Navigation


RSS : Articles / Comments


இனியொரு விதி செய்ய புறப்பட்டிருக்கும் இளையொர் அமைப்பு

11:07 AM, Posted by sathiri, One Comment

உலக நாடுகளெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் பல்வேறு நோக்கங்களிற்காய் பல்வேறு பெயர்களில் பல அமைப்புக்கள்தொடங்கபட்டு அவை ஒன்றுக்கொன்றுதொடர்பில்லாமலும் அவர்களிற்குள் ஆயிரம் குழப்பங்கள் குத்துபாடுகள் என்று தொடர்ந்தாலும் அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில்முடிந்தவரை தமிழிற்கும் தாய் நிலத்திற்கும் சில சேவைகளையும் சிறு பத்திரிகைகள் மற்றும் சில சஞ்சிகைகள் என்று வெளியிட்டு கொண்டிருந்தபோதும் அவற்றில் பல அமைப்புகள் கால வெள்ளத்தில் கரைந்து காணாமல்போய் விட்ட நிலையில், இன்னும் சில கரைந்து பொய்கொண்டிருக்கும் நேரத்தில் தான் புலம்பெயர் சூழலியே பிறந்து வளர்ந்த மற்றும் சிறு வயதிலெயெ புலம் பெயர்ந்து வந்த இளையோரால் தமிழ் இளையோர் அமைப்பு என்னும் அமைப்பு பல நாடுகளிலும் ஒரேநோக்கத்திற்காய் ஒரே பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புகளை பேணியபடி ஒரே அமைப்பாய் செயற்பட தொடங்கி அதன் செயற்பாடுகளும் பாராட்டதக்கதாய் பலரும் போற்ற தக்க விதத்தில் அவர்களது திறைமை உழைப்பு எல்லாமே எம் இனத்திற்கும் எம் நாட்டிற்கும் நன்மை தரும் விதத்தில் நகர்த்தபடுவது நல்லதொரு மாற்றமே.

அவர்களது தாயக பயணமும் அங்கு அவர்கள் ஆற்றிய பணிகளும் அதற்கு சான்றாகும். புலத்து இளையவர் என்றாலே காதில் கடுக்கனும் கலர் அடித்த தலையும் கதா நாயக நாயகி கனவும் காதல் செட்டைகளும் மட்டுமே அவர்களிற்கு தெரியும் என்று இருந்த கதைகளையெல்லாம் காலால் உதைத்து, காலத்தின் உதாரணமாய் நாமிருப்பொம் என்ற காட்ட புறப்பட்டிருக்கும் அவர்களிற்கு கை கொடுத்து மேலும் மேலும் அவர்களது பணிகளிற்கு ஆக்கமும் ஊக்கம் கொடுத்து பராட்டவேண்டியது எமதும் மற்றும் எமது மற்றைய அமைப்பகளின் கடைமையாகும்.

ஆனால் ஒரு வேதனையான விடயம் என்னவென்றால் இங்குள்ள பல பழைய எம்மவர் அமைப்புக்களிற்கொ அதில் பதவிகளை அலங்கரித்திருக்கும் பழசுகளிற்கொ இந்த இளையவரை பாராட்ட மனது வரவில்லை. சரி பாராட்டத்தான் வேண்டாம் சும்மாயிருக்கிறார்களா என்றால் இல்லை . அவர்களின் புறு புறுப்பு என்னவென்றால் அவர்களது நடையையும் உடையையும் பார் நாட்டிற்கு உதுகளாலை என்ன நன்மை தமிழ் உச்சரிப்பே வருதில்லை உருப்பட்டமாதிரிதான் என்று இவர்களின் உளறல்கள்.

உடையாலும் உச்சரிப்பாலும் தான் ஒருவரிற்கு தன் இனத்தின் மொழியின் மீதான பற்று வரவேண்டுமென்றில்லை உடை நாகரிகம் என்பது என்ன? மனிதன் தான் வாழ்ந்த சூழலுக்கு அதன் தட்ப வெட்ப நிலைகளிற்கேற்ப தன்னைபாதுகாக்கவும் தனது மானத்தைமறைக்கவும் ஆடைகளை அணிய தொடங்கினான் காலப்போக்கில் அதில் மற்றங்களும் செய்து கொண்டனர். இவர்கள் இங்கு கூறுவது போல பார்த்தால் எமது பாட்டன் முப்பாட்டன் அணிந்தத போல நாம் இன்றும் கோவணமா அணியவேண்டும். இல்லை சொல்பவர்கள் தான் அதை அணிந்து திரிகிறார்களா??

அடுத்ததாக தமிழ் உச்சரிப்பு என்று பார்த்தால் அவர்களது உச்சரிப்பை அழகிய தமிழ் உச்சரிக்க செய்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல ஊருக்கு நாலு கதை பேசுகின்ற நேரத்தில் அதை நீங்களும் நாங்களும் செய்யலாம் இளையோர் அமைப்பினர் தாயக பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர்களிற்கான தமிழ் வகுப்புகளும் நடாத்தபட்டன என்பது இங்கு குறிப்பிட தக்கது.

