Navigation


RSS : Articles / Comments


நல்ல காலம் பிறக்குது

1:50 PM, Posted by sathiri, No Comment

நல்ல காலம் பிறக்குது

இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்  இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில்  இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வன்முறையை பாவிக்க வேண்டி வந்தது.என் ஆயுதம் எது என்பதை நீயே தீர்மானிக்கிறாய் என்றபடி அவன் முகத்துக்கு நேரே ஒரு வார மெடிக்கல் விடுமுறைக்கடுதாசியை நீட்டினேன்.
அதிர்ந்து போன முதலாளி  உனக்கு என்ன வருத்தம் என்றான்.அதை வைத்தியரிடம் சொல்லிவிட்டேன்.. இதைப்பிடி என்று மெடிக்கல் கடுதாசியை அவனிடம் திணித்துவிட்டு  விசிலடித்தபடி வீடு வந்து பாரிஸ் போவதற்கு டிக்கெட்டும் போட்டு விட்டு நண்பனுக்கு நான் வருவதாக போனடித்து சொன்னதும் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .இந்த வருடத்தில் அதிக மகிழ்ச்சியான நபருக்கு ஒரு விருது என்று யாராவது  கொடுத்தல் அதை நண்பன் சிவாவுக்கு கொடுக்கலாம்.என்னால்தான்  தனக்கு இத்தனை மகிழ்ச்சி  என்று என்னை  புகழ்ந்து தள்ளும் இதே எனது  நண்பன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே மாதம் சோகமாக போனடிதிருந்தன் .அதேபோல அதற்கு இரண்டு வருடங்களிட்கு முன்பு அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னரும் இதே மாதத்தில் ஒரு போனடிதிருந்தான் கோபமாக.அன்று எங்களுக்குள் நடந்த சண்டையின் பின்னர் இனி செத்தாலும் உன்னோடை கதைக்க மாட்டன் என்று அவன் சொல்ல.. செத்தால்ப்பிறகு உன்னாலை மட்டுமில்லை யாராலையுமே கதைக்க முடியாது என்று விட்டு போனை வைத்து விட்டேன்.


அதற்குப்பிறகு இரண்டு வருடங்களாக நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. .வாழ்கையில் எத்தனை நல்ல விடயங்கள் நடந்தாலும் நினைத்த உடனேயே நினைவுக்கு வருவது கெட்ட அல்லது மோசமான சம்பவங்களே.அப்படி நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த மோசமான அந்த நாளை உங்களுக்கு சொல்வதற்கு இந்தப் பூமிப்பந்தை இன்றிலிருந்து நான்கு வருடங்கள் பின்னோக்கி சுழற்ற வேண்டும்.பூமியை பின்னோக்கி சுழற்றும்  சக்தி எனக்கு  எப்படி வந்தது என்று மலைக்க வேண்டாம் எனது ஐ போனினேயே சுற்றலாம்.திகதி சரியாக நினைவில் இல்லை நிச்சயமாக ஒரு லீவு நாள்தான் எனவே குத்து மதிப்பாக நான்கு வருடத்தை பின்னோக்கி சுற்றுகிறேன்  .

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
செப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2010 ம் ஆண்டு .நண்பனுக்கும் எனக்குமான வழமையான உரையாடல் பத்தும் பலதும் கதைத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தடவையும் சரி வரேல்லை.டொக்டர் குடுத்த மருந்துகள் போட்ட ஊசியலாளை மனிசி சரியா களைச்சுப் போய் முதல் இருந்ததை விட இன்னுமும் வீக்காய் போயிட்டாள் .இரண்டாவது தரமும் அழிஞ்சுபோச்சு  கப்பப்பை சரியான வீக்கா இருக்காம் திரும்பவும் ஒரு தொகை மருந்து எழுதித் தந்திருக்கு .இனி எனக்கு இந்த வைத்தியதிலை நம்பிக்கை இல்லையடா என்று பெருமூச்சோடு முடித்தான் .எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது அவன் சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பன் பிரான்சுக்கு வந்தும் அந்த நட்பு தொடருகிறது நாங்கள் இருவரும் ஒரே நாட்டில் இருந்தாலும்  இருக்கும் இடம் வெவ்வேறு தொலைவில் என்பதால் ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தொலை பேசியில் பேசுவோம்.சிவா குடும்ப சூழலால் முப்பத்தைந்து வயதிலேயே இந்தியா போய் கலியாணம் காட்டி விட்டு வந்திருந்தான் நாந்தான் அவனுக்கு வடபழனி முருகன் கோயிலில் மாப்பிள்ளைத் தோழன் .அவனின் மனைவி சுபா நல்ல கணவன் கிடைக்க வேணும் என்று எல்லாக் கோயிலுக்கும் எல்லா நாளும் விரதம் இருந்ததால்  சிவா கட்டின தாலிப்பாரம் தாங்க முடியாமல் முறிந்து விழுந்துடுவாரோ...  என்று எனக்கு லேசான பயம் வேறை இருந்தது . அதுதான் நல்ல கணவன் கிடைசிட்டானே இனியாவது நல்லா சாப்பிட்டு பிரான்ஸ் குளிரைத் தாங்குகிற மாதிரி உடம்பை பலமாக்கிக் கொண்டு வாங்கோ என்று அவரிடம் சொல்லி விட்டு வந்திருந்தேன் .

