Navigation


RSS : Articles / Comments


முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்

12:15 AM, Posted by sathiri, 2 Comments

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்
சாத்திரி ஒரு பேப்பர்

யுத்தம் முடிந்து ஆண்டு  மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட  மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு  தங்கள் உறவுகளை பார்க்கவும்  வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை  செலவிடவென  செல்லும்  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி  நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால்  இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை  தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால்  அப்படிப் போகின்றவர்கள்  போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு  திரும்பி வந்தால்  எவ்வித சிக்கல்களும் இல்லை.  
போகிறவர்கள் தங்கள்  தேவைகள் அல்லது  வேலைகள் தவிர்ந்து  வேறு விடயங்களில்  மூக்கை  நுளைப்பது பிரச்சனையாகிப் போகின்றது.  அதில் முதலாவது   போகின்றவர்கள்  அவர்களிற்கு தெரிந்த அல்லது  அவர்கள் கண்ணில்  படும்  காயமடைந்து அங்கவினர்னகளாகி அல்லது மாற்றுத் திறநாளிகளாக  வாழும் முன்னை நாள் போராளிகளை படமெடுத்து விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பியதும்  அதனை தங்கள் தளங்களில் அல்லது முகப் புத்தகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.

பதிபவரது நோக்கம் என்னவாக இருக்கும் என்பதற்குமப்பால். அதனை பார்ப்பவர்கள் அதற்கு லைக் போட்டு பார்வைகளை  கூட்டுகின்றார்கள். அண்மையில் ஊரிற்கு போயிருந்த ஒருவர்  கைகள் இரண்டு இயங்காத முன்னை நாள் பெண் போராளியொருவர்  வாளிக் கயிற்றினை  வாயால் கவ்வி இழுத்து  கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளுவதை  படமெடுத்து  தனது முகப் புத்தகத்தில் பதிந்திருந்தார். அந்தப் படத்திற்கு சுமார் நூற்று முற்பதற்கும் மேற்பட்டவர்கள் லைக்  பண்ணியிருந்தார்.   அதனை பார்த்த எனக்கு உண்மையில் எதுவுமே புரியவில்லை.  வாயால் தண்ணி அள்ளுவதற்காக லைக் போட்டார்களா? அல்லது அவரது கைகள் இரண்டும்  இயங்காதற்கு  லைக் போட்டார்களா?? அல்லு மன்னை நாள் பெண் போராளி என்பதற்காகவா? அல்லது அந்தப் படம் தத்துரூபமாக எடுக்கப்பட்டதற்கா?  தனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி  தனது கணவனையும் வாழ்வையும் தொலைத்து  இரண்டு கைகளும் இயங்கமுடியாத நிலையிலும் நம்பிக்கையோடு தன் வாழ்நாளை  எதிர் கொள்ளும்  ஒரு பெண் போராளியின் படம்  லைக் பண்ணக்  கூடியததாகவா இருக்கின்றது?  இதனை  நண்பர் ஒருவரிடம் நான் கூறி கவலைப்பட்டபொழுது அவர் சொன்ன விடயம். அம்மா இறந்து போனார்  என்று ஒருவர்  முகப் புத்தகத்தில் தனது தயாரின் படத்தை போட்டு மரண அறிவித்தல்  போட்டிருந்தாராம். அதற்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லைக் பண்ணியிருந்தார்களாம்.

 அதை விட இது பரவாயில்லையென்றார். இரண்டாவது விடயம்.  இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர்   இலங்கையரசு  தனது வெற்றியை  பறைசாற்றவும். தம்மை யாரும் வெல்ல முடியாது  தங்களோடு  மோதுபவர்களிற்கு இதுதான் முடிவு என்கிற  மமதையை   தன் குடிமக்களிற்கும் உலகிற்கும்  சொல்வதாற்காக முல்லைத் தீவில்  புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை சேகரித்து ஒரு கண்காட்சி  இடத்தையும்.  பிரபாகரன் வசித்த  அதி உச்ச பாதுகாப்பு வசதியுடன் அமைந்திருந்த  நிலக் கீழ்  வீட்டையும்  கடற் புலிகளின்  பயிற்சி பெற்ற நீச்சல் குளத்தையும்  சுற்றுலா மையங்களாக்கியிருக்கின்றது அனைவரும் அறிந்த விடையம்.  தங்கள் இராநுவம் வெற்றி கொண்ட இடங்களை  பார்த்து மகிழ்வதற்கு தினமும்  தென்னிலங்கையிலிருந்து  பெருந்தொகை சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். இதுவும் அறிந்த விடையம்தான்.