அதற்கும் மேலாக இளையோர் அமைப்பினர் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை அவர்கள் பெற்றொரிடம் இருந்தே அதாவது பிள்ளை இளையோர் அமைப்பில் இணைகிறது என்றால் எங்கே அந்த பிள்ளை தங்களை விட்டு தாயகத்திற்கு போய்விடுமோ என்று தவறான நினைப்பினால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய அனுமதிப்பதில்லை அதனால் பலர் பெற்றோருக்கு தெரியாமலேயே இந்த அமைப்பில் பணியாற்ற வேண்டிய நிலை. பல பெற்றொர் தங்கள் பெண்பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய விடுவதில்லை இதையெல்லாம் பார்க்கும் போது எழுபது எண்பதுகளில் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் இப்படித்தான் எங்கே தங்கள் பிள்ளை தங்களை விட்டு போராட போய்விடமோ என்கிற பயத்தில் அவர்களை கெஞ்சியும் மிரட்டியும் அவர்களை வெளி நாடுகளிற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே அவர்கள் ஒரு தமிழராக நடந்து கொள்ளாமல் ஒரு சராசரி தாய் தந்தையாகவே நடந்து கொண்டனர். அதற்காக எமது போராட்டம் அப்படியெ நின்று போகவில்லை வெளிநாடு வந்த பலநூறு இளையவர்கள் திரும்பவும் தாயகம் வந்த போராடினர். அன்று தங்கள் பிள்ளைகளை அனுப்ப அவர்களிற்கு வெளிநாடு என்று ஒன்று இருந்தது ஆனால் இன்று வெளிநாட்டு பெற்றொருக்கு பிள்ளைகளை அனுப்ப எந்த இடம் உள்ளது ?? அடுத்த கிரகத்திற்கா?? தாயகம் மட்டுமே உள்ளது. எனவே இங்கு பெற்றோரும் வீணான பயங்களை விட்டெறிந்து தன்னினத்திற்கும் தன்மொழிக்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்ய புறப்பட்டிருக்கும் தனது பிள்ளைகளை பார்த்து பெருமைபடவேண்டுமே தவிர பயப்பட தேவையில்லை.

அடுத்ததாக எமது மக்களை சுனாமி தாக்கிய நேரத்தில் இவ் இளையொர் அமைப்பின் பணி மகத்தானது அந்த தை மாத குளிரிலும் தங்கள் பாடசாலை வகுப்புகளையும் நிறுத்தி விட்டு வீதி வீதியாக வீடு வீடாக ஒவ்வொரு நாட்டிலும் வெள்ளையினத்தவருக்கு அவரவர் மொழிகளில் எமது மக்களின் அவலத்தை எடுத்து சொன்ன அதே நேரம் சிறீ லங்கா என்கிற தேசம் வேறு எங்கள் தமிழர் தேசம் வேறு என்று அவர்களிற்கு புரிய வைத்து பாரிய அளவில் பண மற்றும் பொருளுதவிகளை பெற்று தாயகம் நோக்கி அனுப்பியிருந்தனர் அவர்களது அந்த பணியினை எந்தவொரு அமைப்பும் ஒரு பொது மேடையிலும் இவர்களை மனம் திறந்து பாராட்டவில்லையென்பது மட்டுமல்ல பலஊடகங்கள்கூட இவர்களது பணியினை பற்றி கண்டு கொள்ளவில்லையென்பதும் கவலையான விடயமே.

இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனிமேலாவது மற்றைய அமைப்புகளின் பொறுப்புக்கள் மற்றும் பதவிகளில் இருக்கின்ற எம்மவர்கள் எதிர்கால எமது தேசத்தை கட்டி எழுப்ப போகின்ற எமது இளைய சமூதாயத்திற்கு வழி விட்டு அவர்களிற்கு வழிகாட்டியாக இருந்தலே போதும். இல்லை வழிவிட்டு ஒதுங்கியிருங்கள் அதுவே போதும். இறுதியாக இளையோருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் செயற்பாடுகளால் உங்கள் பெற்றோருக்கும் மற்றொருக்கும் உங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பி இன்று எமது போராட்டத்தாலும் போராடியும் களைத்து போனதோர் சந்ததி அவர்களது சுமையின் மீதியை இன்று உங்கள் தோள்களில் சுமத்தியுள்ளது அதை சோகமான சுமையாக நினைக்காமல் சுகமான சுமையாக்கி எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதனை படிக்கற்களாக மாற்றி அதன்மீது நடந்து இனியொரு விதி செய்வீர்.

http://www.orupaper.com/issue45/pages_K__Sec3_28.pdf சாத்திரி ஒரு பேப்பருக்காய் நன்றி

தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல்

11:11 PM, Posted by sathiri, No Comment

இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம்.

இந்த தேர்தலில் கூட்டாகவும் தனியாகவும் பல தமிழ் நாட்டு கட்சிகளும் முக்கியமாக எட்டு பெரிய கட்சிகள் சந்திக்கின்றன. அந்த கட்சிகளின் முக்கிய விடயங்களாக பதின் நான்கு விடயங்கள் முன்வைக்க படுகின்றது.

அந்த பதின் நான்கு விடயங்களில் ஈழதமிழர் மற்றும் புலிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பும் இந்த பதின் நான்கு விடயத்தில் அடங்குகிறது. அது வழமையா நடக்கிறதுதானே இதிலென்ன புதினம் வழமையானதுதானே எண்று நீங்கள் யோசிப்பதும் புரிகிறது.

தமிழ் நாட்டில் எதிரும் புதிருமான இரண்டு பெரிய கட்சிகளான அ.தி.மு.க. வும் தி.மு. க இரண்டுமே ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர் தமிழக தேர்தலில் இம்முறை ஈழ ஆதரவு சங்கை ஊத தொடங்கிருக்கிறார்கள். இவர்கள் எப்படித்தான் ஏற்ற இறக்கத்துடனும் இராகத்துடன் ஊதினாலும் எமக்கு கேட்பது வெறும் கூகூகூகூ தான்.

