Navigation


RSS : Articles / Comments


சீமானா?? மாயமானா??

8:07 AM, Posted by sathiri, No Comment

சீமானா?? மாயமானா??

அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் கிளை அலுவலகங்கள் என்று என்று எதுவும் இல்லாமல் கனடா. பிரான்ஸ் .இங்கிலாந்து .ஜேர்மனி.என இணையத்தில் மட்டுமே கிளைகள் இயங்குவதால்  அவற்றை இணையக் கிளைகள் என அழைத்தேன்.இந்த இணையக் கிளைகளை நடாத்துபவர்கள் யாரெனில் கடந்த  காலங்களில் தமிழ்த்தேசியத்தினை  மூலதனமாக்கி  அதில் வியபாரம் செய்து ..வந்தவர்களேயாவார்கள்.முள்ளி வாய்க்கால்  பேரவலத்தின் பின்னரும் தலைவர் வருவார்  அடுத்த கட்ட ஈழப்போர் என ஒரு மாதிரி மூன்று வருடங்களை ஓட்டியவர்களிற்கு  இனி நான்காவது வருடத்தை தாண்டியும் தலைவர் வருவாரென சொல்லி புலம்பெயர் தமிழரிற்கு நிலாச்சோறு ஊட்ட முடியாது என்பதால்  புலம்பெயர் வாழ் தமிழர்களிற்கு ஈழம் பெற்றுத் தருவோமென  கூறியபடி தொடர்ந்தும் தங்கள் வியாபாரத்தினை  நடாத்த  இவர்களால் கண்டு பிடிக்கப் பட்ட புதிய தலைவர்தான் சீமான்.

s.jpg
இந்த வருடத்திலிருந்தே  தலைவர் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற பேச்சுக்கள் மறைந்து  சீமான் தமிழீழம் வாங்கித் தருவார் என்கிற புதிய அடுத்த மாயப்பரப்புரைகள் பரப்பத் தொடங்கப் பட்டு விட்டது மட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் சீமானின் ஜரோப்பிய பயணமும் அவரது பேச்சுக்ககளும் அவரிற்காக  ஜரோப்பிய நாடுகளில் சேகரிக்கப் பட்ட நிதிகளும் தமிழ்த்தேசிய வியாபரம் இனி சீமானின் பெயரால் தொடப் போகின்றது என்பதையே உணர்த்தி நிற்கின்றது.அது மட்டுமல்லாமல் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சரானால்  தமிழீழம் கிடைத்துவிடுமென  அப்பாவித்தனமாக நம்பும் புலம் பெயர் தமிழர்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஈழத் தமிழர் விகாரத்தினையும் புலிகளையும் தங்கள் பரப்புரைகளிற்காக தமிழக அரசியல் கட்சிகள் பயன் படுத்துவது இது ஒன்றும் முதற் தடைவையுமல்ல அதே நேரம் சீமான்தான் முதற்தடைவையாக  ஈழத் தமிழரை பற்றி முதன் முதலாக கதைப்பவரும் அல்ல.தமிழக அரசியலில் தனது கட்சிப் பரப்புரைக்காக  ஈழத் தமிழரையோ தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையோ பாவிக்கமல் உண்மையாக  உதவும் நோக்கோடு உதவிய ஒரேயொருவர்.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மட்டுமே.அதற்கு பின்னர் அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களுமே  ஈழ விவகாரத்தினை  பேசி தமிழ் நாட்டில்  தமிழர்கள் என்கிற உணர்வலையை  எழுப்பி தங்கள் கட்சி வளர்ச்சிக்காவே அனைவரும் பாவித்திருக்கிறார்கள்.அதே வரிசையில் புதிதக இணைந்திருப்பவர்தான்  சீமான்.


அதே நேரம் தனியாக ஈழத் தமிழர் பிரச்சனையை மட்டுமே கதைப்பதானால்  தமிழ்நாட்டில் உணர்வலைகளை எழுப்பி அதன் மூலம் முதலமைச்சராகி விடலாம் என்பது நடக்காத காரியம்.அங்கு ஒவ்வொரு தேர்தலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனையும் பண பலமுமே  ஆட்சியை  தீர்மானிக்கின்றது.கடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் மின்சாரப் பிரச்சனையும் .விலைவாசி .பண பலம் என்பதோடு  முள்ளி வாய்காலில் கொல்லப் பட்ட தமிழர்களின் புகைப் படங்களும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இனி அடுத்த தேர்தலில் முள்ளி வாய்க்கால் படங்கள் பழையதாகிப் போயிருக்கும் ஆனால் அதே மின்சாரம். விலைவாசி . பணபலம் என்பனதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கப் போகின்றது.இவற்றை தவிர்து தனியாக ஈழத் தமிழர் பிரச்சனைமட்டுமே தமிழக முதல்வரை  தீர்மானிக்கின்றது எனப்பார்த்தால் வை.கோ அவர்கள் எப்போதே  முதலமைச்சராகியிருக்கவேண்டும். வை.கோ அவர்கள் தி.மு.க விலிருந்த காலத்தில்   அதன் தலைவர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து சதி செய்து கொலை செய்யப் பார்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு 1992 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டார்.இவர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப் பட்டதை தொடர்ந்து  மனமுடைந்த இவரது விசுவாசிகள் ஜந்துபேர் தீக் குளித்து இறந்து போனார்கள். அவர்களது மரணச் சடங்கில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக உரையாற்றிய வை.கோ  அவர்கள் தமிழகத்தில்  தி.மு.க  என்கிற  கட்சியை  இல்லாமல் செய்து  அடுத்த ஆட்சியை பிடிப்பது உறுதி இது இறந்து போனவர்களின் சாம்பல் மீது சத்தியம் என்று உணர்ச்சிகரமாக உரையாற்றியிருந்தார்.இவர் தி. மு.க.விலிருந்து வெளியேற்றிய  பின்னர் இவரேடேயே பல தி.மு.க முக்கிய உறுப்பினர்களும் கணிசமான தொண்டர்களும் பிரிந்து போய் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார்.புலிகளைப் பற்றியும் ஈழத் தமிழர்களைப் பற்றியும் நிறையவே பேசினார் என்தோடு மட்டுமல்லாமல் வன்னியில் பிரபாகரனைப்போய் சந்தித்து  அவரிற்கு பக்கத்தில் நின்று புலிகளின் சீருடையோடு படமும் எடுத்திருந்தார்.ஆனாலும் கட்சி தொடங்கி இருபதாண்டுகளிற்கு மேலாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை யென்பது மட்டுமல்ல எந்த. தி. மு.க வை தமிழகத்தில் இல்லதொழிப்பேன் என சபதமெடுத்தாரோ அதே தி.முக வோடு கூட்டணி வைக்கிறார் என்கிற செய்தியை படித்தபோது அவரிற்காக தீக்ககுளித்து  இறந்து போனவர்களின் முகங்கள்தான்  முன்னால் வந்து போனது.

vai.jpg
அடுத்ததாக  பொடா சட்டத்தில் கைது செய்து ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்த ஜெயா அம்மையாரோடு கூட்டுவைத்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று தட்டிக் கழித்து விட்டு பார்த்தாலும்  இப்படி மாறி மாறி கூட்டு வைத்தும் உணர்ச்சிகரமாக  நாடி நரம்புகள் புடைக்க நான்கைந்து மணித்தியாலங்கள்  தொடர்ச்சியாக நா  வரண்டு போகுமளவிற்கு  பேசக்கூடிய வை.கோ அவர்களாலேயே  முதலமைச்சராக மட்டுமல்ல  காத்திரமான ஒரு அமைச்சு பதவியையே  பெற்றுக் கொள்ள முடியாது போனது மட்டுமல்லாமல் அடுத்து வரும் தேர்தல்களிற்கு பேரம் பேசும் சக்தியையும் இழந்து கொடுப்பதை வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்.

அடுத்ததாக ஈழத் தமிழர்களைப் பற்றி அதிகம் கதைத்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்  ராமதாஸ் அவர்கள்.90 ம் ஆண்டு கட்சியைத் தொடக்கியவர் ராஜுவ்காந்தி கொலை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவிலேயே ஈழத் தமிழர் அல்லது  விடுதலைப் புலிகள் என்கிற பெயரையே உச்சரிக்கப் பயப்பட்ட வேளையில் ராஜுவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் என குற்றம் சாட்டப் பட்டு துாக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் பெற்ற 26 பேரிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.அத்தோடு நின்று விடாமல் அவர்களிற்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யவும் முயற்சிகள் நடந்து அதற்கு ஆதரவாக ஒரு குழு அமைக்கப் பட்டு அதற்கு தலைவராக ஜக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரான ஜேர்ச் பெர்ணான்டஸ் பொறுப்பாக நியமிக்கப் பட்டு மேன் முறையீடும் செய்யப் பட்டது.அதன் காரணமாக தண்டனை பெற்ற 19 பேர் விடுவிக்கப் பட்டனர். இங்கு தன் கட்சியை வளர்ந்துக் கொள்ள ராமதாஸ் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருந்தாலும் 19 பேர் நன்மையடைந்திருக்கிறார்கள். ஆனால் அவரும் பின்னர் தனது கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவைகளில் அங்கம் வகித்த்பொழுது ஈழம். விடுதலைப் புலிகள் என்கிற பெயர்களை அடக்கியே வாசித்தார் என்பது மட்டுமல்லாமல் ஜார்ச் பெர்ணான்டஸ் பின்னர்  இந்தியாவின் பாது காப்பு  அமைச்சராக இருந்த காலத்தில்  ஈழத்தமிழரைப் பற்றி வாயே திறக்கவில்லையென்பது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியோடு இலங்கைக் கடற்படையினர் தாக்கியழித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.


