Navigation


RSS : Articles / Comments


கனவு தேசத்தில் கதறும் மக்கள் .

2:16 PM, Posted by sathiri, No Comment

கனவு தேசத்தில் கதறும் மக்கள் .
புதிய தலைமுறை வார இதழுக்காக
சாத்திரி ...

சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு மக்கள் புரட்சி,கருத்துசுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்கிற தனி மனித சுதந்திரங்களுக்கு முன்னுதாரணமாகவும்.ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்றாகவும் பிரான்ஸ் விளங்குகிறது.அது மட்டுமல்ல பிரான்சின் தலை நகர் பாரிஸ்.. தூங்கா நகரம் மட்டுமல்ல,கலைஞர்களினதும் காதலர்களினது நகரமும் கூட..
இப்படி பால சிறப்புக்களை கொண்ட பிரான்ஸ் நாடு அண்மைக்காலமாக அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றது.காரணம் இஸ்லாமிய தீவிரவாதம்..பிரான்ஸ் நாட்டுக்கு தீவிரவாத தாக்குதல் ஒன்றும் புதிதல்ல.அல்ஜீரிய தீவிரவாதிகள்,பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழுவான மக்கள் விடுதலைப் படை,பிரான்சிலிருந்து பிரிந்து செல்லப் போராடிய கோர்ஸ் தீவின் அமைப்பான F.I.N.C ஆகிய அமைப்புக்கள் பொருளாதார மையங்கள்,திரைச்சேரிகள் ,பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதலை நடாத்தியிருக்கிறார்கள்.

ஆனால் தற்சமயம் நடக்கும் தாக்குதல்கள் முழுக்க முழுக்க அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்தே நடாத்தப் படுவது மட்டுமல்லாது பெருமளவு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துவதால் மக்கள் பெருமளவு அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.இந்த தாக்குதல்களை வழி நடத்துவது தாமே என  தூய இஸ்லாமிய அரசு என்று அறிவித்திருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு  உரிமை கோருகிறது.
2012 ம் ஆண்டு பிரான்சில் அதிபருக்கான  தேர்தல் அறிவிக்கப் பட்டு பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்த வேளை இவர்களது முதலாவது தாக்குதல் 11 ந்திகதி மார்ச்சில்  துலூஸ் நகரப்பகுதியில் நான்கு  இராணுவத்தினரையும் பின்னர் யூதப் பாடசாலை ஒன்றி மூன்று யூதக் குழந்தைகளையும் கொன்றதோடு ஆரம்பமாகின்றது.அல்லாவின் இராணுவம் என தன்னை அறிவித்துக் கொண்ட 23 வயதான அல்ஜீரிய இனத்தை சேர்ந்த "முகமத் மேரா" என்பவனே இந்த தாக்குதல்களை நடத்தியிருந்தான்.பின்னர் அவனது இருப்பிடத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவனை சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அவனுடன்  தொடர்புடையவர்கள் பலரையும் கைது செய்திருந்தனர் .கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு பிரான்சில் பல்வேறு நபர்களுடன் வலைப்பின்னல் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது.  பிரான்சில் முக்கிய நகரங்களில் மேலும் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என  பிரெஞ்சு புலனாய்வுப்பிரிவு புதிதாக பதவியேற்ற அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்கள்.ஆனால் françois hollande தலைமையில் புதிதாக பதவியேற்ற சோசலிசக் கட்சி அரசானது அதிகளவான குடியேற்ற வாசிகளின்  வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்ததாலும் இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மீது மென்போக்கை கடைப்பிடிக்கும் கொள்கைகளை  கொண்டிருந்ததாலும் அப்படியெதுவும் நடந்து விடாது என்கிற நினைப்பில் புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து விட்டிருந்தார்கள் .

