Navigation


RSS : Articles / Comments


உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன்

3:01 PM, Posted by sathiri, No Comment
நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார்.

இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களின் உதவியாளர் கவிஞர் பொன்காந்தன்.மணியன்குளம் கிராம சங்கத்தலைவர் திரு சூரி மற்றும் மாதர்சங்கத் தலைவி ரஜனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன்.அந்த மக்கள் நம்பிக்கைகளை இழந்து போகாமல் மீண்டும் அவர்கள் வாழ்வினைக் கட்டியெழுப்ப உறுதியோடு உழைக்கவேண்டும் என்பதோடு அவர்களின் குழந்தைகளிற்குக் கல்வியினைக் கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க முன்வர வேண்டுமென்றும், அதற்கான உதவிகளையும் வழிவகைளையும் அந்த மக்களிற்குப் பெற்றுக்கொடுப்பதற்காக என்றென்றும் நேசக்கரம் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் உறுதுணையாக இருப்போம் என்கிற உறுதியினையும் தீபச்செல்வன் அவர்கள் அம்மக்களுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.இந்த மக்களிற்கான உதவிகளை வழங்கி அவர்களிற்கான உங்கள் பாசக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நேசக்கரம் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
உதவி வழங்கல் மற்றும் மணியன்குளம் கிராமம் பற்றி கருத்துக்களோடு தீபச்செல்வனுடனான உரையாடல் ஒலிப்பதிவினைக் கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.
உதவி வழங்கல் படங்களை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்தவும்.

Akka please call me…after 13.00pm

1:57 PM, Posted by sathiri, No Comment

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10