Navigation


RSS : Articles / Comments


சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 02

12:13 AM, Posted by sathiri, No Comment

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 02 
ஹிருத்திக் நிஹாலே

thamilchelvan_sampoor_01_zps2557a10f.jpg
தமிழ்ச்செல்வனுடன் சம்பூரில்

இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் சொர்ணம் சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தார். அவர் அப்படியிருந்ததற்கு காரணமுமிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளராக இருந்தமை மற்ற எல்லோரையும் விட, அவரை தலைமைக்கு நெருக்கமானவராக காண்பித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இப்படியானதொரு மரபு இருந்து வந்தது. மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளர்கள் இயக்கத்தின் சக்தி மிக்கநபர்களாக இருந்ததற்கு சொர்ணம் மட்டுமே உதாரணம் என்றில்லை. கடாபி, இரட்ணம் என அவரின் தொடர்ச்சிகள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். மெய்ப்பாதுகாவலர் அணியினர், மற்ற எல்லா படையணியினரையும் விடவும் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாகவும், கௌரவம்மிக்கவர்களாகவும் அணுகப்பட்டனர். கிட்டத்தட்ட தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியப்படிமுறையை ஓரளவுக்கு ஒப்பிடலாம்.

மிக நீண்ட காலமாக தனது தலைமைக்கு விசுவாசம் மிக்கவராகவும், குறிப்பிடத்தக்கதொரு தளபதியாகவும் உருவெடுத்தபின்னர், அவர் ஒரு போர்ப்பிரபுவைப் போலவே இருந்தார். சட்டென்ற முன்கோபம், எதையும் எடுத்தெறிந்து அணுகும் மனோபாவம் என்பன அவரைப்பற்றிய விதவிதமான பிம்பங்களை போராளிகள் மத்தியில் உருவாக்கியிருந்தது. இரண்டாம்…ஈழப்போர்க்காலத்தில் அவரின் முன்பாக வெகு இயல்பாக நின்று கதைக்க முடிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருந்திருப்பான்.

மூன்றாம் ஈழப்போர்க்காலத்தில் அவரது வாகனத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு, வாகனச்சாவியை கழற்றிப் போட்டுவிட்டு போராளியொருவன் சென்றான். அப்பொழுது அவர், பல்லிழந்த அல்லது கூண்டில் அடைப்பட்ட சிங்கம். எனினும் அவர் நினைவில் காடுள்ள மிருகமாகவே இறுதிவரை இருந்தார். இன்னும் விளக்கமாக சொன்னால், நரேந்திரமோடியை வட்டச்செயலாளராக நியமிப்பதை போல. அவர் நடந்தால் திசைகள் அதிருமாப் போலவும், எதிரிகள் கிலி கொள்வதைப்போலவும் உருவாகியிருந்த பிம்பங்களிற்கும், அவரது யதார்த்தத்திற்குமிடையில் எதிரெதிரான போக்குத்தான் அவரது வாழ்வின் இறுதியில் இருந்தது.

Balraj-with-Sornam-and-Thamilchelvan-in-
தமிழ்ச்செல்வன், பால்ராஜ், பராவுடன் முகமாலையில்

1990களில் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த அதிகபட்ச இராணுவப்படிநிலை கேணல். 1993 இல் கிட்டுவிற்கு வழங்கப்பட்டது. அந்த சமயத்திலேயே போராளிகள் மத்தியில் சொர்ணத்திற்கு பேச்சுவழக்கில் இராணுவப்படிநிலை வழங்கப்பட்டாயிற்று. பிரிகேடியர் சொர்ணம். இது சாதாரணமாக உருவானதில்லை. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படையினர் தமக்கிடையிலான தொலைத் தொடர்பு உரையாடல்களில் அப்படியொரு சொல்லை பாவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இதனை ஒருவிதமான பரவசத்துடன் மட்டுமே தொலைத்தொடர்பு கண்காணிப்பு பிரிவினர் கேட்டுக் கொண்டிருந்தனர். விரைவிலேயே, போராளிகள் மத்தியிலும் அது ஒரு வழக்கமாகிவிட்டது.

