Navigation


RSS : Articles / Comments


ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்

1:34 PM, Posted by sathiri, No Comment
சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முடித்த புத்தகத்திற்கு பிரபலத்தின் முன்னுரைக்காக பலமாதங்கள் காத்திருந்த கதைகளையும் நான் அறிந்திருக்கின்றேன். அப்படி பிரபலமென்றின் முதுகு சொறிவோடு புத்தகத்தை ஆரம்பிக்காததையிட்டு சயந்தனிற்கு முதுகில் ஒரு தட்டு.

நாவல் ஒற்றைக்காலையிழந்த புலிகளின் முன்னை நாள் போராளியொருவன் இத்தலிக்கு கப்பலில் களவாக இடம் பெயர்கிறான் அவனிற்கு ஒரு காதலியும் இருக்கிறாள். நீர்கொழும்பு கடற்கரையில் தொடங்கும் கதை இலங்கையில் இந்தியப்படை காலத்து சம்பவங்களில் புகுந்து யாழ் இடப்பெயர்வில் விரிந்து ஓயாத அலைகளில் ஊடறுத்து சமாதான காலத்தின் சம்பவங்கை சுமந்து ஆழ்கடலில் சங்கமமாகி படித்தவர்கள் மனங்களிலும் மெல்லியதாய் கீறி ஆறாவடுவை ஏற்படுத்தி முடிந்து போகின்றது.

சயந்தனின் சிறுகதைகளை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த எள்ளல்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். அதில் இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரின் தமிழ் தேசிய இராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து பயிற்சி கொடுக்கிறார்கள் அப்படி பிடிபட்ட ஒருவன் பயிற்சி முகாமில் பொறுப்பாளரிடம் அண்ணை எங்கடை தலைவர் யார் என கேட்கிறார் அதுக்கு அவர் இது தெரியாதா வரதராஜப்பெருமாள்தான் என்கிறார். அதற்கு அவனும் அப்பாவித்தனமாய் பொன்னாலை கோயிலில் குடிகொண்டிருக்கும் வரதராஜப்பெருமாள் என நினைத்து பெருமாளே இந்தச் சனியனிகளிட்டை இருந்து தப்பிவந்தால் இந்த வருசம் உனக்கு காவடி எடுக்கிறன் என்று நேர்த்தி வைப்பான்.
அடுத்ததாய் கதையின் நாயகன் முதல் தடைவை வெளிநாட்டிற்கு களவாக புறப்பட்டு பிடிபட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார். அவரை இலங்கை விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள் அப்பொழுது உனக்கு நியூட்டனை தெரியுமா என கேட்டபொழுது அவனும் ஜந்தாம் வகுப்பு விஞ்ஞான ரீச்சரும் இதே கேள்வியை தானே கேட்டவர் என்கிற வரியை படித்தபொழுது இரயில் என்னை மறந்து சத்தமாய் சிரித்துவிட்டேன். இப்படி பல எள்ளல்களை அள்ளி விட்டிருக்கிறார்.

இனி அவரின் கதா பாத்திரங்கள் என்று பார்த்தால் குண்டுப்பாப்பா பருத்த மார்புகளையுடைய நிலாமதி இவர் போராளிகளின் கைக்குண்டினை மார்புக்குள் ஒழித்து வைத்திருந்தது ஏற்புடையதல்ல என்று நண்பர் நந்தா தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். கைக்குண்டு என்றால் அந்தக்காலத்து ரி.என்.ரி அல்லது பென்ரலைற் குண்டுகளை மனதில் வைத்து அவர் எழுதியிருக்கலாம். ஆனால் சிறிய ரக கைக்குண்டுகள் M 26..57..61 MARK 3 a2 M 33 M 63 என்பன வெறும் 400 கிறாம் எடையுள்ள சிறிய சுற்றளவை கொண்ட கைக்குண்டுகள். இவற்றை மார்பு கச்சையினுள் கீழ்ப்புறமாக மறைக்கலாம் என்றே எண்ணுகிறேன். அது அருமையான படைப்பு..மகளின் மாதவிடாய் காலத்தில் வேறு வழிகளின்றி கோயிலில் அம்மனின் பட்டுத்துணியை களவெடுத்து பாவிக்கும் சுபத்திரை .நேரு ஜயா .கப்பலில் முதலில் இறந்து போகும் சின்னப் பெடியன் பெரிய ஜயா ஆகியோர் மனதை அழுத்தி செல்கின்றார்கள். இவை நாவலின் நிறைப்பக்கங்கள் என்றால் குறை பக்கங்கள் தேவி என்கிற மனப்பிறழ்வு பெண்பத்திரம் இந்திய இராணுவத்தால் வன்புனர்பு செய்யப்பட்டு கர்பப்பம் அடைகிறாள் அவளை சுட்டுக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சொல்வதில் ஒரு தளம்பல்..

