Navigation


RSS : Articles / Comments


கணக்குப் புத்தகமும் காதலும்

8:14 AM, Posted by sathiri, No Comment

கணக்குப் புத்தகமும் காதலும்



இந்தவார ஒரு பேப்பரில்

காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக்கிற காலத்திலை அனேகமாக எல்லாப்பாடத்திலையும் நல்ல புள்ளிகள் எடுக்கிறனான். அனால் இந்தக்க கணக்கு பாடம் மட்டும் ஏனோ தெரியாது எனக்கு மண்டையிலை ஏற சரியாய் கஸ்ரப்பட்டுது. கணக்கு கொப்பியை எடுத்தாலே உடைனை நித்திரை தூக்கியெறியும் . இல்லாட்டி ஏதாவது யோசினையள் வந்து குளப்பும்.முந்தி இலவசக்கல்வித்திட்டம் வாறதுக்கு முதல் படிக்கிற புத்தகங்கள் நாங்கள்தான் விலைக்கு வாங்கவேணும். ஆண்டுத் தொடக்கத்திலை அந்தக் காலத்திலை புத்தகக் கடையளுக்கும் நல்ல வியாபாரம்.

புது வகுப்புக்கான புத்தகங்களை புத்தகக் கடையிலை வாங்கிறதை விட எங்களுக்கு முதல் வகுப்பிலை படிச்சு பாசாகிபோறவையிட்டை வாங்கினால் பாதி விலைக்கு வாங்கலாம்.புத்தகத்தை அடுத்தவருசம் விக்கிறதுக்காகவே புத்தகங்களிற்கு பாதுகாப்பாய் வாடிவாய் உறைபோட்டு பிறகு அதுக்கும் மேலை மழைபெய்தாலோ கைவியர்வை பட்டு புத்தகம் பழுதாகாமல் இருக்க பொலித்தீன் பேப்பராலை இன்னொரு உறை போட்டு பாதுகாப்பாய்தான் பாவிப்பினம். முந்தியெல்லாம் இந்த புத்தக உறையை கண்டபடி எங்களுக்கு பிடிச்ச சினிமா நடிகை நடிகர் மாரின்ரை படங்கள் வாறமாதிரியோ அல்லது வேறை வித விதமான படங்கள் உள்ள பேப்பருகளாலைஉறை போட இயலாது. அதுக்கும் அடிவிழும்.

பிறவுண் பேப்பர் எண்டொரு பழுப்புநிற பேப்பர் கடையிலை வாங்கி அதிலை உறை போடலாம். அது வாங்க வசதி குறைந்தவை சீமெந்து பேப்பர்தான்.ஆனால் எங்கடை வீட்டிலை ஒரு வகுப்பிற்கு புத்தகம் வாங்கினால் ஆறுவருசத்துக்கு அந்தவகுப்பு புத்தகம் வாங்கத்தேவையில்லை. ஏணெண்டால். ஒவ்வொரு வருச வித்தியாசத்திலை நாங்கள் ஆறுசகோதரங்கள். மூத்த அண்ணனுக்கு மட்டும் புதிதாய் புத்தகங்கள் வாங்கினால் சரி. பிறகு வரிசையாய் ஒவ்வொருத்தருன்ரை கையிலை மாறி ஆறாவதாய் கடைசித்தம்பியும் படிச்சு முடிய அந்தப்புத்தகம். மேலை கீழையெண்டு மூலைப்பக்கத்தாலை சுருண்டும் மட்டை பலதரம் சோறு போட்டு ஒட்டியும் விளக்கு வெளிச்சத்துக்கு வந்து அந்தப் புத்தகங்களில் விழுந்து உயிர் விட்ட விட்டில்பூச்சிகளின் அடையாளங்கள் .