இரண்டாம் காலத்தில் அவர் எப்படியிருந்தார் என்பதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம். 1990 களின் முற்பகுதி. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், தனது அமைப்பில் இருந்த மூத்தவர்களிற்கு விடுதலைப்புலிகள் படிப்படியாக திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒருநாள், பிரபாகரன் சொர்ணத்தை அழைத்தார்.

அவரிற்கும் வயதாகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். சொர்ணம் இதனை எதிர்பார்க்கவில்லை. பார்க்கலாம் என்றிருக்கிறார். அவரது பார்க்கலாம் என்பது பிரபாகரனிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரையாவது காதலித்து, அல்லது மனதில் விருப்பத்துடன் இருக்கிறாரா என பிரபாகரன் கேட்டிருக்கிறார். சொர்ணம் அதனை மறுத்து விட்டார். இதன் பின்னர் இருவரும் அது பற்றி பேசிக் கொள்ளவில்லை. இராணுவச்சிந்தனைகளுடனேயே இருக்கும் இருவர், எப்பொழுதும் பொது விடயங்களில் குறிப்பிட்ட எல்லைகளிற்கு மேல் செல்வதில்லை. அப்படி பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கலாம். அல்லது ஆர்வம் இல்லாமலுமிருக்கலாம்.

இந்த தொடரின் முதல்ப்பகுதியில் சொர்ணம் குறித்து, அவரது குண இயல்புகள் குறித்து பேசும்போது, சொல்லாமல் விட்ட விடயமொன்றுண்டு. எதையும் தீவிரமாக சிந்திப்பவர், இரண்டாவது தெரிவுகள் அற்றவர் என சில இயல்புகளை குறிப்பிடப்பட்டிருந்தேன். இந்த இயல்புடைய இன்னொருவரை விடுதலைப்புலிகள் அமைப்பில் தேடினால், அது அதன் தலைவர் பிரபாகரன்தான். பிரபாகரன் களத்தில் இந்தவிதமான செயற்பாடற்றவர். எப்பொழுதும் அதீத தந்திரோபாயங்களிற்கு முக்கியத்துவம் அளிப்பவர். தனது அமைப்பில் மிகக்குறைந்த போராளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை எப்பொழுதும் அவரிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்த்தான், அவர் பெரும் உயிரிழப்புக்களை குறைக்கும் விதமான இராணுவத் தந்திரங்களில் ஆர்வம் காட்டினார். கரும்புலிகள் அணியின் உருவாக்கம்கூட இந்தவிதமான எண்ணத்தினால் உருவானதுதான். ஆனால் சொர்ணம் அதற்கு நேர்மாறானவர். அவரிடம் உயிரிழப்புக்கள் பற்றிய அக்கறை இருந்ததில்லை. அவர் அர்ச்சுனன் மாதிரி. கிளியின் தலைதான் தெரியும். எந்த இலக்குடன் புறப்பட்டோம் என்பது மட்டும்தான் அவரது நினைவில் இருந்தது. இருந்த போதிலும்,சில உபஇயல்புகள் இப்படி வேறுபட்டாலும், காரியத்தில் தீவிரமாக இருப்பதென்பதில் இருவரும் ஒத்த அலைவரிசையுடையவர்கள். முன்னவரின் தம்பி பின்னவர் எனலாம்.

20-prabhakaran-and-familypsd__zpsc4993cc
பிரபாகரன் குடும்பத்துடன், சொர்ணம், பானு, ஜெயம், சுமன், வெள்ளை

உண்மையில் அதுவரை சொர்ணத்திற்கு காதல் கத்தரிக்காய் என்ற எதுவுமே ஏற்பட்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்னர் நடந்தவை பற்றி இந்த தொடர் கவனம் கொள்ளவில்லை. இதில் குறிப்பிடப்படுபவை அனைத்தும், சொர்ணம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததன் பின்னர்தான்.

அவர் இயக்கத்தில் இருந்த நாட்களில் நினைத்தார், தான் இயக்கத்தில் இருப்பது தலைவரை விசுவாசித்து கொண்டிருக்கவே என்று. அதனையும் மீறி ஒன்றென்றால், இயக்கத்தை விசுவாசித்து கொண்டிருந்தார். அவரளவில் இரண்டும் ஒரே அர்த்தமுடையவைதான்.