அமுதன் எப்படி இயக்கத்தை விட்டு வெளியேறினான்என்பதில் தெளிவின்மை
அதே நேரம் ஈழத் தமிழரல்லாத தமிழர்களும் இருபது வருடங்களிற்கு முன்னரேயே புலம் பெயர்ந்து விட்டவர்களிற்கு இந்தியப்படை காலம் இடப்பெயர்வு என்பன என்பது பற்றி வெறும் செய்திகளியே அறிந்திருப்பார்கள். அவர்களிற்கு அவை பற்றி மேலதிக விளக்க குறிப்பக்களை கொடுத்திருக்கலாம். உதாரணத்திற்கு நியூட்டன் என்றால் புலிகளின் முக்கியமான புலனாய்வு போராளி என்பது எத்தனை பேரிற்கு தெரிந்திருக்கும் . அதனால் அவர்களும் சிரிக்கமுடியாமல் போயிருக்கலாம். அதே நேரம் சில விடையங்களை வேகமாக நகர்த்தியிருக்கிறார். இயக்கம் வெளியேறியது .சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது.செம்மணியில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது. என்பன.செய்தித் தலைப்புக்களை படிப்பது பேல இருக்கின்றது ஆயினும் அமுதன் என்கிற முன்னைநாள் விடுதலைப் புலிப் போராளியின் செயற்கை காலினை எரித்திய முன்னை நாள் போராளியான இத்திரிசிசிற்கு கிடைக்கச்செய்து கதையை முடித்த அந்த சிந்தனைக் கோர்வைக்கு ஒரு கைதட்டு

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4

2:18 PM, Posted by sathiri, One Comment

காமம்.
பயிற்சி முகாம்.23 ந்திகதி  யூலை மாதம்  83 ம் ஆண்டு  வழைமைபோலவே விடிந்தது  அவனும்  அந்த ஆண்டு   க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால்  நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.

எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.

தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.
00000000000000000000000000000
அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.
0000000000000000000000000000000000
பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் அவன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது
000000000000000000000000000
அடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.3

10:40 AM, Posted by sathiri, One Comment

காதல் ..
 யுரேகா
அவனது கிராமத்தில் இருந்த ஒருசில கிறீஸ்தவ குடும்பங்களில் யுரோகாவின் குடும்பமும் ஒன்று. அவளிற்கு மூத்த ஒரு ஒரு சகோதரி இருந்தாள். யுரேகா அவனது ஆண்டுதான் பாடசாலை வேறு. சிறு வயதிலிருந்தே அவனிற்கு யுரேகாவை பழக்கம் என்றாலும் பெரியளவு அவளுடன் கதைப்பது குறைவு.அப்பொழுது அவர்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம். அதுவரை திருகோணமலையில் ஆசிரியையாக இருந்த அவனது சின்னம்மா மாற்றலாகி ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தார்.இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த அவனது பாடங்களில் சின்னம்மா அதிக கவனமெடுத்தார். அப்பொழுது யுரேகாவும் அவனது சின்னம்மாவிடம் படிப்பதற்கு வரத்தொடங்கியிருந்தாள்.அவன் மீண்டும் என்னதான் கஸ்ரப்பட்டு படிச்சாலும் கணக்குமட்டும். அவனிற்கு கணக்குவிட்டுக்கொண்டிருந்தது. யுரோகாவை பார் கணக்கிலை கலக்கிறாள் எண்டு எண்டு சின்னம்மா குட்டிக் குட்டி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.ஆனாலும் ஏறவில்லை. ஆனால் அவளிற்கு தமிழ் தடக்கியது விஞ்ஞானம் விண்ணாமாய் தெரிந்தது . அதனால் அவளும் அவனும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். பாடசாலை நேரம் சின்னம்மாவின் மேலதிக பாட நேரம் தவிர்ந்து அவன் அவளிற்கு தமிழிற்கும் விஞ்ஞானத்திற்கும் உதவுவது . அவள் கணக்கு சொல்லிகொடுப்பது. அவனது ஆசிரியரும் சின்னம்மாவும்வெருட்டி உருட்டு சொல்லி கொடுத்தபோதும் புரியாத கணக்கு அவள் அருகிலிருந்து புள்ளி வைத்து கோடு போட்டு பெருக்கி கூட்டி விடையை காட்டியபொழுது அவனின் மனதை கூட்டிப் பெருக்கி புள்ளி வைத்து கோலம் போட்டது போல் இருந்தது.அருகே அவளின் மூச்சுக்காற்று பட்டதுமே முக்கோணம். வட்டம் விட்டம்.ஆரை என அனைத்தின் பாகைகளும் பட்டென மனதில் பதிந்தது.அதே போல அவன் விஞ்ஞானம் விளங்கப் படுத்தியபொழுது அவளிடம் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தமிழ் பாடம்தான் அவர்களை இணைத்ததுஅப்பொழுது அவர்கள் படித்தது பத்தாவது.

டேய் எனக்கொரு கட்டுரை வேணும் சொல்லித்தாவன்.

என்னத்தை பற்றி .

 மீனவர்கள் பற்றினது .

