Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

12:52 PM, Posted by sathiri, No Comment

இரவீந்திரன் ...நட்பு

டேய் றோஸ்  ..என்று கூப்பிட்டால் கோவிக்காமல்  தலையை இடப்பக்கமாக சற்று சரித்து சிரித்தபடியே .என்ன? என்பான். றோஸ்  அவனது பட்டப்பெயர்.காரணம் பார்ப்பதற்கு நல்ல வெள்ளை  வகுப்பில் வாத்தியாரிடம் அடிவாங்கி அழும்போதோ அல்லது  கோபம் வந்தாலோ அவன் முகம் சிவந்து றோஸ் நிறமாக மாறிவிடும். மெதுவாகத்தான் கதைப்பான்.அவனது பழக்கவழக்கங்கள்  கொஞ்சம் பெண்மைத் தன்மை கலந்ததாக இருக்கும். கதைக்கும் போதும் அடிக்கடி நாக்கால் கீழ் உதட்டை ஈரமாக்கிக் கொள்ளும் பழக்கமும் உண்டு. அவன் சொந்தப் பெயர் ரவீந்திரன் சங்கானை  ஓழாம் கட்டையடியை சேர்ந்தவன்.அவனது தந்தை விபத்தில் இறந்துபோக தாயார் இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு அவர்வழியில் போய்விட ரவீந்திரனையும் அவனது தம்பியையும்  அவனது தந்தையின் தாயார் அப்பம்மாவே  கவனித்ததோடு படிப்பித்தும் கொண்டிருந்தார். அவரிற்கு நிரந்தர வருமானம் எதுவும் கிடையாது கூலிவேலைகள் செய்துதான் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அவனும் ரவியும் ஒரே வகுப்புத்தான்  அவர்கள் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்த பொழுது ரவியின் அப்பம்மா காச நோயால் பாதிக்கப்பட  ரவி  படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். சங்கானை சந்தியில் காரைநகர் வீதியில் இருந்த பிடைவைக்கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அவனது குடும்ப நிலை கருதி வகுப்புக்களிற்கு வரமலேயே அவன் சோதனை எடுக்க பாடசாலை நிருவாகம் வசதி செய்து கொடுத்திருந்தது. பகலில் வேலை இரவில் ஏழாம்கட்டை பற்குணம் ரீச்சர் இலவசமாகவே பாடம் சொல்லிக் கொடுத்ததால் பத்தாம் வகுப்புவரை முடித்தவனிற்கு அதற்குமேல் தொடர முடியவில்லை.வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். அவனும் ரவியின் கடைக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று இடைக்கிடை சந்தித்து கதைப்பது வழைமை காலப்போக்கில் அதுவும் குறைந்து போனது.

0000000000000000000000000

இந்தியப்படைகள் யாழ்குடா முழுவதையும் கைப்பற்றிவிட்டதொரு நாளின் மாலைப் பொழுதில் பிறேமும் அவனும் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது ..டேய் றோஸ் எப்பிடியடா இருக்கிறாய் சைக்கிளை நிறுத்திய ரவி அதே தலையை சரித்த சிரிப்புடன் ஆனாலும் கொஞ்சம் கலவரத்தோடு இருக்கிறனடா.ஆனா நீங்கள் இதுக்குள்ளை ஓடித்திரியிறீங்கள் அவங்கள் எல்லா பக்கமும் நிக்கிறாங்கள் கவனமடா என்றான்.

எங்களை விடு நீ இப்பவும் புடைவைக்கடையிலை துணிகிழிக்கிறவேலைதானோ?

ஓமடா என்ன செய்ய அப்பம்மாக்கும் இப்ப துப்பரவா ஏலாது உந்த புடைவைக்கடை சம்பளத்திலை ஒண்டும் செய்யஏலாது அதுதான் சவுதிக்கு போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்  கொஞ்ச காசும் சேத்து வைச்சிருக்கிறன். முதலாளியும் கொஞ்சம் உதவிசெய்யிறதாய் சொல்லியிருக்கிறார். போய் சேந்திட்டனெண்டால் தம்பியையும் வடிவா படிப்பிச்சிடுவன்.அப்பம்மாவையும் கடைசி காலத்திலை நல்லபடியா பாக்கவேணும்.அதுதான் என்ரை ஆசை.

சரியடா சவுதி போனதும் எங்களை மறந்திடாதை கடிதத்திலை எங்களுக்கும் ஒரு வசனம் எழுதிவிடு .

உங்களை  எப்பிடி மறப்பனடா அதுசரி நீங்கள் எவ்வளவு காலத்தக்குஇப்பிடி திரியபோறியள்??

ஆருக்கு தெரியும் சரி சந்திப்பமடா விடைபெறுகிறார்கள்.

  000000000000000000000

ரவி மருந்து குடிச்சு செத்திட்டானாம் பாவம் பேத்தியார்காறி  விழுந்து பிரண்டு அழுதுகொண்டிருக்காம் வந்தவன் சொன்ன தகவல்.