ஒருவன் விடுதலைப்புலிகளில் இணைந்து விட்டாலே அவன் அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து விட வேண்டும் என அவர் நினைத்தார். அப்படித்தான் அவரது இயக்க வாழ்க்கை முழுக்க இருந்தது. அவர் பிரபாகரன் மேல் கொண்டிருந்தது அளவிட முடியாத விசுவாசம். இதனை இந்த சம்பவம் புலப்படுத்தும் என நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் மாத்தையா விவகாரம் உருவானது. அதுவரை விடயத்தை மிக இரகசியமாக கையாண்டு வந்த பொட்டம்மான், ஒரு கட்டத்தில் செயலில் இறங்குகிறார். அதுவரை விடயம் யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. பிரபாகரனும், பொட்டம்மானும் மட்டுமே விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றனர். மாத்தையா மீதான சந்தேகம், மற்றும் அதை தொடர்ந்து உருவான பதற்ற நிலைகளின் போது, பிரபாகரன் இந்த விடயத்தில் விட்டுப்பிடிக்கும் முடிவுடன்தான் இருந்தார். மாத்தையா எல்லைமீறிச் செல்ல திராணியற்ற ஒரு விசுவாசியென்பதுதான் அவரது கணக்கு. அவர் அப்படி நினைத்ததற்கு காரணமிருந்தது.

இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில், பிரபாகரன் மணலாற்று காட்டிற்குள் இருந்தார். மாத்தையா வன்னியில் இருந்தார். அந்த சமயத்தில் இந்திய புலனாய்வு அமைபபான றோ அவரை தொடர்பு கொள்ள முயன்றது. கிளிநொச்சியிலிருந்த ஓய்வுபெற்ற தபாலதிபர் ஒருவரின் மூலம்தான் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடந்தன. தபாலதிபரின் குடும்பத்துடன், மாத்தையாவிற்கு நெருங்கிய உறவிருந்தது. இந்திய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்திய தொடர்பை மாத்தையாவும் சங்கடமின்றி ஏற்றுக் கொண்டார். அவர் அந்த தொடர்பை என்ன நோக்கத்துடன் எற்படுத்தினார் என்பதை இந்த கட்டுரையாசிரியரால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, விடுதலைப்புலிகள் இவ்வாறான உத்தியை கையாள்வது வழக்கம். எதிர்த்தரப்பு தொடர்பு கொள்ள முயன்ற சமயங்களிலெல்லாம், அவர்களுடன் உடன்பட்டு செல்வதைப்போல பாவனை பண்ணி, பலனடைந்து கொள்வதற்கு விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு முழுக்க நிறைந்த உதாரணங்கள் இருந்தன.

31ph20_zps7729a1e3.jpg

மாத்தையாவும் சுயமாக முடிவெடுக்க வல்ல ஒரு மூத்த தளபதியென்பதாலும், அந்த சமயத்தில் பிரபாகரனை அடிக்கடி சந்திக்க முடியாததால் அதனை அவரிடம் சொல்லாமலும் இருந்திருக்கலாம். எனினும், அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக நடந்து கொள்ளும் எந்த எண்ணமும் அவரிடம் இருந்திருக்கவில்லையென்பதை உறுதியாக நம்பலாம் என்பதே இந்த கட்டுரையாசிரியரின் முடிவும்.

எனினும், அந்த சமயத்தில் கிளிநொச்சியில் இருந்த லெப்.கேணல் சந்திரன் இதனை தெரிந்து கொண்டதும், பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தார். அந்த சமயத்தில் முத்துஐயன்கட்டு பிரதேசம் விடுதலைப்புலிகளின் இரகசிய சந்திப்பிடம், மறைவிடம், மருத்துவ பிரதேசமாக இருந்தது. கிளிநொச்சியிலிருந்து அங்கு சென்ற சந்திரன், மணலாற்றிலிருந்த தலைவரிடம் மிக அரகசியமாக இந்த தகவலை சேர்ப்பிக்குமாறு அன்புவிடம் சொல்லியனுப்பினார். (லெப்.கேணல் அன்பு. மணலாறு மாவட்ட தளபதியாக இருந்த சமயத்தில் 1993 இல் ஒப்ரேசன் தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்) அன்பு முத்துஐயன்கட்டிலிருந்து மருந்துப் பொருட்களுடன் மணலாறு திரும்பி சென்றதும், விடயத்தை பிரபாரனிடம் கூறினார்.