மயிலிறகை தலையிலை இருக்கிற எண்ணெயிலை தடவி புத்தகத்துக்குள்ளை வைச்சால் அது குட்டிபோடும் எண்டு யாரோ ஒரு லூசுப்பயல் சொன்னதை நம்பி அப்பிடியே செய்து எண்ணெய் ஊறின பக்கங்கள்..அடிவாங்கி அழுதழுது படித்தபோது எங்கள் கண்ணீர் மற்றது மூக்குநீர் எல்லாம் விழுந்து பலஎழுத்துக்கள் அழிந்துபோன பல பக்கங்கள் என்று அரைவிலைக்கில்லை இலவசமாவே ஒருத்தருக்கும் குடுக்க இயலாத நிலைமைக்கு வந்திடும்.சீனிச்சரை சுத்த கடைக்காரன்கூட வாங்கமாட்டான். ஆனால் என்னட்டை வாற கணக்குப் புத்தகம் மட்டும் அப்பிடியே எந்தவித பாதிப்பும் இல்லாமல். என்னட்டை எப்பிடி வந்ததோ அதே போலை அடுத்த வருசம் தங்கையிட்டை குடுத்திடுவன்.

அந்தளவுக்கு எனக்கு கணக்கிலை விருப்பம். என்னடா காதலைப்பற்றி ஏதாவது எழுதுவான் வாசிப்பம் எண்டு பாத்தால் கணக்கு புத்தகத்தை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறான் என்டு உங்கள் கண்கள் கோபத்திலை சிவக்கிறது எனக்கு தெரியிது. சரி இனி காதலுக்கு வாறன்.அததான் என்ரை முதல் காதல் . ஆனால் அது காதலா எண்ட கேள்விக்கு இப்பவும் எனக்கு விடை தெரியாது. நான் பத்தாம் வகுப்புப்பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த இறுதிக்காலம் காலம்.மானிப்பாய் இந்துவாலை வெளியேறி வட்டு யாழ்கல்லூரியாலை ஒடியந்து நான் மானிப்பாய் மெமோறியல் பாடசாலையிலை படிச்சுக்கொண்டிருந்தநேரம்.

ஊரிலை எங்கடை வீட்டிலை சின்னம்மாவிட்டை பாடம் கேட்டுப்படிக்க பலபேர் வருவினம்.அப்பிடித்தான் அவளும் வந்து போவாள் என்னுடைய சம வயது ஒரே ஆண்டுதான் படிச்சனாங்கள். அனால் அவள் மகளிர்கல்லூரி.நானும் அவளும் பல வருசமாகவே வாடா போடி என்று கதைக்கின்ற நல்ல நண்பர்கள்.நானும் அவளும் ஒன்றாக படிப்போம் நான் அவளிற்கு தமிழ்பாடத்தில் கட்டுரைகள் எழுத விஞ்ஞான பாடத்தில் உதவிகள் செய்துகுடுப்பன். அவள் கணக்கு பாடத்திலை நல்ல கெட்டிக்காரி அதாலை எனக்கு ஏறாத கணக்குப்பாடத்தை எப்பிடியாவது புரிய வைக்க முயற்சி செய்வாள்.அவள் பின்னக் கணக்கை வேகமாக பிரித்து வெட்டி விடையை காட்டும்போது எனக்கு ஏதோ மந்திர வித்தை பாத்த மாதிரி மலைப்பாய் இருக்கும்.தலையை சொறிஞ்சபடி திருப்ப செய்து காட்டச்சொல்லி கேப்பன்.அவளும் திருப்பி எத்தனை தரம் செய்து காட்டினாலும்.