parties.jpg
அதற்கடுத்ததாக ஈழத் தமிழர்கள் பிரச்சனை தீரும்வரை பிறந்தநாளே கொண்டாட மாட்டேன் என்றும்   அறிவித்து அப்படியே  செய்தும்  தன்னை  பிரபாகரன் விசுவாசியக காட்டி தனது மகனிற்கு பிரபாகரன் என்று பெயரும் வைத்த விஜயகாந்த்  சட்ட மன்றத்திற்குள் நுளைந்ததுமே ஈழத் தமிழர்  என்கிற வார்த்தையை எப்போதவதுதான் உச்சரிக்கிறார் என்பது மட்டுமல்ல  மீண்டும் கேக் வெட்டி பிறந்தநாளும் கொண்டாடத் தொடங்கி விட்டார். அடுத்தாக தி. மு. க தலைவர் கலைஞர் கருணாநிதி பற்றி நான் எழுதித் தான் இங்கு தெரியவேண்டும் என்பதில்லை பதவி போனதும் டெசோவை  தூக்குவதும் பதவிக்கு வந்ததும் அதனை சுருட்டி வைப்பதும் அவரிற்கு வழைமையனதொன்றாகி விட்டது. அதோடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பார்த்து வியந்தே  தனது கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயரிட்டேன் என்ற திருமாவளவன்.புதிய தமிழகம் கட்சி கிருஸ்ணசாமி.திராவிடர் கழகம்வீரமணி .லட்சிய  திராவிட முன்னேற்றக் கழகம் ரி. ராஜேந்தர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.இப்படி  தமிழகத்து அரசியல் வாதிகளின் ஈழத் தமிழர் அக்கறை என்பது  அவர்களையும் அவர்களது கட்சியை வளர்த்துக்கொள்ளவுமே பயன்படுத்தப்படுகின்றதென்பதை  பார்த்துப் பார்த்து அலுத்துப்போயிருந்த நேரத்தில்தான் புதிதாக புலிக்கொடியோடு புறப்பட்டிருக்கிறார் சீமான்.
புலம் பெயர் ஈழத் தமிழர்கள் நினைப்பது போல் சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் .ஈழம் கிடைத்துவிடும் என்றால்( ஒரு பேச்சிற்குத்தான்)  அதற்கு சீமான் முதலில் முதலமைச்சராக வேண்டும். கணிசமான  தொண்டர்களோடும் அரசியலில் நீண்டகால அனுபவத்தோடும் தேர்தலில் குதித்த வைகோ அவர்களாலேயே கட்சி தொடங்கி இருபதாண்டுகளாகியும் முதலமைச்சராக வரமுடியாதிருக்கும்போது  இது வரை தமிழ் நாட்டில் உள்ள 12524 ஊராட்சி மன்றங்களில்  ஒன்றில் கூட ஊராட்சி  மன்றத் தலைவராக  மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான் முதலமைச்சராக வருவதற்கு ஒரு நாற்பதாண்டுகளாவது தேவைப் படும்.சீமானிற்கு  எத்தனை வயது என்பதில் ஒரு குழப்பம் அண்ணளவாக ஒரு நாற்பது என்று வைத்துக்கொண்டாலும்  அவர் தனியாக போட்டியிட்டு முதலமைச்சராக வரமுடியாது  மாறி மாறி கூட்டணி வைத்து கட்சியை வளர்த்து  முதலமைச்சராக வரும்போது அவரிற்கு வயது எண்பது.அப்பொழுது  அவர் ஈழத்தமிழரைப் பற்றி கவலைப் படுவாரா  அல்லது தனது பிள்ளைகள் பேரப் பிள்ளைகளிற்கான சொத்துக்களைப் பற்றி கவலைப்படுவாரா என்பது கேள்விக்குறியே. அதே நேரம் இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து ஈழத் தமிழர்கள்  தமிழர்களாக இருப்பார்களா??அல்லது ஈழத்தில் தமிழர்களே இருப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை.


எல்லாம் சரி சீமான் முதலமைச்சராகி விட்டாலும் ஈழம் ஒன்றும் பெற்றுத்தர முடியாது சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்.ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்றாத தீர்மானங்களா?? தனித் தமிழீழம் பிரிந்து போவதற்கு  ஜ.நா சபை மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடாத்தபட வேண்டும்.மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் .என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு இந்தியப் பிரதமரிற்கு கடிதங்களும் அனுப்பியுள்ளார். சீமான் முதலமைச்சரானாலும்  இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஆயிரக் கணக்கான  தீர்மானங்களோடு சேர்த்து இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கு கடிதம் அனுப்பலாம். அவ்வளவுதான். அப்போ சீமான் ஈழப் பிரச்சனையை தீர்ப்பதென்றால் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்களா?..அதற்கு  அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டும் .தமிழகத்தின் முதலமைச்சராகவே இன்னும் நாற்பதாண்டுகள் என்றால் இந்தியாவின் பிரதமராவதற்கு  இன்னுமொரு நாற்பதாண்டுகள் தேவைப்படும்.அப்போ சீமானிற்கு நூற்றியிருபது  வயது.....என்ன இப்பவே கண்ணைக கட்டுதா?..எனக்கும் அப்படித்தான்.இறுதியாக  இங்கு நடந்த ஒரு சம்பவத்தையும் தெரிவிக்கிறேன்.வன்னி இறுதி யுத்தத்தின்போது மே மாதம் எட்டாம் ஒன்பதாம்  திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர்  முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான  வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது  அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.


ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது  பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி  விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள்  பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான்  அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே ஆனால் அன்றுஅவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திய பலரில் நானும் ஒருவன்.தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம்  தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.


அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.ஆகவே இந்தியா என்பது பேச்சுரிமையை மதிக்கும் மாபெரும் ஜனநாயக நாடு என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் செலில் எதுவுமே செய்யமுடியாது.இதுதான் நிலமை.


simaan.jpg
எனவே  புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை  கற்பனை செய்து கொண்டு சீமானை நம்பி அவரிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்துவிட்டு அவர் ஒரு மாயமான் என்று தெரியவந்த பின்னர் அவரை திட்டித் தீர்துக்கொண்டிருக்காமல்  தாயகத்து தமிழர்களிற்கு என்ன  தேவை என்பதை சரியாக ஆராய்ந்து அவர்களிற்கு சரியானதொரு தீர்வை பெற்றுத்தரும்  சரியான ஒருவரை தாயகத்தில் இருந்தே தேர்வு செய்யவேண்டும். ஏனெனில் தமிழகத்து அரசியல் வாதிகள் அனைவரிற்குமே  ஈழத் தமிழர்கள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான்  தொடர்ந்தும் நாங்கள் அவர்களிற்கு ஊறுகாயாகத்தான் இருக்கப் போகின்றோம் என அடம்பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் போது இலங்கையில் மாகாணசபைத்தேர்தல் நடந்து முடிந்து  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியிருந்தது.எனவே  இனியும்  தனித் தமிழீழமே தீர்வு. பிரபாகரன் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற தமிழ்நாட்டு தலைவர்களின் வெற்று ஆவேசப் பேச்சுக்கள் குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

  நன்றி வணக்கம்.

நடுவிலை நாலு நாளைக்காணோம்

12:03 AM, Posted by sathiri, One Comment

நடுவிலை நாலு நாளைக்காணோம்

செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக  சாத்திரி.. :( :( :( :(

17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில்  வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர்  தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்திய சாலைக்கு போகலாமா என்று நினைத்தாலும் தலைச்சுத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதா என்று நினைத்துவிட்டு  பேசாமல் படுத்து விட்டேன் சாமம்மதாண்டி  இரண்டு மணியளவில் என்னை நித்திரையால் எழுப்பி என்னாலை முடியலை ஆஸ்பத்திரிக்கு பேவம் என்றதும் அவசரமாக  காரில் ஏற்றிக்கொண்டு  நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்னால் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் அவசர பிரிவில் சேர்க்கிறேன்.அதிகாலை என்பதால் பத்து நிமிடத்திலேயே வைத்தியசாலைக்கு போய்விட்டிருந்தேன்.
அவசரப் பிரிவில் வழைமைபோல குளுக்கோஸ் ஏத்திவிட்டு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து இரத்த பரிசோதனையோடு வந்த  வைத்தியர் இரத்தத்தில் உப்பு (சோடியம்)அளவு பத்தவில்லை  அதுதான் தலைசுற்றுகிறது  என்றுவிட்டு  தாதியிடம் உப்பை குளுக்கோசில் கலந்து ஏற்றச்சொல்லிவிட்டு போய் விட்டார். அட சாதாரண உப்புப் பிரச்சனை என நினைத்து படி போனில் கேம் விழையாடிக்கொண்டிருந்தேன்  மனிசி திடீரென படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயற்சி செய்ய எழும்பிப் போய் அவரை படுக்கும்படி சொல்லி படுக்கையோடு  சரிக்க அவருக்கு திடீரென வலிப்பு வந்த மாதிரி கை கால்களை இழுக்க தாதிகள் வைத்தியர்எல்லாருமே ஓடிவவந்து  அமத்திப் பிடித்தார்கள் ஒரு சில வினாடிகளில்   மயக்க நிலைக்குப் போய் விட்டார்.


இப்பதான் மனதிலை லேசாய் ஒரு கலக்கம் வரத் தொடங்கியிருந்தது. வைத்தியரிடம் பிரச்சனை ஒண்டும் இல்லையா ??எண்டதும் இல்லை  உடல் உப்புபை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்ததால்தான் அப்படி வலிப்பு வந்தது சில மணித்தியாலங்கள் நன்றாக  நித்திரை கொள்வார்  அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்றார்.ஆனாலும் மனசிற்குள் ஏதோ ஒரு பயம் புதிதாய் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. இப்பொழுது காலை பத்துமணியாகியிருந்தது அதற்கிடையில் இரண்டு தடைவை மீண்டும் இரத்தப் பரிசோதனையும் ஒரு I.R.M  மற்றும் Radiogramபரிசேதனையும் எடுத்து முடித்திருந்தார்கள்.எனக்கும் கடையை திறக்க வேண்டும் முதலேயே முதலாளிக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு கடையை திறந்து வேலையாட்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வைத்திய சாலைக்கு போயிருந்தேன்.

