Navigation


RSS : Articles / Comments


ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..

3:13 PM, Posted by sathiri, 16 Comments

எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது...

முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்..

எம்மண்ணில் தனியரசிற்காக நடந்த ஆயுதப்போராட்டம் முடிவிற்குவந்து எம் நிலத்தில் பல இலட்சம் உறவுகள் புலம்பெயர்ந்தும் புலன் பெயர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்நேரம்..புலம்பெயர்தேசத்திலிருந்து நாடுகடந்த தமிழீழத்தனியரசு என்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது..பல குழுக்களாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் இல்லாது போய் இறுதியில் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகி அதன் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்த பின்னர்..தற்போதைக்கு ஈழத்திலுள்ள தமிழர்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சூழலில் புலம்பெயர்ந்து தேசங்களில் வாழும் சிலர் தாமே ஈழத்தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்டத்தினை நகர்த்தப்போவதாகக்கூறிக்கொண்டு மீண்டும் பல குழுக்களாக பிரிந்து நின்று அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவற்றில் விடுதலைப்புலிகளின் மத்திய குழுஉறுப்பினரான கே.பத்மநாதனால் அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமார் தலைமையில் ஒருகுழு உருவாக்கப்பட்டு அது நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படும் என்றொரு அறிக்கையை விடுத்துள்ளது..அதே நேரம் இலண்டனில் தமிழீழ மக்களவை ஒன்றொரு அமைப்பின் பெயரில் அரசியல் பற்றிமாகரன் என்பவரும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்..அதே நேரம் புலிகள் அமைப்பில் கஸ்ரோ என்பவர் தலைமையில் அனைத்துலகச் செயலகம் என்றொரு அமைப்பிடம்தான் புலிகளின் தலைமை நிதி மற்றும் பரப்புரை பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தது..இவற்றின் நேரடி தொடர்பாளராகவும் உலக நாடுகளில் உள்ள பணியகங்களின் பொறுப்பாளராகவுமிருக்கும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் (இந்த அமைப்பின் செயற்பாடுகள் பற்றி அதன் பொறுப்பாளராகவிருந்தவரிடம் முரண்பாடும்..வெளிநாட்டு பொறுப்பாளர்களிடம் விமர்சனங்கள் எனக்கு நிறையவே இருந்தாலும் அதனைப்பற்றிய விடயங்களை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்)

பத்மநாதனின் கட்டமைப்பினை ஏற்க மறுத்து தமிழ்நாட்டு தலைவர்கள் நெடுமாறன் மற்றும் வை.கோபோன்றவர்களினுடாக சில அறிக்கைகளை வெளியிட்டு குழப்பிவிட.. அது போதாதென்று ஜரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவர் தன்பங்கிற்கு வேறு வேறாய் அறிக்கைகளை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டு குழப்போ குழப்பென்று குழப்பிக்கொண்டிருக்க .. தற்சமயம் அனைத்துலகச் செயலகத்தினை சேர்ந்தவர்களைத் தவிர மற்றையவர்கள் அனைவரும்.. உருத்திரகுமாரின் தலையிலான நாடு கடந்த தமிழீழத் தனியரசிற்கு ஆதரவு வழங்கத் தொடங்கி ஓரணியில் திரளத் தொடங்கியிருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தந்தாலும்..இனிவரும் காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே மக்களின் ஆதரவும் அதனூடாக இத்திட்டத்தின் வெற்றியும் அமையும்.. எனவே இனிவரும் காலங்களில் இவர்கள் செயய்ய வேண்டியது..

1) இனிவரும் காலங்களில் இவர்களது அறிக்கைகள் செய்திகளை நிழல்மனிதர்களால் வெளியிடப்படாமல் பகிரங்கமாக மக்களினால் அறியப்பட்டவர்களினால் நேரடியாக மக்களைச்சென்றடையுமாறு வெளியிடப்படல் வேண்டும்.. ஏனெனில் எமது போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் போராட்டமாக தொடரப்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கும் பொழுது நிழல் மனிதர்களின் தலைமையின்கீழ் எதனையும் சாதித்துவிட முடியாது..

2)தற்சமயம் சில கலாநிதிகளை மட்டுமோ ஆலோசகர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்மைப்பில் என்னைப்போன்ற சாதாரண கல்லா..நிதிகளையும் அனைத்துமக்களையும் இவர்களது வேலைத்திட்டங்கள் சென்றடையும் விதத்தில் மக்களுடன் மக்களாய் வேலைசெய்யக்கூடிய இன்னொரு கட்டமைப்பு உருவாக்கப்படல் அவசியம்..