இதில் தனது வீட்டுக்கு மேலால் புலிகளின் விமானம் பறக்கிறது தன்னை கொல்ல பேகிறார்கள் என்று கூக்குரலிட்ட ஜெயலலிதா ஒருவர். மற்றையது தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும்என்னென்ன தகிடுதனங்கள் காலை வாருதல் முதுகில் குத்தல் நம்பவைத்து களுத்தறுத்தல் என்று என்னென்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அசர தந்திரம் என்கிற பெயரில் செய்து இன்று அரசியல் சாக்கியன் என்கிற பெயருடன் நிற்கும் கருணாநிதி.

இவர்களது ஈழதமிழர் மற்றும் புலிகள் மீதான பாசம் ஒன்றும் அவகள் அடிமனதிலிருந்து வந்ததல்ல அதற்கு காரணம் இன்று புலிகளின் பலமும் அதற்கு உறுதுணையாய் நிற்கும் ஈழ மற்றும் உலக தமிழர்களின் உண்மையான ஆதரவுமேயாகும்.இதிலே ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி வேகத்தால் தலைவரானவர். கருணாநிதியோ ஆரம்பகாலத்திலிருந்தே தனது கட்சிக்குள் திட்டமிட்டு காய் நகர்த்தி தனது தகிடுதனத்தால் தலைவரானவர்.ஈழதமிழர் மற்றும் புலிகள் விடயத்தில் ஜெயலலிதா நேரடியாக பகிரங்மாக எதிர்த்த ஒருவர் கருணாநிதியோ வழைமையான வழுவல் போக்கில் நம்முன்னே புன்னகைத்தபடி பலதடைவை முதுகில் குத்திய குள்ளநரி.அதை அவர் ஈழபோராட்ட கால ஆரம் பதிலிருந்தே அதை செவ்வனே செய்து வந்த ஒருவர். அதில் பலவற்றை பக்கம் பக்கமாய் எழுதலாம்.

உதாரணத்திற்கு சில இலங்கைக்கும் இந்தியாவிற்கும் சட்டபடி எந்தவித நாடுகடத்தல் ஒப்பந்தமும் இன்றி ஈழவிடுதலை போராட்டத்தில் ஆரம்பகாலத்து போராளிகளில் ஒருவரான குட்டிமணியை 1973ம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டு கோளிற்கு இணங்க தஞ்சாவூரில் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். பல அண்டுகளின் பின்னர். நீலன் திரு செல்வத்தின் கொலையுடன் சம்பந்த பட்டவர் என இலங்கையரசால் தேடப்பட்டவர் தமிழ்நாட்டில் சட்டப்படி அங்கு எந்த வித பிரச்னையும் இன்றி இருந்தபோது சி.பி.ஜ யினால் கைது செய்யபட்டு அவரை நாடு கடத்த கருணாநிதியிடம் ஒப்புதல் கோரபட்டபோது சட்டத்திற்கு புறம்பாக நாடு கடத்தும் அனுமதியை கொடுத்தார். ஆனால் தமிழ் நாட்டில் வங்கி கொள்ளையிலும் மற்றும் ஒரு கொலையுடனும் நேரடியாக சம்பத்தபட்டு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்ட டக்ளஸ் தேவானந்தாவோ இவர் ஆட்சியின்போது தமிழ் நாட்டில் போய் நட்சத்திர விடுதியில் படுத்திருந்து பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்துவிட்டு வருகிறார்.

எப்போதுமே நக்கலும் நளினமாகவுமே பேசிபழக்கபட்ட கருணாநி எமது மக்களின் பாரிய பேரழிவுகளும் போராட்டமும் கூட அவருக்கு நக்கலாய் தெரிந்திருக்கவேண்டும் அதனால் ஒரு பத்திரிகை பேட்டியின் போது சொன்னார் தமிழீழம் கிடைத்தால் சந்தோசம் ஆனால் புலிகளை ஆதரிக்கமாட்டேன் என்றார். அதற்கு தேனிசை செல்லப்பா பாரீசில் நடந்த ஒரு நிகழ்சியின் போது அவரது பாணியிலேயே பதிலடி குடுத்தார். கருணா நிதியின் மகள் கனி மொழிக்கு பிள்ளை பிறந்தால் சந்தோசம் ஆனால் திருமணம் செய்வது கருணாநிதிக்கு பிடிக்காது என்று.

அதைவிட இந்த தேர்தலில் ஈழ அதரவு கட்சிகளான ம.தி.மு.க.வும் பா.ம.க. வும் கருணாநிதியுடன் கை கோர்த்து நிக்கும் போது ஏன் கருணா நிதிக்கு எதிராக இப்படியொரு கட்டுரை என்று படிப்பவர்கள் யோசிக்கலாம்.