மனைவியோ  மாலை  மூன்று மணியளவில் கண்விழித்து  என்னையும் சுற்றி வர பார்த்தார்  அவரின் கையைப் பிடித்து  என்ன செய்யிது?? என்று கேட்டேன்  அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை  என்பது மட்டுமல்ல  எதுவுமே நினைவில் இல்லை  பொருத்தியிருந்த வயர்களை  பிடுக்கி விட்டு எழுந்து போக முயற்சித்தார் உடனே நானும் தாதிகளும் ஓடிவந்து அமத்திப் பிடிக்க மருத்துவர்  அவரிற்கு மயக்க ஊசி பேடச் சொல்ல ஒரு தாதி அவசரமாக மயக்க மருந்தை  செலுத்தினாள். எனக்கோ இன்னமும் குழப்பமாகப் போய் விட்டது  வைத்தியரைப் பார்த்தேன் அவரோ  ஒன்றுமில்லை  மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு  விடுபட்டுப் போய் விட்டது அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும்  அதற்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை எனவே அந்த வசதிகள் உள்ள இன்னொரு வைத்திய சாலைக்கு  அனுப்பப் போகிறோம் என்றார். என்னடா இவன்  ஏதோ கரண்டு கட்டாயிட்டுது  திரும்ப வரும் என்கிற மாதிரி  சொல்லுறானே  என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து  கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை.

 மனைவியை அம்புலன்சில் இன்னொரு பெரிய அரச வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருந்தார்கள்.நானும் கடைக்குப் போய் விடயத்தை சொல்லி விட்டு அடுத்த வைத்தியசாலையை தேடிப் போய் கண்டு பிடித்து விட்டிருந்தேன்.. வைத்திய சாலைக்கு எதிரேயே இரண்டு சவப் பெட்டிக் கடைகள் இருந்தது .  சே..இவங்கள் என்ன அப சகுனம் மாதிரி ஆஸ்பத்திரி வாசல்லையே கடையை வைச்சிருக்கிறாங்கள் எண்டு யோசிச் சாலும்  வியாபாரம் எங்கு நடக்குமோ அங்கை தானே கடையை போடுவாங்கள் என்றபடி பல ஏக்கர் கணக்கில் பரந்து  கிடந்த வைத்தியசாலையில் புகுந்து Re animation (மீள ஒழுங்கு படுத்துதல்)பகுதியை அடைந்து அங்கு இருந்த அழைப்பு மணியை  அழைத்து மனைவியின் பெயரையும் விடயத்தையும் சொல்கிறேன் அங்கேயே இருந்கள் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று பதில் வந்திருந்தது.நேரத்தைப் பார்த்தேன்  மாலை ஏழு மணி அது விசேட பிரிவு என்பதால் அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது  அதனால் அங்கு இருந்த கதிரையில் நான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தேன். அப்படி நடந்தால் சே..நடக்காது  அடுத்தது என்ன செய்யலாம்?? என்னத்தை செய்ய  என்று  மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி  இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி  விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது  தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது  நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை  மறந்திருப்பாங்களோ?? அல்லது என்னை  காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோ??என்று யோசித்தக் கொண்டிருக்கும்போதே ஒருவன் வந்து தன்னை அறிமுகம் செய்து நான்தான் உனது மனைவியை கவனிக்கிறேன் உள்ளே வா என்று அழைத்துப் போனான்.

ஒரு அறையில் மனிசியின் தலையில் கவசம் போல் போட்டு உடல் முழுக்க ஏகப்பட்ட வயர்கள் கொழுவிய நிலையில்  அவதார் படத்தில் விண்வெளிக்கு போகும் ஒருத்தனை தயார் செய்வது போல வைத்திருந்தார்கள்.கணணித் திரையில் கோடுகள். புள்ளிகள்.இலக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்தது. என்னை அழைத்துப் போனவர் என்னைப் பார்த்து  நாங்களும் பரிசோதனைகள் செய்து விட்டோம்  பயங்கரமான பிரச்சனைகள் ஒன்றும் இல்லை  ஒரு போத்தலிற்குள் கல்லைப் போட்டு குலுக்கியது போல மூளை குளப்பமடைந்திருக்கின்றது அதனை மீள ஒழுங்கமைக்கிறோம்  அது ஒழுங்காக வருவதற்கு  சில மணித்தியாலங்கள் ஆகலாம். அல்லது சில நாட்களும் ஆகலாம் அதை உறுதியாக சொல்ல முடியாது  ஆனால் வரும் என்றார். வராமலேயே போய்விடுமா??என்று கேட்க நினைத்தாலும்..  சரி இதற்கு காரணம் என்ன என்று கேட்டேன். அதுதான் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருப்போம். நீ இப்போ வீட்டிற்கு போகலாம் நாளை மாலை வா அதே நேரம் கடந்த காலங்களில் என்னென்ன  மருத்துவம் பெற்றார்  என்கிற விபரங்கள் அவர் பாவிக்கும் மருந்துகள்  அனைத்தையும் எடுக்கொண்டு  நாளை வரவும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். அழகான தாதி ஒருவர் வந்து  விசிட்டிங் காட் ஒன்றை நீட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும் அப்படியே அவளை உற்றுப் பார்க்க மனதிற்குள் கவுண்டமணி வந்து  நாயே..நாயே..இந்த நேரத்திலையுமா..என்று திட்ட அவள் உங்கள் மனைவியின் உடல் நிலையை  போனிலேயே தெரிந்து கொள்ளலாம் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விட்டாள்.

மறுநாள் காலை வைத்தியர் கேட்ட விபரங்கள்  மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஸ் படிக்கும் ஓட ஓட தூரம் குறையலை.. என்கிற பாடலை முணு முணுத்தபடி ஸ்கூட்டரில் வைத்திய சாலைக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியின் உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அதே நேரம் காரணமும் கண்டு பிடிக்கபட்டிருக்கவில்லை. நான் வேலைக்கும் வைத்திய சாலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தேன். அன்று நான்காவது நாள் சனிக்கிழைமை மதியமளவில் வைத்தியசாலைக்கு போயிருந்தேன்  மனைவியின் செயற்கை சுவாசக்குளாய்கள் அகற்றப் பட்டு சாதாரணமாக சுவாசிக்க விட்டிருந்தார்கள்.அதே நேரம் நான் கொடுத்த மருந்துகள் எல்லாம் வைத்தியர் பார்த்து அதனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணங்கள் இல்லையென்றதோடு மனைவி இப்பொழுது கோமா நிலையில் இருந்து மீண்டு ஆழ்ந்த உறக்க நிலைக்கு வந்துள்ளார்  இனி அவராகபழைய நிலைக்கு  திரும்பவேண்டும்.இப்பொழுது நீங்கள் கதைப்பதெல்லாம் அவரிற்கு புரியும் எனவே அவராக கண்விழித்து பதில் சொல்லும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள் இன்றும் அவர் சுய நிலைக்கு திரும்பாவிட்டால்  உடலில் செயலிழந்து போன  செல்களையெல்லாம் செயற்பட வைக்கும் Cortisone என்கிற மருந்தை நாளை செலுத்துவோம் என்று விட்டு போய் விட்டார்.


நானும் மனைவின்கு பக்கத்தில் அமர்ந்திருந்து  பழைய சம்பவங்கள் நகைச்சுவையான கதைககள் மகளைப்பற்றி என்று சொல்லிக் கொண்டேயிருந்தோடு அவரது தாயார் சகோதரிகளிற்கும் அவ்வப்போது போனடித்து அவரது காதில் வைத்துக்கொண்டேயிருந்தேன்  .நேரம் ஒன்று இரண்டு என்று ஜந்தரை மணித்தியாலங்கள் ஓடிவிட்டிருந்தது  இடையில் வைத்தியரும்  ஒரு தடைவை வந்து சத்தமாக  கூப்பிட்டு கன்னத்தில் தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டிருந்தார் எந்த அசைவும் இல்லை அதே நேரம் தான் மனிசி ஆசையாய் வளர்க்கும் பூனை மீனுவை நான் ஒரு தடைவை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தது நினைவிற்கு வரவே போனை எடுத்து அந்த வீடியோவை போட்டு இங்கை பார் மீனு வந்திருக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணுமாம் என்று அது கத்தும் சத்தத்தினை அவரது காதருகே பிடித்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியிருந்தது.ங்கொய்யாலை ...ஒருத்தன் சாப்பாடு தண்ணியில்லாமல் தொண்டை வறண்டு 5 மணித்தியாலாமா கதைக்கிறன் என்னைப் பற்றி கவலையில்லை பூனைக்கு சாப்பாடு இல்லையெண்டதும் அழுகை வருதா ??எழும்பு உனக்கு ஆறுலாய் இருக்கு என்று நினைச்சாலும்.ஒரு  அசைவாவது தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து கதைத்துக்கொண்டேயிருந்தேன்  ஒரு அரை மணித்தியாலம் கழித்து லேசாய் கண்விழித்தார் கடவுளே  இந்தமுறை என்னை அவருக்கு அடையளம் தெரியவேணும் என மனது வேண்டிக் கொண்டது.
என்னை பார்த்தவர்

 ''என்னங்க ஆச்சு??

ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயங்கி விட்டார். திரும்ப ஒரு பத்து நிமிடம் கழித்து கண்விழித்து அதே

என்னங்க ஆச்சு??

நானும்.ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயக்கம் .இப்படியாக  ஒரு பத்துத் தடைவை போய்க்கொண்டேயிருந்தது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டிருந்தது.இரண்டு கிழைமைக்கு முதல்தான்  நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்த்திருந்தேன் அதுக்கு தண்டனைதான் இரு என்று நினைத்தபடி வீட்டிற்கு போய் விட்டிருந்தேன். வீட்டிற்கு முன்னால் தனது நாயை மேய்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஜோன் என்னைப் பார்த்ததும் மனைவியின் உடல் நலத்தை விசாரித்தார் இவரிற்கு வயது 81 ஒரு ஓய்வு பெற்ற பொது வைத்தியர். இன்று கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது சரிவராவிட்டால்  நாளை Cortisone கொடுக்கப் போவதாக சொல்லியுள்ளார்கள் என்றதும்.முடிந்தளவு Cortisone குடுப்பதை தவிர் அதைக் கொடுத்தால் பின்னர் பக்க விளைவுகள் வரும் என்றபடி நாயை மேய்த்துக்கொண்டு போய்விட்டார்.

