Navigation


RSS : Articles / Comments


என் இனமே என் சனமே ...

1:04 AM, Posted by sathiri, No Comment

என்  இனமே என் சனமே ...


இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின்  உரையுமற்ற ஒன்பதாவது  மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும்  விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்.
2009 ம் ஆண்டுக்குப் பின்னரும்  தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயாராக இருக்கிறார் .எரித்தியாவில் வான்புலிகளின் நூறு விமானங்கள் கூட குண்டுகளை ஏற்றியபடி பொட்டம்மானின் கட்டளைக்காக காத்திருக்கின்றது என்று கையை மடக்கி உயர்த்தி அடித் தொண்டையில் பலர் கத்திக்கொண்டிருந்தார்கள்.வருடங்கள் செல்லச் செல்ல ஐயாயிரம் பேரும் காணமல் போனது மட்டுமல்ல எரித்தியாவில் நின்றிருந்த விமானங்களும் மாயமாய் மறைந்து போய் விட்டது. தலைவர் ஏன் இன்னமும் வரவில்லையென்று கேட்டால்..அடித்தொண்டையால் கத்தியவர்கள் அனைவருமே டெங்கு வந்தவர்கள்போல.  "ம் ..வருவார்" ...என மூக்கால் முனகுகிறார்கள்.


அதே நேரம் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்களும் (அவை கொண்டாட்டங்களே தான்). புலிகளமைப்பின் சொத்துக்களை பங்கு போட்டுக்கொள்ளும் சண்டையில்  ஓன்று இரண்டாகி மூன்று நான்கு என அமீபாக்கள் போல குழுக்களாக பிரிந்து மீண்டும் இப்போதைக்கு இரண்டு குழுவாக .அனைத்துலகச் செயலகம், தலைமைச்செயலகம் என்று போட்டி போட்டுஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தியபடியே  கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு அமைப்புமே புலம்பெயர் தமிழர்களிடத்தில் புகுந்துள்ள வைரசு கிருமிகள்  தான்.இந்த இரு அமைப்புகளும் தற்சமயம் இணைத்து விட்டதாக ஒரு அறிக்கை இராமு சுபனின் பெயரில் வெளியாகியிருந்தாலும்  இல்லை யில்லை  இணையவில்லை என்கிற குரல்களும் கேட்கின்றது .வெளிநாடுகளில் பங்கு பிரிப்பு சண்டையில் யார் தங்கள்பக்கம் அதிகம் மக்களை கவர்வது என்கிற போட்டிகளோடு மாவீரர் நாளை கொண்டாடி குத்துவெட்டுகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் ஏழு ஆண்டுகள் கழித்து குறுகிய கால திட்டமிடலில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் மக்களால் மீண்டும் அனுட்டிக்கப் பட்டது.

மாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகளினதும் உறவுகளினதும் கல்லறைகளைத் தேடிய வர்களுக்கு அவை சிதைக்கப்பட்ட கற்களே கிடைத்தது.கிடைத்த கற்களையெல்லாம் பொறுக்கி குவித்து தங்கள் ஆற்றாமைகளை கண்ணீரோடு கதறியழுது அஞ்சலி செய்து முடித்திருந்தர்கள்.அழுது சிந்திய கண்ணீரைக் கூட எமது சில அரசியல் வாதிகள் சொந்தம்கொண்டாடிய கேவலமும் நடந்தே முடிந்தது.
இறுதி யுத்தத்தின் பின்னர் இறந்துபோனவொரு புலி உறுப்பினரின் படத்தை வீட்டில் வைத்து விளக்கு கொளுத்தி  அஞ்சலி செலுத்தவே முடியாத காலம் ஓன்று இருந்தது.அது எப்படி மாறியது?இலங்கைத்தீவில் தமிழர் அரசை தோற்கடித்த இரண்டாவது கைமுனு.இந்த நூற்றாண்டின் பௌத்த சிங்கள மீட்பர்  என்று போற்றப்பட்டு. நானே வாழ் நாள் ஜனாதிபதி என்று இறுமாப்போடு இருந்த ராஜபக்ஸாவை. இலங்கை அரசியல் குள்ளநரி குடும்பத்தின் வழிவந்த ரணிலும்.இலங்கையில் சீன ஆதிக்கத்தை முடிவுகட்ட மேற்குலத்தின் திட்டமிடலும் .அவர்களோடு கைகோர்த்துக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று அனைத்தும் இணைத்து ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் தான் இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதே நேரம் கடந்த வருடமே மாவீரர் துயிலுமில்லங்களை புதிப்பித்தல்,திலீபனின் நினைவுத்தூபியை புனரமைத்தல் என்று பல தீர்மானங்களை வட மாகாணசபை நிறைவேற்றியிருந்தது .அண்மையில் குறுகிய காலத்தில் அதிகளவு தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழக சட்ட சபையா? இலங்கை வடமாகாண சபையா? என்றொரு பட்டி மன்றமே நடத்தலாம்.அதில் பேச்சாளர்களாக  சுரேஷ் பிரேமச்சந்திரன் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் ஒரு அணியாகவும்.மறு தரப்பில் சம்பந்தர் ,மாவை ,சிறிதரன் ஆகியோரையும் பேசவிடலாம்.ஆனால்  கண்டிப்பாக  நீதிபதி இளஞ்செழியனைத்தான் நடுவராகப் போடவேண்டும்.ஏனெனில் அவர்தான் பேசிய அனைவருக்கும் இறுதியில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பார்.அதன் பின்னராவது தமிழர்களுக்கு ஏதும் விடிவுகாலம் கிடைக்க வழி பிறக்கலாம். 

மேலே பேச்சாளர்களின் பெயர்களில் சுமதிரனின் பெயரை ஏன் எழுதவில்லையென நீங்கள் கேட்கலாம்.தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளில் இலங்கையின் மும்மொழிகளில் நல்ல புலமையும்.சட்டமும் ,அரசியலும் செய்யத் தெரிந்த ஒரேயொரு அரசியல்வாதி அவர் மட்டுமே.கஜேந்திரகுமாருக்கும் மும்மொழியும்,சட்டமும் தெரியும் அவருக்கென்ன குறைச்சல் எண்டு என் சட்டையைப்பிடிக்க யாராவது வரலாம்.அவருக்கு மொழியும் சட்டமும் தெரிந்திருக்கலாம் ஆனால் அரசியல் சுத்தமாக தெரியாது.தெரிந்திருந்தால் 2010 ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்.வெளியே வந்த பின்னரும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்.இதை எழுதியதற்காக சுமத்திரனின் செம்பு என்கிற பட்டம் எனக்கு வழங்கப்படலாம். அதைனையும் வாங்கி ஒரு கரையில் வைத்துவிட்டு தொடர்கிறேன்.


வெளிநாடுகளில் நடக்கப்போகும் மாவீரர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார பாராளுமன்ற உறுப்பினர்  ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.இந்தியாவிலிருந்து அந்த நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட  மிகப்பெரும் அரசியல் தலைவர்களான வா. கௌ தமன்.  ஆர் கெ  செல்வன்மணி ..ஐய நா சபை வாசலிலேய கம்பு சுத்தி அமெரிக்காவை மிரள வாய்த்த வை கோ  ஆகியோரும் வரவளைக்கப்பட்டு அவர்களின் வீராவேசப்பேசுக்களின் எச்சில் பட்டே  பழுதாகிப் போய் விட்ட  மைக்குகளை ஒருவர் அடிக்கடி தட்டி. கலோ..டெஸ்டிங் ..வன் ..டூ ..திரீ ..சொல்லிக்கொண்டிருக்கும்போதே  மறுபக்கம் கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று களை கட்டும் .

இவை எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பறக்க. மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் மாலைகள் சுமந்து .மலர்களின் நடுவே  தீபங்களின் ஒளியோடு வரவேற்க. ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....

அதே போல இதுவரை காலமும் வெளிநாடுகளில் நடந்தது போலவே தாயகத்திலும் இந்தத்தடவை மாவீரர் வணக்க நிகழ்வுகளை யார் முன்னே நின்று செய்வதேன்கிற குழுப்பிரிவினைகள் தொடங்கி விட்டது.வன்னியில் விளக்கேற்றி கைநீட்டி படமெடுக்க சிறிதரன் எம் பி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முன்னைநாள் போராளிகள் (முன்னைநாள் போராளிகள் என்கிற சொற்பதத்தில் எனக்கு உடன்பாடில்லை ) சிலர் இணைத்து "ஜனநாயகப் போராளிகள்". என்கிற அமைப்பை தொடக்கி கிழக்குமாகாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்து வருகிறார்கள்.அதே நேரம் திடீரென "  'தமிழ்த்தேசிய ஜனநாயகப் போராளிகள் "..என்கிற இன்னொரு அமைப்பு          மாவீரர் நாளுக்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டம் வேகமெடுத்த எண்பதுகளில் "ஈழம்".. என்கிற அடை மொழியோடு எப்படி முப்பதுக்குமதிகமான இயக்கங்கள் தோன்றியதோ அதைப்போலவே இப்போது அடுத்ததடுத்து அதி புதிய ..அதிநவீன ..புத்தம்புதிய ..அதி விசேஷ ..ஜனநாயகப் போராளிகள்".. என்கிற அடைமொழியோடு பல கட்சிகள் உரு வாகலாம் .எத்தனை கட்சிகள் என்னென்ன கொள்கைகளோடு உருவானாலும் .வெளிநாடுகளில் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் மாவீரர்களின் தியாகங்களையும் அவர்களது அர்பணிப்பையும் தங்களுடையதே என யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.அவை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பொதுவானவை.இனமத பேதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவை.
,வீரவேசப்பேச்சுக்கள்,கொத்துரொட்டி போடும் சத்தம், செல்பி போட்டோக்கள் ,பந்தம்கொளுத் துவதற்காக அரசியல் வாதிகளின் அடிதடிகள் ,மண்ணில் விழுந்து புரண்டு அழும் தாய் ,மனதுக்குள்ளேயே மௌனமாய் விம்மிவெடிக்கும் சக தோழர்கள் .உறவுகளின் ஓலங்கள் இத்தனையையும் கடந்து. தனக்காக யாரேனும் ஒற்றை விளக்கேற்றமாட்டார்களா ? ."என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா" ? என்கிற புலம்பலோடு எம் தலைவனின் ஆன்மா நந்திக்கடலோரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ..

1:43 PM, Posted by sathiri, No Comment

சாத்திரியின் “ஆயுத எழுத்து“: ஈழ அரசியல் நாவல்களின் அனுபவப்புலம் -ஜிஃப்ரி ஹாஸன்


ஈழத்தின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர் சாத்திரி. முன்னாள் புலி இயக்க உறுப்பினரான அவரதும், அவரையொத்த புலிகள் இயக்கத்தின் சக உறுப்பினர்களினதும் போராட்ட கால இயக்க அனுபவங்களை பேசும் ஒரு நாவலே ஆயுத எழுத்து. ஒரு நவீன நாவலொன்றின் (modern novel) பண்புகளோடு நகரும் இந்நாவலில் மையக் கதாபாத்திரத்திற்கு ஒரு பெயர் சூட்டப்படாமல் நாவல் முழுவதும் அவன் என்ற படர்க்கை ஒருமையிலேயே அழைக்கப்படுகிறான். கதையும் “தன்மைக் கதைசொல்லலன்றி (first person narration) படர்க்கை கதைசொல் (third person narration) மாதிரியிலேயே சொல்லப்படுகிறது. சாத்திரி தன் கதைகூறலுக்கு வசதியாக அதைத் தெரிவு செய்திருக்கலாம்.

சாத்திரியின் இந்நாவல் போராட்டம் சார்ந்த ஒரு வித மாயவாழ்வு சார்ந்த அனுபவப் புலத்திலிருந்து உருவான ஒரு பதிவே ஆகும். மிகைப் புனைவற்ற ஒரு நடப்பியல் (realism) அனுபவ நாவல் இது. அதற்கு அப்பால் இந்நாவலுக்கு வேறு அடையாளங்களும் உள்ளன. அதீத புனைவுத் தன்மையும், மொழியின் விளையாட்டுத் தன்மையும் இந்நாவல் கொண்டிராததனால் “ஓர் அரசியல் வரலாற்றுக் கதையாக” இதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அநேக ஈழத்து அரசியல் நாவல்கள் அந்த எழுத்தாளர்களின் போராட்டம் குறித்த சொந்த அனுபவப் புலத்திலிருந்து உருவாகி வருபவையாக இருக்கின்றன. மிகவும் அரசியல் தன்மை மிக்கவை. தன்னனுபவம்சார் இலக்கியப் பதிவு எனும் வகைமையை தீவிரமாக முன்னிறுத்திக் கொண்டிருப்பவை.
ஆயுத எழுத்து நாவலின் நிலவியல் என்பது பன்முக வடிவங்கொண்டு ஒரு பயணத்தின் நிலக்காட்சி போலவே அடிக்கடி மாறியபடியும் இருக்கிறது. வடக்கு-கிழக்கு-தெற்கு என ஒரு விரிந்த உள்ளூர் களமும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என ஒரு உலகக் களமும் இந்த ஒரே நாவலின் நிலவியலாக விரிகிறது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பும் தொடர்புகளும் எப்படி ஆச்சரியமூட்டத்தக்க வகையில் படர்ந்திருந்தது என்பதை ஒரு அரசியல் செய்தி போல நாவலின் சில அத்தியாயங்கள் விபரிக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்நாவல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கங்கள் உருவாகி வந்த சூழலில் ஏதேனுமொரு இயக்கத்தில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்தனர். சாத்திரியின் நாவலின் மையக் கதாபாத்திரமான அவனும் தமிழீழக் கனவோடு (சிலவேளை விளையாட்டாக) புலிகள் இயக்கத்தில் இணைகிறான்.

