Navigation


RSS : Articles / Comments


பிரபாகரன் , மாத்தையா ,அமிர்தலிங்கம் பற்றி ..அன்று சிந்திய ரத்தம் .கேள்விபதில்

2:49 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து ..

கேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்ன??அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை கொலை செய்தது தொடர்பாக பிரபாகரனிற்கும் மாத்தையாவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட அதுவே காரணமாக இருந்தது என்றொரு கருத்து  மக்களால் பேசப்பட்டது அதைப்பற்றி உங்களிற்கு தெரிந்தவற்றை  கூறுங்கள்....


பதில் ..மாத்தையா என்பவர்  பிரபாகரனிற்கு உறவினர் மற்றும் அவரோடு நெருக்கமானவர் என்கிற தகுதியைத் தவிர எவ்வித ஆழுமையும் திறமையும் அற்ற ஒருவராகவே இருந்தார். தனக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டார் என  நம்பிய பிரபாகரன் அவரையே புலிகள் அமைப்பிற்கு பிரதித் தலைவராகவும். புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் . வன்னி மாவட்டத் தளபதி..  பெண்கள் பிரிவிற்கு பொறுப்பாளர்.என பல பதவிகளை மட்டுமல்ல பிரேமதாசா காலத்தில் பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் அமைப்பினால் தொடக்கப் பட்ட அரசியல் கட்சியான  விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பொறுப்பார் என  ஏகப்பட்ட அதிகாரங்களை கொண்டிருந்தார்.

 இத்தனை அதிகாரங்களை அவர் கைகளில் வைத்திருந்தாலும் அவரது திட்டமிடலில் உருப்படியாக  எந்தவொரு தாக்குதலைக்கூட நடத்தியிருக்கவில்லை. இவரது முதலாவது திட்டமிடலில் இவரது தலைமையில் நடந்த முதலாவது தாக்குதல்தான் 1985 ம் ஆண்டு கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல். இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்லாது புலிகள் அமைப்பில் 13 பேர் கொல்லப் பட்டிருந்தனர். அதன் பின்னர் வன்னி மாவட்ட பொறுப்பை அவர் வைத்திருந்தாலும் வன்னியிலும் பெரிய நடவடிக்கைகள் எதனையும் செய்திருக்கவில்லை.இயக்கத்தில் கிட்டுவின் வேகமான வளர்ச்சியும் புகழும் இவரிற்கு ஒரு வித எரிச்சலையே உண்டு பண்ணியிருந்தது. கிட்டுவோடு ஒரு நிழல் யுத்தத்தையே நடத்திக் கொண்டிருந்தார் கிட்டு காலை இழந்து  இந்தியா போய்விட யாழ் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பெடுத்த ராதாவும் குறுகிய காலத்தில் கட்டுவனில் நடந்த மோதலில் இறந்து போனார்.

அதற்கடுத்ததாக குமரப்பா பொறுப்பாளர் ஆகிறார்.அவரும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் கைதாகி இறந்து போகிறார்  இந்தியப் படை காலத்தில் குறுகிய காலத்திலேயே யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக  நியமிக்கப் பட்ட . இம்ரான் பாண்டியன்.(இருவரும் வேறு  வேறு நபர்கள்) மதி.(முன்னைய தெல்லிப்பளை பொறுப்பாளர்)அக்காச்சி (நீர்வேலி பொறுப்பாளராக இருந்தவர்)சுபாஸ் (மனிப்பாய்)  என மோதல்களில் இறந்து போனார்கள். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் யாழிற்கு மீண்டும் பொட்டு தலைமையில் புகுந்த புலிகள் அமைப்பு இந்திய இராணுவத்தின் எச்சங்களாக  வரதராஜப் பெருமாள் தலைமையில்  இயங்கிய  தமிழீழ தேசிய இராணுவத்தை அழித்து முடித்ததும் மாத்தையா யாழ் மாவட்ட பொறுப்பாளராகிறார்.இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால் இறுதியாக  இந்தியப் படையின் கப்பலில் தப்பியோடும்போது திருகோணமலை துறை முகத்தில் கப்பலின் வாசலில் நின்று  வரதராஜப் பெருமாள் தமிழீழப் பிரகடனத்தை செய்திருந்தார்.(இப்போ தான் தமிழீழ பிரகடனம் செய்யவில்லை என மறுத்துள்ளார்).  அதே நேரம் மணியம் தோட்டத்தில் இருந்த தமிழ் தேசிய இராணுவ முகாமை பொட்டு தலைமையிலான அணி தாக்கியபோது  அந்த முகாம் பொறுப்பாளராகவும் நிதி பொறுப்பாளராகவும் இருந்த சுரேஸ் பிரேமச் சந்திரன் தப்பியோடியிருந்தார். அவரே பின்னர் புலிகள் அமைப்பினால் அரவணைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  இன்றுவரை இருக்கிறார்.

