Navigation


RSS : Articles / Comments


சொல்லமுடியாத கதை

2:15 PM, Posted by sathiri, One Comment

அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிற்ங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது

0000000000000000

நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து சில உறுதி மொழிகளும் பரிமாறப்பட்டிருந்தது.இவை சந்திரிக்காவின் சிறுவயது தோழரும் அவரின் குடும்ப நண்பருமான குமாரசாமி வினோதன் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது

000000000000000

தாய்லாந்தின் தலைநகரிற்கு வெளியே ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவனிற்கு இலங்கைக்கு போகும்படி உத்தரவு கிடைத்தது. தன்னிமிருந்த கடவுச்சீட்டுக்களையெல்லாம் எடுத்து வரிசையாய் அடுக்கி பிரித்துப்பார்த்தவன். அதில் இரண்டை தெரிவுசெய்து எடுத்து இந்தமுறை சிங்கப்பூர் கிறீன்காட் இலங்கை பாஸ் போட்டிலையே போவம்.அது நல்லது எண்டு முடிவு செய்தவன். வேறொரு கடவுச்சீட்டில் தாய்லாந்திலிருந்து வெளியேறியவன். சிங்கப்பூரில் சிறீலங்கா கடவுச்சீட்டில் உள் நுளைந்தான். அன்றிரவே மீண்டும் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு செல்லவேண்டும். இலங்கையில் சிலரிற்கு பரிசு கொடுப்பதற்காக சில வாசனை திரவியங்களை (பெர்பியூம்) வாங்கினான். உலகத்திலை எத்தினை விதமான நல்ல வாசனைத்திரவியங்கள் விதவிதமாய் இருந்தாலும் எங்கடையளிற்கும் சிங்களவனுக்கும் சாளியை விட்டால் விட்டால் வேறையொண்டும் தெரியாது எண்டு நினைத்தபடி சாளி பெர்பியூம் நலைந்து லோக்கல் றே பன் கூலிங்கிளாஸ் நாலைந்து. லஞ்சம் எல்லாம் வாங்கியாச்சு என்று நினைத்தவன். காய்..லா என்று லா போட்டபடி .அவளும் வந்து சேர அவர்களின் பொரும்பாலும் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்தஉரையாடல் தொடங்கியது. அவளுடன் சேர்ந்து சாப்பிடலாம் வா தாய்லாந்திலை நாசிகொறியிங்கும். மீ கொறியிங்கும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு சிரங்கூன் பக்கம் போய் அன்னபூரணாவிலை தோசை சாப்பிடுவம் என்று புறப்பட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவளிடம் தன்னுடைய கடவுச்சீட்டை கொடுத்தவன். வழமையாய் சொல்லுற விசயம்தான் கொழும்பிலை இருந்து வேறை யாருடையதாவது போன்வந்தால் உடைனை உன்னட்டை இருக்கிற யெர்மன் நம்பருக்கு தெரிவிச்சுவிடு அவ்வளவுதான்.

எப்படா இந்த தொழிலை விடப்போறாய் .. டா

மை கோட்..இது தொழிலில்லை லா.. இது வேறை...லா.

இதையேதான் எப்பவும் சொல்லுறாய்.லா.

இதையேதான் நீயும் திரும்ப திரும்ப கேட்கிறாய் சரி சண்டையை விட்டிட்டு வேறை ஏதாவது பேசலாமா.லா

ஓ கே இன்றைக்கு என்ன புறோக்கிறாம்.

பெரிசா ஒண்ணுமில்லை நான் இரவே கொழும்பு போறேன். லா

ஓ தோசை தின்னத்தான் கூப்பிட்டியாடா??

கோபிக்காத லா. சீக்கிரமே திரும்ப வந்திடுவன்.வந்து பெரிய விருந்தே வைக்கிறன் என்று சொல்லி கண்ணடித்தான்
சாங்கி விமான நிலையத்தில் அவளின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு உள் நுளைந்தவன். யாராவது வியாபாரிகளை எதிர்பார்த்து சுற்று முற்றும் பாக்கும் போதே கொழும்பா போறீங்கள் என்றபடி ஓடி வந்தவர்கள். ஓவர்ஸ்ரேயா காசு வேணுமா என்றார்கள். அப்படி வந்தவர்களில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் பொதியை வாங்கியவன் ஓவர் ஸ்ரே யெல்லாம் இல்லை உங்க ஆளிட்டை என்னை கொழும்பிலை கொண்டு போய் இறக்கிவிடச்சொல்லி போனிலை செல்லிடுங்க. என்றான். உங்க பேர் என்ன என்றவரிடம் கடவுசீட்டில் இருந்த பெயரை ஞாபகப்படுத்தி சொல்லிவிட்டு உள் நுளைந்தான்.

0000000000000000

கொழும்பு விமான நிலையத்தில் வெளியே வந்தவன் அங்கு சிங்கப்பூர் பொதிகளிற்காக தயாராக நின்ற முஸ்லிம் வியாபாரியிடம். பொதிகளை கொடுத்தவன். தன்னை ஏதாவது நல்லதொரு லொட்ஜில் இறக்கிவிடச்சொன்னதும். அவரும் தனக்கு தெரிந்த ஒரு லொட்ஜ் இருப்பதாக சொல்லி ஜம்பட்டா வீதியில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான லொட்ஜில் இறக்கிவிட்டிருந்தார். கொழும்பு போய்க்கொண்டிருக்கும் பொழுதே தான் வந்துவிட்ட செய்தியை சிலரிற்கு கைத்தொலைபேசி மூலமாக தெரிவித்துவிட்டிருந்தான்.

அன்றிரவு ஜிந்துப் பிட்டியில் இருந்த வேணிபாரில் ஒரு சந்திப்பு. அங்கு சந்தித்தவர்களுடன் தண்ணியடித்துவிட்டு அங்கேயே கோழி புரியாணியும் சாப்பிட்டுவிட்டு நல்ல போதையில் ஆட்டோவில் ஏறிவந்து லொட்ஜ் றூம் கட்டிலில் அப்படியே விழுந்தவன் கண் அயர்ந்து போகும் போதே யாரோ கதவில் பலமாக தட்டினார்கள்.எவண்டா இந்த நேரத்திலையெண்டு நினைத்தபடி கதவைதிறக்கவும் தயாராய் சாதாரண உடையில் நின்றிருந்த இருவர் பாய்ந்து அவனை கட்டிலில் தள்ளி கையில் விலங்கை போட்டவர்கள். அவனின் உடுப்பு பையை ஒருவன் துளாவ மற்றையவன் அவனின் கைத் தொலைபேசியை நோண்டினான். அவனிற்கு விடயம் ஓரளவிற்கு புரிந்தது. ஆனால் எப்படி என்று புரியவில்லை. எது எப்பிடியானாலும் ஆங்கிலத்லேயே கதைப்தாக முடிவெடுத்தவன். ஆங்கிலத்தில் நீங்கள் யார் என்ன வேணும் என கத்தினான். கள்ள நாயே என்றபடி ஒரு உதைதான் விழுந்தது. அதற்குமேல் எதுவும் பேசாதவர்கள். அவனது கடவுச் சீட்டையும் அவனது பையையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அங்கு நின்ற ரொயோட்டா டொல்பின் ரக வானில் உள்ளே தள்ளினார்கள். உள்ளே இன்னொருத்தனும் ஒரு பெண்ணும் இருந்தார்கள்.
உள்ளையிருந்த பெண் நாம்பன் மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்கிற மாதிரி அவனின்ரை நாடியை ஒரு கையாலை பிடிச்சு வலம் இடமாக திருப்பி பாத்திட்டு சிங்களத்தில் இவனை தெரியேல்லையெண்டவள். அவனிடம்.

