(07டிசம்பர் ஒரு பேப்பரில் வெளியான இவ்வாக்கத்தை தமிழ்மணம் வாசகர்களுக்காகத் தருகிறோம்)
ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'
24.11.07 மதியப்பொμதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.
45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.
நோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.
ஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.
நித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்புவும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.
சின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.
தேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
கணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்டை விதித்து வைத்த ஆதிக்கமனப்பான்மை மிக்கவர்களால் பெண்ணாகப்பிறப்பதே பாவம் என்ற நிலையையே மீதம்வைத்தது.
நூற்றாண்டுகள் கடந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் அங்கங்கே மேற்படி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில் இப்படியுமா என வியக்க வைக்கிறது. இதுவெல்லாம் தமிழ்ப்பண்பாடு எனகொக்கரிப்போருக்கு இந்த நாடுகளின் சட்டத்தை நாடி தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் யேர்மனிய நகரொன்றில் நடந்த மரணம். இன்னும் 2மணித்தியாலங்களில் உனது கணவன் உயிர் பிரியப் போகிறது என மருத்துவமும் மருத்துவர்களும் சொன்னதன் பின் இருந்த நம்பிக்கைகள் இழந்துஅழுதபடி பக்கத்தில் நின்று தன் துணையின்சாவைச் சந்தித்தாள் ஒருத்தி.
சுவாசத்துடிப்பு ஒவ்வொன்றாய் குறையக் குறைய தந்தையின் இரு காதுகளுக்குக் கிட்ட நின்று குழந்தைகள் 'அப்பா...அப்பா....என அழ....என்ரை தெய்வமே என்னை விட்டிட்டுப் போகாதை...என அவள்கதற....அந்தச்சாவு நிகழ்ந்தேறியது. ஒருகனவு போல அந்தச்சாவு அந்தக் குடும்பத்தை ஆறாத்துயரில் விμத்திவிட்டிருந்தது.
ஆளுக்கு ஒரு சம்பிரதாயம் ஊருக்கு ஒருபண்பாடு உள்ள பெருமை மிக்க இனம் நாமென்ற மார்தட்டலுடன் இறந்த மனிதனை இந்துமத முறைப்படி எரிப்பது என முடிவாகியது. எரிந்து முடியும் சாம்பலை யேர்மனியில் பாதியும் பிறந்த மண்ணில் பாதியும் சடங்கு செய்து கரைப்பது என முந்திரிக்கொட்டை முதலாளிகள் சிலர் முடிவு செய்தனர்.
யேர்மனிய சட்டப்படி பொதுவான தண்ணீர் ஓடும் இடங்களில் சாம்பல் கரைத்தலுக்கு அனுமதியில்லையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். `உங்கினை ஓடுற ஆறுகளில நாங்கள்கரைச்சா உவங்களென்ன செய்வாங்கள்'சாம்பல் கரைப்புப்பற்றிய கதை முற்றுப்பெறாமல் முணுமுணுப்புகளுடன் நிறைகிறது. கடவுள் இல்லை மதம் இல்லை மனிதமே மேலென்று மார்தட்டுவோர் கூட இத்தகைய போலிச்சடங்குகளை அங்கீகரித்து ஒப்புதல் கொடுப்த்தது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடிகண்ணே என்ற பதத்தை நினைவூட்டுகிறது.
22.11.07 அன்று இறந்துபோன கணவனின்படத்தைப் பார்த்து அவனால் கட்டப்பட்ட தாலியைப் போடுமாறு சம்பிரதாயச் சாக்கடைக்குள் புதைந்து கிடக்கும் பெண்ணொருத்தியால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அந்த வேண்டுகையை ஏற்கமறுத்து அந்தப்பெண் கதறல்தான் வீட்டில் கேட்டது.
தமிழ்ப்பண்பாட்டின்படி கணவன் கட்டியதாலியை அவன் இறந்தவுடன் கழுத்தில் மாட்டி எரியும் நாளில் கழற்ற வேண்டும், அதுதான்ஒரு பெண் தனது கணவனுக்கு விசுவாசமானவள் என்பதற்கு அடையாளம், தமிழ்ப்பண்பாட்டின்படி தாலி கட்டியவள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் இந்து சமயம் இதைத்தான் சொல்கிறது, இதைச் செய்யத் தவறினால் இறந்த கணவனின் ஆத்மா சாந்தியடையாதுஎன பலவாறான புலம்பல்கள் புதுக்கதைகள்சொல்லப்பட்டன.