3)விடுதலைப்புலிகளின் சில செயற்பாடுகளை விமர்சித்தாலும் தமிழ் மக்களிற்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று தங்கள் சொந்த லாபநோக்கமற்று மனதார விரும்பும் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும்..

4)இனிவருங்காலங்களில் இந்த அமைப்பு தமிழ்மக்கள் நலன் சார்ந்து நடாத்தப்படும் எந்த சந்திப்புக்கள் பற்றியதும் ஆலேசனைக் கூட்டங்கள் பற்றியதுமான விபரங்களை உடனுக்குடன் ஊடகங்கள் வாயிலாக தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும்..

5)தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் உலகநாடுகளால் கொண்டுவரப்பட்ட தடைகள்ஊடாக தமிழ்மக்களின் நியாயமான போராடத்தினை முடக்கிய நாடுகளில் அதன் தடைகள் நீங்குவதற்கு சட்ட ரீதியாகவும் மக்கள் போராட்டத்தினுடாகவும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி விடப்படவேண்டும்.

6)இனிவரும் காலங்களில் முழுக்க முழுக்க இந்திய மற்றும் மேற்கத்தைய அரசுககளை மட்டுமே நம்பி எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளாமல்.. இவைகளிற்கப்பாலும் இந்த உலகின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய சக்திமிக்க அரசுகள்இருக்கின்றதென்னபதனையும் கருத்திற்கொண்டு அவைகளின் உதவிகளையும் உறவுகளையும் வளர்த்தெடுப்பதோடு ...இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)

இவையனைத்தும் உடனடியாக நடந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும் ஆனாலும் பலவருடங்கள் சொன்றாலும் இவை முறையாக நடந்தேறின்.. நான் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பான ..ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..என்கிற சொல் வலுவிழந்து தமிழனிற்கென்றொரு நாடும் தமிழனிற்கென்றொரு அரசும் நிச்சயம் உருவாகும்..நன்றி

16 Comments

Manikandan Neelan @ 7:13 PM

Well said!

சாந்தி @ 12:48 AM

QUOTE (sathiri @ Jul 3 2009, 12:21 AM) *
.இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)


இந்தியத்தமிழ்நாட்டு அரசியல்வா(வி)திகள் இதுவரையும் செய்த உசுப்பல்களை தள்ளி வைத்துவிட்டு எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் நாடுகடந்த அரசை தமிழருக்கான பயனுள்ள அரசாக மாற்ற முடியும்.

செயற்குழுவின் ஆரம்பம் இனி செயற்பாட்டுக் குழுவுடன் இணைந்து செயலில் செய்து காட்டும் விடயங்கள் தான் எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் விதியை எழுதும்.

இருக்கிறார் இல்லையென்று தங்கள் இருப்பை உறுதிசெய்த அனைத்துலக செயலகம் 5ம் திகதி வரும் ஞாயிறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்போகிறார்களாம். அவர் இல்லையென்று. ஆனாலும் அந்தச் செயலகத்தின் யேர்மனியத்தலைவர் அப்படி முடியாது என முரண்பட்டுள்ளார். அவரில்லையென்றால் சனம் காசு தராது இருக்கிறார் என்பதை அப்படியே விடுங்கொ இல்லாட்டி தான் தனிக்கட்சியென முடிவாகக் கூறியுள்ளதாக ஒபகவுசன் மனைக்குள்ளிருந்து சில குரல்கள் தெரிவிக்கின்றனர். சிலவேளை நோர்வேயிலிருக்கும் மன்னர் அதிரடி முடிவுகளைத் தள்ளிப்போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எட்வின் @ 4:33 AM

உண்மையை அப்பட்டமாக சொல்லியிருக்கீங்க.