அந்த இரு கட்சிகளும் ஈழதமிழருக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியான விடயமே அவர்கள் கருணாநிதியுடன் கூட்டு வைத்திருப்பது அவர்களது எதிரகால அரசியல் ஆதாயங்களிற்காகவே தவிர அன்பினால் அல்ல. அதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு கூட்டத்தில் வை.கோ அவர்கள் கூறிய பாம்பின் நிழலில் பாதுகாப்பு தேடிய தவளை கதையோ போதுமானது.எம்மை பொறுத்தவரை கருணாநிதியின் நக்கல் மொழியில் சொலவதானால் இந்த தேர்தலில் ஜெயலலிதா வெல்ல வேண்டுமென்பதல்ல எமது விருப்பம் ஆனால் கருணாநிதி தோற்க வேண்டும். நேரடியாக சொல்ல போனால் தழுவி கொண்டே குழி பறிக்கும் கரணாநிதியை விட நேரே எதிர்க்கும் ஜெயலலிதாவே மேல்

http://www.orupaper.com/issue42/pages_K__34.pdf

குளு குளு டென்மார்க்கில் கிளு கிளு பெண்சாமியார்

11:08 PM, Posted by sathiri, No Comment

காலங்காலமாய் போலிசாமியார்கள் பற்றிய செய்திகள் வருவதும் அவர்கள் பிடிபடுவதுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் எம்மிடையே இன்னமும் போலி சாமியார்கள் உருவாகி கொண்டும் மக்கள் அவர்களை நம்பி கொண்டும் தான் இருக்கிறார்கள்.ஆனாலும் போலி சாமியார் களை நம்புகிற விடயத்தில் இந்தியாவை போல எம்மவர்கள் அதிகம் இல்லை எண்று மகிழ்ச்சியடைவதா அல்லது இன்னமும் போலிகளை நம்பும் எம்மவர் இருக்கிறார்கள் என்று கவவையடைவதா என்று தெரியவில்லை.

80 களில் யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதிகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் பிரேமானந்தா சாமியார்.அவரை ஒரு போராளி குழு ஒன்று பிடிக்க சென்றபோது மயிரிழையில் இந்தியாவிற்கு தப்:பியோடி அங்கு இந்தியாவில் தமிழ்நாட்டை ஒரு கலக்கு கலக்கி இப்போது சிறைச்சாலையில் எந்த வித அற்புதங்களும் செய்யமுடியால் நாழை கழிக்கிறார். பின்னர் அவ்வப்போது ஈழத்தில் சில சாமியார்கள் தோன்றி சாமியாடுவதும் அருள் வாக்கு சொல்வதும் பின்னர் அவர்களை போராளிகள் அழைத்து போனதும் அவர்கள் அருளும் போய் அம்மனும் மலையேறி சாதாரண மனிதர்களாய் திரிவதும் பலரும் அறிந்ததே.

ஆனால் இன்று புலத்தில் டென்மார்க் நாட்டில் ஒரு பெண் சாமியார் தோன்றி சாமியாடி அருள் சொல்கிறார் அவரையும் அவரது பின்ணணி பற்றியும் சிறிது பாரக்கலாம் . இந்த பெண் சாமியார் ஈழத்தில் ஏழாலையை சேர்ந்தவர் இவரும் மற்றை ஈழதமிழர்களை போல டென்மார்க் நாட்டில் அகதியாக குடியேறியவர் பின்னர் புலத்தில் எம்மவர் தங்கள் திறைமைக்கேற்ப தொழில்களை தொடங்கியது போல இவரும் தனது திறைமைக்கேற்ப தனது வீட்டின் சாமான்கள் போட்டு வைக்கும் நில கீழ் அறையில் ஒரு சிறிய கோவில் போல ஒன்றை உருவாக்கினார்.

தனக்கு ஊரில் ஆறு வயதிலேயே அம்மன் வந்து விட்டதாகவும் அதனால் தான் கலையாடுவதாகவும் கூறி கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களை அழைத்து சாமியாடி குறி சொல்ல தொடங்கினார். எனக்கு தெரிய இவருக்கு இரண்டு தடைவை குலைப்பன் காச்சல்தான் வந்தது ஊரிலை. அப்பிடி பாத்தால் மாரி காலத்திலை மலேரியா வந்தாக்கள் எல்லாரும் அம்மன் அளுள் கிடைத்ததாக நினைத்து சாமியாடலாம்.அவர் எதிர்பார்த்தது போல சிறிது கூட்டமும் பண புளக்கமும் வர தொடங்கியது (அதுதானுங்க காணிக்கை)நாளடைவில் இவரது பெயர் அக்கம் பக்கத்து நகரங்களில் வசிக்கும் தமிழர் களிற்கும் பரவ புலத்தில் ஏதோ ஒரு மனச்சுமையுடனும் இருக்கும் தமிழர்கள் மன ஆறுதலுக்காகவும் இவர் சொல்வது நடக்குமாம் என்கிற ஒரு நப்பாசையிலும் இவரை தேடி போக தொடங்கினார்கள்.

அவர்களது நப்பாசை இந்த பெண்சாமியாரின் பேராசையாக மாறி அவர்களிடம் வழைமையாக எல்லா போலி சாமியார்களும் சொல்வது போல தோசம் தெய்வ குற்றம் பரிகாரம் என்று பணம் கறக்க தொடங்கினார்.இவரது விசேடம் என்னவெண்றால் நல்ல வாட்ட சாட்டமான அழகான ஆண்கள் அவரிடம் போனால் அவர்களிற்கு உடனே ஏதாவது தோசம் கண்டுபிடித்து அவர்களிற்கான பரிகார பூசையை தனியாக ஏற்பாடு செய்து விடுவார்.பிறகென்ன பரிகாரத்திற்கு போனவர் பேய்பிடித்து வெளியே வருவார்.

