Navigation


RSS : Articles / Comments


சப்பறம் பாக்கலாம்

7:44 AM, Posted by sathiri, No Comment

சப்பறம் பாக்கலாம்

ஒரு பேப்பரிற்காக

கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.

ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன் துறைக்கு கொழும்பில் இருந்து வரும் இரவு புகையிரதத்தை ஓட்டி வந்தால் மறுநாள் மாலை காங்கேசன் துறையில் இருந்து இவர்தான் கொழும்பிற்கு ஓட்டிசெல்ல வேண்டும் ஆனால் இவர் பகல் முழுதும் மப்படித்து விட்டு எங்காவது படுத்து நித்திரையாகி விடுவார். மாலையானதும் புகையிரதத்தை எடுக்க ஆளை காணவில்லையென்று றெயில்வே திணைக்கள ஜுப்பில் அதன் ஊழியர்களும் ஒரு பொலிஸ்காரரும் இவரை தேடி ஊருக்கு வருவார்கள்.

பிறகு நாங்களும் சேந்து அவர் கோயிலடியிலையா அல்லது கள்ளு கொட்டில்களில் படுத்திருக்கிறாரா என்று தேடிப்பிடித்து ஜுப்பில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஆனாலும் மறுபடியும் அதே கதைதான். கார் பஸ் என்றால் அவசரத்திற்கு யாராவது ஓடலாம் ஆனால் றெயின் ஓட யாரை பிடிக்கிறது என்கிற கவலையில் றெயில்வே திணைக்களமும் இவரை வேலையில் இருந்து நீக்காமல் பொறுமைகாத்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு முறை இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயணிஒருவருடன் ஏதோ தகராறாம். அந்த பயணி கோண்டாவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் என்பதை தெரிந்து கொண்ட ராசா கோண்டாவில் நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்தாமல் கொஞ்ச தூரம் கொண்டு போய் இணுவில் தோட்டவெளிப்பக்கமாக நிறுத்தியிருக்கிறார்.

பயணிகள் எல்லாம் திட்டியபடி இறங்கி போய் பின்னர் பெட்டிசங்களும் இவருக்கு எதிராக போய் விழ பிறகென்ன வேலை காலி. அதுக்கு பிறகு அவரும் எங்களுடன் கோயிலடி மடத்து உறுப்பினராகி தனது புகையிரம் ஓட்டிய அனுபவங்களை பிறிஸ்ரல் சிகரற் பிடித்த வாயால் பீடி புகையை இழுத்து விட்டபடி சொல்லிக்கொண்டிருப்பார்.அப༢r />?போது எங்கள் கோயில் திருவிழாவும் தொடங்கியிருந்தது. கோயிலில் இருபத்தைந்து திருவிழாவையும் சிலர் தனிக்குடும்பங்களாகவும் சிலர் சொந்தங்கள் ஒன்று சேர்ந்து செய்வதும் வழைமை.சொந்தங்கள் அல்லது பலர் ஒன்று சேர்ந்து செய்யும் திருவிழாக்கள் பலரும் பணம் சேர்த்து செய்வதால் ஆடம்பரமாக பலகூட்டம் மேளம். பாட்டு கச்சேரி. சின்னமேளம்.கலர் கலரா றியூப்லைற் சேடனைகள் என்று களை கட்டும்.

அது போலத்தான் எங்களது திருவிழா சப்பறத்திருவிழா.நாங்களும் சொந்தங்கள் பலர் சேர்ந்து செய்வதால் திருவிழா களை கட்டும். அதிலை சின்னமேளத்திற்கான மொத்த செலவையும் என்ரை தாத்தா தான் பொறுப்பெடுக்கிறவர். அண்டைக்கு தாத்தா காத்தாலை எழும்பி உடம்பெல்லாம் எண்ணை தேச்சு கொஞ்ச நேரம் வெய்யில்லை நிண்டு தோஞ்சு குளிச்சு பட்டுவேட்டி சால்வை கழுத்திலை புலிப்பல்லு சங்கிலியெண்டு மைனர் குஞ்சு மாதிரித்தான் வலம் வருவார்.மற்ற நாளிலை நாங்கள் என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கிதாற பாட்டி அண்டைக்கு நாங்கள் என்ன கேட்டாலும் புறு புறுத்தபடி எங்களிலை எரிஞ்சு விழுவா. அது ஏனெண்டு எங்களுக்கு அப்ப விழங்கிறெல்லை பிறகு நாங்கள் வளருகின்ற காலங்களிலை திருவிழாக்களிலை பொப்இசைக்குழு பிறகு ரி.வி. எண்டு வந்ததாலை சின்னமேளம் இல்லாமல் போட்டுது. அதலை எங்களுக்கு சின்னமேளம் பாத்த அனுபவங்கள் இல்லை அதாலை கனடாவிலை இருந்து உவர் பாலச்சந்திரன் அண்ணைதான் அதைப்பற்றி எழுதவேணும்.

