Navigation


RSS : Articles / Comments


தமிழ் நாடும் .. தேசியமும் தமிழரும் ..

3:06 PM, Posted by sathiri, One Comment

தமிழ் நாடும் .. தேசியமும் தமிழரும் ...

இலங்கைத் தீவில் சிங்கள தேசிய வாதமே முதலில் தோற்றம் பெற்றது. காரணம் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சிங்களவர்களே அதிகம் போரசிக்கொண்டிருந்தார்கள். அப்படி போராடிய சிங்களதலைமைகளான அநாகரிக. தர்ம பாலா போன்ற வர்களால். சிங்களத் தேசியம் உருப்பெற்றது. தமிழர்கள் ஆங்கிலேய அரசோடு சமரசம் செய்தும் இணக்க அரசியல் செய்தும் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறை வேற்றிக் கொண்டிருந்தனர் அதனால் அவர்களுக்கு தமிழ்த் தேசியம் பற்றிய தேவைகள் ஏதும் இருந்திருக்கவில்லை . இது சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்கள் மீது லேசான எரிச்சலை உண்டுபண்ணத் தொடங்கியிருந்தது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 நடுப்பகுதியில் தான் தமிழ்தேசியம் என்பது தமிழர் தரப்பு தலைவர்களான அருணாசலம் இராமநாதன் போன்றவர்களால் தோற்றம் பெற்று பின்னர் செல்வநாயகம் காலத்தில் உரம் பெற்றது.அதே நேரம் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சியின் தோற்றமும் அதன் வேகமான வளர்ச்சியும் இலங்கைத் தமிழர்களிடமும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணத் தவறவில்லை .திராவிடக் கட்சியின் வளர்ச்சிக்கு எப்படி சினிமா உதவியதோ அதே சினிமா தான் இலங்கைத் தமிழர்களிடமும் திராவிடக் கட்சிகளின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்திருந்தது .
திராவிடக் கட்சித் தலைவர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆவேசப் பேச்சுக்கள் இலங்கைத் தமிழ் தலைவர்களையும் கவர்ந்தது .இலங்கையில் அரசியல் மேடைகளில் அண்ணாவைப் போலவும் கருணாநிதியைப் போலவும் கரகரத்த குரலில் பலர் பேசத் தொடங்கியிருந்தார்கள் .

இவையெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது .அதே நேரம் சிங்களத் தலைமைகளிட்கு ஒரு பயத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது .அது என்ன வெனில் இலங்கையை பொறுத்தவரை தமிழர்கள் சிறுபான்மையினர்தான் .ஆனால் சிங்களத் தலைமைகளுக்கு இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத்தமிழர்கள் தமிழர்கள் எல்லாம் ஒன்றுதான் .பொதுவாக அனைவரையும் தமிழர்களாகவே பார்த்தார்கள் .

அப்படிப் பார்க்கும் போது சிங்களவர்கள் தமிழர்களை விட இலங்கைத் தீவில் மட்டுமே வாழ்கின்ற ஒரு சிறு பான்மையினம் .மிகப் பெரிய தொகையான தமிழினத்திடம் இருந்து சிறுபான்மையான தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய தேவை. அதன் பயம் சிங்கள தேசிய வாதமானது சிங்கள இனவாதமாக மாற்றம் பெற்றது .சிங்களத் தலைவர்களான பண்டார நாயக்கா .சிறில் மத்தியு .ஜெயவர்த்தனா .போன்றவர்கள் அதனை வளர்த்தார்கள் அதற்குள் அவர்களது சுயநலங்களும் இருந்தது .சிங்கள இன வாத வளர்ச்சியின் பிரதி பலிப்பு இலங்கை தீவில் தமிழர்கள் மீதான வன்முறையை நடத்தத் தொடங்கியிருந்தது .இந்த வன்முறைகள் தமிழ் தேசிய வாதத்தினை தமிழ் இனவாதமாக மாற்றத் தொடங்கியது .தமிழர் விடுதலைக் கூட்டணி த் தலைவர்கள் தீவிர தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் சிங்கள இன வாதத்துக்கு கொஞ்சமும் சளைக்காத அதேயளவு மூர்க்கத் தோடு தமிழ் இனவாதத்தினை வளர்த்தார்கள் .

தமிழகத்தின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு அடுத்த படியாக இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வலுக்கத் தொடங்கியது .ஆனால் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சின் வெற்றியோடு தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றது என்று ஆனால் இப்போதைக்கு ஆசியமைப்போம் .என்று விட்டு பெயரை மட்டும் தமிழ் நாடு என்று மாற்றம் செய்து விட்டு அண்ணாதுரை ஆட்சியமைத்து விட்டார் .ஆனால் இலங்கையில் தமிழீழக் கோரிக்கை ஆயுதப் போராட்ட வடிவமெடுத்து .இளையோர்கள் ஆயுதங்களை தூக்கினார்கள் .தமிழகத்து தலைவர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கை விட்டுவிட்டு தமிழ் ஈழம் பற்றி பேசத் தொடங்கினார்கள் .ஈழத்து ஆயுத அமைப்புகளுக்கு உதவத் தொடங்கினார்கள் .அங்கே விட்டதை இங்கே பிடித்து விடலாம் என நினைத்தார்கள் .
இந்திய மத்திய அரசும் உதவியது

.இந்தியாவின் உதவியோடு இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைந்தால் அது வெறுமனே வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசத்தோடு மட்டும் நிற்காது தமிழகத்தின் உதவியோடு ஒட்டு மொத்த இலங்கையும் தமிழர் வசமாகி சிங்களவர்கள் அனைவரும் அழிக்கப் பட்டு விடுவார்கள் என்று சிங்களத்துக்கு மேலும் பயத்தையும் சினத்தையும் கொடுத்தது அதனால் சிங்களம் மேலும் மூர்கதோடு போராடியது.
காலப் போக்கில் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சி உடைந்து பல கட்சிகள் ஆகிய பின்னரும் புதிதாக தொடங்கிய தமிழக கட்சிகள் அனைத்துக்குமே ஈழம் ஈழத் தமிழர் என்பது அவர்களது மேடைப்பேச்சுக்களில் கட்டாயம் பேச வேண்டிய பேசு பொருளாகிப் போனது .அதேதான் இன்று சீமானும் செய்கிறார் .இரத்த ஆறு ஓடும். இலங்கை சென்று போரிடுவோம் .ஆறு கோடி தமிழர்களும் பொங்கியெழு வோம் .கரும்புலியாக மாறுவோம் என்கிற தமிழக அரசில்வாதிகளின் பேச்சுக்கள் ஈழத் தமிழனுக்கு இதுவரை எந்த நன்மையும் செய்யவில்லை செய்யப் போவதுமில்லை அது சிங்களத்தை சீண்டி இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க மட்டுமே உதவும் . முப்பதாண்டு கால யுத்தமும் ஈழத் தமிழனின் பெரும் அழிவும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உம்மையை புரிய வைத்திருக்கிறது அது என்னவெனில் தமிழகத்து அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்க பேசலாம் .ஆட்சில் இருந்தால் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் அதை தவிர்த்து .ஈழத் தமிழனுக்காக ஒரு துருபைக் கூட அசைக்க முடியாது

ஆயுத எழுத்து" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி

9:39 AM, Posted by sathiri, No Comment

"ஆயுத எழுத்து" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி Category: இரயாகரன் Created: 19 April 2015 Hits: 20
Autham.jpg
"ஆயுத எழுத்து" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை கட்டமைத்த புலியிச நடத்தைகளையும், அதை எப்படி மாபியத்தன கிரிமினல் வழிகளில் நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இலக்கியம் ஊடாக பேசி இருக்கின்றது. கடந்த கால பாசிசத்தினை நியாயப்படுத்தும் படைப்பே ஆயுத எழுத்து.
இந்த நாவல் புலி அரசியலை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. புலிகளின் நடத்தைகளை யாழ் மேலாதிக்க நடத்தைகளின் அங்கமாக முன்னிறுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றது. புலிகளை முன்தள்ளி நக்கிப் பிழைத்த பாசிட்டுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலுக்குரிய சந்தர்ப்பவாதத்துடன், குறித்த காலத்தை மையப்படுத்தி தனிமனிதப் புலம்பலாக வெளிவரும் புலி விமர்சன இலக்கிய வரிசையில், "ஆயுத எழுத்து" புலிகளின் நடத்தைகளை நியாயப்படுத்தி வெளிவந்திருகின்றது. இந்த அடிப்படையில் புலிகளின் நடத்தைகள் ஒட்டிய முரண்பாடுகளை, இலக்கிய அரங்கில் அரசியல் தர்க்கமாக மாற்றியிருக்கின்றது. புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தை முடக்கி இருக்கின்றது. இதன் மூலம் புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றி இருகின்றது. இன்றைய இலக்கிய அரங்கானது புலி அரசியலை பாதுக்காக்கும் புலி நடத்தையை மையப்படுத்திய புலம்பல் இலக்கியமாக குறுகி இருகின்றது. யுத்தத்தில் தோற்றுப்போன சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையில் புலம்பல்களே இத்தகைய இலக்கிய படைப்புகளும் அதனை காவித் திரிவோரினதும் நடத்தைகளுமாகும்.
சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே புலியிசம்
புலியிச சிந்தனை முறை புலிக்குள் மட்டும் இருந்த ஒன்றல்ல. மக்களை மையப்படுத்தாத தேசியம், இனவாதம், சுயநிர்ணயம்… என்று, இதைச் சுற்றிய இயங்கிய எல்லா சிந்தனை முறையிலும், சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே இயங்கியது, இயங்குகின்றது. இது உருவாக்கிய புலியிசம் என்பது, வெறுமனே வலதுசாரிய வெளிப் பூச்சுகளல்ல. நிலவுகின்ற யாழ் மேலாதிக்க சமூக அமைப்பின் மகிழ்ச்சியையோ, அதன் வெளிப்புற அழகையையோ கொண்டு கட்டமைக்கப்பட்ட வெளித் தோற்றமல்ல. ஒழுக்கம், அறம், தூய்மை, பாண்பாடு... என்ற போலியான இழிவான சமூக மேலாதிக்க பாசிச சொல்லாடல்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புனித புலிகள் பற்றிய விம்பத்துக்கு முரணாதே புலிகளின் நடத்தைகள். மக்களை ஏமாற்றி அவர்களை ஒடுக்கிய புலிகளின் எதார்த்தம் மனித விரோத நடத்தைகளானது. அதற்காக அவர்கள் கையாண்ட வாழ்க்கை நெறியினையும் அரசியலையும் "ஆயுத எழுத்து" பிரதிபலிக்கின்றது.
இயல்பாகவே ஜனநாயக விரோத்தையும், பாசிசத்தையும், மாபியத்தனத்தையும், கிரிமினல் தனத்தையும்... கொண்ட இனவாதம் மூலம் தான், புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. மோசடி, ஊழல், முகம் பார்த்தல், பயன்படுத்தல், பழிவங்குதல்.. என்று அதன் எல்லா இழி கேட்டிலும் ஈடுபட்டவர்கள், வன்முறை கடத்தல், கப்பம், கொலை.. என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார்கள். புலிகளின் இந்த வலதுசாரிய அரசியல் பாதையில் பயணித்து, அந்த காதபாத்திரங்களாக முன்னின்று செயற்பட்டவர்கள் தான், உண்மையான அதன் அரசியல் உணர்வுடன் பயணித்த புலிகள்.
புலி அரசியலால் உருவாக்கப்பட்ட ஒருவர் தான் சாத்திரி. எது அவரது புலி அரசியல் வாழ்க்கையாக இருந்ததோ, அதையே தன் "ஆயுத எழுத்து" மூலம் சாத்திரி வெளி உலக்கு கொண்டு வந்து இருக்கின்றார். சாத்திரி இன்னும் புலியாகவே இருப்பதாலும், புலியாக சிந்திப்பதாலும் தான் உண்மையான புலியின் படைப்பாக "ஆயுத எழுத்து" இருக்கின்றது. புலி பற்றி போலி விம்பம் உருவாக்கி பிழைக்கும் கும்பலுக்கும், புலியை நம்பும் அப்பாவிகளுக்கும் "ஆயுத எழுத்து" சொல்லும் உண்மைகள் அதிர்வாக மாறி இருக்கின்றது. புலிகளைச் சொல்லி பிழைத்த பிழைப்புக்கு இது சாவல் விடுகின்றது.
இதில் ஈடுபட்ட ஒருவனின் தொடர்ச்சியான அதே அரசியல் பிழைப்புக்கு, இந்த உண்மை தான் அவனுக்கான ஆயுதம். புலியாக சிந்திக்கும் ஒருவனிடம் சுயவிமர்சனத்தைத் தேடுவது, சுயவிமர்சனத்தைக் கொண்டு இருப்பதாக சுய தர்க்க அறிவில் இருந்து கற்பிப்பதும் காட்டுவதும் அபத்தம்.
நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை மூலமாக புலியிச நடத்தைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை விடுத்து, சுய தர்க்க அறிவு மூலம் சுயவிமர்சனமாக விளக்க முற்படுவது உண்மையில் யாழ் மையவாத சிந்தனையின் முரண்பட்ட மற்றொரு வடிவமாகும்.
சாத்திரியின் நாவலின் அரசியலும் சரி, நாவலுக்கான விமர்சன அரசியலும் சரி, மக்களைச் சார்ந்து முன்வைக்கப்படுகின்றதா எனின் இல்லை. பிரமுகர்த்தன இருப்பை தக்க வைக்கின்ற சுய தர்க்கங்களாக குறுகி இருப்பதால், இந்த நாவல் கொண்டு இருக்கும் புலி அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
"ஆயுத எழுத்து" ஒரு நாவலா?
"ஆயுத எழுத்து" ஒரு நாவல் அல்ல என்று இலக்கியவாதிகள் என கூறுபவர்கள் சிலரால் பேசப்படுகின்றது. இதன் அரசியல் பின்புலமானது, அடிப்படையில் தங்களை இலக்கியவாதிகளாக பிற்றிக் கொள்ளும் தரப்பின் பொது அச்சமாகும். உண்மையான மனிதர்களின் யதார்த்தவாதத்தை இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, வலதுசாரிய சிந்தனை முறையாகும். கற்பனையையும், இயற்கையையும், மொழியையும் முதன்மையாக கொண்டிராத படைப்பு இலக்கியமல்ல என்ற புரட்டுவாதம், உயிர் உள்ள மனிதனையும், அவன் வாழ்வையும் முதன்மையாக கொண்ட படைப்பு இலக்கியத்தை மறுக்கின்ற இலக்கியமாகும். இது இலக்கியதுக்கே இலக்கியம் என்ற வலதுசாரிய வரட்டுப் பார்வையாகும்.
இந்த வரட்டுப் பார்வை கடந்து பார்த்தால் "ஆயுத எழுத்து" ஒரு நாவல். கடந்த இலங்கை வரலாற்றுடன் தொடர்புள்ள சம்பவங்களுடன், தொடர்புபட்ட ஒருவனின் சொந்தக் கதை. நான் என்ற பாத்திரத்தை தவிர்த்து "அவன்" என்ற ஒருவன் ஊடாக நடந்தவற்றில், சிலதைக் கூற முனைகின்றது.
இந்த நாவலில் கூறப்படும் சம்பவங்கள் அன்றைய செய்திகளிலும், மக்கள் சார்ந்த கருத்து ரீதியான அரசியல் விமர்னங்களிலும் காணமுடியும். வன்னிப் புலிகள் தொடங்கி அதன் சர்வதேச வலைப் பின்னல் வரையான, அதன் மக்கள் விரோதப் போக்கும், அதற்கு இசைவான அதன் மாபியத்தனம் வரை, மக்கள் சார்ந்த கருத்து நிலை அரசியலை முன்வைத்தவர்கள் முன் இவை புதியவை அல்ல. இதை புலியாக முன்னின்று செய்தவனுக்கு, இது தான் அவனின் அரசியல் வாழ்க்கை. ஆனால் இந்த வலதுசாரிய செயற்பாடுகளை சரியானதாக ஏற்றுக் கொண்டு, அதையே தமிழ் தேசியமாக கருதியவர்களும், கண்ணை மூடிக்கொண்டு இதன் பின்னால் கும்மியடித்தவர்களுக்கும் "ஆயுத எழுத்து" அதிர்ச்சியளிக்க கூடியவையல்ல. அந்த வகையில் இந்த நாவல் உண்மையின் எதார்த்தமாகும்.
இங்கு "அவன்" அதாவது நான், இதை இப்படிச் செய்தேன் என்பது, நடந்த எதார்த்தத்தினை நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்மையை தங்களைப் போல் மூடிமறைக்காது சொன்னதே, சாத்திரிக்கு எதிரான புலியைச் சொல்லி பிழைக்கும் புலித் தரப்பின் இன்றைய எதிர்வினையாகும்.
உதாரணமாக சோபாசக்தியின் நாவல்களை எடுத்தால் அதன் உள்ளடக்கத்துக்கு "ஆயுத எழுத்து"க்கும் இடையேயான அரசியல் ஒற்றுமையையும், வலதுசாரிய ஒத்த நோக்கையும் காண முடியும். அடிப்படையில் புலி அரசியலை விமர்சித்த இலக்கியமாக இருப்பதில்லை. சம்பங்களைத் தவறானதாகவோ அல்லது சரியானதாகவோ காட்டுவதே இந்த இலக்கியத்தில் உள்ள அரசியல் ஒற்றுமையாகும். இந்த இலக்கிய மூகமுடித்தனம் அம்பலமாவதைத் தடுக்கவே, இதை நாவல் இல்லை என்ற நிறுவ முனையும் இலக்கிய விமர்சனப் போக்கைக் காண முடியும்.
குறிப்பாக இந்த இலக்கிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தோ, சமூகம் நோக்கம் சார்ந்தோ, படைப்பு நோக்கத்தைக் கொண்டு இருப்பதில்லை என்பதே அடிப்படையான உண்மை. சாத்திரி கூட சோபாசக்தியின் நோக்கில் இருந்து முரண்படவில்லை.நடந்ததை சரியென்று அப்படியே சொல்லி விடும் சாத்திரியின் நேர்மை, சோபாசக்திக்கும் கிடையாது. சாத்திரி சொன்ன புலி எதார்த்தம் இலக்கிய தன்மை குறைவானதாகவும், சோபாசக்தி மூடிமறைத்து சொல்லும் கையாளும் இலக்கிய மொழி இலக்கியம் என்று கூறுவது தான், இதை நாவல் அல்ல என்று கூறி முன்வைக்கின்றவர்கள் கூறமுனையும் அடிப்படை வேறுபாடகும். இவர்களால் அரசியல் வேறுபாட்டை முன்வைக்க முடிவதில்லை.
"ஆயுத எழுத்தை" இலக்கியமாக குறுக்கிக் காட்டும் இலக்கிய அரசியல்
கலை - இலக்கியத்தை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவது கூட ஒரு அரசியல். படைப்பு இலக்கிய தன்மை இருக்கின்றதா என்பதைக் கொண்டு, அதை மதிப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். கற்பனைப் படைப்புகளின் அரசியலை மூடிமறைத்தது போன்று, யதார்த்த படைப்புகளில் இதை செய்ய முடியாது. எதார்த்தத்தில் படைப்பாளியும் உயிருள்ள அங்கமாக இருப்பதால், அது பற்றிய தங்கள் கருத்து மூலம் அம்பலப்பட்டுப்போவதை தவிர்க்க, இலக்கிய தன்மை கொண்டு இருக்கின்றதா என்பதை முன்னிறுத்தி விடுகின்ற விமர்சனப் போக்கைக் காணமுடியும்.
கடந்த 30 வருடத்தின் மனித அவலங்கள் வெறும் நிகழ்வுகள் அல்ல. அதன் பின்னால் பாரிய மனித அழிவும், அவலங்களும் நிலவியது. இக்காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கின்றோம். பங்கு பற்றி இருக்கின்றோம். இந்த மனித அவலத்தை தடுக்க, மக்களை சார்ந்த எதிர் நிலை கருத்துகள் இருந்தன. பல போராட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இது பற்றி அன்றும், இன்றும் அக்கறையற்ற, சமூக நோக்கற்ற இலக்கியம், இலக்கிய ஆய்வுகள் மூலம் நடந்ததை நியாயப்படுத்திவிடுகின்ற குறுகிய போக்கு தான், இலக்கியமாக குறுக்கிவிடுகின்ற விமர்னங்களாக வெளிவருகின்றன. மேட்டுக்குடி – மத்தியதர வர்க்க தனிமனித பிரச்சனைதான், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையாக சித்தரிக்கின்ற இலக்கியங்களை தான் இலக்கியம் என்ற அகாரதியை "ஆயுத எழுத்து" விமர்சனம் மூலம் கட்டமைக்க முனைகின்றனர்.
"ஆயுத எழுத்து" புலிக்கு எதிரானது என்ற விமர்சனம்
"ஆயுத எழுத்து" நூல் புலிக்கு எதிரானது என்பது பெரும் பொய், மாறாக புலிக்கு சார்பானது. புலி அரசியலை கேள்விக்கு உட்படுத்தாதது. புலிக்குள் இயங்கிய "அவன்" அதாவது நான் எது சரி என்று புலி கருதியதோ, அதை செய்ததை நியாயப்படுத்திவிடுகின்ற ஒரு நூல். புலிகளாக தங்களைத் தாங்கள் உணருகின்ற ஒருவனின் நடத்தை. இது தான் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.
புலிகள் இயக்கத்தில் உண்மையான அதன் செயற்பாட்டில் இருந்த ஒருவன், இன்று தன்னை புலியாக உணருகின்ற ஒருவனின் மனநிலை தான் "ஆயுத எழுத்து". சாத்திரி தன்னை புலிக்கு வெளியில் நிறுத்தி இதை எழுதவில்லை. புலியாகவே நின்று எழுதுகின்றார். புலிகளை சுற்றிய பிழைப்புவாதிகள், அவர்களின் புலிமனப்பாங்கில் இருந்து விலகியதற்கு எதிரான எதிர்வினை தான் இந்த நாவல். உண்மையாக போராடியவர்கள், பிழைப்புவாத புலிகளால் இன்று கைவிடப்பட்ட நிலையில், தாங்கள் போராடிய வடிவத்தை புலிகளின் மனநிலையில் நின்று சொல்லும் படைப்பு.
யுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் தொடங்கி புலிகளின் சர்வதேச மாபிய வலைப் பின்னல் வரை இயங்கியவர்கள், புலிகளின் பினாமிச் சொத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் புலிகளால் புறக்கணிபட்ட இன்றைய சூழலை அங்கீகரிப்பதில்லை. புலிகளின் பாசிச - கிரிமினல் புலி நடத்தையை தங்களின் வீரச்செயலாக காட்டி, தம்மை அங்கீகரிக்கக் கோருகின்றது இந்த நாவல்.