அடுத்த ஒண்டரை வருசம் கழிச்சு சுபா பிரான்ஸ் வந்து சேர்த்துவிட்டார் அப்போ நண்பனுக்கு முப்பத்தாறு அரை வயது.ஒரு வருடம் கழித்து தான் அப்பாவாகப் போவதாய் மகிழ்ச்சியோடு போனடித்து சொல்லியிருந்தான் .அவன் மகிழ்ச்சி மூன்று மாதத்திலேயே கலைந்துபோனது .அடுத்ததாய் வைத்தியர், விசேட வைத்தியர் ,பரிசோதனை, மருந்து, ஊசி ,இப்படியாய் சில காலத்துக்குப் பிறகு அவனுக்கு இன்னுமொரு நம்பிக்கை கருக்கொண்டது.ஆனால் அடுத்த நம்பிக்கைக்கும் ஆயுள் மூன்று மாசம்தான்.அதுதான் இன்று போனடித்து வைத்தியத்தில் நம்பிக்கை இல்லையென்று விட்டான்.சரி வைத்தியத்தில நம்பிக்கை இல்லையெண்டால் அடுத்தது என்ன செயப்போகிறாய் என்று எனது கேள்விக்கு அவன் சொன்ன பதில் தான் எங்களுக்குள் சண்டை வந்து இரண்டு வருசம் நாங்கள் கதைக்காமல் விட்டதுக்கு  காரணம்.இப்போ ஐ போனில் இரண்டு வருடம் முன் நோக்கி சுற்றுகிறேன் .

...................................................................................................

செப்டெம்பர் மாதம் ஒரு ஞாயிறு 2012 போனில் சிவா என்று காட்டியது.இரண்டு வருசத்துக்குப் பிறகு இப்போ அவனாகவே போனடிக்கிறான்.முதல் தடவை எடுக்கவில்லை இரண்டாவது தடவை எடுத்து காதில் வைத்ததும் கலோ.. டேய் நான்தானடா சிவா என்கிற அவனது உடைத்த குரல் என்னைக் கொஞ்சம் உலுக்கி விட்டது.அவசரமாக என்னடா ஏதும் பிரச்சனையோ...
ஓமடா  அண்டைக்கு நீ சொன்னதை கேட்கேல்லை  மனிசியும் சாமிப்போக்கு எண்டதாலை வைத்தியத்தை நம்பாமல் நான் டென்மார்க் அம்மனை நம்பி போயிட்டான்.இரண்டு வருசம் டென்மார்க்குக்கும் பாரிசுக்கும் அலைஞ்சதுதான் மிச்சம்.அலைச்சல் அதோடை வீண் செலவு . எனக்கு இங்கை இருக்கப் பிடிக்கேல்லை. தமிழாக்களிண்டை ஒரு நிகழ்ச்சிக்கும் போக முடியேல்லை .செத்தவீட்டுக்கு போனாலும் என்ன இன்னும் ஒண்டும் இல்லையோ எண்டுற துதான் முதல் கேள்வி அதாலை மனிசி இப்ப ஒரு இடமும் போறதில்லை.இங்கை இருந்தா எங்களுக்கு லூசாக்கிடும் அதுதான்  உன்ரை இடத்திலை தமிழ் ஆக்கள் இல்லாத இடமா வந்து இருக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.. மூச்சு விடாமல் பேசிமுடித்தான்.
சரியடா என்னிலையும் பிழை தான்.டென்மார்க் அம்மன் சரியான பிராடு எண்டு எனக்குத் தெரியும்.அம்மணிக்கும் எனக்கும் ஒருக்கா சண்டை வந்து நான் வாய்க்கு வந்தபடி திட்டிப்போட்டன் அந்த வருசமே அவதாரம் எடுத்து என்னைப் பலி வாங்கப் போறதா சொன்னது மனிசி .சொல்லி நாலு வருசமாகிது எனக்கு ஒண்டுமே நடக்கேல்லை .அது ஊரிலை சாத்திரம் சொல்லுறன் எண்டு தண்ணிக்குள்ளை  பூ வைப் போட்டுக் குடுத்து ஏமாத்தினது.வெளிநாடு வந்து அவதாரம் எடுக்கிறன் எண்டு ஏமாத்திது.எங்கடை லூசு சனங்களும் நம்புது.சரி கவலைப் படாதை கோவத்திலை நானும் அண்டைக்கு அப்பிடி சொல்லியிருக்கக் கூடாது எதாவது ஒழுங்கு பண்ணலாம்" .அவனோடு பேசி ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு யோசித்தேன் .அவனின் நிலைமை கவலையாய் இருந்தது அன்று பிள்ளை பிறக்க வேணும் எண்டதுக்காக எதோ ஒரு நம்பிக்கையில் டென்மார்க் அம்மனிடம் போகிறேன் என்றதும் "ஆண் சாமியார் எண்டாலும் பரவாயில்லை பெண் சாமியார் எப்பிடியடா பிள்ளைவரம் கொடுக்கும்"" எண்டு கோவத்தில் கேட்டு விட்டிருந்தாலும் அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த வேறு அர்த்தங்கள் அவனை நிச்சயம் நோகடிதிருக்கும் அதுக்ககவவது எதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?.. யோசித்தேன் ...சட்டென்று ஒரு யோசனை வர  சிவாவுக்கு போனடித்து திட்டத்தை சொன்னேன். கொஞ்சம் யோசித்தவன் சுபா விட்டையும் கேட்டு சொல்வதாக சொன்னவன்  சில மணி நேரத்துக்குப் பின்னர் போனடித்து சம்மதம் என்றுவிட்டான் .

