Navigation


RSS : Articles / Comments


பாராளுமன்றில் பம்மியழுத பா.உ. பத்மினியக்காவுக்கு….ஓ..ஓ

9:37 AM, Posted by sathiri, 2 Comments



மேன்மை தங்கிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் அவர்களுக்கு,

கடந்த பாராளுமன்றக் கூடலில் வவுனியா முகாம்களில் வாடும் தமிழ்மக்களின் அவலநிலைபற்றி உரையாற்றிய போது துயரம் தாழாமல் கதறியழுதார் பத்மினி சிதம்பரநாதன் என்ற செய்தி சகல ஊடகங்களிலும் இடம்பிடித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். கண்ணீர் விட்டு நீங்களும் மீண்டும் ஒரு தரம் உங்கள் இருப்பை உறுதி செய்திருந்தீர்கள்.

அக்கா ,

போரில் கொல்லப்பட்ட உறவுகளின் உறவினர்களின் துயரம் முதல் தமிழ்ப்பெண்கள், குழந்தைகள் பற்றி மேலும் உங்கள் பேச்சில் சுட்டிக்காட்டி உரைத்தீர்களாம். அந்தச் செய்தியைப் பார்த்தபோது உங்களுக்காக செவாலியர் விருதையே சிபார்சு செய்யவேண்டுமென்றுதான் விரும்பினேன். ஆனால் கேமகுமாரநாணயக்கார(Minister) சிங்களத்தில் நடித்து வந்த நடிகையான ‘ருக்மணிதேவிக்கு‘ நிகராக்கி உரையாற்றியதால் செவாலியர் விருதைவிட வேறு ஏதாவது சிறந்த விருதைத் தேடுகிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் வருடக்கணக்காக இருந்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வந்து புலம்பெயர் மக்களுக்கு ஆலோசனைகளை அள்ளி வளங்க மட்டுமே பாராளுமன்றப்பதவியென நீங்கள் ஐரோப்பாவெங்கும் உங்கள் சேவகர்களின் வீடுகளில் விருந்துண்டு மேலான வாழ்வு வாழ்ந்த போது வராத கண்ணீர் , முள்ளிவாய்க்கால் வரை தமிழினம் துரத்தப்பட்டு ஆயிரமாயிரமாய் பலிகொள்ளப்பட்ட உயிர்களுக்காக வராத கண்ணீர் , மூன்றுலட்சத்துக்கும் மேலாக இடம்பெயாந்து ஒரு நேர உணவுக்காக எம்மினம் கையேந்தி அகதி முகாம்களில் அடைபடும் வரை லண்டனில் அடைகாத்த போது கூட வராத கண்ணீர் எப்படி இந்தப்பாராளுமன்றக் கூட்டத்தில் ஊற்றெடுத்தது அக்கா….?

ஆயிரமாயிரம் அம்மாக்கள் தங்கள் மகள்களை , மகன்களைக் கடைசிக் களமுனையில் பலிகொடுத்ததும் பாதி மிஞ்சிய பிள்ளைகளில் இருப்போர் யார் இல்லாதோர் யார் என்று அகதி முகாம்களுக்குள் கிடந்து விடுகின்ற கண்ணீருக்காக எதை ஐரோப்பாவில் நின்ற போது செய்தீர்கள் ? கிடைத்த உங்களுக்கான மேடைகளில் தமிழில் தமிழர்களுக்காக வீரம் பேசியதைத் தவிர வேறெந்தப் பரப்புரையைச் செய்தீர்கள்?

புலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் நாட்டு மக்களுக்கு தமிழர் பிரச்சனையைச் சொல்லுங்கள் என்ற ஆலோசனையும் , ஆக மிஞ்சினால் லண்டனில் உங்கள் அடியாட்களாய் செயற்படும் உங்கள் நண்பர்கள் மூலம் உங்கள் பற்றி எழும் கேள்விகளுக்கு பூட்டுப்போட்டது தவிர வேறெதைச் செய்தீர்கள்?