சின்னப் பிரச்சனை சொல்லுறன் எழுது

அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஒரு மீனவன் மனைவி பிள்ளைகளிடம் விடைபெற்று கட்டுமரமேறினான் என்று தொடங்கியவன் அன்றைய காலத்தில் அவன் படிக்கத்தொங்கியிருந்த மார்க்சியம். செஞ்சீனம். கியூபாவும் விடுதலையும். வியட்நாம். எரித்தியா .மாக்சிசம். நாசிசம். யூதாயிசம். சியோனிசம். கசம். பூசம். ரசம் எண்டு என்னென்ன இசங்களை கலக்க முடியுமோ அத்தனையையும் கலந்து ஒரு கட்டுரையை சொல்லி முடித்தான்.கட்டுரையை படித்த அவளதுதமிழாசிரியை தலையை சொறிந்தோடு உண்மையிலேயே நீதான் எழுதினியா எண்டு கேக்க அவளும் ஓமெண்டு தலையாட்ட .அவரும் வேறை நாலைஞ்சு ஆசிரியர்களிடம் காட்டிவிட்டு கடைசியிலை காலத்திற்கேற்ற கட்டுரையெண்டு முதலாவதாய் தேர்தெடுத்திருந்தார்கள்.அவளிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி அன்று அவனிடம் வந்தவள் நன்றி கூறிவிட்டு. ஜயோ.... உனக்கு எதாவது தரவேணுமே என்னவேணுமென்றாள். என்ன கேட்டாலும் தருவியா என்றான். ஓமடா என்ன வேணுமெண்டாலும் தாறன். என்ன வேணுமெண்டாலும்?? . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும்???எத்தினை தரம்தான் கேட்ப்பாய் அப்பிடி என்னதான் வேணும்.சரி அப்ப ஒரு அஞ்சுரூபா குடு குமார் கடையிலை போண்டாவும்சாப்பிட்டு ஒரு பிளேன் ரீயும் குடிக்கவேணும். என்றான். தனது கொம்பாசை திறந்து அஞ்சுரூபாவை எடுத்து நீட்டி விட்டு அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். டேய் தின்னி பண்டாரம் இந்த நேரம் அஞ்சுரூபாயா கேட்பாய் இப்பவாவது உன்ரை காதலை சொல்லி வேறை எதையாவது கேட்டிருக்கலாமே என்று மனம் அவனை திட்டியதுஆனாலும் அவனுடை அன்றைய சந்தர்ப சூழ்நிலைகளும் அவளது குடும்ப நிலையிலும். அவன் அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. இன்னொருநாள் அவள் அவனிடம்

 டேய் எனக்கொரு கவிதை வேணும்..

கவிதை எதைபற்றி ??

 காதல்பற்றி அவள் குரல் கம்மியது.

 காதலா??

யாரையாவது காதலிக்கிறியா??

 எனக்கில்லை என்ரை சினேகிதிக்கு அவள் ஒருத்தனை லவ்பண்ணிறாள் அதுதான் என்னட்டை கேட்டாள் நான் உன்னட்டை கேக்கிறன். வேண்டாமடி இப்பிடித்தான் நான் என்ரை சினேதனுக்கு ஒரு காதல் கவிதை எழுதி குடுத்து அது வாத்திட்டை பிடிபட்டு அவனைவிட நான்தான் சாறிட்டை(மானிப்பாய் இந்துவின் அதிபர்) குனியவிட்டு குண்டியிலை வாங்கினனான். நீ பயந்தால் வேண்டாம். இவளவை இப்பிடித்தான் பப்பாவிலை ஏத்துவாளவை சரி சொல்லுறன் எழுது அவன் சொல்ல சொல்ல அவள் எழுதினாள்.சிலநாள் கழித்து அவர்களிற்கு கணிதபாடம் கற்பிப்பதற்காக அவனது சின்னம்மா அவனது புத்தகத்தை புரட்டியபொழுது அதற்குள் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்கதொடங்கினார். அவளது முகம் மாறிப்போய் விட்டிருந்தது கடிதத்தை படித்து முடித்த சின்னம்மா அவனிடம் டேய் இது எத்தனை நாளாய் நடக்குது என்றார். இவள் இப்பிடித்தான் எங்கையாவது மாட்டிவிடுவாள் எனக்குத் தெரியும் என்று மனதில் நினைத்தபடி உவள்தான் யாரோ சினேகிதிக்கு எண்டு கேட்டாள் அதுவும் ஒருக்காதான் சொல்லிகுடுத்தனான் எண்டான். சின்னம்மா ஒண்டும் புரியாமல் இரண்டுபேரையும் மாறி மாறி பார்க்க அவள் கண்கள் கலங்க நடுங்கியபடி அங்கிருந்து எழும்பி ஓடிவிட்டாள். அவன் கடிதத்தை வாங்கி படித்தான். அதில் அவன் சொன்ன கவிதை வார்த்தைகளோடு அவள் அவனிற்காக எழுதியிருந்த காதல்கடிதம். சே.. தன்ரை காதலை சொல்லவே சொந்தமாய் நாலுவரி எழுதத்தெரியாதவள் என்ன செய்யப்போறாள் என்று அலுத்துக்கொண்டான்.
                                                   000000000000000000000000000000
 இரண்டு குடும்பத்தினரும் கூடிக்கலந்து பேசி பல்கலைக்கழகம் படித்து முடிஞ்சதும்தான் கலியாணம். றோட்டு தெருக்களிலை சுற்றக்கூடாது வீட்டிலை இருந்து கதைக்கலாம். என்கிற சில கண்டிப்பான உத்தரவுகளுடன் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை இலகுவாக அவர்களது காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதற்கு அவர்கள் காதல் புனிதமானது என்றோ அல்லது காதலை வாழவைக்கவோ இல்லை. இரண்டு பக்கமுமே வலுவான வேறு காரணங்கள் இருந்தது. யுரேகாவின் மூத்த சகோதரி கா.பொ.த உயர்தரம் படித்தக்கொண்டிருந்தபொழுது சக மாணவன் ஒருத்தனை காதலித்திருந்தாள். அவன் சைவக்காரன் வேறை. அந்த காதலை தடுக்க அவளது பெற்றோர் மென்முறை வன்முறை எல்லாம் பாவித்து தோற்றுப்போயிருந்தனர். கடைசியாள் அவள் தற்கொலை முயற்சிவரைபோய் அந்தக்கதையே கொஞ்சக்காலம் ஊர்சனங்களில் வாயில் அவலாய் நிறைந்திருந்தது. எதுவும் செய்ய முடியாமல். காதலை ஏற்றுக்கொண்டனர். காதலித்த பெடியன் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் ஆனால் அவன் கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாறமாட்டான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள். இப்படியே இழுபறிப்பட்டு பல்கபலைக்கழக படிப்பு முடிந்ததும் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்துவைத்து இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவது என முடிவு செய்திருந்தனர். அவர்களும் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்தக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் மீண்டும் இவளது காதலால் அவர்களது குடும்பக்கதை ஊர்வாயில் அவலாகிவிடக்கூடாது என்பது அவர்களது பக்கத்து கவலையோடு கூடிய காரணம்.