நாவல் முழுவதும் அவன் இரண்டு விதங்களில் செயற்படுகிறான். ஒன்று எத்தகையதொரு சந்தர்ப்பத்திலும் தனது உயிரை பாதுகாத்துக் கொள்வது. யாரைக் கொன்றேனும் தனது மரணத்தை வென்றுவிடுவது. இரண்டு புலிகள் இயக்கமே எல்லாம். அதற்காக எதையும் செய்வது என இயக்கத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக் கொடுத்த நிலை. இது ஒருவித “தயை அற்ற” இலட்சியத்துக்கு (ruthless ambition) அவனை இட்டுச் செல்கிறது. இந்த நிலையிலிருந்து காதல், காமம், நட்பு, உறவுகள், பாசம் என எந்தவிதமான மனித உணர்ச்சிகளும் அவனை அசைப்பதில்லை. அவனைத் தன் நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கச் செய்வதுமில்லை.
ஒரு போராளிக்குரிய அனைத்துக் குணச்சித்திரங்களும் அவனுக்குள்ளிருக்கின்றன. போராட்ட இயக்கங்கள் இளமைக்குரிய கனவுகளை எவ்வாறு நசுக்கின என்பதை சாத்திரி அவனைக் கொண்டே வெளிப்படுத்துகிறார். “காதல்வயப்படுவது“ போன்ற இளமையின் சராசரிக் கனவுகள் “தேச உருவாக்கம்“ எனும் இலட்சியக் கனவாக மாற்றீடு செய்யப்படுவதையும், இயக்கம் அதற்காக எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தையையும் ஒரு குழந்தை மனநிலையில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக உண்மையைச் சொல்கிறார் சாத்திரி. சராசரி மனிதத் தேவைகள் உதாசீனம் செய்யப்பட்டு ஒரு சிலரின் அரசியல் தேவையாக மட்டுமே கீழிறங்கிப் போன போராட்டத்தின் அவலத்தை இதுபோல் வேறெந்த ஈழ நாவலும் பேசவில்லை.

நாவலின் மையக் கதாபாத்திரமான அவன்  இந்த இலட்சியவாதக் கனவுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் “மனிதத்தை“ முழுமையாக இழந்து வாசகனுக்கு வேதனையூட்டும் வகையில் காட்சியளிக்கிறான். அவனது செயல்பாடுகள் ஒரு இயக்கத்தின் நலனுக்கானவையாக மட்டுமே சுருங்கி இருக்கின்றன. மனிதாபிமானத்துக்கு அங்கு இடமிருப்பதில்லை. காதல், நட்பு, பாசம் போன்ற அடிப்படையான மனிதப் பண்புகளை அந்த இயக்கம் தன் உறுப்பினர்களிடமோ, பிற மனிதர்களிடமோ காண்பிப்பதில்லை. இயக்க உறுப்பினர்கள் கூட தமக்குள்ளேயோ அல்லது பிற மனிதர்களுக்கிடையேயோ அத்தகைய மனிதப் பண்புகளை வெளிக்காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக, அந்த “சுதந்திரப் போராட்ட“ இயக்கத்தின் அசையாத விதியாக இருப்பதைக் கண்டு ஒரு வாசகனால் உண்மையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.
இப்படி வாசகனை அதிர்ச்சியைடையச் செய்யும் சம்பவங்களும் விபரிப்புகளும் நாவலில் பல இடங்களில் வருகின்றன. அந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சாத்திரியே அதனை ஓர் உள்ளார்ந்த விமர்சனமாக எழுதுவதன் மூலம் அவருக்குள் ஏற்பட்டிருக்கும் ஒரு “சுய விழிப்புணர்வையும்” கருத்தியல் மாற்றத்தையுமே அது காட்டுகிறது. ஈழத்தமிழர்களில் அநேகரால் கடவுளின் இடத்தில் வைத்துப் போஷிக்கப்பட்ட பிரபாகரனின் புனித பிம்பம் குறித்த தமிழ் மனச் சித்திரம் அநேகமாக இந்நாவலால் சிறிதளவேனும் மறுவரைவுக்குள்ளாக்கப்படுகிறது.
புலிகள் இயக்கம் அதன் போராளிகளுக்கு கற்றுக்கொடுத்த ஒரே பாடம் மனிதர்களை நண்பர்கள், எதிரிகள், துரோகிகள் எனும் மூன்று நிலைகளில் வைத்து நோக்குவதைத்தான். மனிதர்கள் குறித்த இந்த முக்கோண நோக்கு “மக்களுக்காக இயக்கமல்ல, இயக்கத்துக்காகவே மக்கள்” எனும் அதிதீவிர வாதமாகவே போராட்டத்தை வடிவமைத்தது.

தேச உருவாக்கத்துக்கான செயற்பாடுகள் அறரீதியான போக்கிலிருந்து திசைமாறிப் போவதை நுண்மையான அங்கதத்துடன் இந்நாவல் பேசுகிறது. வங்கிக் கொள்ளையிடல், கோயில் நகைகளை கொள்ளையடித்தல், இன்னொரு சிறுபான்மையினத்தின் பொருளாதாரத்தை அபகரித்தல், அதற்காக அந்த சிறுபான்மையினம் குறித்த போலிக் கதைகளை கட்டிவிடல், தேசம் என்ற பெருங்கனவுக்கு முன்னால் மனித உயிர்களைக்கூட துச்சமாக மதித்தல் போன்ற மானுடப் பண்பற்ற செயற்பாடுகளை நோக்கி அந்த இயக்கம் கீழிறங்கிச் செல்லத் தொடங்கும்போதே அதன் வீழ்ச்சியும் இன்னொரு புறத்தில் ஆரம்பித்திருந்ததை வாசகன் உணர்ந்து கொள்கிறான். இந்த இடத்தில் சாத்திரியின் நேர்மையான அரசியல் நோக்கு நாவலில் மேலோட்டமாகவன்றி ஆழமானதாகவே வெளிப்படுகிறது.
சாத்திரியின் இந்நாவலின் அதிக பக்கங்கள் “தேச உருவாக்கம்” எனும் பெருங் கனவால் ஒடுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் உணர்வுகளாலும், கனவுகளாலும், அவர்களின் உயிர் வலியாலும் நிரம்பி இருக்கின்றன. துன்பியல் (tragedy) வாழ்வை, அனுபவங்களைப் பேசும் ஒரு நாவலில் இந்த வகைச் சித்தரிப்புகள் தவிர்க்க முடியாதவையுங்கூட.

ஆக, ஈழப் போராட்டத்தின் வரலாற்றை யதார்த்தமாக சித்தரித்துச் செல்கிறது இந்நாவல். ஆயுதப் போராட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்றம் பெறும் கட்டத்திலிருந்து அதன் முடிவு வரைக்கும் பேசும் இந்நாவல் புலிகளின் பிரதி தலைவராக இருந்த மாத்தையாவுக்கு கடைசியில் என்ன நடந்தது என்பது பற்றி எதையும் பேசவில்லை. இந்நாவலின் மையக் கதாபாத்திரமான அவனுக்கும் மாத்தையாவுக்குமிடையில் கோள் காவி ஒருவரின் செயற்பாடு காரணமாக தற்செயலாக ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் இறுதிக் கட்டமும் நாவலில் இல்லை. மாத்தையா பிற்பட்ட காலத்தில் புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வரலாறு. மாத்தையாவுக்கான மரண தண்டனைக்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா எனவும் வாசகன் சிந்திக்க இடம் உள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை இந்நாவல் திறந்தே வைத்துள்ளது.

இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்நாவல் கூறும் அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் திரண்டிருந்தாலும் புலிகள் இயக்கம் மீதான நுண்மையான ஒரு விமர்சன நோக்கு நாவலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்நாவலின் ஒரு உபபரிமாணமாகும். இந்த உபபரிமாணம் ஈழத்தின் இன்னொரு கதைசொல்லியான ஷோபா சக்தியின் “கொரில்லா“, “ம்” நாவல்களில் வெளிப்பட்டளவு அவரது மூன்றாவது நாவலான “பொக்ஸ்“ இல் வெளிப்படவில்லை. யுத்தம் முடிந்ததும் அது குறித்தும் ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்ற பரபரப்பே நாவலின் எல்லாப் பக்கங்களையும் நிறைத்திருக்கிறது. இதனால் “பொக்ஸ்“ முன்னையவற்றிலிருந்து பலபடிகள் கீழிறங்கிச் செல்லும் ஒரு நாவலாக தோற்றங்கொள்கிறது.
சாத்திரியின் “ஆயுத எழுத்தை“ப் பொறுத்தவரையும் போர் அனுபவப் புலம் தவிர்ந்து வாழ்வு பற்றிய வேறு நுண்ணோக்குகளோ, புதுமைகளோ நாவலில் வெளிப்படவில்லை. ஈழத்தின் சில கதைசொல்லிகளிடம் காணப்படும் இரசனையான கதைசொல்லல் மரபு சாத்திரியின் இந்நாவலிலும் உள்ளது. புனைவுத் திறன் அறவே இல்லாத எழுத்தாளர் என வாசகனால் புறக்கணிக்க முடியாதபடி “ஆயுத எழுத்து“ சாத்திரியை பல இடங்களில் காப்பாற்றவும் செய்கிறது.

புலிகள் இயக்கத்தின் வரலாற்றினூடாக ஈழப் போராட்ட வரலாற்றை பேச முற்படும் புனைவாகவே ஆயுத எழுத்தை நோக்க வேண்டியுள்ளது. வரலாற்றை ஒரு நேர்கோட்டில் சொல்லிச் செல்லும் இந்நாவல் ஒரு காலகட்ட விடுதலைப் போராட்டமொன்றின் இராணுவ மற்றும் அரசியல் போக்குகள் மீது ஒரு தனிமனித அனுபவத்தை ஏற்றிப் பேசுவதிலேயே அதிக அக்கறையாகவுள்ளது. இதனால் ஆயுத எழுத்து வாழ்க்கை வரலாறு அல்லது வரலாற்றுப் பதிவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இப்படி வரலாற்றுப் பதிவாக இருக்கும் ஒரு நாவலில் இலக்கியத் தன்மையை அதிகமாக ஒரு வாசகனால் எதிர்பார்க்க முடியாது.

நாவலின் வரலாற்றுச் சம்பவங்களை விபரிப்பதில் சாத்திரி எடுத்துக்கொள்ளும் அக்கறையை நாவலின் புனைவுத் தன்மையில் எடுத்திருக்கவில்லை. நாவல் தன் ஆழ்புனைவுத் தன்மையை வரலாற்றிடம் இழந்துவிட்டு ஒரு கதையாக மட்டுமே வாசகன் முன்னால் தன்னை நிலைநிறுத்துகிறது. ஆசிரியனின் தன்னனுபவங்களும், அவனது குரலும் வாசகனுக்கு ஒற்றைப்படையான கதையை விபரித்துச் செல்கிறது. நாவலின் சம்பவங்கள் வாசிப்புக்கான உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்துவதைப் போல் சாத்திரியின் புனைவு மொழி தரும் உந்துதல் இரண்டாம் பட்சமானதாகவே வாசகனை உணரச் செய்துவிடுகிறது. எனினும் நாவலை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் முடிவு வரை செல்லாமல் இடைநடுவில் நிறுத்திக் கொள்ளும் சலிப்பிலிருந்து இந்நாவல் வாசகனை உண்மையில் காப்பாற்றவே செய்கிறது.

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..

7:18 AM, Posted by sathiri, No Comment

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம்.


பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில் தொடங்கியது.