Anonymous @ 4:33 AM

Apart from these tamil's support from india is very essential to make it a global impact; and hence serious effort to be made by srilankan tamils to involve them in this process not politicians from TN

அற்புதன் @ 4:09 PM

இருக்கின்ற எல்லா மக்கள் அமைப்புக்களையும் இணைத்தே தமிழீழ புறனிலை அரசிற்கான அடித்தளம் அமைய இருப்பதாக் அறிகிறேன்.மக்களின் பங்களிப்பு இல்லாமால் இத்தகைய முயற்சி வெற்றி பெறாது.மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதினிதிகள்,வெளிப்படையான செயற்பாடு என ஜன நாயக அடிப்படையிலான அமைப்பாக இது இயங்கும்.
கடைசியில் எல்லோரும் இணையவே செய்வார்கள்.பொறுத்திருப்போம் பங்களிப்போம், இந்தத் துயரில் இருந்து மீழுவோம். நம்பிக்கையோடு முன் செல்வோம்.

நான் தான் புல நாய் @ 11:20 PM

:://இருக்கிறார் இல்லையென்று தங்கள் இருப்பை உறுதிசெய்த அனைத்துலக செயலகம் 5ம் திகதி வரும் ஞாயிறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்போகிறார்களாம். அவர் இல்லையென்று. ஆனாலும் அந்தச் செயலகத்தின் யேர்மனியத்தலைவர் அப்படி முடியாது என முரண்பட்டுள்ளார். அவரில்லையென்றால் சனம் காசு தராது இருக்கிறார் என்பதை அப்படியே விடுங்கொ இல்லாட்டி தான் தனிக்கட்சியென முடிவாகக் கூறியுள்ளதாக ஒபகவுசன் மனைக்குள்ளிருந்து சில குரல்கள் தெரிவிக்கின்றனர்.///

வாகீசன் மாரடைப்பில் இறந்து விட்டதாக ஜெர்மனிய நகரங்களில் அஞ்சலிஒட்டப்பட்டிருந்ததே அப்போ அவர் இன்னமும் இறக்கவில்லையா??

vanathy @ 2:01 AM

சாத்திரி ,
இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி.
இப்போதைய நிலையில் தேவையான ஒரு பதிவு.

மே திகதியின் பின்பு என் போன்ற பலதமிழர்களும் மிகப் பெரிய குழப்பமான நிலையில் உள்ளார்கள் ,

கடந்த ஆறு மாதங்களாக ஈழப்போரையும் அதன் பின்பு நடந்த தமிழ் மக்களின் போராளிகளின் இழப்பையும் பார்த்தோம்.
போர் நடந்தபோது உலக அரசுகளையும் இந்தியாவையும் நோக்கி போரை நிறுத்தக் கேட்டு போராட்டம் நடத்தினோம்.

மே மாதம் பதினெட்டாம் திகதிக்கு பின்பு தமிழரின் அவல நிலையையும் தலைமை இல்லாத அரசியல் நிலையையும் பார்த்து தவித்தோம்.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது கூடச் சரியாகத் தெரியாமல் வேதனை கொண்டோம்.

பலரும் பல கருத்துக்களை சொல்லி ஈழத்தமிழ் மக்களின் மனத்தைக் குழப்பியது கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம்.

தமிழ்த்தேசியத்தின் ஆதரவுத்தளம் என்று நாம் நம்பிய ,முன்பு ஆதாரத்துடன் உண்மைச் செய்திகளை வெளியிட்ட புதினம் இணையத்தளம் திடீரென கருத்து என்ற பெயரில் சில பூடகமான செய்திகளை வெளியிட்டபோது என்னதான் நடக்கிறது என்று குழப்பத்தின் உச்சிக்கு சென்றோம்.

பல விஷயங்களில் இன்னும் தெளிவு கிடைக்காவிட்டாலும் ,தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் இப்போது எனது உள்ளுணர்வு சொல்கிறது.