 இவன்பக்கத்தில் என்னவென்றால் அப்பொழுது இயக்காரரோடு அதிகமாய் திரியத்தொடங்கியிருந்தான். அந்த வருசம் சோதினையில் கோட்டை விட்டுவிடுவானொ என்று பயம்வேறை. கொஞ்சம் இறுக்கமாய் கண்டிச்சால் அடுத்தநாளோ இயக்கத்திற்கு ஓடிவிடுவானோ என்கிற கவலை அதாலை இந்தகாதலாவது அவனை கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்று நினைத்தார்கள்.இந்தக்காரணங்களால் அவர்கள் காதலில் எரிந்த பச்சைவிளக்கு வெளிச்சத்தின் பலாபலன்களை நன்றாகவே அனுபவித்தனர். சின்ன சின்ன சில்மிசங்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் தவறவிடுவதில்லை. அவளும் அளவோடு அனுமதித்திருந்தாள் என்பதைவிட அவளிற்கும் அது பிடித்திருந்தது. எல்லை மீறும்பேதெல்லாம் நுள்ளிவிடுவாள்.

எப்பிடித்தான் இவளவை அடக்கிறாளவையோ என்று அவனிற்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்கிறமாதிரி அவனது காதல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் அவனது இயக்கத்தின் தொடர்புகளை குறைக்கச்சொல்லி அவளது நச்சரிப்பும் கூடிக்கொண்டே போனது.அவளின் நச்சரிப்பு கூடும்பேதெல்லாம் அவளது உதடுகளை இவனது உதடுகள் மூடிவிடும். ஆனாலும் ஒருநாள் அவள் விடவில்லை நீ என்னை ஏமாத்துறாய் உண்மையா என்னை விரும்பிறியா?? உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது?? அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா?? பதறினாள். அவிழ்த்து காட்டினான் u சிவப்பாய் தெரிந்தது எனக்கு வேறை வழிதெரியேல்லை ureka என்றவனிற்கு.சும்மா ஏதோ கோபத்திலை சொல்லிட்டன் அதக்கு இப்பிடிபோய் செய்திட்டியே.. என்றவளின் கண்ணீர்த்துளியொன்று uஎழுத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே எரியிது இதுக்கை இவள்வேறை கண்ணீர் ஊத்தி எரியவைக்கிறாள் எண்டு அவன் எரிச்லை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தபொழுது ரீ கொண்டு வந்து வைத்து விட்டு கொடுப்பிற்குள் ஒரு நமட்டு சிரிப்புடன் அவளது தயார் போனார். தன்ரை மகளை கையிலை கையிலையே குத்திட்டான் இனி கைவிடமாட்டான் என அவர் நினைத்திருக்கலாம்.அடுத்தநாள் கோயிலடியில் அவனது கையை பார்த்த அவனது நண்பன் ஒருத்தன் டேய் என்னடா கையிலை பு னா எண்டு சூடுவைச்சிருக்கிறாயெண்டான்.

ஆங்கில எழுத்து தமிழில் அர்த்தத்தையே மாற்றிவிட்டது அப்பொழுதுதான் அவனிற்கு புரிந்தது.

 உன்ரையாளிற்கு என்னடா பேர்.??

 மலர்....

மலரெண்டால் ம எண்டெல்லோ வரும் அதென்ன பு..??

புஸ்பம் எண்டும் சொல்லலாம்.

அதுதான். டேய் அது பல்லில்லாத வாதியின்ரை பழைய பகிடி உண்மையை சொல்லடா.

 டேய் வெங்காயம் தமிழிலை யோசிக்காமல் இங்கிலிசிலை யோசி.. கொஞ்சம் உத்துப்பாத்தவன் u அட யுரேகாவா?? வாயை பிளந்தான்   
                                                            000000000000000000000000000                                                                                                                                                                                                                               
அன்று கா.பெ.த. சாதாரணம் இறுதிப் பரீட்சை எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்தான் நல்லமழை கொட்டிக்கொண்டிருந்தது . நண்பர்களிடம் விடைபெற்றவன் சைக்கிளை மிதித்தான் அந்தோனியார் கோயிலின் முன்னால் இருந்த பஸ் நிலையத்தில் சைக்கிளோடு அவள் காவலிருந்தாள். சைக்கிளை விட்டு இறங்கியவன் அவளோடு சேர்ந்து நனைந்தபடி சைக்கிளை உருட்டினான் அவளிடம் குடை இருந்தது விரிக்கவில்லை.
நல்லா எழுதினியா??