 ஆனால்  எம்மவர் அறியாத விடயம் வெளிநாடுகளில் இருந்து செல்லும்  எம்மவர்களும் வாகன ஒழுங்குகள் செய்தும்  தனியாகவும்  பெருமளவில் இந்த இடங்களை பார்வையிட செல்கிறார்கள். அவற்றை கண்டு  மகிழ அவை  எமது வெற்றிச் சின்னங்களும் அல்ல  களித்து மகிழ அவை எமது சுற்றுலா  தலங்களும் அல்ல. எமது இனத்தின் அவலத்தை  எமது  முப்பதாண்டு கால விடுதலை யுத்தத்தின் தோல்வியை  எமது மாவீரர்களின் கனவை எமது உறவுகளின் உணர்வுகளை என அனைத்தையும் அழித்து புதைத்த இடங்கள் அவை.அவற்றை எப்படி கண்கொண்டு பார்க்க முடியும்? முடிகிறதா உங்களால்.
ஆனால் இலங்கையரசு வெளிநாடுகளில்  இருந்து  இவற்றை பார்க்கப் போகும்  தமிழர்களின்  விபரங்களை மட்டும் பதிந்து விட்டு அவர்களிற்கு ஒவ்வித சோதனை கெடுபிடிகளையும் செய்வதில்லை என்பதோடு  அவர்களை இன் முகத் தோடு வரவேற்கவும்  முடிந்தளவு  தமிழில் உரையாடக்கூடிய  இராணுவத்தினரையும் இந்த இடங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். இதே நேரம் உள்ளுரில் உள்ள ஒரு தமிழர் இந்த இடங்கிளிற்கு போவதென்றால்  பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 அப்படி வெளிநாட்டிலிருந்து பொய் வந்தவர் இங்கு வந்து மற்றவர்களிடம். ஊருக்கு போவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆமிக்காரன் கைப்பையை கூட திறந்து பாக்கேல்லை. தமிழிலையே சிரிச்சு கதைக்கிறாங்கள் என்றதும். அந்தக் கதையை கேட்டவர் அடுத்த  விடுமுறைக்கு  இலங்கைக்கு போவதற்கு மலிவு விலையில் றிக்கற் தேட ஆரம்பித்து விடுவார். இங்கிருந்து இலங்கையரசின்  உளவியல் யுத்தம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் தங்கள் புகலிடக் கோரிக்கைகளில் புலிகளாலும் தங்களிற்கு உயிர் அச்சுறுத்தல் என்றுதான்  80 வீதமானவர்களிற்கு மேற்பட்டவர்கள்  வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அப்படி வாக்கு மூலம் கொடுத்து  அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு  பின்னர் போராட்டங்கள் ஊர்வலங்களில் கொடியை பிடித்தக்கொண்டு எங்கள் தலைவன் பிரபாகரன்  புலிகள் மீதான தடையை நீக்கு என்று கத்தியதும் அதை கேட்டு மக்கள்  திரண்டு விட்டார்கள் என்று  பயந்து போய் நடவடிக்கை எடுப்பதற்கு  வெள்ளைக்காரன்  என்ன கேணைப்பயலா?

புலிகள் மீதான தடை கொண்டு வருவதற்கு  ஒவ்வொருவரும்  புலிகளாலும் தங்களிற்கு உயிராபத்து  என்று கொடுத்த வாக்குமூலங்களும் ஒரு காரணம். அது மட்டுமல்ல  வெளிநாடுகளில் நடந்து முடிந்த ஊர்லங்கள் ஆர்ப்பாட்டங்களிற்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு  வெளிநாடுகள் போசாமல்  வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும்.  இதே போலத்தான்  முல்லைத் தீவிற்கு சுற்றுலா பயணிகளாக படையெடுக்கும்  எம்மவர்களது விபரங்கள் அனைத்தையும் திரட்டி ஒரு வருடத்தில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தங்களால் வெற்றி கொள்ளப் பட்ட பயங்கரவாதத்தின் வெற்றிச்சின்னங்களை பார்வையிட்டு படமெடுத்து சென்றார்கள்  எனவே வெளிநாடுகளில் யாரோ ஒருசில தமிழர்கள்  எம் மீது போர்குற்றம் விசாரணை என்று ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் புலிகளின் எச்சங்கள் என்று சுலபமாக தன்து பிரச்சனைகளை முடித்துக் கொள்ளும். அதே நேரம் இங்கேயும்  தலைவர் பிரபாகரன் வாழ்ந்த நிழக்கீழ் வீட்டையும்  புலிகளின் ஆயுதங்களின் படங்களும் முகப்புத்தகத்தில்  போட்டு லைக்குகள் போய்க்கொண்டு இருக்கின்றது.

இறுதியாக.  யுத்தத்தில்  பல்லாயிரக் கணக்கான   பாடசாலைகள் நாசமடைந்து  இன்னமும் அவை திருத்தப்படாமல் மாணவர்கள் இடிந்த கட்டங்களிலும் கொட்டில்களிலும் மழைவந்தால் எழுந்து நின்றும் கல்வியை தொடந்து கொண்டிருக்கின்ற நிலைமையே தொடர்கின்றது ஆனால் அவைக்கு அருகில் உள்ள கோயில்கள் எல்லாமே புனரமைக்கப் பட்டு கோபுரங்கள் கட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு குளங்களும் புதுப் புது வடிவங்களில் அமைக்கபட்டு வருவது மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய்  எமது வாழ்விடங்களை அழித்து எம் மக்கள் தலைகளில் குண்டு மாரி பொழிந்த  இலங்கை விமானப்படை  உலங்கு வானுர்திகளை பல இலட்சங்கள்  கொடுத்து வாடைகைக்கு அமர்த்தி சில  நிமிடங்கள் மட்டுமே  வானத்தில் வட்டமிட்டு கோயில்கள் மீது பூமாரி பொழிய வைக்கின்றனர். எமது அடுத்த சந்ததியையும் மொழியையும் காப்பாற்றப் போவது கல்வி மட்டுமே அதுவே எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்.  கோயில்களோ சாமிகளோ அல்ல.  அதற்காக கோயில் கூடாது என்று சொல்லவில்லை  கோயில்கள்.  பணம் மெத்திப்போய் கூத்தடிப்பவர்களின் கூடாரமாகிவிடக்கூடது .சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே  உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.