Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து (எனது நாவல்)

2:15 PM, Posted by sathiri, One Comment

என்னுரை

வாசகர்களிற்கு வணக்கம்..

இது வரை காலங்கள் பத்திரிகை,சஞ்சிகைகளில் சிறு கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த எனது முதலாவது நாவல் முயற்சி இது.கடந்த முப்பது வருடங்களாக இலங்கைத்தீவில் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்து விட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் நான் பார்த்த, கேட்டு அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்களையும், 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தொடங்கி இந்த நாவலிற்குள் அடக்கியிருக்கிறேன. இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நபருடன் சம்பந்தப் பட்டவையல்ல. பல நபர்களும் சம்பந்தப் பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால் இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனிற்கு நான் பெயரே வைக்கவில்லை. புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவன் என்றே அழைத்திருக்கிறேன். அவன் என்பவன் பலர். அவனிற்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டான். பல கடவுச்சீட்டுக்களில் பல நாடுகளிற்கும் பறந்து திரிந்திருந்தான். ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு பெயர்களில் அறிமுகம் ஆகியிருக்கிறான். எனவே இந்தப் புத்தகத்தினைப் படிப்பவர்கள் பலர் இதில் வரும் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம். பல சம்பவங்கள் அவர்களிற்கு மனதில் நிழலாக நினைவிற்கும் வரலாம். அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். அப்பொழுதெல்லாம் அவனும் ஒவ்வொரு பெயரில் அவர்களிற்கு அறிமுகமாகியிருப்பான். எனவே அவனும் நினைவில் வந்து போவான் ஆகவே அந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தவர்கள் அட..அவனா இவன் என்று தங்களிற்கு தெரிந்த பெயரை நினைத்துக் கொள்வார்கள். அல்லது அட அவனா நீயி என்று வடிவேலு பாணியிலும் நினைக்கலாம்...இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

கிழக்கு மாகாண சம்பவங்களின் தகவல்களை சரிபார்ப்பதற்கு உதவிய கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) ஆகியோரிற்கும்,நாவலிற்கான அட்டை வடிவமைப்பு மற்றும் ஓவியங்களை செய்து தந்த கார்த்திக் மேகாவிற்கும்,பல பகுதிகளாக எழுதி முடித்த கதைகளைத் தொகுத்து ஒரு நாவல் வடிவம் கொடுத்த யோ.கர்ணனிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, நான் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது எழுத்துக்களை வெளியே எடுத்து வந்து அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்,ஒருபேப்பர் பத்திரிகை (இலண்டன்),பூபாளம் பத்திரிகை (கனடா),எதுவரை இணைய சஞ்சிகை( இலண்டன்), மலைகள் (இந்தியா)ஆகிய ஆசிரியர் குழுவினரையும் நன்றியோடு நினைவு கூர்ந்து இந்தப் புத்தகத்தில் என்னுடைய அனுபவங்களில் வெறும் நாற்பது வீதமானவற்றையே பதிவு செய்துள்ளேன். மிகுதியில் பலவற்றை வெளிநாடுகளில் வாழும் பலரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் கருதியும், அதே நேரம் பல விடயங்களை இன்னமும் எழுதக் கூடிய சந்தர்ப சூழ்நிலை உருவாகவில்லையென நான் கருதியதாலும் எழுதவில்லை. குறிப்பாகப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு பற்றிய பல விடயங்கள் இதில் அடங்கும். நான் எழுதாமல் விட்ட மிகுதி அறுபது வீதம் சம்பவங்களை இவற்றுடன் சம்பத்தப் பட்ட வேறு யாரோ ஒரு நாளில் எழுதலாம். அல்லது இந்தப் புத்தகத்தில் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ""அவன்"" என்கிற கதாநாயகனைக் காயங்களோடு உயிரைக் காப்பாற்றி மீண்டுக் கொண்டு வந்து நானே எனது வாழ்நாளின் இறுதிக் காலங்களில் இனியென்ன சாகப் போகின்றேன். மிகுதியையும் எழுதிவிட்டு செத்துப் போகலாமென நினைத்து எழுதவும்கூடும். காலம் என்பது வலியது காலமும் இயற்கையுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே இதனையும் காலத்தின் கைகளிலேயே கொடுத்துவிட்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்..

One Comment

திருத்தமிழ்த் தேவனார் @ 8:45 PM

நூலை வாசித்து விட்டு பதில் வரைகிறேன்.