லண்டனில் பரமேஸ்வரன் என்ற இளைஞன் தன்னையுருக்கி உண்ணா நோன்பிருந்து உலகத்திடம் நீதிகேட்டபோது நீங்கள் அதே லண்டனில் இருந்து கொண்டு ஒன்றையும் செய்யவில்லை. அந்த உண்ணாவிரத மேடைக்கு அடுத்திருந்த உணவங்களில் உங்களுக்கான சிறந்த வரவேற்பும் எங்கள் தமிழ் ஊடகங்களினால் சில கேள்விகளும் தான் கேட்கப்பட்டது. நீங்களும் உங்கள் பங்குக்கு முகத்தைக்காட்டிவிட்டுப் போயிருந்தீர்கள்.

2008 ஒக்ரோபர் 27 யேர்மனியின் பெரும்பான்மைக் கட்சியான (SPD) கட்சியின் இளையோர் அணியில் இயங்கும் தமிழ் மாணவியொருத்தியின் ஏற்பாட்டில் யேர்மனியர்களுக்காக நடாத்தப்பட்ட ‚‘இலங்கையில் மனிதவுரிமை மீறல்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் உங்களையும் அழைத்திருந்தோம். ஞாபகமிருக்கிறதா அக்கா ? கடைசிவரை வருவதாய் சொன்ன நீங்கள் கடைசி நேரம் அந்த நிகழ்வுக்கு வரவுமில்லை , உங்களைத் தான் சிறப்பாக அழைத்துள்ளதாகவும் அவர் சொன்னால் நீங்கள் எமது நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என உங்களுக்கும் தனக்குமான நட்பின் இறுக்கத்தை எமக்குப் புழுகிய நண்பரின் வாக்கும் பொய்த்து நீங்கள் வரவேயில்லை. அன்று நீங்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தால் நிகழ்வு நடைபெற்ற மானிலத்தின் முக்கிய பத்திரிகைகளில் உங்கள் மூஞ்சியும் வந்திருக்கும் எங்கள் பிரச்சனையும் பல்லாயிரம் யேர்மனியர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். அடுத்தடுத்து சில சமகால கருத்தரங்குகளுக்கு உங்களை அழைத்தோம். ஆனால் நீங்கள் நொண்டிச்சாட்டுகள் சொல்லி எல்லாவற்றையும் தட்டிக்களித்தீர்கள்.

இறுதியாக இவ்வருட ஏப்ரல் மாத இறுதியில் யேர்மனிய அபிவிருத்தியமைச்சருடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்புக்கு உங்களை அழைக்க நாம் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி. கடைசியாக உங்கள் நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கயேந்திரன் அவர்களை அழைப்பதற்கான முயற்சியும் தோற்றுப்போனது. அவர் எங்கள் அழைப்பை ஏற்று வருவதாக இருந்தால் கயேந்திரன் அவர்களை யேர்மனியில் மேய்க்கும் மேய்ப்பர்களிடம் அனுமதி பெற்றுச் சொல்லுங்கள் என்றார் கயேந்திரன். அவர் சொன்ன மேய்ப்பர்களோ நமது ஏற்பாட்டுக் குழுவினரால் தமிழீழம் தந்தாலும் வேண்டாம் என்ற தொனியில் அந்த அருமையான வாய்ப்பைத் தட்டிவிட்டார்கள்.

மேடைவைத்துப் பத்தாயிரம் பேர் கூடிநின்று கூவிக்கூப்பாடு போடுவதை விட இத்தகைய அரசியலாளர்களைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பது பத்தாயிரம் பேரால் சாதிக்க முடியாததை உங்கள் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்கப்பட்டிருக்கும்.

யேர்மனிய நமது மேய்ப்பர்களால் இதுவரையில் யேர்மனிய அரசின் முக்கிய தரப்புகளுடனான சந்திப்புகளோ அதற்கான அனுமதியோ கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவற்றுக்கெல்லாம் முயற்சிக்கவுமில்லை. எமது மக்களை வைத்து உண்டியல்களை நிரப்பி உழைக்காமல் சாப்பிடப் பழகிய அவர்களால் மக்களின் நலனில் எங்கே அக்கறையிருக்கப்போகிறது ?