நல்ல காலம் பிறக்குது

1:50 PM, Posted by sathiri, No Comment

நல்ல காலம் பிறக்குது

இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்  இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில்  இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வன்முறையை பாவிக்க வேண்டி வந்தது.என் ஆயுதம் எது என்பதை நீயே தீர்மானிக்கிறாய் என்றபடி அவன் முகத்துக்கு நேரே ஒரு வார மெடிக்கல் விடுமுறைக்கடுதாசியை நீட்டினேன்.
அதிர்ந்து போன முதலாளி  உனக்கு என்ன வருத்தம் என்றான்.அதை வைத்தியரிடம் சொல்லிவிட்டேன்.. இதைப்பிடி என்று மெடிக்கல் கடுதாசியை அவனிடம் திணித்துவிட்டு  விசிலடித்தபடி வீடு வந்து பாரிஸ் போவதற்கு டிக்கெட்டும் போட்டு விட்டு நண்பனுக்கு நான் வருவதாக போனடித்து சொன்னதும் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .இந்த வருடத்தில் அதிக மகிழ்ச்சியான நபருக்கு ஒரு விருது என்று யாராவது  கொடுத்தல் அதை நண்பன் சிவாவுக்கு கொடுக்கலாம்.என்னால்தான்  தனக்கு இத்தனை மகிழ்ச்சி  என்று என்னை  புகழ்ந்து தள்ளும் இதே எனது  நண்பன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே மாதம் சோகமாக போனடிதிருந்தன் .அதேபோல அதற்கு இரண்டு வருடங்களிட்கு முன்பு அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னரும் இதே மாதத்தில் ஒரு போனடிதிருந்தான் கோபமாக.அன்று எங்களுக்குள் நடந்த சண்டையின் பின்னர் இனி செத்தாலும் உன்னோடை கதைக்க மாட்டன் என்று அவன் சொல்ல.. செத்தால்ப்பிறகு உன்னாலை மட்டுமில்லை யாராலையுமே கதைக்க முடியாது என்று விட்டு போனை வைத்து விட்டேன்.


அதற்குப்பிறகு இரண்டு வருடங்களாக நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. .வாழ்கையில் எத்தனை நல்ல விடயங்கள் நடந்தாலும் நினைத்த உடனேயே நினைவுக்கு வருவது கெட்ட அல்லது மோசமான சம்பவங்களே.அப்படி நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த மோசமான அந்த நாளை உங்களுக்கு சொல்வதற்கு இந்தப் பூமிப்பந்தை இன்றிலிருந்து நான்கு வருடங்கள் பின்னோக்கி சுழற்ற வேண்டும்.பூமியை பின்னோக்கி சுழற்றும்  சக்தி எனக்கு  எப்படி வந்தது என்று மலைக்க வேண்டாம் எனது ஐ போனினேயே சுற்றலாம்.திகதி சரியாக நினைவில் இல்லை நிச்சயமாக ஒரு லீவு நாள்தான் எனவே குத்து மதிப்பாக நான்கு வருடத்தை பின்னோக்கி சுற்றுகிறேன்  .

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
செப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2010 ம் ஆண்டு .நண்பனுக்கும் எனக்குமான வழமையான உரையாடல் பத்தும் பலதும் கதைத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தடவையும் சரி வரேல்லை.டொக்டர் குடுத்த மருந்துகள் போட்ட ஊசியலாளை மனிசி சரியா களைச்சுப் போய் முதல் இருந்ததை விட இன்னுமும் வீக்காய் போயிட்டாள் .இரண்டாவது தரமும் அழிஞ்சுபோச்சு  கப்பப்பை சரியான வீக்கா இருக்காம் திரும்பவும் ஒரு தொகை மருந்து எழுதித் தந்திருக்கு .இனி எனக்கு இந்த வைத்தியதிலை நம்பிக்கை இல்லையடா என்று பெருமூச்சோடு முடித்தான் .எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது அவன் சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பன் பிரான்சுக்கு வந்தும் அந்த நட்பு தொடருகிறது நாங்கள் இருவரும் ஒரே நாட்டில் இருந்தாலும்  இருக்கும் இடம் வெவ்வேறு தொலைவில் என்பதால் ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தொலை பேசியில் பேசுவோம்.சிவா குடும்ப சூழலால் முப்பத்தைந்து வயதிலேயே இந்தியா போய் கலியாணம் காட்டி விட்டு வந்திருந்தான் நாந்தான் அவனுக்கு வடபழனி முருகன் கோயிலில் மாப்பிள்ளைத் தோழன் .அவனின் மனைவி சுபா நல்ல கணவன் கிடைக்க வேணும் என்று எல்லாக் கோயிலுக்கும் எல்லா நாளும் விரதம் இருந்ததால்  சிவா கட்டின தாலிப்பாரம் தாங்க முடியாமல் முறிந்து விழுந்துடுவாரோ...  என்று எனக்கு லேசான பயம் வேறை இருந்தது . அதுதான் நல்ல கணவன் கிடைசிட்டானே இனியாவது நல்லா சாப்பிட்டு பிரான்ஸ் குளிரைத் தாங்குகிற மாதிரி உடம்பை பலமாக்கிக் கொண்டு வாங்கோ என்று அவரிடம் சொல்லி விட்டு வந்திருந்தேன் .

அடுத்த ஒண்டரை வருசம் கழிச்சு சுபா பிரான்ஸ் வந்து சேர்த்துவிட்டார் அப்போ நண்பனுக்கு முப்பத்தாறு அரை வயது.ஒரு வருடம் கழித்து தான் அப்பாவாகப் போவதாய் மகிழ்ச்சியோடு போனடித்து சொல்லியிருந்தான் .அவன் மகிழ்ச்சி மூன்று மாதத்திலேயே கலைந்துபோனது .அடுத்ததாய் வைத்தியர், விசேட வைத்தியர் ,பரிசோதனை, மருந்து, ஊசி ,இப்படியாய் சில காலத்துக்குப் பிறகு அவனுக்கு இன்னுமொரு நம்பிக்கை கருக்கொண்டது.ஆனால் அடுத்த நம்பிக்கைக்கும் ஆயுள் மூன்று மாசம்தான்.அதுதான் இன்று போனடித்து வைத்தியத்தில் நம்பிக்கை இல்லையென்று விட்டான்.சரி வைத்தியத்தில நம்பிக்கை இல்லையெண்டால் அடுத்தது என்ன செயப்போகிறாய் என்று எனது கேள்விக்கு அவன் சொன்ன பதில் தான் எங்களுக்குள் சண்டை வந்து இரண்டு வருசம் நாங்கள் கதைக்காமல் விட்டதுக்கு  காரணம்.இப்போ ஐ போனில் இரண்டு வருடம் முன் நோக்கி சுற்றுகிறேன் .

...................................................................................................

செப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2012 போனில் சிவா என்று காட்டியது.இரண்டு வருசத்துக்குப் பிறகு இப்போ அவனாகவே போனடிக்கிறான்.முதல் தடவை எடுக்கவில்லை இரண்டாவது தடவை எடுத்து காதில் வைத்ததும் கலோ.. டேய் நான்தானடா சிவா என்கிற அவனது உடைத்த குரல் என்னைக் கொஞ்சம் உலுக்கி விட்டது.அவசரமாக என்னடா ஏதும் பிரச்சனையோ...
ஓமடா  அண்டைக்கு நீ சொன்னதை கேட்கேல்லை  மனிசியும் சாமிப்போக்கு எண்டதாலை வைத்தியத்தை நம்பாமல் நான் டென்மார்க் அம்மனை நம்பி போயிட்டான்.இரண்டு வருசம் டென்மார்க்குக்கும் பாரிசுக்கும் அலைஞ்சதுதான் மிச்சம்.அலைச்சல் அதோடை வீண் செலவு . எனக்கு இங்கை இருக்கப் பிடிக்கேல்லை. தமிழாக்களிண்டை ஒரு நிகழ்ச்சிக்கும் போக முடியேல்லை .செத்தவீட்டுக்கு போனாலும் என்ன இன்னும் ஒண்டும் இல்லையோ எண்டுற துதான் முதல் கேள்வி அதாலை மனிசி இப்ப ஒரு இடமும் போறதில்லை.இங்கை இருந்தா எங்களுக்கு லூசாக்கிடும் அதுதான்  உன்ரை இடத்திலை தமிழ் ஆக்கள் இல்லாத இடமா வந்து இருக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.. மூச்சு விடாமல் பேசிமுடித்தான்.
சரியடா என்னிலையும் பிழை தான்.டென்மார்க் அம்மன் சரியான பிராடு எண்டு எனக்குத் தெரியும்.அம்மணிக்கும் எனக்கும் ஒருக்கா சண்டை வந்து நான் வாய்க்கு வந்தபடி திட்டிப்போட்டன் அந்த வருசமே அவதாரம் எடுத்து என்னைப் பலி வாங்கப் போறதா சொன்னது மனிசி .சொல்லி நாலு வருசமாகிது எனக்கு ஒண்டுமே நடக்கேல்லை .அது ஊரிலை சாத்திரம் சொல்லுறன் எண்டு தண்ணிக்குள்ளை  பூ வைப் போட்டுக் குடுத்து ஏமாத்தினது.வெளிநாடு வந்து அவதாரம் எடுக்கிறன் எண்டு ஏமாத்திது.எங்கடை லூசு சனங்களும் நம்புது.சரி கவலைப் படாதை கோவத்திலை நானும் அண்டைக்கு அப்பிடி சொல்லியிருக்கக் கூடாது எதாவது ஒழுங்கு பண்ணலாம்" .அவனோடு பேசி ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு யோசித்தேன் .அவனின் நிலைமை கவலையாய் இருந்தது அன்று பிள்ளை பிறக்க வேணும் எண்டதுக்காக எதோ ஒரு நம்பிக்கையில் டென்மார்க் அம்மனிடம் போகிறேன் என்றதும் "ஆண் சாமியார் எண்டாலும் பரவாயில்லை பெண் சாமியார் எப்பிடியடா பிள்ளைவரம் கொடுக்கும்"" எண்டு கோவத்தில் கேட்டு விட்டிருந்தாலும் அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த வேறு அர்த்தங்கள் அவனை நிச்சயம் நோகடிதிருக்கும் அதுக்ககவவது எதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?.. யோசித்தேன் ...சட்டென்று ஒரு யோசனை வர  சிவாவுக்கு போனடித்து திட்டத்தை சொன்னேன். கொஞ்சம் யோசித்தவன் சுபா விட்டையும் கேட்டு சொல்வதாக சொன்னவன்  சில மணி நேரத்துக்குப் பின்னர் போனடித்து சம்மதம் என்றுவிட்டான் .

................................................................................................................................................

ஒரு மாதம் கழித்து சென்னையில் பிரபல தனியார் மருத்துவ மனையொன்றின் அறையில் வைத்தியரின்  முன்னால் நான் சிவா அவனது மனைவி அமர்திருந்தோம் ..வைத்தியர் எங்களுக்கு அனைத்தையும் விளங்கப் படுத்தி ஒன்றும் பயமில்லை முதல்ல இரத்தப் பரிசோதனையும் ஹோர்மோன் பரிசோதனையும் செய்து வரச்சொல்லி ஒரு நர்சோடு சிவாவவையும் மனைவியையும் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார் ..பரிசோதனைக்கு போனவர்கள் வரும்வரை  அங்கே காத்திருந்தேன்.எல்லாம் முடிந்து வந்தவர்களின் பரிசோதனை முடிவுகளை  சரி பார்த்த வைத்தியர் எல்லாம் நன்றாக உள்ளது அவர்களுக்கு இக்ஸி முறையில் சோதனைக்குழாய்  கருத்தரிப்பு செய்யப் போவதாகவும் எனவே அவர்கள் அங்கு தங்கியிருக்கட்டும்  நீங்கள் மிகுதி விடயங்களை பாருங்கள் என்று என்னிடம் சொல்லி கையை குலுக்கி விடை பெற்றார்.நான் ஏற்பாடு செய்திருந்த லோயருக்கு போனடித்து விட்டு அவர் வரும்வரை வெளியே வந்து எதிரே இருந்த டீ கடையில் ஒரு டீ யை வாங்கி உறுஞ்சியபடிஅக்கம் பக்கம் நோட்டம் விட்டேன் எனக்கு பல வருடங்களாக பழகிய இடம்தான் இப்போ நிறைய கட்டிடங்கள் முளைத்துள்ளது.

வலப்பக்கமாக  வீதியோரம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் குடிநீர் திட்டத்துக்காக போடப் பட்ட பெரிய சிமென்டு குழாய்கள்.மத்தியிலும் மாநிலத்திலும் இரண்டு தடவை தேர்தல் நடந்து ஆட்சியும் மாறிவிட்டது  குழாய்கள்  மட்டும் அங்கே அப்படியே கிடந்தது.ஆனால் அவை இப்போ குழாய்கள் அல்ல குடியிருப்புக்கள்.அவைக்கு இலக்கங்கள் கூட போடப் பட்டு குடியிருப்புகள் அடையாளப் படுத்தப் பட்டிருந்தது .ஒரு பக்கம் இரட்டை இலையும் மறு பக்கம் உதயசூரியனின் படமும் கீறப்பட்டு துணியால் மறைக்கப் பட்டிருந்த  குழாயில் இருந்து ஒருவன் வெளியே வந்து சோம்பல் முறிக்க அடுத்ததாய் ஒரு பெண்.அவனின் மனைவியாக இருக்க வேண்டும் என நினைத்தபோது  புற்றுக்குள் இருந்து வருவது போல வரிசையாய் நான்கு பிள்ளைகளும் குழாயிலிருந்து வெளியே வந்தார்கள்.உலகம் எவ்வளவு விந்தையானது எதிரே வைத்திய சாலையில் இலட்சங்கள் செலவழித்து சோதனைக் குழாயில்   குழந்தைக்காக என் நண்பன் ஏங்கிக் கொண்டிருக்கிறான்.பக்கத்தில் சிமெண்டு குழாயில்  ஒருவன் நான்கு பிள்ளைகளோடு குடும்பம் நடத்துகிறான் .