இப்படித்தான் ஒருமுறை ஈழத்தில் எம்மவருக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பார்க்க கொஞ்சம் வாட்ட சாட்டமாய் இருப்பார் அவர் இவரிடம் தொண்டு நிறுவனத்திற்காய் பண உதவி கேட்டு இவரை நாடியிருந்தார் போனவரிடம் அந்த அம்மணி சொல்லியிருக்கிறார் பண உதவிதானே பிரச்சனையில்லை நான் இன்றிரவு பூசையில் இருக்கும் போது அம்மன் என்னில் வருவார் அப்பவாருங்கள் நீங்கள் கேட்ட உதவியை அம்மன் அருளுடன் தருகிறேன் என்று போனவரும் கொஞ்சம் சாமி பக்தியுள்ளவர் அவரும் அடடா அம்மனே வந்து உதவபோறா எண்டு நினைத்து அன்றிரவு குளித்து சுத்தமாய் பயபக்தியுடன் அர்ச்சனை சாமானுடன் போயிருக்கிறார் அங்கு போனதும் அவருக்கு ஒரு சந்தேகம் அங்கு யாரும் இல்லை இவர்மட்டும்தான் சரி எதுக்கும் வந்த அலுவலை பாப்பம் எண்டிட்டு பக்தியுடன் அந்த அம்மணிமுன் அமர அந்த அம்மணியும் சில வசனங்களை உச்சரித்தபடி உடலையும் தலையையும் ஆட்டியபடி அம்மன் வந்திட்டா உனது பிரச்சனைகளை தீர்து வைப்பா எனவே நீ அம்மனை குளிர்வித்து மகிழ்ச்சி படுத்து அப்போதான் அம்மன் மகிழ்வடைந்து நீ கேட்டதை தருவா எணறபடி அவரை கட்டியணைத்திருக்கிறார்.

போனவர் திடுக்கிட்டு அம்மணியை உதறி தள்ளி விட்டு துண்டை காணம் துணியை காணம் எண்டு ஒடியந்திட்டார்.இப்படி பல லீலைகளை அம்மன் செய்து வந்ததால் அவரது கணவன் ஆரம்பத்தில் அவருடன் கோபித்து கொண்டு போய் தனியாக கனகாலம் இருந்தவருக்கு அந்த அம்மணியின் பெயர் புகழ் பணம் என்பவற்றை பார்த்து விட்டு அவருடன் சமரச உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு அவருடன் மீண்டும் இணைந்து விட்டார். அதனால் அவரும் இப்ப கடவுளாகி விட்டார் அவரிடம் போகும் பக்தர்கள் முக்கியமாக அவரது காலிலும் அவரது கணவர் காலிலும் வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கவேண்டும்.

அவர்கள் காலில் விழும் எம்மவர்களை என்னவெண்று சொல்வது.அதை விட இவர்களிடம் அதிகம் ஏமாந்தவர்கள் பிள்ளையில்லாத குறையை போக்கவென்று இவரிடம் சென்று பணத்தை கொடுத்தவர்களே.போனவர்கள் கொஞ்சமாவது சிந்தித்திருக்கலாம் ஒரு ஆண் சாமியார் என்றாலாவது பரவாயில்லை பிள்ளை வரம் கொடுப்பார் பெண் சாமியாரால் எப்படி பிள்ளை வரம் குடுக்க இயலும். இவரது திருகு தாளங்கள் மெல்ல மெல்ல வெளியே தெரிய வர அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களும் மற்றும் டென்மார்க்வாழ் தமிழர்களும் இவரிடம் போவதை நிறுத்த இவருக்கும் வருமானம் குறைந்து கொண்டு போகவே இன்னொரு ஆலோசனையை செயற்படுத்தினார்.

அதுதான் அய்ரோப்பாவில் ஒளிபரப்பாகும் ஒருதமிழ் தொலை காட்சி நிறுவனர் ஒருவரை பிடித்தார் அவருக்கு தனிய விசேட பூசை நடத்தி அருள்வாக்கு கொடுத்தார். அந்த நிறுவனரும் அருள் பெற்று கொண்டு தனது தொலைகாட்சி முலம் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்க தொடங்கினார். அந்த அம்மணி எதிர்பார்த்த பலன் கிடைத்தது மற்றை அய்ரோப்பிய நாடுகளில் இருந்து ஏமாந்த எம்மவர்கள் இப்போடென்மார்க்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இன்றை கால கட்டத்தில் இந்த அளவுக்கு விஞ்ஞான வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அதுவும் இத்தனை வசதிகள் கொண்ட அய்ரோப்பாவில் வாழ்ந்து கொண்டு இன்னமும் பிள்ளை வரம் கேட்டும் எதிர் காலத்தை அருள்வாக்கு முலம் அறியவும் இவர் போன்ற போலி சாமியார்களை நம்பி மோசம் போகும் எம்மவர்களை என்ன செய்யலாம் விடையையும் நீங்களே சொல்லுங்கள் மக்களே??

புலத்தில் இலகுவாய் முன்னேற சில வழிகள்

11:05 PM, Posted by sathiri, No Comment

புலத்தில் இலகுவாய் முன்னேற சில வழிகள்

உங்களுக்கு கஸ்ரம் வந்தால் என்ன செய்வீர்கள் பொதுவாக எல்லாரும் கடவுளை வேண்டுவார்கள் கடவுளே காசு தா என்று அதே கடவுளையே முலதனமா போட்டு நீங்கள் வாழ்வில் முன்னேறலாமே அதற்கு நீங்கள்: செய்ய வேண்டியது நீங்கள் வசிக்கும் நாட்டில் உங்கள் நகரத்ததில் ஒரு கோயில் கட்ட வேண்டும்.