பிரான்சின் எல்லை சோதனை சாவடிகள் எவ்வித சோதனைகளும் இன்றி திறந்தே கிடந்தன.விமான நிலையங்களில் ஏனோதானோ என்கிற சோதனைகள்,இரயில்களில் டிக்கெட் பரிசோதகர் கூட சோதிப்பதில்லை.அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு.அப்போதுதான் பிரான்சின் முன்னணி கேலிச்சித்திர பத்திரிகையான charlie hebdo முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டனர்.அதற்க்கு பல அரபுநாடுகள், இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.இவை charlie hebdo பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல.காரணம் அவர்கள் ஜேசுநாதர் தொடக்கம் உலக,உள்ளூர் அரசியல் தலைவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை.
தங்கள் மீதான கேலிச்சித்திரங்களுக்காக  இங்கு எந்த அரசியல் தலைவரும் பத்திரிகையாளர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி மிரட்டுவதில்லை.ஆனால் 07 ஜனவரி 2015 இஸ்லாமிய தீவிர வாதிகள் பத்திரிகை அலுவலகத்துள் ஆயுதங்களுடன் நுழைந்து அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி சுட்டுத்தள்ளினார்கள்.12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.இறந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள்.தப்பிச்சென்ற ஆயுததாரிகளை காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் சார்லி (je suis charlie)என்கிற கோசத்தோடு பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கினார்கள்.ஆனாலும் அரசு அசமந்தபோக்கிலேயே இருந்தது.

13திகதி நவம்பர்  2015 அன்று பாரீஸ் நகர மைய்யப் பகுதியிலும் வெளியேயும் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் தற்கொலைதாரிகளாலும்,ஆயுத தாரிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 130 கொல்லப்பட  413 காயமடைந்தனர்.பிரான்ஸ் நாடு மட்டுமல்ல உலக நாடுகளையே இந்த தாக்குதல் அதிசிக்குள்ளக்கியிருந்தது.இரண்டாம் உலக யுத்ததிற்கு பின்னர் ஒரு தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் பிரான்சில் கொல்லப்பட்டது இதுவேயாகும்.இந்தத் தாக்குதலில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கிடையில் நடந்த கால்ப்பந்து விளையாட்டை இரசித்துக்கொண்டிருந்த நாட்டின் அதிபர் françois hollande ம் குறி வைக்கப் பட்டிருந்தார்.தற்கொலை குண்டுதாரி மைதனதுக்குள் நுழைய முன்னர் ஒரு காவலாளி தடுத்ததில் அந்த இடத்திலேயே குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்து அவனும் காவலாளியும் இறந்து போனார்கள் .இதன்பின்னர்தான் அதிபர் சோம்பல் முறித்து தனது இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவர் உடனடியாக நாட்டில் அவசரகாலச்சட்டத்தை அமுல்ப்படுத்தியதோடு நாட்டின் எல்லைகள்,பொது இடங்கள் எங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு இராணுவத்தினரும் காவல் கடமையில் ஈடு படுத்தப் பட்டனர்.

அதன் பின்னர் இந்த வருடம் பிரான்சில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் எவ்வித பிரச்சனைகளுமின்றி ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகளை  நடாத்தி முடித்து "அப்பாடா" என அனைவரும் நின்மதிப்பெரு மூச்சு விட்டாலும்.. அந்த நின்மதி சில நாட்கள் கூட நிலைக்கவில்லை.பிரான்சின் தெற்குப்பகுதியான நீஸ் நகரத்தில் கோரமான இன்னொரு தாக்குதல் நடத்தப் பட்டது.ஆனால் இது வழைமை போல தற்கொலை தாக்குதலோ,பயங்கர ஆயுதங்களால் நடாத்தப் பட்ட தாக்குதலோ அல்ல.வித்தியாசமானது.

14 ஜுலை 2016 பிரான்சின் தேசிய தினத்தை கொண்டாடும் மக்களுக்கு நீஸ் நகரத்தின்  கடற்கரையில் இரவில் நடக்கும்கேளிக்கை , வான வேடிக்கை நிகழ்வுகள் முக்கியமானதாகும்.கோடை காலமென்பதால் பிரான்சின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுதுமிருந்தும் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்திருந்தார்கள்.கடற்கரையில் இரண்டு கிலோ மீற்றர் நீளத்தில் சுமார் நாற்பதினாயிரதுக்கும் அதிகமான மக்கள் அண்ணாந்து வானவேடிக்கைகளை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தவேளை 70 கிலோமீட்டர் வேகத்தில்   இருபது டன் நிறையுள்ள லாரியொன்று மக்கள் கூட்டத்தினுள் புகுந்து தாறு மாறாக ஓடத்தொடங்கியது.
யாரோ மதுபோதையில் வண்டியை கூட்டத்தில் வண்டியை விட்டு விட்டான் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர்.அங்கு நின்ற காவலர்களும் அப்படிதான் நினைத்து வண்டியின் சக்கரத்தை சுட்டு பஞ்சராக்கினார்கள்.ஆனாலும் வண்டி நிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டி வந்தவன் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியபோதுதான் இது வேறு விவகாரமென அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

