அருளினியனின் பதிவு
Aruliniyan Mahalingam
சாத்திரி எழுதிய 'ஆயுத எழுத்து' நாவலின் இறுதி எடிட்டிங்கை நான் செய்தேன். எடிட்டிங் செய்த அந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மன உளைச்சலுக்கு உள்ளானேன். சாத்திரி எழுத்திலே வடித்தவை காட்சி விம்பங்களாகி என்னை மிகவும் தொந்தரவு செய்தன. ஈழப் போராட்டம் சம்பந்தமாக நான் புரிந்து வைத்திருந்த பலவற்றை 'ஆயுத எழுத்து' கேள்வி கேட்டது. ஆயுத எழுத்தைப் பற்றி பொதுவெளியில் இது வரை ஒரு வரி கூட எழுதவில்லை. எழுதவும் தோணவில்லை. ஆனால், 'ஆயுத எழுத்து' சம்பந்தமாக எனது பதிவு அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன். நான் பிறந்த காலப்பகுதியில் ஈழப் போர் உச்சத்தில் இருந்தது.
நான் பிறந்திருந்த முதல் வாரத்தில், எமது குடும்பத்தையே இந்தியன் ஆமிக்காரன் கொல்ல வந்ததாகவும், பச்சைக் குழந்தையாக இருந்த என்னைக் காட்டி எனது அம்மாச்சி அவர்களிடம் உயிர்பிச்சை கேட்டதாகவும் சொல்வார்கள். எனது 20 வது வயது வரை ஈழப்போரானது எனது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. எனக்குத் தெரிந்து விடுதலைப் புலிகள் என்ற ஒரே ஒரு அமைப்பு மட்டும்தான் தனி நாட்டிற்காகப் போராடினார்கள். ஒரே தலைவர் அவர் பிரபாகரன். அவர் எங்களின் மீட்புனர். ஒரே விடுதலை இயக்கம் அவர்கள்தான் விடுதலைப் புலிகள். 'புக்காரா' குண்டுவீச்சுக் கிடையிலும், கடுமையான 'ஷெல்'அடிக்கிடையிலும் பிறந்து வளர்ந்ததால், எனது ஈழ வாழ்க்கையை, ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி, கொஞ்சம் பயத்துடனும், கொஞ்சம் நம்பிக்கையீனத்துடனும்தான் என்னால் நினைவு கூற முடியும்.
ஈழப் போராட்டம் சம்பந்தமாக என்னளவில் பல நம்பிக்கைகள் இருந்தன. ஆயுத எழுத்து நாவல் என்னளவிலும் முக்கியமானது. ஏனென்றால் ஈழப் போராட்டம் சம்பந்தமான எனது பல நம்பிக்கைகளை இந்த நாவல் உடைத்தெறிந்தது. ஆயுத எழுத்தைப் பற்றி சொல்வதற்கு முதல் சாத்திரியைப் பற்றி சொல்வது அவசியம். சாத்திரியார் எனக்கு அறிமுகமாகி சுமார் இரண்டு வருடங்கள் இருக்கலாம். நான் அவருக்கு முதன் முறையாக தொலைபேசிய போது தி.நகரில் இருந்தார் 'தம்பி, மனிசியோட புடவை எடுக்க வந்தனான்' 'எப்ப கோடம்பாக்கம் வருவியள் அண்ண' 'போற போக்கைப் பாத்தால் ரெண்டு நாள் ஆகும் போல' என்றார். அன்றே தி.நகர் சென்று அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை சிலருக்குப் பிடித்து விடும். இல்லையா...? சாத்திரிக்கு என்னையும், என்னை சாத்திரிக்கும் பரஸ்பரம் பிடித்துவிட்டது. இன்றும் கூட ஒரு அண்ணன் ஸ்தானத்தில் வைத்து அவரை நான் மதிக்கிறேன். சந்தித்த முதல் நாளே, ஒரு விஸ்கியுடன் தனது வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தார். போராட்டத்தில் சேர்ந்தது, மாற்று இயக்கங்களைப் போட வேண்டி வந்தது, நண்பனுக்கெதிராக துப்பாக்கியை தூக்கிய நொடி, ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், பெண் சகவாசம், என எல்லாவற்றையும் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். குரலின் எந்த நொடியிலும் ஒரு துளி குற்ற உணர்ச்சியையும் நான் காணவில்லை. கொலைகளை அவர் விபரித்தவிதம் ஏதோ பெரிய சகாசக்காரன் தனது சகாசத்தை விபரிப்பதுபோல இருந்தது.