டேய். பு....மகனே நீ புலிதானே

எக்ஸ்சியூஸ் மீ ஜ டின்ட் அண்டஸ்ராண்.

தமிழிலை கதையடா வேசைமேனே எண்டபடி அவளின் பங்கிற்கு அவனின் கதைப் பொத்தி ஒரு அறை விட்டாள்

அவனின் சேட் ஒன்றை எடுத்து ஒருத்தன் அவனது கண்ணை கட்டினான். வான் ஒரு இருபது நிமிசமாய் ஓடிக்கொண்டிருந்தது. இப்பிடித்தான் அவன் பாத்த ஒரு இங்கிலிஸ் படத்திலை கீறோவை கண்ணை கட்டி கொண்டு போவார்கள். கீறோ போகிற வழியை அக்கம் பக்கத்திலை கேக்கிற சத்தத்தை வைச்சு அடையாளம் பிடிப்பார். பிறகு அதே மாதிரி ரஜனியும் ஒரு படத்திலை நடிச்சிருந்தார். இவனும் அது மாதிரி வெளியிலை என்ன சத்தம் கேக்குதெண்டு காதை குடுத்துப் பாத்தான். ஆனால் சிங்களவன் புத்திசாலி வானிலை சிங்கள பாட்டை சத்தமாய் போட்டிருந்தான். அதலை ஒண்டும் கேக்கேல்லை.கடைசியிலை றெயின் ஒண்டு கோணடிச்ச சத்தம் மட்டும் கேட்டது. அது ஏதோ அவனிற்கு கடைசியா ஊதின சங்கு மாதிரியே இருந்தது.

வான் ஒரு இடத்தில் நிண்டது அவனை இறக்கி போனவர்கள் கண்கட்டை அவித்து விட்டதும் சுத்திவர பார்த்தான். அது போலிஸ் நிலையம் அல்ல. சாதாரண ஒரு வீடு போல இருந்தது.ஆனால் புலனாய்வு பிரிவின் இரகசிய சித்திரவதைக்கூடம் என்று மட்டும் புரிந்தது. அவனை கதிரையில் இருத்தியதும். அவள் தான் விசாரணை தொடங்கினாள். இதா பார் ஒழுங்கா உண்மையை ஒத்துக் கொண்டா நீ உயிரோடை போகலாம்.கணணியில் கிராபிக் செய்த ஒரு படத்தையும் அதே படத்தை கையால் ஓவியமாய் கீறியிருந்த படத்தையும் காட்டியபடிசெல்றா இந்த பெடிச்சியை உனக்கு எப்படி தெரியும்.நீ புலிதானே .அவளின் வட்டார வழக்கு பேச்சிலிருந்து அவள் மட்டக்கிளப்பு அல்லது அம்பாறை எண்டு புரிந்தது.

நோ சிஸ்ரர் எண்டவனிற்கு பேந்தும் பார் இங்கிலிசு எண்டு இன்னொரு அறை விழுந்தது. "சொறி "வளந்தது படிச்சது எல்லாமே சிங்கப்பூர். வேணுண்ணா என்னோடை டொக்கிமென்ன்ஸ் செக் பண்ணி பாருக்க . எனக்கு தமிழ் இப்பிடித்தான் வரும்.என்றான்.
அவளின் விசாரண நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்த மேசையில் அவனது பொருட்களை பரப்பி வைத்து அவனிடமிருந்த விசிட்டிங் காட்டுகள். அவனது சிங்கப்பூர் ஆவணங்களை மற்றையவன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

இனி சரிவராது எங்கடை வழைமையான விசாரணையை தொடங்க வேண்டியதுதான் என்று அவள் சிங்களத்தில் சொன்னதும். இருவர் வந்து அவனது உடுப்புக்களை கழற்றி நிருவாணமாக்கி அங்கிருந்த இரண்டு தூண்களிற்கிடையில் அவனது கைகளையும் காலையும் அகட்டி கட்டினார்கள்.டவின்சியின் மான் பவர்(man power) ஓவியத்தை போன்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவனை
ஒருவன் வளைந்து கொடுக்கும் ஒரு வித பிளாஸ்ரிக் குளாயால் அவனது பின் பக்கம் முழுதும் முடிந்தவரை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான்.அவன் ஏற்கனவே தண்ணியடித்திருந்ததால் வாங்கிய அடி நிருவாணமாக்கப்பட்ட கூச்சம் தூண்களில். தொங்கிய வலி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் அவன் வாய் மட்டும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒருத்தன் சாராய போத்தலுடனும் சாப்பாட்டு பார்சல்களுடனும். உள்ளே நுளைந்தான் . வாங்கோ காசிம் நானா. என்று வரவேற்றார்கள். இவனை தொங்கவிட்டு அவர்கள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் சிங்களத்திலான உரையாடல்களில். அவளின் பெயர் ராணி.இன்னொருத்தன். உடுகொலஇவன்தான் அந்தக் குழுவின் பொறுப்பாளர்.. மற்றையவன்.பெர்ணான்டோ. அடுத்தவன் றஜித். என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது. கையில் சாராய கிளாசுடன் வந்த ராணி அவனின் வாயில் வைத்து பருக்கினாள்.. அவனிற்கும் அது தேவையாக இருந்தது. பின்னர் தன்து கைகளை கீழே கொண்டு சென்றவள். அவனது உறுப்பை விரலால் தட்டியபடி நீ எப்பவுமே இப்பிடித்தான் கிறீன் சேவ் செய்வியா என்றவும். மற்யைவவர்கள் கிறீன் சேவ் இல்லை கிளீன் சேவ்..ராணி தன்னுடைய வேலையை தொடங்கிட்டாள் என சொல்லி சிரித்தனர்.
மீண்டும் மேசைக்கு போனவள் ஒரு கிளாஸ் சாராயத்தை ஒரு மடக்கில் குடித்துவிட்டு திரும்ப வந்தது இனி உனக்கு தமிழ் தானாய் வரும் என்றபடி ஒற்றைக் கையை கீழே கொண்டு போனாள். இப்பொழுது அவளது உள்ளங்கையில் அவனது இரண்டு விதைகளும். உள்ளடங்கியிருந்ததுமெதுவாக கையை இறுக்கி பிசைய தொடங்கினாள். வலி உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க அவன் கால்கள் நெம்பி பெருவிரல்கள் தூணைத்தொட்டது. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இறங்கிவந்து அவனது தலையை சுற்றி வட்டமிட கண்கள் இருண்டது. மீண்டும் கண்விழித்தபொழுது அவர்கள் உணவருந்தியபடி இருந்தார்கள். ஆனாலும் அசையாமல் அவர்கள் பேசுவதை கேட்டான்.