முன்பு பத்மநாதன் சொன்னபோது பலர் அதை நம்ப மறுத்தது உண்மைதான்.
அதற்க்கு பல காரணங்கள் உண்டு.
பத்மநாதன் என்பவர் மற்றைய தலைவர்கள் தளபதிகள் போராளிகள் மாதிரி தமிழ் மக்களளுக்கு பரிச்சியமானவர் அல்ல.
திரை மறைவில் இயங்குபவர் ,என்ற மாதிரி அவரை தெரியுமே ஒழிய முகம் தெரியாமல்தான் அவர் இயங்கினார்.அத்துடன் மற்றையவர்கள் மாதிரி தமிழ் மக்களுடன் நேரடி உரையாடல்களோ பேட்டியோ அவர் முன்பு எப்போதும் கொடுத்ததில்லை
தமிழ்ச்செல்வன் மாதிரி புலித்தேவன் மாதிரி நடேசன் மாதிரி யோகி மாதிரி தமிழ்மக்களின் அபிமானத்தை அவர் பெற்றவரும்மில்லை
பொட்டம்மான் சூசை தீபன் பானு அமிதாப் மற்றும் பல தளபதிகள்மாதிரி அவர் தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க்கவுமில்லை
இந்த செய்தியை மேலோ சொன்ன தலைவர்கள் தளபதிகள் யாராவது சொல்லியிருந்தால் தமிழர்கள் அதனை உடனே நம்பியிருப்பார்கள்
அவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதனை அவர் கையாண்ட விதம் தவறு
தமிழ் மக்கள் மிக மோசமான மன உழைச்சலில் இருந்த காலத்தில் தமது முப்பது வருட போராட்டாம் தங்கள் கண் முன்னால் நொறுங்கிப் போய் ஈழத்தில் தமிழ் மக்கள் போராளிகள் தலைவர்கள் எல்லாம் உயிரை இழந்து தமிழர் அங்கு ஒரு அடிமை இனமாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தலைவரின் இறப்பு செய்தியை பலரோடும் கலந்தாலோசித்து எல்லா முக்கிய தமிழ் ஊடகங்களோடும் அதனை எப்படி அந்த செய்தியை சொல்ல வேண்டும்ன்று திட்டமிட்டு செய்யாமல் எழுந்த மாதிரியாக திடீரென்று அவர் போட்டுடைத்தனால்தான் பலரும் அந்த செய்தியை நம்ப மறுத்தார்கள்.

தலைவர் பிரபாகரன் இறந்தது உண்மையானால் அந்த இறப்பை சரியான முறையில் அஞ்சலி செய்து தமிழ் மக்கள் துக்கம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும்
அந்த உண்மையை மறைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு மிகப்பெரிய துரோகம்.
மாக்கள் தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் மரியாதையும் தலைவர் பிரபாகரனுக்கும் இறந்த தளபதிகள் போராளிகள் மக்களுக்கும் செலுத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்களையும் செயல் திட்டங்களையும் நோக்கிச் செல்ல வழி செய்யவேண்டும்.

-vanathy

vanathy @ 2:04 AM

sorry saththiri ,
It didn,t acept the whole of my comments
I have to split it into two

பல விஷயங்களில் இன்னும் தெளிவு கிடைக்காவிட்டாலும் ,தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் இப்போது எனது உள்ளுணர்வு சொல்கிறது.

முன்பு பத்மநாதன் சொன்னபோது பலர் அதை நம்ப மறுத்தது உண்மைதான்.
அதற்க்கு பல காரணங்கள் உண்டு.
பத்மநாதன் என்பவர் மற்றைய தலைவர்கள் தளபதிகள் போராளிகள் மாதிரி தமிழ் மக்களளுக்கு பரிச்சியமானவர் அல்ல.
திரை மறைவில் இயங்குபவர் ,என்ற மாதிரி அவரை தெரியுமே ஒழிய முகம் தெரியாமல்தான் அவர் இயங்கினார்.அத்துடன் மற்றையவர்கள் மாதிரி தமிழ் மக்களுடன் நேரடி உரையாடல்களோ பேட்டியோ அவர் முன்பு எப்போதும் கொடுத்ததில்லை
தமிழ்ச்செல்வன் மாதிரி புலித்தேவன் மாதிரி நடேசன் மாதிரி யோகி மாதிரி தமிழ்மக்களின் அபிமானத்தை அவர் பெற்றவரும்மில்லை
பொட்டம்மான் சூசை தீபன் பானு அமிதாப் மற்றும் பல தளபதிகள்மாதிரி அவர் தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க்கவுமில்லை
இந்த செய்தியை மேலோ சொன்ன தலைவர்கள் தளபதிகள் யாராவது சொல்லியிருந்தால் தமிழர்கள் அதனை உடனே நம்பியிருப்பார்கள்
அவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதனை அவர் கையாண்ட விதம் தவறு
தமிழ் மக்கள் மிக மோசமான மன உழைச்சலில் இருந்த காலத்தில் தமது முப்பது வருட போராட்டாம் தங்கள் கண் முன்னால் நொறுங்கிப் போய் ஈழத்தில் தமிழ் மக்கள் போராளிகள் தலைவர்கள் எல்லாம் உயிரை இழந்து தமிழர் அங்கு ஒரு அடிமை இனமாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தலைவரின் இறப்பு செய்தியை பலரோடும் கலந்தாலோசித்து எல்லா முக்கிய தமிழ் ஊடகங்களோடும் அதனை எப்படி அந்த செய்தியை சொல்ல வேண்டும்ன்று திட்டமிட்டு செய்யாமல் எழுந்த மாதிரியாக திடீரென்று அவர் போட்டுடைத்தனால்தான் பலரும் அந்த செய்தியை நம்ப மறுத்தார்கள்.