சரி நான் சப்பறத்துக்கு வாறன்.அந்த வருச சப்பறத்திருவிழாவை நாங்கள் எப்பிடி செய்யிறதெண்டு பெரியாக்கள் எல்லாரும் கோயிலடியிலை நிண்டு திட்டம் போட்டு கொண்டு நிக்க ராசா வந்து சொன்னார் இந்த வருசம் தானும் ஊரிலை நிக்கிற படியா எல்லாரும் காசை சேத்து தன்னட்டை தாங்கோ மிச்ச காசை தான் போட்டு இதுவரை செய்யாத மாதிரி விசேசமா தான் செய்து காட்டுறணெண்டார்.எங்கடை பெருசுகளும் கதைச்சு பேசி ராசாண்ணையிடமே பெறுப்பை குடுக்கிறதா முடிவெடுத்தினம். ஆனாலும் எனக்கு சந்தேகம்தான் பிறிஸ்ரலுக்கு வழியில்லாமல் பீடி இழுத்து கொண்டு திரியிறவரிட்டை நம்பி பொறுப்பை குடுக்கினம் ஏதாவது வில்லங்கத்திலை தான் முடியும் என்று யோசித்தாலும் நான் சொல்லி பெருசுகள் கேட்கவா போகினம் எதுக்கு வாயை குடுப்பான் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

ஆனாலும் பாதி காசுக்கு மேலை பொறுப்பெடுங்கிறீங்களே உங்களாலை இயலுமா எண்டு ராசாண்ணையிடம் சந்தேகத்தை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவர் சொன்னார் டேய் என்னை வேலையாலை நிப்பாட்டினதக்கு றெயில்வே ஒரு தொகை காசு தந்தது பாங்கிலை போட்டிருக்கினம் பார் இந்தமுறை இருவரை காலமும் நடத்தாத மாதிரி திருவிழாவை நடத்திகாட்டுறன் எண்டார்.சரி என்னமோ எங்களுக்கு திருவிழா நடந்தால் சரி முக்கியமா பாட்டு கோஸ்ரி பிடிக்கவேணும் என்று விட்டு போய் விட்டேன். ராசாண்ணை சொன்னபடியே செய்தும் காட்டினார். திருவிழா காலங்களிலை மேளம். பாட்டு கச்சேரி . வில்லுப்பாட்டு ஆகியவற்றை நாங்கள் விரும்பின படி ஒழுங்கு பண்ணித்தர அதுக்கெண்டு புறோக்கர் மார் இருப்பினம் அவைக்கு அதிலை ஒரு கொமிசன் இருக்கும்.. ராசாண்ணையும் ஒரு புறோக்கரை பிடித்து முற்பணத்தை கொடுத்து நாலு கூட்டம் மேளம் பாட்டு கோஸ்ரி வில்லுப்பாட்டு காரர் எண்டு வந்து இறங்கி கொண்டே இருந்திச்சினம்.

