சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 04
1994களின் முற்பகுதி. அப்பொழுதுதான் மாத்தையா விவகாரம் முடிந்திருந்தது. பாதுகாப்பு அணியிலும் தலைகீழ் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன.
அப்பொழுது பிரபாகரனின் முகாம் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்திருந்தது. பிரபாகரன் ஒரு நடைப்பிரியர். மிக நீண்ட தூரங்களிற்கும் விறுவிறுவென நடந்து செல்வார். இலேசில் களைப்படைவதில்லை. கொக்குவிலின் உள்வீதிகளினால் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஒருநாள் இப்படி நடந்துவிட்டு, முகாமிற்கு வந்தவர் காலைத்தினசரியுடன் தனது வீட்டின் முன்கூடத்தில் வந்தமர்ந்தார். தினமும் நடைப்பயிற்சி முடிந்ததும் நிறைய தண்ணீர் அருந்துவது அவரது வாடிக்கை. அன்றும், வழக்கம் போலவே எல்லாம் நடந்தது. உட்கார்ந்ததும், தண்ணீர்க்குடுவையை எடுத்துவரும்படி ஒரு போராளிக்கு சொன்னார். வீட்டின் உட்பகுதியில் இருந்து அவர் தண்ணீர்க்குடுவையை கொண்டு வந்தார். அப்பொழுது, பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக இருந்த செல்லக்கிளி அந்தப் போராளியை கூப்பிட்டு, தண்ணீரை வாங்கினார். அப்பொழுது அவர்தான் பாதுகாப்பு அணி பொறுப்பாளர். தண்ணீரை பரிசீலித்து பார்க்கப் போவதாக சொன்னார்.
அந்தக்காலப்பகுதியில், பிரபாகரனின் உணவுகளை பரிசீலித்து பார்ப்பதும் பாதுகாப்பு அணித்தலைவர்தான். ஆனால் அந்த பரிசீலனை ஒரு கிரமமானதாக இருந்ததில்லை. பாதுகாப்பு அணித்தலைவர்கள் எப்பொழுதாவது திடீர்திடீர் என பரிசோதித்து பார்த்தார்கள். அப்பொழுது பிரபாகரனை நெருங்கி, பெரும் அபாயங்கள் ஏற்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. மாத்தையா விவகாரம், மற்றும் இதில் குறிப்பிடப்படும் விவகாரங்களின் பின்னர்தான் பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனமான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னாளில், அவரது உணவுப்பரிசோதனையை, அவரது தனிப்பட்ட மருத்துவப்போராளியே கவனித்தார். ஒவ்வொருவேளை உண்பதையும் பரிசோதித்தார். மருத்துவப்போராளி பரிசோதித்த, பன்னிரண்டாவது நிமிடத்தின் பின்னர்தான் பிரபாகரனிடம் உண்ணக் கொடுப்பதை பாதுகாப்பு அணியினர் வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் அப்படியான ஏற்பாடுகள் இருக்கவில்லை. தண்ணீர் கொண்டுபோன போராளியை இடைமறித்து செல்லக்கிளி தண்ணீரை வாங்கி சிறிது குடித்தார். அப்பொழுதுதான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தண்ணீர் குடித்ததுமே, வாந்தி எடுத்தபடி செல்லக்கிளி நிலத்தில் விழுந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. தண்ணீரில்த்தான் ஏதோ பிரச்சனையென நினைத்தார்கள். உடனடியாக செல்லக்கிளி யாழ்ப்பாண பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரபாகரனிற்கும் தண்ணீர் அந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. தண்ணீர்க்குடுவையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
தண்ணீர்க்குடுவையை பரிசீலித்ததில் அதற்குள் சயனைட் கலந்திருந்தது தெரியவந்தது. அது பாதுகாப்பு வட்டாரங்களையே அதிர்ச்சியடைய வைத்தது. சொர்ணம் இரண்டாவது தடவையாக நிலைகுலைந்து போனார். தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அணியில் இவ்வளவு ஓட்டைகள் என்றதும், உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்வதென தெரியாமல் திண்டாடினார். கடந்தமுறையைப்போல, இந்தமுறையும் பொட்டம்மான் தான் அவரை நிலைப்படுத்தினார்.
இம்முறை விசாரணைகளை பொட்டம்மான் நேரடியாக கவனித்தார். இரண்டாம்நாளே, சயனைட் மர்மம் உடைந்தது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த செல்லக்கிளி சிகிச்சை முடிவில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் சயனைட் கலந்ததை அவர் ஒப்பும் கொண்டார். அவரது ஒப்புதல்வாக்குமூலம், சொர்ணத்தின் தெரிவொன்றை சிதைத்தது என்பது இன்னொரு விடயம்.