சாமான்யர்களான எங்களால் உங்களுக்கான வெளித்தொடர்புகளைத் தான் எடுத்துத்தர முடியும். ஆனால் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களால் நமது பிரச்சனைகள் சொல்லப்பட்டால்தான் வெளியுலகால் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்படும். இங்கு தனித்த முயற்சிகளால் செய்யப்பட்ட பரப்புரைகள் உங்களை பலலட்சம் தந்து வெளிநாடுகளுக்கு அழைத்தவர்களால் செய்யப்படவில்லையென்பது ஒருவரும் அறியாத உண்மை. இந்தப் பொட்டுக்கேடுகள் பற்றி நிறையவே இருக்கிறது. அதைவிட்டு விடுகிறேன்.

மக்கள் பிரநிதிகளான உங்களால் சுதந்திரமாக சுயமாக முடிவெடுக்க முடியாவிடில் பிறனெ்ன மண்ணுக்கு மக்கள் பிரதிநிதிகள் ? நீங்களும் உங்கள் பதவியும் ?

அரசாங்கம் நிறுத்தப்போவதாக அறிவித்த உங்கள் வருமானம் , வசதிகள் , பதவியைப் பாதுகாத்துக் கொள்ள ஐரோப்பாவிலிருந்து அவசர அவசரமாக இலங்கை சென்றீர்கள். சென்றீர்கள் சரி மக்கள் அவலப்படும் எந்த இடத்திற்காவது சென்று மக்களின் துயரை நேரில் சென்று அறிந்தீர்களா ? அதற்கான ஏதாவது முயற்சிகளை எடுத்தீர்களா ?

முகாம்களுக்குச் செல்லத்தான் அரசு அனுமதிக்கவில்லை. சரி உங்கள் உறவினர்களில் ஒருவராவது அந்த முகாம்களில் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைப் பார்க்கவாவது வரிசையில் நின்று அனுமதி பெற்றுப் போயிருக்கிறீர்களா ? சரி அதுவும் போகட்டும். வவுனியாவில் பல மருத்துவமனைகளுக்கு நீங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் சென்று அவலமுறும் மக்களைப் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூறலாம் இல்லையா ?

நானறிந்த சில இடங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். முடிந்தால் உங்கள் முட்டைக்கண்ணீரை அங்கே போய் சிந்துங்கள்.

நாலாங்கட்டை ஆயுர்வேத வைத்தியசாலை. இங்கு கால்கையிழந்த பலர் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

பூவரசங்குளம் பொது வைத்தியசாலை. அம்மைநோயால் முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் பெறுகிறார்கள்.

வவுனியா பொது வைத்தியசாலை. இங்கு அங்கவீனர்கள் முதல் பல பிரிவுகளில் வன்னிக்கள முனையிலிருந்து இராணுவத்தால் கொண்டு வரப்பட்டவர்கள் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

அண்மையில் முகாம்களிலிருந்து நீதவான் பொறுப்பில் 129செஞ்சோலைச் சிறுவர்கள் கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்தக் குழந்தைகளுக்கான உடை , பாடசாலை உபகரங்கள் உட்பட தேவைகள் நிறைய உள்ளது. இவர்கள் எல்லாம் பெண் குழந்தைகள். நீங்கள் துன்பம் தாங்க முடியாமல் அழும் பெண்குழந்தைகள்.

இவர்களையெல்லாம் சந்திக்க உங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. உங்கள் உயிருக்கு பயமாகில் அதற்கும் அரசாங்கம் உங்களுக்குப் பாதுகாவலர்களைத் தந்திருக்கிறதே. இதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாதுகாப்பு தேவையோ ?

நான் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மருத்துவம் பெறும் பலர் உங்களுக்கு முகமாலையில் காவலிருந்து உங்களுக்கு வாக்களித்தோரும் உள்ளார்கள். அவர்களில் ஒரு தாய் தனது இரு பெண் குழந்தைகளையும் கடைசிக் களமுனையில் தொலைத்துவிட்டாள். தானும் அங்கமிழந்துவிட்டாள். அந்த அம்மா உங்கள் அழுகைபற்றி அறிந்தது பற்றி தொலைபேசியில் சொன்னார்.