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்  வெளியே வந்த பெண் கர்பிணியாக இருக்க வேண்டும் சரியாக கவனிக்க முடியவில்லை அவள் அடுப்பை மூட்டி ஒரு சட்டியை வைத்து தண்ணீரை ஊற்ற  நான்கு பிள்ளைகளும் போய் அவளோடு ஒட்டிக் கொண்டார்கள். அவன் போதலில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி முகத்தில் விபூதியை அள்ளிப் பூசி  குங்குமப் பொட்டு வைத்தவன்  ஒரு பட்டுத் துண்டை தலையில் கட்டி தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு இடக்கையில் மந்திரக் கோல் போல ஒரு கருப்புத் தடி வலக்கையில் குடு குடுப்பை டீ கடையை நோக்கி வந்தவன் அருகில் வரும்போதே குடு குடுபையை டம... டம... டம ... என அடிக்கத் தொடங்கியவன் ...

நல்லகாலம் பிறக்குது   சாமீ....
நல்லகாலம் பிறக்குது ...
ஜக்கம்மா வந்திருக்கா ..
யாருக்கோ ஒரு செய்தி சொல்லப்போறா ...
நாவில வந்திருக்கா ...
நல்ல செய்தி சொல்லப் போறா ...
நல்லா காலம் பிறக்குது ...
ஜக்கம்மா ......

என்னை வெளியூர்க்காரன் என்று பார்த்ததும் தெரிந்திருக்க வேண்டும் முன்னால் வந்து நின்றவன் ..ஜக்கம்மா சொன்ன செய்தி சொல்லப் போறன் நல்லகாலம் பிறக்குது .என்று உடுகையை ஒரு தடவை நிறுத்தி அடித்ததும்..  "ஏ ..எத்தினை வாட்டி சொல்லுறது   கஸ்டமரை  டிஸ்டப்  பண்ணதை அந்தாண்டை போ " என கடைக்காரன் விரட்ட .தயங்கியபடி என்னைப் பார்தவனிடம்  "யக்கம்மா சொன்ன செய்தி இருக்கட்டும் உனக்கு என்ன வேணும்"  என்றதும்..நாலு குழந்தை சாமி என்று கும்பிட்டவனுக்கு கடையில் கொஞ்சம் பணிஸ் வங்கிக் கொடுத்து விட.." மகாராசனா இரு சாமி" என்ற படி குடியிருந்த குழாயை நோக்கி போய்க்கொண்டிருந்தான் .டீ கடைக்காரருக்கும் அவனால் வியாபாரம் நடந்ததால் அவர் ஒன்றும் பேசவில்லை .லோயர் வந்த ஆட்டோவில் நானும் தொற்றிக் கொள்ள ஆட்டோ சென்னை தெருவில் வளைந்து நெளிந்து ஒரு மணி நேரத்தில் நெருக்கமான குடியிருப்பு ஒன்றில் போய் நின்றது .

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வேலவனுக்கு காலை அம்மாவிடமிருந்து போன் வந்ததிலிருந்து ஒரே படபடப்பு. யார் இப்போ கலியாணம் வேணுமெண்டு கேட்டது இந்த அம்மக்களே இப்பிடித்தான் என்னை எதுவுமே கேட்காமல் சம்பந்தம் பேசிவிட்டு வந்து பெண்ணை பார்த்திட்டு போடா என்று போனடிதிருந்தார் .அதுவும் நான் வங்கியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கிறார் .நான் எந்த வங்கியில் வேலை பார்க் கிறேன் என்று தெரியாமல் பெண்ணு வீட்டுக் காரரும் நான் பேங்க் ஒவ் இன்டியவிலையோ.. கனரா விலையோ மானேஜராய் இருக்கிறதாய் நினைதிருப்பாங்கள் சினந்து கொண்டான் .எந்த வங்கியில் வேலை என்று தெளிவாக அம்மாவிடம் சொல்லாதது என் தவறுதான் இன்றிரவே பஸ்சைப் பிடித்து ஊருக்குப் போய் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி கலியாணத்தை நிறுத்துவது மட்டுமில்லை வேலையிடதிலேயே  நர்ஸ் யமுனாவை காதலிக்கும் விடயத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

இப்போ அவனது மேலாளரிடம் எப்படி இரண்டு நாள் லீவு  கேட்பது எப்படி என்பதுதான் பிரச்னை  யமுனாவிடம் எதாவது ஐடியா கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது வைத்தியரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது அவரின் அறைக்கதவைத் தட்டி உள்ளே புகுந்தான்.வைத்தியர் வேலவனுக்கு சிவாவை அறிமுகப் படுத்தி இவங்களுக்கு In vitro fertilization செய்யவேண்டும் அழைத்துப்போங்கள் என்று ஒரு பைலை நீட்டினார்.
சிவாவை அழைத்துப் போகும்போது. சேர் வெயர் ஆர் யு ப்ரோம்??
யாழ்ப்பாணம் இப்ப இருக்கிறது பிரான்ஸ் ...
ஒ யாழ்ப்பாண தமிழா? என்றவன் சட்டென்று சிவாவின்  காதருகே போய் "சார் தலைவர் பத்திரமா இருக்கிறார் தானே"  என்றான் .சிவாவிற்கு எரிச்சலாக வந்தது ஆனால் காட்டிக் கொள்ளாமல்  "ஓம் பத்திரமாய் இருக்கிறார் ".....வேலவன் மகிழ்ச்சியோடு எனக்குத் தெரியும் சார் அவரை ஒண்ணுமே பண்ண முடியாது என்றபடி சிவாவை ஒரு அறைக்கு அழைத்துப் போய் சிவாவிடமிருந்து உயிரணுக்களை சேகரித்தவன் சிவாவை அனுப்பிவிட்டு  அதனை கண்ணாடிக் குடுவையில் பத்திரப் படுத்தி அதிலிருந்து தரமானவற்றை பிரித்தெடுத்து இன்னொரு குடுவைக்குள் வைத்து அதனை குளிர்சாதனப்பெட்டியில் பதப் படுத்தவேண்டும்.அதற்கு முதல் அந்தக் குடுவையின் மீது சிவாவின் பெயரை ஒட்டுவதற்காக சிவகுருநாதன் என்கிற பெயரை பிரிண்ட் செய்து எடுக்கும்போது "என்னங்க  லீவு கேட்டாச்சா " என்று யமுனாவின் சத்தத்தை கேட்டு திரும்பிய வேலவன் கை பட்டு கீழே விழுந்துடைந்த குடுவையிலிருந்த சிவாவின் எதிர்காலமும் கனவுகளும் தரையில்  சிதறிப்போயிருந்தது .

ஐயையோ ....என்று தலையிலடிதவன் "ஏற்கனவே பிரச்னை உன்னாலை இப்போ அடுத்த பிரச்னை போடி வெளியே" என்று அவளை வெளியே தள்ளி அறை கதவை சாத்தியவன்  யாரும் கவனிக்காதபடி அவசர அவசரமாக கீழே உடைந்து கிடந்த குடுவையை வழித்து அள்ளி குப்பையில் போட்டு நிலத்தை சுத்தம் செய்துவிட்டு கதவைத் திறந்து பார்த்தன்.யமுனா போய் விட்டிருந்தாள்.வேகமாக ஓடிப்போய் சிவாவை தேடினான் காணவில்லை.சிவாவை திரும்ப தொடர்பு கொள்ள விபரங்கள் எதுவும் வேலவனிடம் இல்லை அவை வைத்தியரிடம் தான் உள்ளது.லீவு வேறை கேட்க வேணும் அதே நேரம் இந்த விடயத்தையும் சொன்னால் எரிந்து விழுவார் லீவு கிடைக்காமலும் போகலாம் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .இரத்த அழுத்தம் கூடி வியர்க்கத் தொடங்கியிருந்தது வெளியே போய் கொஞ்சம் ஆறுதலாக யோசிக்கலமென வைத்தியசாலைக்கு எதிரே இருந்த டீ கடைக்கு வந்து ஒரு டீ சொல்லிவிட்டு அவசரமாக சட்டைப்பயிளிருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தபோது ...

ஐயா முகத்தில அவசரம் தெரியிது ஜக்கம்மா ..
சாமி முகத்தில சலனம் தெரியிது ஜக்கம்மா ..
சோலி தீர சோழி பாத்து ...
 நாவில வந்து ..
ஒரு நல் வாக்கு சொல்லு யக்கம்மா..

என்று உடுக்கை அடித்தபடி வேலவன் முன் வந்து நின்றான் குடுளுடுப்பைக் காரன்.இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவன் வேறை என்று நினைத்தபடி டீ  யை வாங்கி உறுஞ்சியவன்   ச்சே ..அந்தாண்டை போ என்று அவனை விரட்டி விட அவன் இன்னொருவர் முன்னால் போய் நின்று அதே ராகத்தோடு குடு குடுப்பையை அடிதுக்கொண்டேயிருந்தன்.வேலவனுக்கு அவனை நீண்ட காலமாக தெரியும் வைத்திய சாலைக்கு முன்னலேய சுத்திக்கொண்டிருப்பன்.அவனிடம் இதுவரை குறி கேட்டதில்லை அவ்வப்போது டீ வாங்கிக் கொடுத்திருக்கிறான்.சட்டென்று எதோ தோன்றவே குடுகுடுப்பைக் காரனை ஓரமாக அழைத்துப் போனவன் அவனிடம் ..நல்ல காலம் எனக்கு மட்டுமில்லை உனக்கும்தான் பிறக்குது என்று சொல்லியபடி  சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாவை எடுத்து  அவனது கையில் திணித்து விட்டு காதில் இரகசியமாக எதோ சொல்ல கொஞ்ச நேரம் யோசித்த குடுகுடுப்பைக் காரன்  "சாமி பிரச்னை ஒண்டும் வரதுதனே "என்றான் .ஒரு பிரச்சனையும் வராது என்னை நம்பு என்றவன் சீக்கிரமா வா ...அவசரப்படுதினான்.

தனது குடியிருப்புக்கு போன குடுகுடுப்பைக் காரன்  ஆயிரம் ரூபாயை மனைவியின் கையில் குடுத்ததும் என்னங்க யாரு குடுத்தது என்றாள்.  பிள்ளைகளை காட்டி.. இதுகளை மாதிரியே சாமி குடுத்தது.
இதுகளை சாமி குடுத்து ஆனா பணம் எப்பிடி சாமி குடுக்கும் திருடினியா..?

 ச்சே ..கழுதை  நான் திருடுவனா.. சினந்தான்
சாமி மேலை சத்தியம் பண்ணு
ஜக்கம்மா மேலை சத்தியம் நான் திருடல
அப்ப எப்பிடி இவ்ளோ பணம் ?

அவளிடம் விடயத்தை சொன்னான் .அவளோ கொஞ்சம் பொறாமையோடு.. சரி இதுதான் கடைசி வாட்டி இனிமேல் இப்பிடி பண்ணாதை என்றதும்  தனது பை ,குடுகுடுப்பை ,தலைப்பாகை எல்லாம் வைத்து விட்டு தயங்கியபடியே வேலவன் சொன்னதுபோல வைத்திய சாலையின் கார் நிறுத்தும் பகுதிக்கு போனதும் அங்கு வைத்திய சாலை ஊழியர்கள் போடும்  வெள்ளை  நீளச் சட்டையோடு  தயாராய் நின்றிருந்த வேலவன் அவனுக்கு அதை அணிவித்து அவசரமாக தனது அறைக்குள் அழைத்துப் போனவன் வேகமாக இயங்கினான் .சிறிது நேரத்தில் அவனை மீண்டும் கார் நிறுத்துமிடத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு பரிசோதனை கூடத்தில் நுழைந்து உயிரணுக்கள் நிறைந்திருந்த குடுவையின் மீது சிவகுருநாதன் என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி குளிர்ப் பெட்டியில் பதப்படுத்தி விட்டு கதிரையில் தொப்பென இருந்து பெரு மூச்சை இழுத்து விட்டவன் ."அப்படா எப்பிடி யாவது லீவு கேட்டிட்டு ஊருக்கு ஓடிடணும் " நினைக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது .திறந்தான் எதிரே யமுனா .."உனக்காக நானே லீவு கேட்டு வாங்கிட்டன்" என்று  சிரித்தாள் ..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
குடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண்.. லோயர் தயார் செய்து கொண்டு வந்த பத்திரங்கள் மீது கையெழுத்துப் போட்டதும் எங்களை அழைத்துப் போன ஆட்டோக் காரனும் அதில் கையெழுத்துப் போடும்போதுதான் அவன் அந்தப் பெண்ணின் கணவன் என்று எனக்கு தெரிய வந்தது.கையெழுத்துப் போட்டு முடித்ததும்.. "இந்தா பாருங்கப்பா எல்லாம் முடியிற வரைக்கும்  இடையில எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது  இப்போ பாதி குடுத்திடுவம்  எல்லாம் நல்லபடியா  முடிஞ்சதும் மீதி" .என்று லோயர் கொஞ்சம்  கடுமையாகவே சொன்னதும் .இல்லீங்க எங்க பையனை பெரிய ஸ்கூல்லை சேர்க்கத்தானுங்க  இதுக்கு ஒத்துக்கிட்டம் ஒரு பிரச்சனையும் வராது என்று ஆட்டோக் காரன்  பவ்வியமாக சொன்னான் .லோயர் கண்ணசைத்ததும் நான் தயாராய் கொண்டு போயிருந்த பணத்தை அந்தப் பெண்ணிடம் நீட்ட  கொஞ்சம் இருங்க சார் என்றபடி லோயர் நான் பணம் கொடுப்பதை தனது கைத் தொலை பேசியில் படம் எடுத்துக்கொண்டார் .
லோயர் எண்டால் இவனை மாதிரி இருக்கவேணும் ஆதாரங்களை ஸ்ரங்கா ரெடி பண்ணுறன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன் .."இனிமேல் நான் தான் உங்களோட தொடர்பில இருப்பேன் நான் போன் பண்ணினதும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துடனும்"  என்று அதையும் கடுமையவே சொன்ன லோயர் வேறொரு ஆட்டோவை அழைத்தான் .எல்லாமே  ஒரு ஜேம்ஸ் போண்ட்  பட பணியில் ஆனால் பெரிய அளவில் இல்லாமல் சின்னதாய் லோக்கல் அளவில் நடந்து முடிந்திருந்தது.ஆட்டோவில்எங்கள் இடம் நோக்கி லோயரோடு போய் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது  ஏம்பா  நான் அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்கும் போது போட்டோ எடுத்தியே அதை வைச்சு நீ எதாவது புதிசாய் கேஸ் கிரியேட் பண்ண மாட்டியே என்றதும் .."ஐயோ சார் உங்களுக்கு அப்பிடி பண்ணுவனா"   என்று குழைந்தான்..
......................................................................................................................................................
இப்போ சிவாவுக்கு நான் போட்டுக் குடுத்த திட்டம் வாடகைத்தாய் திட்டம் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.ஆனால் அவனும் சாதாரண ஒரு தமிழ் சூழல்  மனப்பான்மையோடு  சீட்டு ,வட்டி,வெள்ளிக்கிழமை விரதம் ,சனிக்கிழமை பங்காட்டு இறைச்சி ,ஞாயிறு யாருடயதவது கலியாணம் அல்லது சாமத்தியம், போலி கௌரவம்,பந்தா , ஒன்பது சீட் மேர்சிடெஸ் வான் . என்று அதே சூழலில் ஒன்றிப்போய்வாழ்பவன் என்பதால் சமூகத்துக்கு பயந்து  தனக்கு கௌரவப் பிரச்னை எனவே பரிசோதனை குழாய் மூலம் குழந்தை தனது மனைவிக்கே பிறந்ததாய் இருக்கட்டும் பிள்ளை கிடைக்கும் வரை வரை சுபாவை தமிழ் நாட்டிலேயே தங்க வைக்கப் போகிறேன்   வாடகை தாய் பற்றிய விடயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தான் .நானும் இங்கு எழுதும்வரை யாரிடமும் சொல்லவேயில்லை என்பது சத்தியம் .நானும் அவனுக்கான எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டு பிரான்ஸ் திரும்பி விட்டிருந்தேன்.அதன் பிறகு அடிக்கடி இந்தியா போய் வந்து கொண்டிருந்தவன் மனைவி பிள்ளையோடு பிரான்ஸ் வந்ததும் போனடித்தவன் மகனுக்கு நீயூமாலயி  முறைப்படி A ..  R  அல்லது A .V வருகிற மாதிரி ஒரு பெயர் சொல்லடா என்று  கேட்டான் ..

இதுக்கும் நான்தான் கிடைச்சனா என்றபடி A  .R  .ரகுமான் எண்டன் அது முஸ்லிம் பெயர் வேறை சொல்லு எண்டான்.   யோசித்து விட்டு அடுத்தது...  Aரை ..Vந்தன் . அரை ..விந்தன் ..அப்பிடியே ஸ்ரைலாய் சுருக்கினால் அரவிந்த்...அவனிடம் சொன்னதும் அதையே மகனுக்கு பெயராய் வைத்து விட்டான் .இப்போ மகனின் முதலாவது பிறந்தநாள் அதற்குதான் வந்திருக்கிறேன். பாரிஸ் நகரம் லேசாய் இருள் கவ்வத் தொடங்கியிருந்தது குளிர் அதிகம் இல்லை  .பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் நகரை வளைத்துப் பாயும் செய்ன் நதியில் ஈபிள் கோபுரத்துக்கு அருகில் ஒரு உல்லாசப் படகை முழுவதுமாய் வாடகைக்கு எடுத்திருந்தான்.அவன் முதலில் ஆற்றங் கரையில் உள்ள படகுக்கு வா ..என்றதும் இவன் எதுக்கு வள்ளத்திலை பிறந்தநாளை கொண்டாடுகிறான் என்று நினைத்தபடி அங்குள்ள சிறிய வள்ளங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு கடையாக அவனுக்கு போனடித்து விபரம் அறிந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த பிரமாண்டமான உல்லாசப் படகை தேடிப் பிடித்ததும் எனக்கு ஆச்சரியம்.