தவறான ஆளை பிடிச்சிட்மோ. ??

ஏன் அப்படி சொல்லுறாய்???

அனிட்டை இருந்த விசிட்டிங் காட்டுகள் எல்லாம் பெரிய பிஸ்னெஸ் ஆட்கள். அரசியல் வாதிகள். போலிஸ் அதிகாரிகள் பெயர்கள் இருக்கு.

சும்மா எங்கையாவது பொறுக்கியெடுத்து சேர்த்து வைச்சிருந்திருப்பான். எதுக்கும் நாளைக்கு அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு கேட்டு முடிவு செய்வம்.

எதுக்கும் சலாவுதீன் வரட்டும். அவனுக்குத்தான் யாப்பாணியளை தெரியும். ..இல்லாட்டி குணாளனிற்கு கட்டாயம் தெரியும்.

குணாளன் இப்ப சி.பி.சி.ஜ.டி. நிலாப்தீனோடையல்லோ??. அவங்களிட்டை குடுக்கக்கூடாது நாங்களே கண்டுபிடிக்கவேணும்.

சிலநேரம் இவனின்ரை தொடர்புகள் பெரிய இடமெண்டால் எங்களிற்கும் பிரச்சனை இவனை அந்தப் பெண்ணோடை சிலர் பாத்திருக்கிறதா சொலலியிருக்கிறாங்கள். எதற்கும் நாளைக்கு அந்த லொச்சிற்கு நேரடியா அவனையும் கொண்டு போய் விசாரிக்கலாம். காசிம் நானா நீங்கள் இவனை படமெடுத்து மட்டக்களப்பிற்கு போய் விசாரிட்டு வாங்கோ.

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இருமல் அவர்கள் பார்வையை திருப்பியது
தொங்கிய தலையை நிமிர்த்தி பிளீஸ் வோட்டர். வோட்டர்.. இவனுக்கு எப்பிடியடிச்சாலும் தமிழ் வருதில்லையென்றபடி ராணி திரும்பவும் சாராயத்தை போத்தலோடு எடுத்துப்போய் அவன் தலையை நிமிர்த்தி ஆட்டுக்கு தவிட்டுத் தண்ணி பருக்குவது போல பருக்கினாள். அவனிற்கு அதற்கு மேலும் முடியாமல் குமட்டிக்கொண்டுவரவே ஊவேக்......
வேணிபார் கோழிப்புரியாணி கூழாக பாய்ந்ததில் பாதி ராணியையும் நனைத்துவிட கோபமடைந்த ராணியின் உள்ளங்கைகளில் மீண்டும் அவனது விதைகள்.

0000000000000000000000

அதிகாலையளவில் கண் விழித்திருந்தான்.அவன் மயங்கியிருந்தானா அல்லது நித்திரையாகிப் போயிருந்தானா?என்பது நினைவில் இல்லை. அவன் எடுத்திருந்த சத்தியின் நாத்தம் அந்த அறையெங்கும் பரவியிருந்தது. தாகம் தொண்டையை அடைத்தது. அப்பொழுதுதான் அவனிற்கு உடல்வலியனைத்தும் தெரிந்தது. தலையில் பெரியதொரு பாறாங்கல்லை கட்டிவிட்டது போல பாரமாயிருந்ததோடு தலை வெடித்துவிடுகிற அளவிற்கு தலைவேறு வலியெடுத்தது. மூத்திரம் பெய்யவேண்டும் போல் முட்டியிருந்தது இருந்தது ஆனாலும் முடியவில்லை அவனது விதைகள் இரண்டும் வீங்கி நாவல் நிறமாய் மாறிவிட்டிருந்தது.மெதுவாய் முக்கியபடி சொட்டுச் சொட்டாய் பெய்து முடித்தவனிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.


ஆனால் அந்த இடத்திலேயே பெய்ததால் மீண்டும் அடிவிழலாம் என அவன் எதிர்பார்த்தான். அடுத்து என்ன செய்வார்கள். கொலைசெய்து எங்காவது வீசி விடுவார்களா? அல்லது நான் யாரென்பதை கண்டு பிடித்து சிறையில் வாழ்க்கை கழியப்போகின்றதா? நேற்று அவனை சந்தித்தவர்கள் அவனை தேடியிருப்பார்களா? சிங்கப்பூரிற்கு செய்தி போயிருக்குமா? இப்படி ஆயிரம் கேள்விகளை திரும்ப திரும்ப அவன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே விடிந்துகொண்டிருந்தது.
காலை கதவைத்திறந்த ஒருத்தன் நாற்றத்தில் முகத்தை சுழித்தபடி மீண்டும் கதவை சாத்தினான். சில நிமிட நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது அவனுடன் இன்னொருத்தன் கையில் வாளித் தண்ணீரும் துணியோடும் நின்றிருந்தான். வந்தவன் சே இவங்கள் என்ன மனிசரா மிருகங்களா இரவு முழுக்க தொங்கவிட்டிருக்கிறாங்கள் என சிங்களத்தில் திட்டிய படியே அவனது கட்டுக்களை அவிழ்த்து கிழே இறக்கவும் அவன் நிற்க முடியாமல் கீழே விழுந்து படுத்துக்கொள்ள. அவனை தூக்கியபடி சிங்களம் தெரியுமா? என்றான். அவன் பேசாமல் இருக்க யு ஸ்பீக் சிங்களம் என்றான். அவன் இல்லையென தலையாட்டி விட்டு தண்ணிகுடிக்கவேணும் என சைகை மட்டும் செய்தான். அவனை கதிரையில் இருத்தி ஒரு போத்தலில் தண்ணியை கொண்டு வந்து கொடுத்தவன். அந்த இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தவனை ரவி இவனை கொண்டுபோய் குளிக்கவிடு என்றான்.
அவனை குளிப்பதற்கு கூட்டிப்போன ரவி

நான் வடமராச்சி பிடிச்சு அஞ்சுமாதமாகிது டீ..ஓ .போட்டிட்டு இஞ்சை வேலைக்கு வைச்சிருக்கிறாங்கள். வெளிநாடு போக வந்தனான் சந்தேகத்திலைதான் பிடிச்சவங்கள். நீங்கள் ஊரிலை எந்த இடம்?

சிங்கப்பூர்

ஊரிலை சிங்கப்பூரா?? அது எங்கையிருக்கு?

சிங்கப்பூரிலை இருக்கு.

