நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து
நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து:இரு நூல்கள் ஒரு அறிமுகம்
ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் இருவரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஒரு நூல் போராளி ஒருவரின் நினைவுக்குறிப்புகள். மற்ற நூல் “சிப்பாய் ஒருவரின்” நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நாவல்(?). இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.
சாத்திரி என்ற கௌரிபால் சிறி எழுதிய ஆயுத எழுத்து நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் ரொரன்டோவில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார்கள். மதிய உணவு நேரம் யாராவாது கூட்டத்தை ஆரம்பிப்பார்களா என்ற எரிச்சல் மனதில் இருந்தாலும் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் 2 மணிக்குச் செல்வது எனத் தீர்மானித்தேன். இந்த நேரத்திற்கு செல்வதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் செய்து உடன்பாடு காணவேண்டி இருந்தது. ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அப்படி. வழமையாக எந்த நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக வேண்டும் என நினைப்பதுடன் நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கவும் வேண்டும் என விரும்புபவன். ஆனால் நிகழ்வுகளை நடாத்துகின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. இதனால் நமக்குள் பிர்ச்சனை உருவாகும். ஆகவே ஒரளவு மதிப்பிட்டு அரை மணித்தியாலம் தாமதமாக சென்றாலும் நிகழ்வு ஆரம்பிக்காது. இது எனக்கு மேலும் பிரச்சனையை உருவாக்கும். மேலும் யார் எந்த நிகழ்வு நடத்தினாலும் சமூக அரசியல் விடயங்கள் சார்ந்தது எனின் எனக்கு ஆர்வமானது எனின் நிச்சயமாக செல்வேன். யார் ஒழுங்கு செய்கின்றார்கள் எனப் பார்த்து முடிவெடுப்பதல்ல எனது தெரிவு. ஆனால் இங்கு பலர் அப்படித்தான் செய்கின்றார்கள். இதனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட நிகழ்வை ஒழுங்கு செய்பவர்களின் நண்பர்களில் சிலர் மட்டுமே வருகின்றனர். ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளவையா என்ற கேள்வியும் உள்ளது.
ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்வு இவ்வாறான அசாதாரணமான நேரத்திற்கு அறிவித்தது மட்டுமல்ல இடமும் வழமைக்கு மாறாக புதியதொரு இடம். அதுவும் இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. விலாசம் இல்லை. இது கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. இப்படி பல காரணங்களால் நிகழ்வு இரண்டரை மூன்று மணியளில் ஆரம்பமானது. இந்த நிகழ்வை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்திருந்தது.
தர்சன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கி சிறப்பானதொரு விமர்சன உரையை நிகழ்த்தினார். இந்த நூல் ஒரு போராளியின் படைப்பு அல்ல எனவும் மாறாக ஒரு சிப்பாயின் நினைவுக்குறிப்புகள் என இவர் குறிப்பிட்டார். ஏனெனில் ஒரு போராளிக்கு சமூக உணர்வும் பொறுப்பும் இருக்கும். தனக்கு என்ற ஒரு சுய சிந்தனை மதிப்பீடு இருக்கும். இந்த அடிப்படைகளிலையே தனது தலைமையுடன் இணைந்து பங்களிப்பார். ஆனால் ஒரு சிப்பாய்க்கு இவை எதுவும் இருக்காது. மேலிடம் என்ன சொல்கின்றதோ அதை எந்தக் கேள்விகளும் இல்லாமல் பின்பற்றுவதும் நிறைவேற்றுவதுமாகும். அவ்வாறான ஒரு பாத்திரமே ஆயுத எழுத்தில் வருகின்ற அவன் என்கின்ற பாத்திரம். மேலும் ஹொலிவூட் ரக சாகாச கதாநாயகன் போன்ற ஒருவராகவே இப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூல் ஒருவகையில் முக்கியமானது. அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்க மேல் மற்றும் மத்திய வர்க்க மற்றும் சாதிகளின் கருத்துக்களே ஈழவிடுதலைப் போராட்டத்திலும் மேலோங்கி இருந்தன என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது என்றார். (இந்த உரையை விரைவில் தர்சன் அவர்கள் பொதுத் தளம் ஒன்றில் பகிர்வார் என நம்புகின்றேன்).