தலைவர் பிரபாகரன் இறந்தது உண்மையானால் அந்த இறப்பை சரியான முறையில் அஞ்சலி செய்து தமிழ் மக்கள் துக்கம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும்
அந்த உண்மையை மறைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு மிகப்பெரிய துரோகம்.
மாக்கள் தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் மரியாதையும் தலைவர் பிரபாகரனுக்கும் இறந்த தளபதிகள் போராளிகள் மக்களுக்கும் செலுத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்களையும் செயல் திட்டங்களையும் நோக்கிச் செல்ல வழி செய்யவேண்டும்.

அத்துடன் அவரைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
புலிகள் இயக்கத்தின் சில செயல்பாடுகளில் என்போன்றோருக்கு சில விமர்சனங்கள் உண்டு ,அது முன்பும் இருந்தது
ஆனால் அவர்களுடைய போராட்டத்தின் நியாயம் மீதும் அவர்களின் லட்சியதாகம் அவர்கள் தமிழ் மக்களுக்காக சிந்திய ரத்தம் வியர்வை பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் பல்லிளிக்கும் அரசியல்வாதிகள் முன்னால் சுயநலமில்லாத அவர்களின் தியாகம் நிரம்பிய போராட்ட வரலாறு என்பவை மீதும் எனக்கு விமர்சனம் இல்லை அதனால்தான் சில அரசியல் ராஜதந்திர ரீதியான தவறுகள் செய்திருந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் மனத்தில் நிறைந்து இருக்கிறார்கள்
உண்மைகள் தெளிவாகச் சொல்லப்படாததால்தான் இப்போதும் சிங்கள அரசும் அதற்க்கு வால் பிடிக்கும் சக்திகளும் கண்ட கண்ட செய்திகளையும் கருத்துக்களையும் கட்டவிழ்த்துவிட்டு தமிழ் மக்களின் மனங்களை ரணகளமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

இனிமேலும் பூடகமாக பேசாமால் தமிழ் மக்களுக்கு உண்மைகள் சொல்லப்பட வேண்டும்
நீங்கள் சொன்ன மாதிரி நிழல் மனிதர்கள் வேண்டாம்
தமிழ் மக்களின் நலனில் உண்மையில் அக்கறை கொண்டவர்கள் புலிகள் ஆதரவாளர்கள் இல்லாவிட்டாலும் அவர்களையும் உள்வாங்க வேண்டும்
நான் இங்கே சொல்வது உண்மையான மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தமிழரின் உரிமைகள் அக்கறை உள்ளவர்களாக ஆனால் கருத்தியல் ரீதியில் புலிகளுடன் முரண்பட்டவர்களை நான் கூறுகிறேன்
சிங்கள அரசிடம் காசு வேண்டிக்கொண்டு கூலிக்கு மார் அடிப்பவர்களையும் வேண்டும் என்றே விதண்டாவாதம் பேசுபவர்களையும் நான் சொல்லவில்லை.

---வானதி

sathiri @ 3:02 PM

//அற்புதன் @ 4:09 PM

இருக்கின்ற எல்லா மக்கள் அமைப்புக்களையும் இணைத்தே தமிழீழ புறனிலை அரசிற்கான அடித்தளம் அமைய இருப்பதாக் அறிகிறேன்.மக்களின் பங்களிப்பு இல்லாமால் இத்தகைய முயற்சி வெற்றி பெறாது.மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதினிதிகள்,வெளிப்படையான செயற்பாடு என ஜன நாயக அடிப்படையிலான அமைப்பாக இது இயங்கும்.
கடைசியில் எல்லோரும் இணையவே செய்வார்கள்.பொறுத்திருப்போம் பங்களிப்போம், இந்தத் துயரில் இருந்து மீழுவோம். நம்பிக்கையோடு முன் செல்வோம்.
//
அற்புதன் எம்மிடம் மிஞ்சியிருப்பது தற்போதைக்கு வெறும் நம்பிக்கைகள் மட்டுமே.......