உள்ளே நுழைந்தது சரியான இடத்துக்குத்தான்  வந்திருக்கிறனா என சுற்றிவர நோட்டம் பார்த்தேன்.அங்கு பெரும்பாலும்  முன்நூறுக்கும் தமிழர்கள் கையில் கோப்பைகளோடு தின்பண்டங்களை கொறித்தபடி குழுக்களாக கதைத்தபடி நின்றிருந்தார்கள்.நண்பனை தேடினேன் என்னைக் கண்டவன் ஓடிவந்து அப்படியே இறுக்கி கட்டிப் பிடித்து வரவேற்றவன்  என்னடா இவ்வளவு லேர்றாய் வாராய் உன்னைத்தான் பாத்துக்கொண்டு நிக்கிறன் எண்டவன் கையைப் பிடித்து இழுத்துப் போனான் .அவன் ஓடி வந்து கட்டி அணைக்கும் போது நான் வாங்கிப்போன பரிசுப் பொருள் அவனது அன்பில் நசுங்கி உடைந்துவிடாமல் அதை பாது காக்க கையை தலைக்குமேலே  உயர்த்திப் பிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .நானும் பரிசு வாங்கி வந்திருக்கிறேன் என்று எல்லாருக்கும் காட்டியது மாதிரி எல்லாரும் நினைதிருப்பான்களோ ..??வெட்கமாகவும் இருந்தது .இதுவரை காலமும் எல்லாருக்கும் குடுத்த மொய் பணத்தையும் ஒரே தடவையில் வசூலித்துவிட நண்பன் நினைத்திருக்கிறான் என்பது அங்கு நின்றிருந்த சனத்தொகையில் தெரித்தது ..

என்னை இழுத்துப்போன நண்பன் சுபாவின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான்.என்னைக் கண்டதும் கண்கள் லேசாய் பனிக்க  எல்லாத்துக்கும் நன்றி அண்ணை என்றபடி கையிலிருந்த குழந்தையை என்னிடம் தரவும் நான் கொண்டு போன பரிசுப் பொருளை நண்பனிடம் கொடுத்து விட்டு குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டு திரும்ப சுபாவிடம் கொடுத்து நண்பன் கையில் இருந்த பரிசுப் பொருளை வாங்கிப் பிரித்து குழந்தையின் கையில் கொடுக்கவும் சிவா அவசரமாக விலையுயர்த்த சம்பெயின் ஒன்றை சத்தமாக உடைத்தவன் அதன் நுரை சீறிப்பாய இரண்டு கிளாசில் ஊற்றியவன் ஒன்றை என்கையில் தந்து மற்றயதை தனது கையில் உயர்த்தி எனது கிளாசோடு முட்டியவன்  மச்சான் உண்மையிலேயே இண்டைக்கு நான் நல்ல சந்தோசமாய் இருக்கிறன் அதுக்கு காரணம் நீ தண்டா  வாழ்க்கையில மறக்க மாட்டன் என்றான் .அவனது நாக்கு தளதளத்தது ..டேய்  இதுக்கெல்லாம் உணர்ச்சி வசப் படாதை வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான் ..உனக்கொரு நல்ல காலம் பிறக்கும் எண்டு நான் சொன்னான் தானே  அது மாதிரியே நல்லா காலம் பிறந்திருக்கு  என்று  அவனது தோளில் தட்டி ஆறுதல்படுத்தி விட்டு சுபாவை திரும்பிப் பார்த்தேன் நான்  கொடுத்த கிலு கிலுப்பையை கையில் வைத்து கிலுக்கியபடி குழந்தை சிரித்துக் கொண்டிருக்க சுபா அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் .

ஜெய்   ஜக்கம்மா .......நல்லா காலம் பிறக்குது ...


புத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி

1:31 AM, Posted by sathiri, No Comment


புத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி
கேள்விகள் - புலிகள் மீதான விமர்சனத்துக்காக ஆயுத எழுத்து நாவல எழுதினீர்களா? அல்லது அது உங்கள் சுயசரிதையா? அல்லது ஈழப்போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை உங்கள் நாவலில் பேச வைத்திருக்கிறீர்களா?
ஆயுத எழுத்து நாவலானது புலிகள் மீதான விமர்சனமோ சுயசரிதையோ அல்ல.முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் நான் நேரில் சந்தித்த, சம்பத்தப்பட்ட சில சம்பவங்களை பதிவு செய்திருக்கிறேன்.அதில் இதுவரை அறியப்படாத அல்லது செய்திகளாக அறியப்படிருந்த பல சம்பவங்களை விரிவாக பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவுதான் . நான் யாரையும் சரி பிழை பார்க்கவோ சம்பவங்களுக்கான தீர்ப்புக் கூறவோ முயற்சி செய்யவில்லை படிப்பவர்களே அதை செய்துகொள்வார்கள் .
02. ஆயுத எழுத்து நாவலை வாசிப்பதற்கான ஆர்வம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் அதன் விற்பனையோ தலைமறைவில் - இரகசிய நடவடிக்கை போல உள்ளதே. இதற்கு என்ன காரணம்?
மேலே சொன்னதுபோல பலர் விடுதலைப் புலிகள் பற்றி செய்திகளாக அறியப்பட்ட சில சம்பவங்களை நான் விரிவாக எழுதியிருப்பதால் விடுதலைப்புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தக் கூடாது என்று தங்களை தீவிர விடுதலைப்புலி விசுவாசிகளாக கட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் இந்த நாவல் வெளிவருவதை விரும்பவில்லை.நாவல் வெளிவருவதை ,வெளியீட்டை ,அதன் விற்பனையை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனப் பட்டனர்.இவர்களது எதிர்ப்பு எனக்கு எதிர்மறையான விளம்பரத்தை கொடுத்து விட்டது பலருக்கும் இதனை படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டது .எனவே நாவல் வெளிவந்து சிறப்பாக வெளியீடும் நடந்துமுடிந்து நான் பதிப்பித்த ஆயிரம் புத்தகங்களும் இரண்டு மாதத்திலேயே விற்றுத் தீரும் நிலைக்கு வந்துவிட்டது .விரைவிலேயே இரண்டாவது பதிப்பு போடும் வேலையில் இறங்கிவிட்டேன் .
03. இந்த நாவல் வெளியான பின் தமிழ்ச் சூழலில் நீங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் அனுபவங்களும் என்ன?
தமிழ் சுழலில் நான் நெருக்கடிகளை எதிர் கொள்வது ஒன்றும் இது முதல்தடவையல்ல நிறைய அனுபவங்கள் உள்ளது.அதில் பெரிய நெருக்கடி எதுவெனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மே மாதம் 21 திகதி 2009 ஆண்டு வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா ..என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர்கள் புலிகளின் தலைமையிடம் ஆயுதம் வருகிறது காப்பாற்ற அமேரிக்கா வருகிறது என்று நம்பவைத்து கழுத்தறுத்தது மட்டுமல்லாமல் இறுதி யுத்தம்... இதோ தமிழீழம்.. என்று சொல்லி சேர்த்த பலமில்லியன் பணத்தையும் சுருட்டியதோடு பிரபாகனின் மரணத்தை கூட பகிரங்கமாக அறிவித்து ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லைஎன்று சாடியிருந்ததோடு பிரபாகரனுக்கு அஞ்சலியும் செலுத்தியிருந்தேன் .அந்தசமயத்தில்தான் கொலை மிரட்டல்கள், வசவுகள் ,அவதூறுகள் என்று பெரும் நெருக்கடியை நானும் எனது குடும்பமும் சந்தித்திருந்தோம்.பின்னர் இன்றுவரை அதுபோன்ற நெருக்கடிகள் தொடரத்தான் செய்கிறது இப்போவெல்லாம் எனக்கு அவை பழகிப்போய் விட்டது.அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்றொரு பழமொழி உண்டு நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
4. இந்த நாவலை இப்படி எழுத வேணும் என்று ஏன் எண்ணித்துணிந்தீர்கள்?
உண்மையில் நான் இதனை நாவலாக எழுதவில்லை.சம்பவவங்களின் தொகுப்பாக அதில் சம்பதப்பட்டவர்கள். அதன் காலம் திகதி என்று ஒரு ஆவணமாகத்தான் முதலில் 800 பக்கத்தில் எழுதியிருந்தேன்.எழுதியவற்றை சில நண்பகளிடம் காட்டி ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய பலரும் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.உண்மைகள் பேசப்படத்தான் வேண்டும் ஆனால் அவை எமது எதிர்தரப்புகளுக்கு சாதகமாகி விடக்கூடாது இவற்றில் கவனமாக இரு என்று சொல்லிவிட்டார்கள் .எனவே ஆவணத்தை நாவல் வடிவில் மாற்றும் வேலையை செய்தேன் இது ஒரு நாவல் எழுதுவதை விட கடினமாக இருந்தது.சர்சைக்குரிய விடயங்கள் என கருதப்பட்ட பல விடயங்கள் நீக்கப் பட்டு நான் எழுதியதில் பாதியளவு 391 பக்க நாவலாக மாறியது.இதற்கு யோ .கர்ணனும் பெரிதும் உதவியிருந்தார்.இதில் நீக்கப் பட்ட பகுதிகள் இன்னமும் சொல்லப்படாத விடயங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னொரு நாவலாக வெளிவரும் .
5. புலிகள் அமைப்பில் இருந்தவர்களே அந்த அமைப்பை அதிகமாக விமர்சித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. நீங்கள், ஷோபாசக்தி, குணா. கவியழகன், யோ. கர்ணன், நிலாந்தன், தமிழ்க்கவி என ஒரு பட்டியல் இருக்கிறது. இது ஏன்? இந்த மாற்றம் எப்படி எற்பட்டது?
இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றைய நண்பர்கள் புலிகள் அமைப்பை விமர்சிப்பது பற்றி அவர்கள் மாற்றம் பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது.ஆனால் நான் புலிகள் அமைப்பை விமர்சிப்பதில்லை.இல்லாத ஒரு அமைப்பை விமர்சிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. புலிகள் அமைப்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்.அதனை படிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் .
6. ஆயுத எழுத்தின் இரண்டாம் பாகம் வருமா?
நிச்சயமாக ..அதற்கான காலம் வரும்போது ..
7. சாத்திரி சர்ச்சையைக் கிளப்பும் ஆள் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அத்துடன் அவர் இந்திய உளவுசார் அமைப்புகளுடன் தொடர்புள்ளவர். போராட்டத்தை தேவையற்ற விதமாக விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுககு உங்கள் பதில் என்ன?
நான் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை உண்மையை எழுதுவது பலருக்கு விரும்பப்படாத சர்ச்சையாக உள்ளது .மற்றும்படி இந்திய உளவுசார் அமைப்போடு தொடர்புள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு எனது பதில் என்னவெனில் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அது தனது தேவைக்காக எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புகளை கொண்டிருந்ததோ அவர்கள் ஊ டாக அந்த அமைப்புகள் அனைத்தோடும் எனக்கு தொடர்புகள் இருக்கிறது .புலிகளுக்கு இந்தியாவில் முதலில் ஆயுதப் பயிற்ச்சியை வழங்கி ஆயுதம் கொடுத்தும் சில தாக்குதல்களை நடத்த ஆலோசனை வழங்கியதும் இந்திய உளவுப்பிரிவுதான் என்பதை பலர் சாவகாசமாக ஏனோ மறந்து விடுகிறார்கள். மற்றும்படி ஆதாரமற்ற எழுந்தமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயமாக கருதுகிறேன்
8. ஆயுத எழுத்து உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன? அது தந்த வெற்றிகள் என்ன?
ஆயுத எழுத்து எனக்கு பாதிப்பு வெற்றி என்பதுக்கப்பால் மன திருப்தி .
9. ஆயுத எழுத்து நாவலில் சில விடயங்கள் தவறாகச் சொல்லப்படுகின்றன என்று நாவலில் குறிப்பிடப்படும் சம்பவங்களோடு தொடர்பானவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக சிறிசபாரட்ணத்தை முதலில் கண்டவர், வளலாயில் உள்ள ஈ.பி.ஆர்.எல். எவ் முகாம் தாக்குதல் பற்றிய விவரம். பிரான்ஸில் கொல்லப்பட்ட நாதன், கஜன் ஆகியோரின் கொலைக்கும் புலிகளின் தலைக்கும் தொடர்பில்லை என்ற விடயங்கள். இது பற்றிய உ்ங்கள் பதில் என்ன?
ஒரு நாவலில்.ஒரு செய்தியில் அல்லது ஒரு கட்டுரையில் வரும் விடயத்தை இப்போதெல்லாம் பலர் தவறு என்று சொல்லவரும்போது ஒற்றை வரியில் இதெல்லாம் பொய் .அப்படி நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் மறுப்பதுதான் பரவலாக நடக்கிறது.ஒரு விடயத்தை பொய் என்று மறுப்பவருக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும் அவர் அந்த உண்மையை ஆதாரத்தோடு கூறி நான் சொல்வது பொய் என்று இதுவரை யாரும் நிருபிக்கவில்லை .அடுத்ததாக புலிகள் அமைப்பின் வெற்றிகளுக்கு எல்லாம் தலைவரின் நேரடி வழிகாட்டுதல் என்று புகழ்த்து கொண்டும் அவர்களால் நடத்தப்பட்ட தவறான சம்பவங்கள் அனைத்துக்கும் தலைவருக்கும் தொடர்பில்லை என்று சப்பைக் கட்டு கட்டும் ஒரு கூட்டம் வெளி நாடுகளில் உள்ளனர்.ராஜீவ் காந்தி .பத்மநாபா .அமிர்தலிங்கம் தொடக்கி நாதன் கஜன் கொலை வரை தலைவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் புலிகள் இயக்கத்தை இயக்கியது யார் ?? தலைவர் யார் ??அப்படி சொல்பவர்கள் பிரபாகரன் ஒரு ஆழுமையற்ற தலைவர் என்று சொல்கிறார்கள் என்பது தான் அர்த்தம் .
10. வரலாற்றுச் சம்பவங்களை படைப்பாக்கும் போது - புனைவாக்கும்போது படைப்பாளிக்கு எற்படும் சவால்கள் என்ன? படைப்பாளி எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு என்ன?
வரலாற்று சம்பவங்களை படைப்பக்கும்போது அந்தச் சம்பவங்களோடு சம்பத்தப் பட்ட நபர்கள் உயிரோடிருப்பின் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது .அடுத்தது எமது படைப்பானது எங்கள் பொது எதிரிக்கு வாய்ப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது எல்லாவற்றையும் விட முக்கியமானது படைப்பில் வரும் சம்பவங்கள் அனுபவங்களாக நன்கு அறிந்தோ அல்லது அதுபற்றி சரியான தகவல்களை திரட்டிய பின்னர் எழுதப்பட வேண்டும் .ஏனெனில் படைப்பில் ஒரு தவறான தகவல் சேர்க்கப்பட்டிருபின் ஒட்டு மொத்த படைப்பே தவறானது என நிராகரிக்கப் பட்டுவிடும் அபாயம் உள்ளது

ஆயுத எழுத்து .லண்டன் .நூல் விமர்சனம் சாம் பிரதீபன்

2:48 PM, Posted by sathiri, No Comment


ஆயுத எழுத்து கனடா .ஒலி ஒளிப்பதிவு

2:38 PM, Posted by sathiri, No Comment

ஆயுத எழுத்து கனடா .ஒலி ஒளிப்பதிவு


அருளினியனின் பதிவு

12:42 PM, Posted by sathiri, No Comment


 Photo du profil de Aruliniyan Mahalingam
அருளினியனின் பதிவு

 Aruliniyan Mahalingam 

சாத்திரி எழுதிய 'ஆயுத எழுத்து' நாவலின் இறுதி எடிட்டிங்கை நான் செய்தேன். எடிட்டிங் செய்த அந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மன உளைச்சலுக்கு உள்ளானேன். சாத்திரி எழுத்திலே வடித்தவை காட்சி விம்பங்களாகி என்னை மிகவும் தொந்தரவு செய்தன. ஈழப் போராட்டம் சம்பந்தமாக நான் புரிந்து வைத்திருந்த பலவற்றை 'ஆயுத எழுத்து' கேள்வி கேட்டது. ஆயுத எழுத்தைப் பற்றி பொதுவெளியில் இது வரை ஒரு வரி கூட எழுதவில்லை. எழுதவும் தோணவில்லை. ஆனால், 'ஆயுத எழுத்து' சம்பந்தமாக எனது பதிவு அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன். நான் பிறந்த காலப்பகுதியில் ஈழப் போர் உச்சத்தில் இருந்தது.

 நான் பிறந்திருந்த முதல் வாரத்தில், எமது குடும்பத்தையே இந்தியன் ஆமிக்காரன் கொல்ல வந்ததாகவும், பச்சைக் குழந்தையாக இருந்த என்னைக் காட்டி எனது அம்மாச்சி அவர்களிடம் உயிர்பிச்சை கேட்டதாகவும் சொல்வார்கள். எனது 20 வது வயது வரை ஈழப்போரானது எனது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. எனக்குத் தெரிந்து விடுதலைப் புலிகள் என்ற ஒரே ஒரு அமைப்பு மட்டும்தான் தனி நாட்டிற்காகப் போராடினார்கள். ஒரே தலைவர் அவர் பிரபாகரன். அவர் எங்களின் மீட்புனர். ஒரே விடுதலை இயக்கம் அவர்கள்தான் விடுதலைப் புலிகள். 'புக்காரா' குண்டுவீச்சுக் கிடையிலும், கடுமையான 'ஷெல்'அடிக்கிடையிலும் பிறந்து வளர்ந்ததால், எனது ஈழ வாழ்க்கையை, ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி, கொஞ்சம் பயத்துடனும், கொஞ்சம் நம்பிக்கையீனத்துடனும்தான் என்னால் நினைவு கூற முடியும்.