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழைமை நான்கு நாளைக்குப் பின்னர் மனைவியின் நிலைமை வழைமைக்குத் திரும்பியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  நடந்தது அனைத்தும் அவரிற்கு நினைவு வரத் தொடங்கியிருந்தது.தொலைபேசியில் ஊரிற்கு அவரது குடும்பத்தோடு நன்றாக கதைத்தார்.அவரை விசேட பிரிவில் இருந்த சாதாரண அறைக்கு மாத்தியவர்கள்  அவரது உடல் நிலை கொஞ்சம் தேறியதும் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்.பதினோராவது நாள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டிருந்தேன். ஆனால் அவர் கோமா நிலைமைக்கு போனதற்கான காரணம் இன்னமும் தெரிந்திருக்கவில்லை.அன்று மாலை மனைவியை பாரக்க ஜோன் வந்திருந்தார் அவரும் நானும் நேரம் கிடைக்கும் நேரங்களில் விஸ்கி அடித்தபடியே உலக விடயங்கள் அரசியல் என்று கிண்டிக் கிழறுவது வழைமை அன்றும் அவர் மனைவியை நலம் விசாரித்ததும் இருவருமாக வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து வழைமைபோல நான் இரண்டு கிளாசை  எடுத்து விஸ்கியை  பாதி நிரப்பி  ஜஸ் கட்டிகளை போட்டேன் கையில் கிளாசை எடுத்தவர் இது உனது மனைவியின் உடல் நலத்திற்காக என்றபடி  சியஸ் செய்தார் .அப்பாடா ....அன்று நாம் தண்ணியடிப்பதற்கான காரணம் கிடைத்து விட்டிருந்தது. ஒரு கிளாஸ் முடிந்ததுமே  மனைவின் அனைத்து வைத்திய றிப்போட்டுக்களையும் கொண்டு வா..என்றார்.அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தேன்  ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தவர். இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டு மனைவி பாவிக்கும் குளிசைகளை கொண்டு வா..என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது .இரண்டு வைத்திய சாலையிலை பல வைத்தியர்கள் ஏகப்பட்ட பரிசோதனையள் செய்தே கண்டு பிடிக்க முடியாமல் போனதை பென்சன் எடுத்திட்டு  நாய் மேய்த்துக்கொண்டு திரியிறது மட்டுமில்லாமல் ஓசி  விஸ்கியை  வேறை அடிச்சிட்டு  கண்டு பிடிக்கப் போறானாக்கும் எண்டு நினைச்சாலும். வைத்திய சாலைக்கு கொண்டு போய் காட்டிய மருந்துகள் காரிலேயே இருந்ததால் அதனையும் கொண்டு வந்து அவர் முனால் வைத்தேன்.

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவர் அதில் இருந்த மருந்துகளை எடுத்தபடி படுத்திருந்த மனிசிடம் போய் அவற்றைக் காட்டி இதில் கடைசியாக நீ எடுத்த மருந்துகள் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.. மனிசியும் தயங்கிய படி என்னை பார்த்தபடியே இரண்டு மருந்துகளை காட்டியபடி நடநததை சொன்னார்.கடந்த சில நாட்களாக ஊரில் அவரது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தவர் இரவில் நித்திரை கூட வராமல் தவித்திருக்கிறார்.இது பற்றி என்னிடமும் அதிகம் எதுவும் சொல்லவில்லை  நித்திரை கொள்வதற்காக குடும்ப வைத்தியரிடம் குளிசைகள் வாங்கினால் அது எனக்கு தெரியவரும் என்பதால் அவர் கண்டு பிடித்தததுதான்  அலர்ச்சி குளிசைகள்.அவருக்கு கோடை காலங்களில் மகரந்த அலர்ச்சி உண்டு அதற்கான  குளிசையை போட்டால் கொஞ்சம் நித்திரை வரும் எனவே அலர்ச்சி குளிசைகளை போட்டு விட்டு நித்திரை கொள்ளத் தொடங்கியிருந்தார்.அன்றும் அலர்ச்சி குளிசையை போட எடுத்தபோது நான் வீட்டிற்கு வந்ததால் அவசரத்தில் எடுத்த குளிசையை வேறொரு மருந்து பெட்டியில் போட்டு விட்டிருக்கிறார்.நான் வேலைக்கு போனதும் ஒரு குளிசையை போட்டு விட்டு படுத்திருக்கிறார் நித்திரை வரவில்லை எனவே மீண்டும் ஒரு குளிசையை போட்டிருக்கிறார் ஆனார் அவர் இந்தத் தடைவை போட்ட இரண்டு குளிசைகளும் அலர்ச்சி குளிசைகள் அல்ல இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்.மாறிப்போட்டு விட்டார்.


 எனவே இரத்தம் அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஆரம்பித்திருக்கின்றது. நான் வைத்திய சாலையில் அவரை சேர்த்தபோது எனக்கும் அவர் குளிசைகள் போட்டது தெரியாதததால் அதைப்பற்றி சொல்லவில்லை  இரத்த பரிசோதனையில் அவரது இரத்தத்தில் சோடியம் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தவர்கள் தலைச்சுற்றலுக்கு அதுதான் காரணம் என நினைத்து சோடியத்தை குளுக்கோசில் கலந்து ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக அதிகளவில் ஏற்றி விட்டார் இதனால் மனைவி கோமாவிற்கு போய் விட்டிருந்தார்.இங்கு இரண்டு தவறு நடந்திருக்கின்றது ஒன்று மனைவி குளிசைகளை  மாறிப் போட்டது இரண்டாவது வைத்தியத் தவறு குறைந்த நேரத்தில் அதிகளவு சோடியத்தை செலுத்தியது.என்று சொல்லி விட்டு ஜோன் வெறும் கிளாசை என்னிடம் நீட்டினார். அவரது கிளாசை நிரப்பிவிட்டு வைத்தியத் தவறா?? நான் யார் ??இந்தா வழக்கு போடுறன் ..கோட்டுக்கு இழுக்கிறன்.நட்டஈடு கேக்கிறன் என்று காத்திலை வீடு கட்டத் தொடங்கவே ..சே பொத்திக் கொண்டு இரு என்னை  அமத்தியவர். இங்கு ஒரு வைத்தியரின்  தவறை இன்னொரு வைத்தியர்  கண்டு பிடித்தாலும் அதனை நோயாளியிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லமாட்டார்கள்  தவறை சரிசெய்து விடுவார்கள் இது பொதுவான நடைமுறை விதி.வைத்திய தவறு என்று உனக்கு தெரிந்தாலும் அதனை உன்னால் நிருபிக்க முடியாது நீ வழக்கு போட்டாலும் உனது மனைவியிடமும் தவறு உள்ளது  எனவே  எது எப்படியோ உனது மனைவி குணமடைந்து விட்டார் அந்தளவில் சந்தோசப்படு என்றவர் விடைபெற்றுக்கொண்டார். இப்போ மனிசி எதுக்காக கோமாவுக்கு போனார் எண்டு கண்டு பிடித்தாச்சு.ஆனால் இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனது??அதை கண்டு பிடிக்கும்வரை தொடர்ந்து தண்ணியடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை....

3345-1-chivas-regal-whisky.jpg

உதவி.(கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி)

2:19 PM, Posted by sathiri, No Comment

உதவி.
சிறுகதை.
கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி

133770892416_zps3a9a260e.jpg

யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த  டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர்  தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு  அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு  என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன் முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண்டு எடை போட்டு விடுவாளா?என்கிற கவலை அவரது மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது. விடுதியின் அறையை விட்டு வெளியேற முதலும் ஒருதடைவை தன்னை கண்ணாடியில் பார்ததுக் கொண்டவர் குமுதினிக்காகவும் அவரது மகளிற்காகவும் வாங்கிய உடைகளின் பையை எடுத்ததோடு குமுதினிக்காக கொடுக்க எடுத்து வைத்திருந்த பணத்தை ஒரு என்பலப்பில் போட்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே வீதிக்கு வந்து ஆட்டோக் காரன் ஒருவரை அழைத்து  குமுதினியின் விலாசத்தை நீட்டினார். ஆளைப் பார்த்ததுமே ஆட்டோக் காரன்  ஜயா எந்த நாடு  என்றான் .அவன் ஜயா என்றது எரிசச்லாக இருந்தாலும்  வெளிநாடு எண்டு எப்படி கண்டு பிடித்தான் என்று யோகநாதன் ஆச்சரியத்தோடு பிரான்ஸ் என்றார்.ஓ அப்பிடியா நல்லது நானும் சுவிசிலை இருந்தனான் விசா இல்லாததாலை  நாட்டிலை பிரச்சனையும்  முடிஞ்சிட்டுதெண்டு பிடிச்சு  டிப்போட் பண்ணிட்டாங்கள் என்றபடி ஆட்டோவை இயக்கினான். யோகநாதனோ ஆட்டோக் காரனின் கதையை காதில் வாங்காமல் குமுதினியோடு எப்படியெல்லாம் கதைக்கவேண்டும் என்னவெல்லாம் சொல்லாம் எது சொல்லக் கூடாது என்று மனதிற்குள் ஒரு ஒத்திகையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ்வப்பொழுது  ஸ் பீட்  பிறேக்கர் வந்து ஆட்டோ அதில் ஏறி விழும்போதெல்லாம் பிரான்சிலிருக்கும்  அவர் மனைவி கனகமணி நினைவிற்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்.