இந்த வாய்க்கொழுப்புக்குத்தான் பிடிச்சிருப்பாங்கள். போய் குளி.

குளித்து முடித்து வந்தவன் அந்த சிங்கள அதிகாரியிடம் வலிக்குளிசை கேட்டு வாங்கி போட்டுக்கொண்டான் அவன் பால்த்தேனீரும் வாங்கி கொடுத்திருந்தான்.
0000000000000
முதல்நாள் அவனைப் பிடித்த குழுவினருடன் மேலும் இருவர் வந்திருந்தனர். புதிதாய்வந்தவர்களில் ஒருவன் என்ன மச்சான் எப்பிடி இரிக்கிறாய். என்னை ஞாபகம் இரிக்கா என்றான். அவன் இல்லையென்று தலைமட்டுமஆட்டினான் நான் நம்பத் திறீயிலை செல்வா வீட்டிலையெல்லாம் இரிந்தனான் என்னை தெரியாதா?? மீண்டும் அவனது கேள்விக்கு இவனது தலையசைப்பு மட்டுமே பதிலானது. அவனும் உடுகொல மட்டும் வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த உடுகொல சலாவுதீனிற்கு தெரியாதாம் என்றான். புதிதாய் வந்த மற்றையவன் அவனை சுவரோடு நிற்க வைத்து கையில் ஒரு சிலேற்றில் சில இலக்கங்களை எழுதிக்கொடுத்து பிடிக்கச் சொல்லி பல கோணங்களில் படம் எடுத்தான். காசிம் நானா நீங்கள் படங்களை பிறின்ட் போட்டு மட்டக்களப்பிற்கு போய் விசாரிச்சு விபரங்களை கொண்டுவாங்கோ என்று உத்தரவிட்ட உடுகொல ராணி நாங்கள் இவனை அந்த லொட்சிற்கு அழைத்து போகலாமென்றான்.

அவன் கண்கள் கட்டப்பட்டது .இப்பொழுது அவர்கள் பயணித்தது போலீஸ் ஜீப் ஆனால் அனைவரும் சாதாண உடையில் தான் இருந்தனர் கட்டியிருந்த அவனது கண்களை அவிழ்த்தனர். போலீஸ் ஜீப் கிறீன் வீதியிலிருந்த பாரிஸ் லொட்ஜின் முன்னால் நின்றது. இது இலங்கையின் பிரபல பயண முகவரான பாரிஸ் தவம் என்பவரிற்கு சொந்தமானது. போலீஸ் ஜீப்பை பார்த்துமே அனைவரும் அறைகளிற்குள் பதுங்கிக்கொண்டனர். காரணம் அங்கிருந்தவர்கள் அனைவருமே வெளிநாடு போவதற்காக ஏஜென்சிகளிடம் காசுகட்டிவிட்டு காத்திருந்தவர்கள். கைவிலங்கிட்ட அவனை இறக்கியவர்கள். லொட்ச் மனேச்சரிடம் போய் விபரத்தை சொல்லி உடுகொல தன் கையிலிருந்த அந்த பெண்ணின் படத்தையும் அவனையும் காட்டி இவர்களை இங்கு தங்கிருந்தாரகளா? என்றான். பழைய மனேச்சர் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதால் தான் புது ஆள் வேலைக்கு சேர்ந்து கொஞ்சக்காலம்தான். அங்கை இருக்கிற பழைய ஆட்களை கேட்கச் சொல்லி சொன்னார்.
அப்பொழுது அங்கு வந்த றூம் போய்(லொட்சினை கூட்டிதுப்பரவாக்கி அங்குள்ளவர்களின் தேவைகளை கவனிப்பவன்.)அவனிடமும் அதே கேள்வியை கேட்டதும் அவனை ஆழமாக பார்த்தவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு லொட்சில் இருந்த மற்றையவர்களை கதவைதட்டி வெளியே வரும்படி சொல்லிக்கொண்டே போனான். வெளியே வந்த பலரும் அவனைத் தெரியாதென்றே சொன்னவர்கள் பெண்ணின் ஓவியத்தை பார்த்து தலையை சொறிந்தனர். ஒருத்தி மட்டும் அவனை அங்கு கண்டதாகவும். ஆனால் அந்த பெண்ணை தெரியாது என்றும் சொன்னாள். அவனைத் தெரியும் என்றதுமே ..இரடி வெளியாலை வந்ததும் முதல்வேலையா வந்து உனக்கு காதைப்பொத்தி போடுறன் எண்டு மனதில் நினைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்படும் பொழுது றூம் போயை பார்த்து கண்களால் நன்றி சொன்னவன். செய்தி சிங்கப்பூரிற்கு போய்விடும் என்கிற நம்பிக்கை அவனிற்கு பிறந்திருந்தது.


அவர்கள் அருகிலிருந்த பியூட்டி லொட்ச்.மற்றும் விவேகானந்தர் லொட்ச் ஆகியவற்றிலும் விசாரித்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தெரியாதென்றும் சிலர். பார்த்மாதிரி இருக்கு என்றும் பதில் சொன்னதால்.அவர்களிடம் ஏதோ வெறுப்பணர்வு தோன்றியிருந்தது இப்பொழுது அவனது கண்கள் கட்டப்படவில்லை ஜீப் மருதானை காவல் நிலையத்திற்கருகில் இருந்த காவல்த்துறையினரின் குடியிருப்பில் நுளைந்தது. அந்த அறையில் நுளைந்தபொழுதுதான் அவன் அங்குதான் முதல்நாள் இரவு தங்கவைக்கப்பட்டிருத்தான் என்று அவனிற்கு புரிந்தது. இப்பொழுது அவனிற்கு பசி வயிற்றை விறாண்டியது. மீண்டும் தலைவலிக்கத்தொங்கியிருந்தது.அப்பொழுது உடுகொலவின் கைத்தொலைபேசியடிக்க அதை எடுத்தவன் வெளியே போனான். சில நிமிட நேரத்தின் பின்னர் உள்ளே வந்தவன். மற்றயவர்களையும் வெளியே அழைத்தான். சிங்கப்பூரிற்கு தொலைபேசி போயிருக்குமோ என்று அவன் நினைத்துக்கொண்டான்.

00000000000000

மீண்டும் உள்ளே வந்தவர்கள் உடுகொல அவனிடம்

வினோதனை உனக்கெப்படி தெரியும்.

அவர் என்னுடைய றிலேசன் அங்கிள் முறை.

ஓ அப்பிடியா?

அவனது முகம் மாறியது உன்னை தேடி எல்லா போலிஸ் ஸ்ரேசனிற்கும் போன் போயிருக்கு.

ஓ றியலி ??

என்ன சாப்பிடுகிறாய்.

பிறியாணி.