கோவணங்கள் மட்டுமேயணிந்த சிறுவர்கள் ஒரு தென்னம் தோப்பிலிருந்து எம்மை நோக்கி ஓடி வருகிறார்கள்.."இந்த நாடு சுதந்திரமடைத்த நாளிலிருந்து நாங்கள் தமிழராக எங்கள் மொழியை பேசுகிற உரிமை எதோ ஒரு விதத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது".. என்கிற ஜூட் ரட்ணத்தின் குரலோடு ஆங்கிலேயர்கள் கனிமவளங்களை ஏற்றி செல்வதற்காக அமைக்கப்பட்ட புகையிரதப்பதையில் நிலக்கரியில் இயங்கும் புகையிரதத்தோடு படமும் நகரத் தொடங்குகிறது .பின்னர் கைவிடப்பட்ட புகையிரதப்  பெட்டிகளை பெரியதொரு ஆலமரமொன்று  ஆக்கிரமித்து வளர்ந்திருப்பதை காட்டுவதோடு இரண்டு நிமிடத்திலேயே இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்.. தென்னிலங்கையில் மருதானைக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் பூங்காவில் சிறிய விளையாட்டு இரயிலை கலரில் காட்டுவதினூடு எம்மை நிகழ்காலத்துக்கு கொண்டுவருகிறார். அந்த இரயிலில் ஏறி விளையாடுவதற்காக "அப்பா   இங்கை வாங்கோ".. என சத்தமாக அழைக்கிறான்.

"இது எனது மகன் .சத்தமாக தமிழில் கதைக்கும்போதெல்லாம் என்மனதின் ஆழத்தில் எங்கிருந்தோ ஒரு பய உணர்வு என்னுள் தோன்றி உடலை நடுங்க வைக்கும். காரணம் அப்போ எனக்கு ஐந்து வயது நான் தமிழில் சத்தமாக கதைதுவிடக் கூடாது என்பதற்காகவே அப்பா பல நாட்கள் என் வாயை பொத்திப்பிடித்து வைத்திருந்திருக்கிறார்". என்று தொடர்ந்து ஒலிக்கும் குரலோடு 1983 ம் ஆண்டின் யூலை கலவரத்தின் காட்சிகள் புகைப்படங்களாக நகருகின்றது.அம்மணமாக  இருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழரை சுற்றி ஆனந்தக் கூத்தாடும்சில சிங்கள இளைஞர்.   உலகத்தையே உலுக்கிப்போட்ட இந்தப்படத்தை கையில் பிடித்தபடி நடந்துவரும்  ஒரு சிங்கள புகப்படப்பிடிப்பாளர்.. "இதோ இந்த இடத்தில்தான் அந்த தமிழரை அம்மணமாக இருத்தி வைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள்.நான்தான் இந்தப்படத்தை ஒரு பேருந்தின்  பின்னல் மறைந்திருந்து எடுத்தேன்.அந்த தமிழரை காப்பாற்றாது எதற்கு படமெடுத்தாய் என என்னை நீங்கள் கேட்கலாம்.தடுக்கப் போயிருந்தால் என்னையும் அவர்கள் கொலை செய்திருப்பார்கள்.படத்தை எடுத்துக் கொண்டுபோய் காவல்துறையிடம் கொடுத்துவிட்டேன்.என்னால் முடித்து அவ்வளவுதான்"... என்கிறார்.அடுத்து அகதிகளாக தமிழர்கள் வடக்கு நோக்கி சென்ற இரயிலில் பணிபுரிந்த இரயில் திணைக்கள ஊளியர்களின் அனுபவங்களையும்.தமிழர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து,அழித்து பயந்து வாழ்ந்த வாழ்க்கைகளையும் பதிவு  செய்தவாறு நகர்ந்த ஒளிப்படக்கருவி அடுத்த முக்கிய காலகட்டத்துக்கு எம்மை அழைத்துச்செல்கிறது .

அடிவாங்கி அகதிகளாக வடக்கு நோக்கிச் சென்றவர்களில் சிங்களவர்களுக்கு எப்படியும் திருப்பியடிக்க வேண்டும்.தனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என ஈழ விடுதலை இயக்கங்களில் இணைகிறார்கள்.அப்படிதான் எனது மாமாவும் இயக்கத்துக்கு போனார் என்று தற்சமயம் கனடாவில் வசிக்கும் மனோகரன் என்பவரை யூட் அறிமுகப் படுத்துகிறார்.இந்த ஆவணப்படத்தின் கதா நாயகன் என்றே அவரை சொல்லலாம்.N.L.F.T அமைப்பிலிருந்த மனோகரன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு திரும்பியவர்.குடும்பமாக அவர்கள் வாசித்த கண்டி நகருக்கு சென்று 83 கலவரத்தின்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள மக்கள் முன்னால் போய் நிக்கிறார்.யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.தன்னை அடையாள படுத்தியதும் அவர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர்ரோடு நலம் விசாரிக்கிறார்கள்.பின்னர் அங்கிருந்து தன்னோடு இயக்கத்திலிருந்த நண்பனைத் தேடி யாழ்ப்பாணம் போகிறார்.அவருக்கும் நண்பருக்குமான உரையாடலில் விடுதலை இயக்கங்களுகிடையிலான மோதல்கள் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை நினைவு மீட்டுகிறார்கள் .இவர்களோடு .T.E.L.O; P.L.O.T; E.R.O.S;L.T.T.E..ஆகிய உறுப்பினர்களும் நினைவு மீட்டல்களில் பங்கெடுக்கிறார்கள்.ஒவ்வொருவரும் இயக்க மோதல்களையும் தாங்கள் உயிர் தப்பியதையும் விபரிக்கிறார்கள்.தங்களின் இயக்கமான .N.L.F.T புலிகளால் தடை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான மனோகரன் தோட்டத்துக்கு வேலைக்கு போகும் கூலித் தொழிலாளி போல் அழுக்கான சாரமும் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு பழைய சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்லும் போது சாவகச்சேரி பகுதியில் காவலுக்கு நின்ற புலி உறுப்பினர் ஒருவர் தங்கள் காவலரண் அமைப்பதற்காக இரயில் தண்டவாளத்தை கிழறி எடுத்து அதனை துண்டுகளாக வெட்டிக் கொடுத்துவிட்டு போகும்படி கட்டளையிடுகிறார்.இது அவருக்கு மட்டுமான கட்டளையல்ல .

அந்தப்பகுதியால் சென்றவர்கள் அனைவருக்குமானது.ஒருவர் எட்டு தண்டவாளங்களை அறுக்கவேண்டும்  அதுவும் சாதாரணமாக  இரும்பு அறுக்கும் வாளால்.அப்படி எட்டு தண்டவாளங்களை அறுத்துக்கொடுதுவிட்டு இயக்கச்சி வழியாக இராணுவப்பகுதிக்கு தப்பிச் சென்று கனடா சென்று விடுகிறார்.
இப்படி அனைவருமே தனி நாட்டுக்கான போராட்டம் எனத் தொடக்கி பின்னர் ஒரு இயக்கம் ஒற்றுமையின்மையால் இன்னொரு இயக்கத்தை அழித்து படுகொலைகளை செய்தது மட்டுமல்ல அப்படி ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தை அழிக்கும்போது பலமான இயக்கத்துக்கு மக்களும் ஆதரவு கொடுத்தது.குறிப்பாக புலிகள்  ரெலோவை அழிக்கும்போது எந்தக் கேள்வியுமின்றி புலிகளுக்கு சோடாவும் உணவும் கொடுத்து வரவேற்றது புலிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் மற்றைய இயக்கங்களையும் அவர்கள் தடை செய்து அழித்து தனிப்பெரும் இயக்கமாக மாறிய புலிகள்  பின்னர் அழிக்கப்பட்டதற்கும் அதிகாரத்தோடு ஒத்தோடும் பெரும்பான்மை தமிழ்  மக்களின் மனநிலையும் ஒரு காரணம் என்கிற பொதுவான வாதத்தை அனைவரும் முன்வைகிறார்கள்.
இறுதியாக புகையிரதப்பெட்டிகளை ஆக்கிரமித்து நின்ற பெரிய ஆலமரம் வெட்டப்பட்டு அவை விடுவிக்கப் படுவதோடு மீண்டும் கொழும்பிலிருந்து யாழுக்கான பிகையிரதப் பாதை போடப்படும் காட்சியோடு படம் முடிவடைகிறது.திரையரங்கத்தில் அனைவருமே  தங்கள் கண்களை துடைத்து விட்டபடியே சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக கரவொலி எழுப்பிகொண்டிருந்தார்கள்.அப்பொழுது யூட்ரட்ணத்தை நோக்கி வந்த இளவயதுப் பெண்ணொருவர் அவர் கையைப்பிடித்து  "நான் இந்த நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவள் அப்பா இலங்கைத் தமிழர்தான் .நான் இதுவரை இலங்கை சென்றதில்லை.அப்பா அடிக்கடி தனது நாட்டைப்பற்றி சொல்வார் ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஒரு இனத்தின் துயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது".என்று வார்த்தைகள் முட்டி மோதி அழுகையோடு சொல்லிவிட்டு சென்றார்.  "இதை விட உங்களுக்கு வேறு விருதுகள் தேவையில்லை ".யூட் ரட்ணத்தின் தோளில் தட்டி சொல்லிவிட்டு வெளியே வந்து கனத்த மனத்தோடு கான் நகர கடலை நீண்ட நேரம் வெறித்தபடியே இருந்தேன்....


சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நோயல் நடேசன்

1:12 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நடேசன். (ஆஸ்திரேலியா)

ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன.
இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள்.
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட முடிவில் கிடைத்த ஒரு நன்மை என்பது இயக்கப்போராளிகளாக இருந்தவர்கள் இலக்கியவாதிகளாக மாறியதாகும்.


இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இயக்கத்தை எதிர்த்து பேனை எடுத்த என் போன்றவர்களும் தமிழ்வெளிக்கு ரோமர் காலத்தில் கிடைத்த சவர்க்காரம் போன்றவர்களே.
அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பிரான்சில் வதியும் சாத்திரி. அவரது தொடர்பு கவிஞர் கருணாகரனால் எனக்குக் கிடைத்தது. அவரது முகநூலில் நானும் இணைந்திருப்பதால், தொடர்ந்தும் அவரை அவதானிக்கிறேன்.
2009 இல் எனக்குத் தெரிய அவர் மட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியவர். மற்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்களின் கதைகேட்டு, முருகனுக்கு அந்த மறைந்துபோன தலைவனை ஒப்பிட்டு, அவர் இன்னமும் இருப்பதாகக் கொண்டாடியவர்கள். மே 2009 பின்பு கோழி திருடியவர்களாக மவுனமாகினார்கள். நல்லவரோ கெட்டவரோ ஒருவர் இறந்தபின்பு அதற்காக அஞ்சலி செலுத்துவது மரபாகிவிட்டது. இந்த மரபை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதசமூகம் பின்பற்றி வருகிறது.

சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை பணம் கொடுத்து வாங்கி அவற்றை மெல்பனில் அறிமுகப்படுத்தினேன். அது உண்மை, புனைவு, மற்றும் சாகசங்களின் கலவையான நாவல் என்றாலும், தமிழ் சமூகத்திற்குத் தெரியவேண்டிய பல விடயங்கள் அதில் உள்ளன. எதிர்மாறான கொள்கையிருந்தாலும் நேர்மையுள்ளவர்களை நாம் நேசிக்கவேண்டும். அது அவருக்காகவல்ல, சமூகத்தில் நேர்மை, உண்மை, சத்தியம் இருந்தாலே ஆரோக்கியமானது.

சாத்திரியின் “அவலங்கள்” தொகுப்பின் உள்ளடக்கம் வேறுவிதமானது. இதிலிருப்பவற்றை என்னால் சிறுகதைகளாகப்பார்க்க முடியவில்லை.
சாத்திரியின் எண்ண அலைகள், மன நெருடல்கள், வயிற்றில் தொடர்ந்து சுரந்த அமிலங்களாக திரண்டு வெளியாகியுள்ளது. சாத்திரி நேர்மையாக தமது எண்ணங்களை எங்களுக்குத் தெரிவிக்கிறார்.
அரிஸ்டோட்டல் சொல்லியதுபோல் கதை சொல்பவர் தனது சத்தியத்தை நிலைநிறுத்தும்போது அவர் சொல்வதை நாம் கேட்கிறோம். இந்தத்தொகுப்பில் பெரும்பாலானவை எமது மனதில் நேர்மையான அனுதாபத்தை, முக்கியமாகப் பெண்கள் பாத்திரங்களின் மூலம் உருவாக்குகிறது.