மாத்தையா யாழ் மாவட்டத்தை பொறுப்பெடுத்தபோது கிட்டுவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இறந்தும் இந்திய இராணுவத்திடம் கைதாகியும் நாட்டை விட்டும் வெளியேறியும் இருந்தனர். மீதமாக இருந்தவர்கள்  கிட்டு மீது இருந்த கோபத்தில் மாத்தையாவால்  பழிவாங்கும் நடவடிக்கையாக  அவர்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப் பட்டு அவர்களது பதவி நிலை பறிக்கப் பட்டு சாதாரண உறுப்பினர்களாக  முன்னரங்க காவல் நிலைகளில் நிறுத்தப் பட்டனர்.  இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே  புலிகள் தங்கள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான  பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை  பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு  வடமராச்சி அரசியல் பிரிவு பொறுப்பாக இருந்த  தமிழ்ச் செல்வனை  யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.மாத்தையா கொழும்பில் தங்கியிருந்த காலங்களில்  வெளிநாடுகளிற்கும் போக முடியாமல் புலிகள் கட்டுப் பாட்டின்  கீழ் இருந்த  தங்கள் சொந்த ஊர்களிற்கும் போக முடியாமல் கொழும்பில்  இருந்த மாற்று இயக்கக் காரர்கள் பலரை மாத்தையா பிடித்து கட்டி யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பப் பட்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்லப் பட்டார்கள்.


இதனை பிரேமதாசா அரசு கண்டும் காணமலும் இருந்திருந்தது அதே நேரம்  தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் நடந்திருந்தது. அமிரின் கொலையை  பிரபாகரனிற்கு தெரியாமல்  மாத்தையாதான் செய்தார் இதனாலேயே இரவரிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு  மாத்தையாவிடம் இருந்த புலனாய்வு பிரிவுப் பொறுப்பை பறித்து பொட்டுவிடம் கொடுத்ததாக பொதுவான கதை ஒன்று பரவியிருந்தது. அதனை பலர் இன்றும் நம்புகிறார்கள். ஆனால்   பிரபாகரனின் கட்டளையின் படியே அமிரின் கொலை நடந்தது. அமிரின்  கொலை நடந்தபோது பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்  பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு  இந்திய  இந்தியாவுடன் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில்  தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்வரை  இந்திய இராணுவம்  வெளியேறக்கூடாது  அதற்கான கடப்பாடு இந்திய அரசிற்கு உள்ளது என  ராஜுவ் காந்திக்கு  அமிர்தலிங்கம் கடிதமொன்றை  எழுதியிருந்தார். இது பிரேமதாசாவிற்கும் எரிச்சலை கிழப்பியிருந்தது. எனவே அமிரின் கொலையை  யாரென்றே தெரியாமல் கனகச்சிதமாக முடித்து விட்டால் பிரேமதாசா அரசால் பிரச்சனை வராது  பிரேமதாசாவிடமே சொல்லி  அந்த கொலை பற்றி ஒரு விசாரணை குழுவை  அமைத்து அதனை அப்படியே இழுத்தடித்து  நீத்துப் போகச் செய்யலாம் என்பதே பிரபாகரனின் திட்டமாக இருந்தது .

