Navigation


RSS : Articles / Comments


பீனாகொலடா

2:28 PM, Posted by sathiri, No Comment

 பீனாகொலடா  (சிறுகதை )
.............................................................
மலைகள் இணைய   சஞ்சிகைக்காக  சாத்திரி


இன்று லீவு நாள் வழக்கம்  போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ  யை போட்டு எடுத்த  படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு  சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு  அறையில் இருந்து  மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை  கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை"  என்று  சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை ரீ  சேட் நீங்கள் போடுறதும் இல்லை வருசக் கணக்கா கிடக்கு  இந்த வருசமாவது எறியுங்கோ என்றபடி அதை மட்டும் தனியாக கையில் தந்தாள்.. வருசத்துக்கு ஒரு தரம்  இப்பிடித்தான் அலுமரிக்குள் இருக்கிற பாவிக்காத  உடுப்புகளை பொறுக்கி யெடுத்து கொண்டுபோய் செஞ்சிலுவைச்சங்க பெட்டிக்குள் போடுவது வளமை. செஞ்சிலுவை சங்க காரன் உன்மையிலேயே  அந்த உடுப்புக்களை இங்கை கஸ்டப்பட்ட ஆக்களுக்கு குடுக்குறானா அல்லது ஆபிரிக்காவுக்கோ ஆசியாவுக்கோ அனுப்புகிறானா அதையும் விடுத்தது  குப்பையிலை போடுகிறானா என்பதெல்லாம் அவங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.மனிசி தந்த உடுப்புக்களை கொண்டு மறுபடியும் ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் சரிந்த படி அங்கிருந்த சின்ன மேசையில் உடுப்புக்களை போட்டுவிட்டு அந்த பச்சை ரீசேட்டை கையில் எடுத்தபடி டிவி றிமோட்டை அமத்திய படி  டீ யை உறுஞ்சத்தொடங்கினேன் ..
        00000000000000000000000000000000000000000000000000000000
கொழுத்திய கோர வெய்யில்  தலையில் பட்டு விடாமல் தடுக்கும் முயற்சியாக புத்தக பையை தலைக்கு மேலே துக்கிப்பிடித்த படி புழுதி படர்ந்த பாதையில்  வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய் கொண்டிருந்தாள் அமுதவல்லி.வீட்டை நெருங்கும் போது அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வந்த புல்லட் வண்டி அவளை கடந்து போகும்போது அதிலிருந்த ராமலிங்கம் அவளைப்பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு போனான் .ஐயையோ இவன் என்னத்துக்கு வீட்டுக்கு வந்திட்டு போறான் அன்னிக்கு இப்பிடித்தான் தனிய வந்து கொண்டிருந்த நேரம் தீடிரென முன்னாலை வந்து  "ஏய் என்னை கட்டிகிறியா" எண்டு கேட்டிவிட்டு போனான் அவளும் பயத்தில யாருக்கும் சொல்லவேயில்லை .இப்ப நேர வீட்டிலேயே வந்து  வீட்டிலேயே கேட்டிட்டு போறனா..??

அமுதவல்லிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்க இன்னமும் வேகமாக வீட்டுக்குள் ஓடிப்போய் நுழைந்து மூச்சுவாங்க நின்றவளை   ஏய் பெட்டைக்கழுதை இப்பிடியா ஓடி வாறது கலியாணமாகி நாளைக்கே அடுத்தவன் வீட்டுக்கு வாழப்போற பெட்டச்சி அடக்க ஒடுக்கமா ஒழுங்க இரு என்று அவள் அம்மா திட்டியதும் எதோ நட்டக்கப்போகிறது என்று அவளுக்கு புரிந்தது நேரே அடுப்படிக்குள் போய் பானைக்குள் இருந்த தண்ணீரை செம்பில் நிரப்பியெடுத்து அவசரமாய் அண்ணாந்து குடிக்கும் போதே பாதி நீர் கடவாயால் கழுத்து வழியாக அவள் சட்டையை நனைத்தபடி கீழிறங்கிக் கொண்டிருக்க குடித்து முடித்தவள் சட்டையை உதறியபடி அம்மா எதுக்கு அவன் இங்கை வந்திட்டு போறான் முடிக்க முதலே கையை ஓங்கிக் கொண்டு  முன்னால் வந்த அம்மா மூடுடி வாயை. கட்டிக்க போறவனை போய் அவன் இவன் எண்டுகிட்டு...

என்னது கட்டிக்க போறவனா யாரை ??

உன்னையத்தான் ..

எனக்கு புடிக்கல நான் படிக்கபோறன்.

நீ பத்தாவது வரை படிச்சதே போதும் அப்பா வரட்டும் மீதியை பேசிக்கலாம் பொத்திக்கிட்டு உள்ளை போய் இரு...

அமுதவல்லிக்கு ஓடி வந்த களைப்பு கோபமாய் மாறி இப்போ அழுகையாக வெடிக்கும் போல இருந்தது அறைக்குள் போய் சாத்திக்கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அப்பாவும் தங்கையும் வந்து சேர்த்து விட்டிருந்தனர்.அம்மாவும் அப்பவும் மாறி மாறி கதைப்பது லேசாய் கேட்டது இடையே அறைக்குள் ஓடி வந்த தங்கை அவளை சுரண்டி அக்கா உனக்கு கல்யாணமாம் என்றுவிட்டு ஓடி விட்டாள்.விவாதம் முடிந்து அப்பா உள்ளே வந்த சதம் கேட்டு கட்டிலில் அமுதவல்லி  எழும்பி உட்கார்ந்து கொள்ள லேசாய் அவள் தலையை தடவியவர் .இந்தா பாரும்மா எனக்கும் பெரிசா பிடிக்கல ஆனா அம்மா சொல்லுறதிலையும் நியாயம் இருக்கு. நான் சாதாரண வாத்தியார் உனக்கு அடுத்ததும் பெண்ணு ஒன்னு வீட்டில இருக்கு. அதவிட அவங்கள் நம்ம ஜாதிக்காரங்க ஊரிலேயே பெரிய பணக்காரங்க வேறை.. ஒரே பையன்  அவனா  வீடு தேடி வந்து கேட்டிட்டு போயிருக்கான் போற இடத்துல நிச்சயமா நீ நல்லயிருப்பாயம்மா.தடவிய அப்பாவின் கைகளை பிடித்த படி இல்லலப்பா எனக்கு படிக்கணும் அவள் குரல் அடைத்தது.எனக்கும் நீ படிக்கணும் எண்டுதான் ஆசை ஆனா வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற மாதிரி உனக்கு அதுவும் பெரிசா வரல்லையே அதைவிட மேல உன்னை படிக்க வைக்கிற வசதி கூட என்கிட்டை இல்லம்மா யோசிச்சு சொல்லு.. அவள் தலையை தான் மார்போடு அணைத்தார்...