அப்பொழுது பாதுகாப்பு அணியில், சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபி இருந்தார். கடாபியும் மிகப்பல வருடங்களாகவே, பிரபாரனின் நிழலாக வாழ்ந்து வந்தவர்தான். சொர்ணம், தனது பொறுப்பிலிருந்து மாற்றம்பெற்று செல்வதென்றால், அடுத்து யார் என்ற கேள்வி வந்தது. இது பல தெரிவுகளை கொண்டதல்ல. பலரிற்கு ஒரே தெரிவு. அது கடாபி. சிலருக்கு இரண்டு தெரிவுகள். கடாபி, செல்லக்கிளி. சொர்ணம் இரண்டாம் வகை. இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என சொர்ணம் ஆலோசனை முன்வைத்தார். தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் செல்லக்கிளி மட்டக்களப்பை சேர்ந்தவர். 1985இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, 1987 முதல் பிரபாகரனின் பாதுகாப்பு அணியில் கடமையாற்றி வந்தார். பாதுகாப்பு அணியில் இருவருமே செல்வாக்க மிக்கவர்களாக இருந்தனர். பிரபாகரனுடன் நெருக்கமாக உள்ள முதல்வட்ட பாதுகாப்பு அணியின் பொறுப்பாளராக செல்லக்கிளி இருந்தார்.
எனினும், கடாபி இந்த போட்டியில் எப்பொழுதும் ஒருபடி முன்னால் இருந்து கொண்டிருந்தார். தானும் போட்டியில் உள்ளேன் என்பதை அறிந்ததும், செல்லக்கிளி அதனை குறுக்குவழியில் எட்ட முடிவு செய்தார்.
பிரபாகரன் அருந்தும் நீரில் மிகச்சிறிதளவு சயனைட்தூளை கலந்து விடுவதென அவர் முடிவு செய்தார். பின்னர், அந்த நீரை தானே பருகுவதென்றும் முடிவு செய்தார். அதனை பருகியதும், நடந்த அத்தனை விடயங்களையும் செல்லக்கிளி முன்கூட்டியே அனுமானித்திருந்தார். இதன்மூலம், பிரபாகரனிடம் தன்பற்றிய அபிப்பிராயத்தையும், அனுதாபத்தையும் பெற்றுக் கொண்டு விடலாமென அவர் கருதினார். அவர் நினைத்ததனைத்தும் நடந்தன. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, பிரபாகரன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேரே சென்று செல்லக்கிளியை பார்த்தார். செல்லக்கிளியில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டுமென பொட்டம்மான் கூறிய போது, அதனையும் கடுமையாக ஆட்சேபித்தார். எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு, குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். இந்த காலப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணியின் தளபதியாக கடாபி நியமிக்கப்பட்டார். அளவிற்கதிகமாக விசுவாசம் கொண்டிருந்த தனது தலைவனை பாதுகாக்கும் பணியில் இரந்து சொர்ணம் வெளியேறினார். இதனை இன்னொரு விதத்தில் சொன்னால், சொர்ணம் தனது வீழ்ச்சிகளை நோக்கி நடக்கத் தொடங்கினார் என்றும் கூறலாம்.
அதன் பின்னர், அவர் முழுக்க முழுக்க ஒர களத்தளபதிதான். களத்தில் சிறப்பாக செயற்பட்டால் மாத்திரமே ஜொலிக்க முடியும். ஆனால் அது சொர்த்தினால் முடியாமல் போனது. அவரது யுத்தமுறை நவீனயுத்தமுறைகளிற்கு பொருந்தாமல் போனது. எனினும், ஈழப்போர்க்களங்களில் அவரது போரியல் அணுகுமுறைக்கு இரண்டு சிறந்த உதாரணங்கள் உள்ளன.
முதலாவது எற்கனவே கறிப்பிட்டபடி FNC சண்டை என்று அழைக்கப்பட்ட கட்டைக்காடு அயுதக்களஞ்சியத் தாக்குதல். அந்த சண்டையில் அவர் ஒரு புதிய போருத்தியை ஈழக்களங்களில் அறிமுகப்படுத்தினார். எதிரியின் தளத்திற்குள் இரகசியமாக ஊடுரவிச் சென்று, எதிரியின் பின்னால் நிலையெடுத்துவிட்டு, எதிரியின் பிடறியில் அடித்து அதிர்ச்சியடைய வைப்பது. ஈழக்களங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர்.
இன்னொன்று, பலாலி கிழக்கு காவலரண்கள் தகர்த்தது. ஆயுதங்களை கடலிற்குள்ளால் நகர்த்தி சென்று, எதிரியின் பிரதேசத்திற்குள் சேமித்து, அங்கிருந்தபடியே தயாராகி தாக்குவது.
இம்ரான்-பாண்டியன் படையணியிலிருந்து விடுவித்து கொண்டதும், அவருக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அப்பொழுதுதான் விடுதலைப்புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற ஒரு கட்டமைப்பை ஆரம்பித்தார்கள். அதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த போர்த்தளபதியாக இருந்தபோதும், பரந்தபட்டளவில் ஆளுமை செலுத்தும் தளபதியாக ஜொலிக்க முடியாமல் போனது. கூட்டுப்படை தலைமையகத்தின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்ட பின்னரும், அவர் முன்னர் வகித்த வன்னிமாவட்ட தளபதி அல்லது சாள்ஸ் அன்ரணி படையணி தளபதியாகவே அவர் செயற்படுகின்றார் என்ற விமர்சனம் அவர்மேல் வைக்கப்பட்டது. அவர் தனது அத்தனை நடவடிக்கைகளிற்கும் மேற்படி இரண்டு அணிகளையுமே நம்பியிருந்தார். அல்லது அவர்களை வைத்தே திட்டமிட்டு, காரியமாற்றினார்.