ஆனால் அந்த கொலையை திட்டமிட்டு செய்யவேண்டிய பொறுப்பு மாத்தையாவினுடையது.  இங்கும் பிழைத்தது மாத்தையாவின் திட்டமிடல்தான்  அமிரை கொல்வதற்கு வேறு வழிகளை தேடாமல்  சுட்டுக்கொல்வதென்று முடிவெடுத்தவர்.   அமிருடன் தொர்புகளை ஏற்படுத்தி  பிரேமதாசா அரசுடன்  புலிகளிற்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களின அதிகாரங்களை பெறுவதற்கு  அமிர்தலிங்கமும் எம்முடன் இணைத்து போச்சு வார்த்தைகளில் ஈடு படவேண்டும் என கோரிக்கை வைத்தவர் அமிருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் அதே நேரம்  அவரை கொலை செய்வதற்கான வழி வகைகளை ஆராயும்படி வடமராச்சி பகுதியை சேர்ந்த  விசு என்பவரை மாத்தையா அனுப்பி வைக்கிறார்.  விசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்  ஒரு மேதலில் காயமடைந்தும் இருந்தார். இவரிற்கு ஒரு காதலி இருந்தார் அவர் கனடாவில் போய் குடியேறிய பின்னர் விசுவை கனடாவிற்கு அழைப்பதற்காக  அனுசரனை கடிதத்தினை அனுப்பிய பின்னர் விசு இயக்கத்தை விட்டு வெளியேறி கனடா போகும் திட்டத்தோடு துண்டு கொடுத்து விட்டு (இயக்கத்தை விட்டு வெளியேறும்  கடிதம்) போக  மாத்தையாவிடம்  கடிதத்தை கொடுத்தபோது  விசுவை  கனடா போகும் முதல் இறுதியாக இயக்கத்திற்கு ஒரு வேலை செய்யும்படி  மாத்தையா கேட்டதால் விசுவும் ஒத்துக்கொண்டு அமிரின் கொலையை செய்து முடிக்க சம்மதிக்கிறார்.

விசுவிற்கு  கனடா விசாவும்  கிடைத்து விட்டிருந்தது   விசு கொலையை செய்து தப்பி கனடா போய் விட்டால்  எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் திட்டமிடல்களின்படி அமிருடன்  விசு ஆரம்ப பேச்சு வார்த்தைகளை  தொடங்குகிறான்.  அமிர்தலிங்கம்  தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு காவல்துறையினர் காவல்  நிற்பார்கள்.  விசுவும்  அவரது இரண்டு நண்பர்களும் உள்ளே போகும் போது காவல் துறையினர் பரிசோதனை  செய்த பின்னரேயே  அவர்களை உள்ளே போக அனுமதிப்பார்கள். தொடர்ச்சியாக  சில சந்திப்புக்கள்  நடந்து முடிந்ததும்  நாங்கள் வரும் போதெல்லாம்  எங்களை உருட்டி சோதனை போடுவது  எங்களிற்கு  அவமானமாகவும் அசெளகரியமாகவும் இருக்கின்றது என விசு அமிரிடம் சொன்னதும் இனி அவர்களை சோதனை போடவேண்டாம் என தனது மெய் பாதுகாவலர்களிற்கு அமிர்தலிங்கம்  உத்தரவிட்டிருந்தார். அடுத்த தடைவை விசு அமிர்தலிங்கம் அவர்களை சந்திக்கச் செல்லும்போது  கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்தச் சென்று  அமிர்தலிங்கத்தின்  மெய் பாதுகாவலர்கள்  தன்னை சோதனை போடுகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்திருந்தார்.மெய்ப் பாது காவலர்கள் விசுவை சோதனை போடவில்லை எனவே அடுத்த சந்திப்பில் அமிரை போட்டு விடுவது என முடிவெடுத்தவர்  அமிரிடம் அடுத்த தடைவை முக்கிய விடயங்கள் பேசவேண்டும்  அத்தோடு  சில முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனவே என்னுடன் வேறு இரண்டு நபர்களும் வருவார்கள்  அதே போல    தமிழர் விடுதலைக் கூட்டணியில் முடிவெடுக்கும்  அதிகாரமுள்ள முக்கியமானவர்களையும் அன்று வரச்சொல்லுங்கள்  அதே நேரம் இந்த செய்தியை  உங்கள் மெய் பாதுகாவலர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று அமிர்தலிங்கத்திடம்  தெரிவித்துவிட்டு சென்றிருந்தார்.