நாங்கள் பத்மினியென்ற பெண்ணை விரும்பியே தெரிவு செய்தோம். பெண்களின் பிரதிநிதியாக பெண்களுக்காக நன்மைகள் செய்வார் என்றே தேர்வு செய்தோம். எங்கள் பெண் குழந்தைகள் வயது வேறுபாடின்றிக் களமுனைக்குச் சென்ற போது ஏன் அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல் இருந்தார் பத்மினி ? எல்லாம் போகட்டும் இங்கு மருத்துவம் பெறுகின்றவர்களை ஒரு தரம் கூட வந்து பார்க்காமல் கொழும்பில் நின்று யாருக்காக கண்ணீர் விடுகிறார் ? எங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம். ஒரு ஆறுதலான வார்த்தை , ஒரு அன்பான விசாரிப்பு அதைக்கூட பத்மினியால் செய்ய முடியாவிடில் எதற்காக அழுகிறார்கள் ? இந்தக்கண்ணீரே அடுத்த தேர்தலில் அக்காவை அரசியலில் மீண்டும் தாளமிட வைக்கும் ஏற்பாடா ? ஒரு சாதாரண பெண்ணின் மனநிலையே உங்களைப்பற்றி இப்படி முடிவுடன் இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள். உங்கள் பதவி உங்களைத் தேர்வு செய்த மக்களுக்காக எதைக்கொடுத்தது ?

ஒரு பருக்கை சோற்றுக்காக அல்லாடுபவனிடம் போய் சுதந்திரத்தின் பெறுமதியென்னவென்று கேட்டால் அவன் என்னத்தால் உதைப்பானோ அதே மனநிலையில்தான் இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகம் , தேசியம் , சயநிர்ணயம் பேசுவோரை உதைக்கவும் காத்திருக்கிறார்கள். பசித்தவனுக்கு உணவைக் கொடுக்க வழியைவிடுங்கள் அவர்கள் சுதந்திரம் என்பதன் பொருளை உங்களுக்கே சொல்லித் தருவார்கள். வவுனியாவில் பல சமூகசேவகர்கள் , பொதுமக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆயிரமாயிரமாய் உங்களிடம் கேட்க கேள்விகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு தரம் அந்த மருத்துவமனைகளைச் சென்று பாருங்கள்.

உங்கள் லண்டன் நண்பர்களால் வாரம் ஒரு சனிக்கிழமை வெள்ளையர்களுடனான சந்திப்புக்குச் செலவழிக்கப்படும் ஆறாயிரத்துக்கு மேலான பவுண்டுகளில் ஒரு சனிக்கிழமைக்கான தொகையை வாங்கி அந்த மக்களுக்கு ஒரு நேர உணவு ஒரு காற்செருப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை ஆதரவாய் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வாருங்கள். உங்களை ஆயுள் உள்ளவரைக்கும் மறக்கமாட்டார்கள். இப்போது அந்த மக்களுக்குத் தேவை உயிர்வாழ உணவும் உடையும்தான்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அவரது தேவைகளுக்ககா 4வேலையாட்களை வைத்திருக்கலாம். அதற்கான சம்பளத்தை அரசாங்கம் தான் செய்கிறது. உங்களுக்காக உங்கள் கணவரின் சகோதரரை வாகன ஓட்டுனராகவும் , உங்களுக்குச் சேவகம் செய்ய ஒரு பெண்ணையும் , உங்கள் கணவரை உங்கள் உதவியாளராகவும் வைத்து நீங்கள் உங்களுக்குள் தானே அரசாங்கம் தரும் அத்தனை சலுகைகளையும் அனுபவிக்கிறீர்கள். இதில் ஒரு துளியை அவலப்படும் மக்களுக்காகக் கொடுப்பீர்களா?

கடந்த வருடம் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்குக் கொடுத்த பேட்டியைக் கேட்டு கொதிப்படைந்த நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரை வைத்து அவர் வேலைசெய்யும் பத்திரிகையிலேயே சிவநாதன் கிஷோர் அவர்களை எத்தனை மோசமாக எழுதுவித்தீர்கள் ? நினைவிருக்கும் அல்லவா

