்லை. எமது மக்களை வைத்து உண்டியல்களை நிரப்பி உழைக்காமல் சாப்பிடப் பழகிய அவர்களால் மக்களின் நலனில் எங்கே அக்கறையிருக்கப்போகிறது ?

சாமான்யர்களான எங்களால் உங்களுக்கான வெளித்தொடர்புகளைத் தான் எடுத்துத்தர முடியும். ஆனால் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களால் நமது பிரச்சனைகள் சொல்லப்பட்டால்தான் வெளியுலகால் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்படும். இங்கு தனித்த முயற்சிகளால் செய்யப்பட்ட பரப்புரைகள் உங்களை பலலட்சம் தந்து வெளிநாடுகளுக்கு அழைத்தவர்களால் செய்யப்படவில்லையென்பது ஒருவரும் அறியாத உண்மை. இந்தப் பொட்டுக்கேடுகள் பற்றி நிறையவே இருக்கிறது. அதைவிட்டு விடுகிறேன்.

மக்கள் பிரநிதிகளான உங்களால் சுதந்திரமாக சுயமாக முடிவெடுக்க முடியாவிடில் பிறனெ்ன மண்ணுக்கு மக்கள் பிரதிநிதிகள் ? நீங்களும் உங்கள் பதவியும் ?

அரசாங்கம் நிறுத்தப்போவதாக அறிவித்த உங்கள் வருமானம் , வசதிகள் , பதவியைப் பாதுகாத்துக் கொள்ள ஐரோப்பாவிலிருந்து அவசர அவசரமாக இலங்கை சென்றீர்கள். சென்றீர்கள் சரி மக்கள் அவலப்படும் எந்த இடத்திற்காவது சென்று மக்களின் துயரை நேரில் சென்று அறிந்தீர்களா ? அதற்கான ஏதாவது முயற்சிகளை எடுத்தீர்களா ?

முகாம்களுக்குச் செல்லத்தான் அரசு அனுமதிக்கவில்லை. சரி உங்கள் உறவினர்களில் ஒருவராவது அந்த முகாம்களில் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைப் பார்க்கவாவது வரிசையில் நின்று அனுமதி பெற்றுப் போயிருக்கிறீர்களா ? சரி அதுவும் போகட்டும். வவுனியாவில் பல மருத்துவமனைகளுக்கு நீங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் சென்று அவலமுறும் மக்களைப் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூறலாம் இல்லையா ?

நானறிந்த சில இடங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். முடிந்தால் உங்கள் முட்டைக்கண்ணீரை அங்கே போய் சிந்துங்கள்.

நாலாங்கட்டை ஆயுர்வேத வைத்தியசாலை. இங்கு கால்கையிழந்த பலர் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

பூவரசங்குளம் பொது வைத்தியசாலை. அம்மைநோயால் முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் பெறுகிறார்கள்.

வவுனியா பொது வைத்தியசாலை. இங்கு அங்கவீனர்கள் முதல் பல பிரிவுகளில் வன்னிக்கள முனையிலிருந்து இராணுவத்தால் கொண்டு வரப்பட்டவர்கள் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

அண்மையில் முகாம்களிலிருந்து நீதவான் பொறுப்பில் 129செஞ்சோலைச் சிறுவர்கள் கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்தக் குழந்தைகளுக்கான உடை , பாடசாலை உபகரங்கள் உட்பட தேவைகள் நிறைய உள்ளது. இவர்கள் எல்லாம் பெண் குழந்தைகள். நீங்கள் துன்பம் தாங்க முடியாமல் அழும் பெண்குழந்தைகள்.

இவர்களையெல்லாம் சந்திக்க உங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. உங்கள் உயிருக்கு பயமாகில் அதற்கும் அரசாங்கம் உங்களுக்குப் பாதுகாவலர்களைத் தந்திருக்கிறதே. இதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாதுகாப்பு தேவையோ ?

நான் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மருத்துவம் பெறும் பலர் உங்களுக்கு முகமாலையில் காவலிருந்து உங்களுக்கு வாக்களித்தோரும் உள்ளார்கள். அவர்களில் ஒரு தாய் தனது இரு பெண் குழந்தைகளையும் கடைசிக் களமுனையில் தொலைத்துவிட்டாள். தானும் அங்கமிழந்துவிட்டாள். அந்த அம்மா உங்கள் அழுகைபற்றி அறிந்தது பற்றி தொலைபேசியில் சொன்னார்.