அமுதவல்லி அப்பாவின் பேச்சில் கரைத்து போனாள். ராமலிங்கம் வீட்டில் அவன் செல்லப்பிள்ளை ஊதரித்தனமாய் ஊர் சுற்றி திரிந்தவன் கலியாணம் ஆகிட்டால் அடங்கிடுவான் என்பதால் அவனது ஆசைக்கு யாரும் குறுக்கே நிக்கவில்லை.அதைவிட அமுதவல்லியின் தந்தை வசதி இல்லாது விட்டாலும் வாத்தியார் ஊரில் நல்ல பெயர் எடுத்தவர் உள்ளூர் யோசியரும் ஜாதகம் பார்த்து  கோவில் பூசாரியும் பூ போட்டு பார்த்து சரி சொன்னதில்  சீர் வரிசை அதிகம் எதிர்பார்க்காமல் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.நிச்சயதார்த்தத்தின் போதே  "ஏம்மா மருமகளே நீ முதல்லை எனக்கு ஒரு பேரனை மட்டும் பெத்துக்குடுத்துடு அது போதும் எனக்கு அவனுக்கு நான் எங்க குல தெய்வம் முனியாண்டிக்கு மொட்டை போட்டு காது குத்தணும்"என்று அவளின் வருங்கால மாமியார் சொன்னபோது அங்கு நின்ற அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தாலும்  அமுதவல்லிக்கு மட்டும் அடிவயிற்றில் இருந்து உருண்டைகள் உருள்வதுபோலஇருந்தது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சிங்கப்பூரின் இசூன் பகுதியில் நுழைந்த டாக்ஸி ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் முன்னால் நின்றுகொள்ள பணத்தை கொடுத்து விட்டு நான் இறங்கியதும் பின்னால் வந்து டிக்கியில் இருந்த சிறிய சூட்கேசை எடுத்து என் முன்னால் வைத்துவிட்டு டாக்ஸி காரன் விடை பெற்றான்.பாத்துமணிநேர விமானப்பயணம் போய் குளித்து விட்டுமுதல் வேலையாக வீட்டுக்கார  ஓனரம்மாக்கு போன் அடிச்சு நான் வந்திட்டன் எண்டு சொல்லிட்டு  வாடகையை கொண்டு போய் குடுக்க வேணும் என்று நினைத்தபடி வீடிற்குள் நுழைத்ததும் சூட்கேசை திறந்து அதில் இருந்த பைலை  எடுத்து பீரோவில் வைத்து பூட்டி விட்டு வீட்டு யன்னல்கள் எல்லாம் திறந்து விட்டேன்.மூன்று வாரதுக்கு மேலாக வீட்டில் இல்லை குளியலறை குழாய்களில் இருந்து வரும் நாத்தம் வீட்டை லேசாய் நிறைத்திருந்தது.குளித்து முடித்து வீட்டு வாடகையையும் கொண்டு போய் கொடுத்து விட்டு சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு வரும் வழியில்  கொஞ்சம் பியர்களையும் வாங்கிவிட்டு வழக்கம் போல அந்த  மலே டாக்சிகாரனின் இலக்கத்தை அழுத்தினேன்
போனை எடுத்தவன் சார் வந்தாச்சா எது வேணும் தாய்லாந்து. மலேசியா .பிலிப்பின் .ஸ்ரீலங்கா இந்தியா..

ஜப்பான் இல்லையா..??

என்ன சார் எப்ப பாத்தாலும்ஜப்பான் கேக்ககிறிங்க அது ரெம்ப கஷ்டம் சார்.. இந்தியா ஒண்ணு இப்பதான் புதிசு..

இந்தா பார் எல்லாருக்கும் சொல்லுற மாதிரி எனக்கும் இப்பதான் புதிசு எண்டு சொல்லாதை.எனக்கு புதிசெல்லாம் வேண்டாம் .பிறகு நான் பாடமெடுக்கவே விடிஞ்சிடும் அனுபவசாலியா அனுப்பு..

கடவுளே உங்களுக்கு போய்  பொய் சொல்லுவனா...

சரி எதுக்கு கடவுள் அவரை விடு .நோத்தா ?.சவுத்தா ?..

ஒரு நிமிசம் சார் கேட்டு சொல்லுறன் .

அவன் வேறு யாருக்கோ இன்னொரு போனில் பேசிவிட்டு.. சார் சவுத்தாம் சார்

கேரளாவா ..கன்னடாவா ..ஆந்திராவா??

அதெல்லாம் நீங்களே நேரில கேட்டு தெரிஞ்சுக்குங்க ஒரு நைட் தானே??

ம்......  ஆனா அடுத்த தடவையாவது ஜப்பான் றை பண்ணு.....

பேசாமல் நீங்க ஜப்பானிலயே போய் றை பண்ணுங்க இப்போ இந்தியாவை கூட்டிட்டு  அரை மணி தியாலத்தில வாரன்.தொலை பேசி கட்டானது ..

சே...இந்த ஜப்பான் மட்டும் கிடைக்கிதேயில்லை சின்ன வயசில இருந்தே சோனி .ஏசியா ..ஹோண்டா ..டொயோட்டா..கானோன்.. எண்டு பார்த்து பழகிட்டாதாலை ஜப்பான் மேலை அப்பிடி ஒரு ஈர்ப்பு. அவன் சொன்ன மாதிரி ஜப்பானுக்கே போக வேண்டியதுதான் .

இளையராஜாவின் இசை கானங்கள் காசெட்டை  எடுத்து வி .சி.ஆர் . இற்குள் போட்டுவிட்டு ஒரு சிகரட்டை பத்தவைத்து பால்கனியில் நின்று இழுத்து விட்டுக்கொண்டிருந்தபோதே டாக்ஸி காரன் வீட்டு பெல்லை அடித்தான் .டிவி யில் இளயராஜா "நான் தேடும் செவ்வந்திப்பூவிது  ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது"   பாடிக்கொண்டிருந்தார் .அவனிடம் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு அவளை உட்கார் என்றபடி கதவை சாத்தி  திரும்பினேன் சோபாவின் நுனியில்  கைப்பையை இறுக்கி மார்போடு அணைத்தபடி தலையை குனிந்து அந்தரத்தில் அமர்திருந்தவளிடம் சம்பிரதாய ஹாய் சொல்லிவிட்டு அவளை கண்களால் அளந்த படியே  ஆங்கிலத்தில் என்ன குடிக்கிறாய் ..

நீங்க தமிழா ?

"இல்லை இங்க்லீஷ் காரன் தமிழ்ப்பாட்டு கேட்கிறேன்"..சிரித்துவிட்டு  தமிழ்தான் ..கொஞ்சம் பதட்டத்தோடு.. எந்த ஊருங்க
பயப்பிடாதை நான் உன்னோட ஊர் இல்லை சிலோன் . என்ன குடிக்கிறாய்
தயங்கிய படியே ..தண்ணி என்ற படி வலக்கை பெரு விரலால் குடிப்பது போல சைகையிலும் கேட்டாள்.அவள் களைத்துப் போயிருந்தது கண்களிலேயே  தெரிந்தது கொண்டு வந்து கொடுத்த தண்ணீர் டம்ளரை அண்ணாந்து மடக்கு மடக்கென குடிதவள்  வாயை துடைத்தபடி நீட்டிய டம்ளரை வாங்கி படி   "என்ன சரியான டயட்டா இருக்கா" ...?

ஆமாங்க நேத்திக்கு ஒரு அரபிக்காரன் இன்னிக்கு மதியம் வரை குடுத்த காசுக்கு தூங்க விடவேயில்லை.ஒருக்கா குளிச்சிட்டா எல்லாம் சரியாயிடும் பாத் ரூம் எங்கயிருக்கு...
அந்த ரூமுக்குள்ளை போ அதுக்குள்ளையே பாத் ரூம் இருக்கு ஒண்டும் அவசரம் இல்லை குளிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு வெளியே போயிட்டு வாரன் என்ற படி அறை க்குள் போய் துவாயைஎடுத்து அவளிடம் நீட்ட  கைப் பையுடனேயே பாத் ரூமில் நுழைந்து கொண்டாள்.

அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறாளே எப்பிடி இந்த தொழிலுக்கு ..ஏமாந்திருப்பாளோ,?  ஆனா இப்பதான் புதிசு எண்டது உண்மை .நான் இங்கேயே இருந்தால் பயத்தில படுக்க மாட்டாள் கொஞ்சம் வேலையும் செய்வம்.போட்டோ கொப்பி கொஞ்சம் அடிக்கவேண்டியிருந்தது பூட்டியிருந்த பீரோவை திறந்து பைலை எடுத்து அதிலிருந்த சில ஆவணங்களை எடுத்துவிட்டு மீண்டும் அதை பீரோவில் வைத்து பூட்டி வெளியே வந்து கதவையும் பூட்டி விட்டு போட்டோ கொப்பி கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் .
                                    .........................................................
ஒரு மணி நேரம் கழித்து ஆறுதலாக வீடுக்கு வந்து கதவை திறந்தேன் நன்றாக இருட்டி விட்டிருந்தது பாட்டுக்கசெட் முடிந்து திரும்பவும் ரீவைண்ட் ஆகி விட்டிருந்தது.லைட்டை  போட்டு விட்டு அறைக்கதவை மெதுவாக திறந்து பார்தேன் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு வைத்தபடி  முழங்கால்களை மடித்து ஒருக்களித்து ஒரு குழந்தையைப்போல படுத்திருந்தாள்.இன்னும் கொஞ்ச நேரம் படுக்கட்டும் என நினைத்தபடி கொண்டு வந்த போட்டோ கொப்பிகளையும் வேறு ஆவணங்களையும் மேசையில் பரப்பி வைத்து விட்டு பெச்சில் .அழி ரப்பர் .கலர் கலராய் பேனைகளையும் எடுத்துப்போட்டு விட்டு எலோக்ரோனிக் டைப் ரைட்டரை எனக்கு முன்னால் இழுத்தபடி வேலையை  தொடங்கினேன் ..நேரம் போனதே தெரியவில்லை இரண்டு மணித்தியாலங்கள் ஓடி விட்டிருந்தது.காசை குடுத்து கூட்டியந்து தூங்க வைக்கிறமோ ..என்று யோசனை வர  எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு எழும்பும் போதே அவளும் எழும்பி வெளியே வந்தவள் ..ஐயையோ ரெம்ப நேரம் தூங்கிட்டனா மன்னிச்சுக்கோங்க என்றவளிடம் .மன்னிப்பு எல்லாம் கிடையாது தண்டனை உண்டு என்றபடி இன்னொரு பாட்டுக்கசெட்டை வி சி ஆர் ரில் தள்ளிவிட்டு  பிறிச்சை திறந்து பியரை எடுத்தபடி குடிப்பியா..??

விரும்பி குடிச்சதில்லை  கசப்பு ...ஆனால் குடிப்பன். கஸ்டமர் சந்தோசத்துக்காக பழகிட்டன்

சந்தோசம் கஸ்டமருக்கா.. உனக்கா??

எனக்கும்தான்..அந்த போதையிலேயே எல்லாத்தையும் மறந்து நல்லா தூங்கலாம்...

கசப்பு பிடிக்காது போதை பிடிக்கும் அப்பிடித் தானே..?

லேசா வெட்கத்தோடு. ம் .....தலையாட்டினாள்.இப்போ பயம் படபடப்பு இல்லாமல் சாதாரணமாக பேசியது பிடித்திருந்தது.ஒரு நிமிசம் என்றபடி அவசரமாக கீழே இருந்த கடைக்குப்போய் பொருட்களை வாங்கிவந்து கிச்சனில்  பரப்பி விட்டு ஒரு ரசாயன ஆய்வு கூ டத்தில் விஞ்ஞானி பல திரவங்களை குடுவையில் கலப்பதைப்போல.வாங்கி வந்த திரவங்களில் எல்லாத்திலும் கொஞ்சமாய் சில்வர் குடுவையில் ஊற்ரி ஐஸ் கட்டியை ஒரு துணியில் போட்டு அதை மேசையில் ஓங்கி அடித்து உடைத்த துண்டுகளையும் குடுவையுள்  போட்டு குலுக்கி அதை இரண்டு கிண்ணத்தில்  ஊற்றி மேலே லேசாய் நுரையோடு இருந்த இரண்டு கிண்ணங்களையும் தூக்கி வந்து ஒன்றை அவளிடம் நீட்டி விட்டு மற்றதை அவளது கிண்ணத்தோடு முட்டி சியஸ் சொன்னதும் அதுவரை ஒரு மாய வித்தை காரனை பார்ப்பது போல என்னையே  பார்த்துக்கொண்டு நின்றவள்  ஐ....கலர் கலரா இருக்கு என்றபடி கிண்ணத்தை  இரண்டு தடவை மூச்சை நிறுத்தி குடித்து முடித்து  பால் குடித்து முடித்த  பூனையொன்று தன் நாவால் உதடுகளை நக்குவது போல் தன் மேல் உதட்டில் ஒட்டியிருந்த நுரையைதனது நாவால் லாவகமாக நக்கி துடைத்தவள்.. மீண்டும் கிண்ணத்தை நீட்டி நல்லாயிருக்கு இன்னும் கொஞ்சம் யூஸ் குடுங்களேன்..

இது யூஸ் இல்லை  பீனாகொலடா..

என்னங்க எதோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு..

வார்த்தைகளில் கெட்டது நல்லது தீர்மானிக்கிறது யார் வார்த்தைகளை உருவாக்கியது?நாங்கள் தானே பிறகு எதுக்கு கெட்ட வார்த்தைகளை உருவாக்கினோம்..

"ஒன்னும் புரியல எனக்கு யூஸ் வேணும்" குடித்து முடித்த கிண்ணத்தை நீட்டியபடி  ஆமா உங்க பேர் என்ன சொல்லவேயில்லை ..

நீயும் கேட்கல நானும்  கேட்கல அதை தெரிஞ்சு என்ன பண்ணப்போறம்...

கொஞ்சம் யோசித்தவள்  என் பேரு ரோஸி ஊரு சென்னை
என் பேரு ரஜேந்திர சோழன்  என்று சிரித்த படியே அடுத்த கிண்ணத்தை நிரப்பி அவளிடம் நீட்டினேன் . முன்றாவது கிண்ணமும் முடிந்து விட்ட நிலையில் அறைக்குள் புகுந்து ஜன்னல் சீலைகளை இழுத்து மறைக்க அவளும் லேசாய் தள்ளாடியபடி பின்னால் வரவே விளக்கை அணைத்தேன்  "புதிய பூவிது பூத்தது புதிய வண்டு தான் பாத்தது " இளையராஜா சிற்றி வேசன் சோங்  போடத் தொடங்கியிருந்தார் .
                                      ...............................................................
முயங்கி முடித்த மூச்சுக் காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கிக் கொண்டிருக்க போர்வையால் மார்புவரை போர்த்தபடி கட்டிலில்  நிமிர்த்து அமர்தவள் லேசாய் விசும்புவது போலஇருக்க காற் சட்டையை  தேடியெடுத்து மாட்டி க்கொண்டு விளக்கை போட்டுப் பார்த்தேன்.அழத்தொடங்கியிருந்தாள்.
சே எதுக்கு இப்ப அழுகிறாய் ஆதரவாய் அவள் தலையை மார்போடு இழுத்து தடவிக் கொடுக்க.."நான் உங்களுக்கு பொய் சொல்லிட்டன் என் பேரு ரோசியிலை  அமுதவல்லி"

ரோஸி இல்லைன்னு தெரியும்.அமுதவல்லி என்னுதெரியாது..

ரோஸி இல்லேண்டு எப்பிடி தெரியும்..?

உன்னோட ஏஜெண்டு எல்லாருக்குமே வைக்கிற பேர் ரோஸி தான்..

என் ஊர் கூட சென்னை இல்லை..

ம் ...சொல்லு..