................................................................................................................................................

ஒரு மாதம் கழித்து சென்னையில் பிரபல தனியார் மருத்துவ மனையொன்றின் அறையில் வைத்தியரின்  முன்னால் நான் சிவா அவனது மனைவி அமர்திருந்தோம் ..வைத்தியர் எங்களுக்கு அனைத்தையும் விளங்கப் படுத்தி ஒன்றும் பயமில்லை முதல்ல இரத்தப் பரிசோதனையும் ஹோர்மோன் பரிசோதனையும் செய்து வரச்சொல்லி ஒரு நர்சோடு சிவாவவையும் மனைவியையும் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார் ..பரிசோதனைக்கு போனவர்கள் வரும்வரை  அங்கே காத்திருந்தேன்.எல்லாம் முடிந்து வந்தவர்களின் பரிசோதனை முடிவுகளை  சரி பார்த்த வைத்தியர் எல்லாம் நன்றாக உள்ளது அவர்களுக்கு இக்ஸி முறையில் சோதனைக்குழாய்  கருத்தரிப்பு செய்யப் போவதாகவும் எனவே அவர்கள் அங்கு தங்கியிருக்கட்டும்  நீங்கள் மிகுதி விடயங்களை பாருங்கள் என்று என்னிடம் சொல்லி கையை குலுக்கி விடை பெற்றார்.நான் ஏற்பாடு செய்திருந்த லோயருக்கு போனடித்து விட்டு அவர் வரும்வரை வெளியே வந்து எதிரே இருந்த டீ கடையில் ஒரு டீ யை வாங்கி உறுஞ்சியபடிஅக்கம் பக்கம் நோட்டம் விட்டேன் எனக்கு பல வருடங்களாக பழகிய இடம்தான் இப்போ நிறைய கட்டிடங்கள் முளைத்துள்ளது.

வலப்பக்கமாக  வீதியோரம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் குடிநீர் திட்டத்துக்காக போடப் பட்ட பெரிய சிமென்டு குழாய்கள்.மத்தியிலும் மாநிலத்திலும் இரண்டு தடவை தேர்தல் நடந்து ஆட்சியும் மாறிவிட்டது  குழாய்கள்  மட்டும் அங்கே அப்படியே கிடந்தது.ஆனால் அவை இப்போ குழாய்கள் அல்ல குடியிருப்புக்கள்.அவைக்கு இலக்கங்கள் கூட போடப் பட்டு குடியிருப்புகள் அடையாளப் படுத்தப் பட்டிருந்தது .ஒரு பக்கம் இரட்டை இலையும் மறு பக்கம் உதயசூரியனின் படமும் கீறப்பட்டு துணியால் மறைக்கப் பட்டிருந்த  குழாயில் இருந்து ஒருவன் வெளியே வந்து சோம்பல் முறிக்க அடுத்ததாய் ஒரு பெண்.அவனின் மனைவியாக இருக்க வேண்டும் என நினைத்தபோது  புற்றுக்குள் இருந்து வருவது போல வரிசையாய் நான்கு பிள்ளைகளும் குழாயிலிருந்து வெளியே வந்தார்கள்.உலகம் எவ்வளவு விந்தையானது எதிரே வைத்திய சாலையில் இலட்சங்கள் செலவழித்து சோதனைக் குழாயில்   குழந்தைக்காக என் நண்பன் ஏங்கிக் கொண்டிருக்கிறான்.பக்கத்தில் சிமெண்டு குழாயில்  ஒருவன் நான்கு பிள்ளைகளோடு குடும்பம் நடத்துகிறான் .

