Navigation


RSS : Articles / Comments


வயலும் வைரவரும்

2:23 PM, Posted by sathiri, No Comment

வயலும் வைரவரும்.

இந்தவார ஒரு பேப்பரில்

வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான்.

மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன். எங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை.பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம்.பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார்.அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும்.பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை அதக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இருள்அழகனும்தான்.ஆனால் ஊரிலை அந்தகாலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர் அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.

பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர்.நாய் தானே அவரின்ரை வாகனம்.எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும் தான் வைரவருக்கு துணை.யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுத்திருக்குங்கள்.நாங்களும?? வயலிலை விதை பொறுக்க வாற பறைவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிட்டிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம். அதுமட்டுமில்லை அதுதான் வைரவர் கோயில் மணியும் 2 இன்1 எண்டு பயன்படும். மாலைநேரத்திலை அந்தக்கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான்.ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது.

வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது.இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமுகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர் அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போக மாட்டார்.அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்கு மட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார்.ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை. ஒரு அறுவடைக்காலம் சிலர் வைரவருக்கு பொங்கிபடைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து(சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யப்போறன் பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அனியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது கள்ளபீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது.

ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப் போட்டு மயங்கிவிழுந்திட்டார். சுத்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக்கேக்கிற அதே வசனமான ஆ...நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது. எண்டு கேட்டார்.அதுவரை காலமும் அவரை டேய் எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் அய்யா உங்களிலை வைரவர் வந்தவர் எண்டு சொல்லவும். அவர் அப்பிடியா எண்டு கேட்டிட்டு வைரவரைப்பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார்.அதுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து. மழைவந்தால் மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத்தொடங்கிட்டார்.

அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே. உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார்.அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப்பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம் அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.

ஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு. வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம்.அவருக்கு நாங்கள் தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது.தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன் என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார். அடுத்த வெள்ளிக்கிழைமையும் வழைமை போல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர்அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர். சனங்களின் தொல்லை குறையவே.வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்தக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.

No Comment