00000000000000000

அன்றிரவு பொறளை இராணுவ மற்றும் காவல்த்துறை குடியிருப்பின் ஒரு தொடர்மாடி குடியிருப்பில் அவனது ஒற்றைக்கை மட்டும் ஜன்னலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தது. குளித்து முடித்து சுடிதார் அணிந்து வந்த ராணி அவன் முன்னால் ஒரு முறை சுழன்றவாறு நான் எப்பிடி இருக்கிறேன் என்றாள்.. ஊகூம்..பெரிய நதியா எண்டு நினைப்பு.கோயில் தேரிற்கு சீலையால் போர்த்தது போல இருக்கு என்று சொல்லாமென நினைத்தாலும் சுப்பர் என்றான். கதவைத் தட்டிய ஒரு போலிஸ்காரன் சாராயம் பியர் சோடா இரண்டு பிரியாணி பாசலை கொடுத்து விட்டு பவ்வியமாக விடைபெற்றான்.கைவிலங்கை கழற்றியவள் விலங்கின் இரண்டு பக்கத்தையும்காப்புப் போல் ஒரு கையிலேயே பூட்டினாள். இன்றிரவு நீ என்னுடைய பாதுகாப்பில்தான் இருக்கப் போகிறாய். ஒத்துளைத்தால் உனக்கு நல்லது இல்லாட்டில் நேற்றை இடத்தில் தொங்கவேண்டிவரும் என்றாள்.

என்னவேணும் பியரா சாராயமா ?

fist பாத்றூம் next பசி சைகையுடன் சேர்த்தே சொன்னான்.

வீட்டையும் நோட்டம்விட்டான் யாரும் தப்பிஓடிவிடாதபடி யன்னல் வெளியே இரும்புக்கம்பிகளால் ஒட்டப்பட்டிருந்தது.துணியெல்லாவற்றையும் கழற்றிவிட்டு போக சொன்னாள். கழிவறைக்கு போனவன் அப்படியே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அங்கிருந்த புளிச்ச நாத்மெடுத்த துவாயால் முன் பக்கம் மட்டும் மறைத்தபடி வந்தவனை ஏற இறங்க பார்த்த ராணி அவன் துவாயை பறித்துவிட்டு மீண்டும் கைகளை பின்பக்கமாக விலங்கிட்டு கதிரையில் தள்ளினாள்.தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அவனது விதைகள் அவளது உள்ளங்கைகளில் ஆனால் நசிக்கவில்லை .அவனின் காலகளை அகற்றி முழங்காலில் குனிந்தாள். உன்னை அவள் இவ்வளவு நசிச்சும் உனக்கு உனக்கு புத்திவரேல்லை. கீழே பார்த்து திட்டினான்.. அசையாதை அசையாதை .கொச்சிக்கடை அந்தோனியாரே வெள்ளவத்தை பிள்ளையாரே நேத்திக்கடன் வைத்தான். இரண்டு பேருமே கைவிட்டு விட்டனர். விலங்கிட்டிருந்த கைகளை சில வினாடிகள் இறுக்கப் பொத்திப் பிடித்தான் கைகளை விலங்கு அழுத்தியது மீண்டும் கைகள் லேசானது.அவளது பெருத்த உடம்பிற்கான காரணம் இப்பொழுது அவனிற்கு புரிந்தது .ம்.பரவாயில்லையே என எழுந்தவள் பியரை உடைத்து சில மடக்குகள் குடித்துவிட்டு அவனது ஒரு கை விலங்கை அகற்றி அவனது கையில் பியரை கொடுத்தாள். விலங்கின் திறப்பை ஒவ்வொருதடைவையும். பாதுகாப்பாக அங்கிருந்த அறையில் கொண்டுபோய் வைத்து கதவை பூட்டிவிடுவாள். அவளின் செய்கைகள் அனைத்தும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புலனாய்வு அதிகாரியாகவே காணப்பட்டாள்.

00000000000000

நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது வீதி விளக்கின் வெளிச்சம் மெல்லிதாய் அறையை நிறைத்திருந்தது. அந்த படுக்கையறையின் கட்டிலில் அவனின் இடக்கை கட்டிலோடு மேற்பக்கமாக விலங்கிட்ட நிலையில் கலந்து முடித்த இருவரிற்கும் மூச்சுவாங்கியபடியிருக்க. அவளின் பருத்த உடல்பாதி அவன் மீது படர்ந்திருந்தது. அவன் கன்னத்து குழியினை விரலாம் மெதுவாய் வருடியவள் .எனக்கு உன்னிலை பிடிச்சதே இந்தக் குளிதான்.

நீ புலியில்லை எண்டு விசாரணயள்ளை தெரியிது.

அப்ப விடவேண்டியதுதானே ??

காசிம் நானா மட்டக்கிளப்பாலை விசாரண முடிச்சு வந்ததும் அங்கையும் உன்னை தெரியாதெண்டு சொல்லியிருந்தா உன்னை கோட்டிலை கொண்டுபோய் ஒரு ஜச்சிற்கு முன்னாலை லோக்கல் பொலிசிட்டை குடுத்திடுவம் பிறகு உன்ரை சொந்தக்காரங்கள் யாராவது வந்து கையெழுத்து போட்டு கூட்டிக்கொண்டு போகலாம்.

எதுக்கு என்னை அரஸ்ற் பண்ணீங்க??

பட்டிலங்தையிலை வெடிச்சு செத்த பெட்டையோடை கடைசியா ஒருத்தன் இரண்டுநாள் பாரிஸ் லொட்ச்சிலை தங்கியிருக்கிறான்.அவள் மட்டக்கிளப்பு மாமங்கம். அததான் காசிம் அங்கை போயிரக்கிறார் . அவனின்ரை பொலிஸ் பதிவு ஜடென்டி காட்டிலை திருக்குமார் எண்டு பெயர் இருக்கு அந்த ஜடென்டி படத்தை எடுத்து எல்லா லொட்ச் கோட்டல்கள் பொலிஸ் ஸ்ரேசன்கள் எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள். அப்பதான் ஒரு லொச்சிலை அதே மாதிரி ஒருத்தன் தங்கியிருக்கிறதா தகவல் வந்திச்சி. அதுதான் நீ...

இது லொட்ச் காக்காவின்ரை வேலையா என மனதிற்குள் நினைத்தவன். ..பட்டிலந்தை.. லேடி.. திருக்குமார் ..வெடிச்சது எதுவுமே புரியல்லை.என்னை பாத்தா அவன் மாதிரி இருக்கா??

உனக்கு எதுவுமே விளங்க வேண்டாம் வேண்டாம் அதுதான் நல்லது .

ஒண்ணு கேட்டா கோவிச்சசுக்க மாட்டீங்களே நீங்க சி ஜ டியா.

இப்ப அப்பிடித்தான் ஆனால் மின்னை அப்பிடியில்லை

அப்பிடின்னா??