மருந்து குடிச்சவனா??எதுக்காம்.அவனிற்கு ஆச்சரியம்.

சங்கானை மீன்கடை சந்தி சீக்கியனாம்.

அந்த சென்றியிலை இருக்கிற சீக்கியனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறன்.பின்னேரங்களிலை கசிப்படிச்சிட்டு றோட்டாலை போற வாற எல்லாருக்கும் அடிக்கிறவனாம் பெட்டையளோடையும் சேட்டையாம். அதாலை பெட்டையள் அந்தபக்கத்தாலேயே பொறேல்லையாம்.ரவிக்கு என்னதான் நடந்ததாம்.??

அது வடிவாய் தெரியாது ஆனால் பக்கத்து சைக்கிள் கடையிலை வேலை செய்யிற பெடியன்தானாம் ரவியை வீட்டிலை கொண்டுபோய் விட்டவன் அவனை கேட்டால் முழுக்க தெரியும். தகவல் சொன்னவன் போய்விட்டான்.

அவனும் பிறேமும் சைக்கிளை அந்த சைக்கிள் கடை பெடியனின் வீட்டை நோக்கி மிதித்தார்கள்.

சைக்கிள் கடையில் வேலை செய்யும் பெடியன் மிரட்சியோடு நடந்ததை விபரிக்க தொடங்கினான். அண்ணை அண்டைக்கும் சீக்கியன் நல்லா கசிப்படிச்சிட்டு இருந்தவன்  ரவியண்ணை மத்தியனம் தன்ரை சைக்கிள் ரியூப் ஒட்டத்தந்திட்டு வேலை முடிஞ்சு சைக்கிளை எடுக்க வந்தவர். அந்த நேரம் அந்த சீக்கியன் ரவியண்ணையை செக் பண்ணவேணும் எண்டு சென்றி பொயின்ருக்குள்ளை கூப்பிட்டான். ரவியண்ணை சென்றி பொயின்றுக்கை போன உடைனை சாக்காலை வாசலை மூடிப்போட்டான் . பிறகு கொஞ்ச நேரத்தாலை மேலை சேட்டு இல்லாமல் துவக்கோடை வந்து கடையிலை இருந்த கிறீஸ்பேணியை (டப்பா) தூக்கிக்கொண்டு போனான். முதலாளியும் கடையை சாத்திப்போட்டு என்னை போகச்சொல்லிட்டார். ரவியண்ணையின்ரை  சைக்கிள் நிண்டதாலை நான் அதை எடுத்துக்கொண்டு கொஞ்ச தூரத்திலை வந்து காவல் நிண்டனான்.

என்னது கிறீஸ்பேணியா?? இவங்கள் மனிசரே இல்லை.பிறகு என்ன நடந்தது??

ரவியண்ணை நோ சேர் ..பிளீஸ் சேர் ..எண்டு கெஞ்சின சத்தம் கேட்டது கொஞ்ச நேரத்தாலை அழுதபடி உடுப்பை போட்டபடி நடக்க ஏலாமல் நடந்து வந்தவர் தன்னாலை சைக்கிள் ஓட ஏலாது தன்னை வீட்டைகொண்டு போய் விடச்சொன்னார் கொண்டுபோய் விட்டனான்.அடுத்தநாள்தான்  ரவியண்ணை மருந்து குடிச்சிட்டாரெண்டு கேள்விப்பட்டனான்.

அதுசரி சீக்கியனுக்கு ஆர் கசிப்பு வாங்கி குடுக்கிறது??

கொஞ்சம் தயங்கியபடி நான்தானண்ணை .

காசு தாறவனோ??

றோட்டிலை போறவையிட்டை பறிச்சு தருவான்.

யாரிட்டை போய் வாங்கிறனி?  பெயரை சொன்னான் . சரி நீ போ என்றவன் பிறேமை திரும்பி பார்த்தான். பிறேம் தலையை அசைத்தான்.
0000000000000000000000000
அன்று மாலை பிறேமும் அவனும் சைக்கிளில் நாகநாதன் டிஸ்பென்சறிக்கு முன்னால் வந்திறங்கி நின்றபடி நோட்டம் விட்டனர்.அவர்கள் நின்ற இடத்திலிருந்து  சுமார் 600 மீற்றர் தூரமளவில்தான் அந்த காப்பரண் இருந்தது. சிறிய குடில்போல் அமைக்கப்பட்டு மண்ணால் மெழுகியிருந்தது. சீக்கியன் பிரதான வீதியை கவனித்தபடி இருந்தான். டிஸ்பென்சறிக்குள் நின்றிருந்த மருத்துவ தாதி தேவியக்கா வெளியில் எட்டிப்பார்த்தவர். டேய் பெடியள் என்ன இந்தப் பக்கம் என்றபடி வெளியே வந்தார்.

காச்சல் மருந்து எடுக்கவேணும் அதுக்குத்தான் வந்தனாங்கள்.

உங்களை பாத்தால் காச்சல் காரர் மாதிரி தெரியேல்லை.இரண்டு பேரிலை யாருக்கு காச்சல்?