நான் பத்தாவது படிக்கும்போதே நம்ம சாதி சனத்தில வசதியான இடத்தில கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க எனக்கு முதலாவது பெண்ணு பிறக்கும் வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது.எங்களோட சாதி சனத்தில முதலாவது பையனா பிறந்தா தான் ஊரிலை ஒரு மரியாதை பையனுக்கு ஊரையே கூட்டி  எங்க குல சாமி கோயில்லை மொட்டை போட்டு காது குதுவங்க.பெண்ணா பிறந்திட்டா கண்டுக்கவே மாட்டங்க.நானும் பிரசவத்துக்கு அம்மா  வீட்டுக்கு போயிருந்தனா பெண்ணு பிறந்திருக்கு எண்டு கேள்விப்பட்டதுமே என்னோட வீட்டுகாரர் வந்து பாக்கவேயில்லை.என்னோட துணிமணி எல்லாம் ஒருதரிட்டை குடுத்தனுப்பி என்னை வீட்டுப்பக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லிட்டாங்க.அப்பாக்கு ஊரில கொஞ்சம் மரியாதை இருந்ததாலை ஊர் பெரியவங்க எல்லாரும் போய்  அடுத்தது பையனா பெதுக்குடுப்பா எண்டு சமாதனம் பேசி  என்னையும் பிள்ளையையும் கொண்டுபோய் விட்டிட்டு வந்தாங்க.பெண்ணுக்கு நானே மகா லட்சுமி  என்னு பெயர் வச்சு நானே கூப்பிட வேண்டிய கொடுமை .அங்கை முன்னைய மாதிரி பெரிசாயாருமே  என்னை கண்டுக்கவேயில்லை  கொடுமையா இருந்திச்சி அப்பதான் எனக்கு ....

 எனும்போதே உடைந்து அழத்தொடங்கியவளின் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்து விக்கலாக வந்து கொண்டிருக்க தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து.. ஒண்டும் கவலைப்படாத ஆறுதலா மீதிய சொல்லு என்று  சமாதனப் படுத்தி விட்டு சிகரெட்டை  பற்ற வைத்து ஜன்னலை  திறந்து புகையை வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் போது சில மடக்கில் தண்ணீரை குடித்து முடித்தவள் பெட் சீட்டை  இழுத்து உடலில் சுத்திய படி குளியலறைக்குப் போய் முக்கை சீறி முகத்தை கழுவி விட்டு வந்து கட்டிலில் ஏறி குந்தியிருந்தபடி விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தாள்.அப்பதான்  எனக்கு இரண்டாவது பிரசவம் ஆச்சு. என்னோட உடம்பு ரெம்ப வீக்கா இருந்ததால பக்கத்து  ஊரில இருந்த கவர்மன்ட்  ஹாஸ்பிட்டல   கொண்டு போய் போடிட்டங்க அடுத்ததும்   பெண்ணாவே பிறந்திடிச்சு.செய்திய கேள்விப் பட்டு யாருமே வந்து பாக்கல.நாலு நாள் கழிச்சு அப்பதான் வந்து வண்டிய பிடிச்சு புருசன் வீட்டுக்கு கூட்டிட்டு போனார்.ஆனா வாசல்ல வண்டிய பாத்ததுமே  என் மாமியார்  எதுக்கு இங்க வந்தீங்க நாங்க தலை முழிகிட்டம் அப்பிடியே போயிடுங்க என்று கத்தினார். சரி என் பெண்ணு மகா லட்சுமியை குடுத்திடுங்க நான் போயிடுறன் எண்டதும் ..நீ பிரசவத்துக்கு போனதுமே அதுக்கு விசக் காச்சல் வந்து செத்துப்போச்சு  புதைச்சிட்டம் எண்டு சொல்லிட்டு உள்ளை போய் கதவை சாத்திட்டாங்க என்று....திரும்ப உடைந்து அழுதவள்   பாதி அழுகை பாதி வார்த்தைகளாக சொல்லி முடித்து  சில நிமிட மௌனத்தை இடைவேளையாக எடுத்துக் கொண்டாள் ...


எனக்கு இன்னொரு ஜுஸ்தாறிங்களா...

அது ஜுஸ் இல்லை பீனா கொலடா..

எதோ ஒண்ணு.. தாங்களேன்..

அவளின் கதையோ அழுகையோ எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை  சண்டையும் பாட்டும் இல்லாத ஒரு  படம் பார்ததை போலஇருந்தது அடுத்த இரண்டு பீனகொலடாவை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே கிச்சனுக்குள் வந்தவள். சாரிங்க என்னோட கதைய சொல்லி உங்களை குழப்பிட்டனா .?

அதெல்லாம் இல்லை இதவிட நிறைய கதை என்னட்டை இருக்கு இந்தா..  என்று கிண்ணத்தை நீட்டி விட்டு எப்பிடி சிங்கப்பூர் வந்தாய்
கிண்ணத்தில் உதட்டை வைத்து ஒரு உறுஞ்சு உறுஞ்சியவள் மேசை மேலே ஏறி அமர்ந்தபடி சிங்கப்பூர் வந்தாதா..அது வந்து ...ம் ..நான் அப்பாவோட வீட்டுக்கு போயிட்டானா திரும்பவும் ஊர் பெருசுகள் எல்லாம் ஒண்டு கூடி  இரண்டு வீட்டையும் எங்க குல தெய்வம்  சாமி கோயில்ல கூப்பிட்டு பேசினாங்க ஆனா புருசன் வீட்டில அறுத்து விடுங்க எண்டு சொல்லிட்டாங்க .அப்பா எனக்காக எவ்வளவோ கெஞ்சி கூத்தாடிப்பார்த்தார். உன் பொண்ணுக்கு சுகம் வேணுமெண்டால் அப்பப்ப அனுப்பிவை இனி சேர்ந்தெல்லாம் வாழ முடியாது எண்டு அப்பாக்கிட்ட என்னோட  மாமியார் சொன்ன வார்த்தை  அன்னிக்கு செத்துப்போயிடலாம் எண்டு தோனிச்சு..
மூதேவி முண்டை ..என்று தொடங்கி சில கெட்ட வார்த்தைகளால் திட்டி  பக்கத்துல இருந்த குப்பைத் தொட்டியில் காறித் துப்பியவள்.  ஊ ர் காரங்க அவங்களுக்கு அடங்கிப்போயிட்டங்க அறுத்து விட சொல்லிட்டாங்க .அப்பா போலிசில கூ ட போய் சொல்லிப் பார்த்தார் இது பெரிய வீட்டு பிரச்னை நீங்களே பேசி தீத்துக்குங்க எண்டு சொல்லி அனுப்பிடங்க .என் மூத்த மகளுக்கு என்ன நடந்தது உண்மையிலேயே காச்சல் வந்தாதா அல்லது கொன்னு போட்டங்களா எதுவுமே தெரியல ஒரு மூண்டு மாசம் அழுதபடியே வீட்டுகுள்ள கிடந்தனா அந்த ஊரிலையே எனக்கு இருக்கப் பிடிக்கல.கொஞ்சம் மாற்றம் வரட்டும் எண்டு அப்பா மதுரைக்கு  சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க அதிகம் படிக்காததாலை வேலையும் எதுவும் கிடைக்கல அங்கை ஒரு மூனு  மாசம் ஓடிட்டுது.