                                                                     00000000000000000000000000

87 ல் பிரான்சிற்கு போயிருந்த  சங்கானையை சேர்ந்த யோகநாதனின் மனைவி  கனகமணி  பருத்தித்  துறையை  சேர்ந்தவர் .ஒப்பிறேசன் லிபறேசனை  சாட்டாக வைத்து தான் குடும்பமாய் பருத்தித் துறை யிலைதான் இருந்தாகவும் ஆமிக்காரன் வீட்டை உடைச்சு தரைமட்டமாக்கிட்டான்  தன்னையும் பிடிச்சு  பூசாவிற்கு ஏத்துறதிற்காக  கொண்டு போன நேரம் தப்பி வந்திட்டன் மனிசி பிள்ளையை காணேல்லை என்று சொல்லி அசைலம் அடிச்சு விசா எடுத்ததோடை காணாமல் போயிருந்த அவரது மனைவி கனகமணியையும் மகனையும் கண்டுபிடித்து பிரான்சிற்கும் கூப்பிட்டிருந்தார்.இத்தனைக்கும் யோகநாதன் கலியாணம் முடிந்த கையேடையே  கொழும்பிற்கு வந்து சேர்ந்தவர்  கோயில் திருவிளாவிற்குத்தான் சங்கானைக்கோ பருத்தித் துறைக்கோ  போயிருக்கிறார் என்கிற விடயம் பிரான்ஸ்  அகதி விண்ணப்பங்களை  பரிசீலிக்கிற  ஒவ்றாகாரனிற்கு(O.F.P.R.A) தெரியாமல் போனது யோகநாதனது அதிஸ்ரமே.கனகமணியும் வந்துசேர பிறகு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இப்பொழுது யோகநாதனிற்கு வெளிநாடுகளில் வாழும் சராசரித்தமிழ்க்குடும்பங்களைப்போல ஆசைக்கு ஒண்டு ஆஸ்த்திக்கு ஒண்டு அலெக்கேசனுக்கு(உதவித்தொகை)ஒண்டு என்று  மூன்று பிள்ளைகள்.

அடுத்தது என்ன சொந்தவீடு வாங்கவேண்டும்  ஆனால் சொந்த வீடு வாங்க யேகநாதனின் தனிச்சம்பளம் காணாது அதாலை கனகமணியும் வேலைக்கு போகவேண்டிதாய் பேச்சுது.இரண்டு பேரின் சம்பள பணத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்த கடன்தருகிற வங்கிக் காரன்  காணாது என்று வாயைப்பிதுக்க.என்ன செய்யலாமென தலையை சொறிந்து கொண்டு நின்ற யோகநாதனிற்கு  ஒருதன் சொன்னான்  பாரிஸ் லா சப்பலிலை புத்தகக் கடை கவைச்சிருக்கிற சந்திரனை போய் பார் எல்லாம் வெண்டு தருவான் என்றான். அமெரிக்கா கஸ்ரப்பட்டு  ஆம்ஸ்ரோங்கை அனுப்பி  பார்த்த சந்திரனை விட புத்தகக்கடை சந்திரனை சந்திப்பது சிரமமாகவே இருந்தது  எப்போ போனாலும் முதலாளி இல்லை என்கிற வேலைக்காரனின்  பதில் ஆனாலும் யோகநாதனின் விடா முயற்சியால் முன் தலையில் முழுச் சந்திரனை  தாங்கிய புத்தகக் கடைச சந்திரனை சந்தித்தார்.
கடன் வாங்கித் தரலாம் எனக்கு பத்து வீதம்  உனக்கு மிச்சம்  என்கிற  டீலோடு  இல்லாத கொம்பனியின் பேரில் கள்ள சம்பள கணக்கு போட்டு வட்டிவீதம் கூடின கடனும் வாங்கி வீடும் வாங்கியாகிவிட்டது.ஆளிக்கொரு அறையென பிள்ளைகளிற்கு மகிழ்ச்சி ஆனால் அறா வட்டி வங்கிக் கடனை நினைத்தே  யோகநாதனும் கனகமணியினதும்  படுக்கையறையில் நித்திரை காணாமல் போய் விட்டிருந்தது.அதே நேரம் அவர்களிற்கு பொருளாதாரமே குறியாக  இருந்ததால் ஊரில் நடக்கும் சண்டையைப் பற்றி எவ்வித கவலையும் இல்லை. ஆயுதம். போராட்டம்.விடுதலை .தமிழீழம் என்கிற சொற்கள் எல்லாம் அன்னியமானவையாகவே இருந்தது இப்படியாகப் போய்கொண்டிருந்த ஒரு  நாளில் யோகநாதனோடு வேலை செய்யும்  ஆனந்தன் ஆனந்தமாய் ஆடியபடியே வேலைக்கு வந்திருந்தான்.

என்னடா விசயம் என்று கேட்தற்கு  அண்ணை இயக்கம் ஆனையிறவை  பிடிச்சிட்டாங்களாம் அப்பிடியே போய் இப்ப சாவச்சேரியிலை சண்டை நடக்குதாம் அடுத்தது யாழ்ப்பாணம்தான் . அதையும் பிடிச்சால் எல்லாரும் ஊருக்கு போலாம் எனறதும்தான் யோகநாதனுக்கு முளையில் பொறி தட்டியது இயக்கம் யாழ்ப்பாணத்தை திரும்ப பிடிச்சால்  பருத்துறையிலை இருந்த அவரின்ரை  சீதண வீடு வளவும்  சங்கானையிலை வாங்கி விட்ட பனங்காணியின்ரை நிலைமையும் என்னவாகும் எண்டு யோசித்துப் பார்த்தவர் அதுகளை  முதலில்  வித்துத் தொலைக்கவேண்டும்  என  நினைத்தவர் அதே நேரம் ஊர் செய்திகளையும் தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கியிருந்தார்.

அவர் பிரான்சிற்கு வந்ததிலை இருந்து இயக்கத்திற்கு ஒரு யுரோ கூட குடுத்தது கிடையாது   இவங்கள் யாழ்ப்பாணத்தை பிடிச்சா ஊருக்கு போகேக்குள்ளை  ஏதும் பிரச்சனை தருவாங்களோ எண்டு யோசித்தவர் ஆனந்தனிடம் தயங்கிய படியே தம்பி..உண்மையாவே யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்களோ என்றார். என்னண்ணை விசர் கதை கதைக்கிறியள்  ஆனையிறவே விழுந்திட்டுது யாழ்ப்பாணம் சின்னப் பிரச்சனை என்ரை மருமகன் காரன் ஒருத்தன் இயக்கத்திலை பெரிய ஆளா இருக்கிறான் அவனோடை கதைச்சனான் பிடிச்சிடுவம் எண்டு சொன்னவன் என்று இயக்கத்திற்கு போய் எங்கே இருக்கிறான் என்றே தெரியாத மருமகனோடு கதைத்தாய் கதைவிட்டான் ஆனந்தன்.இப்போதைக்கு யேகநாதனிற்கு  ஆனந்தன்தான் அன்ரன் பாலசிங்கம் அவனிட்டை ஆலோசனை கேக்கிறதைத் தவிர வேறை வழியில்லை.

தம்பி நான் இங்கை வந்திலையிருந்து இவங்களுக்கு  காசு குடுத்ததேயில்லை ஊருக்கு போகேக்கை  ஏதும் பிரச்சனை தருவாங்களோ என்றர். என்னது ஒரு சதம்கூட குடுத்ததேயில்லையா  நீங்கள் எல்லாம் தேசத்துரோகியள் உங்களையெல்லாம் போட்டுத் தள்ளவேணும் என்றவனிடம்.  சரி ஏதோ தெரியாத்தனமாய்  பிழை விட்டிட்டன் ஏதாவது பரிகாரம் இருக்கா என்று கேட்டவரிற்கு. சரி சரி அவங்கடை அலுவலக்துக்கு போய் உங்கடை பங்களிப்பை செய்திட்டு அவங்கள் தாற பற்றுச்சீட்டை பத்திரமாய் வைச்சிருங்கோ  ஊருக்கு போகேக்குள்ளை  அதை கொண்டு போனால் ஒரு பிரச்சனையும் இல்லை ஊருக்கு போகேக்குள்ளை சொல்லுங்கோ என்ரை மருமகனிட்டையும் சொல்லி விடுறன் என்றான். இப்ப யோக நாதனிற்கு கொஞ்சம் நிம்மதி ஆனால் வேலைப்பழு அதே நேரம்  காசு குடுக்க மனமில்லாததாலும் நாட்கள் இழுபட்டுக்கொண்டே போக  நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சு வார்த்தை என்று செய்தியில் படித்தார்.ஆனந்தன் வேறை  ஊருக்கு போய் விட்டிருந்தான் எதுக்கும் அவன் வரட்டும் ஊர் நிலைமையை  கேட்டு காணி என்ன விலை போகுது எண்டு அறிஞ்சு பிறகு  இயக்கத்திக்கு காசு குடுகக்லாமென முடிவெடுத்திருந்தார்.

ஊருக்கு போயிருந்த ஆனந்தனும் திரும்பி வந்து  யேகநாதனிற்கு கதை கதையாய் சொல்லத் தொடங்கியிருந்தான் அண்ணை  ஒரு பிரச்சனையுமில்லை  ஏ 9 பாதையாலை யாழ்ப்பாணம் போங்கோ  கிளி நொச்சியிலை இறங்கி பியரும் அடிச்சிட்டு சேரனிலையோ பாண்டியனிலையோ  சாப்பிட்டு போகலாம் சாப்பாடு அந்த மாதிரி.ஆனா கட்டாயம்  திரும்ப சண்டை திரும்ப தொடங்கும்  அதுதான் கடைசி சண்டை யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவம்  எண்டுதான்  எல்லாரும் சொல்லுறாங்கள்  நீங்கள் காசு குடுத்த றிசீற்றை கொண்டு போங்கோ இல்லாட்டி அங்கை வைச்சு பெரிய தொகையா கேட்பாங்கள். கனடாவிலை இருந்த வந்த ஒருத்தர் கனடாவிலை  ஒருசதமும்குடுக்கேல்லையாம் ஓமந்தையிலையே ஆளை மறிச்சு காசு கேட்டிருக்கிறாங்கள் அவரும் குடுக்கேல்லை பாஸ்போட்டை பிடுங்கிபோட்டாங்களாம்.ஆனா கனடா காரரோ காசு குடுக்கிறேல்லையெண்டு அடம்பிடிச்சு  கண்காணிப்புக் குழுவிட்டைப்போய் முறைப்பாடு செய்து கடைசியிலை கண்காணிப்புக் குழுக்காரர்தான் கிளிநொச்சி நந்தவனம் அலுவலகத்திலை போய் பாஸ்போட்டையும் வாங்கிக் குடுத்து ஓமந்தைவரைக்கும் கொண்டு வந்து விட்டவங்காளாம் என்று புளியை வேறு கரைத்துவிட்டிருந்தான். யோகநாதனிற்கு ஒரு சந்தேகம்  ஏனடா சாப்பாட்டுக் கடையளின்ரை பெயரெல்லாம் சேரன். சோழன் பாண்டியன் என்று பெயர் வைச்சிருக்கிறாங்களே  ஏன் எங்கடை  நாட்டிலை  அரசர்மார் ஒருத்தரும் இருக்கேல்லையோ??சங்கிலியன்  பண்டார வன்னியன் எண்டெல்லாம்  இருந்தவங்கள்தானே என்றதற்கு. அண்ணை இப்பிடி கேணைத்தனமான கேள்வி ஒண்டையும் அங்கைபோய் கேட்டிடாதையுங்கோ  பிறகு  பங்கருக்கை போட்டு பாம்பும் பல்லியும் விட்டிடுவாங்கள் என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்தான்.

