Navigation


RSS : Articles / Comments


ஜயா திருமா ஜயோ இது தகுமா??

1:45 PM, Posted by sathiri, 10 Comments




அண்ணன் திருமா அவர்களுக்கு,

அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம்.

ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டமாக கொலை செய்யவழி வகுத்து விடுமோ என்கிற நியாயமான பயமே காரணமாகும்.

அண்ணா உங்களுக்கு ஒன்று தெரியுமா ! ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் இருபத்தையாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனை, ஆதாரங்களுடன் அதற்கான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று மனித உரிமை அமைப்புக்களும் , பிரான்ஸ் , இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஜ.நா சபையில் கொண்டு வந்த தீர்மானத்தினை முன்நின்று முறியடித்ததே நீங்கள் மானிலத்தில் கூட்டுவைத்துள்ள தி.மு.க. அரசின் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டுள்ளதும் , நீங்கள் மத்தியில் கூட்டுவைத்துள்ள காங்கிரஸ் கட்சியைக் கொண்ட அரசுமான இந்திய அரசுதான் என்கிற பரம பரகசியம் உங்களிற்குத் தெரியாமல் போனது சோகமானதுதான்.

அடடடா.. சொல்ல மறந்துவிட்டேன் கலைஞர் கருணாநிதிகூட இலங்கையரசிற்கு எதிராகப் பல நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டாமென்று மத்திய அரசிற்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அண்மைக் காலத்தில் கலைஞர் அவர்கள் அதிகமான கடதாசிகளை ஈழத்தமிழர்களிற்காகக் கடிதமெழுதியே வீணடித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. இது மட்டுமல்ல ஈழத்தில் இதுவரை இந்திய இந்திய அதிகாரத்திற்கெதிராக உறுமிக்கொண்டிருந்த புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டார்களே இனியாவது அங்குள்ள மக்களிற்கு ஏதாவது ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள் என்று இந்திய அதிகாரத்திடம் கையேந்தப்போயிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உங்கள் அன்னை சோனியாவோ தாத்தா மன்மோகனோ சந்திக்காதது மட்டுமல்ல இலங்கை அரசு எடுக்கும் எந்த முடிவிற்கு நாம் ஆதரவு வழங்குவோமென்று உங்கள் மலையாளத்து மச்சான் மேனன் அறிக்கை வேறு விட்டிருக்கிறார்...அஞ்சா நெஞ்சனே திருமா அண்ணா நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் ஒன்றுதான்.. அதாவது எங்களிற்கு ஈழம் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை.. எங்களது உரிமைகளையும் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை படுகொலை செய்ப்பட்டவர்களிற்கான நியாயங்களையோ இழப்பீடுகளையோ பெற்றுத்தரத் தேவையில்லை.. உங்களால் முடிந்தால் இறுதியுத்தத்தில் தாய் தந்தையரை இழந்து எவருமற்று முகாம்களில் முடங்கிப் போயிருக்கும் 800 ற்கு மேற்பட்ட அந்தச் சிறுவர்களை சிறை மீட்டு அவர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது வழிகாட்டுங்கள்.

தங்கள் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமான இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வாழ்க்கையை நோக்கி நடக்க வையுங்கள்.. தினம் தினம் முகாம்களில் இரவுகளில் காணாமல் போகும் எங்கள் சகோதரிகளை காமுகர்களின் பசி தீர்ந்தபின்னராவது காப்பாற்ற முடியுமா எனப்பாருங்கள். அவர்கள் கருக்களைக் கலைத்துவிட்டாவது உயிர் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..அடைபட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் வன்னி மக்களும் வன்னியில் வயற்காணிகள் உள்ளவர்கள்தான்..அவர்களை வெளியே விட்டாலே போதும்..அவர்கள் தங்கள் ஏர்களில் தங்களைப்பூட்டி உழுதாவது நெல்விதை போட்டுப் பிழைத்துக் கொள்வார்கள். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்யச்சொல்லி கேட்கவில்லை..உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது ஒன்றைச் செய்தாலே உங்கள் படத்தை நாங்கள் பூசையறையில் வைத்து வணங்குவோம்..இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லையா.. உங்களிற்கு ஓட்டுப்போட்டு உங்களை ஜெயிக்க வைத்த சனங்களிற்குள்ள பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்து உங்களை மணக்கோலத்தில் காணத்துடிக்கும் உங்களின் தாயாரின் கனவுகளையாவது நிறைவேற்றி உங்களிற்கு ஓட்டுப் போட்ட மக்களிற்கு ஒரு தலைவனாகவும் உங்கள் தாயாரிற்கு நல்ல மகனாவும் இருந்து விட்டுப்போங்கள்..இனியாவது ஈழம்.. போர் என்கிற வார்த்தைகளை தயவு செய்து உச்சரிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..வணக்கம்...

