புத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி
கேள்விகள் - புலிகள் மீதான விமர்சனத்துக்காக ஆயுத எழுத்து நாவல எழுதினீர்களா? அல்லது அது உங்கள் சுயசரிதையா? அல்லது ஈழப்போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை உங்கள் நாவலில் பேச வைத்திருக்கிறீர்களா?
ஆயுத எழுத்து நாவலானது புலிகள் மீதான விமர்சனமோ சுயசரிதையோ அல்ல.முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் நான் நேரில் சந்தித்த, சம்பத்தப்பட்ட சில சம்பவங்களை பதிவு செய்திருக்கிறேன்.அதில் இதுவரை அறியப்படாத அல்லது செய்திகளாக அறியப்படிருந்த பல சம்பவங்களை விரிவாக பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவுதான் . நான் யாரையும் சரி பிழை பார்க்கவோ சம்பவங்களுக்கான தீர்ப்புக் கூறவோ முயற்சி செய்யவில்லை படிப்பவர்களே அதை செய்துகொள்வார்கள் .
02. ஆயுத எழுத்து நாவலை வாசிப்பதற்கான ஆர்வம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் அதன் விற்பனையோ தலைமறைவில் - இரகசிய நடவடிக்கை போல உள்ளதே. இதற்கு என்ன காரணம்?
மேலே சொன்னதுபோல பலர் விடுதலைப் புலிகள் பற்றி செய்திகளாக அறியப்பட்ட சில சம்பவங்களை நான் விரிவாக எழுதியிருப்பதால் விடுதலைப்புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தக் கூடாது என்று தங்களை தீவிர விடுதலைப்புலி விசுவாசிகளாக கட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் இந்த நாவல் வெளிவருவதை விரும்பவில்லை.நாவல் வெளிவருவதை ,வெளியீட்டை ,அதன் விற்பனையை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனப் பட்டனர்.இவர்களது எதிர்ப்பு எனக்கு எதிர்மறையான விளம்பரத்தை கொடுத்து விட்டது பலருக்கும் இதனை படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டது .எனவே நாவல் வெளிவந்து சிறப்பாக வெளியீடும் நடந்துமுடிந்து நான் பதிப்பித்த ஆயிரம் புத்தகங்களும் இரண்டு மாதத்திலேயே விற்றுத் தீரும் நிலைக்கு வந்துவிட்டது .விரைவிலேயே இரண்டாவது பதிப்பு போடும் வேலையில் இறங்கிவிட்டேன் .
03. இந்த நாவல் வெளியான பின் தமிழ்ச் சூழலில் நீங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் அனுபவங்களும் என்ன?
தமிழ் சுழலில் நான் நெருக்கடிகளை எதிர் கொள்வது ஒன்றும் இது முதல்தடவையல்ல நிறைய அனுபவங்கள் உள்ளது.அதில் பெரிய நெருக்கடி எதுவெனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மே மாதம் 21 திகதி 2009 ஆண்டு வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா ..என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர்கள் புலிகளின் தலைமையிடம் ஆயுதம் வருகிறது காப்பாற்ற அமேரிக்கா வருகிறது என்று நம்பவைத்து கழுத்தறுத்தது மட்டுமல்லாமல் இறுதி யுத்தம்... இதோ தமிழீழம்.. என்று சொல்லி சேர்த்த பலமில்லியன் பணத்தையும் சுருட்டியதோடு பிரபாகனின் மரணத்தை கூட பகிரங்கமாக அறிவித்து ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லைஎன்று சாடியிருந்ததோடு பிரபாகரனுக்கு அஞ்சலியும் செலுத்தியிருந்தேன் .அந்தசமயத்தில்தான் கொலை மிரட்டல்கள், வசவுகள் ,அவதூறுகள் என்று பெரும் நெருக்கடியை நானும் எனது குடும்பமும் சந்தித்திருந்தோம்.பின்னர் இன்றுவரை அதுபோன்ற நெருக்கடிகள் தொடரத்தான் செய்கிறது இப்போவெல்லாம் எனக்கு அவை பழகிப்போய் விட்டது.அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்றொரு பழமொழி உண்டு நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
4. இந்த நாவலை இப்படி எழுத வேணும் என்று ஏன் எண்ணித்துணிந்தீர்கள்?