 ஈழப் போராட்டம் சம்பந்தமாக என்னளவில் பல நம்பிக்கைகள் இருந்தன. ஆயுத எழுத்து நாவல் என்னளவிலும் முக்கியமானது. ஏனென்றால் ஈழப் போராட்டம் சம்பந்தமான எனது பல நம்பிக்கைகளை இந்த நாவல் உடைத்தெறிந்தது. ஆயுத எழுத்தைப் பற்றி சொல்வதற்கு முதல் சாத்திரியைப் பற்றி சொல்வது அவசியம். சாத்திரியார் எனக்கு அறிமுகமாகி சுமார் இரண்டு வருடங்கள் இருக்கலாம். நான் அவருக்கு முதன் முறையாக தொலைபேசிய போது தி.நகரில் இருந்தார் 'தம்பி, மனிசியோட புடவை எடுக்க வந்தனான்' 'எப்ப கோடம்பாக்கம் வருவியள் அண்ண' 'போற போக்கைப் பாத்தால் ரெண்டு நாள் ஆகும் போல' என்றார். அன்றே தி.நகர் சென்று அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை சிலருக்குப் பிடித்து விடும். இல்லையா...? சாத்திரிக்கு என்னையும், என்னை சாத்திரிக்கும் பரஸ்பரம் பிடித்துவிட்டது. இன்றும் கூட ஒரு அண்ணன் ஸ்தானத்தில் வைத்து அவரை நான் மதிக்கிறேன். சந்தித்த முதல் நாளே, ஒரு விஸ்கியுடன் தனது வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தார். போராட்டத்தில் சேர்ந்தது, மாற்று இயக்கங்களைப் போட வேண்டி வந்தது, நண்பனுக்கெதிராக துப்பாக்கியை தூக்கிய நொடி, ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், பெண் சகவாசம், என எல்லாவற்றையும் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். குரலின் எந்த நொடியிலும் ஒரு துளி குற்ற உணர்ச்சியையும் நான் காணவில்லை. கொலைகளை அவர் விபரித்தவிதம் ஏதோ பெரிய சகாசக்காரன் தனது சகாசத்தை விபரிப்பதுபோல இருந்தது.

 இவர் மனிதனா...? என எண்ணிக் கொண்டிருந்தேன். தனது மகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். கண் கலங்கினார், போதை பெரிதும் ஏறாமலேயே அழுதார். 'எளியவனா இருந்தேன் தம்பி. ரத்தமும் சதையுமா மகளைக் கையில தந்த நொடிதான் மனிதனாக மாறினேன்' என்றார். அது சம்பந்தமாக பல கதைகள் சொன்னார். அவற்றை இங்கே எழுதக் கூடாது. நம்பிக்கை சம்பந்தப்பட்டவை. சாதாரண மனிதத் தன்மையுட சாத்திரி போன்றவர்களை, போராட்டம் எந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது என உணர்ந்த நொடி அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் சாத்திரியை எடுத்த பேட்டிகள் 'சாத்திரி பேசுகிறேன்' என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் பதிவாகி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

வழமைபோல சில நண்பர்கள் என்னைத் துரோகி என்றார்கள். சிலர் தொலை பேசியிலும் மிரட்டினார்கள். அந்த பேட்டியில் சாத்திரி எவ்வளவு தூரம் மனம் திறந்து பேசியிருந்தாரோ, அதே அளவு இந்த நாவலிலும் பேசி இருக்கிறார். 'ஆயுத எழுத்'தை நாவல் என சொல்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. சம்பவங்களின் தொகுப்பை நாவல் எனலாம் என்றால் இதுவும் ஒரு நாவல். எப்படி இருந்தாலும் ஆயுத எழுத்து மிகவும் முக்கியமான ஒரு ஆவணம். பேரினவாதத்திற்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சியுடன் ஆயுதம் எடுத்த ஒரு சாதாரண 'மாணவ'னின் வாழ்க்கை எப்படி அலைக்கழிக்கப்பட்டது என்பதற்கு இந்த நாவல் சாட்சியமாகிறது. விடுதலை என்ற பெயரில் கொலைகளை, மனித உரிமை மீறல்களை, போர்க் குற்றங்களை எல்லாம் எப்படி நாம் இலகுவாக நியாயப் படுத்தினோம் என்பதை இந்த நாவல் பேசுகிறது. வாசிப்பவனைக் பல கேள்விகள் கேட்க வைக்கிறது.

 நாவலில் எனக்குத் தென்பட்ட ஒரு சில குறைகள், சாத்திரியார் எனக்கு எப்படி தனது வாழக்கையை சொன்னாரோ அதேபோல ஒரு சகாசக் காரனின் மன நிலையில் தான் பல அத்தியாயங்களைக் கடந்து போகிறார். இப்படியான மொழி நடை சிலவேளைகளில் வாசிப்பவனின் மனதில் நாவலின் உண்மைத் தன்மை சம்பந்தமாக சந்தேகத்தை ஏற்படுத்தும். காமம் சம்பந்தமாக சாத்திரி விபரிக்கும் பகுதிகளில் அவரின் மொழியில் அவதானம் தேவை என்பது எனது கருத்து. இன்னொரு மனக்குறையும் வந்து போனது, சாத்திரி தனது வாழ்க்கை அனுபவங்களாக 'ஆயுத எழுத்'தில் விபரித்தவற்றை வைத்து குறைந்தது பத்து நாவல்களாவது எழுதி இருக்கலாம். ஷோபா சக்தியாக இருந்திருந்தால் குறைந்தது ஆயிரம் சிறு கதையாவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். எது எப்படியோ, ஈழப்போராட்டத்தைக் கவனிக்கும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நாவல் 'ஆயுத எழுத்து' என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து

7:27 AM, Posted by sathiri, No Comment

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து:
இரு நூல்கள் ஒரு அறிமுகம்
kumaran1ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் இருவரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஒரு நூல் போராளி ஒருவரின் நினைவுக்குறிப்புகள். மற்ற நூல் “சிப்பாய் ஒருவரின்” நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நாவல்(?). இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.
sathiri2சாத்திரி என்ற கௌரிபால் சிறி எழுதிய ஆயுத எழுத்து நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் ரொரன்டோவில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார்கள். மதிய உணவு நேரம் யாராவாது கூட்டத்தை ஆரம்பிப்பார்களா என்ற எரிச்சல் மனதில் இருந்தாலும் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் 2 மணிக்குச் செல்வது எனத் தீர்மானித்தேன். இந்த நேரத்திற்கு செல்வதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் செய்து உடன்பாடு காணவேண்டி இருந்தது. ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அப்படி. வழமையாக எந்த நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக வேண்டும் என நினைப்பதுடன் நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கவும் வேண்டும் என விரும்புபவன். ஆனால் நிகழ்வுகளை நடாத்துகின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. இதனால் நமக்குள் பிர்ச்சனை உருவாகும். ஆகவே ஒரளவு மதிப்பிட்டு அரை மணித்தியாலம் தாமதமாக சென்றாலும் நிகழ்வு ஆரம்பிக்காது. இது எனக்கு மேலும் பிரச்சனையை உருவாக்கும். மேலும் யார் எந்த நிகழ்வு நடத்தினாலும் சமூக அரசியல் விடயங்கள் சார்ந்தது எனின் எனக்கு ஆர்வமானது எனின் நிச்சயமாக செல்வேன். யார் ஒழுங்கு செய்கின்றார்கள் எனப் பார்த்து முடிவெடுப்பதல்ல எனது தெரிவு. ஆனால் இங்கு பலர் அப்படித்தான் செய்கின்றார்கள். இதனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட நிகழ்வை ஒழுங்கு செய்பவர்களின் நண்பர்களில் சிலர் மட்டுமே வருகின்றனர். ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளவையா என்ற கேள்வியும் உள்ளது.
sathiri1ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்வு இவ்வாறான அசாதாரணமான நேரத்திற்கு அறிவித்தது மட்டுமல்ல இடமும் வழமைக்கு மாறாக புதியதொரு இடம். அதுவும் இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. விலாசம் இல்லை. இது கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. இப்படி பல காரணங்களால் நிகழ்வு இரண்டரை மூன்று மணியளில் ஆரம்பமானது. இந்த நிகழ்வை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்திருந்தது.
தர்சன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கி சிறப்பானதொரு விமர்சன உரையை நிகழ்த்தினார். இந்த நூல் ஒரு போராளியின் படைப்பு அல்ல எனவும் மாறாக ஒரு சிப்பாயின் நினைவுக்குறிப்புகள் என இவர் குறிப்பிட்டார். ஏனெனில் ஒரு போராளிக்கு சமூக உணர்வும் பொறுப்பும் இருக்கும். தனக்கு என்ற ஒரு சுய சிந்தனை மதிப்பீடு இருக்கும். இந்த அடிப்படைகளிலையே தனது தலைமையுடன் இணைந்து பங்களிப்பார். ஆனால் ஒரு சிப்பாய்க்கு இவை எதுவும் இருக்காது. மேலிடம் என்ன சொல்கின்றதோ அதை எந்தக் கேள்விகளும் இல்லாமல் பின்பற்றுவதும் நிறைவேற்றுவதுமாகும். அவ்வாறான ஒரு பாத்திரமே ஆயுத எழுத்தில் வருகின்ற அவன் என்கின்ற பாத்திரம். மேலும் ஹொலிவூட் ரக சாகாச கதாநாயகன் போன்ற ஒருவராகவே இப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூல் ஒருவகையில் முக்கியமானது. அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்க மேல் மற்றும் மத்திய வர்க்க மற்றும் சாதிகளின் கருத்துக்களே ஈழவிடுதலைப் போராட்டத்திலும் மேலோங்கி இருந்தன என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது என்றார். (இந்த உரையை விரைவில் தர்சன் அவர்கள் பொதுத் தளம் ஒன்றில் பகிர்வார் என நம்புகின்றேன்).
raviமுன்னால் வைகறை ஆசிரியர் ரவி அவர்கள் தனது அனுபவங்கள் மற்றும் தான் அறிந்த தனக்குத் தெரிந்த தகவல்களுடன் எவ்வாறு இந்த நூல் முரண்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டார். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் மீதான தாக்குதல் கற்பனை கதையாக கட்டப்பட்டிருக்கின்றது. புலிகளே திட்டமிட்டு ஈபி முகாம்களின் மீது இறுதித் தாக்குதலை தொடுத்தனர். இத் தாக்குதல் நடப்பதற்கு முதல் இரு பகுதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இதில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் தந்தையின் தலைமையில் யாழ் பல்கலைக்கழத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்பொழுது புலிப்போராளிகளின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் நன்றாக உடைகள் அணிவித்து அன்றைய ஈபியின் மக்கள் இராணுவத்தின் தளபதி தேவானந்தா அவர்கள் கொடுத்தார். ஆனால் புலிகள் இயக்கத்தினர் அந்த உடல்களுக்கு எந்த மரியாதையும் செய்யாது அவமதித்ததுடன் பொறுப்பற்ற முறையில் கையளித்தனர் என்றார். இந்த இடத்தில் தேவானந்தா தொடர்பாக இன்னுமொரு குறிப்பையும் குறிப்பிடலாம். பொன்னுத்துரை (குமரன்) அவர்களும் புளொட் ஈபி இயக்க மோதலின் மோதும் தேவானந்தா அவர்கள் மிகவும் பண்புடனும் தோழமையுடனும் செயற்பாட்டார் எனத் தனது நூலில் குறிப்பிடுகின்றார். (இன்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்றானாலும் அக் காலத்தில் இவ்வாறான பண்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை நாம் புறக்கணிக்க கூடாது).
சாம் சிவதாசன் அவர்கள் தனக்கு இயக்க அனுபவங்கள் மற்றும் சார்புகள் இல்லை என்பதால் தனது பார்வை பொதுமக்கள் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்றார். இவ்வாறு பலரும் தம் அனுபவங்களை எழுதும் பொழுதே நாம் உண்மையான ஒரு வரலாற்றை இவற்றிலிருந்து தொகுத்துப் பெறலாம். இந்தவகையில் இந்த நூல் வரவேற்கத்தக்கது என்றார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் இவ்வாறான நூல்களின் வரவுகள் அவசியமானதும் முக்கியமானதும் என்பதில் முரண்படவில்லை. ஓவியர் ஜீவன் அவர்களை உரையாற்ற அழைத்தபோது அந்த அழைப்பை மறுத்து கலந்துரையாடலில் தனது கருத்துக்களை கூறுவதாக குறிப்பிட்டார். உரையாடலின் போது டெலி மற்றும் டெலா இயக்கங்களின் தலைவர்களை புலிகளின் தலைமை திட்டமிட்டே அழித்ததாக குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல நினைத்ததை சாதிக்க கூடியவர்களாகவும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தமை புலிகளின் தலைமைக்கு சவாலானதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார். இதனாலையே வஞ்சகமான சூழ்ச்சியூடாக அவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் இது ஒரு நாவலுக்கான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் வாசிக்கும் பொழுது எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார். ஆனால் தனித் தனிப் பதிவுகளாக வாசித்தபோது இருந்த பாதிப்பு நாவலாக்கியபோது மறைந்து போனது என்றார். அதேவேளை த.அகிலனின் மரணத்தின் வாசனை என்றை சிறுகதைத் தொகுப்பு தனக்கு ஒரு நாவல் வாசித்த உணர்வைத் தந்ததாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலர் தமது கருத்துக்களைக் கூறினர். குறிப்பு எடுக்காது நினைவிலிருந்து எழுதுவதால் பல நினைவிலிருந்து மங்கிப்போய்விட்டன. புலிகள் இயக்கத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இயக்கங்களையும் நக்கலடிக்கவும் மலினப்படுத்தவும் இந்த நூல் தவறவில்லை எனக் கூறினேன். இவர் இவர்களது நேர்மறைப் பாத்திரங்களை மறந்தும் குறிப்பிடவில்லை. மேலும் இது ஒரு நாவலே இல்லை. மாறாக ஒருவரின் அனுபவக் குறிப்புகள். இதற்கு நாவல் வடிவம் கொடுப்பதற்கு தன்னைப் பாதுகாக்கின்ற ஒன்றே காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு தன்னைப் பாதுகாப்பாதில் இருக்கின்ற அக்கறை மற்றவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இல்லாமல் இருப்பது இதிலுள்ள பல குறைகளில் ஒரு குறை. முக்கியமாக திலகர் அவர்களின் இன்றைய நிலை தொடர்பாக ஒருவரும் ஒன்றும் அறியாத நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறமல்ல. இதுபோல சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் தென் ஆபிரிக்க வைத்தியர் தொடர்பாக இலகுவில் அடையாளப்படுத்தக் கூடியவகையில் தெரிவித்திருப்பதும் அறமல்ல. இதேபோல் யோ.கர்ணன் அவர்களும் தனது நூல் ஒன்றில் எழிளனை வெளிப்படையாக அடையாளப்படுதியிருந்தார். இவர்களது வாழ்வு கேள்விக்குறியாக இருக்கின்ற இக் காலங்களில் இவ்வாறு செய்வது அறமல்ல.
சாத்திரியின் (பாத்திரத்தின்) பார்வை பெண்கள் தொடர்பாக மிகவும் மலினமான பார்வையாக உள்ளது. ஏற்கனவே நண்பர்கள் குறிப்பிட்டதுபோல ஹொலிவூட் காதாநாயகன் ஒருவன் எவ்வாறு பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பானோ பயன்படுத்துவானோ அவ்வாறே இவரும் (அல்லது இவரது கதாநாயகனும்) பார்க்கின்றார். அதுவும் அரசியல் தலைமைகளின் தவறுகளால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் உணர்ச்சிகள் மேலிட அரசிடம் சென்று பணிபுரிந்த ஈபிஆர்எல்எவின் பெண் ஒருவர் தொடர்பாக மிகவும் மோசமாகக் குறிப்பிடுவதுடன் அவரது மரணத்தில் ஆனந்தமடைவது நமது போராட்டத்தின் எதிர்மறை விளைவுகளால் ஏற்பட்ட ஒரு இழி நிலை எனலாம். அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய பேய்க் கதைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இது.
இந்த நூலில் மகிழக் கூடிய ஒரு விடயம் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான குறிப்பு. இவ்வாறான ஒரு குறிப்பை இதுவரை யாரும் தமிழில் எழுதி நான் வாசித்ததில்லை. அதுவும் புலிகளிலிருந்து வந்த ஒருவர் எழுதியது ஆச்சரியமானதே. எல்லாம் காலத்தின் மாறுதலேயல்லாமல் மன மாறுதலோ அரசியல் அடிப்படையிலான புரிதலோ அல்ல என்பது வெளிப்படை. அதனால்தான் எல்லாவற்றையும் குறிப்பிட்ட இவர் கந்தன் கருணையும் ராஜினியையும் இலகுவாக மறந்துவிட்டார். அல்லது தவிர்த்து விட்டார். மேலும் கேசாயினி இந்த நூல் தொடர்பான தனது விமர்சனக் குறிப்பில் வடக்கையும் மலையகத்தையும் இவர் மறந்துவிட்டார் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கு காரணம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இவருக்குள் இருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தான் என்றால் தவறல்ல. மேலும் இவர் முகநூலில் தான் மலையகத்திற்கும் கிழக்குப் பகுதிக்கும் பயணம் செய்யவில்லை ஆகவே எழுதவில்லை என்கின்றார். இதுவே போதும் இது ஒரு நாவலல்ல வெறும் நினைவுகளின் குறிப்பே என கூறுவதற்கு. ஏனெனில் ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவதை ஏதாவது ஒருவகையில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு பதிவு இது ஒரு படைப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகியிருக்கும். இந்த நூலின் கதாநாயகனான “அவனுக்கு” அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களுடனும் பெண்களுடனும் நடைபெறும் ஒரு சாகாசப் பயணம். அவ்வளவுதான்.
,,,,,,,,,,,,,,,………,,,,,,,,
kumaranகுமரன் என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை அவர்களின் நினைவுக் குறிப்புகளான நான் நடந்து வந்த பாதை என்ற நூலின் அறிமுகம நிகழ்வை தேடகம் அமைப்பினர் ஒழுங்கு செய்தனர். இதில் தேடகம் குமரன், பரதன் மற்றும் ரகுமான் ஜான் ஆகியோர் உரையாற்றினர். பரதன் அவர்கள் தனது கழக மற்றும் உமாவுடனான உறவு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்.
ஜான்ரகுமான் ஜான் உரையாற்றும் பொழுது நாம் ஏன் தோற்றுப்போனோம் என்ற வினாவை எழுப்பினார். ஒவ்வொருவரும் மற்றவர் முட்டாள் எனவும். தான் அனைவரையும் திறமையாக வெட்டி ஆளுகின்றேன் எனவும் நினைப்பதுண்டு. இவ்வாறு தான் மற்றவரும் நினைக்கின்றார் என்பதை ஒருத்தரும் புரிந்துகொள்வதில்லை. இது சமூகத்திலிருக்கின்ற குட்டி பூர்சுவா சிந்தனையின் வெளிப்பாடாகும். இந்த சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இது எந்தவிதமான சமூக ஆய்வுகள் மற்றும் வரலாறு தொடர்பான புரிதல்கள் எதுவும் இல்லாமலே வெளிப்படும் கருத்தியலாகும். ஆகவே நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்வினையாகவும் உடனடி முடிவுகளை முன்வைப்பதாகவுமே இருக்கும். இது பிரச்சனைகள் தீர்க்கப்படுவது மற்றும் முன்னேறுவது போன்ற தோற்றப்பாடுகளைத் தரும். ஆனால் இது முன்னேற்றமல்ல. இதுவே நமது போராட்டத்திற்கும் நடந்தது. இதன் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் தமது சந்தேகங்களைக் கேட்டனர்.
இந்த நூல் சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பற்றியது அல்ல.  மாறாக தான் செயற்பட்ட இயக்கத்திற்குள் இருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான செயற்பாடுகள் தொடர்பானது என்றால் தவறல்ல. போராட்டத்தை சரியா பாதையில் கொண்டு செல்ல பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் வென்றது அதிகாரத்து ஆயுதப் போராட்டமே. ஈழவிடுதலைப் போராட்டதை அழித்ததுவும் அதுவே.
சாத்திரி அவர்களின் ஆயுத எழுத்திற்கும் பொன்னுத்துரை (குமரன்) அவர்களின் நான் நடந்து வந்த பாதைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. முதலாவது சமூகத்தில் நிலவும் ஆதிக்க சிந்தனைகளின் அடிப்படையிலான ஆயுத மோகமும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமும் கொண்ட பணிக்கப்பட்ட கட்டளைகளை மறு கேள்வி இல்லாமல் பின்பற்றுகின்ற ஒரு சிப்பாயினது நினைவுக் குறிப்புகள். இங்கு ஆயுதமே முனைப்பானதாக இருக்கின்றது. இரண்டாவது சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, எதிர்த்து கேள்வி கேட்கின்ற, மக்கள் மற்றும் போராளிகள் மீது அக்கறை கொண்ட பொறுப்புணர்வுள்ள ஒரு போராளியின் மன உளைச்சலே இந்த நினைவுக் குறிப்புகள். இப் போராளியின் நினைவுகளை இவ்வாறு எழுதவைத்தது இவர்களை ஆதிக்கம் செலுத்திய ஆயுதங்களே. இருப்பினும் இங்கு முனைப்பு பெற்றிருப்பது அரசியலும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் விடுதலையும் என்றால் மிகையல்ல.
இவர்கள் நடந்து வந்த பாதைகளில் எல்லாம் ஆதிக்கம் செய்தது ஆயுதமே. ஆகவேதான் நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து எனத் தலைப்பிட்டுள்ளேன்.
மீராபாரதி

