Navigation


RSS : Articles / Comments


ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

11:33 AM, Posted by sathiri, 7 Comments

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.

பாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.

எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் "சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.

1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.

2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.

3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்னணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை
1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி
2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது
3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை

4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி "என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி

இப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி

7 Comments

Unknown @ 1:08 PM

கிண்டலுக்குப் பின் உள்ள கோபம் (கோபம்தானே?) தெரிகிறது! எனக்கும், இந்த மாதிரி காலத்துக்குப் பொருந்தாத அபத்த விழாக்களில் உடன்பாடு இல்லை. அதுவும், தமிழ்னாட்டில், அரசியல்வாதிகளை இந்த மாதிரி 'விழா'க்களுக்கு அழைப்பது அபத்தத்தின் உச்சம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 1:37 PM

சாத்திரி!
அப்படியே இதை; உந்த வீடியோ எடுக்கும் ஆக்களுக்கும் தெரியப்படுத்தி விடுங்கோ??
அடுத்த வீடியோ உங்கள் ஆலோசனையின் வர நிறைய
வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் இருந்து தாமரைப்பூ இறக்கி, செயின் நதியில கொட்டி ,புள்ளையை அதுக்குள்ள விட்டும் எடுக்கலாம்...பின்னணியில் ஈபிள் கோபுரமும் தெரிந்தால் அமர்களமாக இருக்கும் வீடியோவுக்கு

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 1:38 PM

சாத்திரி!
அப்படியே இதை; உந்த வீடியோ எடுக்கும் ஆக்களுக்கும் தெரியப்படுத்தி விடுங்கோ??
அடுத்த வீடியோ உங்கள் ஆலோசனையின் வர நிறைய
வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் இருந்து தாமரைப்பூ இறக்கி, செயின் நதியில கொட்டி ,புள்ளையை அதுக்குள்ள விட்டும் எடுக்கலாம்...பின்னணியில் ஈபிள் கோபுரமும் தெரிந்தால் அமர்களமாக இருக்கும் வீடியோவுக்கு

Anonymous @ 8:56 AM
This comment has been removed by a blog administrator.
Anonymous @ 8:58 AM

வணக்கம் தஞ்சாவூரான் நீங்கள் சொன்னது போலவே கோபம்தான் ஆனால் செய்யாதே எண்டால் செய்யாமலா இருக்கபோகினம் அதுதான் தொடர்ந்து செய்யச்சொல்லி என்னால் முடிந்த ஆலோசனைகள்.

Anonymous @ 8:59 AM

வணக்கம் யேகன் உங்கடை ஆலோசனை கூட நல்லாதத்தான் இருக்கு

பனங்கொட்டை (Panangkoddai) @ 10:43 PM

எப்பிடி உங்களால மட்டும் முடியுது? ஆனால் இப்ப வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் இது போன்ற முட்டாள்த்தனங்களை விரும்புவது இல்லை என்று நினைக்கிறேன்.