உண்மையில் நான் இதனை நாவலாக எழுதவில்லை.சம்பவவங்களின் தொகுப்பாக அதில் சம்பதப்பட்டவர்கள். அதன் காலம் திகதி என்று ஒரு ஆவணமாகத்தான் முதலில் 800 பக்கத்தில் எழுதியிருந்தேன்.எழுதியவற்றை சில நண்பகளிடம் காட்டி ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய பலரும் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.உண்மைகள் பேசப்படத்தான் வேண்டும் ஆனால் அவை எமது எதிர்தரப்புகளுக்கு சாதகமாகி விடக்கூடாது இவற்றில் கவனமாக இரு என்று சொல்லிவிட்டார்கள் .எனவே ஆவணத்தை நாவல் வடிவில் மாற்றும் வேலையை செய்தேன் இது ஒரு நாவல் எழுதுவதை விட கடினமாக இருந்தது.சர்சைக்குரிய விடயங்கள் என கருதப்பட்ட பல விடயங்கள் நீக்கப் பட்டு நான் எழுதியதில் பாதியளவு 391 பக்க நாவலாக மாறியது.இதற்கு யோ .கர்ணனும் பெரிதும் உதவியிருந்தார்.இதில் நீக்கப் பட்ட பகுதிகள் இன்னமும் சொல்லப்படாத விடயங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னொரு நாவலாக வெளிவரும் .
5. புலிகள் அமைப்பில் இருந்தவர்களே அந்த அமைப்பை அதிகமாக விமர்சித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. நீங்கள், ஷோபாசக்தி, குணா. கவியழகன், யோ. கர்ணன், நிலாந்தன், தமிழ்க்கவி என ஒரு பட்டியல் இருக்கிறது. இது ஏன்? இந்த மாற்றம் எப்படி எற்பட்டது?
இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றைய நண்பர்கள் புலிகள் அமைப்பை விமர்சிப்பது பற்றி அவர்கள் மாற்றம் பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது.ஆனால் நான் புலிகள் அமைப்பை விமர்சிப்பதில்லை.இல்லாத ஒரு அமைப்பை விமர்சிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. புலிகள் அமைப்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்.அதனை படிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் .
6. ஆயுத எழுத்தின் இரண்டாம் பாகம் வருமா?
நிச்சயமாக ..அதற்கான காலம் வரும்போது ..
7. சாத்திரி சர்ச்சையைக் கிளப்பும் ஆள் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அத்துடன் அவர் இந்திய உளவுசார் அமைப்புகளுடன் தொடர்புள்ளவர். போராட்டத்தை தேவையற்ற விதமாக விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுககு உங்கள் பதில் என்ன?
நான் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை உண்மையை எழுதுவது பலருக்கு விரும்பப்படாத சர்ச்சையாக உள்ளது .மற்றும்படி இந்திய உளவுசார் அமைப்போடு தொடர்புள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு எனது பதில் என்னவெனில் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அது தனது தேவைக்காக எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புகளை கொண்டிருந்ததோ அவர்கள் ஊ டாக அந்த அமைப்புகள் அனைத்தோடும் எனக்கு தொடர்புகள் இருக்கிறது .புலிகளுக்கு இந்தியாவில் முதலில் ஆயுதப் பயிற்ச்சியை வழங்கி ஆயுதம் கொடுத்தும் சில தாக்குதல்களை நடத்த ஆலோசனை வழங்கியதும் இந்திய உளவுப்பிரிவுதான் என்பதை பலர் சாவகாசமாக ஏனோ மறந்து விடுகிறார்கள். மற்றும்படி ஆதாரமற்ற எழுந்தமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயமாக கருதுகிறேன்
8. ஆயுத எழுத்து உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன? அது தந்த வெற்றிகள் என்ன?