அதற்கு நகர சபையிடமும் கலாச்சார அமைச்சிடமும் எங்கள் மக்கள் எமது கடவுளை கும்பிட முடியாமல் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் அவர்களது கலாச்சாரம் அழிகிறது அதனால் குற்ற செயல்கள் அதிகரிக்கிறது அவர்களை நல்வழிப்படுத்தஒரு கோயில் கட்ட இடம் வேண்டுமென்று கூறி இலவசமாகவே அல்லது குறைந்த வாடைகைக்கோ ஒரு இடத்தை வாங்குங்கள் (பிரான்ஸ் போன்ற கோயில் கட்ட அனுமதியில்லாத நாடுகளில் ஒருகட்டடத்தை எடுக்கலாம்) இடம்சரி அடுத்தது கட்டடம் கட்ட பணம் வேண்டுமே வழி. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுங்கள்.

இதோவிரைவில் வெளிவருகிறது (இது நல்லாயில்லை) உங்கள் வினை தீர்க்க ஊரில் ஒரு ஆலயம் வேண்டாமா(எல்லாரும் பாவம் செய்தவைதானே)எனவே ஆலய நிதி வள்ளல்களே வாரி வழங்குங்கள். ஆயிரம் யுரோக்கு மேல் நன்கொடை தருபவர்களின் பெயர் கோயில் சுவர் கற்களில் பொறிக்கப்படும் எண்டு போடுங்கோ அப்பதான் எல்லாரும் ஆயிரத்துக்கு மேலை தருவினம்.

ஆனால் பெயர் எல்லாம் பொறிச்சு மினக்கடாதையுங்கோ செலவாகும். காசு தந்தவர் பெயர் எங்கையெண்டு கேட்டா கல்லிலை பொறிச்சிருக்கு மேலை சீமெந்து புசியிருக்கு எண்டு சொல்லுங்கோ அவர் என்ன சுரண்டியா பாக்க போறார். அடுத்ததா சிலையும் அய்யரும் வேணும் அதுக்கு இந்தியா போக வேணும். இந்தியா கன்னியா குமரியிலை சிலையள் மலிவா வாங்கலாம்.

எங்கடையாக்கள் அதிகம் கும்பிடுற பிள்ளையார். அம்மன்.முருகன். முக்கியமா நவகிரகங்கள்.ஏணெண்டா அப்பதான் என்னை மாதிரி சாத்திரியள் சொல்லிவிடுவினம் பிள்ளை உனக்கு சனி செவ்வாய் தோசம் எண்டு.அவை சுத்த வசதியா இருக்கு மல்லோ சிலைகள் கொண்டு வரும்போது முடிந்தால் கொஞ்சம் தூளையும் சிலைகளிற்கை மதை;து அடைத்து எடுத்து வரலாம் தப்பிவந்தால் நீங்கள் அதிஸ்ரசாலி பிடிபட்டால் கடவுள் உங்களை கை விட்டிட்டார் எண்டு அர்த்தம் கம்பி எண்ணலாம்.

சிலை சரி அடுத்தது அய்யர் இதிலை சரியான கவனமா இருக்க வேணும் அய்யருக்கு மந்திரம் தெரியுதோ இல்லையோ அவருக்கு அதிகவெளியுலக விபரம் தெரியாத அப்பாவியாக இருப்பது உங்களிற்கு நல்லது. ஏணெ;டா அவர் இங்கை வந்து இடம் பிடிபட பிறகு உங்களிற்கு போட்டியா தானே தனிய கோயில் கட்டதொடங்கிடுவார்.

அய்யருக்கு இந்திய காசில் ஒருதொகையை பேசி மாதா மாதம் இந்தியாவில் அவரது வங்கியில் போட ஒழுங்கு பண்ணுங்கள் அத்துடன் இங்கு தங்குமிட வசதி உணவு இலவசம் எண்டு சொல்லுங்கோ கோயில்லை இருக்கிறதை சாப்பிட்டிட்டு அங்கேயே ஒரு கரையிலை படுக்க விடலாம். அய்யரை இங்கு கொண்டு வந்ததும் முதலில் அவரின் கடவு சீட்டை பறித்து நீங்கள் வைத்து கொள்ளுங்கள் உங்களிற்கு நல்லம். ஏணெண்டால் அய்யர் மேலதிக உழைப்பிற்காய் திருமணவீடு துடக்கு கழிவு எண்டு வெளியிலை விடேக்கை வெளியாக்களின்ரை ஆலோசனை கேட்டு தான் சிலோன் காரன் எண்டு சொல்லி அசுல் அடிச்சு தனிய உழைக்கபோயிடுவார் பிறகு நீங்கள் இன்னொரு அய்யரை தேடி இந்தியா போய் வீண் செலவு.

கோயிலில் சிலைகளை பதிக்கும் போது இலகுவாய் நகர்த்த கூடிய மாதிரி வைக்கவும் அப்பதான் மேலதிகமாக சனி ஞாயிறு நாட்களில் அவைகளை கழட்டி ஒரு ழூலையில் போட்டுவிட்டு இடவசதியுடனான மண்டபமாக்கி கோயிலை பிறந்தநாள் திருமண நாளிற்கு வாடைகைக்கு விடலாம். இப்ப ஊர் காசிலை கோயிலும் கட்டி அய்யரும் வந்தாச்சு இனியென்ன உங்கள் காட்டில் சீ வீட்டில் பணமழைதான். எல்லாத்துக்கும் மேலாக தேர் இழுக்க அனுமதியும் எடுத்தீட்டீங்களண்டா நீங்கள் தான் கடவுள்.