ஆயுத எழுத்து - என் பார்வையில்.... Keshayine Edmund

2:54 PM, Posted by sathiri, One Comment

Thursday, March 19, 2015

ஆயுத எழுத்து - என் பார்வையில்....

விமர்சனங்கள் என்பது இப்போதெல்லாம் கட்டணங்கள் இல்லா விளம்பரங்கள்! ‘ஆயுத எழுத்து” குறித்த பல விமர்சனங்கள் தான் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தினை உருவாக்கியிருந்தது.

பாடசாலைப் பருவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பதினேழு வருடங்கள் கள போராளியாக பணியாற்றிய முன்னாள் போராளியான சாத்திரி என்கின்ற புனைப்பெயர் கொண்ட கௌரிபால் சிறி எழுதி திலீபன் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த புத்தகம் கையில் கிடைத்தது முதல் இரவு பகலாக 391 + 1 பக்கத்தினை இரு நாட்களிலேயே வாசித்து முடித்து விட்டிருந்தாலும் ஏறத்தாழ இரு வாரங்களின் பின்னர் தான் இந்த விமர்சன பதிவினை எழுத ஆரம்பித்தேன். என்னுள் நிழலாக படிந்திருந்த ஏனையவர்களின்   விமர்சனங்களின் சாயல் மறைந்த பின்னர் தான் எழுத வேண்டும் என்கின்றதே இதற்கான முக்கிய காரணம். என் விமர்சனங்களை வரைய தொடங்குகின்றேன்… 
இந்த நூலின் ஆசிரியர் “என்னுரை”யில் குறிப்பிட்டுள்ளதன் படி 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியினை தொடக்கமாக வைத்து தான் கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலோ என்னவோ “அவன்” என்கின்ற பெயரற்ற உயர்தரம் படிக்கின்ற இளைஞனின் பாத்திரமாக ஆரம்பித்து அவனை போராளியாக்கி வெளிநாட்டு கட்டமைப்பில் பணியாற்றுபவனாக்கி இறுதிவரை “அவன்” ஆகவே நகர்த்தி முடித்திருக்கின்றார். ஓரெழுத்து பெயர் தானும் வைத்திருந்தால் “அவன்” யாராவது ஒருவரது சாயலாகவோ அல்லது அடையாளமாகவோ ஆகியிருப்பான் என்று சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கின்ற சாத்திரிக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.  ஆனால் தொடர்ந்து “அவன்” ஐ தொடர்ந்தால்  “அவன்” இந்து சமயத்தவன், யாழ்ப்பாணத்தவன், உயர்சாதிக்காரன், படித்த குடும்பத்திலிருந்து வந்தவன் என்கின்ற அடையாளங்களை நாம் குறித்துக்கொள்ளலாம்.

சராசரி குடும்பத்தின் அதிகாலை நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கின்ற முதல் அத்தியாயம் 83 இன் தமிழ் சமூகத்தின் அன்றாடம் போலவே அடுத்த அத்தியாயத்திலேயே “கண்ணிவெடி”க்கு இலக்கான அவலமொன்றுக்கு போய் நின்றுவிடுகின்றது. கூடவே இத்தகைய வன்முறைகள் இளைஞர்களிடம் தோற்றுவித்திருந்த சிந்தனை விதைப்பினை பின்வரும் வரிகளில் கொடுத்து விடுகின்றார் சாத்திரி. அந்த விதை “அவன்” உள்ளும் விழுந்து விடுகின்றது.
..அது மாகியம்பதியுடன் மட்டுமே முடிந்துவிட்ட துயரக்குரல் அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்குமிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. அது முடிவு இல்லாத மரணக்குரலாக நீண்டு கொண்டிருந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலிருந்தும் மரணக்குரல்கள் எழுந்தன. கொழும்பிலிருந்து மரணச்செய்திகள் வந்தன. மலையகம், அநுராதபுரம் என எல்லா இடங்களிலிருந்தும் படுகொலைச்செய்திகள் வந்தன. மரணம் மட்டுமே செய்தியானது…….. இவையெல்லாம் என்ன தடுக்க முடியாதா? அடிக்கிறவனைத் திருப்பி அடிக்க முடியாதா? …. முடியும் என்றனர் ஊரிலுள்ள சில இளைஞர்கள். “நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்” என்றனர். அவனும் முடிவெடுத்தான் இயக்கத்தில் சேரலாம் என.
அடுத்த அத்தியாயங்களில் “அவன்” இன் அண்ணன் வீட்டுக்கு வரவில்லை என்டு வீடு கலங்கிவிடுகின்றது. இறுதியில் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டிருக்கும் தகவலும் கிடைக்கின்றது. அந்த அத்தியாயத்தில்
“எல்லாம் உன்ர பிள்ளை வளர்க்கின்ற விறுத்தம்” என அப்பா அந்த ரணகளத்திலும் புறுபுறுத்துக்கொண்டிருந்தார். எனும் வரிகள் அன்றைய.. இன்றைய என்றைய நிலையிலும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் “பிள்ளை வளர்ப்பு” என்கின்றது எப்படி ஒரு தாயை மட்டும் சார்ந்து விடுகின்றது என்பதையும் சுட்டி நிற்கின்றது.

பின்வந்த பக்கங்களில் குடும்பத்திலிருந்து சமூகத்திற்கு பாய்ந்து விடுகின்றது வரிகள்… அல்லது “அவன்” ஐ நகர்த்த வேண்டிய தேவை கருதி பயணிக்கின்றது.

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்புக்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணச் சமூகம். அது எப்போதும் சாதி, கல்வி இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடை போடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர்சாதிக்காரனாகவும், கல்வி கற்றவராகவும் இருந்தார். (பக்கம் - 25)

வரிகளிலேயே “யாழ்ப்பாணச் சமூகம்” குறித்து ஆழமாகவும் அர்த்தமாகவும் சொல்லிவிடுகின்றார் நூலாசிரியர். “ஈழபோராட்டம்” என்பது பெரும்பான்மை – சிறுபான்மை இரண்டுக்குமிடையிலானது மட்டுமல்ல சாதிகளுக்கும் இடையிலானதும் கூட என்றும் ஆக யாழ்ப்பாணத்தவருக்கு விடுதலை உணர்வு என்பதும் கூட சாதியடிப்படையிலானதொன்றானதாக தான் இருந்திருக்கின்றது என்பதை நிறுவிவிட்டிருக்கின்றார் சாத்திரி.

“பெண்ணுரிமை” குறித்து பேசும் போது “புலிப்பெண்கள்” குறித்து பேசாதவர்கள் இல்லை எனலாம். ஆனால் ரெலோவில் இணைய வந்த பெண்களை தமிழ்நாட்டில் இடைநடுவே விட்டுவிட்டு ரெலோ ஓடிவிட விடுதலைப்புலிகள் அடேல் தலைமையில் பராமரித்து பயிற்சியளித்திருக்கின்றார்கள் என்கின்ற விடயம் எனக்கு புதியதொன்று. கூடவே புலிகளின் உறுப்பினர் காட்டிய பாலின வேறுபாட்டினையும் மேற்கோள் காட்டியிருக்கின்றார் ஆசிரியர் வரும் வரிகளில்……

…இவன் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரில் இறங்கிய போது, இந்தியாவிலிருந்து பெண்கள் அணியினர் பயிற்சி முடித்து கடல் வழியாக மன்னாரில் இறங்கியிருந்தார்கள்…… இயக்கத்தின் முதலாவது ஆயுதப்பயிற்சி பெற்ற பெண்கள் அணி அது………. மன்னாரில் பெண்கள் பயிற்சி முடித்துக் களத்திற்கு வந்த போதும், யாழ்ப்பாணத்தில் அவனது பொறுப்பாளர் பெண்களை இயக்கத்தில் எடுக்க அவ்வளவாக அக்கறை காட்டாதது அவனுக்கு ஏன் என்று விளங்கவில்லை. அவர் பொறுப்பாக இருந்த காலத்தில் பெண்கள் மருத்துவம் போன்ற பணிகளுக்குத்தான் எடுக்கப்பட்டனர். பின்னர் தீப்பொறி குழவினரின் கைக்குண்டு தாக்குதலில் பொறுப்பாளர் காயமடைந்து இந்தியா சென்ற பின்னர் தான் பெண்கள் யாழ்ப்பாணத்தில் சேர்க்கப்பட்டனர்.

அடுத்தடுத்து திலீபனின் அஹிம்சை போராட்டம்….. வாசிக்கின்ற ஒவ்வொருவர் முன்னும் அந்த வீரனையும் இறுதிக்கணங்களையும் நிறுத்தித்தான் கடந்து போகின்றது…..

“இந்தியாவிற்கு அஹிம்சையைப் பற்றி யாரும் படிப்பிக்கத் தேவையில்லை” என, பரணி ஒருநாள் உறுதியாக சொன்னான். அவன் சொன்னதை கேட்க, நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் நடந்தது வேறு திலீபனின் உயிர் பிரிந்தது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதைவிட ஆற்றாமை பெருகியிருந்தது. …. திலீபனை அநேகமாக எல்லோருக்கும் பிடிக்கும். மெல்லிய…. கலைந்த தலையுடனான அந்த உருவம் நீண்ட நாட்களுக்கு இவனது கண்களின் முன் நடமாடி திரிந்தது.

“ஈழப்போராட்டம்” எப்பவும் “இந்தியர்களை” மறக்காது. ஆசிரியரும் சர்மாவை மறக்கவில்லை.

……சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளைக் கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பொருள்களான நாய்,பூனை, ஆடு, மாடு, மனிதர்களை எல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள அசையாது நின்ற கட்டடங்கள், மரம் செடி எல்லாவற்றையும் டாங்கிகள் தகர்த்தப்படி முன்னேறின.
இந்திய இராணுவத்தின் வருகை குறித்து விபரித்திருக்கின்ற சாத்திரி பெரிதாக வரிகளில் அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை என்பது என் கருத்து. துரோகம் என்றால் “கருணா” என்று சொல்லித்திரிகின்றவர்களுக்கும் அதன் வெறுப்புணர்வை “கிழக்கிற்கு” கொடுத்திருப்பவர்களுக்கும் பின்வரும் வரிகளை சமர்ப்பித்து “துரோகம்” என்பதன் வரைவிலக்கணம் ஏன் கிழக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்டது? என்கின்ற வினாவினையும் சாத்திரியின் வரிகளூடாக முன்வைக்கின்றேன். ஒருவன் துரோகம் தான் கிழக்கிற்கான முத்திரையாக வைத்த… வைக்கின்ற தகுதி வடக்கிற்கு உண்டா?

புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளுக்கு போக முடியாமல் இந்தியாவிலும் கொழும்பிலும் தங்கியிருந்த மாற்று இயக்ககாரர்களை உள்ளடக்கிய “3 ஸ்டார்” அமைப்பை இந்திய உளவுப்பிரிவினர் உருவாக்கினார்கள்…..ஈ.என்.டி.எல்.எஃப் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியவற்றினை ஒன்றிணைத்து….. யாழிலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் கொண்டு வந்து இறக்கினார்கள்.

மண் என்பதற்கானது தான் இப்போராட்டம் என்றால் “வடக்கு” மண்ணில் முஸ்லீம்களுக்கும் பங்கில்லையா? என்பது என்னுள்ளான கேள்விகளுள் ஒன்று. சாத்திரியின் “அவன்” உம் என் கேள்விக்குள் விழுந்து பயணிக்கின்றான். ஆசிரியர் ஒருவேளை “முஸ்லீம்களின் வெளியேற்றம்” குறித்தும் பேசவேண்டும் அல்லது 83 இல் ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்று விடுமோ என்று நினைத்திருப்பார் போலும். அடுத்தடுத்த இரு பந்திகளில் கேள்வியும் விடையும் ஆக மேற்கோள் காட்டியிருக்கின்றேன். ஆனால் ஆசிரியர் என்னளவில் சரியாக பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. (இவ்விரு பந்திகளும் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

…..சொல்லி முடித்த நலீமா கண்ணீர் வழிந்த விழிகளைத் துடைத்த படியே, “இப்ப சொல்லு எதுக்காக எங்களை வெளியேத்தவேனும்? எங்களுக்கும் கிழக்கு முஸ்லீம்களுக்கும் கூட வியாபார தொடர்போ, உறவோ எதுவும் பெயரளவில் இல்லை. முஸ்லீம்கள் என்ற ஓர் அடையாளத்திற்காகவே வெளியேற்றப்பட்டோமோ? ஏதாவது சொல்லன்” என்றாள். அவனிடம் பதில் எதுவும் இல்லை தொண்டை அடைப்பது போல் இருந்தது.

எங்கடை ஊர் மல்வத்தைச் சோனகரும் சிங்களரும் எங்கடை ஊருக்கே புகுந்து அட்டகாசம் பண்ணி வெட்டி கொத்தி எல்டீலாரையும் திரத்திட்டாங்கள்………அதிலை என்டை அம்மாவும் செத்துப்போனா. அதுதான் அவங்களுக்கு ஏதாவது செய்யவேணும் என்டு இயக்கத்திலை சேர்ந்தன். அதுவும் சும்மா சண்டையிலை செத்துப்போக விருப்பம் இல்லை. சாகிறதென்டால் ஏதாவது பெரிசா செய்திட்டு சாகவேணும். அத தான் கரும்புலிக்கு போக விரும்பினன்.” என்று விட்டு அவனையே அசையாது பார்த்தபடி நின்றாள்.