தனது மக்களுக்குத் தனது மண்ணிலிருந்து சேவை செய்வதாக சிவநாதன் கீஷோர் அவர்கள் சொன்னதற்காக , நீங்களும் கயேந்திரனும் தவிர மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் மாற்று இயக்கம் , மாற்றுக் கொள்கையுடன் வந்தவர்கள் என்றும் , ஒற்றை அம்புக்குறியே சிவநாதன் கீஷோர் அவர்களை தமிழ்க்கூட்டமைப்பில் இணைத்ததாகவும் , இராணுவ அதிகாரிகளுடன் கூட்டு வைத்துப் பார்ட்டி வைத்து வவுனியாவுக்குள் பாதுகாப்பாக வாழ்கிறார் சிவநாதன் கீஷோர் என்ற உங்கள் தகவல் மூலம் எழுதப்பட்ட விமர்சனத்தையும் மறந்திருக்கமாட்டீர்கள். இன்று அதே சிவநாதன் கிஷோர் அவர்கள் முகாம்களில் வதையுறும் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கூட்டமைப்பிற்குள் இருந்தே தனது மக்களைச் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். இதுதான் செயல் வீரருக்கும் சொல்வீரருக்கும் உள்ள வேறுபாடு.

ஆனால் நீங்களோ அன்றும் உங்கள் நலனையே கவனித்தீர்கள். இன்றும் அடுத்த தேர்தலில் வெல்வதற்கு உங்கள் சொகுசுவாழ்வை நிரந்தரமாக்குவதற்கு ‘‘பாராளுமன்றில் பம்மியழுது‘‘ பரபரப்பாகியுள்ளீர்கள்.

20ஆண்பாராளுமன்ற உறுப்பினர்களில் நீங்களும் தங்கேஸ்வரி அவர்களும் தேர்வானதில் பெருமையடைந்த பலருள் நானும் ஒருத்தி. அரசியலில் பெண்களின் வரவு பெரிதாய் இல்லாத இடத்தில் நீங்கள் இடம்பிடிக்க வேண்டுமென்று எங்கள் நண்பர்கள் உறவுகளுக்கெல்லாம் தொலைபேசியில் தொடர்பெடுத்து உங்களுக்கே வாக்களிக்கச் சொன்னோம். இயன்றவரை மக்களுடன் பணியாற்றிவர்கள் ஊடாக மக்களிடம் உங்களுக்கு வாக்களிக்க வைக்கச் சொல்லி நிறையவே முயற்சிகள் செய்தோம். ஆனால் அரசியல் என்றால் சுயநலம் என்பதை உங்கள் செயலால் நிரூபணம் செய்துள்ளீர்கள்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தோடு உங்கள் பாராளுமன்றுப் பதவியிலிருந்து இனி நீங்கள் போனாலும் உங்களுக்கான ஓய்வூதியமும் பதிவாகிவிட்டது. அடுத்த ஐரோப்பியப் பயணத்தோடு ஈழம் உங்கள் நினைவிலிருந்து கரைந்து அகதித்தஞ்சம் உங்களை நிரந்தர ஐரோப்பிய வாழ்வையும் தரலாம். மீண்டும் ஐரோப்பிய தமிழ் ஊடகங்களில் உங்கள் தரிசனம் ஆலோசனைகளாக மந்தைகளான எங்களை நோக்கி வரலாம். அதற்கிடையில் ஏதாவது அல்லலுறும் மக்களுக்காக செய்யுங்கள்.

நன்றி.

அடுத்த உங்கள் ஐரோப்பிய வரவை எதிர்பார்க்கும் அகதி சாந்தி.

2 Comments

Unknown @ 10:21 AM

///நாங்கள் பத்மினியென்ற பெண்ணை விரும்பியே தெரிவு செய்தோம். பெண்களின் பிரதிநிதியாக பெண்களுக்காக நன்மைகள் செய்வார் என்றே தேர்வு செய்தோம்.///
இவரையும் கஜேந்திரனையும் தேர்வு செய்தோமா? எனக்கு அப்படி ஞாபகமில்லை...

sathiri @ 11:43 AM

Keith Kumarasamy @ 10:21 AM

///நாங்கள் பத்மினியென்ற பெண்ணை விரும்பியே தெரிவு செய்தோம். பெண்களின் பிரதிநிதியாக பெண்களுக்காக நன்மைகள் செய்வார் என்றே தேர்வு செய்தோம்.///
இவரையும் கஜேந்திரனையும் தேர்வு செய்தோமா? எனக்கு அப்படி ஞாபகமில்லை...//

Keith Kumarasamy நீங்கள் வயதிற்கு வரேல்லைப்போலை..அதாவது உங்களிற்கு ஓட்டுப் போடுகின்ற வயது வரவில்லைப்போலை..:):)