அது மட்டுமில்லை வழைமையா கோயில் வீதியிலை மட்டும் கட்டிற சப்பறம் அந்த முறை ஊர் சந்தியிலையும் கட்டி கோயிலை சுத்தி ஒரு கிலோ மீற்றர் தூரமளவிற்கு கலர் கலரா லைற்றுகள் எவ்வொரு தந்தி கம்பத்திலையும் ஸ்பீக்கர் எண்டு ஒரு கலக்கு கலக்கிச்சுது. ஊர் சனமும் ராசா ஏதோ தண்ணியடிச்சு குளப்படி பண்ணினாலும் ஆள் விசய காரன் எண்டு கதைக்க இதை யெல்லாம் மேற்பார்வை பாத்தபடி புறோக்கருடன் ராசாண்ணையும் ராச நடை நடந்து திரிந்தார்.திருவிழா எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்து சனமும் போய் இசை நிகழ்ச்சிகள் நடத்தினவையும் போய் சேர்ந்திட்டினம். புறோக்கர் மட்டும் மடத்திலையே படுத்திருந்தார் காரணம். நிகழ்ச்சிகளை செய்தவர்களிற்கு ஒரு தொகை முற்பணம் மட்டுமே கொடுத்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ணுவது வழைமை பின்னர் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் மீதி பணத்தை திருவிழா காரரிடம் புறோக்கரே வாங்கி கொண்டு போய் நிகழ்ச்சி செய்தவர்கள் வீடுகளில் போய் கொடுத்து விட்டு தனது பங்கையும் எடுத்து கொள்வார். இந்த பண கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலே நடைபெறுவது வழைமை.

மறு நாள் காலை ராசாண்ணை எப்படியும் மீதி பணத்துடன் வந்து விடுவார் என்று காத்திருந்த புறோக்கர் நேரம் செல்ல செல்ல அக்கம் பக்கம் ராசாண்ணையை தேடி விசாரிக்க தொடங்கினார்.நேரம் மதியத்தையும் தாண்டி மாலையாகி விட்டது அதற்கிடையில் ஊரெங்கும் கதை பரவி புறோக்கருடன் நாங்களும் தேடிகொண்டிருக்க ராசாண்ணை கோயில் குளத்தடியில் படுத்திருப்பதாக செய்தி வந்ததும் அங்கு ஓடிபோய் பார்த்தோம்.பாம்பின் மேல் பால்கடலில் பள்ளிகொண்ட திருமலைபோல ஸ்ரைலாக தலைக்கு ஒரு கையை வைத்தபடி ராசாண்ணை குளக்கட்டில் படுத்திருந்தார். புறோக்கர் அவரிடம் போய் தம்பி காத்தாலை இருந்து தேடுறன் எனக்கு பயமும் வந்திட்டிது மிச்ச காசை தந்தால் நான் கொண்டு போய் குடுக்கிறவைக்கு குடுத்திட்டு என்ரை வேலையை பாக்கலாம் எண்டு இழுக்கவும் கோபம் வந்தவராய் துள்ளி எழும்பிய ராசாண்ணை புறோக்கரை பார்த்து என்னவோய் மேளம் பிடிச்சனீர் ஒருதனும் ஒழுங்கா அடிக்கேல்லை சரி பாட்டு கோஸ்ரிதான் நல்ல பாட்டு பாடுமெண்டால் அதுவும் இல்லை அதைவிட சோடிச்ச ரியூப்லைற்றிலை பாதி ராத்திரி எரியேல்லை அதாலை உங்களுக்கு தாற காசை இந்த குளத்துக்கை எறியலாம் என்றபடி இடுப்பில் இருந்த பேஸ்(பணப்பை) ஒன்றை எடுத்து குளத்தினுள் எறிந்தார்.

அவர் ஆத்திரத்திலை காசை குளத்திலை எறிஞ்சிட்டார் என்று நினைத்து பதறியபடி புறோக்கர் குளத்துக்கை குதிக்க நாங்களும் சேர்ந்து குளத்தினுள் குதித்து சுழியோடி பணப்பையை எடுத்து பிரித்து பார்த்தால் வெறும் கடதாசிகள் மடித்து வைக்கபட்டிருந்தது.வெளியே வந்து பார்த்தால் ராசாண்ணையை காணவில்லை ஓடிவிட்டார்.பிறகென்ன புறோக்கரின்ரை பரிதாபத்தை பார்த்து நாங்கள் மீண்டும பணம் சேர்த்து கொடுத்து அனுப்பி வைத்தோம்.அன்று ஓடிய ராசாண்ணையை பல வருடங்களாக ஊர்ப்பக்கம் காணவில்லை வன்னியில் கண்டதாக யாரோ வந்து சொன்னார்கள்.