 தமிழர் ஒருங்கிணைப்பக் குழு அலுவலகத்திற்குள் நுளைந்து அங்கிருந்த ஒருவரிடம் போய் தயங்கிய படியே தம்பி உங்களிற்கு பங்களிப்பு செய்ய வந்திருக்கிறன் என்றபடி இரண்டாய் மடித்திருந்த 50 யுரோவை விரித்து நீட்டவே  அவரை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தவன் பற்றுசீட்டுப் புத்தகத்தை எடுத்து யோகநாதனது பெயர் விபரம் விலாசம் எல்லாம் கேட்டு எழுதி யவன் அவரிடம் 50 யுரோவை வாங்கிவிட்டு  பற்றுச் சீட்டை நீட்டினான். அதை வாங்கியவர் இலக்கம்  தலைவரின் கையெழுத்து எல்லாம் சரியா இருக்கா என பார்த்து பத்திரப் படுத்திக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார்.ஆனால் அவர் ஊருக்கு நேரமாய்பார்த்து  மாவிலாறில் சண்டை தொடங்கிவிட்டிருந்தது யாழ்ப்பாணம் விழட்டும் பிறகு போலாமென காத்திருந்தவரிற்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டது என்று தெரியவந்ததும்  ப்ச்.....50 யுரோ அனியாயமாய் போயிட்டுதே என்று பொச்சுக்கொட்டியவர்  அந்த றிசீற்றை  எடுத்து கிழித்து எறியலாமென நினைத்துக்கொண்டிருந்தபோதுதான்  தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர்  எங்கள் தலைவர் தென்னாபிரிக்காவில் தங்கியிருக்கிறார் விரைவில் வருவார்  என்று சொன்னதாய்  இங்கத்தைய இணையத் தளம் ஒன்று வெளியிட்ட செய்தியை படித்தவர்  றிசீற்றை எறியாமல் பொலித்தீன் ஒன்றில் போட்டு  பத்திரப் படுத்திக்கொண்டார்.இப்ப உங்களிற்கு யோகநாதனைப்பற்றி ஓரளவு உங்களிற்கு புரிந்திருக்கும் இனி அவரது மனைவி கனகமணியை பற்றி பார்ப்பம்.
                                       00000000000000000000000000000000000000000000
கடனை கட்டுவதற்காக  ஓடியோடி  இரண்டு வேலை  இடையில் கிடைக்கிற நேரத்தில்  மெகா சீரியல்களை  ஒரேயடியாகப் பார்த்துமுடிப்பது  தீவிர கடவுள் பக்தி கொண்டகொஞ்சம் அப்பாவித்தனம் அவ்வளவுதான்.வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குளிர் மாலைப் பொழுதில்  சலையோரத்தில் குவித்திருந்த பனியில் கால் கால் வழுக்கிவிழுந்த கனகமணிக்கு முதுகு வலி.வலிக்கு விக்சை தடவிக்கெண்டு வேலைக்கு போய்க்கொண்டிருந்தவர்  சில மாதம் கழித்து ஒரு நாள் காலை கட்டிலை விட்டு எழும்பமுடியாமல் போகவே அம்புலன்சிற்கு போனடித்து வைத்தியசாலைக்கு போய் ஸ்கான் எடுத்த பார்த்தபோதுதான் அவரது முள்ளந்தண்டு எலும்பு ஒண்டு வெடித்து இரத்தம் கண்டிப்போயிருந்தது. விழுந்த உடனேயே வைத்தியம் பாக்கததால் இப்பொழுது சத்திர சிகிச்சை  செய்து  பழுதடைந்த முள்ளந்தண்டு எலும்பைஎடுத்து அதுக்கு பதிலாக செயற்கை முள்ளந்தண்டை பொருத்தவேண்டும். அதுவும் பொருத்தியாகி விட்டது ஆனால் இப்பொழுது கனகமணிக்கு இரண்டு வேலையில்லை ஒரு வேலைக்குகூட ஒழுங்காய் போக முடியாத நிலை பாரம் தூக்க முடியாது நீண்ட நேரம் கதிரையில் இருக்க முடியாது முடிந்தளவு படுத்தே இருக்கவேண்டும்.இப்பவெல்லாம் அவரிற்கு சீரியல் பார்க்கவும் அக்கம் பக்கம் இருந்த தமிழ் குடும்பங்களோடு  அரட்டை அடிக்கவும்  அதிகளவு நேரம் கிடைத்திருந்தது.அதே நேரம்  தான்  தெரியாமல் செய்த பாவம்தான்தான் ஏதோ தனக்கு இப்படி வருத்தம்  வந்து விட்டது என நினைத்து அதற்கு பரிகாரமாக ஊரில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரிற்கு உதவியும் செய்யத் தொடங்கியிருந்ததோடு இப்போ சண்டையும் முடிந்து நாலுவருசமாகி சனமெல்லாம் ஊருக்கு போய் வருவதால் யோகநாதனையும் ஊருக்குப் போய் வீடு காணிகளை வித்துப்போட்டு வரும்படிநச்சரிக்கத் தொடங்கியிருந்தார்.

பிரான்சில் நடந்த ஊர்வலங்களிலையெல்லாம் புலிக்கொடியோடைமுன்னுக்கு  நின்ற   ஆனந்தன்கூட  அதே ஏ.9  பாதையாலை ஊருக்குப் போய்விட்டு வந்து அண்ணை ஒரு பிரச்சனையும் இல்லை றோட்டெல்லாம் அந்தமாதிரி போட்டிருக்கிறாங்கள் கிளிநொச்சியிலை சேரன் இல்லாதது மட்டும்தான் சின்னக்குறை  என்று சொன்னதன் பின்னர்தான்  ஊருக்குப் போகும் முடிவினை யோகநாதன் எடுத்திருந்தார்.அந்தநேரம்தான்  வழக்கமாக அரட்டை அடிக்கப்போகும் சங்கீதா வீட்டிலிருந்து ஒரு படத்தோடைவந்த கனகமணி யோகநாதனிம் இஞ்சாருங்கோ இந்தப் பிள்ளை இயக்கத்திலை இருந்ததாம் புருசன் காரனும் இயக்கத்திலை இருந்து கடைசி சண்டையிலை செத்துப் போனானாம்.5 வயதிலை ஒரு மகள் இருக்காம்  சொந்தத்தொழில் தொடங்க உதவி கேட்டிருக்கு எண்டு சங்கீதாவுக்கு தெரிந்த ஆரோ கேட்டிருந்தவையாம் நான் ஒரு நூறு யுரோ தாறன் அனுப்பி விட்டிட்டு நீங்கள் உருக்கு காணி விக்கப் போறீங்கள் தானே  காணி வித்து வாற காசிலை கொஞ்சத்தை  இந்தப் பிள்ளைக்கு குடுத்து ஏதாவது தொழில் தொடங்கிற வசதி செய்து குடுத்திட்டு வாங்கோ என்று இதிலை அந்த பிள்ளையோடை தொடர்பு கொள்ள ஒரு கொமினிக்கேசன் நம்பரும் விபரமும் இருக்கு எண்டு ஒரு பேப்பரையும் நீட்டினாள். அதனை பெரிய அக்கறையில்லாமல் வாங்கி மேசையில் வைத்தவர்.இரவு கிளாசில் விஸ்கியை ஊற்றி கோலாவை கலக்கத்தொடங்கியபோது  இந்தாங்கோ  நாளைக்கு அந்தபக் பிள்ளைக்கு அனுப்பிற காசு என்று கனகமணி நூறு யுரோவை மேவையில் வைத்துவிட்டு சீரியல் பாக்கப் போய்விட்டிருந்தாள்.

பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து விட்டதால் இப்பொழுதெல்லாம் அவர்கள் எங்கே போகிறோம் எத்தனை மணிக்கு வருகிறோம் என்றெல்லாம் சொல்வதில்லை அதனால் யாரும் வீட்டில் இல்லை.இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டவரிற்கு கனகமணி கொடுத்த படம் நினைவிற்கு வர அதனை எடுத்துப் பார்த்தார் மெல்லிதாய் நெற்றியில் திருநீற்று குறி இழுத்த  முகம் அளவான அழகான உடல்வாகு கையில் தூக்கிய குழந்தை.
படத்தில் அவளது கையில் இருந்த குழந்தை தனது கட்டை விரலால் மறைத்தபடி மீண்டும் உற்றுப் பார்த்தார். கனகமணியை விட ஒரு நாப்பது கிலோவாவது குறைவாய் இருக்கும். கலர் கொஞ்சம் குறைவுதான் ஆனாலும்  களையான முகம் கனகமணி வருத்தம் வந்து  படுக்கையிலை விழுந்ததுக்கு பிறகு அவளிற்கு பக்கத்திலை படுத்ததே பல வருசமாகிது ..சே ..வேண்டாம் என்று மேசையில்  படத்தை போட்டுவிட்டு மீண்டும் ஒரு கிளாசை நிரப்பி ஒரே மடக்கில் குடித்தவரிற்கு மீண்டும் படத்தை பார்க்கவேண்டும் போல் இருந்தது. படத்தை எடுத்தார் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரிவராதவரைக்கும்தான்  ஒருவன் யோக்கியன் .இரண்டுமே சரிவந்துவிட்டால் அனைவருமே அயோக்கியன்தான் இப்பொழுது தான் யோக்கியனா??அயோக்கியனா ??என்கிற குழப்பம் யோகநாதனிற்கு.மறுநாள்   கனகமணி கொடுத்த விபரத்திற்கு பணத்தை அனுப்பிவிட்டு அவள் கொடுத்த விபரத்தில் இருந்த கொமினிக்கேசன் இலக்கத்திற்கு போனடித்து குமுதினியை வரவளைத்து பணம் எடுப்பதற்கான விபரங்களை கொடுத்திருந்தார்.குமுதினியுடன் கதைத்த பின்னர் நீண்ட நேரமாகியும் குமுதினின்குரல்  அவரது காதிற்குள்ளேயே நின்றிருந்தது.அதற்கு பின்னர் கனகமணிக்கு தெரியாமலேயே ஒருதடைவை பணம் அனுப்பி விட்டு  சில தடைவைகள் கொமினிக் கேசனிற்கு வரச்சொல்லி கதைத்தும் இருந்தவர் விரைவில் நேரடியாக சந்திப்பதாய் கூறியிருந்தார்.அவர் ஆழ்மனதின் மூலையில் இத்தனைநாள்வரை  ஓரமாய் உறங்கிக் கிடந்த  மிருகம் மெதுவாய் எழுந்து தனது முன்னங்கால்களை  நீட்டி சோம்பல் முறிந்துக்கொண்டது.