பெரும்பாலானவை காத்தாசிஸ் (Catharsis) ஆக மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லி அமைதியாக்குவது. கூர்வாளின் நிழலில் தமிழினி செய்ததும் இதுவே.
இந்தத்தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் எமது சமூகத்தில் நாம் அடைகாத்துக்கொண்டு உறங்கிய அழுகிய முட்டைகள். ஈழத்தமிழ்ச்சமூகத்தில் சாதி, பெண்போராளிகள் மற்றும் போலித்தனமான சுயநலமிக்க அரசியல் என்பன இந்தக் கதைகளின் மையங்கள். வாசித்தால், உணர்வு உள்ளவர்களுக்குப் படுக்கையில் முள்ளாக குத்தக்கூடியவை. கவிஞர் கருணாகரன் முன்னுரையில் எழுதியதுபோல் பெரும்பாலான கதைகள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் மிதப்பன
இந்திய அமைதிப்படையால் சிதைக்கப்பட்ட ராணியக்காவின் கதை நமக்கெல்லாம் தெரிந்தது. மூன்று வருடங்களில் இந்திய இராணுவத்தின் நடத்தையை ஒப்பிட்டு, இலங்கை இராணுவத்தைச் சிறந்தவர்கள் என தமிழ் மக்களை ஏற்கவைத்ததுடன், விடுதலைப்புலிகளின் இந்திய எதிர்ப்பு பிரசாரத்திற்கும் அந்த ஒப்பீடு துணைபோனது.

மல்லிகாவின் கதை, யாழ்ப்பாண வெள்ளாள மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எப்படி சாதியமைப்பை பாதுகாத்தார்கள் என்பதையும், சிங்கள இராணுவம் மற்றும் அரசாங்க ஒடுக்குமுறைக்கு மத்தியில் போராடிய காலத்தில்கூட தங்களருகே இருந்த மற்றைய தமிழர்களை எப்படி அன்னியமாக நடத்தினார்கள் என்பதைக் கண்ணாடியாக காட்டுகிறது.
கோயிலுக்குள் போவதற்கு ஆயுதம் மூலம் வழி ஏற்படுத்தியது உண்மையென்றாலும், சாதியமைப்பு, ஆயுதத்திலும் வலிமையானது என்பதை போரற்ற தற்காலத்தில் உணரமுடிகிறது.

சிமிக்கி கதை, கணவன் மனைவியின் அந்தரங்கத்தை காட்டுவதுடன், சிறுகதைக்குரிய அம்சத்துடன் மனதை நெகிழவைக்கிறது. ஆனால், கடைசிவரிகள் இடறுகின்றன.
மலரக்கா கதை பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் நிகழ்வது. இப்படியான கதைகள் பல ஆங்கிலத்தில் உண்டு. சிறு வயதிலிருந்து வயது முதிர்வதை பாலியல் உணர்விலிருந்து மட்டுமல்லாது நேர்மையாக அநீதியை எதிர்த்து நிற்கும் உணர்வின் ஊடாகவும் காட்டுவது
அலைமகள் கதை இயக்கப் பெண்போராளியின் கதை. வங்காளப் பிரிவினையில் பாகிஸ்தானியப் படைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மணக்கும்படி அக்காலத்தலைவர் முஜுபிர் ரஹ்மான் இளைஞர்களை வேண்டுகிறார். இலங்கையில் போராளிப் பெண்களையோ அல்லது இளம் விதவைப்பெண்களையோ மறுமணம் செய்வதற்கு உற்சாகப்படுத்தவோ உதவி செய்தற்கோ எந்த அரசியல் தலைவர்களோ அல்லது நிறுவனங்களோ இல்லாத நிலையில் அலைமகளின் இறுதிமுடிவு மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கிறதுகடைசிஅடி என்னும் கதை,

: 2009 மே மாதத்தில் போர் முடிவடையும் காலத்தில் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் முகவர்கள் பணத்தை மக்களிடம் கறந்த கதை. அதிகமாக பலர் ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்திலும் வங்கியில் கடன் எடுத்து ஆயுதம் வாங்க விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததாக அறிந்தேன் .
கைரியின் கதை. மனநலம் குன்றிய பெண்ணைத் துரோகியாகக் கொன்ற கதை. துரோகியாக மட்டுமல்ல அத்தகையோரை, தற்கொலைப்போராளிகளாகவும் பயன்படுத்திய பெருமைக்குரியது நமது வரலாறு.

நான் படித்து வாய்விட்டுச் சிரித்த கதை அகதிக்கொடி. ஆரம்பத்தில் நகைச்சுவையாகத் தொடங்கி இறுதியில் சோகத்தில் முடிகிறது.
பீனாகொலடா (Pina colada) அண்ணாசிப்பழமும் ரம்மும் சேர்த்து தயாராகும் கரிபியன் கொக்ரெயில். இதன் பெயரில் எழுதப்படுவது தமிழ்நாட்டுக்கதை. ஆரம்பத்தில் நன்றாக வந்து, இறுதியில் தொய்ந்துவிட்டாலும் இந்தக்கதையில் மிகப்பெரிய நீதி உள்ளது. ஒருவரால் வஞ்சிக்கப்பட்டு பாழ்கிணற்றில் தள்ளப்பட்டதாக நினைத்து அழும் பெண் பிற்காலத்தில், அவளே பலரை பாழ்கிணற்றுக்குள் தள்ளுவதைத் தொழிலாக நடத்துகிறாள்.
அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் எவன் அதிகம் பகிடிவதைக்கு உள்ளாகின்றானோ, அவனே பின்னர் பகிடிவதையின் மன்னனாக மாறுவான். வதைக்கப்பட்ட மருமகள், கொடுமைக்கார மாமியாராவது போன்ற முரண்நகை

முகவரி தொலைத்தமுகங்கள்: ஆயுதம் கடத்தும் இயக்கக் கப்பலில் இறந்த இளைஞனை ஒரு தீவில் புதைப்பது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேவேளையில் விடுதலைப்புலிகளின் பல கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இலங்கைக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் மாலுமிகளாக இருந்து மூழ்கியவர்களது உறவினர், பெற்றோரை இந்தக்கதை எனக்கு நினைத்துப் பார்க்கத்தூண்டியது.
இப்படி பல நிகழ்வுகளை என் போன்றவர்களுக்கு நினைக்க வைத்ததே இந்தக்கதைகளில் சாத்திரியின் வெற்றி
புரட்சி: இயக்கங்களில் காட்டிக்கொடுப்புகள் பற்றி இயக்கங்களை நன்கு அறிந்தவர்களுக்குத்தெரியும்.
அஞ்சலி என்ற கதை, போதைவஸ்துக்குள் செல்லும் இளம் தமிழ் பெண்ணின் கதை.

இந்தக்கதைகளைச் சிறுகதையாக்காமல் கிறியேட்டிவ் நொன்ஃபிக்சன் Creative non fiction)என்ற நிலையில் எழுதப்பட்டிருந்தால் இவற்றுக்குரிய மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். தமிழில் சிறுகதை அல்லது நாவல் என்ற வட்டத்திற்கு வெளியே தமிழ்நாட்டவர்கள் வருவதில்லை. அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு இலங்கையர்களும் உண்மைக்கதைகளை சிறுகதை – நாவல் என எழுதவரும்போது, உண்மைச்சம்பவங்கள், கோயில் காளையை நலமடித்து வண்டியில் கட்டுவது போன்றதாகிவிடுகிறது.
சாத்திரியின் அவலங்கள் நாங்கள் விளையாடிய துன்பகரமான விளையாட்டின் சில கண்ணீர்த்துளிகள். இதேவழியில் போகாது இருப்பதற்காக நாம் இவற்றை வாசிக்கவேண்டும்.
—0–

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?

12:38 PM, Posted by sathiri, No Comment

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?

 " நடு"  இணைய இதழுக்காக ..லெ.முருகபூபதி – அவுஸ்திரேலியா.

 

படித்தோம் சொல்கின்றோம்:
சாத்திரியின் தரிசனங்களாக எமது மக்களின் அவலங்கள்.       

” எனக்குத்  தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…”

இந்த வரிகளுடன் சாத்திரியின் ராணியக்கா என்ற சிறுகதை முடிகிறது. இந்த ராணியக்கா மட்டுமல்ல அவரைப்போன்ற பல ராணியக்காக்களின் கதைகள்  ஈழத்தின் அனைத்து மக்களுமே என்ன பாவம் செய்தார்கள்…? என்ற கேள்விதான் ஒரு வாசகன் என்ற  நிலையிலிருந்து எம்மிடம் எழுகின்றது.
ஈழத்திற்கான போரைத்தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப் பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.
சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம்.

ஆனால், சாத்திரி போன்ற எழுத்தாளர்களினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்களின் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் கதைகளாக வெளியே தள்ளப்படுகின்றன. எழுத்தில் பதிவாகிவிடுகின்றன.
கி.மு. – கி.பி. என்ற சொற்பதம் உலகவரலாற்றில் இடம்பெற்றுவருகிறது. அதுபோன்று போ. மு. – போ. பி. என்று நாம் எமது தமிழின வரலாற்றை எழுத நேர்ந்திருக்கிறது.
அதாவது போருக்கு முன்னர், போருக்குப்பின்னர்.
சாத்திரி இரண்டு காலங்கள் பற்றியும் எழுதிவரும் படைப்பாளி. அதனால் அவரது ஆயுத எழுத்து” படித்தோம். தற்பொழுது அவரது மற்றும் ஒரு பதிவாகஅவலங்கள்” படிக்கின்றோம். இவர் எழுதியஅன்று சிந்திய இரத்தம்” இதுவரையில் படிக்கக்கிடைக்கவில்லை.
ஈழப்போர் முடிவுற்ற பின்னர்தான் இந்த மூன்று நூல்களையும் சாத்திரி வரவாக்கியிருக்கிறார். இன்னும் சரியாகச்சொல்லப்போனால், விடுதலைப்புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் இவற்றை நூலக்குகின்றார்.

அவர்கள் தோற்கடிக்கப்படாதிருந்தால், சாத்திரியிடமிருந்து  இந்த மூன்று நூல்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்காது. விடுதலைப்புலிகளின் வெற்றியின் நியாயங்கள்தான் அவரது எழுத்தில் பேசப்பட்டிருக்கும்.
எம்மைப்பொறுத்த மட்டில்  இந்தப்போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள் இலங்கையின் மூவின மக்களுமே. அதிலும் ஏழை மக்கள்.  நீடித்த ஈழப்போரின் முடிவும் விடுதலைப்புலிகளின் தோல்வியும் பலரையும் சுதந்திரமாக,  எவருக்கும் பயமின்றி துணிந்து எழுதவைத்திருக்கிறது.

அதனால் போரை நீடிக்கச்செய்த தரப்புகளின் உள்விவகாரங்களும் மறைக்கப்பட்ட இரகசியங்களும்  அம்பலமாகின்றன. அதில் ஒரு தரப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த ஒருவரிடமிருந்து எழுத்துமூல வாக்குமூலம்  வரும்பொழுது, அவர் சார்ந்திருந்த தரப்பின் செயல்களின் மௌன சாட்சியாகவும்  அவரையும் இனம் காண்கின்றோம்.
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவல் வடிவத்தில் பேசிய அவலங்களை தற்பொழுது அதே பெயரில் சில சிறுகதைகளிலும் பார்க்கின்றோம்.
இந்தத்தொகுதியினை எதிர் வெளியீடு என்ற பதிப்பகம் தமிழ்நாடு பொள்ளாச்சியில் வெளியிட்டிருக்கிறது. சாத்திரி கனவு கண்ட ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கைப்படைகளிடம் வீழ்ந்த கிளிநொச்சியிலிருந்து கருணாகரன் ” உண்மை மனிதர்களின் கதைகள்” என்ற தலைப்பில் சிறந்த முன்னுரை தந்திருக்கிறார்.
அவலங்கள்  கதைகளை எழுதியவரும் – முன்னுரை தருபவரும் நீடித்த அந்தப்போரின்  மௌனசாட்சிகளே.

நீடிக்கும் போரில் முதல் கட்டமாக பெரிதும் பாதிக்கப்படுவதும்  பெண்கள்தான், இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலும் பாதிக்கப்படுபவர்கள்  பெண்கள்தான் என்பது போர் வரலாற்று  ஆசிரியர்களின் சரியான கூற்று.
அந்தப்போர், வியட்நாமில் நடந்தாலென்ன, ஈராக், லெபனான், பாலஸ்தீனம், சிரியா, காஸ்மீரில் ,  இலங்கையில் நடந்தாலென்ன முதலிலும் இறுதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள்தான்.
படைகளின் தேடுதல் வேட்டையில் இளைஞர்களோ ஆண்போராளிகளோ சிக்கவில்லையென்றால், அந்த வலையில் சிக்கிச்சீரழிவது அவர்களின் சகோதரிகள் அல்லது தாய்மார்தான்.