இந்த விமர்சனங்களையடுத்து சொர்ணம் கூட்டுப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில்த்தான் யாழ்ப்பாணத்தின் மீது இராணுவம், சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது. சூரியக்கதிர் போன்ற ஒரு பிரமாண்டமான நடவடிக்கையை புலிகள் அதற்கு முன்னர் எதிர்கொண்டயிருக்கவில்லை. அதனை சமாளிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால் அந்தப் பின்வாங்கலிற்கு தனிப்பட்ட யாரையும் காரணமாக கூற முடியுமென நினைக்கவில்லை. எனினும், அந்த பிரமாண்டமான நடவடிக்கையின் சின்னச்சின்ன முனைகளில் நடந்த தவறுகளிற்கும், தோல்விகளிற்கும் சிலர் காரணமாக இருந்திருக்கலாம். அப்படி இந்த தோல்விகளின் பழியை ஏற்றவர்கள் மூவர்.
முதலாமவர் களத்திலேயே மரணமடைந்தார். மணலாறு தளபதியாக இருந்த மேஜர் வெள்ளை. புத்தூரில் பெருமளவு போராளிகளுடன் மரணமானார். அந்த களத்தில் பெருமளவான போராளிகள் மரணமானதற்கு வெள்ளையின் போர்த்தந்திரங்களின் குறைபாடு காரணமாக கூறப்பட்டது. இத்தனைக்கும் அவர் தலைசிறந்த சண்டைக்காரனாக அறியப்பட்டிருக்கவில்லை. நிர்வாகத்திறன் மிக்கவராகத்தான் அறியப்பட்டிருந்தார். அவர் முக்கிய பங்காற்றிய களங்களின் சரிவிற்கு ஏற்கனவேயும் உதாரணங்கள் இருந்தன. அதனால் அவரிற்கு மரணத்தின் பின் மேஜர் படிநிலையே வழங்கப்பட்டது. மிகச்சாதாரணமாகவே அவரிற்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை அவர் தளபதியாக இருந்த மணலாற்று மக்கள் வெளிப்படுத்தினார்கள். சிறிய அதிருப்தி கூட்டமொன்று நடத்தப்பட்டது.
இன்னொருவர் ரவி. வலிகாமம் முழுமையாக விடுபட்ட பின்னர், அவர்தான் யாழ் களநடவடிக்கைகளை களத்தில் வழிநடத்தினார். சூரியக்கதிர் நடவடிக்கை ஆரம்பித்தபோது, அவ்வளவு பிரபல்யமில்லாதவராக இருந்தவர், சில வாரங்களிலேயே நடச்த்திரமாகி, களமுனை பொறுப்பை எடுத்துக் கொண்டார். தென்மராட்சி நோக்கி படையினர் நகர்ந்தபோது, அவர்களை எதிர்கொள்ள போராளிகள் இருக்கவில்லை. மிக இலகுவாக இரவுநகர்வில் படையினர் உள்நுழைந்தனர். இத்தனைக்கும், படையினர் உள்நுழைந்த பகுதிகளை பாதுகாக்க ரவியிடம் தாக்குதலணிகள் வழங்கப்பட்டிருந்தன. அவர் உரிய இடத்தில் அவர்களை நிறுத்தவில்லை. தனக்க வழங்கப்பட்ட மகளிர்படையணியை மேலதிக அணியாக பின்தளத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இது படையினருக்கு வாய்ப்பாகி, மிகச்சுலபமாக சாவகச்சேரிக்குள் நுழைந்தனர். வன்னிக்கு புலிகள் பின்வாங்கிய பின்னர், இதற்கான தண்டனை ரவிக்கு வழங்கப்பட்டது. அவர் ஏழுபேர் கொண்ட அணியில் ஒருவராக இருக்க கணிக்கப்பட்டார்.
மூன்றாமவர், சொர்ணம். அவர்தான் யாழ்க்களத்தை ஒட்டுமொத்தமாக கவனித்தவர். அவரது முதலாவது வீழ்ச்சி இங்குதான் ஆரம்பித்தது. அவர் திருகோணமலை தளபதியாக அனுப்பப்பட்டார். இதன் பின்னர் அவரது வாழ்வில் ஏறுமுகமே இருக்கவில்லை. ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு பருவத்திலும் அவர் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருந்தார். ஒரு யுத்தப்பிரவுவைப் போல நடமாடியவரை, அவரது யுத்தமுறைகளை நகைச்சுவைக்குரிய ஒன்றாக போராளிகள் மத்தியில் ஆக்கியது. ஒரு பக்கம் அவர் வழிநடத்திய களங்களின் தொடர் தோல்விகள்.. மறுபுறம் அவரது தலைவனில் கொண்டிருந்த அளவற்ற விசுவாசத்தின் பலாபலன்கள் என இருதுரும்புகளிற்கிடையில் அவர் தத்தளித்து கொண்டிருந்தார்.