1989 ம் ஆண்டு ஜுலை மாதம் 13 ம்திகதி அமிரை போட்டு விடுவதற்கான நாளை விசு தீர்மானிக்கிறார். தன்னுடன் அலோசியஸ் மற்றும் விக்கி ஆகியோரையும் அழைத்து அவர்களிடமும் ஆளிற்கொரு பிஸ்ரலை உடலில் நன்றாக மறைத்து வைக்கச் சொன்னவர்  விக்கி மெல்லிய தோற்றமுடையவன் என்பதால் அவனின் உடலில் யூ.சி ரக தானியங்கி துப்பாக்கியையும் மறைத்து அதற்கேற்றமாறு தொள தொள உடையணிந்து தயாராக அமிர்தலிங்கத்தின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் அவர்களும்  புலிகள் அமைப்புடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டம் என்பதால் யோகேஸ்வரனையும்  சிவசிதம்பரத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது  அங்கு வந்து சேர்ந்த  விசு குழுவினரிடம்  ஏதோ வித்தியசத்தை கவனித்த அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள்  அவர்களை சோதனை போடவேண்டும் என  கேட்க அதனை விசு மறுக்க இவர்களின் வாக்கு வாதத்தின் சத்தத்தை கேட்ட அமிர்தலிங்கம்  வெளியே எட்டிப்பார்த்து  அவர்களை உள்ளே விடுங்கள் என சொன்னதும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட்டு விடுகிறார்கள். வீட்டின் உள்ளே  போயிருந்த விசு குழுவினர் சிறிது நேரம் அமிர்தலிங்கம் குழுவினரோடு பேசுவது போல போக்கு காட்டியபடியே தங்கள் துப்பாக்கிகளை எடுத்து அமிர்தலிங்கம்  யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி சுடத் தொடங்குகிறார்கள்.

சத்தம் கேட்டு அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் ஓடி வந்த அதே நேரம்  முதலிலேயே  விசு குழுவினர் மீது  அமிரின் மெய் பாது காப்பாளர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதால்  அவர்கள் வாசல் கதவை விட்டு வீட்டு வசல் அருகிலேயே நின்றிருந்தார்கள். அனைவரையும் சுட்டு விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதலை நடத்த  விசுவும். அலோசியசும் அந்த இடத்தில் இறந்து போக  விக்கி  தன்னிடம் இருந்த யூ சி துப்பாக்கியால் யால் சுட்டபடி வீட்டிற்கு  வெளியே ஓடி விட. விக்கி வீதி காவலில் இருந்த ஒரு காவல்துறையை சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப் படுகிறான்.
அமிர்தலிங்கமும்  யோகேஸ்வரனும் இறந்து போக சிவ சிதம்பரம் மோசமான காயங்களுடன்  உயிர் தப்பி விடுகிறார். விசுவின் உடலை அடையாளம் கண்ட இலங்கை காவல்துறை  இதனை புலிகள் செய்ததாக  ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் புலிகள்  பிரேமதாசா அரசிற்கு கொடுத்த அழுத்தத்தால்  குழப்பமான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தது. காயத்தில் உயிர் தப்பிய  சிவ சிதம்பரம் அவர்கள்  பேச்சு வார்த்தைக்கு வந்த புலிகள் அமைப்பினரே  இதனை செய்தனர் என்று வைத்திய சாலையில் இருந்து  அறிவிக்கிறார். சிவசிதம்பரத்தின்  அறிக்கையை அடுத்து கொலையை புலிகள் செய்தாகவே உறுதியாகின்றது.

அமிர்தலிங்கத்தின் கொலையை செய்ததற்காக  பிரபாகரன்  மாத்தையாவோடு  முரண்படவில்லை.  செய்யச் சொன்ன கொலையை சரியாக செய்யவில்லை என்னதாலேயே  இருவரிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.   அன்றைய தப்பாக்கி சூட்டில் இறந்து போயிருந்தால் துரோகியாகியிருக்கவேண்டிய சிவ சிதம்பரம் அவர்கள் காலம் தாழ்த்தி  காலமானதால்  மாமனிதர்  ஆகியிருந்தார்.   துரோகிகள் போட்டுத் தள்ளுங்கள்  என கட்டளையிட்ட பிரபாகரனே  இந்த மாமனிதர் பட்டத்தை  வழங்கி கெளரவித்திருந்தார்.  இந்தக் கொலையை அடுத்து  உடனடியாக மாத்தையாவை  அழைத்த பிரபாகரன்  அவரிடமிருந்த  புலனாய்வு துறை பதவியை பிடுங்கிக் கொண்டதோடு  கிட்டுவினால் முன்மொழியப்பட்ட  பொட்டுவிடம் அந்த பதவியை ஒப்படைத்திருந்தார். அதுவரை கிட்டுவோடு மட்டுமே  பனிப்போர் நடத்திக் கொண்டிருந்த மாத்தையா தனது பதவியை பொறுப்பெடுத்த பொட்டு மீதும் தன்னுடைய கோபப்பார்வையை திருப்பத்தொடங்கியிருந்தார்.இந்தக் கோபத்தினால்  பின்னர் யுத்தம் தொடங்கிய பின்னர்  தனக்குத்தானே  தனியாக ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கியிருந்தார் . இயக்கத்திற்கென பொதுவான புலனாய்வு பிரிவு பொட்டு தலைமையில் இயங்கினாலும் தங்களிற்கென தனியாக  புலனாய்வு பிரிவை வைத்திருந்தவர்களில்  மாத்தையாவும் கருணாவும் மட்டுமே.


பிறேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை இரகசியமாக ஆரம்பித்த காலங்களில்தான்   வேலூர் சிறையிலிருந்த  இஞ்சினியர் என்கிற மகேந்திரனை  றோ அமைப்பினர்  கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விடுகிறார்கள். இவரும் தப்பி வந்ததாகவே செய்தி பரவுகின்றது.  முன்னர்  கிருபனையும் கிட்டுவையும் றோ அதிகாரிகள்  வன்னிக்கு அனுப்பியிருந்தது  தனியாக பிரபாகரனை  குறி வைக்க மட்டுமே அனால் இஞ்சினியரை அனுப்பும் போது இரண்டு திட்டங்களுடன் அனுப்பியிருந்தார்கள். கிருபன் எப்படி பிரபாகரனிற்கு  நெருக்கமோ அப்படி இஞ்சினியர் மாத்தையாவிற்கு  நெருக்கமானவர். இருவரும் நீண்டகால நண்பர்கள் இஞ்சினியரின் தாயார் புனிதவதி இவரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாட்டிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும்   பிரபாகரனின்  மனைவி  மதிவதனி இருந்தார்.  இவரது பெயர்  புனிதவதி என்றாலும் ஆரம்ப காலத்தில்  சில போராளிகள்  இவரை  நக்கலாக  வீரத்தாய்  என  அழைத்தது  காலப்போக்கில்  அவரது பெயர் வீரத்தாயாகிப் போயிருந்தது. புலிகள்  அமைப்பில்  ஆரம்பாகால பெண் உறுப்பினர்கள் என்றால் அடேல் பால சிங்கத்திற்கு   அடுத்தபடியாக  குப்பி கட்டாத  புலிப் பெண் உறுப்பினர்  புனிதவதி என்பது குறிப்பிடப் படவேண்டும்.  அது மட்டுமல்லாது பிரபாகரன் மதி  குடும்பத்தினரிற்கு பிறந்த குழந்தைகளான  சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா இருவரையும் ஒரு பேத்தியாரின் (பாட்டி) நிலையில் இருந்து பராமரித்து  வளர்த்தவரும் இவர்தான்.  ஏனெனில் பிரபாகரனின்  ஆரம்பகால இயக்க தொடர்புகாளால்  சகோதர சகோதரிகள்  உட்பட    அவரது  தாய் தந்தையரும் பிரபாகரனோடு  தொடர்புகளை  வைத்துக்கொள்ள விரும்பியிராத காலம்.

 அதே நேரம்  புலிகளால் கடத்தபட்டு  தமிழ்நாட்டிற்கு  மதிவதனி  கொண்டு சென்ற பின்னர்   தங்கள்  மானம் மரியாதை கொளரவம்  பறி போய் விட்டது என பல ஆண்டுகள் இரவரது தாய் தந்தையருமே  இவர்களோடு கதைக்காமல் முரண்பட்டு  இவர்களோடு தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள்  அதே காலப் பகுதியில் தான்   ஒரு தாயின் நிலையில் இருந்து  மதிவதனியை  பராமரித்திருந்தார் புனிதவதி அவர்கள். விடுதலைப் புலிகள்  அமைப்பானது  சாதியத்தில் குறைந்தவரால் படிக்காதவரால் தொடங்கப்பட்டு  பின்னர் பள்ளிக்கூடம் போக விரும்பாத ஒரு மொக்கு கூட்டத்தவர்களால்  இயக்கப்படுகின்றதென்கிற  யாழ்ப்பாணிய  மேட்டுக்குடி கல்வி  சமூகத்தின் பார்வையானது புலிகளின் தொடர் வெற்றிகளாலும்  அதன் மூலம் கிடைத் புகழினாலும்  அந்த மேட்டுக்குடி சிந்தனையில் மாற்றம்  ஏற்பட்ட பின்னரே  பிரபாகரனினதும்  மதி வதனியினது குடும்பத்தினரதும்  மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு  தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.  எனவே  றோவினுடைய  முதலாவது  திட்டம் பிரபாகரன் இரகசிய முகாமில் இருந்து  எப்பொழுது  தனது மனைவியை சந்திக்க வந்து போகிறார் என்கிற விடங்களை இஞ்சினியர் அவரது தாயார் மூலம்  அறிந்து  தங்களிற்கு தகவல் தருவார் அவர் அங்கு வந்து போகும் போது  அவரை போட்டு விடுவது  .