முன்னால் வைகறை ஆசிரியர் ரவி அவர்கள் தனது அனுபவங்கள் மற்றும் தான் அறிந்த தனக்குத் தெரிந்த தகவல்களுடன் எவ்வாறு இந்த நூல் முரண்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டார். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் மீதான தாக்குதல் கற்பனை கதையாக கட்டப்பட்டிருக்கின்றது. புலிகளே திட்டமிட்டு ஈபி முகாம்களின் மீது இறுதித் தாக்குதலை தொடுத்தனர். இத் தாக்குதல் நடப்பதற்கு முதல் இரு பகுதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இதில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் தந்தையின் தலைமையில் யாழ் பல்கலைக்கழத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்பொழுது புலிப்போராளிகளின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் நன்றாக உடைகள் அணிவித்து அன்றைய ஈபியின் மக்கள் இராணுவத்தின் தளபதி தேவானந்தா அவர்கள் கொடுத்தார். ஆனால் புலிகள் இயக்கத்தினர் அந்த உடல்களுக்கு எந்த மரியாதையும் செய்யாது அவமதித்ததுடன் பொறுப்பற்ற முறையில் கையளித்தனர் என்றார். இந்த இடத்தில் தேவானந்தா தொடர்பாக இன்னுமொரு குறிப்பையும் குறிப்பிடலாம். பொன்னுத்துரை (குமரன்) அவர்களும் புளொட் ஈபி இயக்க மோதலின் மோதும் தேவானந்தா அவர்கள் மிகவும் பண்புடனும் தோழமையுடனும் செயற்பாட்டார் எனத் தனது நூலில் குறிப்பிடுகின்றார். (இன்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்றானாலும் அக் காலத்தில் இவ்வாறான பண்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை நாம் புறக்கணிக்க கூடாது).
சாம் சிவதாசன் அவர்கள் தனக்கு இயக்க அனுபவங்கள் மற்றும் சார்புகள் இல்லை என்பதால் தனது பார்வை பொதுமக்கள் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்றார். இவ்வாறு பலரும் தம் அனுபவங்களை எழுதும் பொழுதே நாம் உண்மையான ஒரு வரலாற்றை இவற்றிலிருந்து தொகுத்துப் பெறலாம். இந்தவகையில் இந்த நூல் வரவேற்கத்தக்கது என்றார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் இவ்வாறான நூல்களின் வரவுகள் அவசியமானதும் முக்கியமானதும் என்பதில் முரண்படவில்லை. ஓவியர் ஜீவன் அவர்களை உரையாற்ற அழைத்தபோது அந்த அழைப்பை மறுத்து கலந்துரையாடலில் தனது கருத்துக்களை கூறுவதாக குறிப்பிட்டார். உரையாடலின் போது டெலி மற்றும் டெலா இயக்கங்களின் தலைவர்களை புலிகளின் தலைமை திட்டமிட்டே அழித்ததாக குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல நினைத்ததை சாதிக்க கூடியவர்களாகவும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தமை புலிகளின் தலைமைக்கு சவாலானதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார். இதனாலையே வஞ்சகமான சூழ்ச்சியூடாக அவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் இது ஒரு நாவலுக்கான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் வாசிக்கும் பொழுது எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார். ஆனால் தனித் தனிப் பதிவுகளாக வாசித்தபோது இருந்த பாதிப்பு நாவலாக்கியபோது மறைந்து போனது என்றார். அதேவேளை த.