அவள் கைகள் அவனது மார்பை வருடியபடியே ..நானும் சிங்களவனிற்கு எதிராதுவக்கு தூக்கினவள்தான். எங்கடை ஊரிலை ஈ;பி.ஆர்.எல்.எவ்வுக்கு போன முதல் பெடிச்சி நான்தான். இயக்கத்திலையே ஒருத்தரை காதலிச்சிருந்தனான் புலியள் ஈ.பி யை தடைசெஞ்சாப்பிறகு என்னையும் அவரையும் விசாரிச்சிட்டு விட்டிட்டாங்கள். நாங்கள் கலியாணம் செய்து எனக்கு பிள்ளையும் பிறக்க அவர் கட்டாறுக்கு போயிற்றார். எல்லாம் நல்லபடியாய்தான் போய்கொண்டிருந்தது. என்ரை அவரும் லீவிலை ஊருக்கு வந்திருந்தார் அந்த நேரம் இந்தியனாமிக்கும் புலியளிற்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலை நிண்ட பழைய இவற்ரை சினேதங்கள் ஈ.பி பெடியளும் ஊருக்கை இந்தியனாமியோடை திரிஞ்சவங்கள். இவர் வந்து நிண்டதை கேள்விப்பட்டு அடிக்கடி வந்திட்டு போவாங்கள். நாங்களும் வராதையெண்டு சொல்லோது. ஒருநாள் இரவு இதே மாதிரித்தான் நானும் அவரும் படுத்திருந்த நேரம் எங்கடை சொந்தக்கார பெடியன் ஒருத்தன் புலியிலை இருந்தவன். தீசன் எண்டு பேர் கதவிலை தட்டி என்ரை பேரை சொல்லி கூப்பிட்டான் அவசரமா துணியை சுத்திக்கொண்டு நான்தான் போய் கதைவை திறந்தன் இவரோடை கதைக்கவேணும் வரச்சொல்லுங்கோ எண்ட அவரும் பின்னாலை வந்திட்டார். என்னவெண்டாலும் இங்கை கதை அவர் வெளியிலை வரமாட்டார் எண்டு நான் அம்பிடிக்க . ஜயோ அக்கா ஒரு பிரச்சனையுமில்லை கதைக்கத்தான் எண்டு அவனும் அடம்பிடிக்க சொந்தக்கார பெடியன்தானே ஒண்டும் செய்யமாட்டானெண்டு அவரை வெளியாலை விட்டாலும் நானும் கொஞ்சம் பின்னாலை போனன் படலையடிக்கு போனதும் வெடிச்சத்தம் கேட்டிச்சு. மண்டை வெடி அவர் அதிலையே........ என்று சொல்லும் போது ராணியின் குரல் தளுதளுத்தது நின்று போய் அவனது மார்பில் சூடான சிலகண்ணீர் துளிகள் விழுந்ததை அவன் உணர்ந்தான். சில நிமிட அமைதியை அவனே கலைத்தான்.


அப்புறம் என்னாச்சு.??

அதோடை என்ரை விதியும் மாறிப்போச்சு. என்ரை மனிசனை சுட்டவனை கொல்லாமல் விடுறெல்லையெண்டு முடிவெடுத்தன். என்ரை புள்ளையை அம்மாட்டை குடுத்திட்டு ஆமியோடை போய் சேந்திட்டன்.அவனை மட்டுமே தேடினன் ஒம்பது மாதத்துக்கு பிறகு அவனை போட்டாப் பிறகுதான் என்ரை மனசு கொஞ்சம் ஆறிச்சிது.

ஓ அவனும் குளோசா?? பிறகெதுக்கு இப்பிடி நீங்க தொடந்தும்....இழுத்தான்.

பிறகு எங்கையாவது போய் என்ரை பிளையோடை வாழலாமெண்டுதான் நினைச்சனான். ஆனா புலியை பத்தி உனக்கு தெரியாது அது எங்கை போனாலும் விடாது. ஏதாவது அரபு நாட்டுக்கு போகலாமெண்டு நினைச்சன் அதக்கு என்னட்டை வசதியும் இருக்கேல்லை. வெளிநாடு போனாலும் உன்னை மாதிரி நான் படிச்ச ஆளும் இல்லை ஏதாவது வீட்டு வேலையள்தான் செய்யவேணும். அதோடை முதல்லை வெறும் மெசேச்குடுக்கிற ஆளாய் இருந்த என்னை சி.ஜ.டி யிலை சேர்த்து பயிற்சியளும் தந்து குவாட்டஸ் சம்பளம் எல்லாம் தாறாங்கள்.
என்னவோ ஒண்ணும் புரியல்லை ஆனா உங்களோடை ஸ்ரோறி பீலிங்கா இருக்கு சொறி. எனக்கு நீங்க அடிச்ச அடி ஒரே வலியா இருக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி பிளீஸ் ..அப்பதான் தூங்கலாம்.
இப்ப எனக்கும் கவலையாத்தான் இருக்கு ஆனால் ஒண்டுமே செய்யேலாது என்றவள். அவன் மீதிருந்த நிரம்பிய ஆணுறையை உருவியெடுத்தவாறே துணியால் தன்னை சுற்றிக்கொண்டு அயையை விட்டு வெளியேறினாள்.

000000000000000


ஒரு கிளாஸ் நிரப்பி சாராயத்தை ஊற்றிவந்து அவனிடம் நீட்டியவள் அவன் குடித்து முடியும்வரை காத்திருந்து கிளாசை வாங்கியபடி உனக்கு இன்னொரு விடயத்தையும் சொல்லவேணும் நாளைக்கு உன்னை ஜட்சிற்கு முன்னாலை விடுதலை செய்யேக்கை நான் இப்பிடி நடந்ததா நீ வாயே திறக்கக்கூடாது அதுதான் உனக்கு நல்லது . அப்பிடி ஏதாவது நடந்தால் நீ எப்பிடியும் எங்களோடை கண்காணிப்லைதான் இருப்பாய் பிறகு கடல்லையோ களனி ஆத்திலையோ மிதக்கவேண்டிவரும். என்றவள் அவன்மீது போர்வையை போர்த்திவிட்டு "சரி படு நான் இஞ்சை வெளியிலைதான் படுத்திருப்பன்" என்படி விலங்கு சரியாய் பூட்டியிருக்கா என்று பார்த்து உறுதி செய்தவள் கதைவை பூட்டிவிட்டு போய்விட்டாள்.

000000000000

காசிம்மின் மட்டக்கிளப்பு அறிக்கை N.I.B அறிக்கை எல்லாம் வந்தது அவனை மருதானை நீதவான் முன்னிலையில் புறக்கோட்டை பொலிசாரிடம் C.I.D யினர் கையளித்தனர். அங்கேயே தயாராய் நின்ற வக்கீல் கையெழுத்திட்டு அவனை விடுதலை செய்தார். அங்கு வந்த ராணி அவனிடம் தனது கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து உனக்கு எங்கை என்ன உதவி தேவையோ தராளமாய் எனக்கு போனடி தனது இலக்கத்தை கெடுத்துவிட்டு போனார்.அதன் பின்னர் அவனும் பாகிஸ்தானிற்கு தேங்காய் ஏற்றுமதி வியாபாரத்தினை அவனது பங்காளி சுமானந்த தேரரோடு தங்குதடையில்லாமல் தொடர்ந்ததோடு அடிக்கடி பொரளை ராணியின் குவாட்டசிற்கு பியரோடும். ஓல்ட் அரக்கோடும் போய்வருவதுமாய் அவர்களது நட்பு தொடர்ந்தது.