இவர் மனிதனா...? என எண்ணிக் கொண்டிருந்தேன். தனது மகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். கண் கலங்கினார், போதை பெரிதும் ஏறாமலேயே அழுதார். 'எளியவனா இருந்தேன் தம்பி. ரத்தமும் சதையுமா மகளைக் கையில தந்த நொடிதான் மனிதனாக மாறினேன்' என்றார். அது சம்பந்தமாக பல கதைகள் சொன்னார். அவற்றை இங்கே எழுதக் கூடாது. நம்பிக்கை சம்பந்தப்பட்டவை. சாதாரண மனிதத் தன்மையுட சாத்திரி போன்றவர்களை, போராட்டம் எந்த அளவிற்கு மாற்றி இருக்கிறது என உணர்ந்த நொடி அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் சாத்திரியை எடுத்த பேட்டிகள் 'சாத்திரி பேசுகிறேன்' என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் பதிவாகி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
வழமைபோல சில நண்பர்கள் என்னைத் துரோகி என்றார்கள். சிலர் தொலை பேசியிலும் மிரட்டினார்கள். அந்த பேட்டியில் சாத்திரி எவ்வளவு தூரம் மனம் திறந்து பேசியிருந்தாரோ, அதே அளவு இந்த நாவலிலும் பேசி இருக்கிறார். 'ஆயுத எழுத்'தை நாவல் என சொல்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. சம்பவங்களின் தொகுப்பை நாவல் எனலாம் என்றால் இதுவும் ஒரு நாவல். எப்படி இருந்தாலும் ஆயுத எழுத்து மிகவும் முக்கியமான ஒரு ஆவணம். பேரினவாதத்திற்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சியுடன் ஆயுதம் எடுத்த ஒரு சாதாரண 'மாணவ'னின் வாழ்க்கை எப்படி அலைக்கழிக்கப்பட்டது என்பதற்கு இந்த நாவல் சாட்சியமாகிறது. விடுதலை என்ற பெயரில் கொலைகளை, மனித உரிமை மீறல்களை, போர்க் குற்றங்களை எல்லாம் எப்படி நாம் இலகுவாக நியாயப் படுத்தினோம் என்பதை இந்த நாவல் பேசுகிறது. வாசிப்பவனைக் பல கேள்விகள் கேட்க வைக்கிறது.
நாவலில் எனக்குத் தென்பட்ட ஒரு சில குறைகள், சாத்திரியார் எனக்கு எப்படி தனது வாழக்கையை சொன்னாரோ அதேபோல ஒரு சகாசக் காரனின் மன நிலையில் தான் பல அத்தியாயங்களைக் கடந்து போகிறார். இப்படியான மொழி நடை சிலவேளைகளில் வாசிப்பவனின் மனதில் நாவலின் உண்மைத் தன்மை சம்பந்தமாக சந்தேகத்தை ஏற்படுத்தும். காமம் சம்பந்தமாக சாத்திரி விபரிக்கும் பகுதிகளில் அவரின் மொழியில் அவதானம் தேவை என்பது எனது கருத்து. இன்னொரு மனக்குறையும் வந்து போனது, சாத்திரி தனது வாழ்க்கை அனுபவங்களாக 'ஆயுத எழுத்'தில் விபரித்தவற்றை வைத்து குறைந்தது பத்து நாவல்களாவது எழுதி இருக்கலாம். ஷோபா சக்தியாக இருந்திருந்தால் குறைந்தது ஆயிரம் சிறு கதையாவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். எது எப்படியோ, ஈழப்போராட்டத்தைக் கவனிக்கும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நாவல் 'ஆயுத எழுத்து' என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.