இரண்டாவது திட்டம் மாத்தையாவிற்கு நெருக்கமான  இஞ்சினியர் மாத்தையாவை பிரபாகரனிற்கு  எதிராக மாற்றி விடுவார்  அப்படி  மாற்றினால்  புலிகள்  இயக்கத்தை  உடைக்கலாம். அல்லது மாத்தையா  பிரபாகரனிற்கு  எதிராக  இயங்குவது போல   ஒரு தோற்றத்தை உண்டாக்குவது இதன் மூலமும் உடைக்கலாம்.  இது றோவின் திட்டம் .இஞ்சினியரிடம் பொதுவாகவே  எல்லாவிடயத்திலும் புழுகும் தன்மை கொண்டவர்  இஞ்சினியர்   தான் கைத்துப்பாக்கியால் சுட்டு  கெலிகொப்ரரை  கடலிற்குள் விழ்த்தினேன்  என்கிற அளவிற்கு புழுகுவார்.தான்  தமிழ் நாட்டு சிறையில் இருந்து தப்பிவந்ததாக சொன்ன கதையை   கொஞ்சம் அதிகமாகவே புழுகுகளோடு   அனைவரிடமும் சொல்லித் திரியத் தொடங்கியிருந்தார். அதன்மூலமாகவே  புலிகளின் புலனாய்வு பிரிவினர் இஞ்சினியரின் மீது  சந்தேக பார்வையை  வைக்கத் தொடங்கியிருந்தனர்.  கிட்டு இறந்த பின்னர்  வடமராச்சி தீருவிலில்  நடந்த கிட்டுவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக  பிரபாகரன் சென்றிருந்தபோது  அவரின் வாகனத்திற்கு  கண்ணிவெடி வைத்து அவரை கொல்லதற்காக திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த  கண்ணிவெடி ஒன்றினை  புலிகளின் புலனாய்வு பிரிவினர் கண்டெடுக்கின்றார்கள்.