இப்படிக்கு ஈழத்து நாதியற்ற தமிழன்


இக்கடிதம் திருமா அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

10 Comments

சாந்தி @ 2:40 PM

எங்கடை அஞ்சா நெஞ்சன் அடங்காத்தமிழன் திருமாவைக் கேள்வி கேட்டதுக்கு பொடாவில் வழக்குப் போடப்போகிறேன்.

குடுகுடுப்பை @ 3:11 PM

இறுதியுத்தத்தில் தாய் தந்தையரை இழந்து எவருமற்று முகாம்களில் முடங்கிப் போயிருக்கும் 800 ற்கு மேற்பட்ட அந்தச் சிறுவர்களை சிறை மீட்டு அவர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது வழிகாட்டுங்கள்.//

இதைத்தான் நான் ஒரு தனிப்பதிவாக போட்டேன். அதைத்தவிர என்னைப்போன்ற சாமனியர்கள் எதுவும் செய்யமுடிவதில்லை.

குடுகுடுப்பை @ 3:16 PM

குடுகுடுப்பை: பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும்.

Anonymous @ 7:58 PM
This comment has been removed by a blog administrator.
sathiri @ 11:02 PM

Blogger குடுகுடுப்பை said...



இதைத்தான் நான் ஒரு தனிப்பதிவாக போட்டேன். அதைத்தவிர என்னைப்போன்ற சாமனியர்கள் எதுவும் செய்யமுடிவதில்லை.

3:11 PM:://

குடு குடுப்பை உங்களைப்போன்ற பதிவர்களாவது அந்தக் குழந்தைகளிறகாக உதவ முன்வரவேண்டும் எனபது எங்களது எதிர்பார்ப்பு உங்களிற்கு அவற்றை செய்ய ஏதும் தொடர்புகள் உள்ளதா..அல்லது தொடர்புகளை ஏற்படுத்தித் தரமுடியும் நன்றிகள்.

குடுகுடுப்பை @ 10:41 AM

Blogger குடுகுடுப்பை said...



இதைத்தான் நான் ஒரு தனிப்பதிவாக போட்டேன். அதைத்தவிர என்னைப்போன்ற சாமனியர்கள் எதுவும் செய்யமுடிவதில்லை.

3:11 PM:://

குடு குடுப்பை உங்களைப்போன்ற பதிவர்களாவது அந்தக் குழந்தைகளிறகாக உதவ முன்வரவேண்டும் எனபது எங்களது எதிர்பார்ப்பு உங்களிற்கு அவற்றை செய்ய ஏதும் தொடர்புகள் உள்ளதா..அல்லது தொடர்புகளை ஏற்படுத்தித் தரமுடியும் நன்றிகள்.

//

நடிகர் சிவக்குமாரின் பவுண்டேசன் மண்டபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதாக அறிவுத்துள்ளது, மனிதாபிமான அடிப்படையில் அரசுகள் பேசி அநாதைக்குழந்தைகளை படிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கும் நேரத்தில் சக தமிழனாய் நானும் பங்களிக்க விரும்புகிறேன்.மற்றபடி அரசியல் பேசும் அளவுக்கு துணிச்சலோ அருகதையோ எனக்கு கிடையாது.

sathiri @ 1:46 PM

உங்களால் முடிந்தளவு முயற்சிகள் செய்வதற்கு நன்றிகள் குடுகுடுப்பை

Anonymous @ 4:21 AM

வெருமா சென்னை கடற்கரை கூட்டத்தில் 'சோனியா' வை பற்றி பேசியதை தயவுசெய்து கேளுங்கள். 'அல்லா', 'இயேசு' லெவல் க்கு புகழ்ந்ததை கேட்க்க ஆகா ... சொன்னால் புரியாது கேளுங்கள் ஒருமுறை.

Bibiliobibuli @ 8:06 AM

கடந்த மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்களின் பேச்சுகளும் அறிக்கைகளும் எரிச்சலை தான் கிளப்புகின்றன. குறிப்பாக நீங்கள் சொன்னது போல் தொல் திருமாவின் ஐந்தாவது ஈழப்போர் விரைவில் தொடரும் வகையறாக்கள் அறிக்கைகள் இவர்களுக்கு ஈழத்தின், எங்கள் உறவுகளின் இன்றைய அவலநிலை தெரியாதா என்று வேதனையடைய வைக்கிறது.

அவருடைய மின்னஞ்சலுக்கும் இதை அனுப்பி வைத்ததற்கு நன்றி. உங்கள் பதிவுக்கு பொருத்தமான திருமாவின் படம் நன்றாக உள்ளது. ஈழவிடுதலையை இந்திய/தமிழ்நாட்டு அரசியலைப்போல் நினைத்து வாய்ச்சொல் வீரம் காட்டும் இவர்கள் எப்போது திருந்துவார்கள்?

இளைய அப்துல்லாஹ் @ 8:10 AM

ஐயா எண்டு போடும் இல்லாட்டி அம்மாவை மீன் பண்ணும் அந்த ஜயா