 ம்..ஏதோ எழுதியிருக்கிறன்.

 இந்த நாலுமாத லீவிலை என்ன செய்யப்போறாய்.

என்ரை எலெக்றொனிக் சாமான் திருத்திற படிப்பை தொடருவம் றிசல்ட் வந்தாபிறகு யோசிப்பம்.

 டேய் இது எங்கடை வாழ்க்கை பிரச்சனை நீ சர்வசாதாரணமாய் சொல்லுறாய்.

 அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுறாய்.

 நாங்கள் இரண்டு பேருமே யூனிவசிற்றி போனால்தான் எங்கடை வாழ்க்கையே.

 ஓ... பெயில் விட்டால் கழட்டிவிட்டிடுவியா??

ஏனடா இப்பிடி கதைக்கிறாய் நான் எவ்வளவு கனவுகளோடை இருக்கிறன் தெரியுமா??

எனக்கும்தான் நிறைய கனவுகள் இருக்கு ஆனால் உன்னை மாதிரி சுயநலக்கனவுகள் இல்லை.
அப்பொழுது அவர்கள் மருதடி பிள்ளையார் கோயிலின் முன்னால் வந்திருந்தார்கள். எனக்குத்தெரியும் நீ என்ன நினைக்கிறாயெண்டு எனக்கொரு சத்தியம் பண்டு . என்னவெண்டு?? நீ இயக்கத்துக்கு போகமாட்டனெண்டு என்ரை தலையிலை சத்தியம் பண்டு. அந்தோனியார் அறிய நான் இயக்கத்துக்கு போகமாட்டன். அந்தோனியார் வேண்டாம் பிள்ளையார் மேலை சத்தியம் பண்ணு. அந்தோனியார்தானே உங்கடை கடவுள். அதாலைதான் சொல்லுறன் உங்கடை கடவுள்மேலை பண்ணு. சந்தர்பம் பாத்து அடிக்கிறதிலை பெட்டையள் கெட்டிக்காரியள் என்று மனசிலை நினைச்சவன். மருதடி பிள்ளையாரை திரும்பி பாத்தபடி பிள்ளையாரே உனக்குமேலை சத்தியம்பண்ண மனசுக்கு கஸ்ரமாயிருக்கு என்று நினைத்தவன் பிள்ளை......ஆர் மேலை சத்தியமாய் இயக்கத்துக்கு போகமாட்டன் அவள் தலையில் அடித்தான்.அவளிருந்த உணர்ச்சி வேகத்தில் பிள்ளைக்கும் ஆருக்கும் இருந்த இடைவெளியை கவனிக்கவில்லை.கொம்பாசை திறந்து பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டிவிவிட்டு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

000000000000000000000

அவனது நண்பன் சுரேஸ் புளெட் இயக்கதில் இருந்தவன் அவனிடம் தன்னுடைய சைக்கிளை கொடுத்து வீட்டில் கொடுத்துவிட சொல்லிவிட்டு மானிப்பாயில் இருந்த இரகசிய முகாமில் அன்புவை சந்தித்தான். நீங்கள் சொன்னமாதிரி சோதினை எழுதியாச்சு இங்கை இருந்தால் வீட்டு காரர் தேடி பிடிச்சிடுவினம். அதாலை கெதியா அனுப்புங்கோ என்றான். அன்றே அன்பு அவனை மாதகல் கொண்டுபோய் சேர்த்து பீற்றரிடம் ஒப்படைத்திருந்தான்.அவனோடு சேர்த்து ஏழுபேர்பீற்றரின் பொறுப்பில் பண்ணத்டதெரிப்பு பத்திமாதா கேயிலிற்கு அருகில் யாருமற்ற பாழடைந்த வீடு ஒன்றில் தங்கியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் சொந்தமாக வள்ளங்கள் அதிகம் இருந்ததில்லை பெரும்பாலும் கடத்தல் காரர்களின் வள்ளங்கள் அல்லது மீனவர்களிடம் வாடைகைக்கு எடுக்கும் வள்ளங்களையே பாவித்தனர். அனைத்து இயக்ககங்களின் நிலைமையும் அப்பிடித்தான். அடைமழையும் காற்றுமாக இருந்த காரணத்தால் எந்த கடத்தல் வள்ளங்களும் இந்தியாவிற்கு போகவில்லை . ஏதாவது வள்ளம் இந்தியாவிற்கு போகிறதா என ஒவ்வொருநாளும் பீற்றர் கடற்கரைக்கு போய் விசாரித்துக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருத்தர் அதிகம் கதைக்காமலேயே இருந்தனர் அதைவிட இயக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக சொந்த பெயர் ஊர் விபரம் மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது பொதுவான் விதி. ஆனால் இரண்டுநாள் பொனதுமே அவர்களிற்கு கதைக்க ஒரு விசயமும் இல்லாமல் போக தாங்களாகவே தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கியிருந்தனர்.