Anonymous @ 11:03 PM

///அது போதாதென்று ஜரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவர் தன்பங்கிற்கு வேறு வேறாய் அறிக்கைகளை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டு குழப்போ குழப்பென்று குழப்பிக்கொண்டிருக்க///

ஐயா சாஸ்திரி, யார் அந்த புலானய்வுஆய்வாளர்? உங்கள் கூற்றுப்படி புலானய்வுத்தகவல் என்ற அறிக்கைகள் பொய்யெனப்படுகிறதா ? நெடுமாறன் ஐயா போன்றவர்கள் என் தொடர்ந்து அறிக்கைகளை விடுகிறார்கள் ?
தயவு செய்து மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். தமிழக உணர்வாளர்களாகிய நாங்கள் குழம்பிப்போயுள்ளோம்.
ராஜகுமாரன்

sathiri @ 7:43 AM

//vanathy saidதலைவர் பிரபாகரன் இறந்தது உண்மையானால் அந்த இறப்பை சரியான முறையில் அஞ்சலி செய்து தமிழ் மக்கள் துக்கம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும்
அந்த உண்மையை மறைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு மிகப்பெரிய துரோகம்.
மாக்கள் தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் மரியாதையும் தலைவர் பிரபாகரனுக்கும் இறந்த தளபதிகள் போராளிகள் மக்களுக்கும் செலுத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்களையும் செயல் திட்டங்களையும் நோக்கிச் செல்ல வழி செய்யவேண்டும்.
//
வானதி நீங்கள் சொல்லவதைப்போலத்தான் தற்சமயம் புலம் பெயர் தேசத்து மக்கள் அனைவரினதும் கருத்துக்களாக இருக்கின்றது..ஆனால் புலிகளை வைத்து இன்னமும் சம்பாதிக்க நினைப்பவர்களிற்கு பிரபாகரன் உயிருடன் இருக்கவேண்டும்.. அதனால்தான் இத்தனை அறிக்கைகளும் குளப்பங்களும்..

sathiri @ 7:58 AM

//ஐயா சாஸ்திரி, யார் அந்த புலானய்வுஆய்வாளர்? உங்கள் கூற்றுப்படி புலானய்வுத்தகவல் என்ற அறிக்கைகள் பொய்யெனப்படுகிறதா ? நெடுமாறன் ஐயா போன்றவர்கள் என் தொடர்ந்து அறிக்கைகளை விடுகிறார்கள் ?
தயவு செய்து மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். தமிழக உணர்வாளர்களாகிய நாங்கள் குழம்பிப்போயுள்ளோம்.
ராஜகுமாரன்//

ராஜகுமாரன்.. புலனாய்வுபிரின் உறுப்பினர் ஒருவர் அறிவளகன் என்கிற பெயரில் முதலில் கே. பிக்கு எதிரானதொரு அறிக்கையில் பிரபாகரன் இருக்கிறார் என்றும் பின்னர்.. ஒரு வாரகாலத்தின் பின்னர்.. கே.பி அணியினருடன் இணைந்து செயற்பட சம்மதித்து அவர்களிற்கு ஆதரவாகவும் பிரபாகரன் இறந்துவிட்டார் அஞ்சலி செலுத்துங்கள் என்றும் அறிக்கைகளை விட்டுக் குழப்பியது மட்டுமல்ல பின்னர் பிரபாகரன் பற்றி வழுதி என்கிற பரந்தாமன் எழுதிய கட்டுரைக்கும் வேறு பெயரில் வழுதியின் புழுதி என்றொரு கட்டுரையை எழுதிக் குழப்பிதோடு நிற்காமல் இவரே பலவேறு பெயர்களில் பலவேறு அவாதரமெடுத்து தேசம் என்கிற இணையத்தளத்திலும் கட்டுரை எழுதியுள்ளார்..இவர் புலிகளின் அமைப்பிலும் புலனாய்வு பிரிவிலும் நீண்டகாலம் பணியாற்றியவர்.. இப்பொழுது விடும் குளப்பமான அறிக்கைகளைப்போலவே புலிகளின் தலைமைக்கும் பல குளப்பமான அறிக்கைகளை தயாரித்துக்கொடுத்து புலனாய்வு பிரிவின் பொறுப்:பாளர் பொட்டனால் புலிகள் அமைப்பை விட்டு வெளியேற்றப்பட்டு 2003ம் ஆண்டு திருமணம் முடித்துக்கொண்டு தற்சமயம் இத்தாலி நாட்டில் வசித்துவருகிறார்..புலிகளின் இறுதிக்காலகட்டங்களில் வன்னியில் நின்றிருந்த புலிகள் அமைப்பினரிற்கும் இவரிற்கும் எவ்வித தொடர்புகளும் இருந்திருக்கவில்லைஎன்பது உண்மை..இந்த நபர்..தனிப்பட்ட வாழ்கைக்கு திரும்பிய பின்னரும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக்கொண்டிருக்கிறார்.. இனிவரும் காலங்களில் இவர் தான் எந்தத் தளத்தில் நிறகப்போகிறார் என்பதனை சரியாக முடிவெடுத்து மற்றவர்களை குழப்பாமல் இருப்பது நல்லது..