உடனடியாக பிரபாகரன் மாத்தையாவை மணலாற்றிற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்தார். இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதில், அந்த சமயத்தில் பிரபாகரனிற்கு குழப்பமிருந்தது. ஆனால் மாத்தையாவிடம் அந்த குழப்பமிருக்கவில்லை. இரண்டு நாளின் பின்னர் அவர் மணலாற்றில் நின்றார்.

பிரபாகரன் விடயத்தை நேரடியாகவே மாத்தையாவிடம் கேட்டார். “இந்திய புலனாய்வு அமைப்புடன் உனக்கு தொடர்புள்ளதாக அறிந்தேன். உண்மையா” என்ற பிரபாகரனின் கேள்வியில் மாத்தையா நிலைகுலையவில்லை. ஒரு கணமும் தாமதிக்காமல் ஒத்துக் கொண்டார். அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளலாமா எனப் பார்ப்பதாக அவர் கூறினார்.

ஆனாலும், இந்த விவகாரத்தில் பிரபாகரனிற்கு அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. எதிர்த்தரப்பை கையாளும் கத்திமேல் நடக்கும் விளையாட்டுக்களை, பொதுவாகவே அமைப்பின தலைமைகள் தமது நேரடி கண்காணிப்பில் நடத்தவே விரும்புவார்கள். ஏனெனில், எதிர்த்தரப்பு கச்சிதமாக நடந்து, தமது பக்கத்திலிருந்து ஆட்களை இழுத்து எடுத்து விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை தலைவர்களிடம் இருப்பது வழக்கம்தானே.

இந்த தொடர்பை நிறுத்திவிடும்படி பிரபாரன் கூறி, மாத்தையாவை அனுப்பினார்.

இதன் பின்னர்தான் மாத்தையா விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரானார். சொன்னால் எதையும் கேட்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசி மாத்தையா என்பது பிரபாகரனின் ஆரம்ப கால கணிப்பு. ரெலோ அமைப்பிலிருந்து மாத்தையா பிரபாகரனின் பக்கம் வந்த பின்னர், அவரது தன்னடக்கமான செயற்பாட்டை இந்தியாவில் நடந்த பயிற்சி முகாமொன்றில் நடந்த குழப்பத்தின் போதும் பிரபாகரன் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மாத்தையா விவகாரத்தில் ஆபத்தான விளைவுகள் இருக்கலாமென விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்தும், மாத்தையாவின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் அவரை கைது செய்யலாமென பிரபாகரன் முடிவு செய்தார். அதற்கான அனுமதி கிடைத்ததும், பொட்டம்மானின் அணி வேட்டையில் இறங்கியது.

இதில் அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என்னவென்றால், மாத்தையாவின் நெருக்கமானவர்களாக இருந்ததில் பலர், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர்கள்தான். பிரபாகரனின் தனிப்பட்ட செய்தித் தொடர்பாளர் முருகன், சாரதி செங்கமலன், நிர்வாக பொறுப்பாளர் ஜெரி என பலரை பிரபாகரனின் கொக்குவில் முகாமில் வைத்து அடுத்தடுத்து பொட்டம்மான் நேரடியாக வந்து கைது செய்தார். இந்த கைதுகள் நடக்கும் வரை இப்படியொரு சதித்திட்டம் நடப்பதையே சொர்ணம் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அவர்தான் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதி. புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான் பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனைகள் சொல்வாரே தவிர, வேறு விடயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் கையில்த்தான் உள்ளது. பிரபாகரனின் உதவியாளர்கள், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளர்கள், தொடர்பாளர்கள், செயலர்கள் என அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் பொறுப்புத்தான். மாற்றங்கள் நிகழும் சமயத்தில் எப்பொழுதுதாவதுதான் அதற்கான காரணத்தை பிரபாகரன் கேட்பார்.