“ஆயுத எழுத்து” இல் என்னுள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததொரு பாத்திரம் “ரெஜினா” சிங்கள தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்தவள். தன் சொந்த அவலத்தின் பழியுணர்வினால் கரும்புலியில் இணைந்தவள். “அவன்” ஆல் தெரிவுசெய்யப்பட்டு இலங்கையின் தெற்கிற்கு பயணிக்கின்றாள். முக்கிய அதிகாரிகளுடன் பழகவிடப்படுகின்றாள். கடைசியில் தற்கொலை குண்டுதாரியாகி “பச்சைக்கட்சி வேட்பாளரோடு அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்” என்கின்ற தலைப்புச் செய்தியின் நாயகியாகிப்போய்விடுகின்றாள். இங்கே “பெண்ணுடல்” என்பது போரில் மட்டும் மரணிக்கவில்லை. சிலரது “படுக்கையிலும் மரணித்திருக்கின்றது” என்பதை மறுப்பதற்கில்லை. “கற்பு, ஒழுக்கம்” பேசிய அதேயவர்கள் தான் “பெண்” ஐ பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதை “போர் வியூகம்” என்று நியாயப்படுத்தி விடுகின்றார்கள் என்று நினைக்கும் போதும் “போரில் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண் இரண்டாம் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்” என்கின்ற வாசகம் தான் என் சிந்தையில் தோன்றுகின்றது.  “ரெஜினா” ஏதோவொரு புள்ளியில் இன்றும் என்னுள் வலித்துக்கொண்டிருக்கின்றாள்.

அடுத்த கட்டமாக “அவன்” நாடு கடக்கின்றான். கடல்களை தாண்டுகின்றான். “அவன்” க்கு முகம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் அவன் சந்திக்கின்றவர்களது முகங்களை தெளிவாகவே காட்டுகின்றமை ஆசிரியருக்கு ஏதும் தனிப்பட்ட பகையிருக்குமோ என்கின்ற ஐயத்தினை ஏற்படுத்துகின்றது. சுயம் பற்றி நான் அலச விரும்பாததாலும் எப்பவும் “ஒரு நாள் கள்ளன் தான் மாட்டுவான் பல நாள் கள்ளன் எப்படியும் தப்பித்துக்கொள்வான்” என்கின்ற என் தனிப்பட்ட மனவாசகத்தினாலும் நபர்கள் குறித்த ஆசிரியரின் அலசலை என் எழுத்தில் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் நான் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான பிரபாகரன் அவர்கள் “புலம்பெயர் சமூகத்திடம்” ஒப்படைத்துள்ள போராட்டம் பற்றிய விமர்சனங்களை விவாதிக்க வேண்டிய தேவை இன்று உள்ளதாலும் சாத்திரியின் பின்வரும் வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

80 களில் ஊரில் இயக்கங்களின் தோற்றத்தின் போது வெளிநாடுகளிலும் அவர்களுக்கு உதவுவதற்காகச் சிலர் ஒவ்வோர் இயக்கத்தின் சார்பிலும் நிதி சேகரிப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் அதில் பாதி அங்கும் மீதி இவர்கள் பைக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. பின்னர் மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டு புலிகள் மட்டும் நிலைத்த போது ஃபிரான்ஸில் புலிகளுக்காக நிதிசேகரிப்பு செய்தவர்களில்….. அதேநேரம் புலிகள் அமைப்புக்காகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த… ஒருவர்…….. இவர்கள் நிதியைச் சேகரித்துப் புலிகளுக்கு அனுப்புவார்கள். எவ்வளவு சேகரித்தார்கள். எவ்வளவு அனுப்பினார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது…… அன்றைய காலங்களில் வெளிநாடுகளில் புலிகள் சார்பாக வேலை செய்த அனைவருமே செய்த செயல் தான். பலர் சேகரிக்கப்பட்ட நிதியோடு வேறு நாட்டுக்கு தப்பியோடி வாழ்கின்றார்கள்…… இப்படியான நிதி மோசடிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக கிட்டு ஐரோப்பாவிற்கு வந்திருந்த காலங்களில் கவனஞ்செலுத்தியதோடு, ….. 70 சதவீதத்தை இயக்கத்திற்கு அனுப்பச் சொல்லி கட்டளையிட்டிருந்தார்…… ஆனால் கிட்டு ஐரோப்பாவை விட்டுப் போனதும் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
…. போடுவதன் மூலம் மூன்று விஷயங்களை நிறைவேற்றலாம் எனப் புலிகளின் புலனாய்வுப்பிரிவு கணக்குப்போட்டது.
1.    இந்த விஷயத்தை இயக்கத்தின் வெளிநாட்டு அனைத்துலகப் பிரிவு பொறுப்பாளர்களிடம் கசியவிட்டு இயக்கத்தின் நிதியை கையாடல் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பது.
2.    சாதாரண புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை இலங்கை புலனாய்வாளர்களால் செய்யப்பட்டது என ஓர் அனுதாப அலையை உருவாக்குதல்
3.    ….ஏற்படுத்தப்பட்ட அனுதாப அலையை வைத்து உணர்ச்சி தளத்திலுள்ள மக்களிடம் மேலதிகமாக நிதி சேகரிப்பை செய்வது.

59 அத்தியாயங்கள் வரை போராளியாக பயணித்த “அவன்” தனக்கு வருகின்ற
…….. “டேய் எங்கடை கட்டமைப்பைக் கலைச்சிட்டு எல்லாரும் ஏதாவது நாடுகளிலை தங்கடை சொந்த வாழ்க்கைக்கு போகலாம்.. என்று தலைமை அறிவிச்சிருக்கு என்று வசனங்களை நிறுத்திப் பேசினார்…… என்கின்ற அழைப்பினூடாக நிறுத்தப்படுகின்றான். அடுத்ததும் இறுதியானதுமான 60 வது அத்தியாயத்தில்…..

நள்ளிரவைத் தாண்டி நண்பனிடம் விடைபெற்றான். இவனைக் கொண்டு வந்து வீட்டில் விடுவதாக நண்பன் சொன்னான். இவன் மறுத்த விட்டான். தள்ளாடிய படி வந்து காரில் ஏறினான். “ கல்லறைகள் விடை திறக்கும்…..ஒரு பாடலை எழுதிடும் இரவு” சாந்தன் பாடிக்கொண்டிருந்தார்…….. வளைந்த மலைச்சரிவுகளில் கார் வேகமெடுக்கத் தொடங்கியது……. தொலைபேசி அலறியது. பார்த்தான் அது யூலியா அதனை எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்ற போது, நழுவி விழுந்து விட அதைக்குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தான். எதிரே பெரிய வீதி வளைவு……. வீதிப் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் உருளத்தொடங்கியிருந்தது.

“அவன்” ஐ முற்றுப்புள்ளி அல்லது அரைக்காற்புள்ளி ஆக்கிவிட்டார் ஆசிரியர். 59 வரை சீராக வந்த வளைவு மாதிரியான “அவன்” கதை திடீரென 90 பாகையில் சரிந்து நின்றுவிட்டது போன்றதொரு உணர்வு எனக்குள். சாத்திரி தன் முன்னுரையில் “கிழக்கு சம்பவங்களை சரிபார்க்க” பத்திரிகையாளர்களான இரா.துரை, நிராஜ் டேவிட் உதவியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் எண்ணிப் பத்து தடவை கூட “கிழக்கு” குறித்து “ஆயுத எழுத்து” இல் பேசப்படவில்லை. ஏன் உலகம் சுற்றியளவிற்கு கூட சாத்திரியின் “அவன்” கிழக்கிற்கோ மலையகத்திற்கோ பயணிக்கவில்லை. வழமை  போன்று மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? அல்லது வடக்கிலிருந்து வேறு இடங்களுக்கு பயணிக்க விரும்பவில்லையா? என்கின்ற என் கேள்விக்கான பதிலை சாத்திரியிடம் எதிர்பார்க்கின்றேன். 
கூடவே நாணயத்தின் ஒரு பக்கத்தினை எழுதியுள்ள “ஆயுத எழுத்து” என்பது எனக்கடுத்த தலைமுறைக்கு ஒரு காவியமாக மாறிட கூடாது என்பதால் மறுபக்கத்தினை வரைய வேண்டிய தேவை, இந்திய துரோகங்களை பட்டியலிட வேண்டிய தேவை நிச்சயம் இன்னுமொரு எழுத்தாளனுக்கு உருவாக வேண்டும். எனினும் பலர் உடைக்க முடியாமல் திணருகின்ற கட்டுக்களை உடைத்து “ஆயத எழுத்து” எழுதியிருக்கின்ற சாத்திரியையும் அவரது தைரியத்தையும் வாழ்த்தாமலும் என்னால் இருக்க முடியவில்லை

தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட…

நேர்காணல் ..கருணாகரன்

3:26 PM, Posted by sathiri, No Comment

சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார்.
போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம்
எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்டும்.. அதுவேளை வெறும் கற்பனைகளிலும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலும் தொடர்ந்தும் இருந்து விட முடியாது என்று சொல்லும் சாத்திரிக்கு தமிழ்ச் சூழலில் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு.
saathiri -1
இதனால் சாத்திரியின் எழுத்துகள் கடும் சர்ச்சைகளை உண்டு பண்ணி வருகின்றன. ஆனாலும் அவர் பின்வாங்கவேயில்லை. அண்மையில் (2015 ஜனவரியில்) தான் எழுதிய “ஆயுத எழுத்து“ என்ற புதிய நாவல் ஒன்றைச் சாத்திரி சென்னையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு நிகழ்வே பல எதிர்ப்புகளின் மத்தியில்தான் நடந்தது. இந்த வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த சாத்திரியிடம் பேசினேன்.
- கருணாகரன்
——————————————————————————————————————————————————————————————————————-
1-உங்களுடைய நாவல் ஆயுத எழுத்தை சென்னையில் வெளியீடு செய்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு அமைப்பினர் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் சேப்பாக்கத்தில் காவல்துறையினரின் பாதுகாப்போடு நிகழ்வு நடந்ததை பார்த்தேன் .இந்த நாவலை எதிர்க்கும் அளவுக்கு என்ன முக்கியமான விடயங்கள் என்ன இதில் உண்டு ? யார் எதிர்க்கிறார்கள்?

இந்த நாவலை நான் எழுதி வெளியிட தீர்மானித்த போதே அதுக்கான எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்த்ததுதான். பொதுவாகவே விமர்சனம் என்கிற ஒன்றை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாதபெரும்பாலானவர்களை கொண்ட ஒரு சமூகமாகத்தான் தமிழ் சமூகம் உள்ளது.தவறுகளை தட்டிக் கேட்காமலும் அதை மழுப்பி மறைத்து விட பழக்கப் பட்டவர்களாகவே நாம் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளோம்.இந்த மன உணர்வு தான் எனது நாவலையும் எதிர்க்கத் தூண்டி யிருக்கலாம்.
saaththiri coverகாரணம் முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களை – தவறான விடயங்களை – எனது நாவலில் பதிவு செய்துள்ளேன் . அந்தச் சம்பவங்கள் – அந்த விடயங்கள் – வெளியே வந்துவிடக் கூடாது அவைகளை மீள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதில் தமிழகத்தை சேர்ந்த தீவிர தமிழ் தேசிய வாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர் .அவர்களே எனது நாவல் வெளியீட்டையும் தடுக்க முயன்றனர்.ஆனால் நான் வெளியீட்டு மண்டபத்துக்கு செல்லுமுன்னரே தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்தியதோடு நிகழ்வு எந்தவித இடையூ றும் இன்றி நடக்க உதவினார்கள் .
2 – வெளியீட்டில் கலந்து கொள்வதாகத் தெரிவித்திருந்த பேச்சாளர்கள், திரைப்பட இயக்குனர் வீ.சேகரும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழியும் பங்கெடுக்காது விட்டதன் காரணம் என்ன?

வீ . சேகர் நிகழ்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் என்னோடு சில விடயங்கள் தனியாக பேசவேண்டும் என வீட்டிற்கு அழைத்திருந்தார்.அவரது வீடிற்கு சென்றிருந்தேன். எனது நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என பழ .நெடுமாறனும் இயக்குனர் கௌதமனும் அழுத்தம் தருவதாகவும் தான் நாவலை முழுமையாக படித்துவிட்டேன் அதில் தனக்கு சங்கடமான விடயங்கள் எதுவும் இல்லை ஆனால் நாவலை படிக்காமலேயே இவர்கள் ஏன் அப்படியொரு அழுத்தத்தினை தன்மீது பிரயோகிக்கின்றார்கள் என்று புரியவில்லை என்று கூறியவர், தான் இப்போ இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் திரைத்துறையில் அடிவாங்கி நீண்ட காலமாக எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு இப்போதான் தனது மகனை வைத்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் யாரையும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. தனது நிலையை புரிந்துகொள்ளுமாறு என் கைகளை பிடித்து கேட்டுக் கொண்டார்.சுமார் இரண்டு மணிநேரம் அவரோடு பேசிய பின்னர் அவரது நிலை புரிந்தது. நிகழ்வுக்கு அவர் வராது விடுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.அதன்பின்னர் எனது நிகழ்வை வீ.சேகர் புறக்கணித்தார் என்றொரு அறிக்கையை இயக்குனர் கௌதமன் வெளியிட்டதாக புலம்பெயர் தேசத்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது .
அடுத்ததாக அருள்மொழி அவர்கள் தான் கலந்து கொள்ளாத காரணத்தை தனது முகப்புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்ன காரணம் என்னவெனில் எனது நிகழ்வில் பங்கெடுக்க சம்மதம் தெரிவித்திருந்தாலும் அதில் பங்கெடுக்கும் மற்றவர்கள் பெயர்களை அழைப்பிதழில் சரியாக கவனிக்கவில்லை என்றும் நிகழ்வுக்கு கேர்னல் ஹரிகரன் வருவதால் ஒரு இந்திய இராணுவ அதிகாரியோடு ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வது தனது கட்சி சார்ந்து பல சர்ச்சைகளை கிளப்பும்.அவற்றை தவிர்க்கவே நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.இது தவிர தனக்கு வேறு அழுத்தங்களோ பிரச்சனைகளோ இல்லை என்று தெரிவித்திருந்தார் .இதுதான் நடந்தவை.
3 -புத்தக கண்காட்சியில் ஆயுத எழுத்தை விற்பனை செய்யக் கூடாது என்று சிலர் புத்தக கடைகளில் வந்து விற்பனையாளர்களை அச்சுறுத்தியிருந்தார்கள் .இது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டதைப்போல கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீங்கள் எதிர்ப்புக்காட்டமல் விட்டது ஏன்?
சென்னை புத்தக கண்காட்சியில் எனது நாவலை சுமார் பதின்மூன்று கடைகளில் விற்பனைக்காக கொடுத்திருந்தேன்.அதில் நான்கு கடைகளில் மட்டுமே சிலர் வந்து மிரட்டிவிட்டுப் போயிருந்தனர் .மிரட்டப்பட்டவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார்கள்.ஆனால் பெருமாள்முருகனுக்கு நடந்த அளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாது இது போன்ற பல பூசாண்டி விளையாட்டுக்கள் எனக்கு பழகிப்போன ஒன்று என்பதால் நான் சிறு பிள்ளைத்தனமான இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை .
4 -ஆயுத எழுத்து நாவலை புலம்பெயர் தமிழர்கள் சிலரும் எதிர்க்கிறார்கள்.இந்த எதிர்ப்பின் அடிப்படை என்ன ? இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் ?

இங்கு எனது நாவலை எதிர்க்கும் புலம் பெயர் தமிழர் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.391 பக்கங்களை கொண்ட ஒரு நாவலின் அட்டைப் படத்தினை மட்டும் இணையத்தில் பார்த்துவிட்டு அதன் உள்ளே என்ன எழுதப்பட்டிருகின்றது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கதரிசிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் தூரநோக்கு சிந்தனைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .இவர்களின் எதிர்ப்பினை சமாளிக்க ஐ.நா சபைக்கு நடந்துபோய் ஒரு மனு கொடுக்கலாமா என யோசிக்கவ முடியும்?
5-புலிகள் அமைப்பில் செயல்பட்ட நீங்கள் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் இப்படியான விமர்சனங்களை முன் வைப்பது நல்லதல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.இது தொடர்பாக உங்கள் பதில் என்ன?
ஆம் , இது போன்ற கருத்தினை முன் வைப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டு தலைவர் வருவார் தமிழீழம் வாங்கி வருவார் அல்லது இணையத்தில் ஈழம் பிடிக்கலாம் என்கிற கற்பனையில் வாழும் சிலரே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் இயக்கம் மீது விமர்சனம் வைக்க வேண்டாம் என்கின்றனர் .2009 ம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் அமைப்பின் இறுதிக்கால செயற்பாடுகளை விமர்சிக்கும் படைப்புகள் அல்லது கட்டுரைகளை எழுதிய .நிலாந்தன் , கருணாகரன், தமிழ்க்கவி ,யோ.கர்ணன் போன்றவர்கள் மீதும் இதே கருத்து வைக்கப் பட்டது மட்டுமல்லாது அவர்களை துரோகிகள் பட்டியலில் இணைத்து அவதூறுகளும் அள்ளி வீசப்பட்டது.அதேதான் எனக்கும் நடக்கின்றது.
ஆனால் புலிகள் இல்லாத காலத்தில் தான் நான் அவர்கள்மீது விமர்சனம் வைக்கிறேன் என்பது தவறு.புலிகள் இருந்தபோதும் அமைப்பில் இருந்தபடியே உள்ளே நான் விமர்சனங்களை வைத்திருக்கிறேன் .எனது விமர்சனம் என்பது பிரபாகரன் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மேலும் பல விடயங்களை நாவலில் பதிவு செய்துள்ளேன். அப்போது ஒரு கட்டமைப்பு இருந்தது. நிருவாக பிரிவுகள் அதற்கான பொறுப்பாளர்கள் இருந்தார்கள். ஆகவே எனது விமர்சனங்கள் கருத்துக்களை நேரடியாக பிரபகரனிடமோ அல்லது நிருவாக பொறுப்பாளரிடமோ தெரிவித்து அதற்கான தீர்வுகளும் கண்டிருக்கிறேன் .ஆனால் இன்று புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இல்லாது போய் விட்டபின்னர் விமர்சனங்களை பொதுவெளியில் மட்டுமே வைக்க முடியும்.ஏனெனில் இப்போ புலிகளின் பிரதிநிதி என்று யாரும் இல்லை.
6. நீங்களும் பிறரைக் கடுமையான முறையில்தானே விமர்சிக்கிறீர்கள். விமர்சனத்துக்கு அப்பாலான முறையில் தனிநபர் மீதான தாக்குதல்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதைப்போல ஒரு காலத்தில் நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்காமல் நடந்தவர் என்ற அபிப்பிராயமும் உள்ளதே?