அகிலனின் மரணத்தின் வாசனை என்றை சிறுகதைத் தொகுப்பு தனக்கு ஒரு நாவல் வாசித்த உணர்வைத் தந்ததாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலர் தமது கருத்துக்களைக் கூறினர். குறிப்பு எடுக்காது நினைவிலிருந்து எழுதுவதால் பல நினைவிலிருந்து மங்கிப்போய்விட்டன. புலிகள் இயக்கத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இயக்கங்களையும் நக்கலடிக்கவும் மலினப்படுத்தவும் இந்த நூல் தவறவில்லை எனக் கூறினேன். இவர் இவர்களது நேர்மறைப் பாத்திரங்களை மறந்தும் குறிப்பிடவில்லை. மேலும் இது ஒரு நாவலே இல்லை. மாறாக ஒருவரின் அனுபவக் குறிப்புகள். இதற்கு நாவல் வடிவம் கொடுப்பதற்கு தன்னைப் பாதுகாக்கின்ற ஒன்றே காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு தன்னைப் பாதுகாப்பாதில் இருக்கின்ற அக்கறை மற்றவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இல்லாமல் இருப்பது இதிலுள்ள பல குறைகளில் ஒரு குறை. முக்கியமாக திலகர் அவர்களின் இன்றைய நிலை தொடர்பாக ஒருவரும் ஒன்றும் அறியாத நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறமல்ல. இதுபோல சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் தென் ஆபிரிக்க வைத்தியர் தொடர்பாக இலகுவில் அடையாளப்படுத்தக் கூடியவகையில் தெரிவித்திருப்பதும் அறமல்ல. இதேபோல் யோ.கர்ணன் அவர்களும் தனது நூல் ஒன்றில் எழிளனை வெளிப்படையாக அடையாளப்படுதியிருந்தார். இவர்களது வாழ்வு கேள்விக்குறியாக இருக்கின்ற இக் காலங்களில் இவ்வாறு செய்வது அறமல்ல.
சாத்திரியின் (பாத்திரத்தின்) பார்வை பெண்கள் தொடர்பாக மிகவும் மலினமான பார்வையாக உள்ளது. ஏற்கனவே நண்பர்கள் குறிப்பிட்டதுபோல ஹொலிவூட் காதாநாயகன் ஒருவன் எவ்வாறு பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பானோ பயன்படுத்துவானோ அவ்வாறே இவரும் (அல்லது இவரது கதாநாயகனும்) பார்க்கின்றார். அதுவும் அரசியல் தலைமைகளின் தவறுகளால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் உணர்ச்சிகள் மேலிட அரசிடம் சென்று பணிபுரிந்த ஈபிஆர்எல்எவின் பெண் ஒருவர் தொடர்பாக மிகவும் மோசமாகக் குறிப்பிடுவதுடன் அவரது மரணத்தில் ஆனந்தமடைவது நமது போராட்டத்தின் எதிர்மறை விளைவுகளால் ஏற்பட்ட ஒரு இழி நிலை எனலாம். அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய பேய்க் கதைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இது.
இந்த நூலில் மகிழக் கூடிய ஒரு விடயம் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான குறிப்பு. இவ்வாறான ஒரு குறிப்பை இதுவரை யாரும் தமிழில் எழுதி நான் வாசித்ததில்லை. அதுவும் புலிகளிலிருந்து வந்த ஒருவர் எழுதியது ஆச்சரியமானதே. எல்லாம் காலத்தின் மாறுதலேயல்லாமல் மன மாறுதலோ அரசியல் அடிப்படையிலான புரிதலோ அல்ல என்பது வெளிப்படை. அதனால்தான் எல்லாவற்றையும் குறிப்பிட்ட இவர் கந்தன் கருணையும் ராஜினியையும் இலகுவாக மறந்துவிட்டார். அல்லது தவிர்த்து விட்டார். மேலும் கேசாயினி இந்த நூல் தொடர்பான தனது விமர்சனக் குறிப்பில் வடக்கையும் மலையகத்தையும் இவர் மறந்துவிட்டார் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கு காரணம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இவருக்குள் இருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தான் என்றால் தவறல்ல. மேலும் இவர் முகநூலில் தான் மலையகத்திற்கும் கிழக்குப் பகுதிக்கும் பயணம் செய்யவில்லை ஆகவே எழுதவில்லை என்கின்றார். இதுவே போதும் இது ஒரு நாவலல்ல வெறும் நினைவுகளின் குறிப்பே என கூறுவதற்கு. ஏனெனில் ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவதை ஏதாவது ஒருவகையில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு பதிவு இது ஒரு படைப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகியிருக்கும். இந்த நூலின் கதாநாயகனான “அவனுக்கு” அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களுடனும் பெண்களுடனும் நடைபெறும் ஒரு சாகாசப் பயணம். அவ்வளவுதான்.