காணாமல்போய்விட்டவரை தேடிச்செல்லும் பெண்ணுக்கும் நிலை இதுதான். போரில் குடும்பத்தலைவனை இழந்த பின்னர் சுமைகளுடன் போராடுவதும் பெண்தான்.  போரினால்  விதவையாகிவிட்டால் சமூகத்தின் பார்வையில் நீடிக்கும் விமர்சனங்கள் மற்றும் ஒரு போராட்டம்.
இவ்வாறு நீடிக்கும் போர் வழங்கும் அறுவடைகள் அனைத்தும் பெண்களையே சார்ந்திருக்கிறது.

சாத்திரியும்  தமது  கதைகளில் பெண்களின் அவலங்களையே உயிரோட்டமாக பதிவுசெய்திருக்கின்றமையால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் வரலாறாகியிருக்கிறது இந்த அவலங்கள் சிறு கதைத்தொகுதி.
அவலங்கள் தொகுப்பின் முதல் கதையில் வரும் ராணியக்கா தனது  நீண்ட தலைமுடியை பராமரிக்கவே தினமும் அரைமணிநேரம் செலவிடுபவர். முழுகிய பின்னர் தலைமுடியை ஒரு கதிரையில் படரவிட்டு அதனை சாம்பிராணி புகையுடன் உறவாடச்செய்பவர். தினமும் புதிய வார்ப்பு படப்பாடலை – இதயம் போகுதே – பாடிக்கொண்டிருப்பவர்.
அவ்வாறு ஊரில் வாழ்ந்த ராணியக்கா, இந்திய ஆமியிடம் அசிங்கப்பட்டு, இறுதியில் இந்தியாவிலேயே வாழநேர்ந்து, அந்த நாட்டின் தமிழ் மாநிலம் சென்னையில் வளசரவாக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.
ராணியக்காவின் கதையைச்சொல்பவர், அவரது தாயகத்திற்கும் இந்திய இடப்பெயர்வு வாழ்வுக்கும் இடையில் நடந்தவற்றை சொல்லும்போது, ராணியக்காவின் கூந்தலை சித்திரிக்கிறார்.

அந்தக்கூந்தலை இந்திய சீக்கிய சிப்பாயும் பற்றிப்பிடிக்கின்றான். இறுதியில் அவர் தனது உளப்பாதிப்புக்கு எடுத்த மருந்து மாத்திரைகளே அந்த அழகிய நீண்ட கூந்தலை படிப்படியாக அகற்றிவிட்டன. இறுதியில் கூந்தலற்ற மொட்டந்தலையுடன் காட்சிதரும் ராணியக்கா, இறுதியில் இந்த உலகைவிட்டே நிரந்தரமாக விடைபெறுகிறார்.
அவரது தற்கொலை மரணம்,  அவரது கதையை எழுதியவருக்கு கோபத்தைத்தரவில்லை.

ஈழப்போரில் பல பெண்போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலைசெய்துகொண்டார்கள். ராணியக்காவும் தொடர்ந்து ஈழத்திலிருந்திருப்பின் பெண்போராளிகளுடன் இணைந்திருக்கக்கூடும். சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டாலும் அதனை வீரமரணம் என்றுதான் வர்ணிக்கும் எமது சமூகத்தில், இந்தப்போரினால் உடல் உளப்பாதிப்புக்குள்ளான ராணியக்கா அளவுக்கு அதிகமாக நித்திரைக்குளிசை எடுத்தார் என்பதனால் அவரது மரணம்  தற்கொலையாகிவிட்டது.
சயனைற்றுக்கும் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும்  நித்திரைக்குளிசைக்கும் இடையில் நூலிழை வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை  இச்சிறுகதையின் வாசிப்பு  அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொள்கின்றோம்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 06-11-2015 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பதினொரு கதைகளையும் திகதி குறிப்பிடப்படாத அஞ்சலி என்ற கதையுடனும் அவலங்கள் வெளியாகியிருக்கிறது.

வழக்கமாக சிறுகதைகளை தொகுத்து வெளியிடும் படைப்பாளிகள் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அவை வெளியான இதழ் மற்றும் ஆண்டு முதலான விபரங்களையும் தருவது வழக்கம். ஆனால், சாத்திரி தமது கதைகள் எழுதப்பட்ட காலத்தை தொடக்கத்திலேயே தந்திருப்பதன் மூலம் புதிய கதைத்தொகுப்பு நடைமுறைக்கு அறிமுகம் தந்துள்ளார்.
இவரின் கதைகளின் பிரதான பாத்திரங்கள்: ராணியக்கா, மல்லிகா, மலரக்கா, அலைமகள், கைரி முதலான பெண்கள்தான் என்றாலும் ஏனைய கதைகளும் பெண்களுடன்தான் பயணிக்கின்றன.

இவர்கள் அனைவரும் நீடித்த போரினாலும், சமூகச்சிக்கல்களினாலும், குடும்ப உறவுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்தான். அந்தவகையில் சாத்திரி பெண்களின் குரலாக ஒவ்வொரு கதையிலும் ஒலிக்கின்றார்.
மல்லிகா இவளின் கதையை எழுதியவர், அன்றைய சமூகத்தில் சாதி அடிப்படையில் தனது குடும்பத்தினால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டாள் என்பதைச் சித்திரிக்கின்றார். இவளது தந்தைக்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வாசல் காவலாளி வேலை கிடைக்கிறது. அந்த வேலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் விநோதனின் புண்ணியத்தால் கிடைத்ததாகவும் சொல்கிறார்.

அத்துடன் விநோதன் வாக்குவேட்டைக்காக சுதந்திரக்கட்சியால் நிறுத்தப்பட்டார் என்ற  தொனியிலும் எழுதுகிறார். இதே விநோதனை இயக்கங்கள் அவருடைய  தொகுதி அலுவலகத்தில் சுட்டுக்கொல்ல முயன்றன.

இறுதியில் அவர் கொழும்பில் அவருடைய வீட்டின் முன்னால் ஒரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டது அவரது மனைவி ஜெயந்தியும் அவருடைய குழந்தையும்தான் என்பது எமக்குத்தெரிந்த கதை.
மக்களுக்கு,  அதிலும் எமது சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்தவர்களுக்கு உதவியவர்களுக்கு இயக்கங்கள் அளித்த பட்டமும் தண்டனையும் அனைவருக்கும் தெரிந்த கதைதான்.

ஆனால்,  எமக்கெல்லாம் தெரியாத கதைகளை தமது நாவல், சிறுகதைகளில் தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் சாத்திரி.
ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகா, புலம்பெயர்ந்து கொலண்டில் வாழத்தலைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் போர் முடிந்த காலப்பகுதியில் ஊருக்குச்சென்று, ஆலயம் சென்று போரில் மடிந்த போராளி  நந்தனின் பெயரில் பூசையும் செய்து அன்னதானமும் கொடுக்கிறாள்.
இங்குதான் இந்தத்தொகுப்பின் வாசிப்பு அனுபவத்தில் தொடக்கத்தில் சொல்லப்பட்ட போ. மு. – போ. பி. என்ற காலத்தை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.

விடுதலை இயக்கங்கள் எமது சமூகத்தில் சில சீர்திருத்தங்களை செய்திருந்தாலும்,  அவை ஓரணியில் திரளவில்லை. திரண்டிருப்பின் வரலாறு வேறுவிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.
ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகாவால் அங்கு பிரவேசித்து பஞ்சபுராணம் பாட முடிந்திருக்கிறது. நாடுகடந்து சென்றாலும் ஊர் வரும்பொழுது ஆலயம் வந்து பூசை செய்யவும் அன்னதானம் வழங்கவும் முடிந்திருக்கிறது.

அவள் கைபட்ட நெல்லிக்காயை உண்ணக்கூடாது என்று தடுத்தது போருக்கு முந்திய சமூகம். அவள் தந்த அன்னதானத்தை அதே சமூகம் வாங்கி உண்ணச்செய்தது போருக்குப்பிந்திய காலம்.
இவ்வாறு காலத்தின் வேறுபாடுகளை படிமமாக பதிவுசெய்துள்ளார் சாத்திரி.
1972  இல் – யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் புதிதாய் கலியாணம் செய்துகொண்ட தோற்றத்தில் அருகருகே அமர்ந்து வெள்ளிவிழா படம் பார்க்கும் அந்த இளம் தம்பதியினரை பெரிதும் கவர்ந்துவிடுகிறது  “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல். இந்தப்பாடல் அவர்கள் இருவருடனும் கடல்கடந்தும் பயணிக்கிறது. படத்தின் நாயகியின் காதில் ஆடும் சிமிக்கியைப்போன்று தனது மனைவிக்கும் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டு,  ஆசைப்பட்டவாறே (விமானப்பயணத்தில்)  அவள் காதில் அணிவிக்கும்  கணவனின் கதை… துருக்கி -சிரியா நாடுகளின் எல்லை மலைப் பகுதியில் I.S.I.S அமைப்பின் ஏவுகணையின் சீற்றத்தில் முடிவுக்கு வருகிறது.

அந்தக்கணவன் இறுதியாகக்கேட்டதும் “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல் வரிகளைத்தான்.
இங்கும் சாத்திரி இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பிக்கின்றார்.
இத்தொகுப்பில் எம்மை மிகவும் பாதித்த கதை மலரக்கா. வாழ்வில் பலரால் பந்தாடப்பட்ட மலரக்கா இறுதியில் பிரான்ஸ் நாட்டின் ஒரு புறநகரில் எழுந்திருக்கும் எம்மவர் கோயிலொன்றில் திருப்பணி செய்கிறார்.
இக்கதையை வாசித்தபோது தமிழ்த்திரைலகில் பந்தாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற நடிகை நினைவுக்கு வந்தார். அவர் கர்னாடகா மாநிலத்தில் ஒரு கோயிலில் இருப்பதாக ஒரு செய்தி. அவர் பற்றியும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.

மலரக்காவை ஒரு காலத்தில் நாடிச்சென்றவரே நீண்ட இடைவெளிக்குப்பின்னர் புகலிட நாட்டில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்கிறது.
எனினும் மலரக்காவுடன் மீண்டும் அறிமுகமாகியபின்னரும், தனது தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுக்கும் தயக்கத்தையும் காண்பிக்கிறது. முடிந்த கதை தொடர்வதில்லை என்ற பாடலும் எழுதியவரின் நினைவுக்கு வரலாம்.
மலரக்காவின் கதையை தனது மனைவியிடம் சொல்வதன் ஊடாக வாசகருக்கும் தெரிவிக்கும் பாங்கில் எழுதப்பட்ட கதை இது. மலரக்காவிடம் வழங்கிய இனிமேல் சந்திக்கப்போவதில்லை” என்ற சத்தியவாக்கை  காப்பாற்றுவதற்காகவே மீண்டும் பல வருடங்களின் பின்னர் சந்திக்க நேர்ந்தபோதும்  தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுத்ததாக மனைவிக்குச்சொல்கிறார்.

” ஊகும்…. இவர் பெரிய அரிச்சந்திரன். காப்பாத்திட்டாராம். இன்னும் இப்படி எத்தனை கதை இருக்கோ…?” அவர் மனைவியிடமிருந்து பெருமூச்சுவருகிறது.
” இவரிடம் இப்படி எத்தனை கதை இருக்கோ…?”  என்ற கேள்வி எமக்கும்  எழுகிறது.

நாட்டை  மீட்பதற்கான போரில் கடல்பயணங்கள் மேற்கொண்ட ஒரு கடல் பெண் புலியின் கதை, நாட்டை விட்டு தப்பியோடி மடிந்த கதையாக முடிகிறது. போர்க்காலத்தில் ஒரு பெண்போராளிக்கு சமூகத்திலும் குடும்பத்திலும்  இருந்த  மரியாதைக்கும் போரில் தோற்றபின்னர்,  சரணடைந்து  வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் கிடைக்கும் அவமானத்திற்கும் இடைப்பட்ட  ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசுகிறது அலைமகள்.

இதனை 22-09-2012 இல் எழுதுகிறார் சாத்திரி.
2009 மே மாதத்திற்கும் 2012 செப்டெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் கடற்புலியான அலைமகளின் கதையின் இறுதியில், அவள் பேசும் கடைசி வார்த்தைகள் இவை:
” கலியாணமா…? இயக்கத்துக்கு போகேக்குள்ளை இருபது வயது. பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை. இரண்டரை வருசம் தடுப்பும் புனர்வாழ்வும். இப்ப வயது முப்பத்தெட்டை எட்டித்தொடப்போகுது. ஒற்றைக்கண்ணும் இல்லை. வசதியும் இல்லை. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதெண்டு தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.”
அவள் தன் கதையை இரத்தினச்சுருக்கமாகவே சொல்லி முடிக்கையில் அவளருகில் நெருக்கமான ஜேக்கப், ” நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை நானே ….” அவன் முடிக்கும் முன்பே கடலில் எழுந்த பேரலை அவர்களையும் அந்தப்படகில் வந்தவர்களின் கதையையும் முடித்துவிடுகிறது.