அதில் ஒருத்தனை காதலிச்சவள் ஏமாத்திவிட்டாளாம். அவனின்ரை காதல் கதை எங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவியது. ரெயினிங் முடிஞ்சு வந்ததும் முதல்வெடி அவளுக்குத்தான் எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அன்று அஞ்சாவது நாளாகி அடைமழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அன்று மாலை கடற்கரைக்கு போயிருந்த பீற்றர் 'இண்டைக்கு இரண்டு வண்டிபோகுது அதிலை ஒண்டிலை இடமிருக்காம் இண்டைக்கு நீங்கள் போகலாமெண்டான்' அப்பொழுதுதான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஏழுபேராக காத்திருந்தவர்களில் இரண்டா ம் நாள் ஒருத்தனும் மூன்றாம் நாள் ஒருத்தனும் வீட்டிற்கு போய்விட ஜந்து பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். ஒருத்தலும் கனக்க உடுப்பு எடுக்கவேண்டாம். காற்சட்டைக்கு மேலை ஒரு சாறம். ஒண்டுக்மேலை இன்னொன்றாய் இரண்டு சேட்டு மட்டும் போடச்சொல்லியிருந்தான். ஏதோ வெளிநாட்டிற்கு போறது போல சூட்கேசில் உடுப்பபுக்களை கொண்டு வந்திருந்தவர் கவலையோடை மூண்டாவது சேட்டை போட்டுக்கொண்டார். இரவு எட்டுமணியளவில் அனைவரையும் பீற்றர் கடற்கரைக்கு அழைத்துப் போயிருந்தவன்.அங்கு நின்றவர்களிடம் கதைத்துவிட்டு அவர்களை கடற்கரையோரமாய் இருந்த கொட்டிலுக்குள் அமர வைத்துவிட்டு போய்விட்டான் .இருவர் வள்ளங்களில் பொருட்களை ஏற்றிமுடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டிருந்தனர்.

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பிடியே எங்களை கடற்கரையிலை விட்டிட்டு போயிட்டானோ? என்றான் ஒருத்தன். சே ..பீற்றர் அப்பிடி செய்யமாட்டான் அவனை எனக்கு நல்லாத்தெரியும். என்றான் இவன். சிலநேரம் ஆமிக்காரன் வந்தால் என்ன செய்யிறது எந்தப்பக்கமாய் ஓடுறது எண்டான் இன்னொருத்தன். ஆமிவந்தால் கடல்பக்கமாய் ஓடி தண்ணிக்கை படுக்கலாம். சே .சே எனக்கு நீந்தத் தெரியாது மற்றப்பக்கம் பனை பக்கமாய் ஓடுறதுதான் நல்லது. ஓடினால் கட்டாயம் சுடுவாங்கள் பேசமல் இப்பிடியே இருக்கிறதுதான் நல்லது அவங்கள் வந்து கேட்டால் நாங்கள் மீன்பிடிக்கிற ஆக்கள் எண்டு சொல்லுவம். இப்பிடியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே வேறு நாலு பேருடன் பீற்றரும் வந்து கொண்டிருந்தான்.அவர்களை கண்டதும்தான் அவர்களிற்கு நெஞ்சுக்கை தண்ணி வந்தது மாதிரி இருந்தது.அவர்கள் எல்லாருமாக சேந்து வள்ளங்களை கடலிற்குள் தள்ளிக்கொண்டிருக்க . அவர்களிடம் வந்த பீற்றர் என்ன பயந்துட்டியளோ..ஓட்டி ஒருத்தான் தண்ணியடிச்சிட்டு எங்கையே படுத்திட்டான் தேடி பிடிச்சுக்கொண்டுவர நேரம்போட்டுது. கெதியவாங்கோ என்று அவர்களை அழைத்துப்போய் பொருட்கள் குறைவாய் இருந்த வள்ளத்தில் நால்வரும் மற்றையதில் ஒருவருமாய் ஏறச்சொன்னான். அவனிற்கு இதுதான் முதல் கடற்பயணம். அவனிற்கு அவனுடன் வந்த மற்றையவர்களிற்கும்தான். வள்ளம் புற்படும் முன்னர் ஓட்டி அவர்களை பாத்து . பெடியள் கவனமா கேளுங்கோ நல்லா முன்பக்கமாய் போய் ஆளோடை ஆள் நெருக்கமாய் இருங்கோ. யாருக்காவது சத்தி வந்தால் அப்பிடியே பின்னாலை வந்து இந்த கயித்தை பிடிச்சுக்கொண்டு கடலுக்கை எடுக்கவேணும் சொல்லிப்போட்டன். போட்டுக்கை யாராவது சத்தியெடுத்தால் கடலுக்கை தூக்கியெறிஞ்சு போட்டு போடுவன். சத்தியெடுத்தால் கடல் தண்ணியிலை வாயை கொப்பிளிச்சுபோட்டு கொஞ்சம் குடியுங்கோ பிறகு வராது என்று பயமுறுத்தும் பிரசங்கம் ஒன்றை வைத்துவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நெஞ்சில் சிலுவை போட்டுக்கொண்டவன். வள்ளத்தில் பூட்டியிருந்த மூன்று இயந்திரத்தில் ஒன்றை இயக்கினான். அவர்களிற்கு கைகாட்டிக்கொண்டிருந்த பீற்றரும். மாதகல் கடற்கரையும் மெல்ல மறையத்தொடங்கியிருந்தது.