00000000000000

01.31.1996 திங்கள் அதிகாலை மீன்கள் பதனிடும் தொழிற்சாலையொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி ஒன்றினுள் அவன் தனியாக ஜட்டிமட்டும் அணிந்தபடி வியர்வையும் புளுதியுமாய் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் அதிகளவு சத்தம் எழுப்பாமல் கவனமாய் ஆனால்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தவன். நேரத்தை பார்தான் அதிகாலை இரண்டை தொட்டுக்கொண்டிருந்தது அவனிற்கு பக்கத்தில் மசாயிர் அவனிற்கு உதவிக்கொண்டிருந்தான். சரிமச்சான் எல்லாம் முடிஞ்சுது இனி பின்னாலை கருவாட்டு கூடையளை அடுக்கினால்சரி என்றபடி வேகமாக இன்னொரு லொறியிலிருந்த கருவாட்டு கூடைகளை அந்த லொறிக்கு மாற்றிஅடுக்கி முடித்தவர்கள் அங்கு தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் உடலை கழுவி உடுப்பை மாற்றிபடியே அவன் மசாயிரிடம்..
மச்சான் நேரமாகுது நீ லொறியை எடு நான் காரிலை முன்னாலை போறன். என்றான்.

மச்சான் உன்னை நம்பித்தான் இரிக்கிரன் ஒண்டும் பிசவாது தானே

டேய் நான் அ..அ வின்ரை ஆள் ஒண்டும் பிசவாது லொறியைஎடு எண்டவன் காரிற்கு போய் அதற்குள்ளிருந்த jony walker போத்தலை திறந்து சில முறடுகள் விழுங்கி தொண்டையை கனைத்துவிட்டு பார்த்பொழுது. மசாயிர் தலையில் தொப்பியை போட்டபடி அவனது ஜீன்சில் இருந்த கைக்குட்டையை எடுத்து நிலத்தில் விரித்து முழந்தாளிட்டு தொழுதுகொண்டிருந்தான். இவன் வேறை நேரம்காலம் தெரியாதவன்.என்று சலித்துக்கொண்டான்.
தொழுது முடிந்த மசாயிரிடம் டேய் உன்ரை அல்லா பகிடி வெற்றி தெரியாதவர். கவனம். எல்லாம் பிழைக்கபோகுது .

அதில்லடா மனசாட்சியெண்டு இரிக்கல்லே அதுதான் என்படி மசாயிர் லொறியில் ஏறி அதை இயக்கினான்.

அவர்களது வாகனங்கள் கொழும்பு நகரினுள் நுளையும் முக்கிய சோதனை சாவடியை நெருங்க காவலரணில் இருந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருத்தன் ரோச் லைற் வெளிச்சத்தை காட்டி முன்னால் வந்த காரை மறித்தான். அவனும் அவர்களும் சிங்களத்தில் உரையாக்கொண்டிருக்கும்போதே லொறி அவர்களைத்தாண்டிப்போய்க்கொண்டிருந்ததுகாரிற்குள் மக்கால்வாசியளவில் இருந்த போத்தலை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மசாயிருடன் இணைந்துகொண்டான். புறக்கோட்டை பகுதியில் காலை சந்தைக்காக லொறிகள் பொருட்களுடன் வந்து நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. மசாயிரும் அந்த லொறிகளிற்கிடையில் ஒரு இடத்தில் நிறுத்தினான். அந்த லொறியை ஒருவனிடம் கையளித்து விடுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடும். காரை நிறுத்தியவன் ஒரு தொ.பே இலக்கத்தை அழுத்தினான். அங்கேயே மேம்பாலத்திற்கு அருகில் சாறத்தால் போர்த்துக்கொண்டு படுத்திருந்த ஒருவன் கரைநோக்கி வந்தான். சில சங்கேத மொழிகள் பரிமாறப்பட்டு இருவருமே சரியான ஆட்கள்தான் என உறுதி செய்து கொண்டபின்னர் அவன் லொறிக்கு புதியவனை அழைத்து போனாவன். மாசாயிர் கீழே இயங்கிக் கொள்ள இருவரும் லொறிக்குள் ஏறினார்கள். இங்கை சீற்றுக்கு பக்கத்திலைதான் சுவிச் வைச்சிருக்கிறன்.பிழைக்காது. அப்பிடி சிலநேரம் ஏதாவது பிழைச்சாலும் பின்பக்கமாய் ஒரு அடிகுடுத்தா போதும். என்றவனிடம் . அவன் ம்..என்று மட்டும் பதில் கொடுத்தான். விடைபெய முன்னர் அவனது பெயரை கேட்கலாமா என யோசித்தாலும் அது அவனது வேலையல்ல என நினைத்தபடி அங்கிருந்து வெளியேறினான். கார் கொழும்பிற்கு வெளியே பேலியகொடை பாலத்தை தாண்டி ஓடி கந்தானை பகுதியில் ஒதுக்குப் புறமாக ஒரு தென்னந்தோப்பில் நின்றது. கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு இருவரும் நித்திரையாகிப் போனார்கள்.

00000000000000

அவர்களது காரை யாரோ உலுப்புவது போல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்கள். எருமை மாடு ஒன்று காரில் சொறிதேய்த்தபடி நின்றது. அவன் எருமை மாடு என்று திட்டிவிட்டு நேரத்தை பார்தான் ஆறரை மணியாகியிருந்தது. சே இன்னம் கொஞ்சநேரம் நித்திரை கொண்டிருக்கலாம். என்றவன் காரை இயக்கி பிரதான வீதி நோக்கி ஓடிக்கொண்டிருக்க மசாயிர் திரும்பவும் சுருண்டு படுத்துக்கொண்டான். கந்தானை சந்திக்கு வந்தவர்கள் அங்கிருந்த முஸ்லிம் சாப்பாட்டுக்கடையில் போய் முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவிட்டு ரீயும் மாலுபணிசும் சாப்பிட்டார்கள். கார் இப்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது மசாயிர் காரை ஒடிக்கொண்டிருந்தான்.

மசாயிர் இதுவரைக்கும் என்னோடை இருந்து செய்த உதவிக்கு தாங்ஸ்சடா மச்சான்.