கடலில் எதிரிப்படையுடன் தாக்குப்பிடித்து தாயக மீட்புக்கான போரில் களமாடியவள், நாடு கடந்து தப்பி ஓடலுக்கான முயற்சியில் கடல் அலையோடு  அள்ளுண்டு போகிறாள்.
இப்படி எத்தனை கதைகளை கேட்டுக்கொண்டிருக்கப்போகிறோம்….?
இத்தொகுப்பில் கடைசி அடி என்ற கதை புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு, நீடித்த போருக்காக நிதிவசூலித்து உசுப்பேத்திக்கொண்டிருந்தவர்களின்  வாழ்வுக்கோலத்தை சித்திரிக்கிறது.

“வரலாற்றுக்கடமையை செய்யத்தவறாதீர்கள்”  என்று சொல்லிச் சொல்லியே தண்டலில் ஈடுபட்டு கொழுத்துப்போனவர்கள், இன்று வேறு வடிவத்தில் வரலாற்றுக்கடமைக்கு கதை அளந்துகொண்டிருக்கிறார்கள்.
அங்கே போர் முடிந்து மக்கள் நிம்மதியாக வாழத்தொடங்கினாலும் புலன்பெயர்ந்தவர்கள் தமது இருப்புக்காகவும் வாழ்வுக்காகவும் வரலாற்றுக்கடமை பற்றிப் புலம்புவதை நிறுத்த மாட்டார்கள்.
“எமது கைகள் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள் என்ற தேசியத்தலைவரின் உச்சாடனத்தை புலம்பெயர்ந்த நாடொன்றின் பார்க்கில் அமைந்திருக்கும் சுவர் ஒன்றில் தனது கையில் வடிந்த இரத்தத்தினாலேயே எழுதி, அப்பாத்துரை என்ற நிதிசேகரிப்பாளனின் கதையை முடிக்கிறான் இயக்கத்தை நம்பி மோசம்போன அமுதன்.இயக்கம் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தும், வங்கியில் கடன் பெற்றும் கொடுத்து ஏமாந்துவிடும் அமுதன், அதனால் தனது இல்லற வாழ்வையும் நிம்மதியையும் இழக்கிறான். நடைப்பிணமாக அலைகிறான். 

அவனையும் அவனைப்போன்ற அப்பாவிகளையும், ஈழப்போரின் கடைசி அடி என்று சொல்லிச்சொல்லியே சுரண்டி AUDI போன்ற சொகுசு வாகனங்களில் வலம்வருபவர்களின் ஒரு குறியீடாக அப்பாத்துரை என்ற பாத்திரத்தை சாத்திரி சித்திரிக்கிறார்.
இவ்வாறான  “அவலங்கள்”  தான் போரின் பின்னர்  நம்மவர் மத்தியில் எழுதப்பட்டிருக்கும் முடிவுரை எனச்சொல்லவருகிறார் சாத்திரி.
சுயவிமர்சனங்களின் ஊடாகத்தான் தனிமனிதர்களும் சமூகமும் திருந்த முடியும். சுயவிமர்சனம் சத்திர சிகிச்சைக்கு ஒப்பானது. சிகிச்சை கடினமானது. வலி நிரம்பியது. அதனால் சுகம் வரவேண்டும்.
அந்தச்சுகத்திற்காக வலிகளையும்  சகித்துப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம்  வேண்டும்.

இவை எம்மவர்களின் அவலங்களை படிக்கும் வாசகர்களுக்கும் இருத்தல் வேண்டும்.பிரபாகரன் , மாத்தையா ,அமிர்தலிங்கம் பற்றி ..அன்று சிந்திய ரத்தம் .கேள்விபதில்

2:49 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து ..

கேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்ன??அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை கொலை செய்தது தொடர்பாக பிரபாகரனிற்கும் மாத்தையாவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட அதுவே காரணமாக இருந்தது என்றொரு கருத்து  மக்களால் பேசப்பட்டது அதைப்பற்றி உங்களிற்கு தெரிந்தவற்றை  கூறுங்கள்....


பதில் ..மாத்தையா என்பவர்  பிரபாகரனிற்கு உறவினர் மற்றும் அவரோடு நெருக்கமானவர் என்கிற தகுதியைத் தவிர எவ்வித ஆழுமையும் திறமையும் அற்ற ஒருவராகவே இருந்தார். தனக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டார் என  நம்பிய பிரபாகரன் அவரையே புலிகள் அமைப்பிற்கு பிரதித் தலைவராகவும். புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் . வன்னி மாவட்டத் தளபதி..  பெண்கள் பிரிவிற்கு பொறுப்பாளர்.என பல பதவிகளை மட்டுமல்ல பிரேமதாசா காலத்தில் பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் அமைப்பினால் தொடக்கப் பட்ட அரசியல் கட்சியான  விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பொறுப்பார் என  ஏகப்பட்ட அதிகாரங்களை கொண்டிருந்தார்.

 இத்தனை அதிகாரங்களை அவர் கைகளில் வைத்திருந்தாலும் அவரது திட்டமிடலில் உருப்படியாக  எந்தவொரு தாக்குதலைக்கூட நடத்தியிருக்கவில்லை. இவரது முதலாவது திட்டமிடலில் இவரது தலைமையில் நடந்த முதலாவது தாக்குதல்தான் 1985 ம் ஆண்டு கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல். இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்லாது புலிகள் அமைப்பில் 13 பேர் கொல்லப் பட்டிருந்தனர். அதன் பின்னர் வன்னி மாவட்ட பொறுப்பை அவர் வைத்திருந்தாலும் வன்னியிலும் பெரிய நடவடிக்கைகள் எதனையும் செய்திருக்கவில்லை.இயக்கத்தில் கிட்டுவின் வேகமான வளர்ச்சியும் புகழும் இவரிற்கு ஒரு வித எரிச்சலையே உண்டு பண்ணியிருந்தது. கிட்டுவோடு ஒரு நிழல் யுத்தத்தையே நடத்திக் கொண்டிருந்தார் கிட்டு காலை இழந்து  இந்தியா போய்விட யாழ் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பெடுத்த ராதாவும் குறுகிய காலத்தில் கட்டுவனில் நடந்த மோதலில் இறந்து போனார்.

அதற்கடுத்ததாக குமரப்பா பொறுப்பாளர் ஆகிறார்.அவரும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் கைதாகி இறந்து போகிறார்  இந்தியப் படை காலத்தில் குறுகிய காலத்திலேயே யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக  நியமிக்கப் பட்ட . இம்ரான் பாண்டியன்.(இருவரும் வேறு  வேறு நபர்கள்) மதி.(முன்னைய தெல்லிப்பளை பொறுப்பாளர்)அக்காச்சி (நீர்வேலி பொறுப்பாளராக இருந்தவர்)சுபாஸ் (மனிப்பாய்)  என மோதல்களில் இறந்து போனார்கள். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் யாழிற்கு மீண்டும் பொட்டு தலைமையில் புகுந்த புலிகள் அமைப்பு இந்திய இராணுவத்தின் எச்சங்களாக  வரதராஜப் பெருமாள் தலைமையில்  இயங்கிய  தமிழீழ தேசிய இராணுவத்தை அழித்து முடித்ததும் மாத்தையா யாழ் மாவட்ட பொறுப்பாளராகிறார்.இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால் இறுதியாக  இந்தியப் படையின் கப்பலில் தப்பியோடும்போது திருகோணமலை துறை முகத்தில் கப்பலின் வாசலில் நின்று  வரதராஜப் பெருமாள் தமிழீழப் பிரகடனத்தை செய்திருந்தார்.(இப்போ தான் தமிழீழ பிரகடனம் செய்யவில்லை என மறுத்துள்ளார்).  அதே நேரம் மணியம் தோட்டத்தில் இருந்த தமிழ் தேசிய இராணுவ முகாமை பொட்டு தலைமையிலான அணி தாக்கியபோது  அந்த முகாம் பொறுப்பாளராகவும் நிதி பொறுப்பாளராகவும் இருந்த சுரேஸ் பிரேமச் சந்திரன் தப்பியோடியிருந்தார். அவரே பின்னர் புலிகள் அமைப்பினால் அரவணைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  இன்றுவரை இருக்கிறார்.

மாத்தையா யாழ் மாவட்டத்தை பொறுப்பெடுத்தபோது கிட்டுவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இறந்தும் இந்திய இராணுவத்திடம் கைதாகியும் நாட்டை விட்டும் வெளியேறியும் இருந்தனர். மீதமாக இருந்தவர்கள்  கிட்டு மீது இருந்த கோபத்தில் மாத்தையாவால்  பழிவாங்கும் நடவடிக்கையாக  அவர்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப் பட்டு அவர்களது பதவி நிலை பறிக்கப் பட்டு சாதாரண உறுப்பினர்களாக  முன்னரங்க காவல் நிலைகளில் நிறுத்தப் பட்டனர்.  இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே  புலிகள் தங்கள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான  பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை  பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு  வடமராச்சி அரசியல் பிரிவு பொறுப்பாக இருந்த  தமிழ்ச் செல்வனை  யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.மாத்தையா கொழும்பில் தங்கியிருந்த காலங்களில்  வெளிநாடுகளிற்கும் போக முடியாமல் புலிகள் கட்டுப் பாட்டின்  கீழ் இருந்த  தங்கள் சொந்த ஊர்களிற்கும் போக முடியாமல் கொழும்பில்  இருந்த மாற்று இயக்கக் காரர்கள் பலரை மாத்தையா பிடித்து கட்டி யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பப் பட்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்லப் பட்டார்கள்.


இதனை பிரேமதாசா அரசு கண்டும் காணமலும் இருந்திருந்தது அதே நேரம்  தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் நடந்திருந்தது. அமிரின் கொலையை  பிரபாகரனிற்கு தெரியாமல்  மாத்தையாதான் செய்தார் இதனாலேயே இரவரிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு  மாத்தையாவிடம் இருந்த புலனாய்வு பிரிவுப் பொறுப்பை பறித்து பொட்டுவிடம் கொடுத்ததாக பொதுவான கதை ஒன்று பரவியிருந்தது. அதனை பலர் இன்றும் நம்புகிறார்கள். ஆனால்   பிரபாகரனின் கட்டளையின் படியே அமிரின் கொலை நடந்தது. அமிரின்  கொலை நடந்தபோது பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்  பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு  இந்திய  இந்தியாவுடன் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில்  தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்வரை  இந்திய இராணுவம்  வெளியேறக்கூடாது  அதற்கான கடப்பாடு இந்திய அரசிற்கு உள்ளது என  ராஜுவ் காந்திக்கு  அமிர்தலிங்கம் கடிதமொன்றை  எழுதியிருந்தார். இது பிரேமதாசாவிற்கும் எரிச்சலை கிழப்பியிருந்தது. எனவே அமிரின் கொலையை  யாரென்றே தெரியாமல் கனகச்சிதமாக முடித்து விட்டால் பிரேமதாசா அரசால் பிரச்சனை வராது  பிரேமதாசாவிடமே சொல்லி  அந்த கொலை பற்றி ஒரு விசாரணை குழுவை  அமைத்து அதனை அப்படியே இழுத்தடித்து  நீத்துப் போகச் செய்யலாம் என்பதே பிரபாகரனின் திட்டமாக இருந்தது .

ஆனால் அந்த கொலையை திட்டமிட்டு செய்யவேண்டிய பொறுப்பு மாத்தையாவினுடையது.  இங்கும் பிழைத்தது மாத்தையாவின் திட்டமிடல்தான்  அமிரை கொல்வதற்கு வேறு வழிகளை தேடாமல்  சுட்டுக்கொல்வதென்று முடிவெடுத்தவர்.   அமிருடன் தொர்புகளை ஏற்படுத்தி  பிரேமதாசா அரசுடன்  புலிகளிற்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களின அதிகாரங்களை பெறுவதற்கு  அமிர்தலிங்கமும் எம்முடன் இணைத்து போச்சு வார்த்தைகளில் ஈடு படவேண்டும் என கோரிக்கை வைத்தவர் அமிருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் அதே நேரம்  அவரை கொலை செய்வதற்கான வழி வகைகளை ஆராயும்படி வடமராச்சி பகுதியை சேர்ந்த  விசு என்பவரை மாத்தையா அனுப்பி வைக்கிறார்.  விசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்  ஒரு மேதலில் காயமடைந்தும் இருந்தார். இவரிற்கு ஒரு காதலி இருந்தார் அவர் கனடாவில் போய் குடியேறிய பின்னர் விசுவை கனடாவிற்கு அழைப்பதற்காக  அனுசரனை கடிதத்தினை அனுப்பிய பின்னர் விசு இயக்கத்தை விட்டு வெளியேறி கனடா போகும் திட்டத்தோடு துண்டு கொடுத்து விட்டு (இயக்கத்தை விட்டு வெளியேறும்  கடிதம்) போக  மாத்தையாவிடம்  கடிதத்தை கொடுத்தபோது  விசுவை  கனடா போகும் முதல் இறுதியாக இயக்கத்திற்கு ஒரு வேலை செய்யும்படி  மாத்தையா கேட்டதால் விசுவும் ஒத்துக்கொண்டு அமிரின் கொலையை செய்து முடிக்க சம்மதிக்கிறார்.