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்  வெளியே வந்த பெண் கர்பிணியாக இருக்க வேண்டும் சரியாக கவனிக்க முடியவில்லை அவள் அடுப்பை மூட்டி ஒரு சட்டியை வைத்து தண்ணீரை ஊற்ற  நான்கு பிள்ளைகளும் போய் அவளோடு ஒட்டிக் கொண்டார்கள். அவன் போதலில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி முகத்தில் விபூதியை அள்ளிப் பூசி  குங்குமப் பொட்டு வைத்தவன்  ஒரு பட்டுத் துண்டை தலையில் கட்டி தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு இடக்கையில் மந்திரக் கோல் போல ஒரு கருப்புத் தடி வலக்கையில் குடு குடுப்பை டீ கடையை நோக்கி வந்தவன் அருகில் வரும்போதே குடு குடுபையை டம... டம... டம ... என அடிக்கத் தொடங்கியவன் ...

நல்லகாலம் பிறக்குது   சாமீ....
நல்லகாலம் பிறக்குது ...
ஜக்கம்மா வந்திருக்கா ..
யாருக்கோ ஒரு செய்தி சொல்லப்போறா ...
நாவில வந்திருக்கா ...
நல்ல செய்தி சொல்லப் போறா ...
நல்லா காலம் பிறக்குது ...
ஜக்கம்மா ......

என்னை வெளியூர்க்காரன் என்று பார்த்ததும் தெரிந்திருக்க வேண்டும் முன்னால் வந்து நின்றவன் ..ஜக்கம்மா சொன்ன செய்தி சொல்லப் போறன் நல்லகாலம் பிறக்குது .என்று உடுகையை ஒரு தடவை நிறுத்தி அடித்ததும்..  "ஏ ..எத்தினை வாட்டி சொல்லுறது   கஸ்டமரை  டிஸ்டப்  பண்ணதை அந்தாண்டை போ " என கடைக்காரன் விரட்ட .தயங்கியபடி என்னைப் பார்தவனிடம்  "யக்கம்மா சொன்ன செய்தி இருக்கட்டும் உனக்கு என்ன வேணும்"  என்றதும்..நாலு குழந்தை சாமி என்று கும்பிட்டவனுக்கு கடையில் கொஞ்சம் பணிஸ் வங்கிக் கொடுத்து விட.." மகாராசனா இரு சாமி" என்ற படி குடியிருந்த குழாயை நோக்கி போய்க்கொண்டிருந்தான் .டீ கடைக்காரருக்கும் அவனால் வியாபாரம் நடந்ததால் அவர் ஒன்றும் பேசவில்லை .லோயர் வந்த ஆட்டோவில் நானும் தொற்றிக் கொள்ள ஆட்டோ சென்னை தெருவில் வளைந்து நெளிந்து ஒரு மணி நேரத்தில் நெருக்கமான குடியிருப்பு ஒன்றில் போய் நின்றது .

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வேலவனுக்கு காலை அம்மாவிடமிருந்து போன் வந்ததிலிருந்து ஒரே படபடப்பு. யார் இப்போ கலியாணம் வேணுமெண்டு கேட்டது இந்த அம்மக்களே இப்பிடித்தான் என்னை எதுவுமே கேட்காமல் சம்பந்தம் பேசிவிட்டு வந்து பெண்ணை பார்த்திட்டு போடா என்று போனடிதிருந்தார் .அதுவும் நான் வங்கியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கிறார் .நான் எந்த வங்கியில் வேலை பார்க் கிறேன் என்று தெரியாமல் பெண்ணு வீட்டுக் காரரும் நான் பேங்க் ஒவ் இன்டியவிலையோ.. கனரா விலையோ மானேஜராய் இருக்கிறதாய் நினைதிருப்பாங்கள் சினந்து கொண்டான் .எந்த வங்கியில் வேலை என்று தெளிவாக அம்மாவிடம் சொல்லாதது என் தவறுதான் இன்றிரவே பஸ்சைப் பிடித்து ஊருக்குப் போய் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி கலியாணத்தை நிறுத்துவது மட்டுமில்லை வேலையிடதிலேயே  நர்ஸ் யமுனாவை காதலிக்கும் விடயத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