நாங்கள் பத்மினியென்ற பெண்ணை விரும்பியே தெரிவு செய்தோம். பெண்களின் பிரதிநிதியாக பெண்களுக்காக நன்மைகள் செய்வார் என்றே தேர்வு செய்தோம். எங்கள் பெண் குழந்தைகள் வயது வேறுபாடின்றிக் களமுனைக்குச் சென்ற போது ஏன் அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல் இருந்தார் பத்மினி ? எல்லாம் போகட்டும் இங்கு மருத்துவம் பெறுகின்றவர்களை ஒரு தரம் கூட வந்து பார்க்காமல் கொழும்பில் நின்று யாருக்காக கண்ணீர் விடுகிறார் ? எங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம். ஒரு ஆறுதலான வார்த்தை , ஒரு அன்பான விசாரிப்பு அதைக்கூட பத்மினியால் செய்ய முடியாவிடில் எதற்காக அழுகிறார்கள் ? இந்தக்கண்ணீரே அடுத்த தேர்தலில் அக்காவை அரசியலில் மீண்டும் தாளமிட வைக்கும் ஏற்பாடா ? ஒரு சாதாரண பெண்ணின் மனநிலையே உங்களைப்பற்றி இப்படி முடிவுடன் இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள். உங்கள் பதவி உங்களைத் தேர்வு செய்த மக்களுக்காக எதைக்கொடுத்தது ?

ஒரு பருக்கை சோற்றுக்காக அல்லாடுபவனிடம் போய் சுதந்திரத்தின் பெறுமதியென்னவென்று கேட்டால் அவன் என்னத்தால் உதைப்பானோ அதே மனநிலையில்தான் இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகம் , தேசியம் , சயநிர்ணயம் பேசுவோரை உதைக்கவும் காத்திருக்கிறார்கள். பசித்தவனுக்கு உணவைக் கொடுக்க வழியைவிடுங்கள் அவர்கள் சுதந்திரம் என்பதன் பொருளை உங்களுக்கே சொல்லித் தருவார்கள். வவுனியாவில் பல சமூகசேவகர்கள் , பொதுமக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆயிரமாயிரமாய் உங்களிடம் கேட்க கேள்விகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு தரம் அந்த மருத்துவமனைகளைச் சென்று பாருங்கள்.

உங்கள் லண்டன் நண்பர்களால் வாரம் ஒரு சனிக்கிழமை வெள்ளையர்களுடனான சந்திப்புக்குச் செலவழிக்கப்படும் ஆறாயிரத்துக்கு மேலான பவுண்டுகளில் ஒரு சனிக்கிழமைக்கான தொகையை வாங்கி அந்த மக்களுக்கு ஒரு நேர உணவு ஒரு காற்செருப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை ஆதரவாய் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வாருங்கள். உங்களை ஆயுள் உள்ளவரைக்கும் மறக்கமாட்டார்கள். இப்போது அந்த மக்களுக்குத் தேவை உயிர்வாழ உணவும் உடையும்தான்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அவரது தேவைகளுக்ககா 4வேலையாட்களை வைத்திருக்கலாம். அதற்கான சம்பளத்தை அரசாங்கம் தான் செய்கிறது. உங்களுக்காக உங்கள் கணவரின் சகோதரரை வாகன ஓட்டுனராகவும் , உங்களுக்குச் சேவகம் செய்ய ஒரு பெண்ணையும் , உங்கள் கணவரை உங்கள் உதவியாளராகவும் வைத்து நீங்கள் உங்களுக்குள் தானே அரசாங்கம் தரும் அத்தனை சலுகைகளையும் அனுபவிக்கிறீர்கள். இதில் ஒரு துளியை அவலப்படும் மக்களுக்காகக் கொடுப்பீர்களா?

கடந்த வருடம் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்குக் கொடுத்த பேட்டியைக் கேட்டு கொதிப்படைந்த நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரை வைத்து அவர் வேலைசெய்யும் பத்திரிகையிலேயே சிவநாதன் கிஷோர் அவர்களை எத்தனை மோசமாக எழுதுவித்தீர்கள் ? நினைவிருக்கும் அல்லவா