pandiyan @ 8:09 AM

எனது ஊகப்படி தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் உயிரோடு உள்ளார்.. அவர் யாலா அல்லது வன்னி முள்ளை தீவு காடுகளில் இருக்க கூடும் ..ஏனென்றால் சிங்களனின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அங்கு படைத்தளம் அமைப்பதின் மூலம் அதை அறிந்து கொள்ளலாம் இரண்டு அங்கு கொரில்லா போர் முறையில் தாக்குதல் ஆரம்பிக்கலாம்.. ஆனால் அதற்கு மக்கள் ஆதரவு தேவை உணவு சப்ளை முதலியன.. அதற்கு தான் சிங்களன் அங்கு மக்களை மீள் குடியேற்ற விடாமல் அடாவடி செய்கிறான்..என்னை கேட்டால் 30 ஆண்டுகாலம் போராடிய ஒரு தலைவன் அவனுக்கு போர் எப்படி போகிறது என்றெல்லாம் தெரியும் அடுத்த கட்ட நகர்வுக்கு கட்டாயம் அவர் தயார் செய்திருப்பார்.. போராடியது போதும் சரி மோதி வீரமரணம் அடையலாம் என முடிவு செய்திருந்தால் தனக்கு பின்னான இயக்கவாரிசை அறிவித்து விட்டே வீரமரணம் அடைந்து இருப்பார்.. ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை ..முதலில் தலைவர் உயிரோடு இருப்பதாக எல்லோரும் அறிவித்துவிட்டு இன்று மறுக்கிறார்கள் என்றால் என்ன காரணம் தலைவரே அவர்களிடம் தனக்கு பாதுக்காப்பான காலம் வரை தான் இறந்ததாகவே இருக்கட்டும் என்று கூறியிருப்பார் அதுவே உண்மையாகும் நீங்களே தலைவர் முகத்தினை காட்டினால் தான் போராடுவேன் என்று புகைபோட்டு அவரை காட்டி கொடுத்து விடாதீர்கள்.. சற்று மாவீரர் நாள்வரை பொறுத்து கொள்ளுங்கள் அன்று தெரியும்..

Anonymous @ 2:34 AM

//சற்று மாவீரர் நாள்வரை பொறுத்து கொள்ளுங்கள் அன்று தெரியும்..

8:09 AM//

ஒன்னுமே புரியல உலகத்தில.

மாவீரர் நாளில் பாதுகாப்பு காரணம்களுக்காக தலைவர் ஒளிச்சிருந்துதான் அறுக்கைபடிப்பர்.

Bibiliobibuli @ 3:06 PM

உங்கள் கட்டுரைக்கும் இந்த கட்டுரைக்கும் ஏதோ விததில் ஈழத்தமிழர்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் இதை இணைத்துள்ளேன்.

http://subavee.wordpress.com/2008/10/14/p5/

Anonymous @ 10:49 AM

நாடு கடந்த அரசு [Transnational Government]

“பிரபாகரனுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.”
- வி. உருத்திரகுமாரன்

