Navigation


RSS : Articles / Comments


குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

8:50 AM, Posted by sathiri, No Comment

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே
இந்தவார ஒரு பேப்பரிற்காக

83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)

புதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் " சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிருந்தனர்.அதுமட்டுமல்ல "அறுபதுநாளில் ஆங்கிலம் கற்க" எண்டொரு ஸ்போக்கிண் இங்கிலிஸ் புத்தகத்துடன் ரியுசனுக்கு வேறை அலையத்தொடங்கிவிட்டார்கள்.இப்பிடியெல்லாம் இருக்க கொழும்பில் இருந்து வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ரேகாவின் குடும்பமும். .ரேகாவின் தந்தை எங்கள்ஊரை சேர்ந்தவர்தான்.

கொழும்பில் இருந்து வந்த அனேகமான குடும்பங்கள் தங்கள் உறவுக்காரர்களின் வீடுகளில் குடியேறிவிட ரேகாவின் குடும்பம் மட்டும் யாரும் தங்களுடன் ஏற்றுக்கொள்ளாததால் தனித்து விடப்படவே நாங்கள் எங்கள் ஊரில் யாருமற்றிருந்த பழையகாலத்து நாற்சார சுண்ணாம்பு வீடொன்றை துப்பரவாக்கி அதில் குடிஇருத்தினோம்.ரேகாவும் முதல் நான் சொன்ன கொழும்பு பெண்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய பெண்ணாக இருந்தாள். அந்தவருடம் பத்தாவது படித்துகொண்டிருந்தாள்.அவளிடம் ஒருபார்வைக்காகவே எனது நண்பர்கள் ஏன் நான் உட்பட அவர்கள் வீட்டுக்கு முன்னாலை அடிக்கடி போய்வருவம்.அவர்கள் இருந்த வீட்டை பொதுவாக எல்லாரும் பழைய வீடு என்றுதான் சொல்லுறது வழைமை.அதன்பின்னர்தான் மெல்லஅவர்களைப்பற்றிய கதை ஊரில் அடிபடத்தொடங்கியது ரேகாவின் தந்தை கொழும்பில் கணக்காளராய் வேலை பார்த்தவராம் அவர் மட்டக்கிளப்பு பெண் ஒருத்தியை காதலித்து தன் தாய் தந்தை உறவுகாரர்களின் சம்மதமின்றி கலியாணம் செய்ததால்தான் எங்கள் ஊரில் யாரும் அவருடன் கதைப்பதில்லையென்று தெரிய வந்தது.

அதுமட்டுமல்ல அவர்எங்களிற்கு நெருங்கிய உறவு என்றொரு மேலதிகதகவலும் கிடைக்கவே.அதை உறுதி செய்ய ஒருநாள் வெத்திலை பாக்கு இடித்துக்கொண்டிருந்த அம்மம்மாவை ஓரம்கட்டி "எணோய் உந்த பழைய வீட்டிலை குடியிருக்கிற கொழும்பாக்கள் எங்களுக்கு சொந்தமாம் உண்மையோ" எண்டு கதையை தொடக்கினதுதான் தாமதம் அம்மம்மா கோபமாய் "அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா?? ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி எப்பிடியாவது அம்மம்மாவிடம் முழுவிபரத்தை அவர் வழியிலேயே போய் கேட்டறிய எண்ணி நானும். உண்மையோணை நான் அந்தப்பக்கம் போறேல்லை பிறகேன் ஏதும் வாங்கி குடிக்கப்போறன் சொந்தம் எண்டு கேள்விப்பட்டன் அதுதான் என்னமுறை எண்டு கேட்டன். சரி அவை ஆர் எண்ட .அம்மம்மா தொடங்கினார் எடேய் அவன் எனக்கு பெறாமகன் முறை பெடி நல்லவன் ஆளும் நல்ல வடிவான ஆம்புளை நல்ல கெட்டிக்காரன் படிச்சு எக்கவுண்டன் வேலையும் கொழும்பிலை எடுத்து நல்ல சம்பளம் ஆனால் அவனை உந்த மட்டக்கிளப்பள் மருந்து குடுத்து மயக்கிபோட்டாள் "எண்டார்.