அப்பதான் ஒரு ஏஜெண்டு  சிங்கப்பூரில வீட்டு வேலை இருக்கு அம்பதாயிரம் செலவாகும் ஒரு வருசத்திலேயே அதை சம்பாதிச்சுடலம்  போறியா எண்டு கேட்டாரு. அப்பா ஊரில வீட்டை அடமானம் வச்சு குடுக்கும்போதே பின்னாடி உனக்கு ஒரு தங்கச்சி இருக்கு பாத்து நடந்துக்கோ இனி எல்லாம் உன் கையில தான் இருக்கு எண்டு சொல்லி கொடுத்திட்டார் .அப்பதான் நானும் சம்பாதிச்சு என்னோட ஊரிலையே போய் எல்லாரும் பாக்கிற மாதிரி வாழணும் எண்டு ஒரு வேகத்தோட  ஒரு வயசு குழந்தைய அம்மாக்கிட்ட குடுத்திட்டு இங்கை வந்து சேர்ந்தனா ..என்று அவள் இழுத்ததும் .ஒ கதை இன்னும் முடியலையா.. பொறு என்று விட்டு ஒரு கதிரையை எடுத்து அவளுக்கு முன்னால் போட்டு அவள் கால்களுக்கிடையில் அமர்ந்து கொள்ள கால்களை கதிரையில் தூக்கி வைத்தவள் ..

இங்கைவந்த என்னையும் இன்னொரு கேரளா பெண்ணையும்   ஏஜெண்டு கூட்டிப்போய் ஒரு வீட்டில விட்டிட்டு எங்களோட பாஸ்போட்டை வாங்கிட்டு போயிட்டான்.அங்க அம்மு எண்டு ஒரு பெண்ணு இருந்திச்சு அதுதான் எங்களை கவனிச்சுக்கிட்டு இருந்திச்சு இரண்டு நாளா சாப்பிடுறதும் கதை பேசிறதும் படுக்கிறதும் தான் வேலை எங்களுக்கு என்ன வேலை எண்டு அம்முவை கேட்டபோதுதான் நான் சட்டில இருந்து அடுப்பில விழுந்தது புரிஞ்சுது.ஆரம்பத்தில கொஞ்சம் கடுமையா எதிர்ப்பு காட்டி சாப்பிடாமல் இருந்தும் பார்த்தோம் ஆனால் என்னைப்  போலவே மற்ற கேரளா பெண்ணும் குடும்பத்தால பதிக்கப் பட்ட பெண்ணுதான்.எங்களோட குடும்ப பிரச்னை நாங்க பட்ட கடன் எவ்வளவு எண்டு எல்லா விபரமுமே அம்முவுக்கு அத்துப்படியா தெரிஞ்சிருக்கு.அதெல்லாம் சொல்லி அம்மு நிதானமா பேசினப்போ தான் இந்தியாவில உள்ள ஏஜென்ட் பிளான்பண்ணியே என்னை மாதிரி பெண்ணுங்களை தேடிப்பிடிச்சு அனுப்பிறான் என்று எனக்கு புரிஞ்சுது  .
பாஸ்போர்ட் கையில இல்ல. வெளியே போலிஸ் பிடிச்சா ஜெயில். அடம்பிடிச்சு ஊருக்கு திரும்ப போனாலும் வாங்கின கடனை அடைக்க முடியாமல் குடும்பத்தோடை தற்கொலைதான் செய்ய வேணும். ஆனா எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டா ஒரு வருசத்திலேயே கடனை அடைச்சிடலாம்.இனி எங்களுக்கெண்டு ஒரு வாழ்க்கை இல்லை குடும்பத்துக்காக பிள்ளைக்காக வாழப்போறம் அதை எப்படி வாழ்ந்தால் என்ன  எண்டு அம்மு சொன்னதெல்லாம் சரி எண்டே தோணிச்சுது நாங்களும் ஒத்துக்கொண்டம்.அம்முவே கஸ்டமரோட எப்பிடிஎல்லாம் பழக வேணும் எண்டு சொல்லிக் குடுத்தா.நாங்க சரி சொன்னதுக்கப்புறம் எங்களை வேறை ஒரு வீட்டுக்கு மாத்தினாங்க அங்கே கஸ்டமர் வந்து போவங்க ஒரு மாசத்துக்கு மேல வெளியே அனுப்பவே இல்லை.நான் நல்லபடியா நடந்துக்கிட்டதால வெளியே அனுப்புறாங்க.ஆனா பிரச்னை ஏதும் வந்திட கூடாதுன்னு தமிழ்நாட்டு  கஸ்டமர்கிட்ட அனுப்புறதில்லை விசாரிச்சுத்  தான் அனுப்புவாங்க ஆனா நான் இங்க வந்ததுமே தமிழ்ப்பாட்டு போட்டிருந்துதா நான் அதிர்ச்சியாயிட்டன்.நீங்க சிலோன் எண்டதும் கொஞ்சம் நின்மதி இங்க வந்த மூனு மாசத்தில நான் பாத்த முதல் தமிழ் கஸ்டமர் நீங்கள்தான்.


ஒ அதுதான் உன் கஸ்டமெல்லாம்என்கிட்ட சொன்னியா...??

செல்லமாய் என் தலையை இழுத்து வயிற்றோடு அணைத்தவள்.நீண்ட நாளா யாரிட்டயாவது சொல்லவேணும் போல இருந்த மனப்பாரம். நீங்களும் நல்லவராஇருந்தீங்களா இந்த ஜூசும் நல்லா இருந்திச்சு அதுதான் சொல்லிட்டன்.

ஜுஸ் நல்லா இருந்திருக்கும் ஆனால் என்னை எப்பிடி நல்லவன் எண்டு சொல்லுறாய் ...?

உள்ளை வந்ததுமே உடனையே துணியை கழட்டச் சொல்லாமல் தூங்க சொன்ன போதே ..

அப்ப உன்னை தூங்க சொன்னது விடிய விடிய விழித்திருக்கலாம் என்கிற சுயநலம் தான் என்றபடி அவளை அப்படியே அள்ளிக் கொண்டு அறைக்குள் போய் கொண்டிருக்கும்போது என் கழுத்தை கைகளால் கோர்த்தபடி
அதுசரி நீங்க எதுக்கு சிங்கப்பூர் வந்தீங்க சொல்லவே இல்லையே
இதுக்குத்தான் ...என்ற படி அவளை கட்டிலில் போட்டு விட்டு விளக்கை அணைத்தேன் .
                         .......................................................................

தொலை பேசி சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து அதை எடுத்து காதில் வைத்தேன்    இன்னும் ஒரு மணி நேரத்தில வந்துடுறன் ரெடி பண்ணுங்க போன் கட்டாகி விட்டது.அவளை கட்டிலில் காணவில்லை நேரத்தைப்பார்த்தேன்  பத்துமணியை தாண்டிக்கொண்டிருந்தது எதையாவது எடுத்துக்கொண்டு போயிருப்பாளோ சட்டென்று உறைத்தது.போக முடியாது இரவே கதவை பூட்டி சாவியை மறைத்து வைத்திருந்தேன். காற்ச்சட்டையை தேடினேன் காணவில்லை அவசரமாக பெட் சீட்டை இழுத்து இடுப்பில் சுற்றியபடி எழுந்தபோது அடுப்படிக்குள் இருந்து சத்தம் வந்தது போய் பார்த்ததும் முதல்நாள் இரவு அப்படியே போட்டு விட்டிருந்த பத்திரங்கள் அனைத்த்தும் கழுவி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது நான் போட்டிருந்த துணிகள் தோய்க்கப்பட்டு யன்னலுக்கு வெளியே கொடியில் தொங்கிக்கொண்டிருந்தது .நிலத்தை துடைத்துக்கொண்டிருந்தவள் என்னை கண்டதும்..

எழும்பியாச்சா போய் குளிச்சுட்டு வாங்க டீ செய்யிறன் என்றவளிடம்
 எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை

இதுக்கு எக்ஸ்ராவா எல்லாம் பணம் கேட்க மாட்டன் ...

டாக்ஸி காரன் போன் அடுச்சவன் ரெடியாகு ...

சட்டென்று  முகம் மாறியவள்   என்னும் எவ்வளவு நேரத்தில வருவான் ...?