,,,,,,,,,,,,,,,………,,,,,,,,
குமரன் என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை அவர்களின் நினைவுக் குறிப்புகளான நான் நடந்து வந்த பாதை என்ற நூலின் அறிமுகம நிகழ்வை தேடகம் அமைப்பினர் ஒழுங்கு செய்தனர். இதில் தேடகம் குமரன், பரதன் மற்றும் ரகுமான் ஜான் ஆகியோர் உரையாற்றினர். பரதன் அவர்கள் தனது கழக மற்றும் உமாவுடனான உறவு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்.
ரகுமான் ஜான் உரையாற்றும் பொழுது நாம் ஏன் தோற்றுப்போனோம் என்ற வினாவை எழுப்பினார். ஒவ்வொருவரும் மற்றவர் முட்டாள் எனவும். தான் அனைவரையும் திறமையாக வெட்டி ஆளுகின்றேன் எனவும் நினைப்பதுண்டு. இவ்வாறு தான் மற்றவரும் நினைக்கின்றார் என்பதை ஒருத்தரும் புரிந்துகொள்வதில்லை. இது சமூகத்திலிருக்கின்ற குட்டி பூர்சுவா சிந்தனையின் வெளிப்பாடாகும். இந்த சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இது எந்தவிதமான சமூக ஆய்வுகள் மற்றும் வரலாறு தொடர்பான புரிதல்கள் எதுவும் இல்லாமலே வெளிப்படும் கருத்தியலாகும். ஆகவே நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்வினையாகவும் உடனடி முடிவுகளை முன்வைப்பதாகவுமே இருக்கும். இது பிரச்சனைகள் தீர்க்கப்படுவது மற்றும் முன்னேறுவது போன்ற தோற்றப்பாடுகளைத் தரும். ஆனால் இது முன்னேற்றமல்ல. இதுவே நமது போராட்டத்திற்கும் நடந்தது. இதன் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் தமது சந்தேகங்களைக் கேட்டனர்.
இந்த நூல் சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பற்றியது அல்ல. மாறாக தான் செயற்பட்ட இயக்கத்திற்குள் இருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான செயற்பாடுகள் தொடர்பானது என்றால் தவறல்ல. போராட்டத்தை சரியா பாதையில் கொண்டு செல்ல பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் வென்றது அதிகாரத்து ஆயுதப் போராட்டமே. ஈழவிடுதலைப் போராட்டதை அழித்ததுவும் அதுவே.
சாத்திரி அவர்களின் ஆயுத எழுத்திற்கும் பொன்னுத்துரை (குமரன்) அவர்களின் நான் நடந்து வந்த பாதைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. முதலாவது சமூகத்தில் நிலவும் ஆதிக்க சிந்தனைகளின் அடிப்படையிலான ஆயுத மோகமும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமும் கொண்ட பணிக்கப்பட்ட கட்டளைகளை மறு கேள்வி இல்லாமல் பின்பற்றுகின்ற ஒரு சிப்பாயினது நினைவுக் குறிப்புகள். இங்கு ஆயுதமே முனைப்பானதாக இருக்கின்றது. இரண்டாவது சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, எதிர்த்து கேள்வி கேட்கின்ற, மக்கள் மற்றும் போராளிகள் மீது அக்கறை கொண்ட பொறுப்புணர்வுள்ள ஒரு போராளியின் மன உளைச்சலே இந்த நினைவுக் குறிப்புகள். இப் போராளியின் நினைவுகளை இவ்வாறு எழுதவைத்தது இவர்களை ஆதிக்கம் செலுத்திய ஆயுதங்களே. இருப்பினும் இங்கு முனைப்பு பெற்றிருப்பது அரசியலும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் விடுதலையும் என்றால் மிகையல்ல.
இவர்கள் நடந்து வந்த பாதைகளில் எல்லாம் ஆதிக்கம் செய்தது ஆயுதமே. ஆகவேதான் நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து எனத் தலைப்பிட்டுள்ளேன்.
மீராபாரதி