அதன் பின்னரே காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றனர்.ஆனாலும் என்ன பிரயோசனம் 88 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியவன் அல்லாஹூ அக்பர் என்று கத்தியாதாக எந்த சாட்சிகளும் சொல்லவில்லை .
இதனை  நடாத்தியவன் துனிசியா நாட்டை சேர்ந்த Mohamed Salmène என்பவன். வயது 33.மூன்று பிள்ளைகளின் தந்தை. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் "நான் தயாராகி விட்டேன் நீங்கள் ஆயுதங்களுடன் வாருங்கள்". என இருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்.அந்த தகவலை வைத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதோடு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என இதுவரை ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.அதே நேரம் தாக்குதலாளி சில காலம் மன அழுத்தத்தில் இருந்து வைத்தியரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறான்.அதே நேரம் மனைவி பிள்ளைகளை போட்டு அடித்ததற்காக காவல்துறையால் இரண்டு தடவை அவன் கைதாகி  செய்து சில காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்திருகிறான்  பின்னர் அண்மையில் தான் விவாகரத்து பெற்றிருந்தான்.
ஆனால்இவன்தீவிரமதவாதியல்ல,நோன்புஇருப்பதில்லை,தொழுவதில்லை ,நிறைய மதுவருந்துவான்,புகைப்பிடிப்பான்,அது மட்டுமல்ல பன்றி இறைச்சி  கூட உண்பான் என அவனது நண்பர்கள் கூறுகிறார்கள்..அப்போ அவன் ஜிகாதியாக இருக்க முடியாது .அப்படியானால் ஏன் இந்த தாக்குதலை நடாத்த வேண்டும்?...

தாக்குதலாளியின் தாய் தந்தை சகோதரர்கள் துனிசியா விலேயே வாழ்கிறார்கள்.தாக்குதலாளி ஒவ்வொருவருடமும் விடுமுறையில் ஊருக்கு போய் வரும் வழக்கத்தை கொண்டிருந்தவன்.அப்படி அவன் ஒரு முறை விடுமுறையில் சென்றிருந்த வேளை  துனிசியாவில் உள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அவனிடம்  பிரான்சில் எங்கேயாவது எப்படியாவது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் அதற்கு வேண்டிய உதவிகளை தங்கள் ஏஜெண்டுகள் செய்து தருவார்கள்.மறுத்தாலோ காவல்துறைக்கு சொன்னாலோ அவனது குடும்பத்தை மொத்தமாக போட்டுத் தள்ளி விடுவோமென எச்சரித்துள்ளனர்.

பிரான்சிற்கு திரும்பியவன் பிரெஞ்சு பொலிசாரிடம் முறையிட்டாலும் துனிசியாவில் உள்ள தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாது..வேறு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவனிடம் தாக்குதலை எப்படியாவது நடாத்திவிட சொல்லி அழுத்தம் கொடுத்துக்கொண்டே யிருந்தவர்கள் எங்கே?  எப்போ ??என தாக்குதலுக்கான நாளையும் அவர்களே தீர்மானித்து கொடுத்து விட்டிருந்தார்கள்.இதனால் அதிக மன உளைச்சளுக்குள்ளன தாக்குதலாளி மனைவி பிள்ளைகளை போட்டு அடித்திருக்கிறான்.இறுதியில் தாக்குதலையும் நடாத்தி முடித்து விட்டிருந்தான்.ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அதற்கு உரிமை கோரியிருந்தனர் .
அது மட்டுமல்லாது  "புனித இஸ்லாமிய அரசை அமைக்க அனைத்து இஸ்லாமியர்களும் ஓன்று படுங்கள் ஐரோப்பியர்கள் மீது கையில் கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தி அவர்களது நிம்மதியை குலையுங்கள் உங்கள் உயிர் இஸ்லாத்தை காக்க உதவட்டும். அல்லாஹூ அக்பர்"". என்று முடியும்  ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டிருந்தார்கள் .சில நாட்களின் பின்னர் யேர்மனியில் கோடரியாலும்,லண்டனில் கத்தியாலும் இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்..இப்படி தொடர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது .

சரி யார்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் ?அவர்கள் தேவைதான் என்ன ?..உலக தாதா அமெரிக்கா தனது தேவைகளை குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள பரிசோதனைக்குழாய் பயங்கரவாதக் குழந்தைகளை அவ்வப்போது பிரசவிக்கும்.அப்படி பிரசவித்த குழந்தைகளை தனக்கு வேண்டிய ஒரு நாட்டிடம் தத்து கொடுத்து விடும்.அமெரிக்க ரஸ்சிய பனிப்போர் காலத்தில் அல் கெய்தா என்கிற குழந்தையை பிரசவித்து பாகிஸ்தானிடம் தத்து கொடுத்து விட்டிருந்தது.அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் பயிற்ச்சிகள் அனைத்தும் அமெரிக்கவே வழங்கியது உலகறிந்த உண்மையாகிப் போனது.இப்பொழுது பிரசவித்திருக்கும் குழந்தைதான் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் .
இதனை கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும்  துருக்கியிடமும் தத்து கொடுத்து விட்டார்கள்.இப்படி அமெரிக்க பிரசவிக்கும் குழைந்தைகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ பாலுட்டி, தாலாட்ட வேண்டிய கட்டாயம் ஐரோப்பிய நாடுகளுக்கு.இல்லாவிட்டால் இங்கும் உள்நாட்டு கலவரங்களையோ,ஆட்சி கவிழ்ப்பையோ நடத்திவிடுவார்கள் .அமேரிக்கா ஏன்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை பிரசவிக்க வேண்டும் ?..

யூதர்கள் அமெரிக்காவை உருவாக்கிய சிற்பிகள் என்று சொல்வார்கள்.அவர்களின் செல்வாக்குத் தான் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாது பிரான்சிலும் அதேதான் நிலைமை.மேற்குலகின் பெருமுதலாளிகளாகவும் ஆயுத வியாபாரிகளாக மட்டுமல்லாது பெரிய மீடியாக்களும் யூதர்கள் வசமே உள்ளது .இந்த இஸ்ரேலிய அமெரிக்க கூட்டு கலவையில் பிறந்ததுதான்ஐ.எஸ்.ஐ.எஸ் .இதனை உருவாக்க வேண்டியதன் நோக்கம் ..

1)இஸ்ரேல் அரசு உருவானதும் அதனை எதிர்த்து போராடிய மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக எகிப்து, சிரியா, யோர்தான், இராக்ஆகிய  நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர்.எனவே எப்போதுமே தன்னை சுற்றியுள்ள அரபு நாடுகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி குழப்பத்தில் வைத்திருப்பது.
2)மசகு எண்ணெய்க்கு மாற்றீடு கண்டு பிடிக்கப் படும் வரை மேற்குலகத்துக்கு தங்கு தடையின்றி சீரான விலையில் மசகு எண்ணை கிடைக்க வேண்டும்
3)உலகிலேயே பெரும் வருவாயை கொடுக்கும் ஆயுத வியாபாரம் தாரளமாக நடக்க வேண்டும்
4)உலகில் கிறீஸ்தவ மதத்தவர்களின் தொகையை இஸ்லாமியர்கள் விஞ்சி விடாமல் அவர்களுக்குள் இருக்கும் பிரிவுகளை பயன்படுத்தி அவர்களுக்குள்ளேயே அடிபட்டு இறந்து போவதற்கு ஆயுதங்களை கொடுத்து விட்டு கை கட்டி வேடிக்கை பார்ப்பது .
இவைதான் அடிப்படை காரணங்கள்.சரி இதற்கு ஏன் கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும்  துருக்கி அமெரிக்காவுக்கு உதவ வேண்டும்?காரணம் மிக சாதாரணமானது.சர்வாதிகாரத்தை ஒழிக்கிறோம் என்று இராக்கின் மீதும் பின்னர்  அரபு வசந்தம் என்கிற பெயரில் மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட போலிப் புரட்சி எகிப்து,லிபியா என்று வரிசையாக விழுங்கப்பட்டு சிரியாவில் நிற்கிறது.ஏற்கனவே எண்பது வீதம் அமெரிக்காவின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்ட சவூதி அரேபியாவும் சிறிய நாடான கட்டாரும் அமேரிக்கா சொல்வதற்கு தலையாட்டா விட்டால் மன்னர் ஆட்சியில் இருக்கும் இரு நாடுகள் மீதும் அரபு வசந்த புரட்சி பாயும்.