உலகம் முழுவதும் கிரமமாகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுவருகின்றன. அல்லது போராளிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொள்கிறார்கள். இவற்றினால் மக்கள் அடையும் துன்பங்கள் சொல்லிமாளாதவை. இக்கட்டுரை எழுதப்படும் போது சோமாலியாவில் முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கும் அரசபடைகளுக்குமிடையில் மக்கள் சிக்கி மரணமடைந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது வாழிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இப்பொழுதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வி எப்படியிருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். அதன் வலியை உணர்ந்து வருகிறோம்.
வெற்றியடைந்த சிங்களப் பேரினவாதம் தலைகால் புரியாத ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. அது செய்யப் போகிற எந்த நடவடிக்கையையும் எங்களால் இனிவரும் காலங்களில் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.
வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே சனநாயகத்தை இழந்து நிற்கிறது. சனநாயகம் என்பதைத் துளிகூடஅறியாத காட்டுமிராண்டிகளின் கூட்டத்தை அரியணையில் ஏற்றியபோது அதன் விளைவுகள் எவ்வாறு எதிர்காலத்தில் அமையும் என யாரும் அறிந்திருக்கவில்லை.
இன்றைக்கு விடுதலைப்புலிகள் அடைந்த தோல்விதான் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தோல்வி என யாரும் கருதுவார்களானால் அது தவறாகும்.உண்மையிலும் விடுதலைப்புலிகள் எப்போதோ தோல்வியடைந்து விட்டிருந்தனர். இலங்கை அரசின் கொடூரமான ஒடுக்குமுறையொன்றே அவர்களின் இருப்பை நியாயப்படுத்திவந்தது.
ஆய்வாளர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணங்களையே தேடிவருகின்றனர். தமிழீழவிடுதலைப்புலிகள் வெற்றி அடைந்திருந்தாலும் நாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரக்ஞை மற்றும் குணாம்சங்கள் பற்றியவையாக இருந்திருக்கும்.

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்ட போராளிகள் எப்போது சனநாயக மறுப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனரோ, எல்லாவகையான அக மற்றும் புற சமூகஅரசியற் பிரச்சனைகளுக்கும் ஆயுதங்களினாலேயே தீர்வைத் தேடத் தொடங்கினரோ அன்றைக்கே ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.
இன்றைக்கு அரசுடன் இணைந்திருந்து கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் அடாவடித்தனம் என சகலவற்றையும் செய்கிற தமிழ் இளைஞர்கள் அனைவரும் முன்னாற் போராளிகளே. இவர்கள் கொண்டிருக்கிற அரசியல்- வெளிப்படுத்துகிற அரசியல் நடத்தைகள் எங்குகற்றுக்கொண்டவை.
“மூன்று தலைமுறை இளைஞர்களைச் சொல்வதைச் செய்யப் பழக்கினோமே தவிர சிந்திக்கப் பழக்கவில்லையே! எதற்கெடுத்தாலும் துவக்கை நீட்டுகிற கலாசாரத்தைத்தானே அய்யா நாடு காண்கிறது”

தமிழீழவிடுதலைப் போராட்டத்தினைத் தலைமை தாங்க விரும்பியவர்கள் எவருமே கீழ்குறித்த இரண்டு விடையங்களையும் சரியாகக் கவனத்திற்கு எடுக்கவில்லை;கையாளவில்லை.
• தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் பெளதிக எல்லைக்குள் மதரீதியாகவும் இனரீதியாகவும் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பிளவுண்ட சமூகங்கள் இருக்கின்றன. இவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன.
• தமிழீழவிடுதலைப் போராட்டம் தொடங்கிய போது அது தனக்குள் கேள்விக்குட்படுத்திய பல்வேறு விடையங்கள்.

அதேவேளை தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் புறக்காரணிகளாக இருந்தவை இலங்கை அரசின் அரசியல் பொருளாதர இராணுவ அடக்குமுறைகள், பிராந்திய அரசியற் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேச அரசியற் சூழ்நிலைகள் ஆகும்.இவற்றையும் அவர்கள் .....



.....நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை முன்வைப்பவர்கள் கண்டு கொள்ள வேண்டியவற்றை முப்பதுவருட கால இழப்பு துகிலுரிந்து கண்முன் காட்டிக்கொண்டிருக்கிறது.

“அகாலத்தின் பிடியில்
அம்மணமாக நிற்கிறோம்.
கண்ணீரானது கனவு
கம்பலையானது வாழ்வு
*எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்!”


*கவிஞர் புதுவை இரத்தினத்துரையின் வரிகள்

you may read the article in globaltamilnews.net