சாறத்தால் கழுத்துவரை போர்த்துக்கொண்டு குந்தியிருந்தவனின் நினைவுகள் அப்பொழுதுதான் அவளை நினைக்கத்தொடங்கியிருந்தது. ஜஞ்சு நாளாச்சு இப்ப எப்பிடியும் ஊருக்கே விசயம் தெரிஞ்சிருக்கும்.அவளிற்கும் தெரிஞ்சிருக்கும். என்ன செய்திருப்பாள்??. அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்..?? சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ?? சே என்னை மறக்கமாட்டாள். நான் வரும்வரைக்கும் காவலிருப்பாள்.. அவள் காவலிருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை நான் அவளுக்கு செய்து குடுத்த சத்தியம் எல்லாத்தையும் மீறிட்டன். அவள் தொடந்து படிப்பாள். என்ரை படிப்பு இதோடை முடிஞ்சுது.அதோடை இயக்கத்திலை வேறை காதலிக்கக்கூடாது எண்டு சட்டம்வேறை .அவளை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம். காதலிக்கேக்குள்ளையும் கட்டிப்பிடிக்கேக்குள்ளையும் எங்கை போனது இந்தப் புத்தி. சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.. வள்ளத்தின் மூன்றாவது இயந்திரமும் இயக்கப்பட அது கடல் நீரை இன்னும் வேகமாகக் கிழிக்கத்தொடங்கிருந்தது.அந்தக் கும்மிருட்டில் இடக்கையின் மணிக்கட்டை பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை வலது கையால் அந்த இடத்தில் தடவிக்கொண்டான்

                                                        0000000000000000

வருடங்கள் உருண்டோடி விட்டிருந்தது அவன் அவளை பின்னர் இரண்டொரு தடைவை கண்டிருந்தாலும் கதைத்தில்லை. கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று செய்திகள் அவனிற்கு கிடைத்து. ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை நான்கு வருடத்திலேயே அவளின் கணவனிற்கு மூளைப்புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்து விட்டான். சில காலங்களின் பின்னர் அவளது விலாசத்தை கண்டு பிடித்து இரத்மலானை கடற்கரை பக்கமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அவளது மாமியார் கதவைத் திறந்தார் பின்னால் மானார். நான் யுரேகாவின்ரை பிறெண்ட். யுரோகாவை பாக்கலாமோ??என்று இழுத்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற அவர்களிடம். அருணும் எனக்கு பிறெண்ட்தான் ஆனால் அவனின்ரை பிரச்சனை நடக்கேக்குள்ளை நான் வெளிநாட்டிலை. இப்பதான் வந்தனான். அதுதான் வந்தனான் .இப்பிடி பல தான்..நான்..ற்கு பிறகுதான் வாங்கோ என்றபடி கதவு திறந்தது கையில் ஒன்று பின்னால் ஒன்று யுரேகா வந்துகொண்டிருந்தாள். கொழும்புத்தண்ணிக்கு முன்னை பாத்ததைவிட கொஞ்சம் நிறமாய்தான் இருந்தாள் கொஞ்சம் உடம்பும் வைத்திருந்தது ஆனாலும் அழகு கட்டுக்குலையாமலத்தான் இருந்தது. நீயா எப்பிடி வீட்டை கண்டு பிடிச்சனி. ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள்.அதே கணம் மாமன் மாமியை பார்த்து விட்டு அகலத்தை உடைனேயே குறைத்துக்கொண்டாள். வழைமையான விசாரிப்புக்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் போது மாமியார் தேனீரை கொண்டு வந்து வைத்துவிட்டு போனதன் பின்னர். பேச்சு அவர்கள் பக்கம் பக்கமாய் திரும்பியது. கடைசியாய் உன்னை எவ்வளவோ தேடினனான் உன்ரை அம்மா கூட உன்ரை தகவல் ஒண்டும் தெரியாது எண்டிட்டா. நீ இருக்கிறியா இல்லையா எண்டு கூட தெரியாத நிலைமை. எனக்கும் வேறை வழி இருக்கேல்லை. அருணும் நல்வர் எந்தக் குறையும் இல்லை ஆனால் என்ரை விதி அவ்வளவுதான். அவளின் கண்கள் கலங்கியது. பின்னர் அவன் பேச்சை மாற்றி வேறு விடயங்களை பேசியபின்னர் விடைபெற்றபொழுது வெளியே வாசல்வரை வழியனுப்ப தனியே வந்தவளிடம். அதுவரை தொண்டையில் உருண்டுகொண்டிருந்த விடயத்தை மெதுவாய் துப்பினான்.

