Navigation


RSS : Articles / Comments


பயணம் .....................

1:59 PM, Posted by sathiri, No Comment

பயணம் .....................

பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

எயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.

அவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ?? எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் சரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்

இப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன? இந்தியாவா? என்றான்.மீண்டும் எரிச்சல்.....

நான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.


அவரும் ஓகோ சிறிலங்காவா? நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.

என்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .

அதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அதுவரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்


முன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்...

அதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா ? அது கொலைகள் இல்லையா என்றேன்..அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா?? இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்தொகையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....

பயணம் தொடரும்...................................