24.11.07 அன்று உறவினர் நண்பர்கள் முன்னிலையில் மரணக்கொண்டாட்டம் நடைபெற்றது. வரவிருந்த ஐயர் வராமல் முக்கியமானவர்கள் என சிலர் முன்னின்று மரணக்கொண்டாட்டம் நடந்தது.
கடுங்குளிரில் மனைவி சேலையுடுப்பிக்கப்பட்டு தாலி அணிவிக்கப்பட்டு இறந்தவரின் சவப் பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சடங்கு ஆரம்பமாகியது.
கதிரையில் வைக்கப்பட்ட நிழற்படத்துக்கு அரப் பெண்ணை, வாய்க்கரிசிபோட்டு இறுதி நிகழ்வாக தாலிகழற்றல்,மணநாளில் முதல் மனைவி கட்டிய கூறைச்சேலையை சவப்பெட்டியில் வைத்தல் ஆரம்பமாகியது.
மேடைக்கு முன்னின்று ஆண்கள் சிலர் சொல்லச் சொல்ல அப்பிடிச் செய் அப்பிடிச் செய்யென அருகில் துணை நின்ற பெண்ணொருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.
ஐயோ நானிந்தக் கூறையை ஆசைக்குக்கட்டேல்லயே...
கவனமாயெல்லோ காத்துவைச்சிருந்தனான்.....
ஐயோ நானென்னண்டு இதை உங்கடை பெட்டியிலை போட....
சிலநிமிடம் கதறலுடன் கூறைச் சேலை சவப்பெட்டிக்கு விரிக்கப்படுகிறது.
ஐயோ நான்பொட்டு வைக்காமல் வெளியில போகமாட்டேனே என்ரை சந்தோசமெல்லாத்தையும்கொண்டு போட்டியளேயப்பா....
ஓயாத அந்தப்பெண்ணின் அμகை....
மரண வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர்களையும் அந்தக் கதறல் கலவரப்படுத்தியது.
இறுதி நிகழ்வாக தாலி கழற்றல் ஆரம்பம்.
ஐயோ நான் கழட்ட மாட்டேன்....
என்னைவிடுங்கோ....
இல்லை நீங்கள் கழற்றி வைச்சால்தான்உங்கடை கணவன்ரை ஆன்மா சாந்திபெறும்கழட்டுங்கோ...
கழட்டுங்கோ....
முன்னின்றஆண்களின் கட்டளைகள் இவை.
ஐயோ பாரப்பா எழும்பி கழட்டிக்க வேண்டாமெண்டு சொல்லப்பா...
நானென்ன பாவம் செய்தனானான்....
உன்னொடை வாழத்தானேயப்பா வெளிநாடு வந்தனான்.....
எனக்கேனிந்த நிலை....
நான் கழட்டிப்போடுறதுக்காக அவரிதை எனக்குக் கட்டேல்ல நான் போடத்தான்இதைக் கட்டினவர்....
நான் கழட்டமாட்டேன்என்னை விடுங்கோ....
உங்களுக்கு உங்களுக்கெண்டு வந்தாத்தான் என்ரை நிலை விளங்கும் என்னை விடுங்கொ.....
ஐயோ கடவுளே ஏனிப்பிடியொரு சம்பிரதாயத்தைப் படைச்சியோ....
என்ரை சந்தோசமெல்லாம் போகுதே.....
இந்தக் கதறலைக் கேட்ட பின்னும் யாரால்தான் அமைதியாக நிற்க முடியும். சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டினேன்.
அவவை விடுங்கோ அவவிரும்பாததை செய்ய வேண்டாம்.
சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயப்படுத்தலை என்னைத் தவிர சபையில் இருந்த எந்தப் பெண்ணுக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.
கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டாமல் ஒவ்வொன்றாய் பறித்தெடுத்தல் எந்தச் சட்டத்தில் எழுதப்பட்ட விதி? கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு? இதை யார் இயற்றினார்?
முதலில் மனைவி இறந்தால் ஆணுக்கு இப்படியொரு சடங்கு இந்து மதத்தில் இதுவரை இயற்றப்படவில்லையா ?