இப்போ அவனது மேலாளரிடம் எப்படி இரண்டு நாள் லீவு  கேட்பது எப்படி என்பதுதான் பிரச்னை  யமுனாவிடம் எதாவது ஐடியா கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது வைத்தியரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது அவரின் அறைக்கதவைத் தட்டி உள்ளே புகுந்தான்.வைத்தியர் வேலவனுக்கு சிவாவை அறிமுகப் படுத்தி இவங்களுக்கு In vitro fertilization செய்யவேண்டும் அழைத்துப்போங்கள் என்று ஒரு பைலை நீட்டினார்.
சிவாவை அழைத்துப் போகும்போது. சேர் வெயர் ஆர் யு ப்ரோம்??
யாழ்ப்பாணம் இப்ப இருக்கிறது பிரான்ஸ் ...
ஒ யாழ்ப்பாண தமிழா? என்றவன் சட்டென்று சிவாவின்  காதருகே போய் "சார் தலைவர் பத்திரமா இருக்கிறார் தானே"  என்றான் .சிவாவிற்கு எரிச்சலாக வந்தது ஆனால் காட்டிக் கொள்ளாமல்  "ஓம் பத்திரமாய் இருக்கிறார் ".....வேலவன் மகிழ்ச்சியோடு எனக்குத் தெரியும் சார் அவரை ஒண்ணுமே பண்ண முடியாது என்றபடி சிவாவை ஒரு அறைக்கு அழைத்துப் போய் சிவாவிடமிருந்து உயிரணுக்களை சேகரித்தவன் சிவாவை அனுப்பிவிட்டு  அதனை கண்ணாடிக் குடுவையில் பத்திரப் படுத்தி அதிலிருந்து தரமானவற்றை பிரித்தெடுத்து இன்னொரு குடுவைக்குள் வைத்து அதனை குளிர்சாதனப்பெட்டியில் பதப் படுத்தவேண்டும்.அதற்கு முதல் அந்தக் குடுவையின் மீது சிவாவின் பெயரை ஒட்டுவதற்காக சிவகுருநாதன் என்கிற பெயரை பிரிண்ட் செய்து எடுக்கும்போது "என்னங்க  லீவு கேட்டாச்சா " என்று யமுனாவின் சத்தத்தை கேட்டு திரும்பிய வேலவன் கை பட்டு கீழே விழுந்துடைந்த குடுவையிலிருந்த சிவாவின் எதிர்காலமும் கனவுகளும் தரையில்  சிதறிப்போயிருந்தது .

ஐயையோ ....என்று தலையிலடிதவன் "ஏற்கனவே பிரச்னை உன்னாலை இப்போ அடுத்த பிரச்னை போடி வெளியே" என்று அவளை வெளியே தள்ளி அறை கதவை சாத்தியவன்  யாரும் கவனிக்காதபடி அவசர அவசரமாக கீழே உடைந்து கிடந்த குடுவையை வழித்து அள்ளி குப்பையில் போட்டு நிலத்தை சுத்தம் செய்துவிட்டு கதவைத் திறந்து பார்த்தன்.யமுனா போய் விட்டிருந்தாள்.வேகமாக ஓடிப்போய் சிவாவை தேடினான் காணவில்லை.சிவாவை திரும்ப தொடர்பு கொள்ள விபரங்கள் எதுவும் வேலவனிடம் இல்லை அவை வைத்தியரிடம் தான் உள்ளது.லீவு வேறை கேட்க வேணும் அதே நேரம் இந்த விடயத்தையும் சொன்னால் எரிந்து விழுவார் லீவு கிடைக்காமலும் போகலாம் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .இரத்த அழுத்தம் கூடி வியர்க்கத் தொடங்கியிருந்தது வெளியே போய் கொஞ்சம் ஆறுதலாக யோசிக்கலமென வைத்தியசாலைக்கு எதிரே இருந்த டீ கடைக்கு வந்து ஒரு டீ சொல்லிவிட்டு அவசரமாக சட்டைப்பயிளிருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தபோது ...

ஐயா முகத்தில அவசரம் தெரியிது ஜக்கம்மா ..
சாமி முகத்தில சலனம் தெரியிது ஜக்கம்மா ..
சோலி தீர சோழி பாத்து ...
 நாவில வந்து ..
ஒரு நல் வாக்கு சொல்லு யக்கம்மா..