விமர்சனம் என்றால் அது கடுமையாகத்தான் இருக்கும்.அப்படி இருந்தால்தான் அது விமர்சனம் ஆகும்.கடுமை இல்லையேல் தடவிக்கொடுதல் ஆகிவிடும்.அடுத்தது தனி நபர் தாக்குதலில் ஈடுபடிருந்தேன் என்பது உண்மைதான்.அதனை நான் மறுக்கவில்லை.அதற்கு பின்னாலான காரண காரியங்களும் இருந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் சொல்லி என்னை நான் நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.காரணம் அன்று பாடப் புத்தகங்களை தூக்கி வீசி விட்டு ஒரு நோக்கத்துக்காக துப்பாக்கிகளை சுமந்தபடி இடையில் எதிரே வரும் எதையும் பற்றிக் கவலைப்படாமல் தட்டித் தள்ளி விட்டபடி விவேகமற்ற வேகத்தோடு இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து நடந்து கொண்டிருந்தோம்.
ssஅதிலிருந்து அப்படியே எழுத்துக்கு வந்த நானும் கையில் துப்பாக்கியோடு நடக்கின்றதைப்போலவே எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் பத்திரிகை ,சஞ்சிகை எனப் பொது வெளியில் எழுதிக்கொண்டிருந்தேன்.இலக்கை நோக்கி நடக்கும்போது இடையில் தடக்குப்படுபவை எல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்பதே எனது நினைப்பாக இருந்தது.இலக்கு சூனியமாகிவிட்ட பின்னர் அந்த சூனிய வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும்போது வலிக்கத்தான் செய்கிறது.எமது தோல்விக்கு இவைகளும் ஒரு காரணமோ என எண்ணி எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யத் தோன்றுகிறது.ஒரு வேளை இலக்கை அடைந்திருந்தால் இந்த வலி இல்லாது போயிருந்திருக்கும்.
அடுத்ததாக மாற்றுக் கருத்தாளர்களை நான் மதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முன்பு ஒரு விடயம் என்னைப்பொறுத்தவரை மாற்றுக் கருத்தாளர் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருத்தாளர்கள் தான்.பலரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களோடு உரையாடுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் ஐரோப்பவில் ஒரு சிலர் தங்களை தாங்களே மாற்றுக் கருத்தாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு தங்களுக்கென எந்தவித அரசியலோ நோக்கமோ இலக்கோ எதுவுமின்றி எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்துவதே நோக்கமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள்.எதுக்கும் யாருக்குமே பிரயோசனமற்று வெறும் கருத்துக் கந்தசாமிகளாக வாழும் சிலரை நான் மதிக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன் .
7-இந்த நாவலில் சொல்லப்படும் விடயங்களும் அதில் வரும் பெயர்களும் உண்மையானவைகளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் உண்மை சம்பவங்களை பதிவுசெய்து விட்டு அதனை ஒரு புனைவு என்று எப்படி சொல்லமுடியும்?
உங்கள் கேள்வி நியாயமானதுதான் ஈழத்தின் போரியல் நாவல்கள் எல்லாமே அனேகமாக உண்மைச்சம்பவங்களின் பதிவுகளாகத்தான் வெளிவந்துள்ளது.அண்மையில் வெளியான தமிழ்க்கவியின் ஊழிக்காலம் .யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள்,குணா கவியழகனின் நண்சுண்டகாடு என்பனவும் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பை சிறிது புனைவு கலந்து நாவல் வடிவில் கொடுத்துள்ளனர் .எனது ஆயுத எழுத்தும் அதேபோன்று சிறிது புனைவுகள் ஊடாக பல உண்மைச்சம்பவங்களை பதிவுசெய்துள்ளது.முழுக்க முழுக்க உண்மைச்சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தால் அது ஒரு ஆவணமாக மாறிவிடுவதோடு நாம் சொல்லவந்த விடயம் பலரையும் சென்றடையாது போய்விடும்.அடுத்ததாக அது சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதால் உண்மைச்சம்பவங்கள் நாவல் வடிவில் எழுதப்படுவது தேவையாக இருக்கின்றது.
8-ஆயுத எழுத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய விபரங்களை பதிவாக்கியிருக்கியிருக்கிறீர்கள் இதனை உங்கள் சாட்சியமாக கொள்ளமுடியுமா ?அல்லது உங்கள் தரப்பில் இருந்து சொல்லப் படும் நியாயமாக கொள்ளமுடியுமா ?
எனது சாட்சியமாகவும் எனது தரப்பு நியாயமாகவும் இரண்டு வகையிலும் எடுத்துக் கொள்ளலாம் .
9 -அடுத்ததாக எதாவது நாவல் எழுதும் திட்டம் ஏதும் உள்ளதா?
நிச்சயமாக.. .என்னுடைய அனுபவங்களில் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் மட்டுமே இந் நூலில் பதிவு பெற்றுள்ளது. .ஆயுத எழுத்து நாவலில் விடுபட்டுப்போன பல விடயங்கள் உள்ளது அவற்றை வைத்து அடுத்த நாவலை விரைவில் எழுதுவேன். எதிர்ப்புகள் தீவிரமாக செயற்பட வைக்கின்றன..
10 -சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்துப் படைப்புகள், புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன?

இந்தத் தடவையும் சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்கள் நிறையவே வந்திருந்தது மகிழ்ச்சி.ஆனால் தங்கள் படைப்புக்களை சந்தைப்படுத்தும் விடயத்தில் சிலரே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு நாவல் சந்தைப்படுத்தலில் வெற்றி பெற்று பலரது கைகளையும் அது சென்றடையும் போது தான் அந்த படைப்பே வெற்றி பெறுகிறது.இல்லாவிட்டால் நானும் ஒரு நாவல் எழுதினேன் என்கிற நின்மதியோடு அந்தப் படைப்பாளி காணமல் போய் விடுவான் .எனது நாவல் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்.
11-நாவல் தவிர்ந்த எழுத்துகளிலும் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். ஆயுத எழுத்தைப்போல அந்தக் கதைகளிலும் உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மறுப்பாக – எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. இதில் எது உண்மை என்று எப்படி வாசகர்கள் தீர்மானிப்பது ?
இங்கு ஒரு விடயத்தினை சொல்ல விரும்புகிறேன் நான் எனது எழுத்துக்களால் இந்த உலகத்தையோ சமூகத்தையோ திருத்தவந்த மகான் அல்ல.எனக்கு தெரிந்த பார்த்த பல சம்பவங்களை புனைவுகளோடு பதிவாக்குகிறேன்.எனது படைப்புகள் பொது வெளிக்கு வந்தபின்னர் அது எனக்கு சொந்தமானது அல்ல.அதைப் படிப்பவர்கள் எதிக்கலாம் .மறுக்கலாம்.பாராட்டலாம் அது அவரவர் விருப்பம்.ஒரு வாசகன் எனது படைப்பை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியாது .
12-தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை எப்படி உருவாக்கமுடியும் ? விமர்சனம் என்ற பெயரில் நடக்கின்ற அவதூறுகளை நாம் அனுமதிக்க முடியாது என்று ஒரு தரப்பினர் சொல்வதில் நியாயம் இல்லை என்கிறீர்களா ? அவர்களுடைய நியாயத்தை எப்படி மறுக்கிறீர்கள் ?

தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை உருவாக்கத் தேவையில்லை.அளவில் குறைவானதாக இருந்தாலும் ஒரு நாகரிகமான விமர்சன சூழல் கடந்த தலைமுறைவரை நல்லதொரு நிலையிலேயே sஇருந்திருக்கின்றது.ஆனாலும் விமர்சனமே தேவையில்லை அல்லது விமர்சனம் வைக்கவே கூடாது என்கிறவர்களையும்.விமர்சனம் என்கிற பெயரில் விசமங்களை வைக்கும் பெரும்பான்மையை கொண்ட சமூகமாகத்தான் எமது சமூகம் இருக்கின்றது.இதற்கு வளர்ந்துவிட்ட தகவல்தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் பெரிதும் துணையாக இருக்கின்றது.அவதூறுகளை அனுமதிக்க முடியாதுதான். ஆனால் முகமூடிகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அவதூறுகளுக்கெல்லாம் நின்று நிதானித்து பதில் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயமாகவே நான் கருதுகிறேன்.இவைகளுக்கெல்லாம் பேசாமல் கடந்துபோவதே புத்திசாலித்தனம் என நினைக்கிறன் .
13-உங்கள் எழுத்துகளை புலிகள் அமைப்பில் செயற்பட்ட ஒரு போராளியின் சாட்சியங்கள் என்று கொள்ளப்படுவதா ? அல்லது புலிகளை எதிர்க்கும் ஒருவருடைய விமர்சனங்கள் என்று பார்க்கப்பட வேண்டுமா ? அல்லது ஒரு வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க முனையும் படைப்பாளியின் மனவெளிப்பாடுகள் என்று கவனிக்க வேண்டுமா ? அல்லது ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கும் தோல்விக்கும் காரணமான விடயங்களை மீள்பார்வைக்குட்படுத்தும் ஒருவனின் செயல்கள் என்று கொள்ள வேண்டுமா ?
இந்தக்கேள்விக்கான பதில் ஏற்கனவே சொன்னதுதான். என்னை புலி என்பார்கள்.. நான் புலியில்லை என்பார்கள் . என்னை எழுத்தாளன் என்பார்கள் , இன்னும் சிலர் விமர்சன எழுத்து என்பார்கள். எனக்குத் தெரிந்தது நான் எழுதுகிறேன் படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
14-உங்கள் நாவலில் மற்ற இயக்கங்களை நீங்கள் சித்தரிக்கும் பார்வையில் அந்த இயக்கங்களை சார்ந்தவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாததல்லவா?
யார் வேண்டுமானாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவரானாலும் தாரளமாகத் தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். இனிமேலும் விமர்சனங்களை வைக்கக்கூடாது என்றோ அல்லது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற சமூகமாகவோ நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது.விமர்சனங்களை வைக்காமல் எனக்கேன் வம்பு என்று பலர் ஒதுங்கிப் போனதும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டதும் எமது தோல்விகளுக்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன் .
ஆனால் இந்த நாவலை படித்த இரண்டு பேர் எனக்கு வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்கள்.ஒருவர் ரெலோ அமைப்பு போராளி.சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவர் தொடர்புகொண்டு என்னிடம் சொன்னது என்னவெனில் சிறிசபாரத்தினத்தின் இறுதிக்கண ங்களை தங்கள் அமைப்பைச் சேர்ந்த எவருமே இதுவரை பதிவு செய்திருக்கவில்லை. அதனைப் பதிவாக்கியதுக்கு நன்றி என்றார். இன்னொருவர் தமிழகத்தில் வசிக்கும் ஈ .பி .ஆர் .எல் .எப் . நண்பர். எனது நாவலில் ஈ .பி .ஆர். எல் .எப் பற்றிய பகுதி வரும்போது ஒரு புலிப்போராளி பொறுப்பாளரிடம் போய் ஈ .பி அமைப்பை எப்போ தடை செய்யப்போகிறோம் எனக் கேட்பார். அதற்குப் பொறுப்பாளர் சும்மா இருக்கிற பல்லியை அடித்து பாவத்தை தேடக் கூடாது. கொஞ்சநாள் பொறுப்போம் என்று சொல்வார் . அந்த வசனத்தைச் சுட்டிக் காட்டிய நண்பர் சிரித்தபடியே உங்களுக்கெல்லாம் அந்த நேரம் எங்களைப் பார்த்தால் பல்லி போலவா இருந்தது? என்று கேட்டார் .
முழுக்க முழுக்க ஆயுத பாணிகளாக இருந்த புலிகள் அமைப்பு பெரும் பலத்தோடு இருந்த ரெலோ அமைப்பை அழித்து முடித்த இறுமாப்பில் இருந்த நேரம் பெருமளவு ஆயுதங்கள் இல்லாதிருந்த மற்றைய இயக்கங்கள் எல்லாமே அவர்களுக்கு பல்லிதான். இது புலிகள் அமைப்பில் இருந்த ஒவ்வொருவரினதும் மனநிலையாக இருந்தது. அது தவிர்க்க முடியததாகவும் இருந்தது என்பதே எனது பதில். இதுவரை இப்படியான கருத்துக்கள்தான் வந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் வரலாம் .வரவேண்டும்.
15-நீங்கள் எழுதுகின்ற போது, பெண்களை உடல்சார்ந்து அதிகமாக எழுதுகிறீர்களே. இதுவொரு கண்டனத்திற்குரிய பார்வை இல்லையா?

இங்கு ஒரு விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன். நான் முற்றும் துறந்த முனிவனோ உணர்வுகள் அற்றுப்போன சடமோ அல்ல. அதே நேரம் ஊருக்காக ரொம்ப நல்லவன் வேடம் போடவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் இயற்கையாகவே இருக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை . ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு அழகு உள்ளது. அதை நான் ரசிக்கிறேன். அதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவுதான். அப்படி ரசிக்காவிட்டால், எழுதாவிட்டால் நான் நல்லவன் என்று அர்த்தம் கிடையாது. என்னில் எதோ குறைபாடு உள்ளது என்றுதான் அர்த்தம் .
பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், பிள்ளைவரம் வேண்டி கோவிலுக்கும் சாமியர்களிடமும் போகும் அறிவியல் அற்ற, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற பெரும்பான்மையினரை கொண்ட சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம் .. அதேநேரம் பழைய இலக்கியங்களில் எழுதிவிடாத எதையும் நான் புதிதாக எழுதவில்லை. அவைகளோடு ஒப்பிடும்போது நான் எழுதுபவைகள் ஒன்றுமே அதிகப்படியானவை இல்லை.
16-விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படாது இருந்தால் இந் நேரம் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள்? இப்படியான எழுத்துக்களை எழுதி இருப்பது சாத்தியமா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது போன பின்னர் நான் எழுதவரவில்லை. அதற்கு முன்பிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். விடுதலைப் புலிகள் இருந்தாலும் தமிழீழம் கிடைத்திருந்தலும் எழுதிக்கொண்டுதான் இருந்திருப்பேன். நான் முன்னரே சொன்னதுபோல புலிகள் அமைப்பின் குறைகளையும் விமர்சனங்களையும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வைத்துவிட்டு எனக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொண்டிருப்பேன் .
17-பிரான்ஸில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் நிறையப்பேர் உள்ளனர். அதற்கேற்ற மாதிரி பல நிலைப்பாடுகளும் அணிகளும் உள்ளன. கி.பி. அரவிந்தன், ஷோபாசக்தி தொடக்கம் இன்றைய ஆக்காட்டி அணியினர் வரையில். இலக்கியத்தில் இவர்களின் முக்கியத்தும், ஐக்கியம், செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.
வாசிப்புத் தன்மையை அதிகமாக கொண்ட நாடக பிரான்ஸ் இன்னமும் இருக்கின்றது. நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலானவர்கள் கணணிக்குள்ளும் கைத்தொலைபேசிக்குள்ளும் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பயணங்களின்போதும் பூங்காக்களிலும் இன்னமும் கையில் சஞ்சிகையோ புத்தகமோ படிப்பவர்களைப் பெரும்பாலாக இங்கு காணமுடியும். அதே பழக்கம் தமிழர்களிடமும் இங்கு இருப்பது மகிழ்ச்சியான விடயம் .ஆனால் தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலும் தனித் தனித் தீவுகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் ஒரு பொதுநிகழ்வில் கூட பலரை ஒன்றாக பார்க்கமுடியாது என்பது மட்டுமல்ல மறைந்துவிட்ட ஒரு படைப்பாளியின் அஞ்சலி நிகழ்வு கூட பல பிரிவுகளாக நடாத்தப்படும் நிலைதான் இங்குள்ளது.
அடுத்ததாக இரண்டு பெயர்களை நீங்கள் நேரடியாக குறிப்பிட்டு கேட்டதால் அவர்கள் பற்றியும் சொல்லி விடுகிறேன் .கி .பி . அரவிந்தன் அவரது தனிப்பட்ட சில காரணங்களால் எழுத்துலகில் இருந்தும் பொதுவெளியில் இருந்தும் ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தது ஷோபாசக்தி. இவர் நல்லதொரு கதைசொல்லி. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு குழப்பவாதி. தன்னுடையது மட்டுமே எழுத்துக்கள் , மற்றயவை எல்லாம் கழிவறைச் சுவரில் இருக்கும் கிறுக்கல்கள் என்பதுபோலவே மற்றைய படைப்பாளிகளின் படைப்புகள் மீதான இவரது விமர்சனம் இருக்கும். மற்றைய படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சிக்காது படைப்பாளிகளை விமர்சிப்பவராக இருக்கிறார்.அதனாலேயே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் என்கிற பேதமின்றி பெரும்பாலானவர்களை அவர் பகைத்துக்கொண்டுள்ளார். இது அவருக்கு ஆரோக்கியமானதல்ல. இதே நிலை தொடருமானால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு காணாமல் போய் விடக் கூடும். ஆனால் வயதும் அனுபவங்களும் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறேன் .
இறுதியாக… பிரான்ஸ் நாட்டில் இதுவரை பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் தோன்றி காணாமல் போய்விட்டன. சில தொடர்ந்தும் வெளிவருகின்றன. அதேபோலத்தான் அண்மையில் ஆட்காட்டி சஞ்சிகை மட்டுமல்ல முகடு என்றொரு சஞ்சிகையும் சில இளையோரால் வெளியிடப்படுகின்றது. இது வரவேற்கப் படவேண்டிய விடயம். ஆனால் குறிப்பிட்ட சிலரே அதில் தொடர்ந்து எழுதி ஒரு குழுவாத சஞ்சிகையாக மாறிவிடாது பரந்துபட்ட எழுத்தாளர்களை ஊக்குவித்து தொடர்ச்சியாக வெளிவருவதே சஞ்சிகையின் வெற்றியாகும். பொறுத்திருந்து பார்க்கலாம் .
00