அதுக்கு நான் சொன்னன் ஏனணை அவாவும் நல்லாப்படிச்சு கொழும்பிலை எக்கவுண்டன் தானாமே பிறகேன் இவரை மயக்கவேணும்" எண்டதும்.அம்மம்மா கோவமாய் "எடேய் அவளெங்கை படிச்சவள் அவள் மந்திரம் மாயம் செய்து எக்கவுண்டன் ஆகிட்டாள் அதமாதிரி இவனையும் மயக்கிபோட்டாள் எண்டு"பாக்குஉரலை ஓங்கி குத்த நானும்எனக்கும் வந்தவிசயம் முடிஞ்சுது அதாவது ரேகான்ரை அப்பா அம்மம்மாக்கு பெறாமகன் எண்டால் எனக்கு சித்தப்பாவோ பெரியப்பா முறை அப்ப ரேகா தங்கை முறை.அட சே கிழவி இப்பிடியொரு குண்டைத்தூக்கி போட்டிட்டுதே எண்டு கவலையானாலும்.அம்மம்மா சொன்ன மந்திர விசயம் சிலநேரம் உண்மையா இருந்தால் நான் படிச்சு சோதினை எழுதி பாசாகிறதெல்லாம் நடக்காத அலுவல் அதாலை ரேகான்ரை அம்மாட்டை மந்திரத்தை கேட்டுப்படிச்சு பேசாமல் ஒரு டொக்ரர்ஆகவோ இஞ்சினியராவே வந்திடவேணும் என்று நினைச்சபடி.வழைமையான கோயில் மடத்தடிக்கு போகவும் அங்கு தயாராய் இருந்த என் நண்பன் இருள்அழகன் என்னிடம் டேய் வீட்டிலை கேட்டனியா ரோகா என்ன முறையாம் உனக்கு எண்டவும். நான் "அட போடா அவள் எனக்கு தங்கச்சிமுறையா போச்சுது எண்டு கவலையோடை சொன்னதுதான் தாமதம்.

எங்கள் ஊர் கோயில் குளத்தில் இருந்த அத்தனை தாமரைப்பூவும் இருள்அழகனின் முகத்தில் மலர்ந்தது போல ஒரு புன்னகையுடன் பிள்ளையாரான உண்மையாவோடா எண்டவன் சரி அப்ப போய் கொக்ககோ கோலா குடிச்சிட்டு வருவம் வா மச்சான் எண்டு கூப்பிட்டான்.அட ஒரு பிளேன்ரீ கூட வாங்கித்தாராதவன் ரேகா எனக்கு தங்கை முறை எண்டதும் கொக்கோ கோலா குடிக்ககூப்பிடுறான் பின்னாலை ஏதோ விலங்கம் இருக்கு எண்டு நினைச்சபடி போய்விட்டேன்.நான் நினைச்சபடியே ஒருநாள் இருள்அழகன் என்னிடம் டேய் ரேகாவை நான் லவ்பண்ணுறன் அவளுக்கும் விருப்பம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன் ஆனால் நேரை கேக்க பயமா கிடக்கு அவளின்ரை மனசை கவருற மாதிரி நீதான் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தர வேணுமாடா எண்டு கெஞ்சினான்.ஆனால் ரேகாவிற்கு அப்பிடி ஏதும் விருப்பம் இருந்ததாய் எனக்கு தெரியேல்லை ஆனால் நம்ம இருள்அழகன் கடிதம் குடுத்து பெட்டையளிட்டை பேச்சு வாங்கினது அது ஒண்டும் முதல்தரம் இல்லையே அதுமாதிரி ரோகாவிட்டையும் பேச்சு வாங்கிறதை கூத்துப்பாக்கலாம் எண்டு நினைச்சு "குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே" என்று என்னுடைய வழைமையான நக்கல் பாணியிலேயே கவிதை வடிவில் எழுதி நண்பனிடம் கொடுத்துவிட்டேன்.ஆனால் நான் ஒன்று நினைக்க ரேகா ஒன்று நினைத்துவிட்டாள்.

அந்தக்கடிதத்தை அவள் அழுதபடியே தன்வகுப்பாசிரியையிடம் காட்ட. அந்த ஆசிரியை அதிபரிடம் காட்ட. அதிபர் ரேகாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் பாடசாலை அதிபரிடம் வந்து முறையிட. ஒரு தலைமை மாணவன் வந்து எங்கள் வகுப்பில் இருள்அழகனை அதிபர் கூப்புடுறார் என்றுவிட்டு போனான்.இருள்அழகனும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் புதுமணப்பெண்ணைப்போலை எங்களை பார்த்தபடி போய்விட்டான்.கொஞ்ச நேரத்தாலை வேறையொரு தலைமை மாணவன் வந்து என்னைக் கூப்பிட்டான். நண்பன் என்னை போட்டுக்குடுத்திட்டான் எண்டு எனக்கு விளங்கிவிட்டது . நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களா??வேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.

No Comment