என்று உடுக்கை அடித்தபடி வேலவன் முன் வந்து நின்றான் குடுளுடுப்பைக் காரன்.இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவன் வேறை என்று நினைத்தபடி டீ  யை வாங்கி உறுஞ்சியவன்   ச்சே ..அந்தாண்டை போ என்று அவனை விரட்டி விட அவன் இன்னொருவர் முன்னால் போய் நின்று அதே ராகத்தோடு குடு குடுப்பையை அடிதுக்கொண்டேயிருந்தன்.வேலவனுக்கு அவனை நீண்ட காலமாக தெரியும் வைத்திய சாலைக்கு முன்னலேய சுத்திக்கொண்டிருப்பன்.அவனிடம் இதுவரை குறி கேட்டதில்லை அவ்வப்போது டீ வாங்கிக் கொடுத்திருக்கிறான்.சட்டென்று எதோ தோன்றவே குடுகுடுப்பைக் காரனை ஓரமாக அழைத்துப் போனவன் அவனிடம் ..நல்ல காலம் எனக்கு மட்டுமில்லை உனக்கும்தான் பிறக்குது என்று சொல்லியபடி  சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாவை எடுத்து  அவனது கையில் திணித்து விட்டு காதில் இரகசியமாக எதோ சொல்ல கொஞ்ச நேரம் யோசித்த குடுகுடுப்பைக் காரன்  "சாமி பிரச்னை ஒண்டும் வரதுதனே "என்றான் .ஒரு பிரச்சனையும் வராது என்னை நம்பு என்றவன் சீக்கிரமா வா ...அவசரப்படுதினான்.

தனது குடியிருப்புக்கு போன குடுகுடுப்பைக் காரன்  ஆயிரம் ரூபாயை மனைவியின் கையில் குடுத்ததும் என்னங்க யாரு குடுத்தது என்றாள்.  பிள்ளைகளை காட்டி.. இதுகளை மாதிரியே சாமி குடுத்தது.
இதுகளை சாமி குடுத்து ஆனா பணம் எப்பிடி சாமி குடுக்கும் திருடினியா..?

 ச்சே ..கழுதை  நான் திருடுவனா.. சினந்தான்
சாமி மேலை சத்தியம் பண்ணு
ஜக்கம்மா மேலை சத்தியம் நான் திருடல
அப்ப எப்பிடி இவ்ளோ பணம் ?