ஒரு மணி நேரதுக்குள்ளை..

சரி...  பிறிச்சில குடிக்கிறதை தவிர சமையல் சாமான் ஒண்டும் இல்லை சீக்கிரமா குளிச்சுட்டு போய் கறி காய் எதாவது வாங்கிட்டு வாங்க எதாவது சமைச்சு வச்சுட்டு போயிடுறன்..அதெல்லாம் வேண்டாம் நான் குளிச்சுட்டு வாறன் நீ ரெடியாகு வெளியில எதாவது சாப்பிடலாம்.என்றபடி குளியல் அறைக்குள் போகும்போதே "ஒரு தடவையாவது உங்களுக்கு சமைச்சு போடணும். என்னமோ தோணிச்சுது உங்களுக்கு பிடிக்காட்டி வேண்டாம்" .அவள் குரல் தழுதழுத்தது.ஒரு விநாடிநின்று  அவளை உற்று பார்க்க  தலை குனிந்து நின்றாள் முதல் தடவையாக அவள் மீது எனக்கு கொஞ்சம் கரிசனை பிறந்திருந்தது .சரி வாறன் என்றபடி குளித்து முடித்து அவள் தந்த டீ யை அவசரமாக உறுஞ்சி விட்டு கீழே போய் ஏ .ரீ. எம்  மிசினில் எனது மட்டையை விட்டு எவ்வளவு பணம் இருக்கு என்று பார்த்தேன் உடனடி செலவு போக கூட்டிக் கழித்து விட்டு  டாக்ஸி காரனுக்கு போனடித்து அந்த பெண்ணு இன்னும் ஆறு நாள் என் கூடவே இருக்கட்டும் வந்து பணத்தை வாங்கிட்டு போ  என்றதும் ஐயையோ அதெல்லாம் முடியாது பிரச்சனையாயிடும் அவங்கள் சந்தேகப் படுவாங்க சார் மோசமான  ஆக்கள் பிறகு நான் தொழில் பண்ண முடியாது என்று கெஞ்சினான்.

அவனை சமாதனப் படுத்தி  அவளை  எனக்கு இன்னுமொரு ஆறு நாளைக்கு பிடிச்சிருக்கு அவ்வளவுதான். அதுக்கு மேல என்னட்டை பணம் இல்லை அவங்களுக்கு பணம் தானே வேணும் வந்து வந்து வாங்கிட்டுப் போ என்றேன்.டாக்ஸி காரன் இறங்கி வந்தான் டாக்ஸி  யிலிருந்து.இப்போ அவனே திட்டத்தை போட்டான்.இப்ப கூட்டிட்டு போயிட்டு இன்னொரு  பார்டிக்கு ஆறு நாளைக்கு வேணும் எண்டு சொல்லி சாயந்தரம் திரும்ப கொண்டாந்து விடுறேன் ஒருத்தருக்கும் பிரச்னை இல்லை என்றான்.அவன் சொன்னதும் சரியாகப் பட்டது.மேலே வந்த என்னிடம் என்னங்க வெறும் கையோட வாரிங்க எதுவுமே வாங்கலையா..இல்லை நீ இன்னிக்கு சமைக்க வேண்டாம் நாளைக்கு விரும்பின மாதிரி சமைக்கலாம் இப்ப புறப்படு என்று சொன்ன என்னை புரியாமல் பார்த்தவளிடம் டாக்ஸி காரனிட்டை பேசிட்டன் இன்னும் ஆறு நாள் என் கூடத்தான்.ஆனா இப்ப போயிட்டு சாயந்தரம் வரணும்.சொல்லி முடித்ததும் அவளிடம் முதலில் சந்தேகம். விபரமாய் சொன்னதும்  ஆச்சரியம். கட்டியணைத்து ஒரு இச் வைத்ததும் மகிழ்ச்சி.புறப்பட்டு போய் விட்டாள் .
                                   ...................................................

அன்று மாலை எதிபார்த்து கீழேயே நின்றிருக்க மானின் துள்ளலோடு டாக்ஸியை விட்டிறன்கினாள்.பணத்தை எண்ணி டாக்ஸிகாரனின் கையில் வைத்தேன்.சார் பிரச்னை ஒண்ணும் பண்ணிட மாட்டின்களே.. குழைந்தான். என்னை எவ்வளவு காலமா உனக்கு தெரியும் இதுவரை எதாவது பிரச்னை வந்திருக்கா..?

இல்லை சார் ஆனால் நீங்களும் முதல் தடவையா ஒரு வாரத்துக்குகேக்கிறீங்க .. தலையை சொறிந்தான்
சட்டப்படி செய்கிற எல்லா தொழிலையும் தான் பொய்யும் பித்தலாட்டமும் நிறைய இருக்கும்.இது மாதிரி நாங்கள் செய்கிற தொழில் எல்லாத்துக்குமே  நம்பிக்கைதான் முதல்ல முக்கியம் ..அது எப்ப போகுதோ அங்கை உயிரும் போயிடும்.ஒண்டு எடுக்கவேணும் அல்லது குடுக்கவேணும் இது எல்லாருக்குமே தெரியும்  ஒண்டும் பிரச்னை இல்லை நம்பலாம் போ...  சரி சார் பொண்ணு கிட்ட  போன் குடுத்து அனுப்பியிருக்கிறாங்க காத்தால ஒருக்கா ராத்திரில ஒருக்கா மறக்காம அவ ஏஜெண்டுக்கு போன் பண்ணிட சொல்லுங்க  ஒரு பாதுகாப்புக்கு அவ்வளவு தான் இல்லாட்டி அவங்களா போன் பண்ணினா உங்களுக்கு தொந்தரவு.. டாக்ஸி காரன் கிளம்பும் போது  ஆமா அவங்களிட்டை வேற பார்டி எண்டு தானே சொல்லியிருக்கிறாய்  சொல்ல மறந்திட்டன் சீனா காரன் எண்டு சொல்லியிருக்கிறன்  அவ போன் றின்ங் ஆனா நீங்க எடுத்திடாதீங்க சார் ... போய் விட்டான்.
பாவிப் பயலே ..ஆபிரிக்கா காரன் எண்டு சொல்லியிருந்தாலும் பெருமையா இருந்திருக்கும் இப்பிடி சீனாக்காரன் எண்டு சொல்லி சிறுமைப் படுத்திட்டானே என்று எரிச்சலாய் இருந்தது.ஆனாலும் அடுத்த ஆறு நாட்கள் எல்லாம் மறந்து சினிமா கடைகள் பார்க் என்று  சிங்கப்பூர் முழுதும் சுற்றினோம்.விதவிதமாய் சமையல் செய்தாள். அவளுக்காக சில துணிகள் எடுத்துக் கொடுத்தேன். .ஜீன்ஸ் ரீ சேட்டில் அழகாயிருந்தாள்.ஆறாவது பொழுதாக  சூரியனும் சுருங்கி விரிந்திருந்தன் என்னைப்போலவே.அன்று அவள் போக வேண்டிய நாள் இந்த ஆறு நாளில் நிறையவே பேசியிருந்தோம்.அவள் அழுகை, சிரிப்பு, கோபம் என்று அனைத்தையும் கொட்டியி ருந்தாள்.அதைவிட பீனா கொலடா காக்ரெயிலை  சுவையாக கலக்க கற்றுக்கொண்டிருந்தாள்.

எல்லாம் தயார் செய்து விட்டு டாக்ஸி காரனுக்காக காத்திருந்த அந்த இறுக்கமான பொழுதில் இரண்டு பீனா கொலடாவை தயாரித்து இரண்டு கிண்ணத்தில் கொண்டு வந்தவள் ஒன்றை என்னிடம் நீட்டி கடைசி சியர்ஸ் என்றவள்  உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா ....
என்ன இழுவை நீளமா இருக்கு. ம் ..கேளு
நீங்க எதுக்கு என்னைய மாதிரி பெண்ணுகளோட சகவாசம்.... ஒரு நல்லா பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமே
நான் நல்லவனா ,?