இதே நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் புலிகளின் ஆட்பற்றாக் குறையை  போக்குவதற்காக  அவர்கள்  தமிழ்நாட்டில்  இருந்தும் ஆட்களை திரட்டி  கொண்டு வந்து யாழில் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.  புலிகளிற்கான ஆட்திரட்டல்களிற்கு தமிழ்நாட்டில்  நெடுமாறன் மற்றும் வை.கோ.போன்றவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இவர்களின் ஆட்திரட்டல் பிரச்சாரத்தின் போது  இவர்கள் செய்த  ஒரு விவேகமற்றதொரு செயல்  என்னவெனில்  அகன்ற தமிமீழம் என்கிற ரீதியில்   இலங்கையின்  வடக்கு கிழக்கோடு தமிழ் நாட்டையும் உள்ளடக்கி  பரந்த தமிழீழம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இது மூஞ்சூறு தான் போக வழியை காணமல் விளக்குமாத்தையும்  இழுத்தக்கொண்டு போன  பழமொழியை போலவே இருந்தது. இந்த பிரச்சாரம் இந்திய உளவுப்பிரிவினரிற்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் எரிச்சலையே கொடுத்திருந்தது. அதே நேரம்  புலிகள் அமைப்பினால் பயிற்றப்பட்ட  சிலரால்  தமிழ்நாட்டில்  தமிழ்த்தேசிய மீட்புப் படை  என்னும்  ஆயுதம் தாங்கிய  குழு தொடங்கப்பட்டது. அதே நேரம் தமிழ் நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பும் புலிகளிற்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த  அமைப்புக்களோடு  அகன்ற தமிழீழம்  என பிரச்சாரம் செய்த நெடுமாறனின்  கட்சியான  தமிழர் தேசிய இயக்கமும்  அன்றைய ஜெயலலிதா  அரசால் தடை செய்யப் பட்டது. புலிகளால் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட உறுப்பினர்களுடன்  றோவின்  முகவர்களும் இணைக்கப்பட்டு புலிகளின் பயிற்சி முகாம்களிற்கு  அனுப்பபட்டனர்.
அது மட்டுமல்லாது  இலங்கையில் இந்தியப் படை  இருந்த காலங்களில்  பணிபுரிந்த இந்திய படை வீரர்களும்  றோ  அமைப்பினால் புலிகளில்  இணைக்கப் பட்டிருந்ததோடு  இவர்களிற்கும்  தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட புலிகள் அமைப்பை சேர்ந்த இஞ்சினிர் மற்றும்  கிருபனிற்கும் இடையில் ஒரு வலைப் பின்னல் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர்.  அன்றைய காலத்தில் கிட்டு  நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் கிட்டுவுடன் தனியாக தொர்புகளை பேணி வந்திருந்தனர். தீருவிலில்  கண்ணி வெடி மீட்கப் பட்டதை தொடர்ந்து இஞ்சினியரை யும் வேறு சிலரையும்  புலிகளின் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர் இந்த கைதுகளையடுத்து  நடந்த விசாரணைகளின்போதே  புலிகள் தமிழ்நாட்டில் இருந்து  இருந்து கொண்டுவந்து  பயிற்சி கொடுத்தவர்களில்  றோவினது  உளவாளிகளும் கலந்திருப்பது  தெரியவந்திருந்தது. உடனடியாகவே  தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகைகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது  தமிழ்நாட்டில் இருந்து இயக்கத்தில் இணைந்தவர்களின்   நம்பிக்கையான 53 பேரை  மட்டுமே இயக்கத்தை விட்டு நீக்கி அவர்களை தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டு மற்றைய  தமிழ்நாட்டு  உறுப்பினர்களை  போட்டுத் தள்ளிவிட்டிருந்தார்கள்.இந்த களையெடுப்பின்போது  யாழில் சில இந்திய இராணுவத்தினர்களும்  மாறு வேடங்களில் கைது செய்யப்பட்டதனால்  மலையகத்தில் இருந்து வந்து  புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் கடைகளில் வேலை செய்த பல கூலித் தொழிலாளிகளும் சந்தேகத்தின் பெயரில் பிடித்துக் கொண்டு செல்லப் பட்டு கொல்லப் பட்டிருந்தனர்.

இஞ்சினியர் கைது செய்யப் பட்டதுமே  அவரது தாயார் புனிதவதியை பிரபாகரன்  மதிவதியின் வீட்டில் இருந்து  வெளியேற்றியதோடு சிலநாட்கள்  அவர் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் இருந்திருந்தார் ஆனால் அவரிற்கு எதுவுமே தெரிந்திருக்காததால்   அவரை தங்கள் கட்டுப் பாட்டு பகுதியில் இருந்து வெளியெறி விடுமாறு  அனுப்பி விட்டிருந்தார்கள்  இவர் பின்னர் திருகோண மலையில்  வாழ்ந்திருந்தார்.இஞ்சினியர் கைதானதையடுத்து  கிருபனும் பிரபாகரனின் மெய் பாதுகாவல் பிரிவில்இருந்த செங்கமலம் மற்றும் சுசிலன் ஆகியோர் கைதாகி விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரபாகரன் பயணம் செய்யும் வாகனம் என அடையாளம் காணப்பட்டு  இன்னொரு தாக்குதலும் பளைப் பகுதியில் நடத்தப் பட்டிருந்தது ஆனால் அதில் பிரபாகரன் பயணம் செய்திருக்கவில்லை.விசாரணைகளின் போது  பலர் மாத்தையாவே  தங்களிற்கு  பிரபாகரனை  கொலை செய்யும்படி  கட்டளையிட்டதாக சொன்னதையடுத்து மாத்தையாவை  கைது செய்வதென பொட்டு முடிவெடுத்தார்.