தனது மக்களுக்குத் தனது மண்ணிலிருந்து சேவை செய்வதாக சிவநாதன் கீஷோர் அவர்கள் சொன்னதற்காக , நீங்களும் கயேந்திரனும் தவிர மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் மாற்று இயக்கம் , மாற்றுக் கொள்கையுடன் வந்தவர்கள் என்றும் , ஒற்றை அம்புக்குறியே சிவநாதன் கீஷோர் அவர்களை தமிழ்க்கூட்டமைப்பில் இணைத்ததாகவும் , இராணுவ அதிகாரிகளுடன் கூட்டு வைத்துப் பார்ட்டி வைத்து வவுனியாவுக்குள் பாதுகாப்பாக வாழ்கிறார் சிவநாதன் கீஷோர் என்ற உங்கள் தகவல் மூலம் எழுதப்பட்ட விமர்சனத்தையும் மறந்திருக்கமாட்டீர்கள். இன்று அதே சிவநாதன் கிஷோர் அவர்கள் முகாம்களில் வதையுறும் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கூட்டமைப்பிற்குள் இருந்தே தனது மக்களைச் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். இதுதான் செயல் வீரருக்கும் சொல்வீரருக்கும் உள்ள வேறுபாடு.

ஆனால் நீங்களோ அன்றும் உங்கள் நலனையே கவனித்தீர்கள். இன்றும் அடுத்த தேர்தலில் வெல்வதற்கு உங்கள் சொகுசுவாழ்வை நிரந்தரமாக்குவதற்கு ‘‘பாராளுமன்றில் பம்மியழுது‘‘ பரபரப்பாகியுள்ளீர்கள்.

20ஆண்பாராளுமன்ற உறுப்பினர்களில் நீங்களும் தங்கேஸ்வரி அவர்களும் தேர்வானதில் பெருமையடைந்த பலருள் நானும் ஒருத்தி. அரசியலில் பெண்களின் வரவு பெரிதாய் இல்லாத இடத்தில் நீங்கள் இடம்பிடிக்க வேண்டுமென்று எங்கள் நண்பர்கள் உறவுகளுக்கெல்லாம் தொலைபேசியில் தொடர்பெடுத்து உங்களுக்கே வாக்களிக்கச் சொன்னோம். இயன்றவரை மக்களுடன் பணியாற்றிவர்கள் ஊடாக மக்களிடம் உங்களுக்கு வாக்களிக்க வைக்கச் சொல்லி நிறையவே முயற்சிகள் செய்தோம். ஆனால் அரசியல் என்றால் சுயநலம் என்பதை உங்கள் செயலால் நிரூபணம் செய்துள்ளீர்கள்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தோடு உங்கள் பாராளுமன்றுப் பதவியிலிருந்து இனி நீங்கள் போனாலும் உங்களுக்கான ஓய்வூதியமும் பதிவாகிவிட்டது. அடுத்த ஐரோப்பியப் பயணத்தோடு ஈழம் உங்கள் நினைவிலிருந்து கரைந்து அகதித்தஞ்சம் உங்களை நிரந்தர ஐரோப்பிய வாழ்வையும் தரலாம். மீண்டும் ஐரோப்பிய தமிழ் ஊடகங்களில் உங்கள் தரிசனம் ஆலோசனைகளாக மந்தைகளான எங்களை நோக்கி வரலாம். அதற்கிடையில் ஏதாவது அல்லலுறும் மக்களுக்காக செய்யுங்கள்.

நன்றி.

அடுத்த உங்கள் ஐரோப்பிய வரவை எதிர்பார்க்கும் அகதி சாந்தி.

சமகால ஈழத்தமிழரின் நிலவரம் திரு.சிவநாதன் கிஷோர்

7:03 AM, Posted by sathiri, One Comment

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.
முகாம்களுக்குள்தற்போதைய தமிழர்கள் நிலமையும் தேவையும் விபரமாக விளக்குகிறார் சிவநாதன் கிஷோர்.


நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.http://tamilwebradio.com/

அனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செயலகமும்..அடம்பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்..

2:39 PM, Posted by sathiri, 4 Commentsஅனைத்துலகச் செயலகத்தின் ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன்.


புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான்.(ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு அடு்த்தகணம் உயிர்வாழ்தலும்...உணவும் உடுதுணியுமே பெரிய பிரச்சனையென்பதால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக இல்லையென்பதே உண்மை)

இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படியும் புலிகளின் அமைப்பில் எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினரான பத்மநாதனின் அறிக்கை வெளியானது..அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.

இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்களென்றால்..புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.

புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்..மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.

இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு பொறுப்பாளர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்துள்ள நிலையில்.ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்கமுடியாதென்பதே..இவரது வாதமாகும்..இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை நிலையை விளக்கி இனியாவது திறந்த மனதுடன் அரசியல்ரீதியான எந்த வேலைகளையும் செய்யத் தயாரில்லையென்பதே உண்மை.

தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்)சிறிரவி..சிவம்..ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த மனிதப்படுகொலையில் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.

அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..அதிலொன்று..ஜெர்மனிய அரசின் சில அமைச்சர்கள் முக்கியமாக அபிவிருத்தி அமைச்சர்..இலங்கையரசின் சர்வாதிகாரப்போக்கினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தது மட்டுமல்ல இலங்கையரசிற்கான நிதி உதவிகளை வளங்கப்போவதில்லையென அறிவித்திருந்ததும்...அனைவரும் அறிந்ததே.. அப்படி அறிக்கைகள் வெளியிட்ட ஜெர்மனிய அரசு அமைச்சர்களை சந்தித்து நன்றிகூறுவதோடு எமது போராட்டத்தின் நியாயங்களை அவகளிற்கும் புரியவைத்து மேலும் சில அழுத்தங்களை இலங்கையரசிற்கு கொடுப்பதுடன் இலங்கையரசு மீதான பொருளாதாரத் தடையினைக் கொண்டு வருவதற்காக ஜரோப்பிய கூட்டமைப்பில் விவாதங்களை முன்வைக்க வேண்டுகோள் விடுத் கூடிய நிலையில் சில ஜெர்மனிய தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் சந்திப்பதற்கான அனுமதிகளையும் பெற்றபின்னர்..வாகீசனுடன் தொடர்புகொண்டு எமது தரப்பில் எமதுசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினால் எமது கருத்துக்களிற்கு மேலும் வலுவாக இருக்குமென்று கேட்கப்பட்டது.. அந்த முயற்சியில் நானும் ஈடுபட்டிருந்தேன்..


ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்...தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆனால் . இப்படியான அறிவுகெட்ட லூசுத்தனமானவர்களையெல்லாம்.. அனைத்துலக பொறுப்பில் புலிகள் அமைப்பின் தலைமை நியமித்து வைத்திருந்ததே எமது அழிவிற்கு காரணம்.. எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களிலும் இவர்களது வழிநடத்தலிலா நீங்கள் உங்கள் தாயகக்கனவுகளை சுமக்கப்போகின்றீர்கள்...முடிவெடுங்கள் நன்றி..

ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..

3:13 PM, Posted by sathiri, 16 Comments

எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது...

முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்..

எம்மண்ணில் தனியரசிற்காக நடந்த ஆயுதப்போராட்டம் முடிவிற்குவந்து எம் நிலத்தில் பல இலட்சம் உறவுகள் புலம்பெயர்ந்தும் புலன் பெயர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்நேரம்..புலம்பெயர்தேசத்திலிருந்து நாடுகடந்த தமிழீழத்தனியரசு என்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது..பல குழுக்களாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் இல்லாது போய் இறுதியில் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகி அதன் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்த பின்னர்..தற்போதைக்கு ஈழத்திலுள்ள தமிழர்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சூழலில் புலம்பெயர்ந்து தேசங்களில் வாழும் சிலர் தாமே ஈழத்தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்டத்தினை நகர்த்தப்போவதாகக்கூறிக்கொண்டு மீண்டும் பல குழுக்களாக பிரிந்து நின்று அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவற்றில் விடுதலைப்புலிகளின் மத்திய குழுஉறுப்பினரான கே.பத்மநாதனால் அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமார் தலைமையில் ஒருகுழு உருவாக்கப்பட்டு அது நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படும் என்றொரு அறிக்கையை விடுத்துள்ளது..அதே நேரம் இலண்டனில் தமிழீழ மக்களவை ஒன்றொரு அமைப்பின் பெயரில் அரசியல் பற்றிமாகரன் என்பவரும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்..அதே நேரம் புலிகள் அமைப்பில் கஸ்ரோ என்பவர் தலைமையில் அனைத்துலகச் செயலகம் என்றொரு அமைப்பிடம்தான் புலிகளின் தலைமை நிதி மற்றும் பரப்புரை பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தது..இவற்றின் நேரடி தொடர்பாளராகவும் உலக நாடுகளில் உள்ள பணியகங்களின் பொறுப்பாளராகவுமிருக்கும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் (இந்த அமைப்பின் செயற்பாடுகள் பற்றி அதன் பொறுப்பாளராகவிருந்தவரிடம் முரண்பாடும்..வெளிநாட்டு பொறுப்பாளர்களிடம் விமர்சனங்கள் எனக்கு நிறையவே இருந்தாலும் அதனைப்பற்றிய விடயங்களை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்)