ம் ...ரெம்பவே ..

உன்னோட ஏஜெண்டு ?

நல்லவந்தான் .....

உனக்கு எல்லாம் சொல்லி தந்த அம்மு ?

அவளும்தான்...

உன்ன வைச்சு சம்பாதிக்கிறவனும் நல்லவன் உன்கிட்டை சுகம் அனுபவிக்கிறவனும் நல்லவன் .அப்போ நீ மட்டும் உன்னை எதுக்கு கெட்டவளா நினைக்கிறாய்..

நான் செய்யறது எனக்கு மனச்சாட்சி உறுத் துதே.அது என்னை கெட்டவள் எண்டு சொல்லுது..

நீ யாருக்காவது நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறியா..??

ம் ......எனக்கு தெரிஞ்சு இல்லை..

அப்போ நீ நல்லவள் தான்.இந்த உலகத்திலேயே நம்பிக்கை துரோகம் ஒண்டு மட்டும் தான்  கெட்டது மற்றபடி கொலை செய்தவன்.கொள்ளை அடிக்கிறவன்  கூட  நல்லவந்தான்.நீ முதல்ல உன்னோட மனச்சாட்சியை கொன்னுட்டு உனக்கு சரி எண்டு பட்டதை செய்திடு .காலமும்  நீ செய்தவைகளால் உனக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவைதான் நீ செய்தவை சரியா தவறா எண்டு தீர்மானிக்கும்...என்று குட்டி பிரசங்கத்தை முடித்தேன் .
என்னங்க எதோ சாமியார் மாதிரியே பேசுறீங்களே
அதலைதான் உன்னை மாதிரி அழகான பெண்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்
லேசாய் வெட்கப் பட்டு சிரித்தவள்  தனது பையிலிருந்து ஒரு சிறிய பார்சலை எடுத்து நீட்டி  இது உங்களுக்கு.வாங்கி பிரித்துப் பார்த்தேன்  எனக்கு பிடிக்காத பச்சை நிறத்தில் ஒரு ரீ சேட் .

இது எப்ப வாங்கினாய் ?

நீங்க எனக்கு ஜீன்ஸ் வாங்கும் போதே உங்களுக்கு தெரியாமல் வாங்கிட்டன்.பிடிச்சிருக்கா..?

ம் ..பிடிச்சிருக்கு என்றபடி அதை போட்டுக் கொள்ள டாக்ஸி வரவும் சரியாக இருந்தது.அவளிடம் கொடுக்க நினைத்து ஐம்பது டாலரை கையில் எடுத்ததுமே என்ன எனக்கு டிப்ஸ்சா என்கிற அவளது கடும் தொனியிலான கேள்வியால் கொஞ்சம் தடுமாறி.. ச்சே ..இந்த ஆம்பிள புத்தியே இப்பிடித்தான் சொதப்பிடும் என்று நினைத்தபடி பணத்தை சட்டென்று சட்டைப்பையில் வைத்து விட்டு என்ன குடுக்கலாம் யோசித்தேன் சட்டென்று பொறி தட்டியது காக்டெயில் கலக்கும் சில்வர் கிண்ணத்தை எடுத்து வந்து இந்தா உனக்குப் பிடித்த பீனா கொலடா செய்ய என்னோட ஞாபகமா...... அவள் முன்னால் நீட்ட அதை வாங்கி விட்டு என் கழுத்தை கையால் வளைத்து கன்னத்தில் அழுத்தமாய் ஒரு ப்... ச்  .....

நிச்சயமாய் அது சம்பிரதாய முத்தமாக இருக்கவில்லை ஒரு ஆத்மார்த்த அன்பு இருந்தது.ஏதோ என்னால உனக்கு செய்ய முடிஞ்ச உதவி இவ்வளவுதான்  இந்த ஆறு நாள் நின்மதியா சந்தோசமா இருந்தியா என்றதும் தலையை குனிந்து "கல்யாணமாகி மூண்டு வருசம் என் புருசனோட இருந்ததை விட இந்த ஆறு நாள் ஆயுள் முழுதும் போதும் நன்றி"  என்றவள்  டாக்ஸியில் கையசைத்து விட்டு சென்று விட்டாள்.நானும் சில நாளில் வேறு நாடுகளிற்கு போய்விட்டு சில மாதங்கள் கழித்து சிங்கப்பூர் போய் டாக்ஸி காரனிடம் விசாரித்தேன் அவளை கொங்கொங்  அனுப்பிவிட்டார்கள் இன்னொண்டு சவுத் இந்தியன் புதுசு வேணுமா என்றன்.சாமி இந்தியாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.ஆனால் நான் ஜப்பான் கேட்பதை நிறுத்தவில்லை அவனும் கடைசிவரை கொடுக்கவேயில்லை .
                     00000000000000000000000000000000000000000000000

கடந்த வருடம் நானும் மனைவியும் தமிழ்நாடு முழுக்க ஒரு சுற்றுப்பயணம் போவதாக முடிவு செய்திருந்தோம் ட்ராவல் ஏஜென்சி ஒரு வாரத்துக்கான பயண திட்டத்தை தந்தான்.அதிலிருந்த இடங்கள், கோவில்கள், ஊர்கள்  என பாத்துக்கொண்டு வந்தபோது ஒரு ஊ ரின் பெயரைப்பார்ததும் சட்டென்று அமுதவல்லி நினைவுக்கு வந்தாள்.பல வருடங்களுக்கு முந்திய நினைவுகளை என் மூளையின் நியாபக மடிப்புகளில் இருந்து வெளியே எடுக்க முயற்சித்தேன் அதில் பலனும் கிடைத்தது.அவளின் ஊருக்குள் எங்கள் வண்டி நுழைத்ததும் டிரைவரிடம் முனியாண்டி கோவிலை விசாரிக்கச்சொன்னேன்.பிரதான வீதியில் இருந்து  புழுதி படர்ந்த மண் பாதையில் வயலும் சிறிய பற்றை காடுகளையும் தாண்டிப்போய் முனியாண்டி கோவிலுக்கு முன்னால் வண்டி நின்றது.பரந்து விரிந்த பெரிய ஆல மரம் ஒரு மண்டபத்தில் சிறிது பெரிதாய் சிலைகள் அங்காங்கு நடப்பட்டிருந்த சூலமும் வேல்களும் லேசாய் ஒரு வித அச்ச உணர்வை தந்தது வண்டியில் இருந்து இறங்கிய மனைவி என்னங்க இப்பிடி ஒரு கோயிலுக்கு கூ ட்டியந்திருகிறீன்கள்
இது சக்தி வாய்ந்த கடவுளம் போய் கும்பிடு..

யார் சொன்னது ?

ஒரு பேஸ்புக் பிரெண்ட் சொன்னான்..

பேஸ்புக் பிரெண்ட் சொன்னதை எல்லாம் நம்பி வாறதா லூசா.உங்களுக்கு...

பேஸ்புக் பிரெண்ட் எண்டால் அவ்வளவு கேவலமா ..

இல்லை கோயில் சின்னதா இருக்கே.,??

கோயில் சின்னதா இருந்தா சாமியில சக்தி இருக்காதா??