சபையில் நின்ற ஒரு மனிதர் சபையில் இருந்த தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்து போயதைக் கழட்டிவிடுங்கோ அது கழட்டுதில்லை என அழைக்க, சினிமாக்களில் பார்த்தவில்லத்தனமான பாத்திரம் போல அந்தப்பெண் எழும்பி வந்து 'கழட்டுங்கோ எனஅருகில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தபெண்ணுமாகச் சேர்ந்து கழட்டு கழட்டென்றுகத்திக் குழறி அந்தப் பெண்ணின் தாலிகழற்றப்பட்டு சவப்பெட்டியின் மேல் போடப்படுகிறது.
இரத்த உரித்துடைய ஆண்களும் பெண்களும் தாலியறுப்புக்குக் காரணமானவர்களும் சேர்ந்து ஒப்பு வைத்துக் கதறி தாலியறுத்து முடிந்தது.
இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத எனது கோபத்தைப் பார்த்த ஒரு பெண் சொன்னார்.
` சாந்தி நாங்கள் முதலில செத்துப்போயிடவேணும் இல்லாட்டி எங்களுக்கும் உந்த நிலைதான் என்றார்'
இதென்ன விதியிது கணவனின் இறப்புடன் மனைவியின் வாழ்வை முடிப்பதா ?
`இப்பவே சாவுங்கோ இளமையிலை போனா இன்னும் நல்லமே.' சொல்லத்தான் வாய் எழுந்தது. ஆனால் அதைச் சொல்லவில்லை நான். நல்லவேளை நெருப்பிருந்தால் நெருப்புக்குள்ளும் அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டிருப்பார்கள். `கணவன் இறந்த துயர் தாளாமல்மனைவி தீயில் எரிந்தாள்' என தலைப்புச்செய்தி வந்திருக்கும்.
எல்லாம் முடிந்து சவப்பெட்டியை சவக்காலை எடுத்துச் செல்லுமுன் அந்த அதிகாரி கேட்டார். கூறைச் சேலையைக் காட்டி பிணத்தை எரிக்கும் போது இதையும் எரிக்கிறதா?
எரிக்கச் சொல்லுங்கோ என்று பலர் சொன்னார்கள். தாலியை அறுத்தவர்கள் தாலியைப் பையொன்றில் திரும்பப்போட்டு பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்தார்கள்.
`தாலி தங்கமென்றதாலை வீட்டுக்குக் கொண்டு போகலாம் கூறைச்சேலை தங்கத்தைவிடமலிவு ஆகையால் எரிக்கலாம்' அந்த இடத்தில் நின்றவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டு கனத்த மனதோடு வெளியேறுகிறேன்.
மேற்படி சடங்குபற்றி எல்லோருமே திருப்திப்பட நானும் என்னவனும் முரண்பட்டுக் கொண்டது புதுமையுமில்லை புரட்சியுமில்லை பெண்ணியமுமில்லை. ஒரு இறப்பிற்கு விலை இன்னொரு உயிரை வதைத்தல் இல்லையென்றமனிதாபிமான எண்ணமே தான்.
சடங்கென்று பெண்ணை் கொடுமைப்படுத்தி மரண வீட்டில் வதைப்பது இன்னொரு திருமணத்தைப்பெண் விரும்பாமலிருப்பதற்கான முன்னோரின் உத்தி. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்துமதச் சடங்கு தமிழ்ப்பண்பாடு என பம்மாத்துப் பண்ணுவது சம்பந்தப்பட்டவர்களின்அறியாமைதான்.
தாலிகழற்றலை முன்னின்று செய்வித்தவர்களும் சம்பிரதாயப் பம்மாத்துக்காரர்களும்`சாந்தியென்றவ யார் உதைப்பற்றிக் கதைக்க ?உவவென்ன புரட்சியோ செய்யப்போறா ? உவாக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?உவாடை ஊரிலை உப்பிடியில்லைப்போலை ?உவவுக்கேன் நோகுது ? நாடுநாடாக தொலைபேசியில் என்னைச் சபிப்பவர்கள் அனைவருமே சபியுங்கள். எனக்கு எந்தவித கவலையுமில்லை.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதேங்கோ.
உந்த விளையாடெல்லாம் இந்த தலமுறையோட சரி.
அடுத்த தலமலமுறையிட்ட உவயள் எல்லாம் வாலாட்டேலாது.
இந்தத் தலைமுறையில ஆடுறதுகள் நல்லா ஆடிட்டுப் போய்ச் சேரட்டும் சாந்தி. நீங்கள் இப்படிப் பட்டதுகளைச் செருப்பால அடியுங்கோ. சனங்கள் அதுகளைப் பார்த்துத் தான் சிரிக்குது, உங்களைப் பார்த்தல்ல!