Navigation


RSS : Articles / Comments


எழும்படி பெண்பாவாய்

9:25 AM, Posted by sathiri, No Comment

எழும்படி பெண்பாவாய்
ஒரு பேப்பரிற்காக

மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.

அப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை "டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.

ஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)༢r />??டுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிருக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக்காரர் பால்தேத்தண்ணியோ இல்லாட்டி பால்க்கோப்பியோ தாறது வழைமை.கொஞ்சம் வசதியான வீடு என்றால் `ஹார்லிக்ஸ்சும் பிஸ்கற்றும் கூட கிடைக்கும்.ஆனால்திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம்.

நாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒருதடைவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரிபார்ப்பம். " டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசுக்கோத்துமாம் எண்டுவான் ஒருத்தன்" அட போடா அந்த வாத்தி போனவருசம் பள்ளிக்கூடத்திலை தாற விசுக்கோத்தை தந்து ஏமாத்திப்போட்டுது.இந்தமுறை கிறீம் விசுக்கோத்து வாங்கிதராட்டி நான் அவற்றை வீட்டு வாசல்லை பாடமாட்டன்" என்பான் இன்னொருத்தன்.அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.

ஏணெண்டால் அதுவரை காலமும் சைக்கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலாலையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக்குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும். அதேநேரம் திருவெண்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டிவைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக்கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.இப்பிடி கல கலப்பா ..“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்…..எண்டு முதல் பாட்டோடை கோயிலடியிலை இருந்து தொடங்குவம் முன்னாலை ஒருத்தர் பெற்றோல்மைக்ஸ் விளக்கை தோழில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெண்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு பந்தியாய் சொல்லி நிறுத்த பின்னாலை போகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.

சில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போகவேண்டியிருக்கும்..ஏலோரம்
பாவாய் இப்பிடி வெண்பாவின்ரை .எட்டு பாடல் வரிகள் .முடிஞ்சதும் எல்லாரின்ரை கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப்பாட்டும் பாடுவம். எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டுவாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் .முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப்போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்சுசத்தம போட்டு படைலைக்குள்ளை சங்கை வைச்சு ஊதிப்போட்டு போவம்.ஏணெண்டால் ஊரையே எழுப்பிறதுக்குதானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.

பிறகு கலையிலை எங்கையாவது போகேக்குள்ளை பெட்டையள் எங்களிட்டை "சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படைலைக்குள்ளை சங்குஊதினது எண்டு செல்லக்கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் "எங்களுக்கு வேறை வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்." இப்பிடியான சீண்டல்கள். திருவெண்பா கடைசி நாளன்று ஒரு ரக்றரிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற்எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டுவருவம்.. எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம்.அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.. அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்

No Comment