விசுவிற்கு  கனடா விசாவும்  கிடைத்து விட்டிருந்தது   விசு கொலையை செய்து தப்பி கனடா போய் விட்டால்  எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் திட்டமிடல்களின்படி அமிருடன்  விசு ஆரம்ப பேச்சு வார்த்தைகளை  தொடங்குகிறான்.  அமிர்தலிங்கம்  தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு காவல்துறையினர் காவல்  நிற்பார்கள்.  விசுவும்  அவரது இரண்டு நண்பர்களும் உள்ளே போகும் போது காவல் துறையினர் பரிசோதனை  செய்த பின்னரேயே  அவர்களை உள்ளே போக அனுமதிப்பார்கள். தொடர்ச்சியாக  சில சந்திப்புக்கள்  நடந்து முடிந்ததும்  நாங்கள் வரும் போதெல்லாம்  எங்களை உருட்டி சோதனை போடுவது  எங்களிற்கு  அவமானமாகவும் அசெளகரியமாகவும் இருக்கின்றது என விசு அமிரிடம் சொன்னதும் இனி அவர்களை சோதனை போடவேண்டாம் என தனது மெய் பாதுகாவலர்களிற்கு அமிர்தலிங்கம்  உத்தரவிட்டிருந்தார். அடுத்த தடைவை விசு அமிர்தலிங்கம் அவர்களை சந்திக்கச் செல்லும்போது  கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்தச் சென்று  அமிர்தலிங்கத்தின்  மெய் பாதுகாவலர்கள்  தன்னை சோதனை போடுகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்திருந்தார்.மெய்ப் பாது காவலர்கள் விசுவை சோதனை போடவில்லை எனவே அடுத்த சந்திப்பில் அமிரை போட்டு விடுவது என முடிவெடுத்தவர்  அமிரிடம் அடுத்த தடைவை முக்கிய விடயங்கள் பேசவேண்டும்  அத்தோடு  சில முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனவே என்னுடன் வேறு இரண்டு நபர்களும் வருவார்கள்  அதே போல    தமிழர் விடுதலைக் கூட்டணியில் முடிவெடுக்கும்  அதிகாரமுள்ள முக்கியமானவர்களையும் அன்று வரச்சொல்லுங்கள்  அதே நேரம் இந்த செய்தியை  உங்கள் மெய் பாதுகாவலர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று அமிர்தலிங்கத்திடம்  தெரிவித்துவிட்டு சென்றிருந்தார்.

1989 ம் ஆண்டு ஜுலை மாதம் 13 ம்திகதி அமிரை போட்டு விடுவதற்கான நாளை விசு தீர்மானிக்கிறார். தன்னுடன் அலோசியஸ் மற்றும் விக்கி ஆகியோரையும் அழைத்து அவர்களிடமும் ஆளிற்கொரு பிஸ்ரலை உடலில் நன்றாக மறைத்து வைக்கச் சொன்னவர்  விக்கி மெல்லிய தோற்றமுடையவன் என்பதால் அவனின் உடலில் யூ.சி ரக தானியங்கி துப்பாக்கியையும் மறைத்து அதற்கேற்றமாறு தொள தொள உடையணிந்து தயாராக அமிர்தலிங்கத்தின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் அவர்களும்  புலிகள் அமைப்புடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டம் என்பதால் யோகேஸ்வரனையும்  சிவசிதம்பரத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது  அங்கு வந்து சேர்ந்த  விசு குழுவினரிடம்  ஏதோ வித்தியசத்தை கவனித்த அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள்  அவர்களை சோதனை போடவேண்டும் என  கேட்க அதனை விசு மறுக்க இவர்களின் வாக்கு வாதத்தின் சத்தத்தை கேட்ட அமிர்தலிங்கம்  வெளியே எட்டிப்பார்த்து  அவர்களை உள்ளே விடுங்கள் என சொன்னதும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட்டு விடுகிறார்கள். வீட்டின் உள்ளே  போயிருந்த விசு குழுவினர் சிறிது நேரம் அமிர்தலிங்கம் குழுவினரோடு பேசுவது போல போக்கு காட்டியபடியே தங்கள் துப்பாக்கிகளை எடுத்து அமிர்தலிங்கம்  யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி சுடத் தொடங்குகிறார்கள்.

சத்தம் கேட்டு அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் ஓடி வந்த அதே நேரம்  முதலிலேயே  விசு குழுவினர் மீது  அமிரின் மெய் பாது காப்பாளர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதால்  அவர்கள் வாசல் கதவை விட்டு வீட்டு வசல் அருகிலேயே நின்றிருந்தார்கள். அனைவரையும் சுட்டு விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதலை நடத்த  விசுவும். அலோசியசும் அந்த இடத்தில் இறந்து போக  விக்கி  தன்னிடம் இருந்த யூ சி துப்பாக்கியால் யால் சுட்டபடி வீட்டிற்கு  வெளியே ஓடி விட. விக்கி வீதி காவலில் இருந்த ஒரு காவல்துறையை சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப் படுகிறான்.
அமிர்தலிங்கமும்  யோகேஸ்வரனும் இறந்து போக சிவ சிதம்பரம் மோசமான காயங்களுடன்  உயிர் தப்பி விடுகிறார். விசுவின் உடலை அடையாளம் கண்ட இலங்கை காவல்துறை  இதனை புலிகள் செய்ததாக  ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் புலிகள்  பிரேமதாசா அரசிற்கு கொடுத்த அழுத்தத்தால்  குழப்பமான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தது. காயத்தில் உயிர் தப்பிய  சிவ சிதம்பரம் அவர்கள்  பேச்சு வார்த்தைக்கு வந்த புலிகள் அமைப்பினரே  இதனை செய்தனர் என்று வைத்திய சாலையில் இருந்து  அறிவிக்கிறார். சிவசிதம்பரத்தின்  அறிக்கையை அடுத்து கொலையை புலிகள் செய்தாகவே உறுதியாகின்றது.

அமிர்தலிங்கத்தின் கொலையை செய்ததற்காக  பிரபாகரன்  மாத்தையாவோடு  முரண்படவில்லை.  செய்யச் சொன்ன கொலையை சரியாக செய்யவில்லை என்னதாலேயே  இருவரிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.   அன்றைய தப்பாக்கி சூட்டில் இறந்து போயிருந்தால் துரோகியாகியிருக்கவேண்டிய சிவ சிதம்பரம் அவர்கள் காலம் தாழ்த்தி  காலமானதால்  மாமனிதர்  ஆகியிருந்தார்.   துரோகிகள் போட்டுத் தள்ளுங்கள்  என கட்டளையிட்ட பிரபாகரனே  இந்த மாமனிதர் பட்டத்தை  வழங்கி கெளரவித்திருந்தார்.  இந்தக் கொலையை அடுத்து  உடனடியாக மாத்தையாவை  அழைத்த பிரபாகரன்  அவரிடமிருந்த  புலனாய்வு துறை பதவியை பிடுங்கிக் கொண்டதோடு  கிட்டுவினால் முன்மொழியப்பட்ட  பொட்டுவிடம் அந்த பதவியை ஒப்படைத்திருந்தார். அதுவரை கிட்டுவோடு மட்டுமே  பனிப்போர் நடத்திக் கொண்டிருந்த மாத்தையா தனது பதவியை பொறுப்பெடுத்த பொட்டு மீதும் தன்னுடைய கோபப்பார்வையை திருப்பத்தொடங்கியிருந்தார்.இந்தக் கோபத்தினால்  பின்னர் யுத்தம் தொடங்கிய பின்னர்  தனக்குத்தானே  தனியாக ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கியிருந்தார் . இயக்கத்திற்கென பொதுவான புலனாய்வு பிரிவு பொட்டு தலைமையில் இயங்கினாலும் தங்களிற்கென தனியாக  புலனாய்வு பிரிவை வைத்திருந்தவர்களில்  மாத்தையாவும் கருணாவும் மட்டுமே.


பிறேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை இரகசியமாக ஆரம்பித்த காலங்களில்தான்   வேலூர் சிறையிலிருந்த  இஞ்சினியர் என்கிற மகேந்திரனை  றோ அமைப்பினர்  கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விடுகிறார்கள். இவரும் தப்பி வந்ததாகவே செய்தி பரவுகின்றது.  முன்னர்  கிருபனையும் கிட்டுவையும் றோ அதிகாரிகள்  வன்னிக்கு அனுப்பியிருந்தது  தனியாக பிரபாகரனை  குறி வைக்க மட்டுமே அனால் இஞ்சினியரை அனுப்பும் போது இரண்டு திட்டங்களுடன் அனுப்பியிருந்தார்கள். கிருபன் எப்படி பிரபாகரனிற்கு  நெருக்கமோ அப்படி இஞ்சினியர் மாத்தையாவிற்கு  நெருக்கமானவர். இருவரும் நீண்டகால நண்பர்கள் இஞ்சினியரின் தாயார் புனிதவதி இவரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாட்டிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும்   பிரபாகரனின்  மனைவி  மதிவதனி இருந்தார்.  இவரது பெயர்  புனிதவதி என்றாலும் ஆரம்ப காலத்தில்  சில போராளிகள்  இவரை  நக்கலாக  வீரத்தாய்  என  அழைத்தது  காலப்போக்கில்  அவரது பெயர் வீரத்தாயாகிப் போயிருந்தது. புலிகள்  அமைப்பில்  ஆரம்பாகால பெண் உறுப்பினர்கள் என்றால் அடேல் பால சிங்கத்திற்கு   அடுத்தபடியாக  குப்பி கட்டாத  புலிப் பெண் உறுப்பினர்  புனிதவதி என்பது குறிப்பிடப் படவேண்டும்.  அது மட்டுமல்லாது பிரபாகரன் மதி  குடும்பத்தினரிற்கு பிறந்த குழந்தைகளான  சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா இருவரையும் ஒரு பேத்தியாரின் (பாட்டி) நிலையில் இருந்து பராமரித்து  வளர்த்தவரும் இவர்தான்.  ஏனெனில் பிரபாகரனின்  ஆரம்பகால இயக்க தொடர்புகாளால்  சகோதர சகோதரிகள்  உட்பட    அவரது  தாய் தந்தையரும் பிரபாகரனோடு  தொடர்புகளை  வைத்துக்கொள்ள விரும்பியிராத காலம்.

 அதே நேரம்  புலிகளால் கடத்தபட்டு  தமிழ்நாட்டிற்கு  மதிவதனி  கொண்டு சென்ற பின்னர்   தங்கள்  மானம் மரியாதை கொளரவம்  பறி போய் விட்டது என பல ஆண்டுகள் இரவரது தாய் தந்தையருமே  இவர்களோடு கதைக்காமல் முரண்பட்டு  இவர்களோடு தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள்  அதே காலப் பகுதியில் தான்   ஒரு தாயின் நிலையில் இருந்து  மதிவதனியை  பராமரித்திருந்தார் புனிதவதி அவர்கள். விடுதலைப் புலிகள்  அமைப்பானது  சாதியத்தில் குறைந்தவரால் படிக்காதவரால் தொடங்கப்பட்டு  பின்னர் பள்ளிக்கூடம் போக விரும்பாத ஒரு மொக்கு கூட்டத்தவர்களால்  இயக்கப்படுகின்றதென்கிற  யாழ்ப்பாணிய  மேட்டுக்குடி கல்வி  சமூகத்தின் பார்வையானது புலிகளின் தொடர் வெற்றிகளாலும்  அதன் மூலம் கிடைத் புகழினாலும்  அந்த மேட்டுக்குடி சிந்தனையில் மாற்றம்  ஏற்பட்ட பின்னரே  பிரபாகரனினதும்  மதி வதனியினது குடும்பத்தினரதும்  மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு  தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.  எனவே  றோவினுடைய  முதலாவது  திட்டம் பிரபாகரன் இரகசிய முகாமில் இருந்து  எப்பொழுது  தனது மனைவியை சந்திக்க வந்து போகிறார் என்கிற விடங்களை இஞ்சினியர் அவரது தாயார் மூலம்  அறிந்து  தங்களிற்கு தகவல் தருவார் அவர் அங்கு வந்து போகும் போது  அவரை போட்டு விடுவது  .