அவளிடம் விடயத்தை சொன்னான் .அவளோ கொஞ்சம் பொறாமையோடு.. சரி இதுதான் கடைசி வாட்டி இனிமேல் இப்பிடி பண்ணாதை என்றதும்  தனது பை ,குடுகுடுப்பை ,தலைப்பாகை எல்லாம் வைத்து விட்டு தயங்கியபடியே வேலவன் சொன்னதுபோல வைத்திய சாலையின் கார் நிறுத்தும் பகுதிக்கு போனதும் அங்கு வைத்திய சாலை ஊழியர்கள் போடும்  வெள்ளை  நீளச் சட்டையோடு  தயாராய் நின்றிருந்த வேலவன் அவனுக்கு அதை அணிவித்து அவசரமாக தனது அறைக்குள் அழைத்துப் போனவன் வேகமாக இயங்கினான் .சிறிது நேரத்தில் அவனை மீண்டும் கார் நிறுத்துமிடத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு பரிசோதனை கூடத்தில் நுழைந்து உயிரணுக்கள் நிறைந்திருந்த குடுவையின் மீது சிவகுருநாதன் என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி குளிர்ப் பெட்டியில் பதப்படுத்தி விட்டு கதிரையில் தொப்பென இருந்து பெரு மூச்சை இழுத்து விட்டவன் ."அப்படா எப்பிடி யாவது லீவு கேட்டிட்டு ஊருக்கு ஓடிடணும் " நினைக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது .திறந்தான் எதிரே யமுனா .."உனக்காக நானே லீவு கேட்டு வாங்கிட்டன்" என்று  சிரித்தாள் ..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
குடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண்.. லோயர் தயார் செய்து கொண்டு வந்த பத்திரங்கள் மீது கையெழுத்துப் போட்டதும் எங்களை அழைத்துப் போன ஆட்டோக் காரனும் அதில் கையெழுத்துப் போடும்போதுதான் அவன் அந்தப் பெண்ணின் கணவன் என்று எனக்கு தெரிய வந்தது.கையெழுத்துப் போட்டு முடித்ததும்.. "இந்தா பாருங்கப்பா எல்லாம் முடியிற வரைக்கும்  இடையில எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது  இப்போ பாதி குடுத்திடுவம்  எல்லாம் நல்லபடியா  முடிஞ்சதும் மீதி" .என்று லோயர் கொஞ்சம்  கடுமையாகவே சொன்னதும் .இல்லீங்க எங்க பையனை பெரிய ஸ்கூல்லை சேர்க்கத்தானுங்க  இதுக்கு ஒத்துக்கிட்டம் ஒரு பிரச்சனையும் வராது என்று ஆட்டோக் காரன்  பவ்வியமாக சொன்னான் .லோயர் கண்ணசைத்ததும் நான் தயாராய் கொண்டு போயிருந்த பணத்தை அந்தப் பெண்ணிடம் நீட்ட  கொஞ்சம் இருங்க சார் என்றபடி லோயர் நான் பணம் கொடுப்பதை தனது கைத் தொலை பேசியில் படம் எடுத்துக்கொண்டார் .
லோயர் எண்டால் இவனை மாதிரி இருக்கவேணும் ஆதாரங்களை ஸ்ரங்கா ரெடி பண்ணுறன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன் .."இனிமேல் நான் தான் உங்களோட தொடர்பில இருப்பேன் நான் போன் பண்ணினதும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துடனும்"  என்று அதையும் கடுமையவே சொன்ன லோயர் வேறொரு ஆட்டோவை அழைத்தான் .எல்லாமே  ஒரு ஜேம்ஸ் போண்ட்  பட பணியில் ஆனால் பெரிய அளவில் இல்லாமல் சின்னதாய் லோக்கல் அளவில் நடந்து முடிந்திருந்தது.ஆட்டோவில்எங்கள் இடம் நோக்கி லோயரோடு போய் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது  ஏம்பா  நான் அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்கும் போது போட்டோ எடுத்தியே அதை வைச்சு நீ எதாவது புதிசாய் கேஸ் கிரியேட் பண்ண மாட்டியே என்றதும் .."ஐயோ சார் உங்களுக்கு அப்பிடி பண்ணுவனா"   என்று குழைந்தான்..
......................................................................................................................................................
இப்போ சிவாவுக்கு நான் போட்டுக் குடுத்த திட்டம் வாடகைத்தாய் திட்டம் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.ஆனால் அவனும் சாதாரண ஒரு தமிழ் சூழல்  மனப்பான்மையோடு  சீட்டு ,வட்டி,வெள்ளிக்கிழமை விரதம் ,சனிக்கிழமை பங்காட்டு இறைச்சி ,ஞாயிறு யாருடயதவது கலியாணம் அல்லது சாமத்தியம், போலி கௌரவம்,பந்தா , ஒன்பது சீட் மேர்சிடெஸ் வான் . என்று அதே சூழலில் ஒன்றிப்போய்வாழ்பவன் என்பதால் சமூகத்துக்கு பயந்து  தனக்கு கௌரவப் பிரச்னை எனவே பரிசோதனை குழாய் மூலம் குழந்தை தனது மனைவிக்கே பிறந்ததாய் இருக்கட்டும் பிள்ளை கிடைக்கும் வரை வரை சுபாவை தமிழ் நாட்டிலேயே தங்க வைக்கப் போகிறேன்   வாடகை தாய் பற்றிய விடயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தான் .நானும் இங்கு எழுதும்வரை யாரிடமும் சொல்லவேயில்லை என்பது சத்தியம் .நானும் அவனுக்கான எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டு பிரான்ஸ் திரும்பி விட்டிருந்தேன்.அதன் பிறகு அடிக்கடி இந்தியா போய் வந்து கொண்டிருந்தவன் மனைவி பிள்ளையோடு பிரான்ஸ் வந்ததும் போனடித்தவன் மகனுக்கு நீயூமாலயி  முறைப்படி A ..  R  அல்லது A .V வருகிற மாதிரி ஒரு பெயர் சொல்லடா என்று  கேட்டான் ..