என்ன இப்பிடி சொல்லிட்ட நீ எனக்கு எவ்வளோ உதவி செஞ்சிரிக்காய். நானும் இன்னும் மூண்டு நாளிலை டுபாய் போயிடுவன்.
நீ போறவரைக்கும் காரை வைச்சிரு இன்னும் பத்துநாளைக்கு காசு கட்டியிருக்கு நீ போற அண்டைக்கு கொண்டு போய்விடு.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இறுதி சோதனைச்சாவடி..
சரி மச்சான் இதிலை நான் இறங்கிறன். தேவையில்லாமல் கொழும்பிற்கு உள்ளை போகாதை கவனம். ஏதும் அவசரமெண்டால் மட்டும் சிங்கப்பூர் நம்பருக்கு போனடி இல்லாட்டி டுபாய் போனதும் போனடி
சரிமச்சான் சந்திப்பம் ..மசாயிரிடமிருந்து விடைபெற்றவன்.காரில் தயாராய் வைத்திருந்த பொதியை எடுத்து அதிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் நுளைந்தவன் வழைமையான சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் தங்கியிருக்கும் கூடத்தில் தங்கியிருந்தபொழுது அவன் எதிர்பார்த்திருந்த ராணியின் அழைப்பு வந்தது. விமான நிலைய அறிவித்தல் ஏதும் செய்துவிடக்கூடாது என்று நினைத்தபடியே
கைத்தொலைபேசியை காதில் வைத்து கலோ..என்றான்.

டேய் நீ சொன்ன இடத்துக்கு வந்திட்டன் ஏதோ அவசரமா வரச்சொன்னாய் என்ன ஏது எண்டும் சொல்லேல்லை எங்கை நிற்கிறாய்.

நேரத்தை பார்த்தான்..ஓ வந்திட்டீங்களா. நான் இங்கை பக்கத்திலைதான் சதாம் ஸறீற்றிலை நிக்கிறன் ஒரே ராபிக் பத்து நிமிசத்திலை வந்துடறேன்.

என்ன விசயம் எண்டாவது சொல்லன்.

அதை நேரிலை சொல்லுறன்அங்கை நீங்கள் 1st Floor போய் mony exchange பண்ணிற இடத்திலை நில்லுங்கோ. வந்ததும் சொல்லுறன்.

சரி கெதியாய் வா.

1st Floor லையே நில்லுங்க பிறகு உங்களை தேடஏலாது

சரி சரி அங்கையே நிக்கிறன். எத்தினையோ பேரை நான் ஓடவைக்கிறன் நீ என்னை ஓடவைக்கிறாய் எல்லாம் என்ரை விதி ..

தொலைபேசியை அவன் முழுதுமாக நிறுத்தினான். சிங்கப்பூர் விமானத்திற்கான பயணிகளை தயாராகும்படி அறிவித்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். விமானம் ஓடுபாதையில் உருளத்தொங்கியது நேரத்தினை பார்த்தான். கொழும்புநகரம் ஒருமுறை அதிர்ந்து அமைதியானது.ஒரு தவறை இன்:னொரு தவறால் சரிசெய்திருந்தான். அது சரியா தவறா என்பதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் யோசிப்பதும் இல்லை.விமானம் மேலே கிளம்பியதும் போர்வையால் மூடியபடி நித்திரையாகிப்போனவனிற்கு கனவில் ராணியினால் விதை நசிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும் அவனைச்சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கதையின் முதலாவது பந்தியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

00000000000000000000000000000

கதை உண்மை சம்பத்தை தழுவியது

பிற்குறிப்புக்கள். 90 களில் தென்னிலங்கையில் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்படுபவர்கள் ராணியை அடையாளம் கண்பதற்கோ அல்லது விசாரணை செய்யவதற்கோ ஒரதடைவையாவது சந்திரப்பார்கள்.

சலாவுதீன். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவன். மட்டக்கிளப்பை சேர்ந்தவன் யாழ்ப்பாணத்தில் புலிகள் முகாம்களில் இருந்தவன். புலிகள் இயக்கத்தில் ஜிகாத் அமைப்பு ஊடுருவி விட்டது என்று அறிந்ததும். புலிகள் அமைப்பிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு களையெடக்கப்பட்டபொழுது தப்பிவந்தஒருவன்.

குணாளன் . புலிகள் அமைப்பில் இருந்தவன் வடமராச்சி கரவெட்டியை சேர்ந்தவன். இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் தலையிடியாய் இருந்தவன். பின்னர் புலிகள் அமைப்புடன் முரண்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவுடன் இணைந்திருந்தான்.

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

4:50 AM, Posted by sathiri, No Comment

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)
சாத்திரி (ஒரு பேப்பர்)

புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.


அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.


கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.


அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.

இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.

சாத்தானின் குழந்தை.

1:06 PM, Posted by sathiri, One Comment

சாத்தானின் குழந்தை.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான்.

கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம் மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு போக அங்கேயே தங்கியிருந்த குழந்தையின் தந்தையும் ஓடிவந்து பார்தார் ரோச்லைற் வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர் கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில் குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான் பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி முடித்தார்.

குழந்தையை குளிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின் குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய் அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.
இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க வார்ட்டில் பத்தாம் இலக்க கட்டிலிலா பிறந்தது

ஓம் சாமியார்.

சாமியார் கள்களை மூடினார் அம்மா தாயே நாகபூசணி எந்த குழந்தை பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ அந்த சாத்தானின் குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும். பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று மனதில் துதித்தவர்.

அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை சாத்தானின் குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும் வேல் முருகனின் பெயரை இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர் குழந்தையின் காதில் ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை சொன்னதும் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா ஆபத்து என்றபடி கவலையுடன் கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.

வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார் காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத் தட்டு கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில் எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு புரிந்தது. உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே குழந்தை உணவு உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோஞ்சானாய் வளர்ந்தது.
0000000000000000

இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை கச்சான் கடலை வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால் போய் நின்றவன்.

சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.

அவனை குனிந்து பார்த்த சாமியார் யாராப்பா நீ உனக்கென்ன உண்மை தெரியவேண்டும்.

சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??

கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர் பின்னர் அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி தெரியலையேப்பா என்றார். ( இந்தக் காலகட்டங்களில் சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)

அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??

என்ன பெயரப்பா ??

ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ

அதுவா திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின் திருவாட்டி கொளரி அம்மையின் அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.

நல்லவேளை இந்த அர்தத்தையே எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே .கந்தன் கடம்பன்.வேலன் இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும் வகுப்பிலை வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை என்ரை பெயரை கூப்பிடும்போது அவர் பாட்டுபாடுறார் என்று நினைச்சு நான் நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி அவன் கீழே குனிய. அய்யோ அம்மா தாயே காப்பாற்று சாத்தனின் குழந்தை பத்து வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன் எறிந்த கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார் மயங்கி விழுந்தார்.
00000000000000
திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம் வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன் எல்வைவரை ஓடி ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன் பிராங்போட் விமான நிலையத்தில் நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற பெயரில் :lol: :lol: :lol:

பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா நினைச்சு பார்த்தன் அதோடை அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர். அந்த சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.