அடுத்தது துருக்கி.இவர்கள் ஏற்கனவே அமெரிக்க சார்பு நோட்டோவில் அங்கத்துவம் வகித்தாலும் ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு துடித்துக்கொண்டும் குர்திஸ்தான் போராளிகளின் தாக்குதலால் தவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.இவை இரண்டுக்கும் அமெரிக்காவின் தயவு அவர்களுக்கு தேவை.எனவேதான் அமெரிக்காவின் ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சுக்கும் அவர்கள் கொடுக்கும் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கும் பெற்றுக் கொடுக்கும் தரகு வேலையை செய்கிறார்கள்.ஆனால் இடையில் அவர்களுக்கும் ஒரு ஆசை வந்துவிட தங்களது ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சிடம் விற்று அவர்கள் கொடுத்த மசகு எண்ணையை அப்படியே அமுக்கி விட ஆத்திரமடைத்த அமேரிக்கா அங்கு ஒரு ஆட்சி கவிழ்ப்பு நாடகத்தை நடாத்தி துருக்கிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள் .இனி அவர்கள் நல்ல விசுவாசியாக இருப்பார்கள் என நம்பலாம் .

எப்படி தங்கள் தேவைக்காக அமேரிக்கா உருவாக்கும் பரிசோதனை பயங்கரவாதக் குழந்தைகளை தங்கள் தேவை முடிந்ததும் அல்லது அவர்கள் தங்கள் கையை மீறி விட்டுப் போகும்போது அழித்து விடுவது வழமையோ  அதுபோல ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் விரைவில் அழிக்கப் பட்டு வேறு ஒரு குழந்தை உருவாக்கப் படலாம் .தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அமெரிக்காவின் தத்துப்பிள்ளை  அவர்களது தேவைகள் முடிந்ததும் அழித்தொழிக்கப் பட்டார்கள் என்கிற கருத்தும் பலரிடம்  உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது .

இதே நேரம் பிரான்சில் இன்னொரு பிரச்னையும் ஓடிக்கொண்டிருகிறது."ட்ரான்ஸ்-அற்லான்ரிக் என்கிற கட்டற்ற  வியாபார முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பவுக்கும் கைசாதிடப்படவுள்ளதோடு பிரான்சில் முதலாளிகளுக்கு சாதகமான தொழிலார் சட்டத்தில் திருத்தம் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது இதனால் பெரு முதலாளிகள் முக்கியமாக அமெரிக்க முதலாளிகள் மட்டுமே பயனடையும் சட்டங்களே அவை.இந்த சட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள் தொழில் சங்கங்கள் மீது தற்சமயம் நடைமுறையில் உள்ள அவசர கால சட்டத்தை பயன் படுத்தியே ஆளும் சோசலிசக் கட்சி அடக்கி வருகிறது.ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகள் முடிவுற்றதும் அவசர காலச் சட்டம் நீக்கப் பட்டு விடும் என்றே அனைவரும் எதிர் பார்த்தார்கள்.ஆனால் நீஸ் நகரத்தில் நடந்த தாக்குதலை யடுத்து மீண்டும் ஆறு மாதங்களுக்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.எனவே தொடர்ந்தும் தொழிலார்களின் போராட்டம் அடக்கப்படும் என்பது இங்கு முக்கியமான விடயம் .

ஒரு சோசலிச அரசு தொழிளார்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர அவர்களின் போராட்டங்களை அவசரகாலச்சட்டத்தின் கீழ் அடக்குகிறது என்பது முரண் நகையானது தான் .ஆனால் இனிவரும் காலங்களில் நாம் ஓட்டுப் போட்டு தெரிவு செய்கிறவர்கள் எம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று நம்புவது முட்டாள்தனம்.யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்மை இனி ஆட்சி செய்யப் போவது பெரு முதலாளிகளும்.வங்கிகளுமே .....