ஊகூம்.......எனக்கு ஏறாது.அதாலை கணக்கை விட்டிட்டு வேறை பாடத்துக்கு தாவிடுவன்.ஒருநாள் இரண்டு பேருக்கும் ஏதோ பாடம் செய்ய சொல்லிப்போட்டு சின்னம்மா போய்விட. அவள் என்னட்டை எனக்கு கவிதை ஒண்டு எழுத உதவிசெய்யிறியா எண்டாள். வருசக்கடைசி சோதினை முடிய பள்ளிக்கூடத்திலை பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏதோ கவிதை கேக்கிறாளாக்கும் எண்டு நினைச்சு நானும். கவிதைதானே பிரச்சனையில்லை தேவையெண்டால் சின்னம்மாவிட்டையும் உதவி கேக்கலாமெண்டன்.அவள் பதறியபடி சின்னம்மாக்கு தெரியவேண்டாம். இது காதல் கடிதம் கவிதையாய் வேணும் தான் ஒரதரை காதலிக்கிறதாவும் அவருக்கு கவிதையள் விருப்பம் தனக்கு கவிதை எழுதவராது அதாலை தான் எழுதிற மாதிரி எழுதித்தா நான் திருப்பி என்ரை கையெழுத்திலை எழுதிக்குடுக்கிறன் எண்டாள். அய்யோ கடவுளே இப்பதான் இருள்அழகனுக்கு ஒருகடிதம் எழுதப்போய் இரண்டு பள்ளிக்கூடம் மாறியாச்சு. பத்தாம் வகுப்பு கடைசிசோதினை வேறை நெருங்கிற நேரத்திலை என்ரை மருதடி பிள்ளையாரே எனக்கு ஏன் இந்தசோதினை எண்டு நினைச்சாலும்.

ஒரு நீண்டகால நண்பி அதுவும் காதலுக்கு எண்டு கேட்டிட்டாள் இல்லையெண்டு சொல்ல மனம்வரேல்லை. அன்று இரவிரவாய் யோசிச்சு ஒரு பெண் ஆணுக்கு எழுதிற மாதிரி எழுதி அடுத்தநாள் அவளிட்டை குடுத்திட்டு என்ன பிரச்சனை வந்தாலும் என்னை தயவுசெய்து காட்டிக்குடுத்திடாதை எண்டு கெஞ்சினபடி சரி நீ யாரை விரும்பிறாயெண்டு சொல்லு எண்டு கேட்டன். உனக்கு தெரிஞ்சவர்தான் உனக்கு கெதியாய் தெரியவரும் எண்டிட்டு போட்டாள்.பிறகு சிலநாளாய் சின்னம்மாவிடம் வந்து ஏதாவது கேட்டுபடித்துவிட்டு என்னோடை கனக்க கதைக்காமல் ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு போய்விடுவாள். எனக்கும் அவளோடை சேந்து படிச்சால் கணக்கு செய்யவேண்டிவரும் அதாலை அவள் அப்பிடி போறதே நல்லது எண்டு நினைச்சபடி இருக்க.

ஒருநாள் சின்னம்மா கையிலை கணக்குப்புத்கத்தை எடுத்தபடி டேய் நீ கனநாளாய் கணக்கு புத்தகமே கையிலை எடுக்கேல்லை வா இண்டைக்கு கணக்கு செய்யவேணும் எண்டபடி புத்தகத்தை விரித்தவர் அதற்குள் இருந்த ஒரு கடதாசியை எடுத்து படிச்சபடி கோபமாய் டேய் இது எத்தினை நாளாய் நடக்கிது எண்டார்.எனக்கு ஒண்டும் விளங்காமல் அந்த கடுதாசியை பாத்தன் நான் எழுதிய கவிதை அவளது கையெழுத்தில் என்னுடைய கணக்குப் புத்தகத்தில் இருந்திருக்கிறது. அதை நான் விரிச்சால்தானே கடிதத்தை பாக்கிறதுக்கு. ஆனால் சின்னம்மாவின்ரை தலையிலை அடிச்சு சத்தியம் பண்ணிய பிறகுதான் என்னை நம்பினார்.அந்தநேரம் அப்பா கண்டிக்கு போயிருந்ததாலை நான் தப்பினன். அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

No Comment