இதுக்கும் நான்தான் கிடைச்சனா என்றபடி A  .R  .ரகுமான் எண்டன் அது முஸ்லிம் பெயர் வேறை சொல்லு எண்டான்.   யோசித்து விட்டு அடுத்தது...  Aரை ..Vந்தன் . அரை ..விந்தன் ..அப்பிடியே ஸ்ரைலாய் சுருக்கினால் அரவிந்த்...அவனிடம் சொன்னதும் அதையே மகனுக்கு பெயராய் வைத்து விட்டான் .இப்போ மகனின் முதலாவது பிறந்தநாள் அதற்குதான் வந்திருக்கிறேன். பாரிஸ் நகரம் லேசாய் இருள் கவ்வத் தொடங்கியிருந்தது குளிர் அதிகம் இல்லை  .பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் நகரை வளைத்துப் பாயும் செய்ன் நதியில் ஈபிள் கோபுரத்துக்கு அருகில் ஒரு உல்லாசப் படகை முழுவதுமாய் வாடகைக்கு எடுத்திருந்தான்.அவன் முதலில் ஆற்றங் கரையில் உள்ள படகுக்கு வா ..என்றதும் இவன் எதுக்கு வள்ளத்திலை பிறந்தநாளை கொண்டாடுகிறான் என்று நினைத்தபடி அங்குள்ள சிறிய வள்ளங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு கடையாக அவனுக்கு போனடித்து விபரம் அறிந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த பிரமாண்டமான உல்லாசப் படகை தேடிப் பிடித்ததும் எனக்கு ஆச்சரியம்.

உள்ளே நுழைந்தது சரியான இடத்துக்குத்தான்  வந்திருக்கிறனா என சுற்றிவர நோட்டம் பார்த்தேன்.அங்கு பெரும்பாலும்  முன்நூறுக்கும் தமிழர்கள் கையில் கோப்பைகளோடு தின்பண்டங்களை கொறித்தபடி குழுக்களாக கதைத்தபடி நின்றிருந்தார்கள்.நண்பனை தேடினேன் என்னைக் கண்டவன் ஓடிவந்து அப்படியே இறுக்கி கட்டிப் பிடித்து வரவேற்றவன்  என்னடா இவ்வளவு லேர்றாய் வாராய் உன்னைத்தான் பாத்துக்கொண்டு நிக்கிறன் எண்டவன் கையைப் பிடித்து இழுத்துப் போனான் .அவன் ஓடி வந்து கட்டி அணைக்கும் போது நான் வாங்கிப்போன பரிசுப் பொருள் அவனது அன்பில் நசுங்கி உடைந்துவிடாமல் அதை பாது காக்க கையை தலைக்குமேலே  உயர்த்திப் பிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .நானும் பரிசு வாங்கி வந்திருக்கிறேன் என்று எல்லாருக்கும் காட்டியது மாதிரி எல்லாரும் நினைதிருப்பான்களோ ..??வெட்கமாகவும் இருந்தது .இதுவரை காலமும் எல்லாருக்கும் குடுத்த மொய் பணத்தையும் ஒரே தடவையில் வசூலித்துவிட நண்பன் நினைத்திருக்கிறான் என்பது அங்கு நின்றிருந்த சனத்தொகையில் தெரித்தது ..

என்னை இழுத்துப்போன நண்பன் சுபாவின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான்.என்னைக் கண்டதும் கண்கள் லேசாய் பனிக்க  எல்லாத்துக்கும் நன்றி அண்ணை என்றபடி கையிலிருந்த குழந்தையை என்னிடம் தரவும் நான் கொண்டு போன பரிசுப் பொருளை நண்பனிடம் கொடுத்து விட்டு குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டு திரும்ப சுபாவிடம் கொடுத்து நண்பன் கையில் இருந்த பரிசுப் பொருளை வாங்கிப் பிரித்து குழந்தையின் கையில் கொடுக்கவும் சிவா அவசரமாக விலையுயர்த்த சம்பெயின் ஒன்றை சத்தமாக உடைத்தவன் அதன் நுரை சீறிப்பாய இரண்டு கிளாசில் ஊற்றியவன் ஒன்றை என்கையில் தந்து மற்றயதை தனது கையில் உயர்த்தி எனது கிளாசோடு முட்டியவன்  மச்சான் உண்மையிலேயே இண்டைக்கு நான் நல்ல சந்தோசமாய் இருக்கிறன் அதுக்கு காரணம் நீ தண்டா  வாழ்க்கையில மறக்க மாட்டன் என்றான் .அவனது நாக்கு தளதளத்தது ..டேய்  இதுக்கெல்லாம் உணர்ச்சி வசப் படாதை வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான் ..உனக்கொரு நல்ல காலம் பிறக்கும் எண்டு நான் சொன்னான் தானே  அது மாதிரியே நல்லா காலம் பிறந்திருக்கு  என்று  அவனது தோளில் தட்டி ஆறுதல்படுத்தி விட்டு சுபாவை திரும்பிப் பார்த்தேன் நான்  கொடுத்த கிலு கிலுப்பையை கையில் வைத்து கிலுக்கியபடி குழந்தை சிரித்துக் கொண்டிருக்க சுபா அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் .

ஜெய்   ஜக்கம்மா .......நல்லா காலம் பிறக்குது ...


No Comment