 மானிப்பாயில் மாத்தையாவின்  பிரதான முகாமும் அதற்கருகே  மாத்தையாவின் முகாமிற்கு பாது காப்பாக இன்னொரு முகாமும் இருந்தது  இரண்டிலுமாக  அறுபது வரையான போராளிகள்  தங்கியிருந்தார்கள். இந்த  இரண்டு முகாம்களையும்சொர்ணம் தலைமையில் பொட்டு சுமார் நூற்றைம்பது பேருடன் சென்று சுற்றி வழைத்தார் அதே நேரம் மாத்தையாதரப்பிலிருந்து  கட்டாயம் தாக்குதல் வருமென நினைத்து மாத்தையா தரப்பு போராளிகளை  சண்டையிடாது சரணடையச் சொல்வதற்காக  ஒலி பெருக்கி பூட்டிய வாகனம் எல்லாம் தயாராக கொண்டு போயிருந்தார்கள். ஆனால் சொர்ணமோ பொட்டுவோ  நினைத்ததைப்போல மாத்தையா தரப்பிலிருந்து  தாக்குதல் எதுவும் வரவில்லை அதற்கு மாறாக மாத்தையா தரப்பு பொட்டு குழுவினரை  வரவேற்றதோடு தீடீரென  வந்த விடயத்தை கேட்டபொழுது தம்பி அவசரமாக கதைக்க வேண்டுமாம் என மாத்தையாவின் கையை பிடித்தபொழுது  தானாகவே வருகிறேன்  என கூறிய மாத்தையா தனது கைத்துப்பாக்கியையும் பொட்டுவிடம் கொடுத்துவிட்டு பொட்டுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மாத்தையா தரப்பு போராளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்கள் ஆயுதங்களும் கழையப்பட்டு  அனைவரும் கைது செய்யப் பட்டு அழைத்துச் சொல்லப் பட்டனர். மாத்தையா பிரச்சனையின் போது அண்ணளவாக  350 பேர்வரை  கைதாகி விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டார்கள்.சாவகச்சேரியிலும்  கோப்பாயிலும் இரண்டு பெரிய சித்திரவதை சிறைச்சாலைகளை நடாத்திய மாத்தையா இப்பொழுது பொட்டுவின் கண்காணிப்பில் பெரும் சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியிருந்தார். தொடர்ச்சியான  சித்திரவதைகளால் அவர் மனநிலை பாதிக்கபட்டு தன்னை கொன்றுவிடுமாறு சித்திரவதை செய்தவர்களை கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நாளில் பொட்டுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் றோ உளவமைப்பிற்கும் மாத்தையாவிற்கும் நேரடி தொடர்பு இருந்தாக புலிகளின் புலனாய்வு பிரிவினரால் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

மாத்தையாவை சுற்றி றோவின் தொடர்புகளோடு உருவாக்கப்பட்ட வலைப்பின்னலில் இருந்தவர்களால் மாத்தையா றோவின் உளவாளி என புலிகளின் புலனாய்வு பிரிவினரால் நம்ப வைக்கப்பட்டு மாத்தையாவும் கொல்லப்பட்டார். மாத்தையாவை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது தங்கள் பக்கம் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி புலிகளை  பலவீனப் படுத்துவது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அவர்களது இரண்டாவது திட்டம் நிறைவேறியிருந்தது. ஆனால் பிரபாகரனை அன்றைய சந்தர்ப்பத்தில் கொல்லமுடியாமல் போய் விட்டிருந்தது. இந்தப் பிரச்சனைகளின் போது புலிகள் அமைப்பில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பலர் கொல்லப் பட சிலர் விடுதலையானார்கள். அப்படி விடுதலையானவர்கள் அரசியல் துறை பொறுப்பில் இருந்த யோகி. குட்டி நிதி பொறுப்பு.தளபதி தீபன்.ஜான் மன்னார் மாவட்ட தளபதி.சலீம் முகாம் பொறுப்பாளர்..சாந்தி மற்றும் சுதா ஆரம்பகால பெண் போராளிகள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.லோறன்ஸ் தளபதி.ஜெயம் தளபதி ஆகியோர் விடுதலையானார்கள். அதில் ஜெயம் சித்திரவதைகளின் போது அவரது கை  கால் விரல் நகங்கள்  அனைத்தும் பிடுங்கப்பட்ட நிலையில் விடுதலையாகியிருந்தார். விரும்பினால் இயக்கத்தை விட்டு எங்காவது போய் சொந்த வாழ்கையை பார்க்குமாறு பிரபாகரனால் கேட்கப்பட்டிருந்தார்  தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தெரிந்ததெல்லாம் இயக்கமும் யுத்தமும் துப்பாக்கியும்தான் எனக்கு வெளியில் போய் எங்கும் வாழமுடியாது தயவு செய்து  நீங்களே உங்கள் துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள் என பிரபாகரனை பார்த்து கெஞ்சியதை அடுத்து  அவர் மீண்டும் பழைய பதவிநிலைகள் வழங்கப்பட்டு  இறுதி யுத்தத்தின்போது  தற்கொலை செய்து கொண்டார்.