மாத்தையா விவகாரம் மற்றும், தான் நியமித்த நம்பிக்கைக்குரிய ஆட்களின் சதிச் செய்தி என்பன சொர்ணத்தை ஆடிப் போகச் செய்துவிட்டது. பிரபாகரனின் பாதுகாப்பில் தான் குறை ஏற்படுத்திவிட்டதாக கருதினார். அவரால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. என்ன செய்வதென குழப்பத்துடன் இருந்தவர், இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்.

தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு, இணுவிலில் இருந்த பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். ஒரு காலைப்பொழுதில் தனது முகாமின் வரவேற்பு பகுதியில் உட்கார்ந்து பொட்டம்மான் காலைத்தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடுதிப்பென சொர்ணம் முகாமிற்குள் நுழைந்தார். சொர்ணத்தின் திடீர் வரவு காவலர்களிற்கும் ஆச்சர்யம்தான். எனினும், அவரை யாரும் எங்கும் அந்த காலத்தில் மறிப்பதில்லை. நேராக உள்ளே சென்றார். பொட்டம்மானும் ஆச்சரியமாக பார்க்க, யாரும் எதிர்பாராத விதமாக பொட்டம்மானின் காலடியில் உட்கார்ந்து விட்டார். அவரது கால்களில் தனது தலையைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக்குலுங்கி அழத் தொடங்கிவிட்டார்.

ஒரு மலை சரிந்து விழுந்ததை அன்றுதான் பலரும் பார்த்தார்கள்.

299_zps043606bf.jpg

பிரபாகரனின் பாதுகாப்பில் தான் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லையென்றும், தற்போதைய சூழலில் எப்பொழுது என்ன நடக்குமென தெரியாமல் உள்ளதால், பிரச்சனையாகும் முன் தலைவரை பாதுகாக்கும்படியும், அவரை உடனடியாக பொட்டம்மானின் பொறுப்பில் எடுக்குமாறும் சொன்னார்.

சொர்ணத்தை ஆறுதப்படுத்தி அனுப்பி வைக்க பொட்டம்மானிற்கு போதும்போதுமென்றாகியிருக்கும். இந்த கோபமும், ஆற்றாமையும், ஆத்திரமும் மாத்தையா கைதின் போது சொர்ணத்திடம் பகிரங்கமாகவே வெளிப்பட்டது.

மாத்தையாவின் சதித் திட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் என கருதிய பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தவர்களை கைது செய்ததன் பின்னர், மாத்தையாவை கைது செய்வதென பிரபாகரன் முடிவு செய்தார். இந்த நடவடிக்கைக்கு யாரைப் பொறுப்பாக நியமிக்கலாம் என்ற இரண்டு தெரிவு பிரபாகரனிடம் இருக்கவில்லை. ஒரேயொரு தெரிவுதான். சொர்ணம்.

சொர்ணம் தனது படையணியினருடன் நடவடிக்கைக்கு கிளம்பினார். சொர்ணத்தின் அணியுடன் ஒரு பா்வையாளரைப் போல பொட்டம்மானும் சென்றார். எனினும், இந்த நடவடிக்கையை முற்றுமுழுதாக சொர்ணமே வழிநடத்தினார்.

ஏற்கனவே பிரபாகரனிற்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என கடுமையான அதிருப்தி மாத்தையா மேல் இருந்தது. அன்று ஒரு துப்பாக்கி மோதலிற்கு தயாராகவே போராளிகள் சென்றனர். மாத்தையாவின் முகாம் வாயிலில், காவல்க்கடமை பலமாக இருந்தது. சில சமயங்களில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம் என்றும் சொர்ணம் தரப்பு நினைத்தது. எனினும், எந்த தயக்கமும் இல்லாமல் வாகனத்தில் இருந்து இறங்கி சொர்ணம், யாரையும் எதிர்பாராமல் முகாம் வாயிலை நோக்கி சென்றார்.

(தொடரும்)

http://pagetamil.com/?p=7454 

No Comment