ஊடகங்கள்

11:01 PM, Posted by sathiri, No Comment

ஊடகங்கள்

இன்று புலத்தில் பலஊடகங்கள் பொருகி விட்டன அவ் ஊடகங்களால் எமது போராட்டத்தை பற்றிய தெளிவை எமது பேராட்டத்தின் நியாயங்களை எவ்வளவு தூரம் அந்தந்த நாடுகளில் அந்த நாட்டு மொழில் அந்த நாட்டுமக்களிற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின்பங்கு என்பது இந்த விடயத்தில் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது .புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் எவ்வளவு தூரம் உத்தியோக புர்வமாகவோ அல்லது நட்பு ரீதியான தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவுமில்லை அதனாலேயே புலத்தில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பன பற்றிய விபரங்களோ அல்லது அதன் விளக்கங்களோ அய்ரோப்பிய மக்களிற்கு முறையாக சென்றடையவில்லை.

அதற்கு மிக பெரிய உதாரணம் புலிகளின் மீதான அய்ரோப்பிய யுனியனின் சில நடவடிக்கைகளைஎதிர்த்து அண்மையில் பெல்யியத்தில் நடந்து முடிந்த ஊர்வலம்.எல்லா தமிழ் ஊடகங்களிலும் ஒருமாத காலமாக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு பெல்யியத்தில் பதினைந்தாயிரம் மக்களிற்கு மேல் கூடி நடந்த மிக பெரிய அந்த பேரணி பற்றி பெல்யிய மற்றும் அய்ரோப்பிய ஊடகங்களிற்கோ மக்களிற்கோ தெரியாமல் போய்விட்டது.

ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது போல் நடந்து முடிந்து விட்டது.அந்த ஊர் வலத்திலும் தமிழ் ஊடகவியலாளர் எனப்படுபவர்களும் அதன் தலைவியும் வழைமை போல அடையாள அட்டையை மார்பில் குத்திகொண்டு புகை படங்களிற்கு அளகு காட்டி பின்னர் நடந்தவற்றை அதனை ஒரு செய்தியாய் தயாரித்து குறிப்பாய் தாங்களும் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட புகை படங்களுடன் ஒரு செய்தியையே அதுவும் தமிழ் ஊடகங்களிற்கு மின்னஞ்சல் செய்ததோடு; அவர்கள் பணி முடிந்து விட்டது.

இதனை அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட யாரும் செய்திருக்லாம் அதற்கு புலம் பெயர் ஊடக துறை அதற்கொரு தலைவி என்றொரு தகுதியோ அடையாளமோ தேவையில்லையே. அந்த மாபெரும் ஊர்வலத்தின் விபரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அய்ரோப்பிய ஊடகங்களினுடாக அய்ரோப்பிய மக்களிடம் எடுத்து சென்று அவர்களின் ஆதரவினை எமது பக்கம் பெற்றுதர தவறிய மாபெரும் தவறு புலம் பெயர் ஊடக தலைவியையே சாரும்.

அதுமட்டுமல்ல அய்ரோப்பிய ஊடகங்களில் செய்திகள் வெளிவராததை சுட்டி காட்டி தமிழ் தேசியத்திற்கொதிராக பிச்சை காசிற்காக எழுதும் எச்சிலிலை இணைய மற்றும் செய்தி ஊடகங்களின் நகைப்பிற்கும் நாம் ஆளாகி விட்டோம் என்பதே மிக பெரிய வேதனை. இனிமேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் அதற்கு பொறுப்பானவர்கள் பாத்து கொள்ள வேண்டும் .இல்லாவிடில் அவர்களிற்கு நேரமின்மை இயலாமை என்றால் நல்ல வேகமும் திறைமையும் உள்ள இளம் சந்ததியினரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அவர்கள் பேசாமல் வீட்டிலிருந்து தொடர் நாடகம் பார்ப்பது மேல் . சிந்திப்பார்களா???

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் யார் ?

10:59 PM, Posted by sathiri, No Comment

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் யார் ?
தற்போது ஊடகவியலாளர்கள் என்ற தரத்துக்குள் பலர் தங்களைப் பிரபலப்படுத்துகிறார்கள். ஊடகவியலாளர் என்றால் என்ன அவர்களின் கடமை என்ன என்பது பற்றி இவர்களுக்கு எதுவுமே புரியாது. ஆனால் ஊடகத்தலைவர்கள் என தங்களை சொல்லிக்கொள்வதும் ஒருவரையொருவர் பாராட்டுவதுமாக இருக்கிறார்கள். இந்த அரைவேக்காட்டு ஊடகவியலாளர் ஊடகத்தில் என்னத்தை சாதிக்கிறார்கள் ?உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது

அய்ரோப்பாவில்

9:35 AM, Posted by sathiri, No Comment

கடந்த ஒரு மாத்தில் அய்ரோப்பாவில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் புலத்தில் எம்மவர் நிலை இன்p என்னாகும் என்கிற ஒரு கேள்வி குறியை போட வைத்துள்ளது

காரணம் புலத்தில் தமிழர் இன்னெரு தமிழரை கொலை செய்தது இது ஒன்றும் முதல் தடைவையோ புதிதோ அல்ல காரணம் இதற்கு முதலும் குழு சண்டைகள் இளைஞர் மத்தியிலான மோதல்கள் மற்றும் இன்னொருவர் மீதான பழி தீர்த்தல் என்று கொலைகள் நடந்துள்ளன ஆனால் இம்முறை நடந்த கொலைகள் இரண்டும் கணவர்மார் தங்கள் மனைவி பிள்ளைகளை கொலை செய்துள்ளனர் என்பதே.