என் கையில் இருந்த கற்பூரத்தை வெடுக்கென்று பிடிங்கியவள் கோயிலுக்குள் போய் கற்பூரத்தை கொழுத்தி கும்பிடும்போதே நான் கோவிலை நோட்டம் விட்டேன் அமுதவல்லி சொன்ன அடையாளங்கள் உபயகரரின் பெயர்கள் சரியாகவே இருந்தது இதுதான் அவளது குலதெய்வகோவில் என்று உறுதியானது.மனைவி கும்பிட்டு முடித்ததும் புறப்பட்டோம் பிரதான வீதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி போன் றீ சார்ச் பண்ணிட்டு வாறதா சொல்லிடு போய் அங்கிருந்த கடையில் நின்றிருந்த பெண்ணிடம் போன் இலக்கத்தை சொல்லி ஏர் செல் என்று ஐநூறு ரூபாயை நீட்டி விட்டு..இந்தாம்மா இங்கை அமுத வல்லி தெரியுமா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி சிங்கப்பூரில வேலை பார்த்தவங்க தெரியுமா என்றதும்.பதினெட்டு  வருசத்துக்கு முன்னாடியா அப்பஎனக்கு தெரியாதுங்க இது நான் வாழ்க்கைப்பட்ட ஊரு அந்த பெரியவரை கேளுங்க என்று மரத்தடியில் குந்தியிருந்தவரை காட்டினாள்.


அவரிடம் போய் அதே அமுதவல்லி கேள்வியை கேட்டதும் வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை பக்கத்திலிருந்த செடியின் மீது பொழிந்து விட்டு நான் கேட்டதற்கு பதில் தராமல் தம்பி எந்த ஊரு எங்கையிருந்து வாறிங்க..எதிர் கேள்வியை போட்டார்.ஐயா நான் சிங்கப்பூரில அமுதவல்லியோடை  வேலை பார்த்திருக்கிறன்.இப்ப இந்த பக்கமா வந்தனா சும்மா பாத்திட்டு போகலாம் எண்டு விசாரிச்சன் அவ்வளவுதான் என்றதும் அமுதவல்லியா.... என்று தாடையை தடவியவர் மேலதிகமா எதாவது க்குளு  கிடைக்குமா என்னை பார்த்தார்.அவ அப்பா வாத்தியார் பெரிய வீட்டில சம்பந்தமாகி பிரிஞ்சிட்டங்க இரண்டு பெண்ணு அதில ஒண்டு செத்துப்போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிழவர் கண்ணில் மின்னல் .அட நம்ம அமுதவல்லி வெளி நாட்டில வேலை செஞ்ச பெண்ணு அதோட மூத்த பெண்ணு செத்துப்போகல அவங்க மாமியார் தான் கோவத்துல குழந்தைய யாருகிட்டயோ குடுத்திருங்க அமுதவல்லி எப்பிடியோ அதை தேடிப்பிடிசுட்டுது இப்ப இரண்டு பெண்ணுங்களும் மெட்ராசில படிக்குது.

அமுதவல்லி இப்போ பெரிய ஏஜென்ட்டு எங்க ஊருல மட்டுமில்ல பக்கத்துக்கு ஊரு பெண்ணுகளை எல்லாம் வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்புது அடிக்கடி அதுவும் வெளி நாடெல்லாம் போய் வருது நம்ம சாதிக்கார பெண்ணு எண்டு சொல்லவே பெருமையா இருக்கு  என்று  இன்னொரு தடவை செடி மீது எச்சிலை பொழிந்தவரிடம்  வீடு எங்கை எண்டு சொல்லவே இல்லையே என்றதும்  இப்பிடியே நேரா போங்க இடப்பக்கம் பச்சை கலரில ஒரு மாடி வீடு வரும் அதோட பேர் கூட வாயில நுழையாத வெளிநாட்டுப் பேர் வைச்சிருக்கு அதுதான் வீடு .அவருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்படும்போது தம்பி உங்க பேரை சொல்லவே இல்லையே .என் பேரு ராஜேந்திர சோழன் .அவர் முகத்தில் திருப்தியில்லை மீண்டும் உங்க முழுப்பேரு என்னதம்பி.

அவர் என்பெயரில் என்னத்தை தேடுகிறார் என்று புரிந்தது  ஆனால் புரியாத மாதிரியே முளுப்பெயரா அப்பிடின்னா என்றதும் உங்க அப்பா பெயர் என்னதம்பி என்றார் .போன் சார்ச் ஆகி எஸ். எம் .எஸ் வந்தது அப்பா பெயர் ராஜ ராஜ சோழன் என்றுவிட்டு வண்டியில் ஏறி ரைவரிடம் கொஞ்சம் மெதுவா போப்பா என்றுவிட்டு இடப்பக்கம் இருந்த வீடுகளை கவனித்துக் கொண்டேயிருந்தேன் பச்சைக் கலர் மாடி வீடு வந்தது முன்னால் ஒரு டொயோட்டா வண்டி. மாடிச்சுவரில் pinacolada என்று எழுதியிருந்ததை பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது.வீட்டுக்கு இப்பிடி பெயரை யாராவது வைப்பாங்களா  சில நேரம் அவள் வாழ்க்கையில் அதுவே ஒரு மற்றதை குடுத்திருக்கலாம் அல்லது என் நினைவுகள் இன்னமும் இருக்கலாம் என்னுடைய பெயர் தெரியாததால் நான் கற்றுக் கொடுத்த pinacolada வின் பெயரை வைத்திருக்கலாம்  என்று நினைத்தாலும்  அவள் வசதியாக வாழ்வது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆனால்  பல பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புறதா அந்த கிழவர் சொன்னாரே அமுதவல்லியே அந்த ஏஜென்டா மாறியிருப்பாளா..? இருக்காது எவ்வளவு சிரமங்களை அனுபவித்தவள் அப்படி செய்ய மாட்டாள்.அப்போ எப்பிடி இவ்வளவு வசதி வாய்ப்புவந்தது..? இப்படி சந்தேகத்தையும் சமாதனத்தையும் மனது சொல்லிக்கொண்டிருந்தது.வண்டி ஊர் எல்லையை தாண்டிக்கொண்டிருக்க  உடம்பு சூடாவது போல இருந்ததால் ஏ சி யை கொஞ்சம் கூட்டி விட்டு அப்படியே சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.
                        .............................................................................

என்னப்பா நித்திரை இன்னமும் முறியேல்லையோ துணியளை கொண்டு போய் போட்டிட்டு கடைக்குப்  போய் பூனைக்கு சாப்பாடும் வங்கிக் கொண்டு வாங்கோ.. சத்தத்தை கேட்டு சோபாவிலில் சாய்ந்திருந்த நான் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன் ரீ  வி யில் செய்தி சொல்லிக்கொண்டிருந்த பிரெஞ்சு பெண் திடீரென என்னைப் பார்த்து நீ முதல்ல உன்னோட மனச்சாட்சியை கொன்னுட்டு உனக்கு சரி எண்டு பட்டதை செய்திடு .காலமும்  நீ செய்தவைகளால் உனக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவைதான் நீ செய்தவை சரியா தவறா எண்டு தீர்மானிக்கும்...என்று தமிழில் சொல்வது போல் இருக்க  கண்களை கசக்கிவிட்டு ரீ வி யை பார்த்தேன்.லெபனானில் கட்டிடங்களில் வீழ்த்து வெடித்த குண்டுகளின் கரும் புகை நடுவே வெள்ளையுடை அணிந்த குழந்தைகள் சிவப்பாய் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. கருப்பு துணியால் தன்னை முழுவதுமாக மறைத்த ஒருவன் ஆரஞ்சு துணியோடு முழங்காலில் அமர்திருந்த அமெரிக்க படப்பிப்டிப்பாளனின் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தான்.செய்தியில் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தது. பச்சை நிற ரீ சேட்டை இந்த வருடம் எறிந்து விடுவதென முடிவெடுத்தேன் ..