இரண்டாவது திட்டம் மாத்தையாவிற்கு நெருக்கமான  இஞ்சினியர் மாத்தையாவை பிரபாகரனிற்கு  எதிராக மாற்றி விடுவார்  அப்படி  மாற்றினால்  புலிகள்  இயக்கத்தை  உடைக்கலாம். அல்லது மாத்தையா  பிரபாகரனிற்கு  எதிராக  இயங்குவது போல   ஒரு தோற்றத்தை உண்டாக்குவது இதன் மூலமும் உடைக்கலாம்.  இது றோவின் திட்டம் .இஞ்சினியரிடம் பொதுவாகவே  எல்லாவிடயத்திலும் புழுகும் தன்மை கொண்டவர்  இஞ்சினியர்   தான் கைத்துப்பாக்கியால் சுட்டு  கெலிகொப்ரரை  கடலிற்குள் விழ்த்தினேன்  என்கிற அளவிற்கு புழுகுவார்.தான்  தமிழ் நாட்டு சிறையில் இருந்து தப்பிவந்ததாக சொன்ன கதையை   கொஞ்சம் அதிகமாகவே புழுகுகளோடு   அனைவரிடமும் சொல்லித் திரியத் தொடங்கியிருந்தார். அதன்மூலமாகவே  புலிகளின் புலனாய்வு பிரிவினர் இஞ்சினியரின் மீது  சந்தேக பார்வையை  வைக்கத் தொடங்கியிருந்தனர்.  கிட்டு இறந்த பின்னர்  வடமராச்சி தீருவிலில்  நடந்த கிட்டுவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக  பிரபாகரன் சென்றிருந்தபோது  அவரின் வாகனத்திற்கு  கண்ணிவெடி வைத்து அவரை கொல்லதற்காக திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த  கண்ணிவெடி ஒன்றினை  புலிகளின் புலனாய்வு பிரிவினர் கண்டெடுக்கின்றார்கள்.

இதே நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் புலிகளின் ஆட்பற்றாக் குறையை  போக்குவதற்காக  அவர்கள்  தமிழ்நாட்டில்  இருந்தும் ஆட்களை திரட்டி  கொண்டு வந்து யாழில் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.  புலிகளிற்கான ஆட்திரட்டல்களிற்கு தமிழ்நாட்டில்  நெடுமாறன் மற்றும் வை.கோ.போன்றவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இவர்களின் ஆட்திரட்டல் பிரச்சாரத்தின் போது  இவர்கள் செய்த  ஒரு விவேகமற்றதொரு செயல்  என்னவெனில்  அகன்ற தமிமீழம் என்கிற ரீதியில்   இலங்கையின்  வடக்கு கிழக்கோடு தமிழ் நாட்டையும் உள்ளடக்கி  பரந்த தமிழீழம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இது மூஞ்சூறு தான் போக வழியை காணமல் விளக்குமாத்தையும்  இழுத்தக்கொண்டு போன  பழமொழியை போலவே இருந்தது. இந்த பிரச்சாரம் இந்திய உளவுப்பிரிவினரிற்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் எரிச்சலையே கொடுத்திருந்தது. அதே நேரம்  புலிகள் அமைப்பினால் பயிற்றப்பட்ட  சிலரால்  தமிழ்நாட்டில்  தமிழ்த்தேசிய மீட்புப் படை  என்னும்  ஆயுதம் தாங்கிய  குழு தொடங்கப்பட்டது. அதே நேரம் தமிழ் நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பும் புலிகளிற்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த  அமைப்புக்களோடு  அகன்ற தமிழீழம்  என பிரச்சாரம் செய்த நெடுமாறனின்  கட்சியான  தமிழர் தேசிய இயக்கமும்  அன்றைய ஜெயலலிதா  அரசால் தடை செய்யப் பட்டது. புலிகளால் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட உறுப்பினர்களுடன்  றோவின்  முகவர்களும் இணைக்கப்பட்டு புலிகளின் பயிற்சி முகாம்களிற்கு  அனுப்பபட்டனர்.
அது மட்டுமல்லாது  இலங்கையில் இந்தியப் படை  இருந்த காலங்களில்  பணிபுரிந்த இந்திய படை வீரர்களும்  றோ  அமைப்பினால் புலிகளில்  இணைக்கப் பட்டிருந்ததோடு  இவர்களிற்கும்  தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட புலிகள் அமைப்பை சேர்ந்த இஞ்சினிர் மற்றும்  கிருபனிற்கும் இடையில் ஒரு வலைப் பின்னல் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர்.  அன்றைய காலத்தில் கிட்டு  நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் கிட்டுவுடன் தனியாக தொர்புகளை பேணி வந்திருந்தனர். தீருவிலில்  கண்ணி வெடி மீட்கப் பட்டதை தொடர்ந்து இஞ்சினியரை யும் வேறு சிலரையும்  புலிகளின் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர் இந்த கைதுகளையடுத்து  நடந்த விசாரணைகளின்போதே  புலிகள் தமிழ்நாட்டில் இருந்து  இருந்து கொண்டுவந்து  பயிற்சி கொடுத்தவர்களில்  றோவினது  உளவாளிகளும் கலந்திருப்பது  தெரியவந்திருந்தது. உடனடியாகவே  தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகைகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது  தமிழ்நாட்டில் இருந்து இயக்கத்தில் இணைந்தவர்களின்   நம்பிக்கையான 53 பேரை  மட்டுமே இயக்கத்தை விட்டு நீக்கி அவர்களை தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டு மற்றைய  தமிழ்நாட்டு  உறுப்பினர்களை  போட்டுத் தள்ளிவிட்டிருந்தார்கள்.இந்த களையெடுப்பின்போது  யாழில் சில இந்திய இராணுவத்தினர்களும்  மாறு வேடங்களில் கைது செய்யப்பட்டதனால்  மலையகத்தில் இருந்து வந்து  புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் கடைகளில் வேலை செய்த பல கூலித் தொழிலாளிகளும் சந்தேகத்தின் பெயரில் பிடித்துக் கொண்டு செல்லப் பட்டு கொல்லப் பட்டிருந்தனர்.

இஞ்சினியர் கைது செய்யப் பட்டதுமே  அவரது தாயார் புனிதவதியை பிரபாகரன்  மதிவதியின் வீட்டில் இருந்து  வெளியேற்றியதோடு சிலநாட்கள்  அவர் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் இருந்திருந்தார் ஆனால் அவரிற்கு எதுவுமே தெரிந்திருக்காததால்   அவரை தங்கள் கட்டுப் பாட்டு பகுதியில் இருந்து வெளியெறி விடுமாறு  அனுப்பி விட்டிருந்தார்கள்  இவர் பின்னர் திருகோண மலையில்  வாழ்ந்திருந்தார்.இஞ்சினியர் கைதானதையடுத்து  கிருபனும் பிரபாகரனின் மெய் பாதுகாவல் பிரிவில்இருந்த செங்கமலம் மற்றும் சுசிலன் ஆகியோர் கைதாகி விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரபாகரன் பயணம் செய்யும் வாகனம் என அடையாளம் காணப்பட்டு  இன்னொரு தாக்குதலும் பளைப் பகுதியில் நடத்தப் பட்டிருந்தது ஆனால் அதில் பிரபாகரன் பயணம் செய்திருக்கவில்லை.விசாரணைகளின் போது  பலர் மாத்தையாவே  தங்களிற்கு  பிரபாகரனை  கொலை செய்யும்படி  கட்டளையிட்டதாக சொன்னதையடுத்து மாத்தையாவை  கைது செய்வதென பொட்டு முடிவெடுத்தார்.

 மானிப்பாயில் மாத்தையாவின்  பிரதான முகாமும் அதற்கருகே  மாத்தையாவின் முகாமிற்கு பாது காப்பாக இன்னொரு முகாமும் இருந்தது  இரண்டிலுமாக  அறுபது வரையான போராளிகள்  தங்கியிருந்தார்கள். இந்த  இரண்டு முகாம்களையும்சொர்ணம் தலைமையில் பொட்டு சுமார் நூற்றைம்பது பேருடன் சென்று சுற்றி வழைத்தார் அதே நேரம் மாத்தையாதரப்பிலிருந்து  கட்டாயம் தாக்குதல் வருமென நினைத்து மாத்தையா தரப்பு போராளிகளை  சண்டையிடாது சரணடையச் சொல்வதற்காக  ஒலி பெருக்கி பூட்டிய வாகனம் எல்லாம் தயாராக கொண்டு போயிருந்தார்கள். ஆனால் சொர்ணமோ பொட்டுவோ  நினைத்ததைப்போல மாத்தையா தரப்பிலிருந்து  தாக்குதல் எதுவும் வரவில்லை அதற்கு மாறாக மாத்தையா தரப்பு பொட்டு குழுவினரை  வரவேற்றதோடு தீடீரென  வந்த விடயத்தை கேட்டபொழுது தம்பி அவசரமாக கதைக்க வேண்டுமாம் என மாத்தையாவின் கையை பிடித்தபொழுது  தானாகவே வருகிறேன்  என கூறிய மாத்தையா தனது கைத்துப்பாக்கியையும் பொட்டுவிடம் கொடுத்துவிட்டு பொட்டுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மாத்தையா தரப்பு போராளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்கள் ஆயுதங்களும் கழையப்பட்டு  அனைவரும் கைது செய்யப் பட்டு அழைத்துச் சொல்லப் பட்டனர். மாத்தையா பிரச்சனையின் போது அண்ணளவாக  350 பேர்வரை  கைதாகி விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டார்கள்.சாவகச்சேரியிலும்  கோப்பாயிலும் இரண்டு பெரிய சித்திரவதை சிறைச்சாலைகளை நடாத்திய மாத்தையா இப்பொழுது பொட்டுவின் கண்காணிப்பில் பெரும் சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியிருந்தார். தொடர்ச்சியான  சித்திரவதைகளால் அவர் மனநிலை பாதிக்கபட்டு தன்னை கொன்றுவிடுமாறு சித்திரவதை செய்தவர்களை கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நாளில் பொட்டுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் றோ உளவமைப்பிற்கும் மாத்தையாவிற்கும் நேரடி தொடர்பு இருந்தாக புலிகளின் புலனாய்வு பிரிவினரால் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

மாத்தையாவை சுற்றி றோவின் தொடர்புகளோடு உருவாக்கப்பட்ட வலைப்பின்னலில் இருந்தவர்களால் மாத்தையா றோவின் உளவாளி என புலிகளின் புலனாய்வு பிரிவினரால் நம்ப வைக்கப்பட்டு மாத்தையாவும் கொல்லப்பட்டார். மாத்தையாவை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது தங்கள் பக்கம் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி புலிகளை  பலவீனப் படுத்துவது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அவர்களது இரண்டாவது திட்டம் நிறைவேறியிருந்தது. ஆனால் பிரபாகரனை அன்றைய சந்தர்ப்பத்தில் கொல்லமுடியாமல் போய் விட்டிருந்தது. இந்தப் பிரச்சனைகளின் போது புலிகள் அமைப்பில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பலர் கொல்லப் பட சிலர் விடுதலையானார்கள். அப்படி விடுதலையானவர்கள் அரசியல் துறை பொறுப்பில் இருந்த யோகி. குட்டி நிதி பொறுப்பு.தளபதி தீபன்.ஜான் மன்னார் மாவட்ட தளபதி.சலீம் முகாம் பொறுப்பாளர்..சாந்தி மற்றும் சுதா ஆரம்பகால பெண் போராளிகள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.லோறன்ஸ் தளபதி.ஜெயம் தளபதி ஆகியோர் விடுதலையானார்கள். அதில் ஜெயம் சித்திரவதைகளின் போது அவரது கை  கால் விரல் நகங்கள்  அனைத்தும் பிடுங்கப்பட்ட நிலையில் விடுதலையாகியிருந்தார். விரும்பினால் இயக்கத்தை விட்டு எங்காவது போய் சொந்த வாழ்கையை பார்க்குமாறு பிரபாகரனால் கேட்கப்பட்டிருந்தார்  தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தெரிந்ததெல்லாம் இயக்கமும் யுத்தமும் துப்பாக்கியும்தான் எனக்கு வெளியில் போய் எங்கும் வாழமுடியாது தயவு செய்து  நீங்களே உங்கள் துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள் என பிரபாகரனை பார்த்து கெஞ்சியதை அடுத்து  அவர் மீண்டும் பழைய பதவிநிலைகள் வழங்கப்பட்டு  இறுதி யுத்தத்தின்போது  தற்கொலை செய்து கொண்டார்.