அது மட்டுமல்ல இரண்டும் நன்கு திட்டமிடபட்டு நடந்தேறியிருக்கிறது . எனவே குழு சண்டை மோதல் கள் போல் இதனையும் கொலை தானே என்று சொல்லிவிட்டு காவல் துறை கவனிக்கும் என்று விட்டு பேசாமல் இருந்து விடலாம் தான் .

ஆனால் இதன் போக்கு புலத்தில் எதிர் காலத்தில் எமது இனத்தின் மீதே அய்ரோப்பியர்களினால் ஈழதமிழர் ஈவிரக்கமற்ற வன்முறையாளர்கள் கட்டியமனைவி பெற்ற குழந்தையை கொல்லுமளவிற்கு மனிதாபிமானமற்றவர்கள்: என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.

ஏனெனில் அய்ரோப்பாவில் ஏற்கனவேஅய்ரோப்பியர் மட்டுமல்ல அய்ரோப்பிய காவல் துறையும் சில இனத்தவரை அவர்கள் திருடர்கள் வன்முறையாளர்கள் என்று அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .அவர்கள் பட்டியலில் எமதினத்தை சேர்க்கும் பட்டியலில் எம்மவர் சிலர் ஈடுபடுகிறார்களே என்கிற கவலை எழுகிறது.

குழு மோதல்களில் என்று பார்தால் இளைஞர்களின் பொறுமையின்மை பக்குவமின்மை அவர்களின் வேகம் தாங்களே தங்களை கதா நாயகர்களாக நினைத்து செயல்படுதல்அதற்கு தீனி போடும் தென்னிந்தசினிமா இதனால் பெரிய காரணமேதுமற்ற சடுதியான கொலைகளே இதுவரை நடந்துள்ளது அதுவும் முன்றாவது நபர் மீது.ஆனால் அண்மையில் சுவிசில் தனது மனைவியையும் பிள்ளை களையும் கொலை செய்தவர் நன்கு திட்டமிட்டு செயல் பட்டிருக்கிறார். அவரது போதாத காலம் அவர் கொலை செய்து விட்டு வீட்டை கொழுத்தி விட்டு போக முற்பட்ட போது குற்றுயிராய் கிடந்த மனைவி அவரை பாய்ந்து கட்டி பிடிக்க அவரும் தீயில் கருகி இப்போ வைத்திய சாலையில் உயிருக்கு போராடியபடி இருக்கிறார். மற்றையது யெர்மனியில் அவரும் மனைவி பிள்ளையை கொன்று விட்டு தப்பிக்க முதல் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு யெர்மன்காரர் உசாரடைந்ததால் இப்போ காவல் துறையின் வசம்.

காரணம் என்னவென்று பார்த்தால் எல்லா குடும்பத்தினுள்ளும் வருகின்ற கணவன் மனைவி பிணக்குதான் சரி பிரச்சனை பெரிதானால் பேசாமல் இரண்டு பேருமே பிரிந்து வாள வசதிகளும் சட்டங்களும் அய்ரோப்பாவில் தாராளமாகவே உள்ளது அதன்படி செய்யலாமே? சரி கணவன் மனைவி பிரச்சனையென்றால் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள் ?? கடும்ப பிரச்சனைக்கு கொலைதான் முடிவா?? ஈழத் தமிழர் என்றால் வன்முறையாளர்களா?? கேள்வி இது விடை காலம் பதில் சொல்லட்டும்

அவலங்கள்

9:28 AM, Posted by sathiri, No Comment

அவலங்கள்

உறவுகளிற்கு வணக்கங்கள் இனவெறி யுத்தத்தால் இன்று எமது இனம் உலகெங்கும் பிடுங்கியெறியப்பட்டு விழுந்த இடங்களிலெல்லாம் மீண்டும் பதியமாகி வேரோடி இன்று விருட்சங்களாகி நிற்கிறோம். அந்த விதத்தில் எம்மினத்தின் எங்கும் எதிர்த்து எதிர் நீச்சல் போடும் திறனை மற்றைய இனத்தவர்கள் பாராட்டுவதை பார்த்து நாம் பெருமிதம் கொள்ளும் அதேவேளை. எம்மினத்தில் சில விச செடிகளும் வேரோடி போயிருக்கத்தான் செய்கிறது. அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும் அவைகள் எமது இனத்தின் ஒட்டு மொத்த இருப்பையே கேள்வி குறியாக்ககூடிய பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புலத்தில் எமதினத்தின் மீது மற்றைய இனத்தவர்கள் ஏன் அந்த நாட்டு அரசுகளே வெறுப்படைய கூடிய பல செயல்கள் நடந்தேறியிருக்கின்றது.பலர் பெரிய மனிதர் என்கிற போர்வையிலேயே இன்னும் அப்படியான செயல்களை தொடர்ந்து கொண்டும் இருக்கினறனர்.அப்படியான செயல்களையும் அதனை செய்பவவர்களையும் இங்கு அம்பலப்படுத்துவதே எனது நோக்கமாகும். இதனால் அவர்கள் என்மீது ஆத்திரப்பட்டு மீண்டும் அதே தவறை செய்யாமல் ஒருகணம் நான் ஏன் அப்படிச்செய்தேன் என்று சிந்தித்து நல்வழி செயல்படவேண்டும் என்பதே எனது நோக்கம்.மற்றபடி அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட கோபமோ பிரச்சனைகளோ எதுவும் இல்லையென்பதை உறுதிபட கூறுவேன்.