ஆயுத எழுத்து எனக்கு பாதிப்பு வெற்றி என்பதுக்கப்பால் மன திருப்தி .
9. ஆயுத எழுத்து நாவலில் சில விடயங்கள் தவறாகச் சொல்லப்படுகின்றன என்று நாவலில் குறிப்பிடப்படும் சம்பவங்களோடு தொடர்பானவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக சிறிசபாரட்ணத்தை முதலில் கண்டவர், வளலாயில் உள்ள ஈ.பி.ஆர்.எல். எவ் முகாம் தாக்குதல் பற்றிய விவரம். பிரான்ஸில் கொல்லப்பட்ட நாதன், கஜன் ஆகியோரின் கொலைக்கும் புலிகளின் தலைக்கும் தொடர்பில்லை என்ற விடயங்கள். இது பற்றிய உ்ங்கள் பதில் என்ன?
ஒரு நாவலில்.ஒரு செய்தியில் அல்லது ஒரு கட்டுரையில் வரும் விடயத்தை இப்போதெல்லாம் பலர் தவறு என்று சொல்லவரும்போது ஒற்றை வரியில் இதெல்லாம் பொய் .அப்படி நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் மறுப்பதுதான் பரவலாக நடக்கிறது.ஒரு விடயத்தை பொய் என்று மறுப்பவருக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும் அவர் அந்த உண்மையை ஆதாரத்தோடு கூறி நான் சொல்வது பொய் என்று இதுவரை யாரும் நிருபிக்கவில்லை .அடுத்ததாக புலிகள் அமைப்பின் வெற்றிகளுக்கு எல்லாம் தலைவரின் நேரடி வழிகாட்டுதல் என்று புகழ்த்து கொண்டும் அவர்களால் நடத்தப்பட்ட தவறான சம்பவங்கள் அனைத்துக்கும் தலைவருக்கும் தொடர்பில்லை என்று சப்பைக் கட்டு கட்டும் ஒரு கூட்டம் வெளி நாடுகளில் உள்ளனர்.ராஜீவ் காந்தி .பத்மநாபா .அமிர்தலிங்கம் தொடக்கி நாதன் கஜன் கொலை வரை தலைவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் புலிகள் இயக்கத்தை இயக்கியது யார் ?? தலைவர் யார் ??அப்படி சொல்பவர்கள் பிரபாகரன் ஒரு ஆழுமையற்ற தலைவர் என்று சொல்கிறார்கள் என்பது தான் அர்த்தம் .
10. வரலாற்றுச் சம்பவங்களை படைப்பாக்கும் போது - புனைவாக்கும்போது படைப்பாளிக்கு எற்படும் சவால்கள் என்ன? படைப்பாளி எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு என்ன?
வரலாற்று சம்பவங்களை படைப்பக்கும்போது அந்தச் சம்பவங்களோடு சம்பத்தப் பட்ட நபர்கள் உயிரோடிருப்பின் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது .அடுத்தது எமது படைப்பானது எங்கள் பொது எதிரிக்கு வாய்ப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது எல்லாவற்றையும் விட முக்கியமானது படைப்பில் வரும் சம்பவங்கள் அனுபவங்களாக நன்கு அறிந்தோ அல்லது அதுபற்றி சரியான தகவல்களை திரட்டிய பின்னர் எழுதப்பட வேண்டும் .ஏனெனில் படைப்பில் ஒரு தவறான தகவல் சேர்க்கப்பட்டிருபின் ஒட்டு மொத்த படைப்பே தவறானது என நிராகரிக்கப் பட்டுவிடும் அபாயம் உள்ளது