பத்மநாதனின் கட்டமைப்பினை ஏற்க மறுத்து தமிழ்நாட்டு தலைவர்கள் நெடுமாறன் மற்றும் வை.கோபோன்றவர்களினுடாக சில அறிக்கைகளை வெளியிட்டு குழப்பிவிட.. அது போதாதென்று ஜரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவர் தன்பங்கிற்கு வேறு வேறாய் அறிக்கைகளை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டு குழப்போ குழப்பென்று குழப்பிக்கொண்டிருக்க .. தற்சமயம் அனைத்துலகச் செயலகத்தினை சேர்ந்தவர்களைத் தவிர மற்றையவர்கள் அனைவரும்.. உருத்திரகுமாரின் தலையிலான நாடு கடந்த தமிழீழத் தனியரசிற்கு ஆதரவு வழங்கத் தொடங்கி ஓரணியில் திரளத் தொடங்கியிருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தந்தாலும்..இனிவரும் காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே மக்களின் ஆதரவும் அதனூடாக இத்திட்டத்தின் வெற்றியும் அமையும்.. எனவே இனிவரும் காலங்களில் இவர்கள் செயய்ய வேண்டியது..

1) இனிவரும் காலங்களில் இவர்களது அறிக்கைகள் செய்திகளை நிழல்மனிதர்களால் வெளியிடப்படாமல் பகிரங்கமாக மக்களினால் அறியப்பட்டவர்களினால் நேரடியாக மக்களைச்சென்றடையுமாறு வெளியிடப்படல் வேண்டும்.. ஏனெனில் எமது போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் போராட்டமாக தொடரப்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கும் பொழுது நிழல் மனிதர்களின் தலைமையின்கீழ் எதனையும் சாதித்துவிட முடியாது..

2)தற்சமயம் சில கலாநிதிகளை மட்டுமோ ஆலோசகர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்மைப்பில் என்னைப்போன்ற சாதாரண கல்லா..நிதிகளையும் அனைத்துமக்களையும் இவர்களது வேலைத்திட்டங்கள் சென்றடையும் விதத்தில் மக்களுடன் மக்களாய் வேலைசெய்யக்கூடிய இன்னொரு கட்டமைப்பு உருவாக்கப்படல் அவசியம்..

3)விடுதலைப்புலிகளின் சில செயற்பாடுகளை விமர்சித்தாலும் தமிழ் மக்களிற்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று தங்கள் சொந்த லாபநோக்கமற்று மனதார விரும்பும் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும்..

4)இனிவருங்காலங்களில் இந்த அமைப்பு தமிழ்மக்கள் நலன் சார்ந்து நடாத்தப்படும் எந்த சந்திப்புக்கள் பற்றியதும் ஆலேசனைக் கூட்டங்கள் பற்றியதுமான விபரங்களை உடனுக்குடன் ஊடகங்கள் வாயிலாக தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும்..

5)தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் உலகநாடுகளால் கொண்டுவரப்பட்ட தடைகள்ஊடாக தமிழ்மக்களின் நியாயமான போராடத்தினை முடக்கிய நாடுகளில் அதன் தடைகள் நீங்குவதற்கு சட்ட ரீதியாகவும் மக்கள் போராட்டத்தினுடாகவும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி விடப்படவேண்டும்.

6)இனிவரும் காலங்களில் முழுக்க முழுக்க இந்திய மற்றும் மேற்கத்தைய அரசுககளை மட்டுமே நம்பி எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளாமல்.. இவைகளிற்கப்பாலும் இந்த உலகின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய சக்திமிக்க அரசுகள்இருக்கின்றதென்னபதனையும் கருத்திற்கொண்டு அவைகளின் உதவிகளையும் உறவுகளையும் வளர்த்தெடுப்பதோடு ...இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)

இவையனைத்தும் உடனடியாக நடந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும் ஆனாலும் பலவருடங்கள் சொன்றாலும் இவை முறையாக நடந்தேறின்.. நான் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பான ..ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..என்கிற சொல் வலுவிழந்து தமிழனிற்கென்றொரு நாடும் தமிழனிற்கென்றொரு அரசும் நிச்சயம் உருவாகும்..நன்றி