                                      000000000000000000000000000000000000000000000

கோப்பாய் சந்தியில் இருந்த கொமினிக்கேசனிற்கு முன்னால் ஆட்டோ வந்து நின்றதும் ஜயா இதுதான் நீங்கள் சொன்ன கொமினிக்கேசன் என்றதும் யோகநாதன்  ஆட்டோக்காரன் தன்னை மீண்டும் ஜயா என்று அழைத்த எரிச்சலுடன்  இறங்கி பணத்தை கொடுத்து விட்டு இறங்கினார்.குமுதினிக்கு தான் வரும் விபரத்தை ஏற்கனவே சொல்லி இருவரும் கொமினிக் கேசனில்  சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதுவரை தொலைபேசியில் அண்ணா என்று அழைத்த குமுதினி தன்னை நேரில் பார்த்ததும் ஆட்டோக் காரனைப்போல ஜயா என்று கூப்பிட்டு விடக் கூடாது என்கிற  ஒரு பயம்வேறு யோகநாதனிற்கு இருந்தது. கொமினிக்கேசனிற்குள்  மகளோடு இருந்த குமுதினியை இலகுவாக அடையளம்கண்டு கொண்டார்.படத்தில் பார்த்தை விட அவள்  அதே திறு நீற்றுக் குறியுடன் நேரில் இன்னமும் அழகாகவே இருந்தாள் மிருகம் இப்பொழுது கொட்டாவி விட்டுக்கொண்டது.
அங்கேயே அவரை சந்தித்து கதைத்துவிட்டுப்போகும் திட்டத்தோடு வந்திருந்த குமுதினியிடம்  வீட்டிற்கு போகலாமா என்றதும் அவள் தயங்கிய படியே அண்ணா நீங்கள் வாற அளவுக்கு வசதியான வீடு இல்லை என்றதும் பரவாயில்லை கட்டாயம்  வீட்டை கூட்ப்போகவேணும் என்று வற்புறுத்தியதால் அங்கேயே கைதடி வீதிப் பக்கமாக அழைத்துப் போனாள் அங்கு தென்னங்காணி ஒன்றை அடுத்து இருந்த வெளியில் பல குடிசைகள் இருந்தது அனைத்துமே இறுதி வன்னி யுத்தத்தால் பாதிக்கபட்டு வந்தவர்களிற்கு  தொண்டு நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது அதில் ஒன்றுதான் குமுதினியினுடையது.குடிசை வாசலில் ஒரு பிளாஸ்ரிக் கதிரையை போட்டு அண்ணை இதிலை இருங்கோ என்று சொன்னதும் என்னை அடிக்கடி அண்ணை எண்டாமல் யோகன் எண்டே கூப்பிடலாமென்றபடி தான் கொண்டு வந்த பொருட்களை அவளிடம் நீட்டினார்  மகளிற்கோ புது உடுப்பக்களை பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி  அவற்றையே புரட்டிப் புரட்டி பார்த்துக்கொண்டு நின்றவளிடம் குமுதினி பணம் கொடுத்து ஓடிப்போய் பெப்சி வாங்கி வா என்று அனுப்பி விட்டிருந்தவள் யாரெண்டே தெரியாத எங்களிற்கு கடவுள் மாதிரி வந்து எவ்வளவோ உதவியள் செய்யிறீங்கள் நன்றி எனும்போதே அவளது கண்கள் கலங்கி தொண்டை லேசாய் அடைத்தது.
 செருமி சமாளித்தபடி எங்களைப் பற்றி போனிலை எல்லாம் சொல்லிட்டன் ஆனா உங்களைப் பற்றி எதுவுமே கேக்கேல்லை உங்களுக்கு எத்தினை பிள்ளையள்? மனிசி  சுகமாய் இருக்கிறாவோ ?என்றதும். பொய் சொல்லுவதை  அவள் கண்டு பிடித்துவிடாமல் இருக்க அவளிடம் இருந்து பார்வையை திருப்பியவர்  எனக்கு ஒரேயொரு மகன் மனிசி  .. மனிசி வந்து ..என்று இழுத்தவரிற்கு கனகமணி கண்முன்னே வந்ததால்  எதுவும்  பேசாமல் வலக் கையை நீட்டி வானத்தை நோக்கி காட்டவே ..ஓ மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்ன நடந்தது என்று குமுதினி பரிதாபமாக கேட்டாள்.அக்சிடன்ட் ....ஒரு நாள்  காலைமை வேலைக்கு போறதுக்காக  பஸ்சுக்கு காவல் நிண்டநேரம் தண்ணியடிச்சிட்டு வந்த லொறிக்காரன் ஒருத்தன் அடிச்சு விட்டிட்டான் என்று இதயத்தை தடவினார். மிருகம் தனது நாவால் உடலை நக்கத் தொடங்கியிருந்தது .
மகள் கொண்டு வந்த பெப்சியை வாங்கி குடித்துவிட்டு விடை பெற்றவர் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ச்சியாக குமுதினியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவளையும் மகளையும் வெளியே  கோயிலிற்கும் கடைகளிற்கு அழைத்துசெல்லவும் தொடங்கியிருந்தார். இது ஆரம்பத்தில் குமுதினிக்கு சங்கடமாக இருந்தாலும் பிறகு  அவளிற்கும் இது ஒரு மாற்றமாகவும் கணவனின் நினைவுகளில் இருந்தும் போராளியாக இருந்து  காதலித்து  சாதிக் கட்டமைப்புக்களை உதறி  திருமணம் செய்ததால் இப்பொழுது  தனது உறவுகளாலேயே ஏற்கப்படாமல் தனித்துப்போன கடந்தகால மன அழுத்தங்களில் இருந்தும்  விடுபட்டு  ஒரு ஆறுதலையும் கொடுத்திருந்தது.

ஒவ்வொரு நாளும் குமுதினியை சந்திக்கப் போகு முன்பு மீசையிலும் தலையிலிலும் நரை தெரிகின்றதா என்று பரிசோதனை செய்வதே யோகநாதனிற்கு பெரும் வேலையாய் இருந்தது  ஆரம்பத்தில் நல்லூர் கோயிலிற்கு வருவதற்கே தயங்கிய குமுதினி நாலு நாள் கழித்து இன்று கடற்கரைக்கும்  பின்னர் படத்திற்கு வர சம்மதித்திருந்தாள்.இந்த மாற்றத்திற்காகத்தான் அவரும் காத்திருந்தார். படம் பாக்கப் போக முதல் கடற்கரையில் வைத்தே குமுதினியை வழிக்கு கொண்டுவந்துவிடுவது இதுதான் அவரது திட்டம்.
                                                            ..........................................

காரைநகர் கசோரனா கடற்கரையில்   வாங்கிக் கொடுத்த பட்டத்தோடு குமுதினியின் மகள் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் நல்லா வரவேணும் நல்லா படிக்கவேணும் நல்லதொரு எதிர்காலம் அவளிற்கு கிடைக்கவேணும்  ஆனால் நீ இங்கையிருந்து இந்த சமூகத்திலை தனியாளாய்  உன்னாலை அதை  செய்ய ஏலுமா??என்று குமுதினியின் அனைத்து கவலைகளையும் யோகநாதன் தன்னுடைய கவலைகளாக்கி சொல்லிவிட்டு இதெல்லாம் எப்பிடி செய்யப்போறாய் என்று விட்டு அவளைப் பார்த்தார். அவளின் பதிலோ பெரு மூச்சோடு  குனிந்து கடற்கரை மணலில் கால் பெருவிரலால் கீறுவதாகவே இருந்தது.இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரிக்க அவளிடம்.
அதுக்கு ஒரு வழி இருக்கு  வெளிநாடு போகவேணும் அங்கை போனால் எல்லாமே நடக்கும்.

எப்பிடி??

போறது சுலபம் ஆனால் அது உன்னிலைதான் இருக்கு

என்னிலையா??

ம்....

எப்பிடி ??

எனக்கும் துணை இல்லை உனக்கும் துணை இல்லை..
அவளையறியாமலேயே  அவளது கை இடுப்பை நோக்கிப் போனது  அங்கு பிஸ்ரல் இல்லை  பழைய பழக்க தோசம் என்று புரிந்தது.தலையை சாய்த்து அவனை பார்த்தாள்...
உனக்காவும் உன்ரை மகளின்ரை எதிர் காலத்துக்காவும்தான்  சொல்லுறன் மற்றபடி எனக்கொண்டும் இல்லை  நீ விரும்பினால் வெளிநாடு வரலாம் அவ்வளவுதான்.
பட்டம் குத்தி கடல்நீரில் விழுந்ததில் கிழிந்துபோக அதைத் துக்கியபடியே அவள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

பேரூந்து யாழ் நகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த அவர்களிற்கு நடுவில் குமுதினியின் மகள் சந்தோசமாய் சொக்லேற் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தாள்.தனது மகளின் எதிர்காலம் பற்றிய பெரியதொரு  கேள்வியும் அதைப்பற்றிய பயமும்  நிரவியிருந்த இடத்தை மெல்ல மெல்ல வெளிநாட்டுக் கனவு விழுங்கத்தொடங்கியிருந்தது.பேரூந்து  நகரத்தில் நின்றிருந்தது மெதுவான குரலில் குமுதினி நீ விரும்பாட்டில் போகலாம் ஓட்டோ பிடிச்சு விடுறன் என்றார்.ஆனால்  அவள் அங்கேயே மொளனமாய் நின்றிருந்தாள்.தனது சட்டைப்பையில் ஏற்கனவே எடுத்திருந்த பட றிக்கற்றுக்ளோடு யோகநாதன் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பிக்க குமுதினி மகளோடு பின்தொடரத் தொடங்கியிருந்தாள்.