 யுரேகா தயவு செய்து குறை நினைக்காதை நீ விரும்பினால் நான் உ..............ன்...............னை..........க..............லி. அவன் முடிக்கவில்லை. பிளீஸ் ஸ்ரொப்பிற். என்றாள் அவள் ஸ்ருப்பிற் என்றது மாதிரி அவனிற்கு கேட்டது. நான் உன்னட்டை காதலைத்தான் எதிர்பாத்தனான். கருணையை இல்லை..நான் உன்னிலை வைச்ச காதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு. நான் சாகும் வரைக்கும் அது அப்பிடியேதான் இருக்கும். எனக்கு நல்ல புருசன் கிடைச்சார். அதே நேரம் தங்கடை மகளை பாக்கிறமாதிரி நல்ல மாமா..மாமி. என்னை பாக்கினம். இனி என்ரை பிள்ளையளை நல்லா வளக்கிறதுதான் என்ரை நோக்கம். நீ இப்பவும் உங்கடையாக்களின்ரை வேலையாய்தான் கொழும்பக்கும் வந்திருப்பாய். தயவுசெய்து இனி என்னை பாக்கஇங்கை வராதை. இதுதான் நாங்கள் சந்திக்கிறது கடைசியாய் இருக்கட்டும். என்டு படபடத்து முடித்தவள் அவனது கையை இழுத்து தனது கையில் சுருட்டி வைத்திருந்த சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு போ இனிவராதை என்றுவிட்டு வேகமாய் உள்ளே போய்விட்டாள். காதுக்கு பக்கத்தில் 50 கலிபர் ஒண்டு அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்தது தன்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தவன் கையை விரித்து பார்த்தபோது சில 500 ரூபாய் தாள்கள் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதை திரும்ப அவளிடம் கொடுக்கலாமென நினைத்து பார்த்தபொழுது கதவு சாத்தப்பட்டுவிட்டிருந்த. என்னங்கடா இவளவை காதல் அப்பிடியே இரக்குதாம் கலியாணம் கட்ட கேட்டால் மாட்டாளாம். புரிஞ்சு கொள்ளவே முடியிதில்லை. ஒரு லயன் லாகர் 75 ரூபாய்தானே கையிலை 3000 ஆயிரம் ரூபாய் இருந்தது கடற்கரை பக்கமாய் இருந்த BAR ஒன்றை நோக்கி நடந்தபோது இடக்கை மணிக்கட்டை பார்த்தான் எந்த அடையாளமும் இல்லை. பி.கு. அன்று இயக்கத்தில் மாதகல் கரை பொறுப்பாக இருந்த பீற்றர் பின்னர் சயனைற் உட்கொண்டு இறந்துவிட்டான். அதன் விபரங்கள் நான் எழுதும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.
 கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.1

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 2

நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்

12:41 PM, Posted by sathiri, No Comment

18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ---------------------------------------------------------------------------- காயங்களின் எழுத்து ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம்.அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது. இங்கு கறுப்பு, வெள்ளை , சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே.இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே ‘ரிலேட்டிவ்’ ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான்.அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும்.எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத்தெரியலாம்.இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத்தோன்றலாம்.ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும். அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது.கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை.அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே.அதாவது ஏகத்துவ அரசியலே.கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்றுக்கொள்வதில்லை.வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும்.எனவே கறுப்பு வெள்ளை அரசியலைன் இறுதி இலக்கு ஏகத்துவமே.எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான்.அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை.’டைவர்சிற்றிக்கு’ இடமில்லை. மாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது.ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம்பல் வரும்.கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது.அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப்பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு. 1.போரைப்போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள்.இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம். 2. போரை,விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப்பூசல்களையும் சகோதரப்படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது.இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத்துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த்துப்பாக்கிகள் தரும் மரணமும் தான்.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது.1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத்தொடங்கிய ஒரு போக்கே இது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள்.மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு.ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப்போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது.மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம். சயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான்.பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான்.நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபாசக்தியின் ;கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார்.அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதே வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி.வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் ‘ப்றீ செக்ஸை’ அனுபவிக்கிறார்கள்.இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள்.அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.அவர்கள் அனுபவிக்கும் ‘ப்றீ செக்ஸ்’ அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை.அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன.இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள். கருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவியலாத யுத்த சாட்சியங்கள்.இவர்கள்.ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள்.ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது. பா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது.அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது.வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக்குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல்.வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது. பணக்காரன். ஏழை, முஸ்லிம்(சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டது?அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது? அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை? அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள்? என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே. மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச்செருப்புகளை வாங்குகிறான்.அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப்போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போலவெருட்டுகிறார்கள்.ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான்.ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல்காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது. இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப்பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார்? தப்பிப்பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல.தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான். அதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான்.காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான்.காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான்.உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை ‘ட்ரோமா’ என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா(மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.சனாதனனின் தோம்புவும் அதுதான்.கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது , சாத்திரி எழுதியது ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது , தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான்.இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம். டச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார். “மனவடுவை மனவடுவாக அணுகாமல்அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது,அது எமக்கு நெருக்கமாகின்றது” என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி,அருவருப்பு என்பவை குறையத்தொடங்கும்.சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது.நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும் , பிணங்களும் எரித்திரியக்கடற்கரையில் ஒதுங்குகின்றன.அங்கே ஒரு எரித்திரியக்கிழவன் .முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன்.கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக்காண்கிறான்.அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால்.அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப்பொய்க்காலை ஆசைஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப்போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது. சயந்தன் ஈழத்தமிழ்க்கூட்டுக்காயத்தை எரித்திரியக்கூட்டுக்காயத்துடன் பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது.சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது. அண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான்.படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான்.சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம்.இறந்தகாலத்தை ‘போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம்.எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம். யுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம். நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது.அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது.இது ஒரு தொழினுட்ப யதார்த்தம்.இது ஒரு பொருளாதார யதார்த்தம்.இது ஒரு சமூகவியல் யதார்த்தம்.இது ஓர் உளவியல் யதார்த்தம்.இது ஓர் இலக்கிய யதார்த்தம்.இது ஓர் அரசியல் யதார்த்தம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “ இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது. நிலாந்தன். யாழ்ப்பாணம்.03/03/2012. நன்றி த.பிரபாகரன்