காச்சல் எங்களிற்கில்லை உங்களுக்குத்தான்  இன்னும் கொஞ்ச நேரத்திலை வரப்போகுது சிரிக்கிறார்கள்.

குறுக்காலை போவாரே என்னடா செய்யப் போறியள். என்னத்தையெண்டாலும் செய்யுங்கோ   டிஸ்பென்சறிக்குள்ளை  மட்டும் கால் வைக்கக்கூடாது  சொல்லிப் போட்டன்... செல்மாய் திட்டியபடி உள்ளோ போகிறார்.

தேவதையிளம் தேவி ஊரை சுற்றும் ஆவி  காதலான கண்ணீர் காணவில்லையா...ஓஓஓ நீ யில்லாமல் நானா.. பாடுகிறான்.
காச்சல் துன்பம் எண்டால் என்னட்டை தானே வருவியள் வாங்கோடா அப்ப நஞ்சுஊசிதான் அடிப்பன்.  என்று திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு   உள்ளே போய்விடுகிறார்.

சிறிது நேரம் காத்திருந்தார்கள் முழங்காலில் ஒரு பிளாஸ்ரிக் கானை தட்டியபடியே சைக்கிள் கடைக்கார சிறுவன் வந்து கொண்டிருந்தவன் அவர்களை கண்டதும் மிரண்டவனாய் அண்ணை என்ன இஞ்சை நிக்கிறியள்?

எங்கை கசிப்பு வாங்கத்தானே..

ஓமண்ணை

கானை என்னட்டை தா..

அண்ணை  ஒண்டும் செய்துபோடாதேங்கோ பிறகு சீக்கியன் எனக்கு அடிப்பான் அண்ணை.

பயப்பிடாதை என்றபடி கானை வாங்கியவன் டிஸ்பென்சரி கிணற்றில் அள்ளிய தண்ணீரால் பாதி நிரப்பியவன். சில நிமிடங்கள் பொறுத்திருந்துவிட்டு  தனது பிஸ்ரல் தயார் நிலையில் இருக்கிறதா என பார்த்து உறுதி செய்து பின்பக்கத்தில் செருகிக் கொண்டவன்.  சிறுவனிடம் டேய் இந்த இடத்திலையே நிக்கவேணும் என்றவன் பிறேம் நீ சைக்கிளை  சரியா இடத்துக்கு கொண்டு வா என்றுவிட்டு காவலரணை நோக்கி நடக்கத்தொடங்குகின்றான்.

காவலரணிற்கு முன்னால் வந்துவிட்டவனிடம் சீக்கியன் அவனையும் அவனின் கையிலிருந்த கானையும் பார்த்துவிட்டு சோட்டா  லடுக்கா  ககாகே (சின்ன பையன் எங்கே) என்றான்  கையிலிருந்த  பிளாஸ்ரிக் கானை  அவனை நோக்கி எறிந்தவன் சோட்டா லடுக்கா  உன்ரை கொம்மாவை தேடி போயிருக்கிறான் என்றபடி பின்னாலிருந்த பிஸ்ரலை உருவி இயக்குகிறான். றோட்டால் போய்க்கொண்டிருந்த பலரும் விழுந்து படுக்க பலர் ஒழுங்கைகளிற்குள்ளால் ஓடிக்கொண்டிருந்தனர். நூறு மீற்றர் தூரத்திலிருந்த இன்னொரு காவலரணில் இருந்த ஆமிக்காரன் முகாமை முகாமை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தான். அவனது பிஸ்ரல் இயங்கி முடிக்கவும் பிறேம் சைக்கிளை  கொண்டு வந்து அவனருகில் பிறேக் அடிக்கவும் சரியாக இருந்தது. சைக்கிளில் ஏறப்போனவன்  ஏதோ நினைத்தவனாக  சைக்கிளில் தொங்கிய  துணிப்பையில் இருந்த கைக்குண்டுகளில் ஒன்றை எடுத்தவன் கீறீசா பூசுறாய் என்றபடி  சரிந்து கிடந்த  சீக்கியனின் தொடைகளிற்கிடையில் வைத்து அதன் கிளிப்பை உருவி எறிந்து விட்டு சைக்கிளில் பாய்ந்து ஏறினான். காவலரண் அதிர்ந்து அடங்கியது.  அவர்கள் சங்கானை  சுடலையை கடந்து சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது  ரவீந்திரனின்  கனவுகள்  கற்பனைகளோடு  அவனது உடலும் எரிந்து முடிந்து சாம்பலில்  இருந்து புகைமட்டும் வெளிவந்துகொண்டிருந்தது அந்த தேசத்தை போலவே.பி.கு.  நண்பன் ரவீந்திரனின் நினைவுகளோடு இதனை எழுதி முடித்திருந்தாலும்.  இன்று நினைத்து பார்க்கும்போது  எங்கோ பிறந்த சீக்கியன்  இரண்டு உயிர்களுமே  அனியாயமான இழப்புக்கள்தான்.