                                         ...................................................................

கெழும்பில் பிரபல நட்சத்திர விடுதியொன்றில்  தனித்தனியாக இரண்டு கட்டில்கள்  போடப் பட்டிருந்த அறை ஒன்றில் பகல் முழுதும் கொழும்பை சுற்றி பார்க்க அலைந்ததில் குமுதினியில் மகள் உறங்கிப் போயிருந்தாள். குமுதினியும் களைத்துப் போயிருந்தாள்.நாளைக்கு பாஸ்போட் எடுக்கிறதுக்கு போகலாம் எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் இருக்கிறான் அவனிட்டை காசைக் குடுத்தால்சரி அலுவல் எல்லாம் கெதியா முடிச்சுத் தருவான் என்றபடி கிளாசில் இருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்தவர் குமுதினியை திரும்பிப் பார்த்தார்.மகளிற்கு பக்கத்தில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள் ம்...என்கிற பதிலை மட்டும் கொடுத்தாள். இன்றைய  இரவின் இந்த தனிமைக்காகத்தான் யோகநாதன் அவளை கொழும்பிற்கு அழைத்து வந்திருந்தார். மகளை  விட்டிட்டுவந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் ஆனால் தனிய விடமாட்டன் எண்டு  அடம் பிடிச்சு கூட்டியந்திட்டாள் என்கிற சின்ன கோவமும் யோகநாதினிற்கு இருந்தது.வெளிநாட்டு கனவையும் அவளது மகளது எதிர் காலம் பற்றியும் திரும்ப திரும்ப சொல்லி குமுதினியை மூளைச் சலவை செய்து அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலைக்கு குமுதினி வந்திருந்தாள்.இரண்டாவது கிளாசையும் முடித்தவர் மெதுவாக எழுந்து அறை விளக்கை அணைத்துவிட்டு குமுதினிக்கு அருகில்போய் அவளது கன்னத்தை மெதுவாக தன விரல்களால் தடவத் தொடங்கவும்.மற்றைய கட்டிலில் மாறி இருந்தவள்.

பயமாயிருக்கு...

நான் தான் இருக்கிறனே பிறகென்ன?

என்னை கைவிட்டிட மாட்டீங்களே..

எத்தனையாவது தரம் இதையே கேக்கிறாய் சத்தியமா கைவிடமாட்டன் என்றபடியே அவரது கைகள் கழுத்துவழியாக கீழே இறங்கத் தொடங்கியிருந்தது.

மகள் இருக்கிறாள் வேண்டாம்.

அவள் நல்ல நித்திரை..

பாதுகாப்பு உறையெல்லாம் இருக்கா?

இன்பம் எப்பவும் இயற்கையா இருந்தால்தான் எனக்கு பிடிக்கும் என்றபடி .தனது பையில் இருந்து எடுத்த குளிசைகளில் ஒன்றை அவளது உள்ளங்கையில் வைத்து இதைப் போடு என்று தண்ணீர் போத்தலையும் நீட்டினார். உணர்வுகள் என்பது தூண்டப் படாதவரை மட்டுமே கட்டுப் படுத்தமுடியும் குமுதினி குளிசையை வாயில் போட்டு தண்ணீரை குடித்து முடித்து படுக்கையில் சரிந்து கொண்டாள். இரை இப்போது  மிருகத்தின் கால்களிற்கிடையில்...
                                                                    .......................................

கொழும்பில் பத்துநாட்கள் மகிழ்ச்சியாக கழித்தவர்கள் ஊருக்கு திரும்பியிருந்தார்கள்.கோநாதனும் பருத்துறை  வீடு காணியை  விற்றுவிட்டிருந்தார். சங்காளை பனங்காணிக்கு  விலை சரிவரவில்லை  காரணம் காணிக்குள் பனைகளே இருக்கவில்லை.திரும்பவும் ஒரு ஆறு மாதத்தால் அதை சாட்டாக வைத்து திரும்பவும் வருவதாக முடிவு செய்திருந்தார்.குமுதினியும் குடிசையை விட்டு வாடகை வீட்டிற்கு மாறியிருந்தாள்.அடுத்தடைவை வரும்போது ஸ்பொன்சர் அலுவல் எல்லாம் செய்து கலியாணம் எழுதுவதாக சத்தியம் செய்து விட்டு பிரான்சிற்கு திரும்பிவிட்டிருந்தார் அதற்கு பிறகு வாரத்தில் ஒரு தடைவை தொலைபேசிமட்டும் குமுதினிக்கு வரும். நாட்கள் ஓடிக்கொண்டிருந்த ஒரு பொழுதில் திடுக்கிட்ட குமுதினி யோகநாதன் வந்து போன மாதங்களில் இருந்து கைவிரலில் திரும்ப திரும்ப எண்ணிப் பார்த்தாள்.இதயத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.ஊரில் இருந்த  ஒரு வைத்தியரிடம் போனதும் அவரும் உறுதி செய்திருந்தார் .பயம்.மகிழ்ச்சி .கோபம். என்று எல்லாம் கலந்த கலவையாய் அவசரமாக கொமினிக்கேசனிற்குள் புகுந்து யோகநானிற்கு போனடித்து எடுக்கச் சொல்லி விட்டு காத்திருந்தவளிற்கு அழைப்பு வந்தது.தயங்கியபடி விடயத்தை சொன்னதும்  ஏன் குளிசை ஒழுங்கா போடேல்லையோ எனத் தொடங்கியவர் கருவை உடனடியாக கலைத்துவிடும்படியே பதில் வந்தது. நாலு மாதமாகிவிட்டது உள்ளுரில் செய்யமுடியாது செய்தால் விடயம் ஊர். முழுக்க பரவி விடும் வெளியூரில் போய் செய்வதற்கு  எனக்கு ஆட்களைத்தெரியாது நீங்கள் தானே  கலியாணம் செய்யிறதாய் சத்தியம் பண்ணீங்கள் பிறகெதுக்கு அழிக்கச் சொல்லுறியள் என்று அழுதாள் கெஞ்சினாள் அழித்துவிடு என்பது மட்டுமே பதிலாக வந்து கொண்டிருந்தது இறுதியில் ஊரிலை யாரிட்டையோ வாங்கின பிள்ளைக்கெல்லாம் நான் அப்பாவாக முடியாது என்கிற வசனத்தோடு தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

குமுதினிக்கோ இரண்து கிபீர்கள்  பறந்து வந்து பக்கத்தில் குத்துக்கரணமடித்து குண்டு போட்டதைப்போல ஒரு உணர்வு திரும்ப போனடித்துப் பார்த்தாள் வேலை செய்யவில்லை. கோபத்தில் ஏதாவது அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம் அடுத்தநாள் போன் வரும் என எதிர்பார்த்தாள் வரவில்லை தானே கொமினிக்கேசனிற்கு போய் போனடித்துப்பார்தாள் வேலை செய்யவில்லை இப்படியே ஒவ்வொரு நாளும் போனடித்துப் பார்த்தே  இரண்டு வாரங்கள் கழிந்து விட்டிருந்தது.
அன்றும் வழைமைபோலமகளுடன்  கொமினிக் கேசனிற்குள் நுழைந்ததுமே அங்கிருந்தவன்  ''என்ன வழைமையான நம்பருக்குத்தானே என கேட்டபடி இலக்கங்களை அழுத்தியவன்  உதட்டைப் பிதுக்கி தலையாட்டியபடி வேலை செய்யவில்லையென்றவன் என்ன ஏதும் பிரச்சனையோ என்றான். ஓம் இருக்கிறதை விட்டிட்டு பறக்கிறதக்கு ஆசைப் பட்டிட்டன் என்றபடி அங்கிருந்து வெளியேறியவள் வயிற்றைத்தடவிப் பார்த்தாள் கொஞ்சம் வெளியே தெரியத் தொடங்கியிருந்தது.மகளிற்கு பிடித்தமான  ஜஸ்கிறீம் சொக்லெற் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு உணவகத்தினுள் புகுந்து இரண்டு பிரியாணி பாசல்களும் வாங்கிக் கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.


                                                       0000000000000000000000000000000000

பக்கத்து வீட்டிற்கு அரட்டையடிக்கப் போயிருந்த கனகமணி பதட்டத்தோடு என்னப்பா செய்தி அறிஞ்சனியளோ என்றபடி வந்தவளை இடை மறித்து நான் ஊரிலை இருந்து வந்த உடைனை யே  சொல்ல நினைச்சனான் அவள் சரியில்லையெண்டு ஆனா நீ கவலைப் படுவாயெண்டு விட்டிட்டன்  என்றபடி  தனது கையிலிருந்த  ஜ பாட்டினை தட்டி  தமிழ்த்தேசிய முன்னணி செய்தித் தளம்  ஒன்றில் இருந்த  செய்தியை படித்துக் காட்டத் தொடங்கினார்.
முன்னைநாள் பெண்போராளி மகளை கொலை செய்து தானும் தற்கொலை.

 கோப்பாய்  பகுதியில் வசித்தவரும் முன்னை நாள் பெண் போராளியுமான குமுதினி வயது 34  உணவில் விசம் கலந்து கொடுத்து  தனது  5 வயது மகளை  கொலை செய்து விட்டு  தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மருத்துவ பரிசோதனைகளில் இவர் கர்ப்பம் தரித்துள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து  விடுதலையாகி வந்த பின்னர்  இராணுவப்புலனாய்வாளர்களுடன்  நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும்  அதுவே அவரது கர்ப்பத்திற்கு காரணம் என்றும் விடயம் வெளியே தெரியவந்ததும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணத்தின்  கலாச்சாரச் சீரளிவுகளிற்கு இவரைப் போன்றவர்களும் காரணம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
.............................................................................................................................................................................................
கதை உண்மைச் சம்பவத்தை தழுவியது.